கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 1, 2023
பார்வையிட்டோர்: 3,050 
 

(1978 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த ஒரு வார காலமும், அவன் மாதிரியே போன இடம், தெரியாமல் போய்விட்டது.

எத்தனை நாளைக்குத்தான் அக்கம் பக்கத்துப் பெண்களிடம் கேம்ப் போயிருக்கார் என்று சொல்ல முடியும்? வாழ்க்கையை கேமாக எடுத்துக்கொண்டு ஒடிப் போய்விட்டவனை, எத்தனை நாளைக்கு கேம்பிற்குள் வைக்க முடியும்?

கூடப் பிறந்த அண்ணனிடமே, ‘வந்துடுவார். நேற்று கூட லட்டர் வந்தது. போன இடத்துல ஏகப்பட்ட வேலையாம். இன்னும் இரண்டு நாளையில வந்துடுவாராம் என்று சாமர்த்தியமாகச் சொல்லிவிட்டு, அவனுக்குத் தெரியாமலே கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவன், லட்டரைக் காட்டு பாக்கலாம் என்று கேட்டபோது நல்லா இருக்கே. நீ ஒன் ஒய்ஃப் எழுதுற லட்டரைக் காட்டுவியா. என்னண்ணா நீ என்று சிணுங்குவது போல் சிணுங்கி, அந்தச்சாக்கில் அவனுக்குத் தெரியாமல் அழுது கொண்டாள்.

ஊரில இருந்து வந்த மாமனாரிடம்கூட – அப்பா வந்தால் இருக்கச் சொல்லு. நான் சீக்கிரமாய் வந்துடுறேன்னு சொல்லிட்டுப் போயிருக்கார் மாமா’ என்று, நிதானமாகவும் மெதுவாகவும் சொன்னால் அழுது விடுவோம் என்று நினைத்து, சீக்கிரமாகவே சொல்லிவிட்டாள். ஆனால் இப்படி எத்தனை நாளைக்குத்தான் சொல்லிக் கொண்டிருக்க முடியும்?

அரிசி குறையட்டும். அன்றாடச் செலவு ஒழியட்டும். குழந்தைக்கு வந்த காய்ச்சலும் இருக்கட்டும். எப்படியோ வாயைக்கட்டியும் வயிற்றைக் கட்டியும் குழந்தையின் துன்பத்தைக் காண முடியாமல் தவிக்கும் தாய்மையைத் தனிமைப் படுத்தியும் சமாளித்துக் கொள்ளலாம். ஆனால், இன்னொருத்தியுடன் ஒடிப் போய்விட்ட அவனைப் பற்றிச் சொல்லாமலும், அதனால் ஏற்பட்ட சோக உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளாலும் எப்படி இருக்க முடியும்? இருந்தாள்.

கட்டிலை மட்டுமே கட்டிக் கொண்டவள் போல், கட்டிலோடு கட்டிலாக ஒட்டிக் கிடந்த அவள், குழந்தையின் அழுகை ஒலி கேட்டதும், உள்ளத்தின் ஒலத்தை ஒடுக்கிக் கொண்டே எழுந்தாள். அந்தக் குழந்தையிடம் – அவன் கொடுத்த தனது சொந்தக் குழந்தையிடமே அவளுக்கு முதலில் வெறுப்பு ஏற்பட்டது. குழந்தைக்கு ஐந்து வயதாகியிருந்தால், இந்நேரம் அடித்திருக்கக் கூடச் செய்வாள். ஆனாலும் –

கண்விழிகள் இரண்டும் கனத்ததுபோல் கண்தெரியாமல், கண் திறக்காமல், அவை பழுத்ததுபோல்செக்கச்செவேலென செவ்வரளிப் பூப்போல்,பார்த்து அடையாளம்காண முடியாதுபோனாலும், அவள் இங்கேதான் இருப்பாள் என்று அனுமான்ரித்ததுபோல் அவள் மார்பில் கைபோட்ட குழந்தையை எடுத்து மார்புடன் அனைத்துக் கொண்டாள். குழந்தையின் வாய்க்குள் பால் போனதா அல்லது கண்ணில் ஊற்றாக கழுத்தில் அருவியாக மார்பில் ஆறான கண்ணிர் போனதா என்பதைச் சொல்ல முடியாது.

குழந்தையை அழுத்தமாக அணைத்துக்கொண்டே, நெஞ்சில் படர்ந்த மனப் புழுக்கத்தைத் தாய்மையால் விசிறி விடப் பார்த்தாள். முடியவில்லை.

அவளுக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள்தான் ஆகின்றன. அரசாங்க உத்தியோகம் பார்க்கும் அவனைத்தான் கட்டுவேன் என்று அவள் ஒன்றும் அடம்பிடிக்கவில்லை. சொல்லப்போனால், மணமேடையில்தான் அவனை முதன் முதலாகப் பார்த்தாள். இவ்வளவுக்கும் பி.யூ.சி. வரைக்கும் படித்துவிட்டு பின்னர் செகண்டரி கிரேட் ஆசிரியையாகப் பயிற்சி பெற்றவள். பட்டணத்தில் போலீஸ் இலாகாவில் வேலை பார்த்த அண்ணன்தான், தங்கை நாட்டுப்புறமாக இருக்கக் கூடாது என்று நினைத்து இவனைக் கொண்டுவந்தான்.

திருமணமான பிறகுதான், அப்பாவின், ஆஸ்திக்காக, இவளை அவன் கட்டிக் கொண்டாலும், இன்னொருத்தியுடன் ஏற்கெனவே ‘புனிதக் காதலி’ல் அவன் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது. காவற்துறையில் துப்புகளைத்துலக்கும்வேலையில் இருக்கும் அவள் அண்ணனுக்கு சொந்தத் தங்கையின் எதிர்காலத்தை நிர்ணயித்ததில், அவன் கலை, கை கொடுக்கவில்லை.

ஆரம்ப மாதங்களுக்குப் பிறகு அவள் எழுந்திருக்கும் முன்னாலே அவன் போய்விடுவதும், இரவில் அவள் தூங்கிய பிறகே அவன் வருவதும் வழக்கமாகிவிட்டது.

அவளால் பார்க்க முடியாமல், ஒரளவு கேள்விப்பட்டு இருந்தவளை, ‘இவங்க மாலதி… எங்க ஆபீஸ்ல வேலை பார்க்கிறவங்க. என்னோட பெஸ்ட் பிரண்ட் என்று சொல்லிக் கொண்டே அவன் கூட்டிவருவான் என்று அவள் நினைக்கவில்லை. ஆனாலோ –

அவன் கூட்டி வந்தான்.

ஒரே அலுவலகத்தில் உத்தியோகம் பார்க்கும் அவள் அவளின் தாற்காலிக பியூன் உத்தியோகத்தை, நினைத்தால் பாதுகாக்கக் கூடிய அல்லது பறிக்கக்கூடிய நிலையில் உள்ள உத்தியோகத்தில் உலவும் அவன் – தன் கணவனிடம் முதலில் ஏற்பட்டிருக்கக் கூடிய பயத்தை காதலாக மாற்றியிருப்பாள் என்பதையும், உத்தியோகம் ‘காயமாவதற்காக, தனகாயத்தை காயமே இது பொய்யடா’ என்ற ஏகாந்த உணர்வில் மெய்யாகவே கொடுத்திருப்பாள் என்பதையும் மனோதத்துவம் படித்த மேகலாவால் புரிந்து கொள்ள முடிந்தது. தயங்கித் தயங்கி உள்ளே வந்து, பிறகு இவள் காட்டிய ‘சாதாரணத்தால் அந்தப்பெண்தைரியக்காரியாக வெளியேறினாள். ‘அடிக்கடி வாரேன்க்கா. உங்க வீடு தான் தெரிந்து போச்சே என்று சொல்லி, அவள் விடைபெற்ற போது, மேகலாவுக்கு அதுவரை சந்தேகமாக இருந்தது, சர்வ உண்மையாகத் தெரிந்துவிட்டது.

மேகலா, இருட்டி போன தன் எதிர்காலத்திற்காகக் கலங்கினாள். குழந்தையின் எதிர்காலம் எப்படி ஆகுமோ என்று குழந்தை போலவே அழுதாள். இதற்குள், அவள் அடிக்கடி வீட்டுக்கு வருவதும், அவனிடம் ஒங்களைப்பற்றி எனக்குத்தெரியாதா என்று அடிகடிச்சொல்வாள்.மனைவியிடம்’டியனுக்கு இவ்வளவு நேரமாடி! என்று அதட்டுகையில், அக்கா, நீங்க அவரு சொல்றதுக்கெல்லாம் பேசாமல் இருந்தால் அவரு தலைக்கு மேல குதிப்பாரு. அன்றைக்குக் கூட அந்த தியேட்டர்ல என்னடான்னா. என்று சொல்லிவிட்டு, பேசியதை முடிக்க முடியாமல் திண்டாடியவள்.

மேகலாவும் திண்டாடினாள்.

இந்த மாலதி வருவதையும், அவனுடன், தான், தனிமையில் பகிர்ந்து கொள்ளக்கூடிய சில மணி நேரங்களை ஆக்கிரமித்துக் கொள்வதையும், மனைவி பதவி வகித்த மேகலாவால், பொறுக்க முடியவில்லை. ஒரு நாள் அவனில்லாத சமயத்தில் வந்த அவள் வந்ததும் வராததுமாக அவரு இல்லியா அக்கா என்று சொன்னபோது மேகலாவால் சகிக்க முடியவில்லை.

“ஆமாம்மா என்னை எப்பப் பார்த்தாலும் அக்கா அக்கான்னு சொல்றியே, என்மேல இவ்வளவு பாசமா?’

‘ஒங்க மனக யாருக்கு அக்கா வரும்? கள்ளமில்லாத மனசுக்கா ஒங்க மனக. என் கூடப் பிறந்த அக்காளைவிட நீங்கதான் எனக்கு அக்காள். ஒங்கள மாதிரி பெருந்தன்மை யாருக்கு அக்கா வரும்? ஒங்கள வாய் நிறைய அக்கான்னு கூப்பிடும்போது எவ்வளவு சந்தோஷமாய் இருக்கு தெரியுமாக்கா?’

‘நீ சொல்றதுல கடைசி வார்த்தை உண்மை. என்னை அக்கான்னு சொல்றதுனால ஒனக்கு சந்தோஷமாத்தான் இருக்கும். அதனால. அவரு, ஒனக்கு ஆசை அத்தானா ஆயிடுவாரு பாரு.

அந்தப் பெண், அவளை நிமிர்ந்து பார்த்தாள். ஏதோ ஒன்று மனதில் பட்டு நெஞ்சை அரித்துக்கொண்டே வாய்க்கு வந்தது போல், உதட்டைக் கடித்தாள். தலையை குனிந்து கொண்டே வெளியேறினாள்.

ஆனால், அவன் இரவில் தலையை நிமிர்த்தி கொண்டே வந்தான். நானும் அவளும் உயிருக்குயிராய் இருக்கோம். ஒனக்கு முன்னால அவள் எனக்குப் பழக்கமானவள். நீ அவளை வீட்டை விட்டுத் துரத்துவது, என்னைத் துரத்துவது மாதிரி என்று சொன்னான். என்றாலும், அவன் நாகரீகமானவன் வீட்டு நடப்பு வெளியாரை வரவழைக்கும் அளவுக்கு விரசமாகக் கூடாது என்ற நாகரீகத்தைத் தெரிந்து வைத்திருப்பவன். மேகலாவை அடிக்கவில்லை. அவள் நகை நட்டுக்களைக் கேட்கவில்லை. தன் பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு, இரவு பத்து மணிக்குப் போனவன், போனவன்தான்.

அழுது வீங்கிப்போய், முகத்தின் அத்தனை பகுதியும் நீர்சொரியும் கண்களாய் மாறினவள்போல் இரவைக் கழித்த மேகலா, கணவன் தனக்காக வரவில்லையானாலும் தன் குழந்தையைப் பார்க்கவாவது வருவான் என்று நினைத்தாள்.

அவன் வரவாகவில்லை. செலவாகி விட்டான்.

வீட்டுக் கதவு பயங்கரமாகத் தட்டப்பட்டது. மேகலா குழந்தையைத் தோளில் போட்டுக் கொண்டே முன்னறைக்கு வந்து கதவைத் திறந்தாள். அண்ணனை மெளனமாக வெறித்துப் பார்த்தாள். அவன் பொரிந்து தள்ளினான்.

‘ஆமாம்; தெரியாமத்தான் கேக்குறேன். என்னையும் ஒன் புருஷன் மாதிரி புறம்போக்குன்னு நினைச்சியா? என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லல. சரி, அண்ணன்னு சொல்லாண்டாம். ஒரு போலீஸ்காரன், என்கிற முறையிலாவது சொல்லலாம். இல்லியா?

கொடுரமான மெளனம். சொல்லாமல் கொல்லும் மெளனம். ‘நீ கொண்டு வந்த மாப்பிள்ளையைப் பார்த்தியா என்று கேளாமல் கேட்பது போன்ற மெளனம்.

“ஆல் ரைட் அந்தப் பயலை ஒன் காலுல விழுந்து மன்னிப்புக் கேட்க வைக்கிறேனா இல்லியான்னு பாரு, இன்னைக்கு ராத்திரிக்கு ஒரு வேடிக்கை நடக்கப் போவுது பாரு. ஒன் வாழ்க்கையில் குறுக்கிட்டவள் என்ன கதியாய் ஆகப் போகிறாள் பாரு! ஒன்னை நிர்க்கதியாய் விட்டுட்டுப் போனவன் என்ன கதியாய் ஆகப் போகிறான் பாரு’

‘அவரை ஒன்றும் செய்யாதீங்க அண்ணா என்று நாவல் நாயகிகள்-திரைநாயகிகள் போல் பேசாத மெளனம்.தலைக்கு மேல் போனது சாணானால் என்ன. முழமானால் என்ன என்கின்ற வானளாவிய மெளனம்.

‘சாப்பிட்டியா? செலவுக்குப் பணம் இருக்கா? ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா? இல்ல என் வீட்டுக்கு வாரீயா?’

தலையைக்கூட ஆட்டாத மெளனம். தன்னையே தின்றுகொள்ளும் மெளனம்.

‘நீ வாய் திறந்து பேசியிருந்தால் இப்படி ஆயிருக்காதே. இன்னுங்கூட, அவனை விட்டுக் கொடுக்க ஒனக்கு மனசு வருதா?’

மெளனம் விட்டுக் கொடுத்தது.

குழந்தை தோளில் இருக்கிற உணர்வு இல்லாமலே அண்ணனின் கையைப் பற்றி’என்னைக்கைவிட்டுவிடாதே என்று சொல்லாமல் சொல்லி, அவன் தோளில் முகந்தேய்த்து விம்மினாள். நீர் தேங்கிய அண்ணனின் கண்களில் கொதித்த நீர் தன் தலையில் விழும்படி அவனை அங்குமிங்குமாக ஆட்டிக்கொண்டே அழுதாள். அந்த ஆட்டத்தில் ஆடிய குழந்தை, அதைத் தாலாட்டாக நினைத்து சிரித்தது.

இரவு வந்தது. போலீஸ் அண்ணன் வந்து முன்னறையில் உட்கார்ந்தான். பின்பு படுக்கையறையில் உழன்று கொண்டிருந்த தங்கையைப் பார்ப்பதும், முன்னறைக்கு வந்து ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்ப்பதுமாக உலாவிக் கொண்டிருந்தான். அண்ணனும் தங்கையும் மெளனத்தால் ஒன்றுபட்டனர்.சோகத்தைப் பகிர்ந்து கொள்பவன்போல் அவன் மருமகனை எடுத்து மார்போடு அணைத்தவாரு உலவினான். இரவு மணி பதினொன்று இருக்கும். குரைத்த தெரு நாய்கள் வத்திக் கம்பின் அதட்டலில் அடங்கின. பூட்ஸ் ஒலிகள் கேட்டன. கதவு தட்டப்பட்டது. அண்ணன்காரன் உள்ளே வந்து,தங்கையை வெளிக்கதவைத் திறக்கும்படிசைகை செய்தான்.எதையுமே பொருட்படுத்தாததுபோல் இருந்த தங்கையின் கையைப் பிடித்து நிறுத்தி, முதுகைத் தள்ளி முன்னறைக்குக் கொண்டு வந்தான். மேகலா கதவைத் திறந்தாள். கதவைப் போல் கண்களையும் அகல விரித்தாள். கையில் லத்தி கம்புகளுடன் நான்கு அய்ந்து யூனிபாரக்காரர்கள். அவர்களுக்கு மத்தியில் தலை தொங்கிப்ப்ோன கணவனும், அதே அந்த மாலதியும். போலீஸ் அதிகாரி கனிவான கண்டிப்புடன் கேட்டார். ‘ஏம்மா, இவரு ஒன் புருஷனா? மேகலா, தன் தலையை லேசாக ஆட்டினாள். ‘இவரையும் இந்தப் பொண்ணையும் ஒரு வீட்டுவ ஏடாகோடமான சந்தர்ப்பத்துல பிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மாரல் டர்பிடுட் இவருகிட்ட கேட்டால், ஒங்களோட சம்மதத்தோட இந்தப் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கப் போறதாயும், அதுக்காக ஒங்களோட சம்மதத்தோட ஒத்திகை பார்த்ததாகவும் சொல்றார். அப்படியாம்மா?

நெடிய மெளனம். பொய்க்கு விலைபோகாத மெளனம்.

போலீஸ் அதிகாரி அவனை மிரட்டினார்.

‘நீ ஒரு மனுஷனாய்யா. பெண்டாட்டிக்கு குழந்தை பிறக்கல. அதனால குழந்தை வேணுமுன்னு அவளோட து.ாண்டுதலாலேயே இந்தப் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கப் போறதாய் சவுடால் விட்டியே, இப்போ சொல்லுய்யா. இந்தப் பிள்ளை முகத்தைப் பார்த்து சொல்லுய்யா.சீ. நீ ஒரு மனுஷனா?

அவன்,மனைவியைப் பரிதாபமாகப் பார்த்தான்.ஆசைநாயகி, தலையில் முக்காடு போட்டுக் கொண்டு, அப்படியும் மறையாமல் இருந்த முகத்தின் மிஞ்சிய பகுதியைக் கைகளை வைத்து மூடிக் கொண்டிருந்தாள். மேகலாவின் அண்ணன் கை முஷ்டிகளை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டுக் கொண்டிருந்தான்.

போலீஸ் அதிகாரி தீர்ப்புச் சொன்னார் :

“ஆல் ரைட் இனிமேலயாவது ஒழுங்கா நடந்துக்கோ. ஒன் மச்சானோட முகத்துக்காகவும் இந்த அம்மாவுக்காகவும் விடுறோம். இல்லன்னா மவனே அஞ்க வருஷம் வாங்கிக் கொடுத்திருப்போம். கவலைப்படாதிங்கம்மா. இனிமேல் இவளை ஒங்க வழிக்கு வராமல் பார்த்துக்கிறது எங்க பொறுப்பு கோவிந்தா வரட்டுமாடா ஒன் தங்கச்சி புருஷனை ஊமைக்காயம் படும்படியா உதை. ரத்தம் வராமல் குத்து. அடியாத மாடு படியாது. அதுலயும் ஒன் மச்சான் அசல் எருமைமாடு வரட்டுமா. ஏய், நீ கெட்ட கேட்டுக்கு முக்காடா. ஒனக்கு குடும்பஸ்தன் தானா அகப்பட்டான்.? நடடி நாயே!”

மேகலா உள்ளே வந்து படுக்கையறைக்குள் போவதற்காக நடந்து கொண்டிருந்த கண்வனைக் கையமர்த்தி நிற்கச் செய்தாள். வெளியே ஒரு போலீஸ்காரரால் முக்காடு விலக்கப்பட்டு, இன்னொருவரால் முகத்தை மறைத்த கை விலக்கப்பட்டு செத்துப்போனவள்போல் விறைத்து நின்ற அவளைப் பார்த்தாள். அவளால் பேசாமல் இருக்க முடியவில்லை. மறுபிறவி எடுத்தவள் போல் கர்ஜித்தாள்:

“இன்ஸ்பெக்டர் ஸார் அந்தப் பெண்ணை என் வீட்ல விட்டுட்டுப் போங்க…”

தலையில் இருந்து தொப்பியை, அதிர்ச்சியின் அடையாளமாக கையில் எடுத்துக் கொண்டே, இன்ஸ்பெக்டர் கேட்டார்.

“என்னம்மா நீங்க? என்ன சொல்றோமுன்னு புரிஞ்சுதான்.”

“புரிஞ்சுதான் பேசறேன் சார். இவள் என்னோட சம்மதத்தோடுதான் அவரோட தொடர்பு வச்சிருக்காள். இவள் தொடர்புக்கே நான்தான் காரணம்:

‘சும்மா இரும்மா.இவள் செய்தது.விபச்சாரம்.விபச்சாரத்தடை சட்டத்தின் கீழ்’.

“அப்படின்னா நானும் குற்றவாளி. விபச்சாரத்தைத் தூண்டிவிட்ட குற்றவாளி நான். என்னையும் போலீஸ் எபிடேஷனுக்குக் கொண்டுபோங்க. அப்படிக்கொண்டு போறதாய் இருந்தாலும் காலையிலதான் கொண்டு போகலாம். சாயங்காலம் ஆறு மணிக்கு மேல பெண்களை போலீஸ் ஸ்டேஷன்ல வைக்கக்கூடாதுன்னு உத்தரவு இருக்கிறதாய் பேப்பர்ல படிச்சேன்:

இன்ஸ்பெக்டர் கொதித்தார்.

‘டேய் கோவிந்தா ஒன்தங்கச்சி பேசுறதைப் பார்த்தியாய்யா? இவள் இப்படி இருந்தால் அவன் எப்படி இருப்பான்? நம்ம டிபார்ட்மென்ட் நண்பனோடதங்கையாச்சேன்னுகம்மா இருக்கேன். இல்வன்னா…’

இன்ஸ்பெக்டர், சொன்னபடி கம்மா இருக்க வில்லை. சகாக்களுடன் வெளியேறினார். அண்ணன்காரன், அவர்களுக்குப் பின்னால் ‘ஸாரிடா, ஸாரிடா என்று சொல்லிக் கொண்டே எக்கி எக்கி நடந்து வழியனுப்பிவிட்டு கோபமாக உள்ளே வந்தான்.

அவள், விலக்கிய முக்காட்டை மீண்டும்போட்டுக் கொண்டு, தெரிந்த முகத்தை மூடிக்கொண்டு நின்றாள். ஆசைநாயகன் கதவுப்பக்கமாக வந்து நின்றான்.

மேகலா அமைதியாகப் பேசினாள் :

‘வாம்மா வா, உள்ளே வாம்மா.’

அவள் அடிமேல் அடியெடுத்து உள்ளே வந்தாள். கதவைத் தாழ்ப்பாள் போடப்போன மேகலா, கதவருகே நின்ற கணவனை கண்களால் புலன் விசாரணை செய்துகொண்டே, கத்தினாள்.

‘ஒங்களுக்கு இங்கென்ன வேல? எப்போ கட்டுனவளை விட கட்டாதவளைக் பெரிசா நினைசிங்களோ, அப்பவே கட்டுன தாலி க்கு மரியாதை இல்லாமப் போயிட்டுது. கணவன் என்கிற அந்தஸ்தும் போயிட்டுது. எப்போ சொந்தக் குழந்தையை விட்டுட்டுப் போகத் துணிஞ்சீங்களோ, அப்பவே தகப்பன் என்கிற அந்தஸ்து போயிட்டுது! அதுக்கும்மேல எப்போ உங்கள நம்பின இந்தப் பெண்ணை போலீஸ் கையில விட்டுட்டு வீட்டுக்குள்ள தனியா வந்தீங்களோ, அப்பவே மனிதன் என்கிற அந்தஸ்தும் போயிட்டுது. போங்க.எனக்குத்துக்கம் வருது. நான் தாழ்ப்பாள் போடணும். உம். இதுக்கு மேலயும் நீங்க மனுஷன்னா நிற்க மாட்டீங்க?’

அவன் மனிதன்தானாம். மனைவியையும், மச்சானையும் கூர்ந்து பார்த்துவிட்டு, கூப்பிடுவாள், கூப்பிடுவாள்’ என்று நினைத்துக்கொண்டே வெளியே போய் நின்றான். அப்புறம் காணாமல் போய்விட்டாள்.

கோபமாகப் பேசப் போன அண்ணனின் கையை மேகலா பிடித்துக் கொண்டு குரல் கொடுத்தாள் :

‘இந்தப் பிரச்சினையை ஒன் தங்கையோட பிரச்சினையாய் நினைக்காமல் ஒரு பெண்ணோட பிரச்சனையாய் நினைத்தால் ஒனக்குக் கோபம் வராது. இந்த ஏழைப்பெண் எப்படியோ மயங்கிட்டாள். இதுக்கு அவரும் காரணம். இவளை மட்டும் தண்டிக்கிறது என்ன நியாயம்? போலீஸ் கைக்குப் போகிற இவள் நிலைமை என்னாகுமுன்னு நினைச்சுப் பார்த்தியா? தன் குஞ்சை சந்தோஷப் படுத்துறதுக்காகக் கோழிக்குஞ்சைக் கொத்திக்கிட்டுப் போற கழுகு மாதிரி பாசத்தை என்மேல கொட்டி பிரச்சினையைப் பார்க்காதே.புலி, சிறுத்தைமாதிரி துஷ்டமிருகங்களைப் பார்த்ததும், உடனே சாதுவான இதரமிருகங்களை எச்சரிக்கைப்படுத்திக் கூவும் மயில் மாதிரி பிரச்சினையைப் பாரு. என்றைக்கும் பாசத்தை உறவுக்காரங்க மேல மட்டும் வைத்தால் அந்தப் பாசம் விபரீதத்துல கொண்டுவிட்டுவிடும். இதுக்குமேலையும் இந்த மனுசனோட நான் வாழ்ந்தா, நான் ஒன் தங்கை இல்லண்ணா’.

சரிந்து விழுந்த மேகலாவை, கோவிந்தன், கொழுகொம்பாய் தாங்கிக் கொண்டான்.

– குமுதம் -1978 – தலைப்பாகை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர், 2001, திருவரசு புத்தக நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *