இரும்புக் காந்தம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 1, 2023
பார்வையிட்டோர்: 2,918 
 

(1977 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ராசாத்தியின் உடலெல்லாம் எரிந்தது. அவன் அப்படி நடந்து கொள்வான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. கொத்தவால் சாவடியிலேயே அதிக நேரம் ஆகிவிட்டது. ஊத்துக் கோட்டையில் இருந்து வரும் லாரிக்காகக் அவள் எதிர்பார்த்து நின்றதால், நேரமாகிவிட்டது. மொத்த விலைக்கு வாங்குகிற கொய்யாப் பழத்தையும், தர்கீஸ் பழத்தையும், வெள்ளரிப் பிஞ்சுகளையும், மயிலாப்பூரில் கூறு போட்டு விற்பது அவள் ‘புழப்பு’.

அடுத்த நாள் கோவில் விசேஷம் என்பதால், அவள் அதிகமாகவே வாங்கினாள். ‘கன்னி நிலையில் இருந்த கொய்யாப்பழம் பத்து கிலோ மறுநாள் நல்லா பழுத்திடும். தர்கீஸ் பழம், ‘பத்துருபா’ அஞ்சிதர்கீஸிலேயே மூணுரூபா நிற்கும்; முந்நூறு வெள்ளரிப் பிஞ்சுங்க. இத்தனையையும், சைக்கிள் ரிக்ஷாவிலே ஏத்திக்கினு பாரீஸ் வந்தாள். ‘இம்மாத் துட்டுதானான்’னு கேட்ட ரிக்ஷாக்காரருக்கு, ஒரு கொய்யாப்பழத்தை எடுத்து, போனஸ்ாக கடிக்கக் கொடுத்தாள். காக கேட்ட வாய்க்குள் அதை வைத்துக்கொண்டே, அவர் புறப்பட்டார். மணி இரவு ஒன்பது இருக்கும்.

அந்த கண்டக்டர், என்னமோ நல்லவன்தான். வழக்கமாய் அவள் கூடைகளை முணுமுணுக்காமலே ஏத்துகிறவன்தான். அந்த தைரியத்துல, அவள் புரண்ட் வழியிலே ஏறி, டிரைவர் சீட்டுக்கு அருகே, கூடைக்கள’வச்சபோது, தம்மடிச்சிக்கினு வந்த கண்டக்டர், ‘ஒரமா அடுக்குமே’ என்று சொல்லிக்கொண்டே அவள் முதுகின் ஒரத்தில் லேசாகத் தட்டினான்.

ராசாத்திக்கு, முதலில் அந்த ஸ்பரிசம், ஒருவித ‘இதுவைக் கொடுத்தது. அவனைத் திரும்பிப் பார்த்தாள். ஒருவேளை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்லப் போறானோ. ‘பய’ வுயாபாரத்துக்கு ஒரு ‘கும்புடு பூட்டுடலாம். அவள் சும்மா இருப்பதைப் பார்த்த கண்டக்டர், கொஞ்சம் ‘தள்ளி வையுமே’ன்னு சொல்லிக் கொண்டே, அவளை லேசாகத் தட்டினான். அந்தச் சமயத்தில், ராஜகம்பீரத்தோடு துள்ளிக் குதித்து உட்கார்ந்த டிரைவர், கண்டக்டரைப் பாராமலே, “உன் குழந்தைக்கு இப்போ எப்படிடா இருக்கு?” என்று சொல்லிக் கொண்டே’ கீரை’ போட்டார். கண்டக்டர், விசிலடிக்க மறந்து, அவளைத் தள்ளிக் கொண்டே இருந்தான்.

பஸ் உருமலோடு சேர்ந்து, ராசாத்தியும் உருமினாள். அவள் கனவு ஒருகணம் உருவாகி, மறுகணம் சிதைந்து, ‘அணு பிளப்பு’ போல ஆக்ரோஷமாக உருவெடுத்தது.

“நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துக்கினே கீறேன். ‘பேஷண்டுக்கும்’ ஒரு லிமிட்டு உண்டுய்யா. நீ பாட்டுக்கு டச்சு பண்ணிக்கினே நிக்கிற. இன்னாய்யா. உன் மனகல இன்னாத்தான் நெனப்பு? அடச் சீ…”

பஸ்ஸில் இப்போது ஆட்கள் அதிகமாகக் கூடிவிட்டதால், கண்டக்டருக்கு, அவள் பேச்சு, தன்மானப் பிரச்சினையாகிவிட்டது. போதாக்குறைக்கு அந்தக் கழுகுக்கண்ணன் டிரைவர்,’வூட்டுல’ வத்தி வச்சுடுவான். அவளைப் பயமுறுத்துவது, பல பாஸஞ்சர்களைப் பார்த்த கண்டக்டருக்குச் சிரமமாக இல்லை.

‘இன்னாம்மே… பத்தினி வேடம் போடுற… எனக்கும் ஸிஸ்டருங்க இருக்கத்தான் செய்யுறாங்க. கூடைங்கள தள்ளி வைம்மேன்னு சொன்னது தப்பா. தெரியாம கை பட்டுட்டுது. அதுக்கு ஊரக் கூட்டி ஒப்பாரி வைக்கிறியே. கூடைங்கள கீழே இறக்குமே.”

ராசாத்திக்கும், இது ஒரு தன்மானப் பிரச்சினை.

“ஏய்யா…தெரியாம கைபடுறதுக்கும், ஒரு இதுவோடகை படுறதுக்கும் தெரியாமலா பூடும்?”

“நீ அனுபவத்துல தெரிஞ்சுக்கிட்டவளாய் இருக்கலாம்.பல கையுங்கள பத்தி நல்லாத்தான் தெரிஞ்சி வச்சிருக்கே…”

“யோவ். கஸ்மாலம். செருப்பு பிஞ்கடும். ஜாக்கிரதையா பேசு..”

கண்டக்டர், பதிலுக்கு ஏதோ சொல்ல வாயெடுத்தான். அதற்குள், பிரயாணிகளிடையே பெரியமுணுமுணுப்பு ஏற்பட்டது.

“பஸ் புறப்பட இவ்வளவு தாமதமா? எந்நேரம் வீட்டுக்குப் போய் சேருவது? கூட்டத்தில் ஒருவர், சிட்கவேஷன் லீடராகி, ‘ஏய்யா பேச்சை வளத்துகினே போறிங்க… கூடைங்களே வேனுமுன்னா கீழே இறக்கிடு. உங்க சண்டை முடியுற வரைக்கும் நாங்க காத்து நிக்கனுமா? அவனவன் வீட்டுக்குப் போகாண்டாம்.” என்றார்.

அந்த ஆசாமியும், அவரைச் சார்ந்த பிரயாணிகளும் தனக்கு ஆதரவு கொடுப்பதாக முதலில் நினைத்து, முடிவில் ஏமாந்த ராசாத்தி, மடமடன்னு கூடைகளைக் கீழே இறக்கிவிட்டு, “இனிமேல் உன் பஸ்ஸில் ஏறினால், என் பேரு ராசாத்தி இல்ல. பிள்ளப் பெத்த பிறவுமா உனக்கு இந்தப் புத்தி. கஸ்மாலம்..” என்று காறித் துப்பினாள். அதற்குள் பஸ் நகர்ந்தது.

“கண்ணகி சிலையை இறக்கிட்டு, உன்னை அதுல நிறுத்திட வேண்டியதுதான்” என்று சொல்லிக் கொண்டே, கண்டக்டர் ‘டிக்கெட் என்றான். பயணிகள், அவன் நகைச்சுவையைச் கவைப்பதுபோல் சிரித்தார்கள்.

ராசாத்தி, வேற பஸ்ஸை எதிர்பார்த்து நின்றாள். மயிலாப்பூருக்கு போக வேண்டிய பஸ் எதுவுமே வரவில்லை. மணி பத்தைத் தாண்டிவிட்டது. ரிக்ஷாவில் ஏற்றிக்கொண்டு மயிலாப்பூர் போகலாமா என்று நினைத்தாள். கட்டாது.

அவள், காத்துக் காத்து நின்றாள்.

மயிலாப்பூருக்குப் போகும் பஸ்ஸைப் பார்த்ததும், ராசாத்தி சேலையை இறுக்கிக் கட்டிக்கொண்டு, கொய்யாப்பழக் கூடையை எடுத்து, வெள்ளரிப் பிஞ்க கூடைமேல் வைத்து, லாவகமாக தூக்கிக்கொண்டு, பஸ்ஸிற்குள் நுழையப் போனாள். பழைய கண்டக்டர், அங்கே, நின்று கொண்டிருந்தான்.

ராசாத்தி, ஏறிய வழியே இறங்கினாள். கூடைகளை தனித்தனியாக இறக்கின்ாள். அதை கண்டக்டர், குதர்க்கமாகச் சிரித்துக்கொண்டே விசிலடித்தான். கடைசிப் பஸ் புறப்படத் தயாராகியது.

ராசாத்தியால், அழுகையை அடக்க முடியவில்லை. ஆத்தாக்காரி, துடிச்சிக்கினு இருப்பாள். நடந்து போகலாமா. பொறுக்கிப் பசங்கமடக்கினால்..’பாழாப் போனவன் தட்டுனதுல, குறைஞ்சா பூட்டோம். வுலகமே இப்படித்தான்கீது. என்னா பண்றது. பேசமா ஏறிக்கலாமா.”

அவள் வருகையை எதிர்பார்ப்பதுபோல், ஸ்டார்ட்டான வண்டிக்கு விசில்கொடுக்காமலே நின்றான் கண்டக்டர். ராசாத்தி மனசைக் கல்லாக்கிக்கொண்டு, வேறு பக்கமாகத் திரும்பிக் கொண்டாள். அந்தக் கடைசிப் பஸ்ஸும் போய்விட்டது.

கத்தி செய்யப்படாத தங்கம்போல, தூசி படிந்த கட்டம் போட்ட சேலைக்குள், உணர்ச்சி மயமாகத் துடித்துக் கொண்டிருந்த அவள் மேனியை, ராத்திரி மேயும் பலர், தத்தம் கண்களால் துளாவிக் கொண்டு போனார்கள். சிலர், அவள் அருகிலேயே நின்று முறைத்தார்கள். ராசாத்திக்கு, அடிக்கடி காறித் துப்ப வேண்டியது இருந்தது.

பஸ் நிலையத்தின் அருகில் முக்காடு போட்டு முடங்கிக் கிடந்த ஒரு முதியவர் எழுந்தார்.

“இம்மா நேரத்துல நீ எங்கேயும் போக முடியாது. பேசாமல், அந்த ஒரத்திலே படுத்துக்க.. காலங்காத்தாலே பூடலாம்.”

பத்து ஆண்டுகளுக்கு முன்னால், தான் பத்து வயதுச் சிறுமியாக இருக்கும்போது, இறந்துப்போன தன் நயினாவைப் பார்ப்பதுபோல், அவள் அந்த முதியவரைப் பார்த்தாள். அவரை ஆதரவாகப் பிடித்துக்கொண்டு அங்கேயே முடங்கினாள். ஆத்தாள், நினைப்பில் அவளுக்குத் துாக்கம் வரவில்லை.

மறுநாள், காலையில் எழுந்து அவள் புறப்படப் போனபோது, வண்ணாரப்பேட்டையில் இருந்து, ஒரு ஆயா வந்தாள். நேராக அவளிடம் வந்து, ‘இம்மா லாட்டையும் எவ்வளவுக்கு குடுக்கிறே” என்று கேட்டாள். ராசாத்தி, இருபத்தைந்துக்கு சொல்லி, இருபது ரூபாய்க்குக் கொடுத்தாள். அவளுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. மயிலாப்பூரில் கூறு போட்டு விற்றால், மிஞ்சி மிஞ்சித் தேறினால், ஒரு நாலு ரூபாய்தான் தேறும். இப்போ முள்ளங்கிப் பத்த மாதிரி சொளையாய்ப் பத்து ரூபாய்க் கிடச்சிட்டுது… மறுநாளும் வருவதாக ஆயா வாக்களித்தாள்.

ராசாத்தி, ஆத்தாக்காரியையும் தம்பி தங்கைகளையும் மயிலாப்பூரில் போய்ப் பார்த்துவிட்டு, கொத்தவால் சாவடிக்கு வந்தாள். ஆயா வாங்கின இடத்திலேயே கடையைப் போட்டாள். முன்தினம் வந்த அதே வண்ணாரப்பேட்டை ஆயா, இரண்டு ஆயாத் தோழிகளைக் கூட்டிக்கொண்டு வந்தாள். கொத்தவால் சாவடியில் ஏகப்பட்ட பாக்கி வைத்து, அங்கே தலைகாட்ட முடியாமல் தவித்த இந்த ஆயாக்களுக்கு, ராசாத்தி பாரிஸில் கடைபோட்டது வசதியாக இருந்தது.

ராசாத்தியின் இட ‘ஆக்கிரமிப்பை இதர தெரு வியாபாரிகள் கண்டித்தார்கள். “ஏதோ போனா பூடுதுன்னு ஒரு நாள் இடங்கொடுத்தோம். நீ என்னாமே. பெர்மனண்டா ஆயிட்டே.” என்று சொல்லி, ஒரு நடுத்தரப்பெண், அவள் கூடைகளை,தெருவில் கவிழ்க்கப் போனாள். அப்போது, பக்கத்தில் எதையெடுத்தாலும் ஒரு ரூபா கடை போட்டிருந்த கண்ணுச்சாமி, “அதுவும் புழச்சிட்டு பூட்டுமே. உன் தலையிலயா குந்துறாள்.” என்றான் கம்பீரமாக ராசாத்தி, அவனை நன்றியுடன் பார்த்தாள்.

விரைவில், இளம் பெண் ராசாத்தியும், இருபத்தைந்தைத் தாண்டாத கண்ணுச்சாமியும், கிசுகிசு பேசத் துவங்கி விட்டார்கள். ‘பவுடர் டப்பா, அத்தர் சென்ட், ஜட்டி, கைக்குட்டை, பிளாஸ்டிக் டப்பா, கூடை, பந்துகள் முதலிய சர்வதேச நிவாரணிகளை’ வைத்திருந்த கண்ணுச்சாமி, லுங்கியை ஒரு இறுக்குப் போட்டு கட்டிக் கொண்டு, கர்ச்சிப்பைக் காலருக்குள் வைத்துக்கொண்டு, சினிமாவில் ‘டூயட் பாடுவதற்காகக் கதாநாயகன், காலை வைத்துக்கொண்டு நிற்பதுபோல் நிற்கும் காட்சியைப் பார்க்கப் பார்க்க, ராசாத்திக்கு உடலெல்லாம் ஆடும். விரைவில் இருவரும் ‘ரெண்டாவது ஆட்டத்துக்கு போவது என்று முடிவு செய்தார்கள்.

ஆட்டநாள் வருவதற்கு ஒருநாள் முன்னதாக கண்ணுச்சாமி, மயிலாப்பூருக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த ராசாத்தியிடம் விரைந்து வந்தான்.

“நாளிக்கி ஜோரா டிரஸ் பண்ணிக்கினு வரணும். சொல்விட்டேன்.”

“எனக்குப் பயமா இருக்குய்யா. ஆத்தாக்காரிக்குத் தெரிஞ்சா உசிர விட்டுடும்.”

“எல்லா இடத்துலையும் நடக்கறதுதானமே… ஊரு உலகத்துல நடக்கிற்தை காப்பி அடிக்கிறோம். அப்புறம். இதை.. நைஸா முந்தானைல வச்சு. வூட்டுக்கு கொண்டு போ. காத்தால கொண்டு வந்துடு.”

“என்னய்யா இது..?”

“செம்புக்கட்டி. போலீஸ் பாலோ பண்ணுது. குயிக்கா வாங்கு. நான் ஜகா வாங்கணும்.”

“யோவ். இந்த வேலைக்கு வேற ஆளப்பாரு… நான் நல்லபடியா வாழனுமுன்னு நினைக்கிறவா.”

“ராசாத்தி… இந்தத் தொழில எல்லாரும் பண்றாங்க. டயமாவுது. வாங்கிக்கோ…”

“யோவ். என்னை என்ன ஒன் பொம்மைன்னு நினைச்சுக்கினியா? மரியாதையா. நல்லபடியா நடக்கிறதா இருந்தா.. என்கிட்ட பேக. இல்லன்னா, நடையைக் கட்டு.”

“ராசாத்தி, சொல்லிட்டேன். என்னப் பகச்சி, இந்தப் பேட்டையில் நீ கடை போட முடியுமா?”

“நீ போறியா. இல்ல. நானே போலீஸ்ல சொல்லணுமா?”

கண்ணுச்சாமி, போய்விட்டான். ராசாத்தியால், மயிலாப்பூர் பஸ்ஸில் ஏற முடியவில்லை. அப்படியே, சாலையோரத் தடுப்புச் சுவரில் சாய்ந்து கொண்டாள். ‘கண்ணுச்சாமியும் கட்சில ஒரு கஸ்மாலந்தானா? பேஜாரான வுலகண்டா. தாலி கொண்டு வருவான்னு எதிர்பார்த்தால், அந்த புறம்போக்கு, செம்புக்கட்டியை கொண்டு வரான். என்ன பொழப்புடா நயினா’.

மறுநாள், கண்ணுச்சாமியை கைவிலங்கு போட்டு, ராசாத்தியிடம், இரண்டு போலீஸ்காரர்கள் இழுத்து வந்தார்கள்.

ராசாத்தியால், பேச முடியவில்லை. கண்ணுச்சாமியை அவளால் மறக்க முடியவில்லை. தேம்பித் தேம்பி அழப்போனாள். ஆகையால்,

“ஏய் பொண்ணு, இவன் வழக்கமா திருடுற ஒயரு, பல்பு, செம்புக் கட்டிங்கள உன்கிட்டதான் குடுக்கிறதா சொல்றான். உள்ளதைச் சொல்லு. இல்லை.”

இந்தச் சமயத்தில், “இவள்தான் சாமி, என்னைத் திருடச் சொல்லித் தூண்டிவிட்டது. ரவ்வோண்டு திருடிக்கினு வந்தா, ‘இம்புட்டுத்தான் முடிஞ்சுதான்னு.? கேட்பாள். இவளாலதான் சாமி கெட்டேன்..” என்றான் அவன்.

ராசாத்தி, விக்கித்து போனாள். கரையான் புற்றில் கரு நாகம் போன கததான். அடப்பாவி.

போலீஸ்காரர், பிரமை தட்டி நின்ற ராசாத்தியை அச்சுறுத்துவதற்காக, லத்தியைத் ஒங்கியபோது, எங்கிருந்தோ வந்தார் ஒருவர். மிடுக்கான தோற்றக்காரர், பளபளப்பான சபாரிக்காரர், போலீஸ் லத்தியை பிடித்தபடியே, ஆணையிட்டார்.

“லத்தியை கீழே போடுமேன். நேற்று. இவன் ‘கேஸ்’ பிடிக்கிறதுக்காக, இவனுக்கு ‘போக்கு’ காட்டினேன். அந்தப் பொண்ணு, அவனுக்கு எவ்வளவோ புத்தி சொன்னாள்.”

கண்ணுச்சாமியை இழுத்துக் கொண்டு போனார்கள். ராசாத்தி கூடையில் அழுகிப் போயிருந்த கொய்யாப் பழம் ஒன்றை எடுத்து, வெளியே எறிந்தாள்.

இரண்டு மூன்று நாட்கள் கடந்தன.

கண்ணுச்சாமியின் கையாட்கள் அவளைக் கலாட்டா செய்யத் துவங்கினார்கள். அவள் கடைக்குப் பக்கத்திலேயே ஒருவன் கடை போட்டுக் கொண்டு, அசிங்கமான பாடல்களை இயற்றிப் பாடினான்.

ஒருநாள், கண்ணுச்சாமியின் தொண்டர்கள் நான்குபேர், அவளைத் தொடுவது மாதிரி கற்றி நின்று கொண்டார்கள் – அவளை அவமானப்படுத்தி விடுவது என்று. அந்தச் சமயத்தில், வந்து நின்ற பஸ்வில் ஏறலாம் என்றால், அதில் பழைய கண்டக்டர்!

ராசாத்தி, பல்லைக் கடித்துக்கொண்டு நின்றபோது, நல்ல வசதியோடு இருப்பதுபோல் காட்சியளித்த ஒரு பெண் வந்தாள். அந்தப் பெண்ணையும் அவர்கள் கிண்டல் செய்யத் துவங்கினார்கள். ராசாத்தியால், பொறுக்க முடியவில்லை.

“ஏண்டா. கம்மனாட்டிங்களா.. என்னைத்தான் என்ன வெல்லாமோ பேகறிங்க… தலைவிதின்னு பொறுத்துக்கின்னேன். அந்த அம்மா, ஒங்கள என்னடா பண்ணுது, ஒங்க வாயில கரையான் அரிக்க.”

இதற்குள் அந்தப் பெண்ணின் கணவன் வந்துவிட்டான். கண்ணுச்சாமி வகையறாக்கள், காணாமல் போனார்கள். அந்தத் தம்பதியுடன், ராசாத்தியும் புதிதாக வந்த பஸ்ஸில் ஏறினாள். அந்தப் பெண்ணின் அருகில் உட்கார்ந்து, அவள் கேட்கிற கேள்விகளுக்கு எல்லாம், ராசாத்தி பதிலளித்துக் கொண்டிருந்தாள்.

அவர்கள் சிபாரிசில் கிடைத்த இடம் ஒன்றில், பாங்க் உதவியுடன், ராசாத்தி பெரியதாகக் காய்கறிகடை போட்டாள். அவள் தம்பி தங்கைகளும் வந்து கவனிக்கும் அளவிற்கு, கடை பெரிதாகிவிட்டது. கூறுபோட்டு விற்ற ராசாத்தி, இப்போது நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவளாகி விட்டாள்.

என்றாலும், சோதனை அவளை விட்டதாகத் தெரியவில்லை. அவள் கடை வைத்திருந்த கட்டிடத்தின் சொந்தக்காரர், கார்ப்பரேஷன் காரர்கள் வரப்போவதாகவும், அவர்களிடம், தான் வாடகை ரூபாய் இருபதுதான் கொடுப்பதாகக் கூறவேண்டும் என்றும் கூறினார். “என்ன சாமி. நாயம். அறுபது ரூபா வாடகையை வேணுமுன்னா, அம்பதுன்னு சொல்றேன். ஒரேயடியா இருபதுன்னு சொல்றது நாயமா…? பொய் சொல்றதுக்கும் ஒரு லிமிட் வானாமா?” என்று அவள் திருப்பிக் கேட்டாள். வீட்டுக்காரர், ஒரு கை பாக்குறேன் என்று சவால் விட்டார்.

இரண்டு தினங்களுக்குள் அவள் கடை, இரவோடு இரவாகச் சூறையாடப்பட்டது. ஐநூறு ரூபாய் வைக்கப்பட்டிருந்த கல்லாப் பெட்டியையே காணவில்லை. பாங்க்காரர்கள், அவள் கடனைக் கட்டாமல் இருப்பதற்காக, மோசடிசெய்திருப்பதுபோல்பேசினார்கள். ‘அடகடவுளே.பழயபடி காய்கறிக்கடையில் வாங்கி,கூறுபோட்டு விக்கக்கூட காக இல்லியோ…” என்று அவள் ஆத்தா ஒப்பாளி வைத்தாள்.

ஆனால், ராசாத்தி கலங்கவில்லை. கடந்த காலத்தை நினைத்துப் பார்த்தாள். அவள் மட்டும் சிறிது சலனப்பட்டு, கூடைகளை ஏற்றுவதற்காக, கண்டக்டரிடம் இணங்கியிருந்தால், இன்று ஒரு கைக்குழந்தையுடன் விபச்சாரியாக மாறியிருக்கலாம். காதலனுடன் சினிமாவுக்குப் போகவேண்டும் என்ற ஆசையில், அந்த செம்புக்கட்டியை வாங்கியிருந்தால், இந்நேரம் அவள் ஒரு கிரிமினல் குற்றவாளியாக மாறியிருக்கலாம்.

உடனடித் தேவைகளின் சபலங்களுக்கு இரையாகாமல், நேர்மையுடனும், ஒழுக்கத்துடனும் இருந்தால், சோதனைகளே சாதனைகளைக் குவிக்கும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவள் அவள். நேர்மை என்பது காந்தம் மாதிரி. தர்மம் என்பது இரும்பு மாதிரி. காந்தம் இரும்பை இழுத்துக் கொண்டுவிடும். தர்மதேவதை அவளிடம் வந்தே ஆகவேண்டும். வேறு வழி இல்லை.

ராசாத்தி, சூறையாடப்பட்ட கடையை அங்குமிங்குமாகப் பார்த்தாள். பின்னர், சேலையை இறுக்கி உடுத்துக் கொண்டாள். காலில் படர்ந்த துாசைத் தட்டிவிட்டுக் கொண்டாள். புலம்பிக் கொண்டிருந்த அம்மாக்காரியைப் பார்த்து, “ஏம்மா, புலம்புற..? ஒண்ணுங் குடி முழுவிப் பூடல. ஆகவேண்டியதப் பார்க்கலாம்.” என்று நளினம் கலந்த கம்பீரத்துடன் எழுந்தாள்.

– குமுதம், 19-5-1977 – தலைப்பாகை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர், 2001, திருவரசு புத்தக நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *