பொம்மைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 29, 2020
பார்வையிட்டோர்: 5,592 
 

ரோட்டோரத்தில் ஒரு வீடு.

அதில் மூன்று பெண்கள்….

நாகரிகம் கம்பீரமாகப் பெருகி ஓடும் பெரிய ரோடு அது.

நாகரிகத்தை, அதன் வளர்ச்சி வேகத்தை, மாறுதல்களின் கதியை எல்லாம் அளந்து காட்டும் விசேஷ “மீட்டர்”கள் அந்த மூன்று பெண்களும்.

அவ் வீட்டில் – “பெரிய மனிதர்” என்ற தோற்றத்தோடு விளங்கிய அப்பா இருந்தார். செல்வத்திலே பிறந்து, சீரும் செழிப்புமாக வளர்ந்த “பெரிய வீட்டுப் பெண்” என்று தோன்றும் அம்மா இருந்தாள். இன்னும் யார் யாரோ இருந்தார்கள்.

பெரிய குடும்பம் அது. பணம் புரளும் “செயலான” குடும்பம்தான்.

இருந்தாலும்….

பச்சைப் பசிய இலைகளை மிகுதியாகப் பெற்ற “கன்னா வாழை” (கல்வாழை செடிகளில் கூட, பளிச்சென்று கண்ணைக் கவரும் தன்மையில் உயர்ந்து நிற்கும் தனிரகப் பூக்கள் மாதிரி, அக் குடும்பத்தில் அம்மூன்று பெண்களும் விசேஷக் கவர்ச்சியோடு விளங்கினார்கள்.

பெரியவர்கள் பாஷையில் சொல்லப்போனால் – மூத்தவள் அப்பாவைக் கொண்டு இருந்தாள். இரண்டாவது பெண் “அம்மாவைக் கொண்டிருந்தாள். மூன்றாவது பெண்?

யாரைக் “கொண்”டிருந்தாள், என்று திட்டமாகச் சொல்வதற்கில்லை. அம்மாவையும் அப்பாவையும் “கொண்டு” இருந்திருக்கலாம், அல்லது, குடும்பத்தில் உள்ள வேறு எவரது சாயலையாவது- தனி ஒருவர் சாயலையோ, பலரது சாயல்களின் கூட்டு மொத்தமான ஒரு வார்ப்பையோ – அவள் பெற்றிருந்திருக்கலாம். அது எப்படி யிருந்தாலும் சரி. மூவரிலும் அவள் தான் நல்ல அழகி.

அவளோ-கவிதை போன்ற அச்சிறு பெண்ணை எண்ணும் போது, கவிதை தான் முன் வந்து நிற்கிறது! “தாவாச் சிறுமான்; மோவா அரும்பு: கூவத் தெரியாக் குயிலின் குஞ்சு”! வயது பதின்மூன்று தானிருக்கும்.

பெரியவள் “தண்ணித்தட்டு இல்லாமல் வளர்ந்த முருங்கை மரம் மாதிரி” நெடு நெடுவென்று உயர்ந்திருந்தாள். நன்றாகச் சாப்பிடாமல், வெறும் காப்பியைக் குடித்தும் “ஐஸ்க்ரீமை”த் தின்றும் வளர்கிற காலேஜ் குமாரிகள் சிலரைப் போலவே அவளும் ஒல்லியாய், எலும்பும் தோலுமாய்க் காட்சி அளித்தாள். எலும்பு மூட்டுகளும், நரம்பு முடிச்சுகளும் துருத்திக்கொண்டும், பிதுக்கியவாறும் நின்ற அந்த உருவம் “உடற்கூறு சாஸ்திரம்” கற்பிக்க உபயோகப்படக்கூடிய நல்ல
எலும்புக்கூடாகத் திகழமுடியும்.

ஆனால் அலங்காரக் கலையிலே அவள் ஒரு அத்தாரிட்டி “தான். நாகரிக ஸில்க் புடவைகளின் விளம்பரங்கள் புகழ் பாடுகிற துணிரகங்களை எல்லாம், வேளைக்கு ஒன்றாகச் சுமக்கும் “சீலை மாட்டி” (துணி ஸ்டாண்ட் ஆக விளங்கும் அவள் உடல். வடநாட்டு சினிமாப் பத்திரிகையின் கலர் படங்கள் காட்டுகிற தலைச் சிங்காரிப்புகள் எல்லாம் அவள் கூந்தலிலும் வரிசைக்கிரமமாகக் குடிபுகும். இன்னும், நாகரிகச் சந்தையில் இறக்குமதியாகும் சகலவிதப் பொருள்களுக்கும் சரியான உரைகல்லாக மிளிர்ந்தாள் அவள்.

அழகு எனும் அம்சம் அவளிடம் இல்லைதான். ஆயினும் என்ன? உருவம் பெண்ணாக இருந்தால் போதாதா, அபிநவ ரோமியோக்களுக்கு! அவள் பின்னால் திரியவும், அவள் வீட்டில் வந்து தவம் கிடக்கவும் அஞ்சாறு “மம்முதர்கள் இருந்தார்கள்…. புராண காலத்து மன்மதன் கிளிமீதா சவாரி செய்தான்? நாகரிக மதன்களுக்கு ஸ்கூட்டரும், மோட்டார் பைக்கும் பெரிதும் துணை புரிகின்றன… ஆகவே, அவள் வீட்டு முன்னாலும் இந்த ரக வாகனம் ஏதாவது ஒன்று காத்து நிற்பது வழக்கமாகிவிட்டது.

அவள் பிரபல கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். அதனால் அவள் அவ்வப்போது உலா போகும் கோலம் வீதியில் நடமாடுவோருக்கு ரசிக்கத் தகுந்த காட்சியாக அமையும்.

இரண்டாவது பெண்ணிடம் அழகுமில்லை; ஆடம்பரமும் இல்லை; தனித்துவமும் கிடையாது. அக்காளை ஓரளவுக்குப் பின்பற்றும் பண்பு பெற்றவள் அவள், எனினும் வண்ணப்பூச்சித் தன்மை இவளிடம் அதிகம் காணப்படுவதில்லை. அடுத்த வீட்டுத் தடி அம்மாளுடன் பேசிப் பொழுது போக்குவதில் தான் இவள் மிகுந்த இன்பம் பெற்றதாகத் தோன்றியது. இவள் அதிகப் படிப்பு படிக்க அவாவியவளாகவும் தோன்றவில்லை.

வீட்டின் முன்புற ரஸ்தாவை அரங்கமாகக் கொண்டு, விதம் விதமான நடிப்புகளைச் செய்து காட்டும் அழகுக் “கலைஞியாக மிளிர்ந்தாள் மூன்றாவது பெண். சைக்கிள் சவாரி செய்து பழகுவதற்கும், ஸ்கிப்பிங் ஆடிக் களிப்பதற்கும், கோலமிட்டுப் பயில்வதற்கும், தன்னையே ஒரு எக்ஸிபிஷனாக மாற்றிக் கொள்வதற்கும் அந்த இடம் அவளுக்கு மிகுதியும் பயன்பட்டது. பள்ளிக்கூடத்துக்குப் போவது அவளுக்குப் பொழுதுபோக்கு ; மற்றவை எல்லாம் உற்சாகமளிக்கும் அலுவல்கள்….
சமூகத்தில் சிலருக்கு இனிய பொழுது போக்காகவும், உவகையூட்டும் அலுவலாகவும் விளங்கும் “நவராத்திரி” வந்தது. பட்டும் பளபளப்பும், பகட்டும் படாடோபமும் சில வீதிகளிலே பவனி வந்தன; அநேக வீடுகளை முற்றுகையிட்டன.

ரோட்டோரத்து அந்த வீடும் அற்புத உலகமாக மாறியிருந்தது. அம் மூன்று பெண்களும் அதிவிசேஷ மேனாமினுக்கிகளாகக் காட்சி தரலானார்கள்.

தனி ஒருவன் வசதியாக வாழ்வதற்கே போதுமான வாய்ப்புகள் கிட்டாத சமுதாயத்தில் – கணவனும் மனைவியும் வயிறாற உண்டு திருப்திகரமாக உடுத்தி, சௌகரியமாகத் தங்கி மகிழ்வதற்குக் கூட வசதிகள் இல்லாத நாட்டில் – ஒரு குழந்தையைக் கூட நல்ல போஷாக்குடன் வளர்க்க முடியாமல் திணறுகிற குடும்பங்கள் நிறைந்த இடத்தில் – ஒரு நாளைக்கு ஒன்பது விதமாக அலங்கரித்துக் கொள்ளும் ஒய்யாரிகளுக்கு அழகழகான ஆடைகளும், ஆடம்பர அணிவகைகளும் வாங்கிக்கொடுக்க முடிகிற தந்தை பெரும் பணக்காரனாகத்தான் இருக்கவேண்டும். அல்லது, மிகுதியாகப் பணம் பண்ணும் திறமையும் அதற்கு வகை செய்யும் பதவியும் பெற்றவனாக இருத்தல் வேண்டும்.

அம் மூன்று பெண்களும் அந்தியிலே பூத்தொளிரும் மந்தாரைகளாக விளங்கினார்கள். முன்னிரவிலே ஒளி மழையில் குளித்துப் பளிச்சென மிளிரும் மத்தாப்புக்களாகத் திகழ்ந்தார்கள். ஒரு தரம் பார்த்தவரின் விழிகளை மீண்டும் மீண்டும் தம் பக்கம் கவர்ந்திழுக்கும் காந்தமலர்களாக ஜிலுஜிலுத்தார்கள்.
அவ்வீட்டிலே “பொழுதுக்கும் பாட்டு; பொழுதெல்லாம் சங்கீதம்!” அவர்கள் முகத்திலே ஓயாத மலர்ச்சி. அவர்களைச் சுற்றிலும் எப்போதும் கலகலவெனச் சிதறுகின்ற களி துலங்கும் நகைப்பு. அவர்களுக்குக் கவலை எதுவும் இருக்காது என்றே தோன்றியது.

ஆமாம். இருக்க முடியாது தான்! மனித உள்ளமும் தர்ம உணர்வுகளும் விசாலப் பார்வையும் பெற்றிருப்பவர்களுக்குத்தானே வீண் கவலைகளும் – வேண்டாத குழப்பங்களும் – அடிக்கடி ஏற்படக்கூடும்….

“நவராத்திரி”யின் மூன்றாவது நாள். மாலை வேளை.

பொம்மைகள் வாங்குவோர் இன்னும் வாங்கிக் கொண்டு தானிருந்தார்கள். மூவரில் மூத்தவளுக்கும் வாங்கும் ஆசை குறைந்து விடவில்லை .

அவள் வீட்டின் ஒரு அறையில் தரையிலிருந்து முகட்டைத் தொடும் வரை பல படிகள். படிகள் தோறும் தினுசு தினுசான பொம்மைகள். அந்த அறையே பொம்மைக் கடை மாதிரிப் பிரகாசித்தது. ஆயினும் அவள் மேலும் ஒரு பொம்மை வாங்க விரும்பினாள்.

நம்பி ஒருவன் நங்கை ஒருத்தியை ஆர்வத்தோடு அணைத்திட வேகமாகப் பிடித்திழுக்கும் ஒரு தோற்றம். அற்புதமான படைப்பு. உணர்வுத் துடிப்பும் ஜீவகளையும், எழில் மலர்ந்த வளைவு நெளிவுகளும் – எழுச்சி வீழ்ச்சிகளும் பெற்ற பொம்மை.

அவள் பார்வையில் பட்ட அது உள்ளத்தையும் தொட்டது. அப்புறம் வாங்காதிருக்க முடியுமா, அவளால் ?

வாங்கி, அகமும் முகமும் மலர, பெருமையாகச் சுமந்து வந்து அதைக் காரில் வைத்தாள். ஒயிலாகச் சோம்பல் முறித்தாள்.

அவ்வழியே வந்த “லேம்பிரட்டா” கார் அருகில் நின்றது. அதில் ஜம்மென்று சவாரி செய்த யுவன் “ஹல்லோ! பர்சேஸிங்தானா?” என்றான்.

அவள் சிரிப்பைப் பதிலாக அளித்தாள் அவனுக்கு.

அவன் பொம்மையைப் பார்த்தான். “ஒண்டர்புல்…. ஸுப் பர்ப்… பியூட்டி புல்… ரொம்ப ஜோர்” என்று அடுக்கினான், “விலை என்ன ?”

“நாற்பது ரூபாய்”

“ஃபார்ட்டி ருபீஸ்?” என்று சொல்லி, தன் புருவங்களை உயர்த்தினான் அவன்.

“இதென்ன பிரமாதம்! ஒரு கடையிலே புதுசா ஒரு பொம்மை பார்த்தேன். ஜோரா கரடி ஒண்ணு. ஒரு கையிலே கொக்கோ கோலாபாட்டில். இன்னொரு கையில் ஒரு கப். நாம் தொட்டால், அது பாட்டிலைத் தணித்து, கப்பில் ட்ரிங்கை ஊற்றி, நம் பக்கம் நீட்டும்.. வெரி வெரி சார்மிங் திங். விலை வந்து…. நூத்தி முப்பதோ என்னவோ!”

“ஒரு பொம்மைக்கா அவ்வளவு விலை?” என்றான் மைனர்.

“அந்த ரூபாயைக் கொடுத்து அந்த பொம்மையை வாங்கிப்போய் விட்டார்கள் தெரியுமா? இரண்டு மூணு பொம்மைகள் விலை போய் விட்டதாகக் கடையிலே சொன்னான். நான்கூட ஒண்ணு வாங்கலாம்னு எண்ணினேன். இந்த வருஷம் வேண்டாமேன்னு தோணிச்சு. விட்டுட்டேன்” என்றாள் சிங்காரி. சிரித்தாள்; காரில் ஏறினாள்.

ரோமியோவின் லேம்பிரட்டா பின்தொடர, அந்த ஜூலியட்டின் கார் வேகமாக நகர்ந்தது.

அவர்கள் சம்பாஷ்ணையைக் கேட்டு நின்றான் ஒருவன். ஒரு வாரமாக க்ஷவரம் செய்யப்படாத முகத்தில் நீண்டு நின்ற மயிர்க்கட்டைகளை விரல்களால் சொறிந்தான். தலையைத் தடவினான். பொங்கி வந்த பெருமூச்சை அடக்க முடியவில்லை அவனால். அவனுக்கு ஒரு குழந்தை உண்டு. உயிருள்ள பொம்மை போன்ற அந்த அழகான குழந்தைக்கு ஏதோ வியாதி வந்தது. அது மெலி ந்துவிட்டது. டாக்டர் ஒரு டானிக் பெயரை எழுதிக் கொடுத்தார். அந்தச் சமயத்தில் அவனிடம் ஆறேகால் ரூபாய் இல்லை . இத் தொகையைப் புரட்டிக் கொண்டு மீண்டும் அவன் மருந்துக் கடையை அடைவதற்கு நாலைந்து நாட்களாயின. வந்து விசாரித்தான். அதே மருந்தின் விலை மேலும் ஒரு ரூபாய் அதிகமாகியிருந்தது… ஒரு ரூபா!… நூறு நயா பைசாக்கள்!… எங்கே போவது, குழந்தையை எப்படிக் காப்பாற்றுவது. இந்தக் கவலை அவனை அரித்துக் கொண்டிருந்தபோதுதான் பொம்மை விலையைப் பற்றி அலட்சியமாகப் பேசிய அலங்காரியின் சிரிப்பு அவன் காதுகளை அறுத்தது. அவன் உயிர்த்த பெருமூச்சு வெறும் காற்றில் தான் கலந்தது.

“நவராத்திரி”யின் ஐந்தாம் நாள்.

அந்தி நேரம்.

இரண்டாவது பெண், வர்ணமயமாய் பூத்துக் குலுங்கும் வண்ணச் செடிபோல், வாசல் படியில் நின்றாள். பக்கத்து வீட்டுத் தடி அம்மாள் அவளைப் பார்த்துப் புன்னகை பூத்தாள்.

துவளும் கண்ணாடித் துணியென யுவதியின் உடம்பில் ஒட்டிக் கிடந்தது நாகரிக வெண்துகில். உள்ளே கட்டியிருந்த – பூவேலைப்பாடுகள் பெற்ற – பச்சை நிறப் பாவாடையையும் ஜாக்கெட்டையும், இரண்டுக்கும் இடைப்பட்ட வயிற்றுப் பகுதியையும் பளிச்சென எடுத்துக் காட்டப் பயன்பட்டது. அச்சீலை.

“புதுசா?” என்றாள் பெரியம்மாள். “உம்” எனத் தலையசைத்தாள் ஒய்யாரி. “என்ன விலை?”

“எழுபத்தெட்டு ரூபா. இன்னொண்ணு பார்த்தேன். இதைவிட நைஸாக இருக்கும். டிஸைனும் வேறே மாதிரி. தொண்ணுத்திரண்டு ரூபா சொன்னான். தீபாவளிக்குப் பார்த்துக்கிடலாம்னு அம்மா சொன்னா. சரிதான்னு இருந்துட்டேன்…”

“அக்காளுக்கும் எடுத்திருக்குதா?”

“அவ இப்ப வேண்டாம்னு சொல்லிட்டா. போன வாரம் தான் அவள் ஒரு ஸேரி வாங்கினா. நீங்க கூடப் பார்க்கலே? ரொம்ப ஜோரானது… என்கிட்டேயும் இருக்குது. இரண்டு ஸூட்கேஸ் நிறையப் புடவைகள்தான். இன்னும் ஒரு ஸூட்கேஸ் வாங்கப் போறேன்…”

வழியோடு போய்க்கொண்டிருந்தாள் ஒருத்தி. குமாஸ்தாவின் மனைவியாக இருக்கலாம். அல்லது குறைந்த சம்பளம் வாங்கும் ஒரு உழைப்பாளரின் துணைவியாக இருக்கலாம். அவள் கண்கள் தன் சீலை மீது கவிந்தன. “ஏகப்பட்ட தையல்கள். வாங்கி ரொம்ப நாளாச்சு. நானும் ஒரு சீலை வாங்கணும் வாங்கணுமின்னு எவ்வளவோ மாசமா நினைக்கிறேன்; முடியலே. போன தீபாவளிக்குக்கூடப் புடவை எடுக்கலே. இந்தத் தீபாவளிக்கும் எடுக்க முடியாது. நல்ல புடவை ஒண்ணுகூட இல்லை என்கிட்டே..” அவள் உள்ளம் புகைந்தது. பெருமூச்சு சூடாக வெளிப்பட்டது.

அவளையே கவனிக்கவில்லை தற் சிறப்பில் லயித்து நின்ற அலங்காரி. அவளைவிட மோசமான நிலையில் வாழ நேர்ந்துள்ள எண்ணற்ற பெண்களைப் பற்றி இவள் என்ன அறிந்திருக்கப் போகிறாள்!

“நவராத்திரி”யின் வேறொரு நாள்….

மூன்றாவது பெண் மோகினி போல் திகழ்ந்தாள். நீல வானத்தை வெட்டி எடுத்து, மிக நைஸாக்கி, மேலாக்காகப் போட்டது போல் ஒரு தாவணி. பொன்மயமாய்த் தகதகக்கும் அந்திவானத்தின் அழகை நினைவு படுத்தும் ஒரு பாவாடை. இவை அழகியான அவளுக்கு அற்புதக் கவர்ச்சி தந்தன. வற்றாத சிரிப்பு வழியவிடும் ஊற்று தான் அவளது சின்னஞ் சிறு வாய்.

துள்ளிக் குதித்துக் கொண்டு, அஞ்சனம் தோய்ந்த அழகு விழிகளை அப்படி இப்படி ஏவியவாறு, வந்தாள் அவள்.

பொம்மைகள் கொலுவிருந்த அறைக் குள்ளிருந்து – பொம்மைகளில் ஒன்று உயிர் பெற்று ஆடிப்பாடி வருவதுபோல – வந்தாள். வாசல்படியில் நின்று யாருடைய வரவையோ எதிர்நோக்கினாள்.

“நான் உள்ளே வரலாமா? பொம்மைகளைப் பார்க்க ஆசையாயிருக்கு” என்று ஒரு மென் குரல் அவளருகே விழுந்தது.

ஒரு சிறுமி. அழுக்குப் பாவாடை. அதைவிட அழுக்கு முட்டிப்போன கிழிந்த சட்டை, எண்ணெய் காணாத தலைமயிர்.

அழகற்ற குழந்தைதான். ஆயினும், விளையாடும் துடிப்பும் வேடிக்கை பார்க்கும் ஆசையும் இல்லாமலா போய்விடும்?

“சீ போ!”, என்று எரிந்து விழுந்தாள் மோகினி. “ஒரு தரம் எட்டிப் பார்த்து விட்டுப் போயிடுறேன்…”

“தரித்ரம் ! போடி இங்கேருந்து… பீடை, இதும் மூஞ்சியைப் பார்த்தியா! இதுக்கு கொலுவேறே பார்க்கணுமாம்… போடீன்னா.. போ….”

இதற்குள் ஒரு கார் வந்துவிட்டது. அதிலிருந்து, பகட்டும் மினுக்கும் ஆடம்பரமும் அலங்காரமும் ஒரு பட்டாளம் போல் கிளம்பி வந்தன.

மோகினி நாட்டிய பாவத்தோடு கை கூப்பி, தலையசைத்து, விழி சுழற்றி “வாங்க வாங்க” என்று கூறி, கலகலவெனச் சிரித்தாள். வந்தவர்கள் பார்வை அழுக்குப் பிடித்த சிறுமி பக்கம் பாயவே இல்லை .

தேவையற்ற கல்லும் மண்ணும் பார்வையில் படாதது போல் தான் இதுவும்! பகட்டுச் சிறுமியும் பிறகு அந்த “தரித்திரத்தைப் பற்றி நினைக்கவே யில்லை …..
பொம்மை வைத்து விளையாடுகிறவர்களும் சமூகத்தின் மேல் தட்டிலே பகட்டாக விளங்குகிற பொம்மைகள்தான். அவர்களுக்கு உயிர் இருக்கிறதே தவிர, நியாயமான உணர்வுகளும் இல்லை, மனித இதயமும் இல்லைதான்.

ஏழைச் சிறுமி இப்படி நினைக்கவில்லை. அது மட்டுமென்ன? சமுதாயத்தின் முக்கால்வாசிப் பேர் இதைப்பற்றி எண்ணவே யில்லையே, இன்னும் !

– வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள் – முதற் பதிப்பு ஆகஸ்ட், 2002 – பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியீடு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *