இப்படி நடந்தால்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 24, 2023
பார்வையிட்டோர்: 1,247 
 

எல்லா மத கடவுள்களின் பிரதிநிதிகள் கூடி பேசி மனுசனுக்கு ஒரு வசதியை ஏற்படுத்தி கொடுக்கணும்னு முடிவு பண்ணுனாங்க. அது என்னன்னா காலம் ஓடி கிட்டே இருக்கறதுனால அவனுக்கு வயசும் ஆயிடறது, அப்ப அவன் நினைச்சா கூட அவனோட பழைய இளமை வாழ்க்கைக்கு போக முடியாது. வேணா கனவா நினைச்சு பாத்துக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில இருக்கற “பெருசு” முதல் “இளசு” வரைக்கும் “சே அந்த காலத்துல” “நான் அப்படி இருந்தேன்” பெருசு சொல்ல, இளசு, நான் சின்ன பையனா இருக்கும்போது? இப்படி சொல்லிக்கிட்டே இருப்பாங்க.

இவங்களுக்கெல்லாம் எல்லா கடவுள்களின் பிரதிநிதிகள் ஏற்படுத்திக்கொடுத்த வசதி என்னன்னா இனிமே அவங்க எந்த காலத்தை நினைச்சு பார்க்க விரும்பறாங்களோ அந்த காலத்துக்கு போயிட்டு ஒரு மணி நேரத்துல திரும்பி வந்துடலாம். அப்ப இங்க அவங்க ஜடமாட்டவும், அவங்க நினைக்கிற காலகட்டத்துல அவங்க உருவம் செயலபடற மாதிரியும் (அதாவது கூடு விட்டு கூடு பாயறதுன்னு வச்சுக்குங்களேன்) ஆனா மாசத்துக்கு ஒரு தடவை மட்டும்தான் அப்படீங்கற மாதிரி வசதி பண்ணி கொடுத்துட்டாங்க.

நல்லா கவனிச்சுக்குங்க, இது மனுச ஜென்மங்களுக்கு மட்டும்தான். நீங்க அந்த காலத்துல ஒரு நாயை வளத்துனேன், அது ஒரு வருசத்துல செத்துப்போச்சு இப்ப போய் அதை பாக்கணும்னு நினைச்சிங்கன்னா சாரி. நீங்க வேணா அந்த காலத்துக்கு போலாம், ஆனா நாய் வராது. அதே மாதிரி செத்து போன மனுச ஜென்மம் நீங்க போற காலத்துல உயிரோட இருந்திருந்தாங்கன்னா வருவாங்க, ஒரு மணி நேரம் கழிச்சா அவங்க மறுபடி மறைஞ்சு போயிடுவாங்க. இன்னொன்னையும் சொல்லிடறோம், அந்த காலத்துல அப்ப என்ன நடந்துச்சோ அது மட்டும்தான் நடக்கும். இப்ப உயிரோட இருக்கற மனுசனை நீங்க நினைக்கிற காலத்துல வர்றதா இருந்தா தாராளமா வருவாரு. ஆனா அது அவரோட நிழல்தான். ஏன்னா இங்க அவர் செயல்பட்டுட்டுதான் இருப்பாரு. (குழப்பறதா நினைக்காதீங்க, இது இறந்து போனவங்களோட கொஞ்ச நேரம் பேசி கழிச்ச சந்தோசத்தை கொடுக்கறதுக்காக மனுசனுகளுக்கு கடவுள் கொடுக்க நினைச்ச உதவி அவ்வளவுதான்).

மனுசனுக்கு மட்டும் கிடைச்ச இந்த வாய்ப்பை எப்படி பயன்படுத்திகிட்டாங்க அப்படீன்னு பாருங்க.


ராசப்பனுக்கு இன்னைக்கு முகூர்த்தம் முடிஞ்சு இராத்திரி ஒன்பது மணி இருக்கும் தன்னோட அறையில இருந்து ஜன்னல் வழியா முன் அறையில சொந்தக்காரங்களோட நிக்கற பொண்டாட்டிய அப்பப்ப இரகசியமா பார்த்து பெருமூச்சு விடறான்., சும்மா சொந்தமும் பந்தமும் வந்துகிட்டும் போயிட்டும், அப்பப்பா இவனுக்கு சலிப்பே வந்துடுச்சு, எப்படா தனியா நம்ம பொண்டாட்டிய கொஞ்சுவோம் அப்படீன்னு ஏகாந்தியா தவிக்கிறான்.

அப்பாடி ஒரு வழியா ஒன்பதரை மணி அளவுல அறைக்குள்ள பொண்டாட்டிய அலங்கரிச்சி அனுப்பிச்சாங்க, ராசப்பனுக்கு அதுவரைக்கும் இருந்த தைரியமெல்லாம் போய் கொஞ்சம் நடுக்கம் கூட வந்துடுச்சு.பக்கத்துல வந்த பொண்டாட்டி அவன் காலை தொட்டு நமஸ்கரிச்சுட்டு எழுந்து நிக்கறா. அவன் அப்படியே அவ பக்கத்துல போறான். அவ வெட்கத்தோட பக்கத்துல இருக்கற பால் சொம்பை காட்டறா, ஓ பால்தானே சொல்லிவிட்டு எடுத்து குடிச்சுட்டே ஓரக்கண்ணாலே அவளை இரசிச்சு பாக்கறான்…பாக்க….பாக்க. அதுக்குள்ளே ஒரு மணி நேரம் ஓடிருச்சு அவ அப்படியே மறைஞ்சு போயிடறா!

தாத்தா..தாத்தா..யாரோ பிடித்து உலுக்க சட்டென விழிப்பு வந்து மிரள மிரள விழிக்கிறார் ராசப்பன். அப்படியே உறங்கிட்டியா? நான் வேற மாதிரி நினைச்சுட்டேன். சொல்லிக்கொண்டே பேரன் காலை வீசி நடந்து போகிறான். சே இந்த கடவுள் ரொம்ப மோசம் ஒரு மணி நேரம்தான் கொடுக்கறாரு, நம்ம பொண்டாட்டி கூட மறுபடி கூடி இருக்கலாமுன்னா முணங்கிக்கொண்டே திண்ணையிலேயே சுருண்டு படுத்து அடுத்த மாதத்திற்கு காத்திருந்தார் ராசப்பன் கிழவன்.


மந்திரி வீடு!

ஏண்டி நீ மந்திரியோட பொண்டாட்டி, போயும் போயும் நம்ம ஊரு ராசு பொண்டாட்டி கூட உட்கார்ந்து அரட்டை அடிச்சுகிட்டு இருக்கே? யோவ் நான் உன்னைய கல்யாணம் பண்ணும்போது நீ ராசண்ணன் வூட்டுலதான் மாடு மேய்ச்சுகிட்டிருந்தே. அவங்கப்பந்தான் அவங்க தோட்டத்துலயே வேலை செஞ்ச எங்க அப்பாருகிட்டே பேசி பையன் புழைச்சுக்குவான் அப்படீன்னு சொல்லி என்னை உனக்கு கட்டி வச்சாரு,

மந்திரியாம் மந்திரி, எனக்கு அன்னைக்கும் இன்னைக்கும் நீ மாட்டை குளிப்பாட்டி கிட்டிருந்த புருசந்தான், அந்தம்மா பட படவென பேசி விட்டு நகர மந்திரி சட்டென திகைத்து அவரது அந்த வாழ்க்கைக்கு தன் நினைவை கொண்டு சென்றார்.

ராசு அண்ணனின் அப்பா, கோமணத்துடன் மாட்டை குளிப்பட்டிக்கொண்டிருந்த மாசிலாமணியை பார்த்து  டேய் மாசி மாட்டை பத்திட்டு போனமா, வந்தமான்னு இருக்கணும், அவங்க காட்டுல மேய்ஞ்சுடுச்சு இவங்க காட்டுல மேஞ்சுடுச்சுன்னு வம்பு வரப்பாடாது சொல்லிப்புட்டேன், அதுக்கப்புறம் மனுசனா இருக்க மாட்டேன். சரிங்க ஐயா, ஏலே ராசு நீ எங்கடா தொலைஞ்சு போன? ஸ்கூலுக்கு நேரமாகலையா? இதா கிளம்பிகிட்டு இருக்கேனுங்க !

ராசு மாசிலாமணி கூடவே நடந்து செல்கிறான், உன் பாடு பராவில்லை மாசி. போனமா மாடுகளை பத்தி விட்டமா, அக்கடான்னு ஒரு மரத்துக்கடியில் உட்கார்ந்துட்டு பொழுதை போக்குனமான்னு இருக்கறே, என்னைய பாரு எங்கப்பன் படி படின்னு உயிரை எடுக்கறார், நல்லாத்தான் படிப்பு ஏறுது இருந்தாலும் மனுசனுக்கு சுதந்திரம் வேணுமில்லை.

மாசி. ஏங்க, நீங்க பரவாயில்லை ஸ்கோலுக்கெல்லாம் போறீங்கண்ணு நான் நினச்சுகிட்டு இருந்தா நீங்க என்னடான்னா இப்படி சொல்றீங்க? ம்..அவங்கவங்களுக்கு அவங்கவங்க பிரச்சினை, சாயங்காலம் நான் மாட்டை கூட்டி வந்துட்டு  எங்க தலைவரு கூட்டத்துக்கு போலாமுன்னு இருக்கேன், நீங்க வாரீங்களா? எனக்கு ஆசைதான் மாசி, அந்த மாதிரி கூட்டமுன்னா எப்படியிருக்குமுன்னு, ஆனா எங்கப்பா விட மாட்டாரே, படி படின்னு உசிரை எடுப்பாரு.. அவரவர் பாதையில் பிரிகிறார்கள்.

சட்டென யாரோ உலுக்க படக்கென விழிக்கிறார் மந்திரி. என்னாச்சு, நான் மாடுன்னு சொன்ன உடனே அதுமாதிரி நின்னுகிட்டு இருக்கீங்களோன்னு நினைச்சேன். மனைவியின் நக்கல்.


தன்னுடைய பையனுக்கு மணம் பேசிகிட்டிருக்கும் ஒரு தகப்பன், ஐயா எனக்கு காசு பணம் எல்லாம் முக்க்கியமில்லை, உங்க பொண்ணுக்கு நீங்க செய்யாமயா போயிடுவீங்க? இவ்வளவு கொடு, அவ்வளவு கொடுங்கற கேட்கற எண்ணமெல்லாம் எனக்கு கிடையாது, உங்களுக்கு எவ்வளவு கொடுக்கணும்னு தோணுதோ அவ்வளவு கொடுங்க, யாருக்கு கொடுக்க போறீங்க, உங்க மக குடும்பத்துக்குத்தானே? வாழைப்பழமாய் வரதட்சணையை கேட்டுக் கொண்டிருந்தார். அமைதியாய்  அருகில் உட்கார்ந்திருந்த அவர் மனைவி திடீரென அவள் அப்பாவிடம் இவரின் அப்பா கேட்டுக்கொண்டிருக்கும்போது இவர் எப்படி உட்கார்ந்திருந்தார் என்பது ஞாபகம் வந்து தொலைத்தது.

இங்க பாருங்க, எங்க பையன், பெரிய படிப்பு வரை படிச்சிருக்கான். அது என்னடா படிப்பு ? எஸ்.எஸ்.எல்.சி. ம்.கேட்டுக்குங்க, இவ்வளவு படிச்சதுமில்லாமா சென்ட்ரல் கவர்மெண்டுல வேலை செய்யறான். அது என்ன வேலைடா?  பியூன்ப்பா. அப்படீன்னா? அதாம்ப்பா அலுவலக உதவியாளர். அப்படீன்னா? மீண்டும் பெண்ணின் அப்பா புரியாமல் கேட்க அந்த ஆபிசே என் கண்ட்ரோல்லதான் இருக்கும், காலையில நான் திறந்தாத்தான் ஆபிசுல வேலையே நடக்கும். பெருமையாய் சொல்ல அப்படியா என்று பெண்ணின் அப்பாவும், உள்ளிருந்து இவளின் அம்மாவும், இவளும் வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தனர். சரி சரி நம்மை பத்தின பெருமை எல்லாம் இப்ப எதுக்கு? இருபது பவுன் நகையும், பையனுக்கு ஒரு ஸ்கூட்டரும், அப்புறம் என்னடா? கையில ஒரு இருபதாயிரம் கொடுத்தா பக்கத்துல ஒரு சைட் வருது, அதை வாங்கி போட்டுடலாம்.

என்ன பையன் சொல்றது புரியுதா ? இப்ப இவரின் அம்மாவும் சேர்ந்து கொள்ள இவளின் அப்பா கையை பிசைந்து கொண்டு, நீங்க கேட்டதெல்லாம் செஞ்சிடறேன், ஆனா அந்த இருபதாயிரம் மட்டும் ஒரு ஆறு மாசம் டைம் கொடுங்களேன். திடீரென இவர் சீறிக்கொண்டு ஏங்க நீங்க கொடுக்கறது எனக்கில்லை, உங்க பொண்ணுக்குத்தான், நாளைக்கு அவளே அங்க வீடு கட்டி குடி போகறதுக்குத்தான்.

சரிங்க தம்பி புரியுது, கொஞ்சம் பண முடை அதுதான் யோசிக்கறேன், உள்ளிருந்து இவளின் அம்மா கூப்பிட்டு ஏதோ சொல்ல, அவரும் வெளியே வந்து சரிங்க, செஞ்சிடலாம் வருத்ததுடன் ஒத்துக்கொண்டு அவர்களை வழி அனுப்ப வாசலுக்கு செல்வதை இவள் வருத்ததுடன்  பார்த்தாள்.அப்பாவை சிரமப்படுத்துகிறோமோ?

எந்திரி போலாம், இவங்க ஒத்து வர்ற மாதிரி தெரியலை, கையில ஒரு லட்சத்து பத்தாயிரம் கொடுங்கன்னா, ஒரு லட்சத்தி அஞ்சாயிரம்தான்  கொடுப்பாங்கலாம், முணங்கிக்கொண்ட கணவன் தன் தோளை தட்ட சட்டென தன் கனவு கலைந்து படக்கென எழுந்தாள் அவரின் மனைவி.


வாகனம் ஓட்டுவது முதல், கப்பல், ஆகாய விமானம் ஓட்டுபவர்கள் வரைக்கும், இப்படி ஒவ்வொரு மனித கதாபாத்திரமும் சட்டு சட்டென பழைய நினைவுகளுக்குள் போய், மனித உலகம் அடிக்கடி ஸ்தம்பித்து நின்று விடுவதாக ஏகப்பட்ட புகார்கள் கிளம்ப, அது மட்டுமல்லாமல் இந்த உலகை நீத்து விட்ட மனிதர்கள் இந்த நினைவு அனுமதியினால் அடிக்கடி எழுந்து வந்து பூமியில் மனித, ஆன்மா நெருக்கடியை உருவாக்குவதால், மீண்டும் எல்லா கடவுளர்களின் பிரதிநிதிகள் கூடி வேண்டாம் மனிதனுக்கு பழைய நினவுகளுக்கு அவன் போனாலும், வெறும் கனவுகளாக மட்டுமே தென்படட்டும், இதில் அவனை எழுப்பி வரவழைப்பது சுலபம் என்று முடிவு செய்து, கொடுத்திருந்த வசதியை வாபஸ் வாங்கிக்கொண்டன.

ஆகவே இப்பொழுதெல்லாம் நாம் வேண்டுமானால் “அந்த காலத்துல” என்று பெருமூச்சு விட்டு கனவை மட்டும் கண்டு கொள்ளலாம், மறைந்து போன ஆத்மாக்கள் நம்முடன் ஆத்மார்த்தமாக பேச முடியாது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *