இறுதிக் கடிதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 17, 2023
பார்வையிட்டோர்: 3,280 
 
 

‘ஓப்பன் லெட்டர் அருணகிரி’ ‘பஸ் ஸடாப்’ பில் நின்று கொண்டிருந்தார். அவர் கைகளையும், கால்களையும் அசைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தால் மிகக் கோபமாக யாருக்கோ சிந்தனையில் கடிதம் எழுதிக் கொண்டிருந்தாரென்று கிருஷ்ணனுக்குத் தோன்றிற்று.

‘ஓப்பன் லெட்டர் அருணகிரி’ என்று அவர் அழைக்கப் பட்டதற்குக் காரணம், அவர் அமெரிக்க ஜனாதிபதியிலிருந்து, உள்ளூர் தொகுதி கார்ப்பரேஷன் கவுன்சிலர் வரைக்கும் எல்லாருக்கும் ‘ஓப்பன் லெட்டர்’ எழுதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அப்படி எழுதுவது பற்றி யாருக்கும் ஆட்சேபணை இல்லை. ஆனால் தெரிந்த நண்பர்கள் அனைவரிடத்தும், அவர் எழுதும் கடிதங்களை படித்துக் காட்டாமல் அவராலிருக்க முடியாது.

உலகில் நடக்கும் அக்கிரமங்களை எல்லாம் பொறுத்துக் கொண்டு சும்மா இருப்பதா என்பதுதான் அவர் கேள்வி.

நியூஜெர்ஸியில், ‘டாட் பஸ்டரஸ்’ என்ற வெள்ளை இன அமெரிக்க இளைஞர்கள், இந்தியர்களுக்குத் தொந்தரவு கொடுத்தபோது, அவர் அமெரிக்க அதிபர் ரேகனுக்கு எழுதிய கடிதங்கள் பிரசித்தமானவை, அதாவது அவருடைய நண்பர்க ளிடையே. ரேகன் அக்கடிதங்களை படித்ததாகத் தகவலில்லை . ஆனால், எந்த இந்தியப் பத்திரிகையும் அக்கடிதங்களை பிரசுரிக்கவில்லை என்பதுதான் அவருக்கு அசாத்திய சினத்தைத் தந்தது.

‘எல்லா பத்திரிகை ஆசிரியர்களுக்கும் அமெரிக்காவிலிருந்து பணம் வருகின்றது’ என்பதுதான் அவருடைய திடமான நம்பிக்கை. கிருஷ்ணன் காரை அவரருகே நிறுத்தினான். அவர் தம்மருகில் நின்ற அக்காரை கவனித்ததாகவே தெரியவில்லை.

“ஹல்லோ மிஸ்டர் அருணகிரி, எங்கே போகணும்?” அருணகிரி சிறிது நேரம் அவனை உற்றுப் பார்த்தார். “ஓ! கிருஷ்ணனா? நீங்க எங்க போறீங்க?” என்றார், தம் முன் நிற்பவன் கிருஷ்ணன் என்பதை உள் வாங்கிக் கொண்டு.

“நான் போகறது இருக்கட்டும், நீங்க எங்கே போகணும், சொல்லுங்க” என்றான் கிருஷ்ணன்.

“ரஃபி மார்க் போறேன், ‘ஹிந்து’ ஆபீஸ்லே ஒரு லெட்டர் கொடுக்கணும்.”

கிருஷ்ணன் சற்று தயங்கினான். படித்துக் காட்டுவாரோ?

அவர் கையிலிருந்த கடிதம் உறையிலிடப்பட்டு ஒட்டப் பட்டிருந்தது. ஒட்டியதை பிரித்துப் படித்துக் காட்டவா போகிறார்?

“நானும் அந்தப் பக்கந்தான் போறேன், கொண்டு விடறேன், வாங்க…”

அவன் கார் கதவைத் திறந்தான். அவர் உட்கார்ந்தார்.

அருணகிரிக்கு சற்று பெரிய சரீரம். கனத்த சாரீரம். அவர் பக்கத்தில் உட்காரும்போது அவன் சற்று தள்ளித்தான் உட்கா வேண்டும். அருணகிரியின் சரீர ஆக்ரமிப்பு ஒரு காரணம் இன்னொன்று அவர் உரக்கப் பேசினால் சப்தம் அவரிடமிருந்த அல்லது கார் இன்ஜினிலிருந்தா என்று சொல்வது கஷ்டம். கா. இன்ஜினில் ஏதாவது தகராறு இருந்து சப்தம் வந்து, அந்த சப்தம் அவரிடமிருந்து வந்ததாக நினைத்துக் கொண்டுவிட்டால் விபத்து ஏற்படுவதற்கான சாத்தியக்கூறும் உண்டு. அவர் உரக்கப் பேசும்போது குரலை அப்படி ஏன் கனைக்கிறாரென்பதுதான் அவனுக்குப் புரியவில்லை .

“ஹிந்து ஆபீசுக்கு ஏன் போறே என்று நீங்க கேக்கலியே!”

“கேக்கலே.”

“கேளுங்க.”

அவன் பேசாமலிருந்தான்.

அவர்தம் கைப்பையை திறந்து ஒரு சிறிய பெட்டியை எடுத்தார். அப்பெட்டியிலிருந்து ஒரு ‘பானை’ எடுத்துப் போட்டுக் கொண்டார்.

“கரோல்பாகிலே நாய் தொல்லை ஜாஸ்தியா போச்சு பாத்தீங்களா?”

“அப்படியா?”

“நீங்கள்ளாம் ‘டிஃபன்ஸ் காலனி ‘யிலே இருக்கிற பெரிய மனுஷா. கரோல்பாகிலே நாங்க நாய் படற பாடு படறோம், நாயினாலே…” என்று சொல்லிவிட்டு தாம் சொன்னதை தாமே ரசித்துக் கொண்டு உரக்கச் சிரித்தார்.

“அதுக்காக என்ன எழுதியிருக்கீங்க? ‘ஹிந்து’வுக்கு ‘லெட்டர்ஸ் டுதி எடிட்டர்’ எழுதியிருக்கீங்களா?”

“நோ..’ஹிந்து’வுக்கு காப்பி கொடுக்கப் போறேன்.”

அவன் பேசாமலிருந்தான். யாருக்கு எழுதிய கடிதத்தின் பிரதியென்று கேட்கவில்லை.

அவர் கார் ஜன்னல் வழியே வெற்றிலைச் சாற்றை துப்பினார்.

“பாத்து துப்புங்க.”

“பாத்துதான் துப்பறேன். ஒரு துளி கறை கூட உங்க காரிலே இருக்காது.

“என் காரிலே கறை படறதுக்காகச் சொல்லலே, ‘ரோட்’லே போறவங்க யார் பேரிலாவது படப்போறது, அதுக்காகச் சொன்னேன்.”

“இந்த அருணகிரி துப்பி யார் பேரிலாவது பட்டிருக்குன்னு வரலாறு இல்லை. ‘ஒரிஜினல்’ யாருக்குன்னு நீங்க கேக்கலே, நான் சொல்றேன். பிரதம மந்திரிக்கு….”

“அவர் என்ன செய்வார்னு எதிர்பார்க்கறீங்க?”

“பார்லிமென்ட் ஹவுஸ்லே நாய்களை வச்சு சீராட்டுங்கன்னு எழுதியிருக்கேன். ஒரு பிரிட்டிஷ் பிரதம மந்திரி, கிளாட்ஸ்டோன்னு நினைக்கிறேன். சொன்னானாமே, ‘லட் தி ஸ்லீப்பிங் டாக்ஸ் லை’ன்னு. பார்லிமென்ட்டுக்கும் நாய்க்கும் சம்பந்தமிருக்கு. கரோல் பாகிலே, எங்க ‘பிளாக்’ கிட்டே, ராத்திரி பூரா ஒரே நாய் ஊளைதான். சகிக்க முடியலே. முதல்லே ஒரு நாய் மெதுவா ஆரம்பிக்கும். இன்னொரு நாய் கொஞ்சம் உரக்க… அப்புறம், கொஞ்சம் கொஞ்சமா ஒரே ‘நாய் அபேரா’தான். அதான் எழுதியிருக்கேன், கேக்கறீங்களா?”

“வேணாம், வேணாம், ஒட்டினதை பிரிக்க வேணாம்.”

“இல்லே, இன்னொரு காப்பி இருக்கு!” அவர் கைப்பையை திறக்கப் போனார். அவன் அவர் கைமீது கை வைத்தான்.

“வேணாம் – அதான் சொல்லிட்டீங்களே, போறும்.”

“சரி, உங்க இஷ்டம்.”

அவர் ஏமாற்றம் அவருடைய முகத்தில் வெளிப்படையாகத் தெரிந்தது.

அருணகிரி தொழில் ரீதியாக வழக்கறிஞர். அவர் உச்சநீதி மன்றத்துக்கு அடிக்கடி போவதுண்டு. கட்சிக்காரர்கள் அவரைத் தேடி வந்தார்களா என்பது பற்றி அவனுக்குத் தெரியாது…

அவர் மனைவியின் சம்பாத்யந்தான் அடுப்பில் பூனை தூங்காமல் பார்த்துக் கொள்கிறது என்று அவர் மனைவியே அவனிடம் சொல்லியிருக்கிறாள்.

அவருக்கு ஒரு பெண் – பதினைந்து வயதிருக்கலாம். பள்ளிக்கூடத்தில் படிக்கிறாள். மிகவும் கெட்டிக்காரப் பெண்.

அவருக்கு அந்தப் பெண் மீது அளவற்ற பாசம். தெரு நாய் அந்தப் பெண்ணை கடித்துவிடப் போகிறதே என்ற பயம்தான். பிரதம மந்திரிக்குக் கடிதம் எழுதும்படியாக அவரை தூண்யிருக்கக் கூடுமென்று அவன் நினைத்தான்.

“பிரேமா எப்படியிருக்கா?”

“பிரேமாவா? அவ போனமாசம் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி எல்லாத்திலேயுமே ‘ஃபஸ்ட் பிரைஸ்’ வாங்கியிருக்கா… கிளாஸ்லே அவதான் ‘ஃபஸ்ட்’. ஆனா, உடம்புதான் கொஞ்சம் படுத்தறது.”

“என்ன உடம்புக்கு?”

“தினம் தலைவலிங்கறா, கண் டாக்டர் கிட்டே போனேன்… ஒண்ணுமில்லேன்னு சொல்லிட்டான். ஒத்தைத் தலைவலியுமில்லே …”

“ஒரு ‘ஸ்பெஷலிஸ்ட்’ கிட்டே கூட்டிண்டு போய்ப் பாருங்களேன்.”

“ஸ்பெஷலிஸ்ட்!” என்று சொல்லி விட்டு பலமாகச் சிரித்தார்.

தான் சொன்னதில் என்ன நகைச்சுவை இருக்கிறதென்று அறிய விரும்புவது போல் அவன் அவரை பக்க வாட்டமாகப் பார்த்தான்.

“ஸ்பெஷலிஸ்ட் லாம், பணம் பிடுங்குவாங்க, அவ்வளவுதான். இந்த ‘ஸ்பெஷலிஸ்ட்’ பத்தி கூட நான் ‘ஹெல்த் மினிஸ்டரு’க்கு ஒரு லெட்டர் எழுதியிருக்கேன். எல்லாரும் ஃபிராட், பணம் பிடுங்கிங்க…”

“தலைவலின்னு சும்மா விடறது சரியில்லே. ‘ஆல் இந்தியா மெடிகல் இன்ஸ்டிடியூட்’ லே எனக்குத் தெரிஞ்ச டாக்டர் ஒருத்தர் இருக்கார். அகர்வால்னு பேரு. நியூராலிஜிஸ்ட். போய்ப் போருங்க.”

அவன் வண்டியை நிறுத்தினான்.

“நாழியாகுமா?” என்றான் கிருஷ்ணன்.

“ஏன்?”

“நாழியாகாதுன்னா உங்களோட யு.என்.ஐ.க்குப் போய் ஒரு காபி சாப்பிடலாம்னு பாத்தேன்.”

“சொல்ல முடியாது. நான் லெட்டரை படிச்சுக் காட்டும்படியா இருக்கலாம். சில பேருக்கு நான் படிச்சுக் காட்டறது பிடிக்கிறது.”

“சரி.. அப்பொ நான் வரேன்.”

அவரைப் பற்றி நினைக்கும் போது புரிதாப உணர்வுதான் மேலிடுகின்றது. அவர் கோபம் நியாயமானதுதான். தார்மீக கோபம். ஆனால், இவர் கோபத்தைப் பற்றி ஈவு இரக்கமற்ற இந்தச் சமூக, அரசியல் ஸ்தாபனம் கவலைப்படப் போவதில்லை என்று அவருக்கு இன்னும் ஏன் தெரியவில்லை? அல்லது, தெரிந்தும் தன் கோபத்தை ஆற்றுவதற்கு வேறு வழியில்லை என்று அவர் கோபம் கொண்ட ஒரு விதூஷகன்’ வேஷம் தரித்து நடித்துக் கொண்டு வருகிறாரா?

அவர் முயன்றிருந்தால், ஒரு நல்ல வழக்கறிஞராக ஆகியிருக்க முடியுமென்றுதான் கிருஷ்ணனுக்குத் தோன்றிற்று. அரசியல் சாசன சட்ட விதிகள் அனைத்தும் அவருக்கு அத்துப்படி. அவரால் முயன்றிருக்க முடியாது என்பதுதான் அவருடைய குண விசேஷமாகவும் கிருஷ்ணனுக்குத் தோன்றிற்று.

அவரால் பொய் சொல்ல முடியாது. அதர்மத்தோடு சமரசம் செய்து கொள்ள முடியாது.

அன்று மாலை கிருஷ்ணன் வீட்டுக்குச் சென்றதும், அவன் மனைவி லலிதாவிடம் அருணகிரியை சந்தித்து பற்றிச் சொன்னான்.

“பாவம், அவர் இப்படி இருக்கார். உமா என்கிட்டே இன்னிக்கு ஃபோன்லே சொல்லிண்டிருந்தா. பத்து நாளைக்கு முன்னே அவரை நாலஞ்சு ரௌடிங்க, அடிக்க வீட்டுக்கு வந்துட்டாங்களாம். டெல்லி கார்ப்பரேஷன்லே ஊழல் நடக்கிறதுன்னு அவர் மந்திரிக்கு லெட்டர் எழுதியிருக்கார். மந்திரிக்கும் இதிலே பங்கு இருக்கலாம். யார் கண்டா? அடிக்க வந்துட்டாங்களாம், அப்புறம் அவங்களை சமாதானப்படுத்தி அனுப்பி வச்சாளாம். இவருக்கேன் இந்த வம்பு?”

“தார்மீக கோபந்தான்.”

“மண்ணாங்கட்டி… ஊர்லே எல்லாரும் நல்லவாளா இருந்து ஒத்தர் ரெண்டு பேர் தப்பு பண்ணா அதை எடுத்துச் சொன்னா அர்த்தமுண்டு. ஊர் பூராவே, நாடு பூராவே கொள்ளைக்காரங்க.”

“அவருக்குத் தெரியாதுன்னு நினைக்கிறியா, அவருக்குத் தெரியும். ஆனா தமக்கு மனசாட்சி தொந்தரவு இல்லாம இருக் கணுங்கிறதுக்காக இப்படி சொல்லறது அவருக்கு சந்தோஷத்தை தரது.”

“அவருக்கென்ன மனசாட்சித் தொந்தரவு?”

“தப்பு நடந்தா அதைச் சொல்லாம இருந்தா ஏற்படற மனசாட்சி தொந்தரவு. அவர் ஏன் ஒரு எழுத்தாளரா ஆகாம, பத்திரிகைகளுக்குக் கடிதம் எழுதறதோட நிறுத்திண்டுட்டார்னு புரியலே.”

“இப்பவும் அவராலே வீட்டுக்கு ஒரு காசுக்கு பிரயோஜன மில்லை. எழுத்தாளரா ஆகியிருந்தாலும் இதே நிலைமைதான். சரி, முக்கியமா உமா எதுக்கு ஃபோன் பண்ணான்னு சொல்ல மறந்துட்டேன். பிரேமா, இளைச்சுண்டே போறாளாம். உங்களுக்கு மெடிக்கல் இன்ஸ்டிடியூட்லே ஒரு ஃப்ரெண்ட் இருக்காரில்லே, டாக்டர் அகர்வால் அவர் மூலமா…’ என்று லலிதா சொல்லி முடிப்பதற்குள் கிருஷ்ணன் சொன்னான்: “நான் இன்னிக்கு மத்தியானம் அருணகிரிகிட்டே சொன்னேன், அகர்வால் கிட்டே பிரேமாவை காமிங்கோன்னு, அவருக்கு ‘ஸ்பெஷலிஸ்ட்’ மேலே எல்லாம் நம்பிக்கை இல்லேன்னு சொல்லிட்டார்.”

“அவர் கிடக்கிறார்… உமாவை, பிரேமாவை அழைச்சிண்டு வெள்ளிக்கிழமை வரச் சொல்லியிருக்கேன். நீங்க, அகர்வால்கிட்டே பேசி ஒரு ‘அப்பாய்ன்ட்மென்ட்’ வாங்கி வைங்க…”

“அவர் அப்புறம் என்னை திட்டி ராஷ்டிரபதிக்கு ஒரு லெட்டர் எழுதினார்னா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான் கிருஷ்ணன்.

“விளையாடாதீங்க. நீங்களே சில சமயம், ‘அருணகிரி பாவம் நல்ல மனுஷர், எல்லாரும் அவரை கிண்டல் பண்றாங்க’ன்னு சொல்லிவிட்டு, இப்போ அவரைகிண்டல் பண்றீங்களே..” என்றாள் லலிதா.

அவள் குரலில் ஒரு வாஸ்தவமான அக்கறை தெரிந்தது.

“ஐ ஆம் ஸாரி” என்றான் கிருஷ்ணன். உமாவும், லலிதாவும் கல்லூரித் தோழிகள். உமா கெமிஸ்டிரியில் எம்.எஸ்ஸி. பட்டம் வாங்கி, ஆராய்ச்சி மாணவியாகச் சேர்ந்த போதுதான் கல்யாணமாயிற்று.

அருணகிரி கல்யாணத்தின் போது ஒரு தொழில் நிறுவனத்தில் சட்ட ஆலோசகராக இருந்தார். அத்தொழில் நிறுவனம் செய்கிற அக்கிரமங்களில், அவர் பங்கு கொள்ள விரும்பாமல், கல்யாணம் ஆன நான்காம் மாதமே விலகிவிட்டார். பிறகு இன்னொரு நிறுவனம், அங்கும் அவரால் வேலை செய்ய முடியவில்லை.

சென்னை நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டார்.

உண்மையைச் சொல்லும் கட்சிக்காரர்கள்தாம் தம்மை தேடி வரவேண்டு மென்ற அவர் நிபந்தனை மிகவும் கடுமையாக இருப்பதை அஞ்சி, யாரும் வரவில்லை .

இதற்குள் உமாவுக்கு தில்லிக் கல்லூரி ஒன்றில் வேலை கிடைத்தது.

உமாவுடன் அவரும் தில்லிக்குச் சென்றார். அவர்கள் தில்லி வரும்போது, பிரேமா கைக்குழந்தை.

லலிதாவும், கிருஷ்ணனும் தில்லிக்கு வந்தபோது, உமா வீட்டில்தான் தங்கினார்கள். பிறகுதான், வீடு பார்த்துக் கொண்டு ‘டிஃபன்ஸ் காலனி’க்குச் சென்றார்கள்.

லலிதா தன் தோழி உமாவின் சார்பில் அருணகிரியிடம் சில சமயங்களில் கோபித்துப் பேசுவதுமுண்டு.

லலிதா பேசும்போது அருணகிரி வாயைத் திறக்கமாட்டார். உமா தன் கணவன் மீது கோபம் கொண்டதே கிடையாது. அவரை ஒரு குழந்தையாகவே அவள் பாவித்தாள்.

“நீ கொஞ்சம் கடுமையா இருந்தாத்தான் அவர் புரிஞ்சுப்பார், பொறுப்பு வரும்” என்று லலிதா அவளிடம் சொல்லிப் பார்த்தாள்.

“நோ. யு ஆர் மிஸ்டேக்கன். அவர் குணத்தை அவராலே மாத்திக்கவே முடியாது. அவர் இப்படியே இருந்துட்டு போகட்டுமே, உலகத்தைச் சந்திக்கிறது என் பொறுப்பு. ‘லட் ஹிம் ரிமெய்ன் அன்ஸ்பாய்ல்ட் ” என்பதுதான் அவள் பதில்.

அருணகிரி எழுதியுள்ள ஆயிரக்கணக்கான கடிதங்களில் ஒன்றுகூட பிரசுரமாகவில்லை என்பது பற்றி அவர் கொஞ்சம் கூடக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை . கடிதங்கள் எழுதுவதோடும், அவற்றை நண்பர்களுக்குப் படித்துக் காட்டுவதோடும், அவர் கடைமை முடிந்து விட்டதாக அவர் அடி மனத்தில் ஓர் எண்ணம் ஏற்பட்டு விடுவதுதான் இதற்குக் காரணமென்று கிருஷ்ணன் நினைத்தான்.

பத்திரிகைகளில் அவர் கடிதங்களில் ஒன்று கூட பிரசுரமாக வில்லை என்று சொல்வது தப்பு. ஒரு கடிதம் ஒரு பத்திரிகையில் பிரசுரமாயிற்று. ஆனால், அவர் நான்கு பக்கங்கள் எழுதியிருந்ததை ‘எடிட்’ செய்து வெளியிட்டிருந்தார்கள். உடனே அவர் கோபம் கொண்டு, அப்பத்திரிகை ஆசிரியர் செய்கையை மிகவும் வன்மையாகக் கண்டித்து இன்னொரு கடிதம் எழுதினார்.

அதற்குப் பிறகு, அவர் பத்திரிகைகளுக்கு கடிதம் அனுப்பும் போதெல்லாம் ஓர் அடிக்குறிப்புடன் அனுப்புவது வழக்கம். ‘முழுக் கடிதத்தையும் பிரசுரம் செய்யுங்கள். இல்லாவிட்டால் தேவை யில்லை .’

‘தேவையில்லை’ என்ற அந்தக் குறிப்புதான் எல்லாப் பத்திரிகை ஆசிரியர்களுடைய கண்களிலும் பட்டிருக்க வேண்டும்.

அடுத்த நாள் கிருஷ்ணன் அவன் அலுவலகத்தில் ஒரு முக்கியமான வேலையை கவனித்துக் கொண்டிருந்தபோது, ‘இன்டர்-காம்’ ஒலித்தது.

“எஸ்க்யூஸ் மி, ஸார். உங்களை அவசரமாகப் பார்க்க வேண்டுமென்று ஒருவர் வந்திருக்கார்.”

“யார் அவர்?”

“மிஸ்டர் அருணகிரி.”

அருணகிரியா? அவர் அவனுடைய அலுவலகத்துக்கு இதுவரை வந்ததே கிடையாது. அப்படியென்ன அவசரமான காரியம்?

“சரி…வரச் சொல்.”

அருணகிரி உள்ளே வந்தார்.

“உட்காருங்க. என்ன விஷயம்?”

அவர் கைப்பையைத் திறந்து, ‘பானை’ எடுத்துப் போட்டுக் கொண்டார்.

அவர் நிதானம் அவனுக்கு சற்று எரிச்சலைத் தந்தது.

“எனக்கு ஒரு புது ‘ஐடியா’ தோணித்து. தோணினவுடனே நான் உங்ககிட்டே புறப்பட்டு வந்தேன்.”

“என்ன ‘ஐடியா’?”

“நான் இத்தனை வருஷமா எழுதிண்டு வர்ற ‘லெட்டர்ஸ்’ மொத்தம் பத்தாயிரத்துக்கு மேலே இருக்கும். கூடேயும் இருக்கலாம். அதனாலே.”

அவர் மேலே தொடராமல் சிறிது நேரம் இருந்துவிட்டு பிறகு புன்னகை செய்தார்.

“அதனாலே, என்ன. சொல்லுங்களேன்?”

“அதைப் புஸ்தகமாப் போட்டா என்ன?” என்றார் அருணகிரி. கிருஷ்ணன் திடுக்கிட்டான்.

“புஸ்தகமாவா?” என்றான் சில விநாடிகளுக்குப் பிறகு,

“ஆமாம், மூணு வால்யூம் வரும். இதுவே என் சுயசரிதையாகவுமிருக்கும். காந்திஜி கொடுத்த அதே தலைப்பு… ‘சத்திய சோதனை’ – எப்படி?”

“மூணு வால்யூம்னா, எத்தனை பக்கம், எத்தனை காப்பி… செலவை பத்தி யோசிச்சுப் பாத்தீங்களா?”

“அதப் பத்தியெல்லாம் யோசிக்கலே. ‘ஐடியா’ தோணித்து, உங்ககிட்டே வந்தேன்.”

“பிரேமா எப்படி இருக்கா? அவளை அழைச்சுண்டு வர்றதா உமா சொன்னதா லலிதா சொன்னா. வெள்ளிக்கிழமை அகர்வால் கிட்டே ‘அப்பாய்ன்ட்மென்ட்’ ‘ஃபிக்ஸ்’ பண்ணப் போறேன்.”

“பிரேமாவுக்கு என்ன, தலைவலி, வேறு ஒண்ணுமில்லையே, எதுக்கு இந்த அமர்க்களம்?”

“வெறும் தலைவலின்னா அவ ஏன் இளைக்கணும்? ஒண்ணுமில்லாமலிருக்கலாம். டாக்டர்கிட்டே கேட்டுட்டா மனசு நிம்மதியா இருக்குமில்லையா?”

“பிரேமா இளைச்சிண்டு வர்றாளா?” தனக்குத் தானே கேட்டுக்கொள்வது போல் கேட்டு விட்டு அருணகிரி மௌனத்தில் ஆழ்ந்தார்.

“உங்க ‘ஃப்ரெண்ட்’ ‘நியூராலிஜிஸ்ட்’ னு சொன்னீங்களே, அப்போ, பிரேமாவுக்கு என்னன்னு நீங்க ‘ஸஸ்பெக்ட்’ பண்றீங்க?”

“மைகாட்.. நான் ஒண்ணும் ‘ஸஸ்பெக்ட்’ பண்ணலே. அகர்வால், என்ன பண்ணனும்னு ‘அட்வைஸ்’ பண்ணுவான்னுதான் சொன்னேன், என்னுடைய சிநேகிதங்கிற முறையிலே, நாட் ஆஸ் ஏ நியூராலிஜிஸ்ட் – புரிஞ்சுதா?”

அவர் யோசனையிலாழ்ந்தார். அறைக்குள் வந்தபோது அவர் முகத்தில் தெரிந்த உற்சாகம், சந்தோஷம் எல்லாம் மறைந்து, இப்பொழுது கவலையின் ரேகை வெளிப்படையாகப் புலப்பட்டது.

“நான் என்னைப் பத்தியே ஓயாமெ நினைச்சிண்டதிலே, குழந்தையை கவனிக்க மறந்தே போயிட்டேன. வாஸ்தவமா சொல்லுங்க, குழந்தைக்கு என்ன உடம்புன்னு நினைக்கறீங்க? உமா ப்ராக்டிகல்! அவள் டாக்டர்கிட்டே காட்டியாகணும்னா ஏதாவது ‘ஸீரியஸ்’னுதான் அர்த்தம்…” என்றார் அருணகிரி.

“லுக் ஹியர் மிஸ்டர் அருணகிரி. நீங்க ஏதோ முக்கியமா என்னை பார்க்கணும்னு வந்தீங்க. அதுவும் ஒரு முக்கியமான விஷயமில்லே.. ‘ஜஸ்ட் ஏ கிரேஸி ஐடியா “இப்போ ‘சப்ஜெக்ட்’ மாறிப் போச்சு. உங்க பொண்ணோட உடம்பு, ‘நத்திங் ஈஸ் ராங் வித் ஹர்’. இப்பொ எனக்குக் கொஞ்சம் அவசரமா வேலை இருக்கு. அப்புறம் பார்க்கலாமா? சாயந்திரம் வீட்டுக்கு வாங்க, பேசிக்கலாம்.” கொஞ்சம் உஷ்ணமாகவே பேசிவிட்டதாக கிருஷ்ணனுக்குத் தோன்றிற்று.

அவர் கிருஷ்ணனையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். பிறகு எழுந்தார்.

“ஐ ஆம் ஸாரி, மிஸ்டர் கிருஷ்ணன். நான்மத்தவங்களையும் என் மாதிரி வேலையத்தவங்கன்னு நினைச்சிண்டு தொந்தரவு செய்யறேன். ஐ ஆம் ஸாரி, முடிஞ்சா, சாயந்திரம் வரேன்.”

அவர் போய்விட்டார்.

அவ்வளவு கடுமையாக அவரிடம் பேசியிருக்க வேண்டிய தில்லை என்று கிருஷ்ணனுக்குப் பட்டது.

ஆனால், அவன் வேலை அவசரம் அவனை அப்படி பேச வைத்துவிட்டது.

பிற்பகல் மூன்று மணிக்கு அவன் அவனுக்குக் கீழே வேலை செய்த ஆஃபீஸர்களைத் தன் அறைக்கு அழைத்திருந்தான். ஒரு முக்கியமான முடிவு எடுத்தாக வேண்டும். கூட்டம் ஆரம்பித்தவுடன், ‘இன்டர்-காம்’ ஒலித்தது.

“லுக் ஹியர், அருணா, யாரா இருந்தாலும், அப்புறம் பேசுகிறேன் என்று சொல்.”

“மிஸஸ் கிருஷ்ணன், ஸார்.”

“ஓ.கே. டெல் ஹர்.”

அவன் ஃபோனைக் கீழே வைத்துவிட்டான். ஒரு மணிநேரம் கூட்டம் நடந்தது. எல்லாரும் போன பிறகு, அவன் நாற்காலியில் சாய்ந்தான்.

அவனுக்கு மிகவும் களைப்பாக இருந்தது. லலிதா அவனுடன் ஃபோனில் பேச வேண்டுமென்று ஒரு மணி நேரத்துக்கு முன் சொன்னது அவன் நினைவுக்கு வந்தது.

வீட்டுக்குப் ஃபோன் செய்தான். அடித்துக் கொண்டேயிருந்தது. எங்கே போயிருப்பாள்?

கட்பது ஃபோனை கீழே வைத்துவிட்டு யோசித்தான். எதற்காக ஃபோன் செய்தாள்?

மறுபடியும் எண்களைச் சுழற்றினான்.

பதிலில்லை.

வீட்டிலில்லை என்றுதான் அர்த்தம்.

எங்கே போயிருப்பாள்?

போவதைச் சொல்வதற்காகத்தான் ‘ஃபோன் செய்தாளோ?

அப்பொழுது அருணா உள்ளே வந்தாள்.

“மிஸஸ் கிருஷ்ணன் சஃப்தரஜங் ஆஸ்பத்திரிக்கு உங்களை வரச் சொன்னார். கிருஷ்ணன் திடுக்கிட்டான்.

“ஏன்?”

“பிரேமாவை அங்கு ‘அட்மிட்’ செய்திருப்பதாகச் சொல்லச் சொன்னார்.”

கிருஷ்ணன் எழுந்திருந்தான். வெள்ளிக்கிழமைக்கு இன்னும் இரண்டு நாட்களிருக்கின்றன. அதற்குள் அந்தப் பெண்ணுக்கு என்ன ஆகிவிட்டது?

அவன் புறப்படுவதற்குத் தயாரானான்.

“ஹூஈஸ் பிரேமா, ஸார்?” என்றாள் அருணா.

“மை ஃப்ரெண்ட்ஸ் டாட்டர்.”

அவன் அறையை விட்ட வெளியே வந்த போது, ஃபோன் ஒலித்தது.

அருணா விரைந்து போய் எடுத்தாள்.

“ஸார்…உங்களுக்கு…”

“எஸ் கிருஷ்ணன். என்னது? பிரேமா போயிட்டாளா? மை காட். என்ன சொல்றே நீ? ஓ.கே. ஐ ஆம் கமிங்…”

அவன் சஃப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் ‘இன்டென்ஸிவ் கேர் யூனிட்’ சென்றடைவதற்குள் ஒரு மணி நேரமாகிவிட்டது. வழி முழுவதும் ட்ராஃபிக் ஜாம்!

‘இன்டென்ஸிவ் கேர் யூனிட்’டில் யாருமில்லை. ஆஸ்பத்திரி கிழக்குப்புற வெராந்தாவை ஒட்டியிருந்த அறையில் லலிதா, உமா, அருணகிரி ஆகிய எல்லோருமிருந்தார்கள். அங்கு அவர்களெதிரே ‘ஸ்டெர்ச்சரில் பிரேமாவின் ‘பாடி’ இருந்தது.

“வாட் ஈஸ் திஸ்?” என்றான் கிருஷ்ணன்.

“பாஸ்டர்ட்ஸ்?” என்றாள் உமா கோபத்துடன். கிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்தான். அவள் இப்படி கோபப்பட்டு அவன் பார்த்ததே கிடையாது.

“வாட் ஹாப்பென்ட்?”

“பிரேமா பள்ளிக்கூடத்தில் மயக்கம் போட்டு விழுந்து விட்டாள். ஸ்கூல் டாக்டர் அவளை உடனே இங்கே கொண்டு வந்துட்டு, உமாவுக்கு ஃபோன் பண்ணியிருக்காங்க. உமாவும் மிஸ்டர் அருணகிரியும் இங்கே வந்து பார்த்தபோது, பிரேமாவை இன்டென்ஸிவ் கேர் யூனிட்டுக்குக் கொண்டு போனவங்க, ஒண்ணுமே பண்ணலே, அப்படியே வச்சிருந்துர்க்காங்க. என்ன காரணம்னு கேட்டபோது, பிரேமாவுக்கு ‘எமெர்ஜென்ஸி ஆபரேஷன் பண்ண வந்த டாக்டரை, உடனே பார்லிமெண்ட்டுக்கு புறப்பட்டு வரச் சொல்லியிருக்காங்கன்னு தெரிஞ்சது. அங்கே ஒரு மந்திரிக்கு மார்பு வலிக்கிற மாதிரி இருந்ததுதான். இந்த டாக்டரும் பிரேமாவை அப்படியே விட்டுட்டு, பார்லிமெண்ட்டுக்கு ஓடியிருக்கான். மத்த டாக்டர் யாரும் வந்து பாக்கலே. ‘ஷியர் நெக்லிஜென்ஸ்’ னாலேயே குழந்தை போயிடுத்து” என்றாள் லலிதா.

அப்பொழுது அங்கு வந்த ஒரு டாக்டர் சொன்னான்: “இது எங்களுடைய கவனக் குறைவே இல்லை. ‘கான்ஜினிடல் கரோனரி ப்ராப்ளம்’ இருக்கிறபோது, அதைக் கவனிக்காமலிருந்தது உங்கள் தவறு.’

“எமர்ஜென்ஸி ஆபரேஷன் செய்யப் போவதாகச் சொல்லி விட்டு, உங்களுடைய டாக்டர், மந்திரியைப் பார்க்கப் பார்லிமெண்ட் ஓடினது தவறு இல்லையா?” என்றான் கிருஷ்ணன்.

“பேஷன்ட் இங்கு வரும்போதே உயிரில்லை” என்றான் அந்த டாக்டர்.

“இது பொய். அவள் உயிருடன்தானிருந்தாள். ‘எமர்ஜென்ஸி ஆபரேஷன் செய்யவேண்டுமென்று அந்த டாக்டர்தான் சொன்னார். ‘ஃபோன் வந்தது, உடனே புறப்பட்டுப் போய்விட்டார்’ என்றாள் பள்ளிக்கூட டாக்டர்” என்றான் கிருஷ்ணன்.

அருணகிரி ஆடாமல் அசையாமல் சிலைபோல் நின்று கொண்டிருந்தார்.

கிருஷ்ணன் அவரருகில் சென்று அவர் தோளைத் தொட்டான்.

“நான் பிரதம மந்திரிக்கும், பத்திரிகைகளுக்கும் எழுதப் போகிற இறுதிக் கடிதம்…” என்று அவர்வாய் முணுமுணுத்தது. உமா அவரை ஒரு குழந்தையை பார்ப்பது போல் பார்த்தாள்.

(‘இந்தியா டுடே’ மார்ச்’93)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *