கண்ணாடியில் இரண்டு பிம்பங்கள் தெரிந்தபோது ஆசாரிக்கு வியர்த்துவிட்டது. இரண்டில் எது வழமையானது எது புதிதாகத் தோன்றியது என்பதை அவனால் பிரித்தறிய இயலவில்லை. கண்களைக் கசக்கித் துடைத்துக்கொண்டு பார்த்தான். மீண்டும் இரண்டு பிம்பங்கள் தெரிந்தன. கண்ணாடியில் ஏதேனும் கீறல் விழுந்திருந்ததா எனத் தடவினான். அவ்வாறு இல்லை. கண்ணாடியிலிருந்த பழுப்பு நிறப் புள்ளிகளால் அவ்வாறு தோன்றக் கூடும் என நினைத்து மண்சுவரில் பதிந்திருந்த கண்ணாடியைப் பெயர்த்தான். நாற்புறமும் சட்டங்களற்ற கண்ணாடியின் பின்புறம் ரசமற்று வெளிறிக்கிடந்தது.
ஆசாரி கண்ணாடியை முன்னும் பின்னுமாய்த் திருப்பினான். தன் முன்னாக இரண்டு பிம்பங்கள் தெரிவதற்குக் கண்ணாடி ரசமற்றுப் போனது காரணமல்ல, கண்களில் தான் குறையுள்ளதெனக் கருதினான். யோசித்துக்கொண்டிருந்தபோது அவன் கவனம் அருகிலிருந்த தண்ணீர்த் தொட்டியின் மீது திரும்பியது. அதன் இயல்பான தோற்றம் சிதைந்து தெரிந்தது. அருகே சென்றான். அரவம் கேட்ட தண்ணீர்ப் பூச்சிகள் திடுக்கிட்டு விலகின. தொட்டிக்குள் தலையை மூழ்கடித்துக் கண்களால் நீருக்குள் துழாவினான். நீரலையால் மேலெழும்பிய கசடுகள் கண்களைத் தழுவின. கண்கள் எரிச்சல் அடைந்ததும் தலையை வெளியெடுத்தான். கூம்பு வடிவில் தண்ணீர் தாரை தாரையாய்க் கொட்டியது. வேட்டியால் முகத்தை அழுந்த ஒத்தியெடுத்து மீண்டும் கண்ணாடிக்கு முன் நின்றபோது இரண்டு பிம்பங்கள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தன.
வேலிப்படல் கடந்த வெயில் வீட்டிற்குள் நத்தைபோல் ஊர்ந்தது. சாய்வு நாற்காலியில் அமர்ந்து மேற்கூரையைக் கண்ட ஆசாரிக்கு விட்டங்கள் இரண்டிரண்டாய்த் தெரிந்தன. ஒருமுறை இமைகளை மூடித் திறந்தான். மாற்றம் ஏதும் நிகழ்ந்துவிடவில்லை. இனித் தன் உலகம் இரண்டு பிம்பங்களால் ஆனதாகவே இருக்குமென்று மனதைத் திடப்படுத்திக்கொண்டான். அக்கணம் வெளியிலிருந்து யாருடைய அழைப்புக்குரலோ கேட்டது.
‘ஆசாரீ! என்ன, பொழுது வெடியிலையா? சேவக்கோழிக எல்லாம் அடங்கியாச்சே! இன்னுமா எந்திரிக்கில?
ஆசாரி நாற்காலியிலிருந்து மெல்ல எழுந்து வெளியே தலை நீட்டினான். வாசலில் உளிப்பெட்டியைப் பிடித்துக்கொண்டு ஒருவன் நின்றிருந் தான். உளிப்பெட்டியும் அவனும் பின்னாலிருந்த முருங்கை மரமும் ஒன்றோடு ஒன்றாய்க் கலந்து காட்சி தந்தார்கள். ஆசாரிக்குள் கலவரமொன்று கிணற்று நீரைப் போல் ஊற்றெடுத்தது. தொடர்ச்சியற்றுப் போய் அறுந்த குரலில் கேட்டான்.
“யாரு . . . சூரையனா . . .?
“ஆமா, ஆசாரீ.”
“என்ன சோலியா திடீர்ன்னு?”
“கல்லா மேட்டுல சில்ற வேல ஒன்னு. போய்ட்டுத் திரும்ப சாயங் காலமாகும். ஆளுக்கொரு பக்கமா நின்னு ஓடுகளப் பிரிச்சுக் கோப்பு மாத்தனும். பேசி வெச்சதுல உனக்குப் பாதி. இருக்கறதக் குடிச்சுட்டு வா” என்றான் சூரையன்.
ஆசாரி இழுத்தான். “நீ சொல்றது என்னமோ சரிதான். கெழுட்டு நாய்க்கு ஒடம்பு முடியணுமே? வேல பாக்காம கூலிக்கு மட்டும் கை நீட்டுனா அசிங்கமில்ல, ஒத்தப்பன முக்குல ஆசாரிக யாராச்சும் நிப்பாங்க. கூப்புட்டுப் பாரு.”
“முன்ன நடந்தத நெனைச்சுட்டுப் பேசாத. போன மொறபோல இந்தத் தடவ நடக்காது. இதுக்கு நான் ஆப்பு” சூரையன் உறுதியளித்தான்.
“அட, வெவரங்கெட்டவனா இருக்க. கோப்பு வேலைன்னு சொல்ற, கைகால் ஓடாம குத்த வெச்சு உக்காந்துட்டா கோப்பு அதுபாட்டுக்கு மேல ஏறிடுமா? பேசாம போ” ஆசாரி சூரையனை விரட்டுவது போன்ற பாவனையில் சொன்னான்.
‘சும்மா செலம்பாத ஆசாரி. உங்கிட்ட கடனுக்கா நிக்கறேன். நம்ம ஆசாரீகள நம்ப முடியாது தெரிஞ் சுக்கோ. போன வாரம் ஊத்துக் குளியில வேல. முப்பதுக்குப் பதினஞ்சு அடியில கோப்படிக்கணும். கூடக் கோணப்பன். ராவும் பகலுமாத் தச்சு. வேலையெல்லாம் முடிஞ்சு கொணக் கோப்பு ஓடுகள மாத்திட்டு இருந்தேன். அவசரமா ஒண்ணுக்குப் போகனும்னு கோணப்பன் கீழ எறங்குனான். இன்னவரைக்கும் ஆளையே காணோம். போனவன் ஒன்னும் கைவீசிட்டுப் போகல. நானும் எறங்கி வந்தப்பத்தான தெரிஞ்சுது. எச்சக்கல நாயி, என்ன பண்ணுனா தெரியுமா? பேசி வெச்சிருந்த பணத்தையும் தூக்கிட்டுதான் போயிருக்குறான். இப்ப சொல்லு, இந்தக் களவுக்குப் பொறந்தவனுகள நம்பி ஒரு காரியத்துல எறங்க முடியுமா?”
சூரையன் புலம்பியதில் மனம் இளகியதுபோல ஆசாரி தாடையை நீவினான். சூரையன் மேலும் கெஞ்சலாய்க் கூறினான், “ஆசாரீ! கையோட கூலிப்பணத்தக் கொடுத் தர்றேன். சத்தியமா பெசகு நடக்காது. மூனு ஊரு தாண்டனும் பாரூ. பொறப்படு.”
சூரையனுக்குப் பதிலளிக்க ஆசாரிக்குத் தெரியவில்லை. எச்சிலை விழுங்கினான். தற்போது தான் காணும் உலகம் நேற்றிருந்தது அல்ல. இன்று அது வேறாகத் திரிந்து நிற்பதை அவனிடம் எப்படிச் சொல்வது என்று மனத்திற்குள் புழுங்கிய ஆசாரிக்கு முகம் கறுத்துச் சுருங்கியிருந்தது.
“ஆசாரீ! யோசன எதுக்கு? ஒரு எட்டுப் போய்ட்டு வந்துருவோம். வாரக்கடசி. கூட இருக்கற உசுருகளுக்கு வயிறுன்னு ஒன்னு இருக்குது. அதுகளுக்காகத்தான் இந்தப் பாடு.” சூரையன் கலங்கியதுபோல் தெரிந்தான். ஆசாரி திரும்பி வீட்டிற்குள் சென்றான்.
இருவரும் இட்டேரிக்குள் புகுந்து நடந்தார்கள். சூரையனின் கையிலிருந்த உளிப்பெட்டி அவனைக் கீழே சாய்த்துவிடும் அளவிற்குக் கனமாகத் தெரிந்தது. ஆசாரி தடுமாறினாலும் சூரையனின் திசையில் தனது நடையை ஒன்றிணைத்துக்கொண்டான். கால்கள் எடுத்துவைத்தபோது ஆசாரிக்குத் தப்படிகள் பிறழ்ந்து கொண்டிருந்தன. காண்கிற பொருட்கள் யாவும் இருகூறுகளாகப் பிரிந்து அவனைக் கடந்து சென்றன. துயரத்திலேயே ஆழ்ந்து நடந்தான் ஆசாரி. தன்னுடைய நிலை இவ்வாறு தொடரும்பட்சத்தில் இவ்வுலகம் தன்னெதிரில் சூன்யமாய் உருத் திரண்டு நிற்குமெனக் கணித்தான். அவ்வாறாக இவ்வுலகம் ஆகுமெனில் தன் வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற கேள்வி வந்தது. அக்கேள்வியை அதற்கு மேல் அவன் வளர்க்க விரும்பவில்லை. உள்ளுக்குள்ளேயே புறக்கணித்தான்.
காட்டை ஊடறுத்துச் செல்லும் வழித்தடம் வந்ததும் ஆசாரியின் நடை நின்றது. யோசித்தான். கடந்துவிட்ட வேலிக்கல்லில் இருந்து குறுக்காகப் பறந்த கரிக்குருவி ஒன்றா அல்லது இரண்டா என்ற குறுகுறுப்பு அவனுக்கு. கரிக்குருவி உண்மையிலேயே இரண்டாக இருந்திருந்தால் தன் கண்களுக்கு நான்காகத் தெரிந்திருக்குமே என்று எழுந்த சந்தேகத்தைக் கணக்குப் போட்டுத் தீர்த்தான். இளவெயிலின் உக்கிரம் ஆசாரியின் பின்தலையில் அடித்துத் துரத்தியது.
சூரையனும் ஆசாரியும் ஊருக்குள் நுழைந்ததும் அவ்வீடு தனியாகத் தெரிந்தது. ஓடைக்கற்களால் எழுப்பியிருந்த சுவர்களில் அங்கங்கு புடைப்பு இருந்தது. தாழ்வாரம் எந்நேரமும் சரிந்து விடுவதுபோல் அதன் தோற்றம். இருவரும் வீட்டை அடைந்ததும் வீட்டுக்காரன் திண்ணையிலிருந்து எழுந்துகொண்டான். அவன் நான்கு கால்களில் நிற்பதாய் ஆசாரிக்குப்பட்டது. சூரையன் உளிப் பெட்டியைத் திண்ணையில் வைத்துவிட்டு வீட்டிற்குள் போனான். ஆசாரிக்குக் குறுகலாய் நின்ற நிலவு இடித்தது. சூரையன் வீட்டைச் சுற்றும்முற்றும் பார்த்தான். வீட்டிலிருந்த பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டுக் கோணிக்குள் சுருண்டு கொல்லைப்புறத்தில் கிடந்தன. உறைந்த திரவத்தின் அமைதி வீட்டிற்குள் இருந்தது. சூரையன் மேற்கூரையைப் பார்த்துவிட்டு வீட்டுக்காரனிடம் கேட்டான்.
“என்னங்க ஆரம்பிக்கலாமா. . .?” அவன் சரியென்பதுபோலத் தலையசைத்தான். “கூடமாட நீங்க நிக்கணும். ஓடுகள மொத்தமாக் கீழறக்கி மறுக்கா மேயணும். மேகூரையே கரியாக் கெடக்கு பாருங்க.”
சூரையன் கையை உயரே காட்டிச் சொன்னான். வீட்டுக்காரன் தலைநிமிர்த்திப் பார்த்தான். ஆசாரிக்கு மேற்கூரையின் கரும் பரப்பு எந்த அசைவையும் காட்டாமல் நின்றது.
இருவரும் சட்டையைக் கழற்றிக் கொல்லைப்புற வாகையில் தொங்கவிட்டார்கள். ஏதாவது பணி சொல்வார்கள் என நினைத்து வீட்டுக்காரன் இருவரையும் பின்தொடர்ந்தான். சூரையன் தரையில் கிடந்த ஏணியைத் தூக்கிவந்து பக்கச் சுவற்றில் சாய்த்தான். முன்புறம் வால்போல் தொங்கிய வேட்டியின் நுனியைக் கால்களுக்கிடையே நுழைத்துப் பின்னிடுப்பில் சொருகிக்கொண்டான். கால்களை ஏணியில் அடுத்தடுத்து வைத்துச் சூரையன் மேலேறிக்கொண்டிருந்தான். அப்போது கீழே நின்ற ஆசாரியை அழைத்தான். “ஆசாரீ! தாவாரத்து ஓடுகளத் திண்ணையில எறக்கி வைய்யி. நானு கோம்பைல இருந்து மேக்கால போறேன்.”
ஆசாரி தாழ்வாரத்தின் முன்பக்கமாய் வந்து நின்றான். புழுதியும் பாசியுமாய் ஓடுகள் அப்பிக்கிடந்தன. பிரித்துப்போட்டால் வீடே தூசால் நிறைந்துவிடும். ஆசாரி திண்ணையின் மேல் ஏறிப் பார்த்தான். பட்டைக்கு அருகிலிருந்த தலையுடைந்த ஓடு விலகிக்கிடந்தது. ஒருவேளை கண்களுக்குத்தான் வரிசையிலிருந்து விலகினதுபோல் படுகிறதா என நினைத்தான். எதற்கும் ஓட்டை உருவிப் பார்க்க லாம் என்ற எண்ணம் வந்தது. ஓட்டின் முன்பகுதியை இழுத்தான். அந்த இழுப்பு பக்கவாட்டில் கவ்வியிருந்த நடுவோட்டின் மேல் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஆசாரி அதை உணராமலிருந்தான். ஓடு அதனிடத்திலிருந்து நகர மறுத்தது. அவன் மேலும் கீழும் வலுவாக அசைத்தான். அரைப்பற்களில் தொங்கிய ஓடுகளின் வரிசை ஆசாரியின் இழுப்பிற்குப் பிடிமானம் இழந்தது. காற்றாடி துண்டித்துவிட்ட நூல்போல ஓடுகள் நெளிந்து சரிந்தன. படபடவென்று திண்ணையில் விழுந்து நொறுங்கித் தேங்காய்ச் சில்லுகளாய்த் தெறித்தன. சத்தம் கேட்டுப் பதறிப்போன சூரையன் மேற்கூரையிலிருந்து வந்து பார்த்தான். ஓடுகளின் சிதறலால் வாசல் முழுவதும் கற்துண்டுகளாய்க் கிடந்தன.
“என்ன ஆசாரீ! வேலையில நோட்டம் வேண்டாம்? இதுவா ஓடுகளப் பிரிக்கற லச்சணம்? மேலிருந்து பிரிக்காம யாராச்சும் கீழிருந்து போவாங்களா? ஆசாரீக கண்ண மூடிக்கிட்டு வேல செஞ்சா பொழப்பு சிரியா சிரிக்கும். கஞ்சிக்கும் கூளுக்கும் நக்கிட்டுத்தான் போகணும். ஒரு நாளு சோத்துக்கு மாரடிக்கறதே எந்தலையெழுத்தாப் போச்சு.”
சூரையன் கையால் நெற்றியிலடித்துக்கொண்டான். அவன் உடல் முழுதும் கோபத்திலும் சலிப்பிலும் எரிந்தது. வீட்டுக்காரன் முன்னிலையில் வாங்கிய வசையால் ஆசாரியை அவமானம் பிடுங்கித்தின்றது. வயோதிகம் அவனை இதுவரை கூட்டி வந்திருந்ததை எண்ணிக் கூனிக் குறுகினான். பட்டுப்போன மரத்தின் இறுக்கம் அவனிடம் தெரிந்தது. சூரையன் தேற்றுவது போலக் கூறினான்.
“போகட்டும் ஆசாரீ! நீ மேல வர வேண்டாம். கீழயே நின்னு ஓடுகள வாங்கி வெச்சாப் போதும். நானே பாத்துக்கறேன்.”
சூரையன் மேற்கூரைக்குத் திரும்பியிருந்தான். கோம்பையின் மீது உட்கார்ந்து முக்கோண ஓடுகளைப் பிரித்துப் போட்டான். இடைப்பட்ட சந்தில் வெயிலின் கீற்று உள்ளே பாய்ந்தது. கீழே நின்று மேற்கூரையைப் பார்த்துக்கொண்டிருந்த ஆசாரிக்கு முன்பாக வெயிலின் கீற்று காது மடல்களை ஒட்டிக் கோடுகளாய்ப் பிளந்தது. வெயிலை நேராக எதிர்கொண்டதால் அவன் கண்கள் நீர்கோத்தன. மேற்கூரை தண்ணீருக்குள்ளிருந்து பார்ப்பதுபோல் தெரிந்தது.
வீடெங்கிலும் வாகை மரத்தின் இலைகளும் கரிப்புழுதியும் நிறைந்தன. புழுதி ஆசாரியின் தலைக்கு மேல் புகையாய்ப் படர்ந்தது. கண்களை மூடிக்கொண்டான். சுரந்த கண்ணீரோடு குப்பைகள் கலந்து துருவின. புறங்கையால் கண்களைத் துடைத்தவாறு சூரையன் கொடுத்த ஓட்டை ஆசாரி வாங்கினான். ஓடு கைநழுவியது. தரையில் பட்டு எந்தப் பக்கம் சிதறியதோ தெரியவில்லை. மேற் கூரையிலிருந்த சூரையன் ஆத்திரத்தில் கத்தினான். “ஆசாரீக்கு மற கழண்டுபோச்சா? நெனப்பு வேலையிலில்லாம எங்கோ கெடக்கு. கண்ணு காதுன்னு ஏதாச்சும் இருக்கா இல்ல, பொட்டையாகிடுச்சா? இன்னிக்கி வேல ஆகாது. நீ நடையக் கட்டு. வலிய வந்தா கொலமென்னங்கற கதையாப் போச்சு. கோப்ப ஒத்தைக்கு ஏத்தி நிறுத்திக்கறேன்” என்று வேட்டியின் முடிச்சை இறுக்கினான் சூரையன்.
“இல்ல சூர. வெடிஞ்சதிலிருந்தே கண்ணுல ஏதோ கோளாறு. எதுவும் சரியா தெரியமாட்டேங்குது. அதான் வேலைக்கு வர மொரண்டு புடிச்சேன். எதுன்னாலும் சரிக்கட்டு வோம்னு நெனைச்சுட்டுத்தான் வந்தேன். ஆனா வேல ஓடல சூர.” ஆசாரியின் தழுதழுத்த குரல் சூரையனை அழவைத்துவிடும்போல் இருந்தது. சூரையன் அடக்கியதையும் மீறி அழுகை வந்துவிட்டது. தன் கட்டுப்பாட்டை இழந்தே சொன்னான்.
“ஆசாரீ! நல்லது கெட்டது எதுன்னாலும் நீதான் எனக்கு ஆசான். நீ அடிச்சு அரவணைக்கலின்னா சூரையன் இல்ல. நீ மெனக் கெட்டதுல வந்தது இந்த உளியும் மழுவும். சத்தம் போட்டத மனசுல வெச்சுக்காத.” சூரையன் உணர்ச்சிப் பெருக்கிலிருந்தான். ஆசாரியின் கனத்திருந்த மனம் கரைந்து இலகுவானது. வீட்டுக்காரன் இருவரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தான். வீடு நிறைய ஒரு கணம் அமைதி அலையாய் எழுந்து மூடியது.
சூரையனின் வேலையில் வெறி பிடித்துக்கொண்டது. ஓடுகள் அவன் கைகளுக்கு அனாயாசமாய்ப் பெயர்ந்தன. பெயர்ந்த ஓடுகள் வீட்டுக்காரனிடம் மாறின. வீட்டுக்காரன் தரையில் நின்றிருந்த ஆசாரிக்குக் கொடுத்தான். அவன் அவற்றைச் சீமாரால் சுத்தப்படுத்திச் சுவரில் சாய்வாக நிறுத்தினான். கொல்லைப்புறத் தாழ்வாரம் ஓடுகளின்றி வெறும் சட்டங்களை மட்டும் காட்டியது. உச்சி வெயில் வீட்டிற்குள் நிலைகுத்தி விழுந்திருந்தது.
ஒருவாறாய்ச் சமயலறையுடன் கட்டுத்தாரையின் ஓட்டுச் சட்டங்களையும் சேர்த்துச் சூரையன் பெயர்த்திருந்தான். அதில் ஆனதும் ஆகாததுமாய் வகைப்படுத்தித் தரம் பிரிக்கும் வேலை ஆசாரிக்கு. சட்டங்கள் எல்லாம் புழுக்களால் அரிக்கப்பட்டுச் செதில் செதிலாய் உதிர்ந்தன. வீட்டுக்காரன் இருவருக்கும் உதவியாய் வேலை செய்தான். மூன்று பேரும் கரியில் புரண்டு எழுந்ததுபோல் தெரிந்தார்கள்.
வாகை மரத்தடியில் அடுப்பு கூட்டியிருந்த வீட்டுக்காரி மூன்று பேருக்கும் தேநீரும் வறுக்கியும் கொடுத்தாள். ஆசாரி இன்னும் மனவருத்தத்திலிருந்து விடுபடாதது அவன் பாவனையில் வெளிப்பட்டது. சூரையன் ஆசாரியின் முகத்தைப் பார்க்கத் தயங்கினான். எனினும் பேச்சு கொடுக்கத் தோன்றியது.
“ஆசாரீ! சட்டத்துல ஆணியப் புடுங்கிடு. எல்லாம் ஒண்ணுத்துக்கும் ஆகாது. வளவ நேராக்கி அடிக்க முடியாது பாத்துக்கோ. ஆணி நாலு கிலோ வாங்கிருக்கு. போதுமா?
“ம். கணக்கா அடிப்போம். பத்தலைன்னா பெறகாடி பாக்கலாம்.” ஆசாரி மௌனம் கலைந்தது சூரையனுக்கு ஆறுதலாயிருந்தது.
வெயில் மேற்கில் சரிந்துகொண்டிருந்தது. ஆணியெல்லாம் பிடுங்கிய குறுக்குச் சட்டங்கள் தயாராய் இருந்தன. இனி அளவுகோல் பிடித்துக் குறுக்குச் சட்டங்களை வரிசையாய் அடித்து நிறுத்தினால் கோப்பு. பின்னர் ஓடுகளை வேய்ந்து நீண்டுவரும் சட்டங்களின் முனைகளை அறுத்துவிட்டால் வேலை முடிந்தது. சூரையன் மீண்டும் மேற்கூரைக்குச் செல்ல வேட்டியை அவிழ்த்துக் கட்டினான். சூரையன் ஏறவென ஆசாரி ஏணியைத் தாங்கிப்பிடித்தான்.
சூரையன் மளமளவென்று மேற்கூரைக்குப் போனான். ஆசாரிக்கு இரண்டு சூரையன்கள் ஏறினதைப் போலிருந்தது. சூரையன் மேற்கூரையில் நின்றபடி ஆசாரியிடம் கேட்டுப்பார்த்தான். “ஆசாரீ! கோப்படிக்கத் தோதுப்படுமா? தயங்கின ஆசாரி பார்ப்போம் என்பதுபோல் சம்மதித்தான். வீட்டுக்காரன் ஏணியைத் தாங்க வந்தான். ஆசாரி கொஞ்சம் ஆணிகளை வேட்டி மடிப்பில் பொதிந்து சுத்தியலை இடுப்பில் திணித்துக்கொண்டான். ஏணியில் கால்வைக்க அவனுக்குத் தடுமாற்றம் வந்தது. குறுக்குகளை வலது காலால் தடவி மிதித்தான். அடுத்தடுத்த குறுக்குகளில் கால்கள் தாமாகவே பதிந்தன. மேற்கூரையைத் தொடும் வெட்டுக்கை ஒன்றை இறுகப் பற்றி நிமிர்ந்தபோது வெயில் கூசியது. ஆசாரிக்குச் சூரியனின் நடுப்பகுதி பச்சைக் குளம்பாய்த் தகித்தது.
கொல்லைப்புறம் நோக்கிச் சரிந்த வெட்டுக்கைகள் ஒன்றில் சூரையனும் மற்றொன்றில் ஆசாரியும் அமர்ந்திருந்தார்கள். அவர்களது தொடைகள் வெட்டுக்கைகளை இறுக்கியிருந்தன. தயாராக இருந்த குறுக்குச் சட்டங்களை வெட்டுக்கைகளில் அடித்தவாறு இருவரும் மேலே வர வேண்டும். ஆணி பிடுங்கிய குறுக்குச் சட்டம் ஒன்றை வீட்டுக்காரன் எடுத்துக் கொடுத்தான். அதை வாங்கிக்கொண்டு சூரையன் நெடுகிலும் பார்த்தான். சட்டம் திருகலாக இருந்தது. அதன் ஒரு முனையை ஆசாரியின் பக்கம் நீட்டினான். ஆசாரி பொதுவாகக் கைநீட்டச் சட்டத்தின் முனை அகப்பட்டுக்கொண்டது.
இருவருக்கும் இடையே குறுக்குச் சட்டம் பத்தடி தூரம் நீண்டிருந்தது. ஒரு முனையிலிருந்து சூரையனும் மறுமுனையிலிருந்து ஆசாரியும் ஆணிகளை அடிப்பது முறை. சூரையன் வேட்டியின் மடிப்பில் பொதிந்துவைத்திருந்த ஆணிகளை ஒவ்வொன்றாக எடுத்துக் குறுக்குச் சட்டம் வெட்டுக்கைகளோடு சேருமாறு அடித்தான். அவனது எல்லை குறுக்குச் சட்டத்தில் பாதிதூரம். அடுத்த பாதியை ஆசாரியின் வசம் விட்டுவிட்டு அத்தோடு நின்றுகொண்டான்.
ஆசாரியின் முறை வந்தது. பொதிந்துவைத்திருந்த ஆணிகளில் ஒன்றை எடுத்துக்கொண்டான். குறுக்குச் சட்டத்தில் நிறுத்திவைத்தான். ஆணி இரண்டு தலைகளுடன் நின்றுகொண்டிருந்தது. ஆசாரிக்கு எந்தத் தலையைச் சுத்தியல் கொண்டு அடிப்பது என்ற குழப்பம். அவனது தாமதம் மற்ற இருவரின் கவனத்தையும் கவர்ந்தது. சூரையன் பொறுமையிழந்துவிட்டான். “ஆசாரீ! ஆணிய மண்டையோட தட்டி எறக்காம என்ன பன்ற? அடிச்சுத் தள்ளு” என்றான். ஆசாரிக்குக் குழப்பம் நீங்கிவிட்டது. இரண்டு தலைகளில் ஒன்றைத் தாக்கினான். விசையோடு இறங்கிய சுத்தியல் அவனது இடது கட்டை விரலைப் பிய்த்தது. நகம் கிழிந்து பீறிய ரத்தம் விசிறிபோல் வெளியில் தூவியது. ஆசாரி அலறினான். சூரையனும் வீட்டுக்காரனும் சகிக்க முடியாமல் “ச்சே” என்று முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள்.
ஆசாரி வலியால் கைகளை உதற ரத்தம் மேலும் பீய்ச்சியது. வெட்டுக்கைகளை மிதித்தபடியே சூரையன் ஆசாரிக்கு அருகில் வந்தான். ஆசாரியின் கட்டைவிரல் நடுங்கிக்கொண்டிருந்தது. நகம் துண்டாகி சதை நைந்திருந்தது. சூரையன் பரிவோடு கடிந்தான். “ஆசாரீக்குப் புத்திகீது கெட்டுப் போச்சா? சுத்தூருக்குள்ள ஆசாரின்னா அது உன்ன மட்டும் தான் சொல்ற மாதிரி. மத்தவங்களுக்கு இது வெறும் தொழிலு. உனக்கு ரத்தம் பாயர நரம்பு. உன்னோட ஒடம்புல இருந்து இந்த வேலையப் பிரிக்க முடியாது பாத்துக்கோ. மனுசனுக்குக் கேடு காலம்னு வரத்தான் செய்யும். அதுக்குன்னு சோந்துட்டா? பேசாம கீழ எறங்கு” என்றான். ஆசாரி கட்டை விரலை வாய்க்குள் வைத்தவாறு மேற்கூரையிலிருந்து அகன்று கொண்டான்.
குறுக்குச் சட்டங்கள் ஒவ்வொன்றாக வீட்டுக்காரனால் மேற்கூரைக்குப் போயின. சூரையன் வெட்டுக்கைகளோடு அவற்றை இணைத்துக்கொண்டு வந்தான். ஆசாரி காயத்திற்குச் சாணிப்புட்டான் செடியைத் தேடிப் போனான். வெயில் மஞ்சள் நிறத்தில் படர்ந்து வந்தது. வீட்டுக்காரி இரவுக்கு அடுப்பைக் கூட்டிக்கொண்டிருந்தாள். வாகை மரத்தின் இலைகள் உதிர்ந்து காற்றுக்கு அலைந்தன. கோம்பைக்குப் பக்கத்தில் சட்டங்களை அடித்துக்கொண்டே சூரையன் நகர்ந்தான். ஓடுகளற்ற வீடு சதையற்ற எலும்புக் கூடுபோல் நின்றிருந்தது.
கொல்லைப்புறத் தாழ்வாரத்திற்கு ஓடுகள் வேய்ந்தால் போதும் என்கிற அளவில் வேலை முடிந்துவிட்டது. இருபுற வெட்டுக்கைகளும் ஒன்றிணையும் முக்கோணச் சந்திப்பில் ஆணிகளை அடித்துக்கொண்டிருந்த சூரையனைச் சுற்றிலும் இருட்டு சூழ்ந்துவந்தது. வீட்டுக்காரன் கோப்பையே பார்த்தான். திசைக்கொன்றாய்க் கிடந்த உளி, சாமான்களைச் சேகரித்து ஆசாரி உளிப் பெட்டிக்குள் சேர்த்தான். இருட்டு நிறமேறிக்கொண்டேபோனது. மேற்கூரையிலிருந்து இறங்கிய சூரையன் வேட்டியை உதறிக் கட்டியவாறு சொன்னான்.
“நாளைக்கி வேல சுத்தமா முடிஞ்சிடும்ங்க. வாசத் தாவாரத்தையும் பிரிச்சு அடிச்சுடலாம். அப்புறமா மொத்த ஓடுகளையும் மேஞ்சா சரியாருக்கும். நாளைக்கி வேற ஆளக் கூட்டிட்டு வர்றேன். ஆசாரீ வரமாட்டாருங்க.” வீட்டுக்காரன் சூரையன் சொல்லியதை ஏற்றுக்கொண்டதுபோல் தெரிந்தது.
கொல்லைப்புறப் பீப்பாயிலிருந்து நீரெடுத்துக் கைகால்களுக்கு ஊற்றினான் சூரையன். ஆசாரி உளிப் பெட்டியைக் கதவின் மூலையில் மறைத்துவைத்தான். இருவரும் மேற்கொண்டு ஏதோவொரு வேலையைச் சொல்வார்கள் என்று வீட்டுக்காரனுக்கு எதிர்பார்ப்பு இருந்தது. சூரையன் வாகை மரத்தில் தொங்கிய சட்டையைப் போட்டுக்கொண்டான். ஆசாரியின் தலை நிமிர மறுத்தது. வீட்டுக்காரனை நோக்கிச் சூரையன் வந்தான். “நாங்க கௌம்பறோம்ங்க. நாளைக்கி நேரத்துலயே எட்டிடுவோம். சரிங்களா? பதிலுக்கு “வாங்க” என்று வீட்டுக்காரன் மனத்திற்குள்ளேயே சொல்லிக்கொண்டான்.
கல்லாமேட்டிற்குள் குறைந்த வெளிச்சம்கூட இல்லை. பாதையில் நடப்போர் இருட்டைத் துருவிக் கொண்டே நடக்க வேண்டும். ஆசாரிக்கு இப்போது பிரச்சினை ஏதும் கிடையாது. இருட்டிற்குள்ளும் பிம்பங்களின் குளறுபடி இருக்குமா எனத் தெரியவில்லை. ஆசாரி சூரையனின் கைகளை ஒட்டியே நடந்தான். மின்மினிகள் பக்கத்துக் காடுகளில் இருந்து எழுந்துவந்தன. ஒளித்துண்டுகள் மழையாய்ப் பொழிந்தது போன்ற நிகழ்வு ஆசாரிக்கு முகிழ்த்தது. அது கண்களின் தவறு என ஆசாரிக்குத் தெரிந்தது. என்றாலும் அதி அற்புதமான அக்காட்சிப் பிழையை மனவெழுச்சிகொள்ள ரசித்துக்கொண்டே வந்தான்.
கல்லாமேடு முடிந்து மணியக்காரர் தெருவிற்குள் இருவரும் நுழைந்தார்கள். தெருவின் நடுவிலிருந்த தேநீர்க் கடையில் கூட்டம் தென்பட்டது. சூரையன் கேட்டான். “ஆசாரீ! டீத் தண்ணி குடிக்கலாமா?”
“ம்” என்றான் ஆசாரி. தேநீர் சொல்லிவிட்டு வெளியில் கிடந்த படுகல்லில் இருவரும் உட்கார்ந்து கொண்டார்கள். கடைக்குள்ளிருந்த வெளிச்சம் பரவலாய் எழுந்து இவர்களுக்கு முன் மங்கியிருந்தது. இருவரும் அருகருகே இருந்ததால் முகம் சற்றே தெரிந்தது. இப்பொழுதும் சூரையனே பேசினான்.
“ஆசாரீ! எம்மேல கோபம்னா நாலு சாத்து சாத்திக்கோ. அதுக்குன்னு மொறப்பு காட்டுனா என்ன அர்த்தம்? பிரச்சினை என்னன்னு சொல்லு. மனசுக்குள்ளையே பூட்டிக்கிட்டா? கண்ணுல கோளாறுன்னா பொள்ளாச்சி போவோம். இப்பத்தான் எல்லா சீக்குகளுக்கும் மருந்து மாத்திர இருக்கே. யாருமில்லைன்னு நெனைக்காத. நானிருக்கேன். மனச வுட்டா போச்சு பாத்துக்கோ. இந்தா கூலியப் புடி.” பணத்தை ஆசாரியின் கையில் திணித்தான். ஆசாரி வெடுக்கென்று சூரையனின் கையை விலக்கினான். “ஆசாரிய மானங்கெட்டவன்னு நெனைச்சியா? செய்யாத வேலைக்கிக் கூலி எதுக்கு? இன்னும் இந்த ஒடம்புல துடிப்பிருக்கு. ஒழச்சுத் திங்கிற சாதியில பொறந்தவன் பாரு. சும்மா வெட்டியா இருந்துட்டு காசு வாங்கித் தின்னா வாந்தியாத்தான் வரும். இந்தப் பொழப்புக்கு வேறாளத் தேடிக்க.” ஆசாரி கொதித்து அடங்கினான். சூரையனுக்குப் பளீரென அறைந்ததைப் போலிருந்தது. சில நொடிகள் உறைந்துபோனான். அதற்குள் தேநீர் வந்துவிட்டது. இருவரும் வாங்கிக் குடித்தார்கள்.
வழி முழுக்க இருவரும் பேசிக்கொள்ளவில்லை. ஒத்தப்பனை முக்கிலிருந்து பிரிய வேண்டிய சூரையன் ஆசாரியின் வீடுவரைக்கும் வந்து திரும்பிச் சென்றான். ஆசாரி வேலிப்படலைத் தள்ளினான். உடம்பெல்லாம் வெட்டுப்பட்டதுபோல வலித்தது. வாழ்நாளில் வேலைக்குச் சென்று முடியாமல் திரும்பியது அதுவே முதல் தடவை. தன்மானம் பறிபோய்விட்ட உணர்வு மேலிட்டது. வீட்டுக்கதவை நீக்கினான்.
வீட்டிற்குள் பாத்திரங்கள் உருண்ட சத்தம் கேட்டது. ஆசாரியின் நுழைவு நடந்ததும் கிடைத்த சந்துகளிலும் மரத்தூண்களிலும் எலிகள் தாவியோடின. சிறிது நேரத்திற்குள் அப்படியொரு பரபரப்பு. இருட்டுக்குள் கைகளால் தப்பி அரிக்கேன் விளக்கை ஏற்றிவைத்தான். பாத்திரங்களில் எழும்பிய ஒலிகள் சன்னமாய்க் கரைந்திருந்தன. மங்கிய வெளிச்சத்தில் சோற்றுப் பருக்கைகள் இறைந்துகிடந்தது தெரிந்தது. ஆசாரி இது வாடிக்கையாய் நடப்பது என்பதால் நாற்காலிக்கு வந்துவிட்டான்.
இப்போது எலிகளின் கீச்சொலிகள் விட்டங்களிலிருந்து கேட்டன. மேற்கூரையின் மீதான பார்வையைத் துண்டித்துவிட்ட ஆசாரி எழுந்துகொண்டான். அரிக்கேன் விளக்கின் வெளிச்சம் அவனுடலில் அங்கங்கு பட்டு விலகியது. அலமாரிக்கு வந்து தகர டப்பா ஒன்றைத் தேடி எடுத்தான். அதில் ஆணிகளும் திருகாணிகளும் அடைந்துகிடந்தன. அரை குறையான வெளிச்சத்தில் நிரவினான். மூன்று அங்குல ஆணி ஒன்று நேரம் கடந்து சிக்கியது. வெளிச்சம் கொஞ்சம் அதிகமாய்ப் பொழிந்த சுவருக்கு எதிரில் போய் நின்றுகொண்டான். ஆணியைச் சுவரில் வைத்துப் பார்த்தான்.
ஆணிக்கு இரண்டு தலைகள், இரண்டு நிழல்கள். இதில் நிஜமான ஆணியை எப்படித் தெரிந்துகொள்வது என யோசித்தான். சுத்தியலை ஓங்கியபோது அடிபட்ட கட்டை விரல் கூச்சமடைந்தது. காலையில் இடது பக்கம் நின்ற தலையைத் தாக்கியதை நினைவுக்குக் கொண்டுவந்தான். எனவே வலது பக்கம் தெரிந்த தலைதான் நிஜமான ஆணியின் தலை எனும் உறுதி கிடைத்தது. அதனால் வலது பக்கத் தலையின் மேல் சுத்தியலின் அடி விழுந்தது. கிளம்பி வந்த மண் துகள்கள் ஆசாரியின் கண்களை அடைத்தன. எரிச்சலில் கசக்கினான். சுத்தியல் ஒரு நாணயம் அளவிற்குச் சுவரில் குழியைப் பறித்துப்போட்டிருந்தது. ஆசாரி உற்றுப் பார்த்தான்.
ஆணியின் மேல் அவன் பார்வை இன்னொருமுறை வந்தது. நடுங்கிக் கொண்டிருந்த கையில் ஆணி நிற்க மறுத்தது. இடது தோள்பட்டைவரை வலி சுருக்கென்று பாய்ந்ததில் துடித்துப்போனான். மீண்டும் ஆணியைச் சுவரில் வலுவாக நிறுத்தியபோது வலித்தது. பொறுத்துக்கொண்டான். இரண்டு தலைகளும் ஒன்று சேரும் நடுமய்யத்தில் அவன் பார்வை குவிந்தது. சுத்தியலின் பிடியை வலது கை அழுத்திக்கொண்டது. ஓங்கி அடித்தான். மூன்று அங்குல ஆணி தற்போதைய அடியில் பாதி சுவரில் புதைந்துவிட்டது. ஆசாரி நிம்மதியில் பெரு மூச்சுவிட்டான்.
வீட்டிற்குள் காலை வெயில் நீண்டுகிடந்தது. கண்கள் நெருடவும் படுக்கையை ஒதுக்கினான் ஆசாரி. கண்களில் பீழை திரண்டு இமைகளைப் பசைபோல் பிடித்திருந்தது. இமைகளைச் சுருக்கி விரித்தான். இமைகள் பிரியாதிருந்தன. அப்படியே எழுந்து தண்ணீர்த் தொட்டிக்கு வந்தான். நீரை அள்ளித் தெளித்து முகத்தைக் கழுவினான். இமைகள் மெல்லத் திறந்தன. கண்ணாடி எங்கே என்ற எண்ணம் வந்தது. அலமாரியின் இடுக்கில் அகப்பட்டிருந்ததை வெளிறிய ரசம் காட்டிக்கொடுத்தது. முகத்தைத் துடைத்துக்கொண்டே கண்ணாடி நோக்கி நடந்தான். கண்ணாடியை எடுத்துத் திருப்பியதும் அவன் முகம் மூன்றாகத் தெரிந்தது. மூன்று முகங்களும் அவனைக் கண்டு புன்முறுவல் புரிந்தன. நடுவிலிருந்த பிம்பமே தன்னுடையது என ஆசாரி குதூகலித்தான்.