இந்தியை ஆதரிப்பேன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 29, 2020
பார்வையிட்டோர்: 8,674 
 
 

அந்த இளைஞன் திராவிடக் கட்சிகளின் மீது கடும் கோபம் கொண்டிருந்தான். ஏனென்றால் இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து, திராவிடக் கட்சிகள் செய்த போராட்டங்களால் இந்தி மொழி இந்தி பேசாத மாநிலங்களில் இருந்து விரட்டப்பட்டதேயாகும். அதன் விளைவாக அந்த இளைஞனால் இந்தி படிக்க முடியவில்லை, அதனால் அவனால் இந்தி பேசுகின்ற மாநிலங்களுக்குள் சென்று விட்டு, மகிழ்ச்சியாகத் திரும்பி வர முடியவில்லை. இந்தி பேசத் தெரியாதவன் என்ற ஏளனத்தோடு மட்டுமே அவனை இந்தி பேசுகிற மக்கள் பார்த்திருக்கிறார்கள். இது அந்த இளைஞனுக்கு பெரும் அவமானமாக இருந்து வந்தது. அதனால் இந்தியை பள்ளிப் பாடங்களில் நுழைய விடாமல் தடுத்த திராவிடக் கட்சிகளின் மீது அவனுக்கு கடுங்கோபமும் ஆதங்கமும் இருந்து கொண்டே வந்தது.

இந்திக்கேற்றார்போல ஒரு அரசாங்கம் இந்திய நாட்டில் அமைந்தது. அவனுக்குப் பெரும் மகிழ்ச்சி உண்டானது.திராவிடக் கட்சிகள் எவ்வளவோ எதிர்த்தும் இந்தி இந்தியாவில் உள்ள அத்தனை பள்ளிகளிலும் கட்டாயப் பாடமாக்கப்பட்டது. இந்தப் போரில் திராவிடக் கட்சிகள் தோற்றுப் போனது, இந்தி வென்றது.

இந்தியை விரும்பிய அந்த இளைஞனுக்குத் திருமணமானது. திருமணமான மூன்றாண்டுகளுக்குள் ஆணொன்றும் பெண்ணொன்றுமாய் இரண்டு குழந்தைகளை முத்தாய்ப்பாய்ப் பெற்றெடுத்தாள், அவன் மனைவி. குழந்தைகள் பெரிதாகின. பள்ளி செல்லும் பருவத்ததைத் தொட்டன. அரசுப் பள்ளியிலே போய்ச் சேர்த்தான்.

அவனுக்கு இப்போது விண்ணை முட்டுகின்றளவிற்குப் பெருமகிழ்ச்சி. தான் படிக்காத இந்தி, தான் அவமானப்படுவதற்குக் காரணமான இந்தி மொழி தன் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது. பிள்ளைகள் அப்பா என்று அழைப்பமற்குப் பதில் “பிதாஜி” என்று அழைத்தார்கள். அவனுக்கு மகிழ்ச்சி கொள்ளவில்லை. அவன் ஊரில் இருந்த திராவிடக் கட்சியினரைப் பார்த்து கடிந்து கொண்டு வந்தான். தன் பிள்ளைகள் இந்தி பேசுவதை அவர்களிடம் தூக்கிக் கொண்டுபோய்க் காட்டி மகிழ்ச்சி அடைந்தான்.

பிள்ளைகள் பள்ளிப் படிப்பை முடித்தன. அந்த நேரத்தில் இந்தி இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கட்டாய மொழியாக்கப்பட்டு கிட்டத்தட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளைத் தொட்டிருந்தன. பள்ளியில் மட்டுமே கொண்டு வந்திருந்த இந்தி, அந்த நேரத்தில் ஆட்சி மொழியாக்கப்பட்டு இருந்தது. ஆங்கிலம் இரண்டாம் இடத்தில் தாய்மொழி மூன்றாம் இடத்திலும் இருந்தது. அவன் வீட்டு தொலைபேசி இணைப்பைச் சரிசெய்யக் கூட அப்போது இந்தியில் தான் பி.எஸ்.என்.எல் அலுவலகத்துக்குக் கடிதம் எழுதவேண்டும் என்கின்ற அளவிற்கு இந்தி பெரும் வளர்ச்சி அடைந்திருந்தது. அவரும் தன் பிள்ளைகள் இந்தியில் கடிதம் எழுதுவதைக் கண்டு பெரும் மகிழ்ச்சியில் திழைத்தார்.

தன் பிள்ளைகளுக்கு இந்தி தெரியும், அவர்களை எப்படியாவது மத்திய அரசுப் பணியில் அமர்த்திட வேண்டும் என்றெண்ணம் கொண்டு தன் பிள்ளைகளை மத்திய அரசுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வைத்தான். தேர்விற்கு இந்தி மொழியிலே நன்றாகப் படித்தார்கள். தேர்வெழுதினார்கள் தேர்ச்சி பெறவில்லை. அடுத்த தேர்வில் பார்ப்போம் என்று அடுத்து எழுதினார்கள் அதிலும் தேர்ச்சி பெறவில்லை. பத்துக்கும் மேற்பட்ட தேர்வெழுதி, ஒவ்வொன்றிலும் தோல்வியே மிச்சமானது.

அவர்களோடு படித்த அத்தனை மாணவர்களுமே, தோல்வியைத் தான் சந்தித்தார்களே தவிர, யாரேனும் ஒருவராவது வெற்றி பெற்றிருக்கிறார்களா என்று சல்லடை போட்டுச் சலித்துப் பார்த்தாலும் யாரும் சல்லடையில் நிற்கவில்லை. ஆனால் அதற்கு நேர்மாறாக இந்தி பேசுகின்ற மாநிலத்து மாணவர்கள் எல்லாம் வெற்றியைக் குவித்து வேலைகளில் சேர்ந்து சம்பளங்களைக் குவிக்கலாயினர். ஆனால் அவருடைய பிள்ளைகள் தேர்வை மட்டும் தான் எழுதிக் கொண்டிருந்தார்கள் தேர்ச்சி பெற முடியவே இல்லை.

வடமாநிலத்துப் பிள்ளைகள் எல்லாம் தேர்ச்சி பெறுகின்றனரே, தம் மாநிலத்துப் பிள்ளைகளால் மட்டும் ஏன் அதிகம் தேர்ச்சி பெற முடியவில்லை என சிந்திக்கத் தொடங்கினான். அப்போது தான் அவனுடைய முடங்கிக் கிடந்த மூளை முழிக்கத் தொடங்கியது.

தம் பிள்ளைகள் இந்தியைத் தாய் மொழியாகக் கொண்ட மாணவர்களோடு போட்டியிட்டால் எப்படி வெற்றி பெற முடியும், முடியாது தானே,. என்னதான் இருந்தாலும் நம் பிள்ளைகளுக்கு இந்தி எடுப்பு மொழி தானே, என்று எண்ணலானான்.

இந்தி ஆட்சி மொழியாக்கப்பட்ட போது அடைந்த சந்தோசத்தை எண்ணி பெரும் துன்புற்றார். திராவிடக் கட்சிகளை இழிவாகப் பேசியதை நினைத்து வருந்தினார். இதற்கொரு முடிவுகட்ட முன் வந்தார்.

தன் பிள்ளைகளுக்கு 1960 களில் நடந்த மொழிப்போர் குறித்த வரலாறுகளைத் தேடி எடுத்துக் கொடுத்தார். அவர்களும் இந்தியை எதிர்க்கத் துணிந்தார்கள். தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், கலைஞரும், ஏன் ராசாசியும் கூட இந்தியை எதிர்த்துப் பேசிய பேச்சுக்களைத் தொகுத்தார்கள் மாணவர்கள்.

“இந்தியை விரட்டுவோம்” இந்தியை விரட்டுவோம்” என்ற குரல் இந்தி பேசாத மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் ஒலிக்கத் தொடங்கியது. இந்திக்கு எதிராக பெரும் போர் மூண்டது. மாணவர்கள் மத்தியில் இன்னொரு அண்ணாவும், இன்னொரு கலைஞரும், இன்னொரு கோபால்சாமியும், இன்னொரு பே.சீனிவாசனும் புடம்போடப்பட்டார்கள்.

இறுதியில் இந்தி மொழி இந்தி பேசாத பிற மாநிலங்களில் இருந்து திரும்பப் பெறப்பட்டது.

ஆட்சி மொழியாக்கப்பட்டதற்கும், திரும்பப் பெறப்பட்டதற்கும் இடையேயுள்ள ஒரு தலைமுறை மத்திய அரசுகளில் காலூன்ற முடியாமல் போனது. இந்தியைக் கொண்டு வந்த போது மகிழ்ந்த இளைஞனும் வயதில் முதிர்ச்சியாகி மரித்துப் போயிருந்தார்.

அப்போது ஆண்டு “2060” ஆக வளர்ந்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *