இரவின் ராகங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 30, 2021
பார்வையிட்டோர்: 2,588 
 
 

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரைச்சல்கள் ஓய்ந்ததும் இருள் கவிந்தது.

மருதானையின் பிரதான வீதி ஒன்று மாளிகாவத்தை மையவாடியைப் போல் அமைதியில் ஆழ்ந்துபோன அந்த வேளையில், யாருமே அக்கறைப்படாத ‘ஓர் உலகம்’ விழித் துக் கொண்டது.

‘விபத்து’க்களில் தம் சுகத்தை இழக்தபின் அவர்களுக்கு எல்லாமே….

இரவுகள்தான்.

வாழ்க்கை இனிக் குருடு.

வாழ்க்கை இனி ஊனம்.

வாழ்க்கை இனி…?

இப்படி எத்தனையோ.

அன்றும் பின்னிரவு நடமாட்டம் உச்சத்தை அடைந்தது. நீண்ட நாட்களுக்குப் பின் நவாஸும் வந்திருந்தார்.

அவனுக்கு இயற்கையிலேயே கலை நெஞ்சு : நல்ல சாரீரம்.

“மர்சூக்நானா, இப்ப நவாஸ்ட பாடு மோசமில்ல. பகல் ‘ஐந்து லாம்பு’ சந்தியில் இஸ்லாமிய கீதம் .. ஆ… நான் அசந்து போயிட்டன் ஜிப்ரி சொன்னான். ஜிப்ரி ஓர் ஹாபர் தொழிலாளி, மோட்டார் விபத்தில் ஒரு காலை இழந்தபின் அவனுக்குக் கிடைத்த பட்டமும், கௌரவமும் ‘நொண்டி ஜிப்ரி’.

“அப்படியா? அல்லாஸ் ரஷ்மத் செய்யட்டும்”

மர்சூக்நானா, கபூர், பாரூக், நஸீம், அஸீஸ், ஹலி போன், முஹம்மது, அப்துல்லா?

இன்னும் அவனைக் காணவில்லையே!

அவர்கள் எல்லாரும் உழைத்து ஒடிந்தவர்கள்; ஒரு சிலர் இன்னும் உழைக்கக் கூடியவர்கள்: இருபது வருடங்களுக்கு முன்பே வாழ்க்கையைச் சிதறடித்தவர்கள் : அப்போதே அனாதைகள். இப்போது…?

இரவு வரமுன் – கூனாகி, குருடாகி, ஊமையாகிப் போன பிரகிருதிகள் யாசகத்துக்குப் போயத் திரும்பியிருந்தனர்.

மர்சூக்நானாவும் வேறு சிலரும் உழைப்பாளிகள்; வீட்டுக்கு வீடு சில்லறை வேலைகள் செய்யவும், சுமை தூக்கவும், பேமென்ட்டில் சிறு ‘பிஸ்னஸ்’ என்று ஆளுக்கொரு வேலையாய்ப் போய்ச் செய்து வந்தாயிற்று.

நியதியின் பிரகாரம் இரவாகிய பின்னும் இரவு நீள்கிறது.

எங்கிருந்தோ மோப்பம் பிடித்து, மருதானை போலிஸ் ஜீப் வண்டியொன்று…

பொலிசாருக்கு அவர்களைப் பற்றித் தெரியும் இருப்பினும் –

“மொனவாத பங்மேவேலாவ ரெஸ்வீம?”

“அதே சேர் மே பலன்ட அபராத; அபி நிதரம நிதா கன்ன தென்னவ கடகாரயோ வத்துர தாவா”

மர்சூக்நானாவின் குரல் கணீரென்றிருந்தது.

“கூட்டம் போடாம வேறிடமாகப் பார்த்துப் போங்க” என்று சிங்கள மொழியில் சர்வ சாதாரணமாக இரைந்து விட்டு ஜீப் மறைந்தது.

“மச்சான், நேத்து ராவு இங்ஙனக்கி கச்சால் பெய்த் திரிக்கி…அதான் யாரையும் படுக்க உடாம.” அலுத்துக் கொண்டான் பேமென்ட் யாவாரி பாரூக்.

“அப்துல்லாவை இன்னும் காணல்லியே”

நூர் முஹம்மது அங்கலாய்த்துக் கொண்டான்.

ஹாஜியார் வீட்டு மாடுகளுக்கு, பேலியகொட பகுதி யில் அவரது தோட்டத்தில் புல் அறுக்கப்போய், அன்றும் வலது காலில் அட்டை உறிஞ்சி வலியெடுத்தது அவனுக்கு. ஒரு துண்டு புகையிலையில் எச்சிலைத் தடவி, தாளே சிகிச்சை செய்து கொண்டான் நூர் முஹம்மது.

“ஹ ஹ ஹ. அப்துல்லமீத் கடையில களவு பெய்த்திரிக்காம். நல்லது போகட்டும், நாசமாப் போகட்டும்”

கபூரின் உள்ளக் குமுறல் வார்த்தைகளால் வெடித்தது.

குழிவிழுந்த கண்களில் ஒலி மங்கியும், எலும்பு தள்ளிய மார்பும் தோலுமாக, நடமாடும் ‘மியூசியம் போல காட்சி அளித்தார்கள் அவர்கள்,

“கபூர், நீ என்னத்துக்கோய் சல்லிக்காரன ஏசின?’ மர்சூக்நானாவுக்குக் கோபம்,

“ஓ… இலக்சன் டைம்ல, ஒங்களுக்கு அஞ்ச பத்த”

“போடா மடையன். அவன்தான் அப்படி என்டா. நீயும் அல்லாஹ்வ மறந்து பேசரே, எங்களுக்கு இடமில் லாட்டி மத்தவங்கள ஏசி வேல இல்ல”

“நாங்க ஒலகத்தில் கஷ்டப்படுகிற கூட்டம். எங்களுக்கு இங்க இடம் இல்ல. ஆனா சொர்க்கத்தில நல்ல இடம் கிடைக்கும்; ஆண்டவனால் மிச்சம் விரும்பப்படுகிற கூட்டம் ஒலகத்திலே வெறுக்கப்படும்”

அந்த விளக்கம் நியாயமாகப் பட்டிருக்குமோ? மர்சூக் நானாவின் நீண்ட விளக்கத்தால் கபூரின் ஆவேசம் அடங்கியது.

பகலெல்லாம் தெருவில் திரிந்த இரண்டொரு மாடுகளும் தூரத்தே, மசாங்கா மரத்தடியில் படுத்துவிட்டன. தெரு நாய்களுக்கும் எங்கோ மூலையில் இடமிருக்கிறதென்று ஊளையிடுகின்றன.

இறைவனின் பிரதிநிதிகளான மனிதனுக்கு …… ஊமைமயமான இரவு நீண்டு கொண்டே, இப்படி எத்தனையோ இரவுகள்.

“மர்சூக்நானா. எனக்கு ஒரு இடம் இருக்கு” கபூர் சொன்னான். சிரிப்பு மயான அமைதியைப் பிளந்தது.

அவனுக்கு ஓர் இடமா? எங்கே?

சந்தியில் நடந்து கொண்டிருந்த எல்லாரும் மீண்டும் ‘நக்கலா’கச் சிரித்து சற்று நின்றார்கள்.

“எக்சிடன்ட்ல மௌத்தாப்போன நூர்தீன் அப்பா இருந்த இடம்”

மீண்டும் அவர்களால் சிரிக்க முடியவில்லை.

நூர்தீன் அப்பா காலமாகி இன்னும் ஒரு வருடம் பூர்த்தியாகவில்லை.

மர்சூக் நானா மிகுந்த கவலையுடன்-

“மத்தவர்கள பத்தி ஒனக்கு கவலை இல்லாட கபூர். நூர் முகம்மது பாவம். மனுசனுக்கு அந்த இடத்த”

எல்லோருக்கும் பின்னால் கூன் முதுகுடன் எவ்வி எவ்வி வந்து கொண்டிருந்தவன் நன்றியுடன் அந்த இடத்துக்கு நகர்ந்தான்.

இப்பொழுது மர்சூக் நானா, ஜிப்ரி, கபூர், நவாஸ் போன்றோர் மட்டுமே பின் இரவில் நடந்து கொண்டிருந்தார்கள். கால் இயலாத ஜிப்ரிக்குத்தான் அடுத்த இடம்.

“அப்துல்லாவை இன்னும் காணல்லியே” என்ற ஏக் கம் அவர்களது இதயங்களை வாட்டியபோது தான்.–

நூர்தீன் அப்பாவின் பிரிவும் அவர்களது உள்ளங்களை நெகிழச் செய்து விட்டது. அவரைப்பற்றி ஏன் பேசினோம் என்றிருந்தது கபூருக்கு.

“மர்கும் நானா ஏன் பேசாம போறீங்க” கபூரின் குரல் ஒலித்தது.

மர்சூக்கின் கண்களிலிருந்து நீர் முத்துக்கள் பொல பொலவென்று

சேர்ட் பொக்கட்டிலிருந்து துழாவி அந்தப் பத்திரிகைத் துண்டை எடுத்து விரித்தார் மர்சூக்நானா. சந்தியின் பின் நிலவில் ‘பளிச்’ என்றிருந்தது. சூழ்ந்து கொண்டு மங்கிய பார்வையை உன்னிப்பாக மேயவிட்டனர்.

நூர்தீன் அப்பாவின் படம் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

நூர்தீன் அப்பாவுக்கு சூனியமாக இருந்த இரவுகள். அன்புடன் உதவிய சகாக்கள் ஆகியவற்றுடன் இணைந்து இருந்த சங்கிலித் தொடர்பு அறுந்து போன ஞாபகச் சின்னம் அந்த ‘குறுப் போட்டோ ‘ ஒன்றுதான்.

வழி தவறும்போது ‘குர் ஆன் ஆயத்துக்’களையும், ‘ஹதீஸ்’ விளக்கங்களையும் எடுத்துக்கூற இனி யார் இருக்கிறார்கள்?

வாழ்க்கை பூராவும் இரவாகி விட்டது போல உணர்ந்தார்கள்.

“நானா இப்ப என்ன செய்றது?”

பகலெல்லாம் திரிந்து இரவிற்கு வந்தால் இப்படி-

காலையிலிருந்து மாலை வரை வயிற்றுப்பாட்டுக்கு இரப் பதும் இரவில் கொஞ்சம் ஒதுங்கி நித்திரை கொள்ளலா மென்று ‘பேமென்டில்’ இடம் கிடைக்கும் என்று வந்தால் –

இடம் இருந்த இடத்தில் கடைச் சொந்தக்காரனின் மனம் இரங்குமா? அதுவும் இந்தப் பொல்லாத கொழும்பு மாநகரில். மனிதனை மனிதன் மதிக்கிறதும், நம்புவதும் சேச்சே. மாலை ஆறரை மனிக்கே வாளி வாளியாகத் தண்ணீரை ஊற்றி வைக்கிறார்களே.

வருஷா வருஷம் தவறாது ஹஜ்ஜுக்குப் போகிறவர்கள்.

‘இந்தா, ஏய் நானா, இங்கல்லாம் தங்க இடமில்ல பள்ளிவாசல் பக்கம் போங்க’

பொட்டலங்களைத் தூக்கிக் கொண்டு அலைந்து எங்கா வது மறைந்த பின் இடம் பிடிக்கும் பிரயத்தனம் தனி.

விரட்டி தண்ணீர் ஊற்றியவருக்கும் அயர்வும் உறக்கமும் வரும்.

பாரூக் சொன்னான்-

“நானா போன வெள்ளிக்கிழம கொத்துபா பிரசங்கம் நல்லாயிருந்தது”

நாயகத்தின் காலத்தில் பள்ளிவாசல்கள் இருபத்து நாலு மணி நேரமும் சமுதாயப் பிரச்சினைகளோட இயங்கி, சகலவற்றிற்கும் அடைக்கலம் தந்து, மனிதனையும் பள்ளிவாசலையும் பிரிக்க முடியாமல் இணைத்தது.

எதையோ நினைத்தவராக மர்சூக் நானா சப்தமிட்டுச் சிரித்தார்.

என்ன என்று கேட்கும் பாவனையில் எல்லோரும் அவரைப் பார்த்தனர்.

“நாங்கள் எண்டாலும் இப்படி. ஆனா அந்தக் கூட்டம், அல்லாவே”

“எந்தக் கூட்டம்?”

“எந்தக் கூட்டம், ஜும்மா முடிஞ்சி வெளி கேட் கிட்ட பாருங்கள். எத்தனை பாத்திமாக்கள், நம்மட தங்கச்சிகள்”

நீண்ட மௌனம் நிலவியது.

“நம்மட சமுதாயம்……?”

“இப்ப நாங்க நாலு பேர்தானே இருக்கோம்”

“ஸ்டேசன் பக்கம் போவமா?”

“தொரே எந்த ஊருக்கு கோச்சி ஏறப் போறாரோ?”

“கட்டாயம் ஒதை கிடைக்கும்”

“எங்க இன்னும் அப்துல்லாவைக் காணலையே?” மீண்டும் கபூர்.

நால்வரும் எல்லா வீதிகளிலும் அலைந்து இடம் கிடைக் காததால், கூட்டுறவுக் கடை பேமென்டுக்கே நடந்தார்கள். அது அரசாங்கக் கட்டடம். பலர் அங்கே தான் வழக்கமாக ‘கேம்ப்’ அடிப்பார்கள். ஆட்கள் கூடி பொலிஸ் வராமல் இருக்க வேண்டும்.

எதிர்பாராத விதத்தில் அங்கே ஒருவரும் இருக்கவில்லை. பேருவளை கந்தூரிக்குப் போய் இருக்கக் கூடும்.

தரையைத் துடைத்துவிட்டு பொட்டலங்களை அவிழ்த்து உறங்குவதற்காகப் பேப்பர் விரிப்பை விரித்தார்கள். பழைய ‘ரேஸ் பேப்பர்களாவ்’ ஒட்டப்பட்ட விரிப்பு அது. கபூரின் தயாரிப்பு.

அதைக் கண்டவுடன் பாரூக் கத்தினான்-

“இந்தக் குப்பைகளை விரித்து எங்கட மானத்த வாங்காதே கபூர், சொல்லிட்டன். நாளக்கி நெருப்பு வைப்பன்”

“பாரூக் மச்சான், கோவிக்காதீங்க இப்பவே நெருப்பு வைப்பம்”.

அது மர்சூக் நானாவுக்கு சந்தோஷமாயிருந்தது.

“எங்கட சமுதாய அழிவுக்கு ‘றேஸூம்’ ஒரு காரணம்”

பசித்த வயிறுகள் உணவு உட்கொள்ளத் தொடங்கின. பள்ளிவாசலில் ‘மிஸ்கீன்’ களுக்கு ‘பார்சல்’ வழங்கியிருந்தார்கள்.

அவர்களுக்கு கைகால்கள் உளைச்சல். தூக்கமயக்கம்.

மர்சூக் நானாவும் கபூரும் உரையாடிக் கொண்டிருந்த போது மற்றவர்கள் குறட்டை விட்டனர்.

மர்சூக் நானா சொன்னார்-

“ஐந்துபேர் ஒத்துமையா இருந்தா முடியும். ஒரு வீட்ட கூலிக்கு எடுக்க ஏலும்”

“பிளட் வூடா…?”

“மண்ணாங்கட்டி…இருபத்தஞ்சு ரூபாக்குள் குடிசை வூட்ட எடுக்கலாம். ஒரு பானை சோறு பொங்கவும் படுத்துக் கொள்ள இடமும் இருக்கும்தானே?”

“குடிச ஒண்டு கட்ட இடம் இருந்தாலும் போதுமே” பாரூக் தூக்கத்தில் பேசவில்லை.

அப்போது ஈனமாக ஒரு முனகல் ஒலி கேட்டு விரைந்தனர்.

ஒரு மூலையில் அப்துல்லா சுருண்டு கிடந்தார். நெருப்புப் போல காய்ச்சல், வாந்திபேதி மோசமான நிலை.

உடனே அரசினர் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்.

மர்சூக் நானாவும் மற்றவர்களும் ‘ஓட்டோ’ பிடித்து அவனைச் சேர்த்து விட்டார்கள்.

திரும்பி இருப்பிடத்திற்கு வந்து கண்ணயர்ந்தார்களா?

ஒலி பெருக்கியில் ஸுபஹு தொழுகைக்கு பாங்கு ஒலித்துக் கொண்டிருந்தது.

“அஸ்ஸலாத்து ஹைரும் மினன் நவும்…”

அதைத் தொடர்ந்து தெருச் சந்தடிகள் மெல்ல மெல்ல எழுந்தன. விடிவெள்ளி யாருக்காகவோ தோன்றிக் கொண்டிருந்தது.

“அட இவ்வளவு சுறுக்கா வெள்ளவெளேரென்று”

அப்துல்லா விடியற்காலையில் மண்டையைப் போட்டு விட்ட செய்தி பேமென்ட் எங்கும் பரவி, எங்கோ குளி ரூட்டப்பட்ட கண்ணாடி அறைக்குள் ‘டெலிபோன்’ மணியும் அலறியிருக்க வேண்டும்.

“ஒரு முஸ்லிம் மையத் நாறிப் போகக் கூடாதாம்”

‘மையத்தை’ எடுக்க இயக்கங்களும் சங்கங்களும் மோதிக் கொண்டன.

எப்படியோ அந்த மரண ஊர்வலம் மாளிகாவத்தை மையவாடியை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது.

ஊர்வலத்தில் மர்சூக் நானாவும் உற்ற நண்பர்களும் போய்க் கொண்டிருந்தனர்.

நேற்றுவரையும் நம்மோடு அனாதையாக இருந்தானே என்று நண்பர்கள் பெருமூச்சு விட்டார்கள்.

மாலை மங்கிவிட்டது.

மீண்டும் இரவு – இரவுகள் அவர்களுடைய ராகங்கள் ஒலித்துக் கொண்டுதான் இருந்தது.

நவாஸ் சந்தி, சந்தியாகக் கீதங்கள் பாடி இரக்கிறான். அவனுடைய உடைந்த ஹார்மோனியப் பெட்டியிலிருந்து வரும் உயரிய இராகங்கள் தன் உலகின் அடிநாதம் தானே.

– அஷ்ஷூரா – ஜூலை-ஆகஸ்ட் 1981

– இரவின் ராகங்கள் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு : ஜூலை 1987, மல்லிகைப்பந்தல், யாழ்ப்பாணம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *