இட்லி, சட்னி, வேட்டி சட்டை
1982இல் தமிழக மந்திரி சபையில் இராஜாஜி அவர்கள் முதல்வராக இருந்தபோது, இந்தி கட்டாய பாடம் ஆக்கப்பட்டது. அதற்குத் தமிழ்நாடு முழுதும் கொதித்து எழுந்து பெரும் போராட்டம் நடைபெற்றது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினால் பெரியார் பல்லாரிச் சிறையில் இருந்தார். அதை நடத்தவேண்டிய முழுப் பொறுப்பும் நான் ஏற்கவேண்டி நேர்ந்தது.
சட்டசபையில், ராஜாஜி ஒருநாள். ‘தமிழ் என்றால் இட்லி; இந்தி என்றால் சட்னி; இரண்டையும் கலந்து சாப்பிடுவதுதான் நல்லது’ என்றார்.
மற்றொருநாள், “தமிழ் என்றால் வேட்டி; இந்தி என்றால் சட்டை இரண்டையும் போட்டுக் கொள்வது தான் தமிழ் மக்களுக்கு நல்லது” என்றும் கூறுனார்.
அடுத்த நாள் திருவல்லிக்கேணியில் பெரிய கூட்டம் – மக்கள் திரண்டு நின்றனர்.
அந்த உவமைகளைப் பற்றி
மேடையில் நான் எழுந்து,
“சட்னி இல்லாமலே இட்லியைச் சாப்பிட்டாலும் சாப்பிடலாம்; இட்லியே இல்லாத போது சட்னியை எப்படி, சாப்பிடுவது?” – என்றும்
“சட்டை இல்லாமல் வேட்டியைக் கட்டிக்கொண்டு வீதியில் போகலாம்; ஆனால் வேட்டி இல்லாமல் சட்டையை மட்டும் போட்டுக்கொண்டு விதியில் எப்படி நடப்பது? – என்றும் கூறினேன்.
அதன் பிறகு –
அதிலிருந்து ராஜாஜி அவர்கள் இந்த உவமைகள் கூறுவதை விட்டுவிட்டார்,
அந்த ராஜாஜி அவர்களே –
1965 – திருச்சிராப்பள்ளியில் நான் கூட்டிய இந்தி எதிர்ப்பு மாநாட்டில் வந்து கலந்துகொண்டு, பலமாக இந்தியை எதிர்த்துப் பேசினார். அது நாட்டில் பெரும் வியப்பை உண்டாக்கியது.
– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை