இயற்கைக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 28, 2018
பார்வையிட்டோர்: 4,641 
 

நாளை ஞானம் என்கின்ற அஞ்ஞானத்திற்கு பாலிணைவினால் சந்ததி பெருக்கும் சடங்கு.. அதாவது திருமணம். பிறக்கும் போதே தன் பிறப்பை உணர முடியாத, பிண்டத்தோடு அவதரித்து விடுகின்ற மோகம். காமம் என்கின்ற தீராப்பிணி. இறக்கும் போதும் மரிக்க விரும்பாத அதன் அடம். ஞானத்திற்கு அதன் மர்மம் புரியவில்லை. எப்போது அது தன்னோடு இணைந்தது என்பதும் ஞாபகமில்லை. எப்போதும் இருந்ததாகவே அவனுக்கு இப்போது ஞாபகம் இருக்கிறது. அவனுக்கு ஆறு வயதிருக்கும் போது தேவிக்கு நாலு வயது இருந்திருக்கும். அவளை அப்போது தொட்டதில், அதுவோ எதுவோ என்று புரியாது மென்மையாக அது உடலில் பரவியது. அவள் மென்மை அவனை அன்றே அதிசயத்தில் ஆழ்த்தியது. அதற்கு முன்பும் அவன் உடலில் அது இருந்தது. அப்போது தோன்றியதை விட மெல்லியதாகப் புரிந்தும் புரிய முடியாமலும் அது இருந்தது. பிரிந்ததைத் தேடும் அந்தச் சிறிய பித்தின் விளக்கம் அப்போது அவனுக்குப் புரியவில்லை. பித்தின் பெருக்கம் வளர வளர அவனுக்குப் பிரமிப்பை உண்டு பண்ணியது. பித்து மாத்திரமில்லை அவளும் தான் பிரமிப்பை உண்டு பண்ணினாள். சிறுமிக்கும், சிலை போன்ற கன்னிக்கும், மடுவுக்கும் மலைக்குமான வித்தியாசம். பித்தம், ஞானம் என்கின்ற ஞானம் புரியாத ஜடத்திற்கு காம வெறியாக மாறியது. அவள் தனக்குரியவள் என்பதில் அது களி கொண்டது.

யுத்தத்தின் கடைசி காலத்தில் ஓயாத ஆறாக ஓடிய இரத்தப் பெருக்கிலிருந்து தப்பி வந்து, நோர்வேக்குள் அவர்களின் பசப்பிற்கு எதிராக அத்துமீறிப் புகுந்து, எதையோ சொல்லி, அங்கீகரிக்கப்பட்டு, அகதி என்னும் கலியுகத்தின் அபலைகளுக்கான அந்தஸ்தைப் பெற்று, அதன் வசதியில் ஆடம்பரமான வீடு வாங்கி; தாயின் வயிற்றில் தந்தையின் உயிரணுச் சங்கமமான போது, இழந்த பாதியை இப்போது நோர்வேக்கு எடுத்தும்; அவளது சித்தப்பா நரகத்து முள்ளாகக் குறுக்கே விழுந்ததால், தொடமுடியாது துடித்த துடிப்பை அடக்கம் செய்யும் நாள் திருமண நாளாக நாளை மலர இருக்கிறது என்கின்ற மண்டை வெடிக்கும் பூரிப்பு, அதைக் கிழித்துக்கொண்டு கொம்பாக முளைக்கும் ஆர்வத்தில் அவனிடம். இதனால் தன் பித்தம் தெளியும் என்கின்ற அவன் அறியாமையின் உச்சத்தில் விளைந்த அபரிமிதமான ஆணவத்தில் அவன் தன்னை மறந்து, அதில் அற்புத நித்திய தாம்பத்தியம் மலரும் என்கின்ற அண்டத்தை வென்ற அவன் கற்பனை அசுரவேகத்தில் அடி முடி தேடப் புறப்பட்டது.

பெண் ஆணைப் பிரிந்தோ அல்லது ஆண் பெண்ணைப் பிரிந்தோ வாழ முடியாது என்பது; ஞானத்தால் ஒவ்வொரு கணமும் அவள் நினைவை விட்டு வாழ முடியாத, மானிடத் தவிப்பிலிருந்து விடுபடமுடியாத, இயற்கையின் மாயப் பொதுவிதியாக, வேதனையின் தொடர் அழுங்குப்பிடியாக அவனைத் தொடர்ந்தது. அவனிடம் திமிர்த்த வாழ்வின் குறிக்கோளே அவளை அடைவது என்பதான பூவுலக வேள்வியாகியது. அது நிறைவேறும் காலம் இன்று வந்ததில் அவனது நான் என்கின்ற ஆணவம் நிமிர்ந்து பலவானாக மார்பு தட்டியது. அது இறுமாப்பாய் அடங்காத கர்வம் கொண்டது. அகங்காரமாய் அடிக்கடி கொக்கரித்தது.

அவனின் அந்த எண்ணம் இதைவிட உலகத்தில் சாதிப்பதற்கு என்ன இருக்கிறது என்பதாக மமதை கொள்ளவைத்தது.

அவள் போதை தரும் தேவதை. புன்னகை புரியும் நவரசக் கொடியான மாது. நாலடி எட்டங்குல உயரம், நாற்பத்தி ஐந்து கிலோ எடை. மாம்பழ நிறத்தில் தோலின் மினுமினுப்பு.. மான் போன்ற மிரட்சி கொண்ட இரு கருவிழிகளையுடைய அழகிய வதனம். தேன் போன்று தித்திக்கும் இனிய குரல். சிறிய தாமரைக் கைகள். அழகிய வாழைப்பூக் கால்கள். சாயம் இல்லாதும் சிவந்து துடிக்கும் மெல்லிய கொவ்வை இதழ்கள். அதைத் திறந்து சிரிக்கும் போது அவள் முத்துப் பல்லும் தெத்துப் பல்லும் சேர்ந்த அழகாக சிரிக்க, அதற்காக உயிரையும் விடத் துடிக்கும் ஞானத்தின் ஏக்கம். அதுவே சரணமாக… சரணாலயமாக… அழகு… அதைப் பார்ப்பதால் பிறக்கும் அளவு கடந்த மோகம். அதில் மீண்டும் மீண்டும் பிறக்கும் காமம். அதனால் துறக்கும் ஞானம் என்பது ஞானத்திற்குப் புரிந்தாலும் ஞாலத்தின் விதியை வலித்துக்கொள்ளும் துடிப்பே அவனிடம் இவ்வுலக மாயையின் மீதமாக. அதற்கு மேல் இதுவரை அவனிடம் கேள்விகள் இருந்ததில்லை. அவை அவனுக்குத் தேவையானதும் இல்லை. வாழ்கை இயந்திரமயமானது. கடமைகள் நிரையாகக் காத்திருந்து ஓலமிட, காலங்கள் புயலாக கடந்து போகும் கொடுமை.

*

திடீரென “என்னடி ராக்கம்மா” என்று அலைபேசி தன்னை எடுக்குமாறு அழைத்தது. மீண்டும் மீண்டும் அது அவனிடம் மன்றாடியது. ஞானம் சலிப்போடு அதை எடுத்தான். தொலைபேசி அழைக்காத ஒரு அமைதி எப்போதும் தன்னைச் சுற்றி இருக்க வேண்டும் என்று அவன் விரும்புவான். அதைத் தவிடு பொடியாக்குவது போலத் தொலைபேசி வந்தால் அவனுக்குப் புண்ணில் தூள்பட்ட எரிச்சல் வரும். இருந்தும் தொலைபேசி இல்லாது இன்று இவ்வுலகில் ஒரு வாழ்கை இல்லை என்பதும் அவனுக்குப் பரியும். அவ்வுலகில் எப்படி என்பது அவனுக்குத் தெரியாது. இவ்வுலகில்… இப்போது… மனைவி இல்லாது கணவன், அல்லது கணவன் இல்லாது மனைவி வாழ்ந்துவிடலாம். தொலைபேசி இல்லாது யாரும் வாழ்ந்துவிட முடியாது. மனிதனை அடிமையாக்கிய மனிதக் கருவிகளின் மகத்துவமான நாட்கள் இவை. மனிதன் இழந்த பாதியை விட இது இப்போது முக்கியமாகிவிட்டது.

மறுமுனையில் சுரேஸ் மிகவும் கவலையோடும், பதட்டத்தோடும் கதைத்தான். அவன் சொன்ன வார்த்தைகளை ஞானத்தால் நம்ப முடியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பும் நகுலனைப் பார்த்துக் கதைத்தான். அது அந்த ஷைரோப்பிறைஸ் என்கின்ற கடையடியில் நடந்தது. அவனது முகம் இருண்டு கிடந்தது. அவன் வாழ்வின் திசை மாறிவிட்டது. மனங்களில் ஏற்படும் வெடிப்புக்களை ஒரு போதும் ஒட்ட முடிவதில்லை. அது நாளடைவில் விரிசல்களாகி, மடுக்களாகித் தாண்ட முடியாத தடைகளாகிவிடுகின்றன. வசனங்கள் வற்றிவிட வன்மங்கள் மட்டும் பெருகிவிட, மௌன நாடகம் ஒன்று அவர்கள் அந்தரங்க வாழ்வில் அரங்கேறுகிறது. அடம்பிடித்து இடம் பிடிக்கிறது.

வாழ்வின் பொருத்தம், விருப்பு, அரவணைப்பு, அன்பு, இருப்பு, என்று அனைத்தும் வெடித்தாலும் அதைவிட்டு வெளியே வருவதற்குத் துணிவற்ற ஆயிரமாயிரம் மனிதர்களில் அவனும் ஒருவன். ஆற்றாமையில் வேகும் ஜென்மங்களின் முடிவிலியான தொடராக…

இன்றும் விடுபடமுடியாத யோசனையோடு காலையில் வேலைக்குச் சென்ற போது ஷறாமை கவனிக்காது அதன் முன்பு சென்று விழுந்து எல்லோருக்கும் முன்னே இறைவனிடம் சேர்ந்து விட்டான். கூட்டில் சிறைபட்ட ஆத்மாவிற்கு விடுதலையா? அல்லது ஆத்மாவின் வயப்பட்ட கூட்டிற்கு வேதனையிலிருந்து மோட்சமா? என்பது புரியும் முன் அவனின் இவ்வுலக அடையாளம் அழிய, உயிர் பிரிந்துவிட்டது.

நாளை ஞானத்தால் அவனது மரண தரிசனத்திற்குப் போக முடியாது. இன்று பிற்பகல் ஷறிக்ஸ் கொஸ்பிற்றலில்| அவன் பிரேதம் பார்வைக்கு வைக்கப்படவிருக்கிறது. அங்கு போவதற்கான அழைப்பையே சுரேஸ் விடுத்தான். அவன் ஆத்மாவிற்கு நாறும் பிண்டத்தில் இருந்து நற்கதி கிடைத்துவிட்டது. அந்த நாறும் பிண்டத்தை உயிரோடு இருக்கும் வரைக்கும் போற்றுவதும் இறைப் பணி என்பதும் அவனுக்குப் புரிந்தது.

*
அது வைத்தியசாலையில் இருக்கின்ற சிறிய, வாழ்க்கை முடிந்த பின் வாழ்வைப் பற்றிக் கதைக்கும் பிரார்த்தனை மண்டபம். பல ஆயிரம் வாழ்வின் தொடக்கமும் பல ஆயிரம் வாழ்வின் முடிவும் இந்த மருத்துவமனையின் சம்பவங்களாகும். அவை இங்கு விரைவாக மறக்கப்படும். கோடானு கோடியில் இவையும், நாங்களும் சில துரும்பான துளிகள் என்பதுதான் சர்வ நிதர்சனம். அது இன்று ஞானத்திற்குப் புரிந்தது. ஆத்மாக்களின் கூடுகளுக்கான சடங்குகள் இங்கு நடக்கும். ஆத்மாக்கள் ஆண்டவனின் கூற்றுப்படி அழிவில்லாதவை.

ஆத்மா பிரிந்த அந்தப் பிண்டத்தை அழகுபடுத்திப் பெட்டியில் வைத்திருந்தனர். அந்தப் பிண்டத்தின் மனையாளாய் வாழ்ந்தவள் எந்த உணர்ச்சிகளுக்கும் ஆட்படதவளாய் ஒரு மூலையில் மரம் போல நின்றாள். அவளுக்குள் இருந்த ஞானமா, வெறுப்பா ஏதோ ஒன்று அதற்குக் காரணம். அவன் பிள்ளைகள் உள்ளே நிற்க முடியாத அவஸ்தையில் வெளியே சென்று விட்டார்கள். இவர்களுக்காக நகுலன் இரண்டு வேலை செய்து சம்பாதித்தான். ஓய்வில்லாது ஓடி ஓடி வேலை செய்தான். உண்ணவும், ஓய்வெடுக்கவும் நேரமின்றி கடமையாற்றினான். கரும யோகத்தை அவன் முழுமையாகக் கடைப்பிடித்தான். நித்தியம் என்கின்ற மாயையை நம்பி ஓயாது ஓடினான். இயற்கைக்கு எதுவும் நித்தியம் இல்லை. அது நித்தியமாக்கியதில் மாற்றம் ஏதுமில்லை. அதன் மாய வலைக்குள் அகப்பட்ட உலக ஜீவராசிகள் அனைத்தும் அதன் கட்டளைகளைப் புரிந்துகொள்ள முடியாது, மீற முடியாது, தலைமேற்கொண்டு சேவகம் செய்கின்ற அற்ப ஜந்துக்கள். அதற்காகவே அவை ஒவ்வொரு கணமும் வாழத் துடிக்கின்றன. அது ஆண் என்கின்றது. பெண் என்கின்றது. அவை ஒன்று சேர்ந்து சந்ததி என்கின்றன. அதற்காகவே ஞானிகள் என்று எண்ணி மூடர்களாய் வாழ்ந்து மடிகின்றன. இயற்கையின் கட்டளைக்காக, அதன் மாயத்தை நம்பி, அதற்காக வாழ்ந்து மடிந்து போகும் கோடானு கோடிகளில் நகுலன் இன்று ஒருவன். அவன் பணி முடிந்துவிட்டது. இயற்கை தான் பெற வேண்டியதை அவனிடமிருந்து பெற்றுவிட்டது. இனி அவன் சந்ததியிடமிருந்து பெறவேண்டியதையும் அது பெறும். அது கோடானு கோடி ஆண்டுகளாக அந்த யுக்தியை அபிவிருத்தி செய்து வைத்திருக்கிறது. அதன் பலனை எந்தத் தயவு தாட்சண்யமும் இல்லாது பெற்றும் வருகிறது.

ஞானத்திற்குத் தலை சுற்றியது. எதற்கு இத்தனை ஓட்டங்கள்? இத்தனை பிரயத்தனங்கள்? இயற்கையிடம் பலியாகும் அற்ப ஜந்துக்களாய் இருப்பது புரியாத, ஞானமற்ற அற்ப மானிடர்கள் அல்லவா நாங்கள்? இந்த உலகத்தில் வாழுகின்ற நாங்கள் புதைந்த அர்த்தம் புரிய முடியாத மூட ஜிவராசிகள் அல்லவா? எம்மை வாழவைக்கும் தாவரங்கள், மிருகங்கள், பறவைகள், மனிதர்களாகிய நாங்கள் அனைவரும் இயற்கைக்குச் செய்யும் அற்பணிப்பா அல்லது பலியா இந்தப் பூவுலக வாழ்கை? ஏதோ ஒன்று. இந்த இயற்கையின் பலியெடுப்பில் நானும் ஒரு மூட ஜந்து என்கின்ற உண்மை அவனுக்குப் புரிந்தது. நாளை நடக்கும் திருமணத்தின் மூலம் இந்த மூட ஜந்துவும், இயற்கை விதித்த பணியைத் தொடங்கப் போகிறது என்பது அவனுக்குப் புரிந்தது. இதுவே படைப்பின், பிறப்பின், இந்த அவதாரத்தின் இரகசியமா என்கின்ற தோல்வியான எண்ணம் அவனிடம் விஸ்வரூபம் கொண்டு எழுந்தது.

*

செத்த வீட்டிலிருந்து தன் வீட்டிற்கு வந்த ஞானம் என்றும் இல்லாதவாறு இன்று அமைதியாகக் குளித்தான். என்றும் இல்லாதவாறு இன்று தொடர்ந்து ஆறுதலாகச் சாப்பிட்டான். எதற்காகவோ வாழ வேண்டாம், என்கின்ற தீர்க்கமான முடிவோடு கைத்தொலைபேசியை எடுத்தான்.

– திசெம்பர் 12, 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *