அருணாசலம் தன் முப்பது வருட உத்தியோக காலத்தில் ஒரு தடவை கூட பயண விடுமுறைச் சலுகையை உபயோகித்ததில்லை. இந்தத் தடவை விட்டால் போச்சு. ரிடையர் ஆவதற்கு முன், ‘இந்த சர்க்காருக்கு உழைத்து, உழைத்து ஓடானதற்கு என்னத்தைக் கண்டோம்’ என்று அடிக்கொருதரம் அலுத்துக் கொள்ளும் மனைவி கோகிலத்தையும், பள்ளி அரையாண்டு விடுமுறையில் போரடித்துக் கொண்டிருந்த பேத்தி சாந்தாவையும் எங்காவது கூட்டிக் கொண்டு போக வேண்டும் என்று முடிவு பண்ணினார்.
பையனும், மருமகளும் பேத்தியை அனுப்புவதற்கு ஓகே சொல்லியாகி விட்டது. சேர்த்து வைத்த லீவை சரெண்டர் செய்தார். ஒரு டாக்சி பேசி அமர்த்தினார். பிள்ளைக்குத் தெரிந்த ஆளின் கார். சென்னையிலிருந்து கிளம்பி திருச்சி மதுரை என்று நான்கு நாட்கள் கழித்துவிட்டு இப்போ இராமநதபுரம் வழியாக இராமேஸ்வரத்தை அவர்கள் நெருங்கியாச்சு.
இந்த நான்கு நாட்களும் அவர் நினைத்ததற்கு மாறாக ரம்யமாகவே இருந்தன. ‘ரயிலும் பஸ்ஸும் இனிமேல் ஏற லாயக்கற்றவை’ என்று கார் பிராயணத்துக்கு கோகிலா நூறு சர்டிஃபிகேட் கொடுத்து விட்டாள்.
அருணாசலம் ரொம்ப ஜாலியான மனிதராக பெயரெடுக்கவில்லை. கொஞ்சம் அதிகம் எச்சரிக்கையான பேர்வழிதான். நகர்வாழ் மத்ய தர வாழ்க்கையும், போட்டி, பொறாமை, காழ்ப்பு நிரம்பிய உத்யோகமும், குடும்பப் பிரச்னைகளும் அவரை சாதுவான மனுஷன் பாகத்தை சூடும்படி வைத்து விட்டன. என்றாலும் எப்பவாவது வேடிக்கையான, வேதாந்தியான அருணாசலம் அவருள்ளிருந்து குரல் கொடுப்பதுண்டு. ஆனால் எப்பவோ எப்பவாவதுதான்.
ஒருதரம் தான் ஒரு சினிமாவையாவது, நாடகத்தையாவது, கச்சேரியையாவது லயித்து பிரச்னையே இல்லாமல் அனுபவித்திருக்கிறோமா என்று விசனப் பட்டுப் போனார். அது ஒரு நொடிதான். ஜாக்ரதையாக இருப்பதில் எவ்வளவோ லாபம். அது பழகியும் போய் விட்டது. கவலைப் படாமல் இருந்தால் சுப காரியங்கள் நடக்குமா என்று அப்படியே இருந்துவிட்டார்.
ஆனால் இந்த நாலு நாள் பயணம் வாழ்க்கை அத்தனை பயங்கரமில்லை என்று அவருக்குக் காட்டுவது போல் இருந்தது. டேப் ரிகார்டரில் கேஸட்டுகளைப் போட்டு பாடல்களை சாந்தா இரண்டு ரவுண்ட் கேட்டு விட்டாள். ஆறாம் வகுப்புதான் படிக்கிறாள். அதற்குள் தமிழ் தவிர, ஹிந்தி, பாட்டுகளையும் கேட்டு கூடவே பாடுகிறாள். சுருள் முடியோடு, குழி விழும், உப்பிய கன்னத்தோடு இன்னும் குழந்தைதான் என்பதைத் தெரிவிக்கிற முகத்தோடு இருந்தாள். தாத்தா பாட்டிக்கும் அம்மா அப்பாவுக்கும் அப்படித்தான் தோன்றும் என்பதும் அருணாசலத்துக்குத் தெரியும். குழந்தை கொஞ்சமும் படுத்தவில்லை. கார் சவாரி, ஹோட்டலில் தங்குவது, பாட்டி செல்லம் என்று அவளுக்கு ஆனந்தமாகவே இருந்தது.
கொடுவாள் மீசையோடு, கன்னங்கரேலென்று இருந்த டிரைவர் சிகாமணியை அருணாசலத்துக்கு முதலில் பிடிக்கவில்லை. அவன் டிரைவ் என்னவோ நன்றாகத்தான் செய்தான். தொண்ணூறு கி.மீ. வேகத்தில் அலுங்காமல் குலுங்காமல் ஹாரன் அடிக்காமல், பிரேக் போடாமல் சீராகப் போனான். தங்கவோ சாப்பிடவோ அவனால் எந்த இடைஞ்சலோ சங்கடமோஇல்லை.
மனைவியோடு பேசுகையில் “ராமேஸ்வரம் போய் விட்டுத் திரும்பும்போது மதுரை கலெக்டர் வீட்டுக்குஅவசியம் போக வேண்டும், இவ்வளவு தூரம் வந்து விட்டு அங்கே போகாமல் இருந்தால் கலெக்டர் ‘மணி’ கோபித்துக் கொள்வானெ”ன்றும், “தஞ்சாவூர் போயிருந்தால் அந்த டிஎஸ்பி முரளிதரனைப் பார்த்து இருக்கலாம்” என்றும் தனக்கு கலெக்டரை மற்றும் போலீஸ் டிபார்ட்மென்டில் ஆளைத் தெரியும் என்று சூசகமாக டிரைவருக்குத் தெரிவித்தார்.
கோகிலத்துக்கு, ஏன் சாந்தாவுக்கே அவருடைய இந்த ட்ரிக் புளித்துப் போகுமளவுக்கு ஆகிய போதிலும் தலையை அசைத்து
’உம்’ கொட்டினார்கள்.
இராமநாதபுரம் ஸ்டேஷன் வாசலில் வண்டியை நிறுத்தி எல்லோரும் கீழே இறங்கினார்கள்.இன்னும் முக்கால் மணி நேரத்திலேயே இராமேஸ்வரத்துக்கு வண்டி இருந்தது. ஒரு நாளைக்கு வேண்டிய மாற்று உடைகளை மட்டும் ஒரு சூட்கேஸில் எடுத்துக் கொண்டு மீதி எல்லாவற்றையும் வண்டி டிக்கியிலேயே வைத்துவிட்டு மூவரும் புறப்பட்டார்கள்.
சிகாமணியிடம், “மறுநாள் சயந்தரத்துக்குள் வந்து விடுவோம். ஒருவேளை ஏதாவது அசௌகர்யம் இருந்தால் அதிகாலையிலேயே வந்து விடுவோம். பத்து மணி வாக்கிலும் வரலாம்” என்று பலவிதமாகக் கூறி அவன் அந்த இடத்திலேயே வண்டியோடு இருக்குமாறு ஏற்பாடாயிற்று.
நண்பகல் நேரத்திலேயே மாலை நேரம் போல் இருள் பரவ ஆரம்பித்திருந்தது. கரிய மேகங்கள் கவிந்துகொண்டு எப்போதும் பெருமழை வரலாம் என்று தோன்றியது. நான்கு நாட்களாக கொஞ்சமாகவாவது அனுபவித்த விடுதலையில் அருணாசலம் அதை அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை.
சாந்தா ஒரு குளிர்பானம் கேட்டாள். அவளுக்கு வாங்கிக் கொடுத்துவிட்டு டிக்கட் வாங்கிக் கொண்டு அவர்கள் பிளாட்பாரத்துக்குள் நுழைவதற்கும், ரயில் வருவதற்கும் சரியாக இருந்தது. கொஞ்ச நேரம் கழித்துதான் புறப்படும். கூட்டம் ரொம்ப அதிகமுமில்லை. குறைச்சலுமில்லை.
திடுதிடுவென்று அருணாசலம் முன்னால் ஒரு பையன், அல்லது இளைஞன் வந்து நின்றான். முகத்தை சீரியஸாக வைத்திருந்தான். ஒல்லியாக, சுமார் ஐந்தரையடி உயரம் இருந்தான். வெள்ளைச் சட்டையும், வெளிர் நீல நிறப் பேன்ட்டும் போட்டிருந்தான். நெற்றியில் கவனமாகத் தீற்றப் பட்ட விபூதிக் கீற்று இருந்தது.
“சர்மா வீட்டுக்குத்தானே போறீங்க?” என்று கேட்டான்.
அருணாசலம் பதிலே சொல்லாமல் ரயிலை நோக்கி நடந்தார். பேத்தியும், மனைவியும் கூடவே வருகிறார்களா என்றும் பார்த்துக் கொண்டார்.
“நான் சர்மா வீட்லேருந்துதான் வர்ரேன். நீங்க அங்கதானே போறீங்க. உங்களைக் கூட்டிப் போகத்தான் நான் வந்திருக்கேன்.” என்றவாறே அவருடனேயே அவன் நடந்து வந்தான்.
அவர் இப்போதும் பதில் சொல்லவில்லை.
“சார், நான் சர்மாட்டேர்ந்துதான் வரேன். இதோ பாருங்க அடையாளக் கார்ட். டிரெய்ன் பாஸ். சாஸ்திரியையும் எனக்குத் தெரியும். நீங்கள் அவரோடும் போய்த் தங்கலாம். அங்கேயே சாப்பிடலாம். இருக்கலாம். தர்ப்பணம், ஹோமம் எல்லாம் பண்ண வசதி” என்றான்.
“எனக்கு சர்மாவையும் தெரியாது, சாஸ்திரியையும் தெரியாது. எல்லாம் எங்க சொந்தக் காரங்க இருக்காங்க. நீங்க போய்ட்டு வாங்க” என்று இறுதியாகச் சொல்லிவிட்டு ரயிலின் மத்தியிலிருந்த ஒரு பெட்டியில் ஏறிக்கொண்டார். தாராளமாக இடம் இருந்தது.கோகிலமும், சாந்தாவும் உடன் ஏறிக் கொண்டார்கள். ஜன்னலோரமாக சாந்தா உட்கார, அருகில் கொகிலமும், அதையடுத்து அருணாசலமும் உட்கார்ந்து கொண்டார்கள். சூட்கேஸை சீட்டுக்கு அடியில் தள்ளியாயிற்று.
அருணாசலத்துக்கு எதிரில் தடிமனான ஒரு ஆள் வந்து உட்கார்ந்து கொண்டார். “இங்கே வாங்க” என்று கையை நீட்டி அவன் அழைக்க இன்னும் மூன்று பேர் வந்து அவரருகில் உட்கார்ந்து கொண்டனர்.
வண்டி மெள்ள புறப்பட்டது. வானம் கருமை மிகுந்தது. காற்று பலம் கூடியது. இரயிலின் ஆட்டமும், நிதானமும் அருணாசலத்துக்கு கொஞ்சம் கவலையைக் கொடுத்தன. அதை சற்றுமுன் இன்னொரு கவலை மறைத்துக் கொண்டு இருந்தது. அந்தப் பையன் எங்காவது தெரிகிறானா என்றுப் பார்த்தார். பக்கத்தில் பாட்டியும் பேத்தியும் விச்ராந்தியாக வந்தார்கள்.
எதிரில் அமர்ந்திருந்த நாலு பேரும் லாரி பிஸினஸ் – டிரைவர்களா என்ன என்று தெரியவில்லை – சம்பந்தப் பட்டவர்கள் என்று அவர்கள் பேச்சிலிருந்து தெரிந்தது. அவர்கள் ஜாலியான மூடில் இருந்தார்கள்.
ஒருவர் “புயல் பத்தி பேப்பர்லே என்ன போட்டிருக்கான்” என்று கெட்டார்.
முதலில் வந்தமர்ந்த தடிமனான ஆள் “புயல் நிச்சயம் வரும். இந்த வாட்டி பலம் ரொம்பவா இருக்கும். தனுஷ்கோடி போல் ராமேஸ்வரமும் காணாமல் போய்விடும். நீ, நான், இந்த ரயில் எல்லாம் கோவிந்தா” என்று சொல்லிவிட்டு கடகடவென்று சிரித்தார்.
“விளையாட்டில்லேப்பா. மெய்யாலுமே அப்படித்தான்.” என்றார் மூன்றாவது ஆள்.
அருணாசலத்துக்கு பயம் ஒன்றும் இல்லையென்றாலும் இப்படி அச்சானியமாகப் பேசுகிறார்களே என்று இருந்தது.
காற்றின் வேகம் அதிகமாகி இருந்தது.
“ரயில் பத்திரமாப் போகுமோன்னோ” என்ற மனைவியிடம், “அதெல்லாம் ஒண்ணும் ப்ராப்ளம் இல்லை” என்று மெலிய குரலில் சொல்லிவிட்டு ஒன்றாய்ப் போன வானக் கடல்வெளியை ஜன்னல் வழியாகப் பார்த்தார்.
“அப்பா, பேங்க்காரன் கடன் கட்ட வேண்டாம். ரெண்டு நாள் விட்டாப் போதும். நோட்டீஸ் வுட்டுடுவான். புயல்லே எல்லாம் போச்சுன்னா இன்னாத்தைப் பண்ணுவானுக” என்று சொல்லிவிட்டு அந்த ஆள் மறுபடி சிரித்தார்.
அவர்கள் பேச்சு சினிமா, அரசியல், வியாபாரம் என்று திரும்பி யாரோ ஒரு கணேசனில் வந்து நின்றது. அதில் அவர்கள் ஆழ்ந்து போனார்கள்.
இராமேஸ்வரம் போய்ச் சேர்கையில் நன்றாக இருட்டி விட்டது.
இவர்கள் மூவரும் வண்டியிலிருந்து இறங்குவதற்கும், முதலில் ஸ்டேஷனில் பார்த்த பையன் இவர்களை அணுகுவதற்கும் சரியாக இருந்தது.
“சர்மா வீடா, சாஸ்திரி வீடா சார்? நான் கூட்டிப் போறேன் சார்”
அருணாசலம் பதிலே பேசாமல் நடந்தார்.
‘சர்’ரென்று அருகில் வந்து நின்ற ஆட்டொவின் டிரைவரிடம், எங்கே போகச் சொல்வது என்று தெரியாமல் அருணாசலம் யோசித்த ஒரு நிமிடத்தில், “சார். . . . . .ஹோட்டல் நல்ல இடம் சார். . . . . லாட்ஜ் ரொம்ப சௌகர்யம் சார்” என்று அந்தப் பையன் சொன்னான்.
ஒருவித குழப்பத்தில் “சரி போ” என்று சொல்லிவிட்டு மனைவியையும், பேத்தியையும் ஆட்டொவில் ஏறச் சொன்னார். தானும் ஏறிக் கொண்டார். அந்தப் பையன் ஆட்டோ டிரைவரோடு முன்னால் ஒண்டிக் கொண்டான்.
“இறங்கு கீழே” என்ற டிரைவரிடம், “ஊருக்குள்ளே கொண்டு போய் விட்டுடுப்பா. இவங்களை நல்ல லாட்ஜிலே தங்க ஏற்பாடு பண்ணிட்டுப் போயிடறேம்பா” என்று கூறியபடி ஒட்டிக் கொண்டு உட்கார்ந்தான். அதற்கப்புறம் டிரைவர் ஒன்றும் சொல்லவில்லை.
ஆட்டோ தடால் புடால் என்று சப்தமிட்டபடி ஓடியது. எப்போ கவுருமோ என்று வேகமாகச் சீறியது.
“மொள்ள மொள்ள’ என்ற அருணாசலத்தை டிரைவர் லட்சியமே பண்ணவில்லை.
“எங்கே” என்று கேட்டதற்கு அந்தப் பையன், “. . . . . லாட்ஜ்” என்றான். சர் சர் என்று வலைந்து நெளிந்து ஓடிய ஆட்டோ அந்த லாட்ஜ் வாசலில் நின்றதும் பையன் குதித்து இறங்கினான்.
இவர்கள் மூன்று பேரும் இறங்கி நின்றதும் “நான் போகணும் பணத்தைக் கொடுங்க” என்று டிரைவர் கேட்டார்.
“கொஞ்சம் இருங்க” என்று சொல்லிவிட்டு அருணாசலம் மனைவியைப் பார்த்தார்.
“இதென்ன லாட்ஜ் மாதிரியே இல்லியே. வீடு மாதிரி இருக்கே” என்றாள் அவள்.
“ஆமாங்க. தனி வீடு. கீழே ஒரு போர்ஷன். மேலே ஒண்ணு. இப்போ லாட்ஜா யூஸ் பண்றாங்க.” என்றான் அந்தப் பையன். அவன் அடிக்கடி சாந்தாவையே பார்ப்பது போல் இருந்தது.
“இங்கே வேண்டாம் என்று கோகிலம் உடனடியாகச் சொல்லிவிட்டாள்.
“இங்கே வேண்டாம். நிறைய ரூம் இருக்கற மாதிரி ஹோட்டல்லே கொண்டு போய் விடுப்பா” என்று அருணாசலமும் சொல்லிவிட்டு மீண்டும் மூவரும் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து கொண்டனர்.
கூட முன்னால் ஏற வந்த பையனை “ நீ சொம்மா இருடா ! தலைவலி “ என்று சொல்லி ஏற்றிக் கொள்ளாமலேயெ டிரைவர் வண்டியைக் கிளப்பினார்.
இவர்கள் வந்த வழியிலேயே திரும்பிப் போய் ஒரு லாட்ஜ் வாசலில் நிறுத்தி “ இங்கே போங்க. எனக்கு சவாரி இருக்கு” என்று சொல்லிவிட்டு பணம் வாங்கிக் கொண்டு ஆட்டோக்காரர் போய் விட்டார்.
அந்த லாட்ஜில் ஒரே ஒரு சிங்கிள் ரூம்தான் இருந்தது. பாக்கி எல்லாம் ஃபுல். இவர்கள் சுற்றாமல் சீக்கிரம் வந்திருந்தால் பெரிய அறையே கிடைத்திருக்கும். இப்போ வேறு வழியும் இல்லை. ‘சரி’ என்று அந்த அறைக்கே போனார்கள்.
கை,கால் கழுவிக் கொண்டு அங்கிருந்த ஒரே கட்டிலில் மூவரும் அமர்ந்தார்கள். அங்கு வேறு நாற்காலியோ, பீரோவோ எதுவும் இல்லை. கட்டிலைத் தவிர ஒரு மேசையும், அதன் மேல் சாய்த்து வைக்கப் பட்டிருந்த பெரிய கண்ணாடியும் இருந்தன. ஃபேன் ‘கடக், கடக்’ என்று மெள்ள சுற்றியது.
அருணாசலம் “நான் போய் சாப்பிட ஏதாவது வாங்கி வருகிறேன்” என்று கிளம்பினார். அவர்களும் வருகிறோம் என்று கிளம்பினார்கள். அறையைப் பூட்டிக் கொண்டு லாட்ஜுக்கு வெளியே வந்த போது தெருவில் நடமாட்டம் இருந்தது. ஒரே இறுக்கமாக இருந்தது. வானில் சந்திரனோ ஒரு நட்சத்திரமோ கூட தெரியவில்லை.
“நல்ல வேளை இங்க வந்தோம். ஒதுக்குப் பக்கமா அந்தப் பையன் கூட்டிண்டு போனானே அந்த இடத்திலே தங்கி இருந்தோம்னா கத்தினாக் கூட கேட்க நாதி இருக்காது. முதல்லேயே இங்க வந்திருந்தோம்னா டபுள் ரூமா பார்த்திருக்கலாம்” என்றார் அருணாசலம்.
அதற்குள் பாட்டியும், பேத்தியும் வளையல், தோடு, சுட்டி என்று ரோட்டில் விற்றுக் கொண்டிருந்தவனிடம் போய்விட்டார்கள்.
அருணாசலம் “நல்ல ஹோட்டல் எங்கே இருக்கிறது” என்று அருகில் சென்ற ஒருவரிடம் விசாரித்தார். அவர் நான்கு கட்டிடம் தாண்டி இருந்த ஒரு ஹோட்டலை சிபாரிசு செய்தார்.
பத்து நிமிடம் கழித்து என்னென்னவோ வாங்கி வந்த மனைவி, பேத்தியோடு அந்த ஹோட்டலுக்குப் போனார்.
அந்தப் பசிக்கு எந்த சாப்பாடும் தேவாம்ருதமாகத்தான் இருக்கும். இருந்தது.
திரும்ப லாட்ஜுக்கு வந்து எப்படியோ மூன்று பேரும் ஒரே கட்டிலில் படுத்து, தூங்கியும் போனார்கள். தரையில் படுக்கலாம் என்றால் ஜமுக்காளம் இல்லை. தலையணை இல்லை. இடமும் இல்லை. இருந்தது அங்கும் இங்கும் ஓடின கரப்பான் பூச்சிகள்தான். கோகிலம் திருச்சியிலும், மதுரையிலும் தங்கிய அறைகளை பற்றி சொல்ல ஆரம்பித்தவள் தூங்கியே போனாள்.
வழக்கமாக ஹோட்டல் அறைக் கதவுகளின் பக்கத்தில் ஒரு நாற்காலியையாவது நகர்த்தி பாதுகாப்புக்காகப் போடும் அருணாசலம் அன்று கதவின் மேல் தாழ்ப்பாளைக் கூட போடாமல் தூங்கியிருக்கிறோம் என்று காலையில் எழுந்ததும் கவனித்து, பதறிப் போய் கட்டிலுக்கடியில் வைத்த சூட்கேஸ் இருக்கிறதா என்றுன் பார்த்தார். இருந்தது.
மூவரும் குளித்துவிட்டு சமுத்திரத்துக்குப் புறப்பட்டார்கள். லேசாகத் தூறிக்கொண்டு இருந்தது. சூரியனைக் காணோம்.
அவர் ரொம்பவும் பழமைவாதியல்ல. மனைவி எல்லோரையும் போல் சாதாரண மாம்பழக்கட்டில் புடவை உடுத்துவதை முப்பது வருடங்களுக்கு முன்பே அனுமதித்தவர். உத்யோகம் அவரைத் தர்ப்பணம் செய்வது போன்ற மதச் சடங்குகளை சரிவரச் செய்ய நேரமில்லாமல் செய்துவிட்டது. இங்கே கடலருகில் தர்ப்பணம் செய்ய மூன்று நான்கு பேர் அவரை அணுகியும், அவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
அவருக்கு திடீரென்று சென்னையில் மகனும், மருமகளும் நன்றாக இருக்க வேண்டுமே என்ற கவலை வந்தது. இது வழக்கம்தான். நான்கைந்து முறை குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கையில் யாருக்காவது ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் அவரைப் பற்றிக்கொண்டு ஒரு நாள் முழுவதும் கூட அலைக்கழித்ததுண்டு. ஒரு தரம் சின்ன வயசில் டெல்லிவரை போனவர் அப்பாவுக்கு உடம்பு சரியில்லையோ என்று தோன்றியதால் மறு நாளே திரும்பி வந்தார். அப்பாவுக்கு அப்போது ஒன்றும் இல்லை. இந்த சம்பவத்தை நினைத்து மனதில் திடீரென்று தோன்றும் பயத்தை தர்க்கரீதியாக விட்டுவிட முயற்சிப்பார்.
இப்போது கண் முன்னே தோன்றிய பிரும்மாண்டமான கடல்வெளி ஒரு பத்திரத்தன்மையைத் தந்தாலும் உடனடியாக ஊருக்குப் போய்விடலாம் என்று முடிவு செய்தார். அதற்கு ரயில்வே ஸ்டேஷனில் பார்த்த இளைஞன் இன்னும் ஐந்தாறு இளைஞர்களுடன் சற்று தூரத்தில் தெரிந்ததும் ஒரு காரணம் என்று அவர் உடனடியாக உணரவில்லை.
சமுத்திர ஜலத்தை எடுத்து ப்ரோட்சித்துக் கொண்ட மூவரும் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தார்கள். பிறகு கோவிலை நோக்கிப் போனார்கள். அந்த இளைஞனும் அவனையொத்த நாலைந்து பேரும் சற்று தூரத்தில் வருவது தெரிந்தது. ஊர் புதிய ஊர். கூட ஒரு சிறுமி. ஆனாலும் பயப்பட ஒரு நிச்சயமான காரணம் இல்லை. எனினும் அவரது லேசாக தலை காட்டிய சுதந்தர பாவம் போய்விட்டது.
கோவில் அருமையான கோவில். அழகும், கும்பலும், பக்தியும், கண்காட்சித் தன்மையும், கலையுணர்வும், சொதசொதப்பும், சேர்ந்து இருந்தன. அருணாசலத்திற்கு மனம் எதிலும் லயிக்கவில்லை. கிணறுகளில் பலர் குளித்துக் கொண்டிருந்தார்கள். புண்ய தீர்த்தங்கள். பூசாரிகள். இராமேஸ்வரத்துக்கு வந்த காரணமே ஸ்வாமி தரிசனத்துக்கும், சமுத்ர ஸ்நானத்துக்கும் என்பது போய் இது ஒரு சுமையான கடமையாகி விட்டது. மனைவியும், பேத்தியும் சுவாரஸ்யப் பட்டே நடந்து வந்தார்கள்.
கோவிலை விட்டு வந்ததும் உடனடியாக ஒரு ஹோட்டலுக்குப் போய் டிபன் சப்பிட்டுவிட முடிவு பண்ணினார். கோகிலம் ஒரு ஓலைக் கூடையும், பாய் ஓவியமும் வாங்கினாள். சாந்தா கிளிஞ்சல் மாலைகள் வாங்கினாள். அவர் ‘சரி போகலாம்’ என்று அவர்களை கடையிலிருந்து பிய்த்து எடுத்துக் கொண்டு ஹோட்டலுக்குக் கூட்டிச் சென்றார். பசியில்லை. பேருக்கு டிபன் சாப்பிட்டுவிட்டு லாட்ஜுக்கு வந்து வரவேற்பில் இருப்பவரிடம் இராமநாதபுரத்துக்கு டிரெய்ன் ஒரு மணி நேரத்தில் இருக்கிறது என்று கேட்டுத் தெரிந்துகொண்டார். உடனே கிளம்பியும் விட்டார். கோகிலம் குழந்தைக்கு லேசாக தலை வாரி பௌடர் போட்டு விட்டாள். தானும் தலையை சரிசெய்து கொண்டு இருவரும் மாற்றுடை அணிந்து அவருடன் கிளம்பி விட்டார்கள்.
பில் கொடுப்பதற்குள் கோகிலம் ‘ஆட்டோ வேண்டாம், ரிக்ஷா அல்லது குதிரை வண்டியில் போகலாம்’ என்று சொல்லிவிட்டாள்.
வெளியே வந்ததும் அவர் ஆட்டோவோ, ரிக்ஷாவோ, குதிரை வண்டியோ இருக்கிறதா என்று இருபுறமும் பார்த்தார். இருபதடி தூரத்தில் ஒரே ஒரு குதிரை வண்டி நின்று கொண்டிருந்தது. அவர் அதை வேகமாக நெருங்குகையில், அந்த சோனிக் குதிரையையும், வண்டியின் ஓட்டை மேற்புறத்தையும் பார்த்து தயங்கிய அதே நேரம் எதிர் சாரியில் இருந்த ஒரு திண்ணையில் நாலைந்து இளைஞர்கள் இருப்பது கண்ணின் ஒரு கோடியில் தெரிந்ததும், அதே வேகத்தில் சென்று “ஸ்டேஷனுக்கு வரியாப்பா” என்று அந்த வண்டிக்காரரிடம் கேட்டார். வண்டிக்காரர் பதில் சொல்வதற்குள் திரும்பி மனைவியையும், பேத்தியையும் வேகமாக வரும்படி சைகை செய்தார்.
‘போலாங்க’ என்ற பதிலைக் கவனிக்காமலேயே வண்டியுள் முன்புறம் வண்டியோட்டியின் பின்னால் அவர்கள் இருவரும் ஏறி அமர்ந்ததும், அவர்களின் பின்னால் இவரும் அமர்ந்தார். ஆச்சர்யப் படத்தக்க விதத்தில் வண்டியும் உடனே கிளம்பியது. குறுக்குக் கம்பியைப் போட்டவாறே அவர் எதிர்ப் புறம் மெதுவாகத் திரும்பிய அதே சமயம் அந்த இளைஞன் கண்களும் அவர் இருப்பதைப் பார்த்தன. அவன் ஒரு பதற்றத்துடன் அங்கிருந்து கிளம்பி குதிரை வண்டியை நோக்கிப் புறப்பட்டான்.
அருணாசலம் அதைப் பார்த்தவாறே வண்டிக்காரரிடம், “ வேகமாப் போங்க ! வேகமாப் போங்க !” என்று கத்தினார். வண்டிக்காரர் “இன்னும் ரயிலுக்கு நேரம் இருக்கு சாமி” என்றார்.
இதற்குள் அந்தப் பையன் தள்ளாடியவாறே ஓடிவர ஆரம்பித்து இவர்களை நெருங்கியும் விட்டான். குடி? அவன் தாக்கிவிடப் போகிறான் என்று இவர் முதுகை வளைத்து தலையை உள்ளிழுத்துக் கொண்டார். ஒரு பனியனும், கிழிசல் வேட்டியுமாய் அவன் அவரை நெருங்கி மூச்சிரைக்க “சார் ரெண்டு நாளா சாப்பிடலை சார். ஏதாவது பணம் தாங்க சார்” என்று பரிதாபமாக இறைஞ்சினான்.
அவருக்கு என்ன நடக்கிறது என்றே புரியாத போதிலும் ஜாக்கிரதை உணர்வாலோ அனிச்சையாகவோ தன் சட்டைப் பையை கையால் மூடிப் பிடித்துக் கொண்டார். சூட் கேஸை மேலும் வண்டிக்குள் நகர்த்தினார். “சார் ஒரு காப்பிக்காவது பணம் தாங்க சார், ஒரே பசி சார்” என்று அவன் மறுபடியும் கேட்டதும் கொஞ்சம் தெளிவு வந்து சட்டைப் பாக்கட்டில் துழாவி கையில் கிடைத்த ஒரு நாணயத்தைத் தூக்கி அதைத் தன் ஒரே ஆயுதமென்ற பாவனையில் அவனை நோக்கி எறிந்தார். ரெண்டு ரூபாயோ, ஒரு ரூபாயோ அவன் கையில் போய் விழுந்தது. வண்டியும் ஒரு திருப்பத்தில் திரும்பியது. வந்த அபாயத்தை உணராமல் கோகிலமும் சாந்தாவும் எதையோ பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். அவர் அப்பாடா என்று சாய்ந்து கொண்டார். கட்டை இடித்து மண்டை வலித்தது. கண்ணில் வெய்யில் சுரீர் என்று தாக்கியது. புயல் எங்கே போச்சென்று தெரியவில்லை.
– சொல்வனம், பெப்ரவரி 2010