இருப்பிடம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 17, 2024
பார்வையிட்டோர்: 1,419 
 
 

(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஓலையை வெட்டுவதும் கத்திதானா! இந்த
ஓவர்சிர் சொல்லுதும் புத்திதானா?
கத்தரிக்காய் வெட்டுவதும் கத்திதானா? இந்தக்
கங்காணியார் சொல்லுவதும் புத்திதானா?
புடலங்காயை வெட்டுவதும் கத்திதானா?
…?”

“வயிரவநாதா…வயிரவ நாதா…இறங்கு மேனை”

“ஓலையை வெட்டுவதும் கத்திதானா?

“சொன்னால் கேள் மேனை…இறங்கு…ம்…ஆ”

அவள் கத்திக் கொண்டே இருந்தாள். வட்டிலில் போட்ட சோறும் குழம்பும் குழைத்தபடி அப்படியே கிடந்தன.

அவனுக்குத் தான் சாப்பிடுகிறோமென்ற பிரக்ஞை இருந்ததோ என்னவோ, அந்தத் தாயை அவன் கவனித்ததாகவே தெரியவில்லை.

ஆனால் அவன் தன் பாட்டுக்கு உரல்மீது நின்ற கொண்டிருந்தான். கையிலே ஒரு பிடியில்லாத பெரிய கொடுவாக் கத்தியைவைத்து, முன்னுக்கும் பின்னுக் குமாகத் தாளக் கட்டுக்குச் சரிவர , ஆட்டிக் கொண்டிருந்தான்.

இடைக்கிடை உரல் அசையும் போது, எங்கே விழுந்து விடுவானோ என்று நெஞ்சம் துணுக்குறும்;

ஆனால் அவன் துளி கூட அச்சமின்றிப் பாடிக் கொண்டேயிருப்பான்.

சாப்பிடவேண்டுமென்று தோன்றிய போதெல்லாம் குனிந்து, மெல்லவாயைத் திறப்பான்.

அப்போது அவள் அவனுக்கு ஊட்டி விட வேண்டும்.

மறுபடியும் அவன் தொடங்கி விடுவான்.

“ஓலையை வெட்டுவதும் கத்திதானா? – இந்த
ஓவர்சியர் சொல்லுவதும் புத்திதானா?….”

தினசரி, இந்தக் கைங்கர்யம் முடிவடைய , மூன்று மணி நேரமாவது ஆகிவிடும். அந்தத் தாயோ ஒரு பொழுதாவது சிறிதேனும் சலிப்படைந்தவளாகக் காணப்படமாட்டாள்.

இவ்வளவிற்கும் அவனை முழுப்பைத்தியம் என்று எல்லோரும் ஒதுக்குவது போல் அந்தத் தாயாரால் மட்டும் ஒதுக்கிவிட முடியவில்லை. அவளுக்கு அவன் ஒரே மகன்; செல்ல மகன்; சித்த சுவாதீனத்தில் இம்மியும் பிழையில்லாத அருமை மகன்.

ஆனால், அவனுக்கு என்னவோ, தாய். வீடு உலகம் என்ற வேறு பாட்டைக் கிரகிக்கும் அளவுக்குப் புத்தி வளர்ச்சியடைந்திருந்ததாகக் கூடத் தென்பட வில்லை. பசித்தால் அம்மா தர வேண்டும் என்ற நம்பிக்கை , அதற்கும் அப்பால் சிந்திக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை; தேவையும் இல்லை.

பதினேழு, பதினெட்டு வயதுக்கு ஏற்ற வளர்ச்சி; சிறிது அசிங்கமாக உப்பிய வயிறு; ஆனால் பத்தே வயது மதிக்கக் கூடியதாக, உரோமமே இல்லாத முகம்.

அவன் பள்ளியில் படித்த காலங்களில் அவனைக் காலையிலே கூட்டி வந்து பள்ளியில் விடுவாள் அந்தத் தாய். அதற்குப் பின் பகல் எல்லாம் காவல் கிடந்து, பின்னேரம் மூன்று மணிக்குப் பள்ளி விட்டதும். சேலைத் தலைப்பால் அவன் தலையை மூடிக் கவனமாக வீட்டுக்கு அழைத்துச் செல்வாள்.

ஆனால், அவனுடைய படிப்பு என்னவோ அரிவரி வகுப்பில் நாலு வருடம் தொடர்ச்சியாக இருந்ததோடு முடிவடைந்துவிட்டது.

‘செயன்னா, வானா, இல்லன்னா – கோழி’ என்று படத்தைப் பார்த்துக் கூறும் அளவிற்கு அவனுக்கு முளை விசாலமடைந்ததும், ஒருநாள்.

‘கந்தையா வாத்தியார்
கிந்தையா வாத்தியார்
கல்லுக்கு மேலே
குந்தையா வாத்தியார்’ என்று கூறிவிட்டு ஓட்டம் பிடித்து விட்டான்.

அத்துடன் செல்லம்மாவுக்கும் தன்னுடைய மகனின் பள்ளிப் படிப்பைப் பற்றிய திருப்தி ஏற்பட்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

2

ஒரு மணியிருக்கும். மத்தியானச் சாப்பாட் டிற்காக வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தேன்.

“எணை அம்மா…”

“எடி செல்லம்மா…இஞ்ச வாடி; வாத்தியார் போறாரெல்லோ…இந்த வேட்டியைக் கட்டி விடன்டீ”.

அப்போதுதான் நான் அவனைக் கவனித்தேன் குளித்த உடம்போடு, உயர்ந்து நெடுக நின்று கொண் டிருந்தான்.

தாய் வேட்டி கொண்டு வர உள்ளே போயிருக்க வேண்டும்.

“வாத்தியார்! பாண் மணி அடிச்சிட்டுதே…”

நான் ஓமென்று தலையை அசைத்தேன்.

உடல் வளர்ச்சியடைந்திருக்கிற அளவுக்கு அறிவு வளரவில்லை. இருந்தாலும் வாத்தியாருக்கு முன்னால் நிர்வாணமாக நிற்கக் கூடாது என்று படுகிறது அவனுக்கு.

சொந்தமாக எதையும் செய்யும் திறமையே அவனுக்கு இல்லையா? என்னுடைய மனமானது செல்லம்மா என்ற உயிருடன் பிணைந்து ஒன்றி நிற்கும் வயிரவநாதன் உருவத்தை தனித்து, இழுத்து நிறுத்திக் கற்பனையிலே பார்க்க முயன்று கொண் டிருந்தது .

“எடி…செல்லம்மா…மூதேசி வேட்டியைக் கொண்டாடி…வாத்தியார் பாக்கிறார்…”

மெதுவாக நான் நடந்தேன். பைத்தியம் என்று அவனை அப்படியே ஒதுக்கிவிட என்னால் முடியவில்லை எவருமே வியக்கத்தக்க அபூர்வ சாதுர்யத்தோடு அவன் சில வேளைகளில் நடந்திருப்பதை நானே பார்த் திருக்கிறேன். இனந் தெரியாத, கோபித்துப் பேச முடியாதபடி, பயத்தினுள் கலந்திருக்கும் ஒருவித அபூர்வக்கவர்ச்சியையும் நான் அவனிடத்தில் கண்டிருக்கிறேன்.

இருந்தும், ஏதோ ஒரு குறைபாடு எல்லாவற்றையும் மீறி இயங்கிக்கொண்டு தானிருப்பதாக எனக்குப்பட்டது.

3

திருவிழா என்று வந்தால் அவனுடைய உற்சாகத் திற்குச் சொல்லவேண்டியதில்லை. புது வருடத்தன்று வழமைபோல் அம்மன் புறப்பாடு நடைபெறும்.

கரடுமுரடான நந்தாவில் ஒழுங்கை வழியாக, சகடை மீது உயர்ந்து நிற்கும் சிவப்புக் குதிரையில் கம்பீரமாக அம்மன் வலம் வருவாள்.

அந்தக் காட்சியே, ஒரு தனி அழகு!

சுவாமி திரும்பவும் கோயில் போய்ச் சேரும்போது, இரவு இரண்டு மூன்று மணியாவது ஆகிவிடும்.

சகடையின் ஒரு மூலையில் பந்தத்தைப் பிடித்த படி , கால்களைக் கீழே தொங்கப் போட்டுக் கொண்டு, சாவதானமாக அவன் உட்கார்ந்திருப்பான்.

அரையில் ஒரு பழைய பட்டு வேட்டி; அதை இறுக்கியபடி ஒரு சிவப்புத் துண்டு, சந்தனம் அப்பிய வெறும் உடம்பு, அடிக்கடி அதிகாரம் செய்யும் வாய் – இதுதான் அவனுடைய தோற்றம்.

சகடை மேலும் கீழும் ஏறிக் குலுக்கும்போ தெல்லாம் எங்கே விழுந்து விடுவானோ என்று பார்ப்ப வர்கள் நெஞ்சமெல்லாம் திடுக்கிடும். ஆனால், அவனோ முழங்கை மட்டும் வழிந்து நிற்கும் எண்ணெயை அரைத் துண்டினால் துடைத்தபடி “ஆ…ரத்தினண்ணை கொஞ்ச எண்ணெய் விடு” என்று அதிகாரம் செய்த படியே கவலையின்றிக் காட்சி அளிப்பான்.

விடியுமட்டும், சிறிதாவது தூக்கம் என்பது இல்லாமல், பயங்கரமான பொறுமையுடன் அவன் காத்துக்கிடப்பான்.

அந்த நிலையில் அவனைப் பார்க்கும் போதெல்லாம் பயப்படுவதற்கு வேண்டிய அறிவுகூட அவனிடம் இல்லையா என்றுதான் தோன்றும்.

திருவிழா என்று மாத்திரம் இல்லை. எந்தக் கல்யாண வீடு, செத்த வீடு என்றாலும் சரி, அழைப் பில்லாமலே அவன் வந்து சேர்ந்துவிடுவான்.

யாராவது “வயிரவநாதா! இந்த வெத்திலை எல்லாத்தையும் தட்டத்திலை அடுக்கி விடு” என்று சொல்வார்கள். ஒருவித களைப்போ, வெறுப்போ இன்றி, சப்பாணி கட்டியபடி ஆயிரக் கணக்காக வெற்றிலை யைத் தட்டங்களில் பொறுமையுடன் அடுக்கியபடியே அவன் இருப்பான். மறந்தும் கூட, அவனுக்கு முகம் சுளிக்க மட்டும் தெரிவதில்லை.

எனக்கு வியப்பு மேலிட்டு நிற்கும்.

4

மஞ்சவனப்பதி தேர்த்திருவிழாவுக்காக பள்ளியை அரை நேரத்தோடு மூடிவிட்டார்கள். கொக்குவிலுக்கே பெருமை தரும் அந்தப் பிரம்மாண்டமான செய்கைத் தேரைப் பார்க்க ஊரடங்கலும் இருந்து ஜனங்கள் வருவார்கள்.

மத்தியானம் மணி இரண்டிருக்கும். வெயில் கொதித்துக் கொண்டிருந்தது. வழக்கம் போல அந்த வடக்கு வீதி மூலையில், ஜனத்திரளின் மத்தியில், தேர் நின்று கொண்டிருந்தது.

நிமிர்ந்து தேரைப் பார்த்தேன். மூச்சுத் திணற வைக்கும் அந்த ஜன வெள்ளத்தில் – அந்தச் சிறு மனிதர்களின் மத்தியில் – உயர்ந்து, மலை போல, ஆடாது அசையாது, தேர் நின்றுகொண்டிருந்தது.

பகல் பத்து மணிக்கு அந்த இடத்திற்கு வந்த தேர் அதற்கப்பால் ஒரு சாண் கூட அசைய மறுத்து நிமிர்ந்து நின்றது; மேலும் மேலும் ஜனங்கள் இழுக்க சில்லு கீழே கீழே புதைந்து கொண்டிருந்தது.

ஜனங்கள் எல்லோரும் சுருண்டு சுருண்டு நின்றனர்.

உள்ளத்தில் வலுவில்லை; உடம்பிலே தென்பில்லை.

எல்லோருமே விரதகாரர் – பசி வேறு உபாதை கொடுத்தது.

“அரோஹரா”

“மஞ்சவனப்பதி முருகனுக்கு!”

“அரோஹரா”

எண்ணிலடங்கா மனிதர்களின் ஆரவாரத்துக்குத் தேர் சிறிது நெளிந்து கொடுக்கும்; அதில் அமைந்திருக் கும் ஆயிரக் கணக்கான வெண்கல மணிகள் கல கல வென்று ஜாலம் செய்யும். முருகன் நம்மை யெல்லாம் பார்த்து வாய் விட்டுச் சிரிப்பது போலிருக்கும்…

ஆனாலும் தேர் என்னவோ நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தது.

வலுவிழந்து கிடந்த ஜனங்கள் எல்லோரும் மறு படியும் மறுபடியும் புதுப்புது உற்சாகம் கொண்டு இழுப்பார்கள்.

எல்லாமே வியர்த்தம். ‘என்ன குறைபாடோ’ என்று எல்லோரும் அங்கங்கே பேசிக்கொண்டார்கள்.

“முருகா, முருகா” என்று அவன் திருவடிகளிலேயே குறையிரந்தனர்.

அப்போதுதான் அவனைப் பார்த்தேன். உள்ளம் குன்றி, உடலம் குன்றி, களைத்து, வலு விழந்து நெளிந்த அத்தனை ஆயிரம் ஜனங்களின் மத்தியிலும் அவன் முகத்தில் சோர்வென்பது ஒரு சிறிதுமின்றி ஏதோ ஓர் அபூர்வ உற்சாகத்தோடு நின்று கொண்டிருதநான்.

அதே பழைய வேட்டி, அதை இறுக்கியபடி ஒரு சிவப்புத் துண்டு; சந்தனம் பூசிய மார்பு.

“அரோஹரா…ம்…மஞ்சவனப்பதி முருகனுக்கு .”

“அரோஹரா”

“…ம்…. கந்தையாண்ணை ஒருகைபிடி…அரோகரா.”

உற்சாகமாக மேலும் கீழும் நடந்து ஜனங்களை ஊக்குவித்துக்கொண்டிருந்தான். நம்பிக்கை எல்லாமே இழந்து, என்ன செய்வதென்று தெரியாமல் எல்லோ ரும் மனம் குன்றிக் கிடந்த அவ்வேளையிலும் கூட அவன் அதே சிரித்த முகத்துடன் தான் காணப்பட்டான்.

அவனுக்குக் களைப்பே இல்லையா? ‘உண்மையிலேயே கடினமான ஒரு காரியத்தைக் கடினம்’ என்று உணரும் அளவிற்கு அவனுக்கு அறிவு இல்லையா?

வெயில் கீழே இறங்கத் தொடங்கி விட்டது. ஜனங்களிடம் எஞ்சி இருந்த அற்ப சொற்ப நம்பிக் கையும் சிறிது சிறிதாக மங்க ஆரம்பித்து விட்டது.

எல்லோருமே தேர்வடத்தை தொப் தொப்பென்று போட்டு விட்டுக் கீழே குந்தி விட்டார்கள்.

ஒருவருக்குமே ஒன்றும் தோன்றவில்லை; எப்படி யாவது தேரை இருப்பிடத்துக்குச் சேர்த்தாக வேண்டுமே…

மறுபடியும் மறுபடியும் தேரை இழுப்பதற்காக வடத்தைத் தொடுவார்கள் – ஆனால், அடுத்த கணம் செய்வதறியாது வடத்தைப் போட்டு விட்டுக் குந்தி விடுவார்கள்.

“முருகன் பலி கேட்கிறான், முருகன் பலி கேட்கிறான்”, கர்பூரச் சட்டி எரித்துக் கொண்டிருந்த கதிர்காமத்தாச்சி சன்னதம் வந்து ஆவேசத்துடன் கூவினாள்.

நான் கீழே பார்த்தேன்.

ஏற்கனவே, குங்குமம் சிந்தி வெட்டியபடி மூன்று பூசணிக்காய்கள் காட்சி அளித்தன.

“இணுவிலுக்குப் போய் யாராவது இரண்டு டிராக்டர் எடுத்து வந்தால்…தேரைப் பூட்டி..”

“என்ன?”

எல்லோருக்குமே அந்த யோசனை அருவருப்பாகவும், அவமானமாகவும் பட்டது.

பக்தி வெள்ளப் பெருக்கினால் கட்டி இழுக்க வேண்டிய முருகனுடைய தேரை டிராக்டர் கட்டி இழுக்கவா?

“கந்தையாண்ணை…நீ முண்டியை எடு…இன்னொரு கை பார்ப்பம்.”

“டேய் விசரா…தள்ளி நில்”

கந்தையாண்ணைக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது.

“எனக்கு நீ சொல்லித்தாறாய்…என்ன?”

வயிரவநாதனுடைய முகத்தை நான் கூர்ந்து கவனித்தேன். அந்த முகத்தில் ஒரு துளி வெறுப் பாவது தென்படவில்லை. கந்தையாண்ணையின் சொற்கள் அவன் காதில் பட்டதாகக் கூடத் தெரியவில்லை.

அதே உற்சாகத்துடன் அவன் சிரித்துக் கொண்டு தான் நின்றான்.

வடத்தில் பிடிக்க இடம் இல்லாமல் ஜனங்கள் நெருக்கி அடித்தார்கள்.

“அரோஹரா”

“வாத்தியார்…ஒரு கை பிடியுங்கோ -“

மறுத்துக்கூற முடியாத கவர்ச்சி. நானும் அரையிலே சால்வையை இறுக்கிக் கொண்டு அவனுடைய சொல்லுக்குக் கீழ்ப்படிந்தேன்.

“அரோஹரா”

கண்கள் தாமாகவே முடின. எல்லோரும் மனதை ஒன்றுபடுத்திக் கடைசி வலுவையும் சேர்த்து இழுத்தோம்.

“முருகனுக்கு”

“அரோஹரா”

“மஞ்சவனப்பதி முருகனுக்கு”

“அரோஹரா”

உற்சாகத்தோடு குதித்தபடி வேகத்தோடு தேர் கிளம்பியது. புறப்பட்ட கணத்தில் எங்கே போகிறோ மென்றே ஒருவருக்கும் தெரியவில்லை.

திடீரென்று என்ன நடந்ததோ…

எல்லோரும் தேர் வடத்தைப் பொத்தென்று போட்டுவிட்டுப் பின்னோக்கி ஓடினார்கள்.

நானும் ஓடினேன்.

வெந்து கொண்டிருக்கிற மணலில், இரத்த வெள்ளத்தில் வாயிலும் மூக்கிலும் உதிரம் வடிய அவன் குப்புறக் கிடந்தான். வலது கை மணலை இறுக்கிப் பிடித்தபடி கிடந்தது.

நான் ஜனக்கூட்டத்தின் மத்தியில் புகுந்து சிரமத்துடன் எட்டிப் பார்த்த போது. அவனுடைய இடது காலும், இடது கையும் தொப் தொப்பென்று தரையை அடித்தன.

அதன் பிறகு அந்த அசைவும் இல்லை.

5

குனிந்து, தார் ரோட்டை பார்த்தபடியே நான் நடந்து கொண்டிருக்கிறேன்.

ஜனங்கள் முன்னுக்கும் பின்னுக்குமாய்ப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

“தேர் இருப்பிடத்துக்கு போட்டுதாமே?

ஓ மென்று என் தலை என்னை அறியாமலேயே அசைகிறது !

– புறப்பட்ட எதுவுமே திரும்பவும் இருப் பிடத்தை அடைந்து தானே ஆக வேண்டும்.

– ஆனால் இருப்பிடத்தை அடைவதுதான் முக்கியமா? எப்படி அடைவதென்பது முக்கியமேயல்லவா?

ஒரு கணம் கதிர்காமத்தாச்சியும், அவளுடைய வெறிப் பார்வையும் என் மனதில் உராய்கின்றன. நெஞ்சம் கனக்கிறது.

– வாத்தியார், என்ன பார்த்துக் கொண்டு நிக்கிறயள். ஒரு கை பிடியுங்கோ .

அவன் சிரித்துக் கொண்டு நிற்கிறான். முகத்திலே பயங் கலந்த கவர்ச்சி. மறுத்துக்கூற மனசு வர முடியாத அளவு கவர்ச்சி.

“ஆராம் வாத்தியார் தேரடியிலை செத்தது.”

நான் வாயைத் திறக்கிறேன்.

சொற்கள் நெஞ்சிலேயே குமைந்து கொள்ளுகின்றன.

பின்னுக்கு யாரோ பதில் கூறுகிறார்கள்.

“அது ஆரோ விசர்ப் பொடியன்”

காலில் தடுக்கிய வேட்டியைச் சிறிது தூக்கிய படியே நான் நடந்து கொண்டிருக்கிறேன்.

வெறும் பாதத்தில் பட்ட குறுணி மண் வேதனையைக் கிளறுகிறது.

– 1959-61

– அக்கா (சிறுகதைகள் தொகுப்பு), முதற் பதிப்பு: டிசம்பர் 1964, பாரி நிலையம், சென்னை.

– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *