இந்தியன் என்று சொல்லடா…

0
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 13, 2014
பார்வையிட்டோர்: 5,307 
 
 

பொழுது லேசாய் மிக லேசாய் விடிந்து கொண்டிருந்தது. பால்காரர் சிகப்பு முண்டாசுடன் மணி அடித்துக் கொண்டு போனார். காக்கைகள் குரல் கொடுத்துக் கொண்டே தத்தித் தத்தி தாழ்வாகப் பறந்தன. குழாயடியில் பிளாஸ்டிக் குடங்கள் வரிசை பிடித்திருந்தன. தண்ணீர் பிடிக்க “நான் முந்தி நீ முந்தி’ என்று மக்கள் ஒருவருக்கொருவர் கொடுந்தமிழைப் பயன்படுத்தினர்.

தூளியில் ஒரு வயது குழந்தை சொட்டு சொட்டாய் ஒண்ணுக்குப் போய்க் கொண்டிருந்தது. பத்து வயது மணிப் பயல் கோட்டு வாய் வழியத் தூங்கிக் கொண்டிருந்தான்.

இந்தியன் என்று சொல்லடாஆறு வயது சுமதியின் உறக்கம் கலைகின்ற நிலையில் கை, காலை அசைத்துப் பார்த்தது.

வாசு அவசரம் அவசரமாக பைப் தண்ணீரை தலையில் மொண்டு மொண்டு ஊற்றிக் கொண்டு தலை துவட்டினான்.

அவன் மனத்திரையில் காட்சிகள் ஓடின.

“”ஏங்க, சர்க்காரே ஒரு குழந்தை போதும்னு சொல்லுது. நாம ஒண்ணு… ரெண்டு…. மூணுன்னு வரிசையா மூணு புள்ளைங்களை வெச்சிருக்கோம். வருஷம், நிமிசமாய் ஓடிடும். புள்ளைங்களுக்கு கல்யாணம் காட்சின்னு பண்ணனும். வீடு வாசல்னு கட்டணும்… நீங்க என்னடான்னா நிரந்தரமா ஒரு வேலைன்னு இல்லாம இப்படி அல்லாடிக்கிட்டு இருக்கீங்க… பால் டெப்போ வேலை, ஸ்பீக்கர் செட்டு ஆளு, பத்திரிகை ஆபிஸ் புரூப் ரீடர், அப்புறம் கொஞ்ச நாளு டைலர் தொழில்னு பாக்காத வேலை இல்லை. டைலரா இருந்து துணியெல்லாம் வாங்கி வாங்கிப் போட்டுப்பிட்டு தீபாவளி, பொங்கல் நேரத்தில தைச்சுக் கொடுக்க முடியாம எரிபூச்சி கண்ணுல வுழுந்திடுச்சின்னு வீட்டுக்குள்ள முடங்கிக் கிடப்பீங்க… எதையாவது செஞ்சி முன்னேறணும்… மனுசனாகனும். இதிலே எல்லாம் நாட்டமில்லாம கட்சியிலே சேர்ந்துகிட்டு, கொஞ்ச நாள் கூத்தடிச்சீங்க… சினிமா நடிகனோட ரசிகர் மன்றத்தில சேர்ந்துகிட்டு கொஞ்ச நாள் ஆட்டம் போட்டீங்க… இதெல்லாமா குடும்பத்தை நிலை நிறுத்தப் போகுது?… த பாருங்க… பக்கத்து வீட்டு மீனாட்சி சொல்றா… சின்னக்கடைத் தெருவுல கடை ஒண்ணு காலியாவுதாம். பகடிக்கு கொஞ்சம் பணம் கொடுக்கணுமாம். என் காதுல, மூக்குல இருக்கிற கடைசி நகையைக் கொடுக்கிறேன். கொண்டு போய் வித்திட்டு அந்தக் கடையை ஒப்புக்குங்க… ஒழுகமங்கலம் மாரியாயி நமக்கு நல்ல வழி காட்டுவா” என்ற மனைவி கனகத்தின் வார்த்தையை சிரமேல் ஏற்று அந்தக் கடையை ஒப்புக் கொண்டான் வாசு.

வயிறு பசிக்கிற மாதிரி இருந்தது. நேற்று இரவு வயிறு சரியில்லை என்று எதுவும் சாப்பிடாமல் சும்மா போட்டது கூட காரணமாய் இருக்கலாம். அடுப்படியில் சென்று பார்த்தான். மண் கலையத்தில் நீச்சத் தண்ணிக்கடியில் கொஞ்சம் சோற்றுப் பருக்கைகள் தென்பட்டன. மூடி வைத்துவிட்டு சட்டை போட்டுக் கொண்டான். சாமி படத்திற்கு நேரே சிறிது நேரம் அமைதியாக நின்று சாமி கும்பிட்டுவிட்டு, நெற்றியில் விபூதி இட்டுக் கொண்டான். நீள நீளமான இரண்டு சாவிகளை மஞ்சள் பையில் போட்டுக் கொண்டு வெளியில் வந்தான்.

மனைவி வாசலில் சாணி தெளித்து கூட்டிக் கொண்டிருந்தாள்.

“”கொஞ்சம் சோறு தின்னுட்டுப் போவலாமே? வெறும் வயித்தோட போகணுமா?” என்றாள்.

“”இல்ல வேணாம்… நான் வெளியில சாப்பிட்டுக்கறேன். புள்ளைகளுக்கு சோறு போட்டு ஸ்கூலுக்கு கெüப்பு. நான் போயி கடையைத் தொறக்கிறேன்”

“”பசங்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டணுமே ஒரு வாரமா நச்சரிக்குதுக… சின்னவ பென்சில், நோட்டுன்னு வேற கேட்டுக்கிட்டிருக்கா…”

“”பாப்போம்… பாப்போம்… யாவாரம் ஒண்ணும் சரியில்ல… ஒரு சாக்லேட் கூட விக்கல… சாயங்காலம் பாக்கலாம்” என்றவன், பழைய சைக்கிளை எடுத்து மிதிக்க ஆரம்பித்தான். அது கிறீச்சிட்டபடியே கடந்து சென்றது.

லால் பகதூர் சாஸ்திரி நகரைத் தாண்டி, ராஜன் தோட்டத்தைக் கடந்த போது சாமிநாதன் எதிர்ப்பட்டான். கட்சி வேலை என்று சுத்திக் கொண்டிருந்த போது ஏற்பட்ட பழக்கம். ஒன்றாய்ப் போவார்கள். ஏணி சுமப்பார்கள். பசை தடவி போஸ்டர் ஒட்டுவார்கள். கொடி ஒட்டுவார்கள். பந்தல் கால் அமைக்க சவுக்கை கட்டை, கீற்று சுமப்பார்கள். கட்சி தான் கோயில், கட்சித் தலைவர் தான் ஆராதனைக்குரியவர் என்றிருந்த காலம்.

“”என்ன வாசண்ணே ஆளே மாறிட்ட… இப்ப கட்சி ஆபிஸ் பக்கமே வர்றதில்லே தானுண்டு, தன் தொழில் உண்டுன்னு நல்ல குடும்பஸ்தனா ஆயிட்டே.. பரவாயில்லே… அண்ணி உன்னை நல்லா மாத்திடுச்சி… என் ஞாபகமெல்லாம இருக்கா? தலைவர் ஒன்னை அடிக்கடி விசாரிப்பாரு… முடிஞ்சா, நேரங் கிடைக்கிறப்போ ஒரு எட்டு வந்துட்டுப்போ…” என்றான் பழைய நினைவுகளுடன்.

சாமி கும்பிட்டுவிட்டு கடையின் பூட்டைத் திறந்து பலகைகளை ஒன்றன் பின் ஒன்றாக வெளியே அடுக்கினான். துடைப்பத்தால் நடக்கும் பாதையைப் பெருக்கி சுத்தம் செய்தான். ஊது பத்தியைக் கொளுத்தி சாமி படத்துக்கு முன்னே வைத்தான். ஸ்டூலை இழுத்துப் போட்டான். கல்லாப் பெட்டியைத் திறந்து பார்த்துவிட்டு மூடினான். அதில் சில்லறைக் காசுகள் கொஞ்சம் ஓரமாகக் கிடந்தன.

“”இன்னிக்காவது ஏதாவது யாவாரம் ஓடினாத் தேவலை” என மனசுக்குள் நினைத்துக் கொண்டான். வெளியில் தலை நீட்டிப் பார்த்த போது, பிள்ளையார் கோயிலுக்கு அருகில் சைக்கிள்களை நிறுத்திவிட்டு நான்கைந்து பேர் இறங்கினார்கள். கையில் போஸ்டர்களும் பசை வாளியும் வைத்திருந்தார்கள்.

“”என்னண்ணே ஏதாவது கட்சி கூட்டமா? என்னிக்கி எங்கே நடக்குது?” என்றான் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில்.

“”டேய், டேய் வேகமா ஜோலியைப் பாருங்கடா… அப்புறம் வெயில் ஏறிடுச்சின்னா வேல ஓடாது. டவுன் ஸ்டேஷன் பக்கம், சீனுவாசபுரம், கச்சேரி ரோடெல்லாம் ஒட்டணும். அதான் ராத்திரியில ஒட்டி முடிச்சிறணும்… நல்லது சொன்னா எங்கடா கேக்கறீங்க?” முண்டாசு கட்டிய ஓர் ஆள் வயது குறைந்த மற்றவர்களிடம் உத்திரவு போட்டுக் கொண்டிருந்தான்.

வாசு கேட்ட கேள்வியை அவன் கவனத்தில் எடுத்துக் கொள்ளாததால் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான்.

முண்டாசுக்காரன் இப்போது அவன் பக்கம் திரும்பி, “”ஆமாம்ப்பா… கட்சி கூட்டம் தான். இன்னிக்கி சாயங்காலம்… இங்க முனிசிபல் ஆபீஸ் எதிர்த்தாப்ல… வழக்கமா போடுற இடத்தில தான் நடக்குது. உனக்கு நல்லா யாவாரம் ஓடும்யா. வெத்திலை, பாக்கு, பீடி, சிகரெட், சோடா, கலர் எல்லாம் வாங்கி வச்சிக்க. டீ, காபி கூட ஓடும். முடிஞ்சா ஏற்பாடு பண்ணிக்க… பெரிய தலைவர்கள் எல்லாம் வர்றாங்க” என்றான் பெரும் குரலில்.

அப்போது பசை தடவிய போஸ்டரை ஒருவன் எடுத்து வந்து, “”எங்கேண்ண, ஒட்றது?” என்றான்.

“”இங்க இவர் கடை சுவர்ல ஒட்டுடா” என்றான். வாசு அவசரம் அவசரமாக “”இங்க எல்லாம் வேண்டாண்ணே… வேற பக்கம் ஒட்டுங்க. என்னா விஷயம்னு தெரிஞ்சிக்கிறதுக்காகக் கேட்டேன்” என்றான்.

“”ஏன்?” என்றான் முண்டாசு சற்றுக் கோபமாக.

“”கட்சி போஸ்டர் எல்லாம் இங்க வேண்டாம்ணே, நாலு பேரு வந்து போகிற இடம். வீணா தகராறு வரும்” என்று வாசு இழுத்தான்.

“”இந்தா பாருப்பா… இப்ப போஸ்டர் இங்க ஒட்டலண்ணா தான் தகராறு வரும்… என்ன சொல்றே?”

“”என்னாங்க இது… நாம் பாட்டுக்கு சிவனேன்னு கெடக்கறேன்… எங்கிட்ட வீணா வம்புக்கு வர்றீங்க. இது வியாபாரம் நடக்கிற கடை… எனக்கு இங்கே கட்சி போஸ்டர் ஒட்டறதில இஷ்டமில்ல. நீங்க வேற இடம் பார்த்து ஒட்டுங்க”.

“”ஏன்டா, எனக்கே ஆலோசனை சொல்றியா? நான் யார் தெரியுமா? எங்க கட்சியப் பத்தி உனக்குத் தெரியுமா? நாலு பேரு பாக்கிற இடத்தில தான் ஒட்டணும். நீ ஒட்டுறா.. அய்யா என்ன பண்றாருன்னு பாத்துடுவோம்…” என்றான்.

“”அய்யா வேணாம். என் சொல்லை மீறி இங்க ஒட்டாதீங்க. காலைல பிரச்சினை வேணாம். மீறி ஒட்டினா நான் போஸ்டரைக் கிழிச்சிப் போட்டுடுவேன். அப்புறம் எம் பேர்ல வருத்தப்படக் கூடாது” என்று பதிலுக்கு சீறினான் வாசு.

“”கிழிச்சிடுவியா கிழிடா பாப்பம்… கிழிக்கிற கையி இல்லாமப் போயிடும்” என்றான் முண்டாசு.

இந்த பரபரப்புக்கிடையே போஸ்டரை முண்டாசின் நண்பர்கள் ஒட்ட, அதன் ஈரம் காய்வதற்குள் வாசு போஸ்டரை அவசரமாய்க் கிழித்தெறிந்தான்.

இதைப் பார்த்த முண்டாசு ஆத்திரத்துடன் வாசு மீது பாய முயற்சிக்க, கூட வந்தவர்கள் அவனைப் பிடித்திழுத்து அப்புறப்படுத்தினர்.

“”வேணாம். நாம் ஒண்ணும் செய்ய வேணாம். இதை அப்படியே அண்ணன் கிட்ட சொல்லிடுவோம். அவரு பாத்துக்குவாரு” என்றனர்.

“”கட்சி போஸ்டரையா கிழிக்கிறே? உனக்கு ஆப்பு வெக்கிறேன் இரு. இனிமே இங்க நீ கடை வெச்சி வியாபாரம் பண்றதைப் பார்த்துடுறேன்” என்று ஆத்திரத்துடன் கத்திவிட்டுப் போனான் முண்டாசு. சில நிமிடங்களில் அவர்கள் அந்த இடத்தைக் காலி செய்தனர்.

இவ்வளவு நேரம் அங்கே நடந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து அயர்னிங் கடைக்காரர் மெதுவாக எட்டிப் பார்த்து, “”அந்த ஆளுங்கக்கிட்டே ஏந்தம்பி வம்பு வச்சிக்கிறீங்க? போஸ்டர் ஒட்டறேன்னா வுட்டுருக்கலாமே? ஒட்டிட்டுப் போறான். அவங்க ரொம்பவும் மொரட்டுப் பசங்க.. கொலை பாதங்களுக்கு அஞ்சாதவங்க… எங்கே வம்பு கிடைக்கும்னு அலையறவங்க… கட்சியிலே வேற இருக்கானுங்க.. என்னவெல்லாம் பிரச்சினை பண்ணப் போறானுகளோ?” என்றார் பவ்யமாக.

“”இருக்கட்டுமே… அதுக்காக கடையிலே வந்து மெரட்டிப் பாக்கிறானுக… வெத்து வேட்டுப் பயலுக” என்று முகத்தை சுழித்து அலட்சியமாய் சொல்லி விட்டு வாசு கடையில் வந்து உட்கார்ந்தான்.

மனதிலிருந்து இந்தப் பிரச்சினையை அவசரமாக உதறித் தள்ளிவிட்டு, சிட்டையில் ஏதோ பழைய கணக்கைக் கூட்டிக் கொண்டிருந்த போது கடைவாசலில் நிழல் தெரிந்தது.

“”இவன் தாண்ணே” என்று குரல் கேட்டதும் தலை தூக்கிப் பார்த்தான். ஏற்கெனவே போஸ்டர் ஒட்ட வந்து தகராறு செய்த ஆள் வலது கை ஆள்காட்டி விரலை இவனை நோக்கி நீட்டிக் கொண்டிருந்தான்.

ஏற்கெனவே போஸ்டர் ஒட்ட வந்த ஆட்களுடன் புதிதாக ஒரு ஆள் வந்திருந்தான். அவன் தாடி வைத்திருந்தான். முகத்தில் அரிவாள் வெட்டுக்களின் தழும்புகள் இருந்தன. ஆத்திரம் கொப்பளிக்கக் கத்தினான்.

“”டேய் கடையை விட்டு வெளிய வாடா”

“”ஏன்ணே?” என்றான் வாசு பவ்யமாக.

“”ஏன்டா, எங்க கட்சி போஸ்டரை ஒட்டக் கூடாதுன்னு சொன்னியா? போஸ்டரைக் கிழிச்சி எறிஞ்சியா? போஸ்டர் ஒட்ட வந்த எங்க ஆட்களை கன்னா பின்னான்னு கெட்ட வார்த்தையில திட்டினியா? எங்க கட்சித் தலைவரை ஏகவசனத்தில் பேசினியா?” என்றான் ஆத்திரம் தொனிக்க.

“”அய்யய்யோ, நான் யாரையும் எதுவும் சொல்லலண்ணே. போஸ்டரை இங்க ஒட்ட வேணாம். நாலு பேரு வந்து போற இடம்னு மட்டும் தான் சொன்னேன். மீறி ஒட்டினாங்க. கோபத்தில் போஸ்டரைக் கிழிச்சிட்டேன். அது மட்டும் தான் நிஜம். மத்தப்படி கெட்ட வார்த்தையெல்லாம் எனக்குப் பேசவே தெரியாது. பொழக்க வழியில்லாம இந்த கடையை ஆரம்பிச்சேன். ஒரு வாரமா கடையில யாவாரமே இல்ல… வந்து கடையைத் தொறந்து வைக்கிறதும் ராத்திரியானா பூட்டிட்டுப் போறதுமா இருக்கேன். வூட்டுல படிக்கிற பசங்களுக்கு நோட்டு புஸ்தகம் வாங்கக் கூட காசில்லண்ணே…”

“”பொய் சொல்றாண்ணே… வாத்தா வக்கான்னு பேசினான். தலைவரை மானாவாரியா திட்டினான். நம்பளோட எதிரிக் கட்சியா இருக்கிற அந்தக் கட்சியில கொஞ்ச நாள் இருந்திருக்கான். அந்தக் கோபத்தில தான் நம்ப கட்சி போஸ்ட்டரை ஒட்டக் கூடாதுன்னு சொன்னான். இப்ப நீங்க வந்ததும் பதவிசாப் பேசறான்… நம்பாதீங்க” என்றனர் அவனது ஆட்கள்.

“”டேய் இந்த போஸ்டரோட விலை என்னன்னு தெரியுமாடா? எங்க கட்சியோட வரலாறு தெரியுமாடா? வெளியே வாடா” என்று புதியவன் மீண்டும் அதட்டினான்.

அப்போதும் சமரசமாகப் பேச வாசு எத்தனிக்க, கடைக்குள்ளே சென்று அவன் காலரைக் கொத்தாகப் பிடித்து தூக்கி வந்து அந்த முழு கூட்டமும் அவனை உதைத்துத் துவைத்து துவம்சம் செய்தது.

துவைத்துப்போட்ட அழுக்குத் துணி போல் தெருவில் கிடந்தான். கடைவாயிலிருந்து ரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது. ரெüடிக் கும்பல் அந்த இடத்தை விட்டு அகன்றதை உறுதி செய்து கொண்ட அக்கம் பக்கத்துக் கடைக்காரர்கள், மெதுவாக அவனருகில் வந்தார்கள். அதில் ஒரு ஆளின் கையில் உடைத்த சோடா நுரையுடன் இருந்தது.

“”ஒரு மனுஷனை இப்படிப் போட்டு மிருகத்தனமா அடிச்சி நாசம் பண்ணியிருக்காங்களே, அந்த ஆளைத் தூக்குங்க… அப்படியே ஆட்டோ ஒண்ணைக் கூப்பிடுங்க… ஆஸ்பத்திரிக்கு கொண்டு போவோம்” என்றார் ஒரு கடைக்காரர்.

சோடாவை முகத்தில் தெளித்த போது வாசு நெளிந்தான். அடிபட்ட வலியின் வேதனையில் முனகினான்.

“”அவனுக தான் ரெüடிப் பசங்கன்னு தான் தெரியுமே தம்பி… அவங்க கிட்ட எதுக்கு வம்பு உங்களுக்கு?” என்றார் பரிவோடு நடுவயதுக்காரர்.

“”இவ்வளவு பேரும் அவனுக போனதுக்கப்புறம் சாவகாசமாய் வந்து அனுதாபம் காட்டறீங்களே? இதுக்குப் பேரு தான் மனிதாபிமானமா? இதில யாருக்காவது ஒருத்தருக்கு போலீஸக் கூப்பிடணும்னு தோணிச்சா?” என்றான் சன்னமான குரலில் திக்கித் திணறியவாறு.

“”போலீசுக்கா… என்ன தம்பி மறுபடியும் விவரம் புரியாம பேசறீங்க. போலீஸ் வந்து தான் என்ன பண்ணும்? ஆள் மாகாணம், அரசியல் செல்வாக்கு பக்கம் தான் போலீஸ் சாயும்… ஏழை சொல் அம்பலம் ஏறுமா? மெதுவா எழுந்திரிங்க தம்பி. ஆஸ்பத்திரி போவலாம். முகமெல்லாம் கன்னிப் போயிருக்கு. ஏதோ கெட்ட நேரம். தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு… துர்க்கைக்கு வெள்ளி செவ்வா வெளக்கு போடுங்க…”

“”இல்ல… இல்ல… நான் போலீஸ் ஸ்டேஷன் போறேன்”

என்றான் சற்று கோபமாக.

“”போலீசுக்கா நல்லா யோசிச்சு செய்ங்க… மறுபடியும் பிரச்னையை வளத்துக்கிட்டுப் போவாதீங்க. அவனுகளுக்கு இப்படி சண்டை, வம்புன்னு அலையறது தான் முழு நேர தொழில். ஆனா நாம அப்பிடி இருக்க முடியுமா? நமக்கு பொண்டாட்டி, புள்ளைங்க இருக்கு. எதுக்கும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவை யோசிங்க… அப்புறம் உங்க இஷ்டம்” என்றார் வயதில் மூத்த ஒருவர்.

“”இதுக்கு மேல யோசிக்கிறதுக்கு என்னாங்க இருக்கு? கடையிலே உக்கார்ந்திருந்த என்னை இழுத்துட்டு வந்து நாயை அடிக்கிற மாதிரி அடிச்சிப் போட்டுட்டுப் போறானுக. மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கத்தானே போலீசு இருக்கு… நடக்கிறது நடக்கட்டும்… நான் போலீஸ் ஸ்டேஷன் போயி எனக்கு நடந்த கொடுமைகளைச் சொல்றேன்” என்று மெது மெதுவாக எழுந்தான்.

ஆட்டோ டிரைவர் போலீஸ் ஸ்டேஷன் ஓரமாய் ஆட்டோவை நிறுத்திவிட்டு வாசுவை கைத்தாங்கலாய் அழைத்துச் சென்றான். சிகப்பு வண்ணத்தை மாற்றி வெளிர் நீல வண்ணம் அடித்திருந்தாலும் போலீஸ் ஸ்டேஷனில் படியேற பயமாகத்தான் இருந்தது. ஓரத்தில் மலை மலையாய் பழைய டூவீலர்களும் சைக்கிள்களும் குவிந்திருந்தன. வெளியேயும் உள்ளேயும் ஆட்கள் கொத்துக் கொத்தாய் நின்று கொண்டிருந்தார்கள். போலீஸ்காரர்கள் அங்கேயும் இங்கேயும் நடந்து பரபரப்பாய்க் காணப் பட்டார்கள். வாசுவை அங்கே யாரும் கண்டு கொள்ளவில்லை.

மெதுமெதுவாக இன்ஸ்பெக்டர் அறைக்குச் சென்றான். அவர் பக்கத்தில் எஸ்.ஐ.யுடன் தீவிரமான ஆலோசனையில் இருந்தவர் இவன் மீது பார்வையை அலட்சியமாகப் போட்டார்.

“”என்னய்யா… யார் நீ… என்ன வேணும் உனக்கு?” போலீஸின் கம்பீரம் அந்த கேள்வியில் ஒட்டியிருந்தது.

அவ்வளவு தான். வாசுவுக்கு தான் வழிபடும் தெய்வத்தின் சன்னிதானத்தில் இருப்பது போலவும் சாமியே தனது குறையைக் கேட்பது போலவும் தோன்றியதும் பெருங்குரலில் அழ ஆரம்பித்தான்.

சிறிது கலவரம் அடைந்த இன்ஸ்பெக்டர் அவனது மனநிலையை ஓரளவு ஊகித்துக் கொண்டு அவனே சொல்லட்டும் என்று காத்திருந்தார்.

சமநிலை அடைந்த வாசு நடந்த சம்பவங்களை வரிசையாகச் சொல்லி முடித்தான். இதற்கிடையில் தன்னிடம் வந்த ஃபைல்களில் கையெழுத்திட்டுக் கொண்டும், வந்திருந்தவர்களிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிக் கொண்டும் இருந்த இன்ஸ்பெக்டர், வாசு முடித்ததும் பக்கத்தில் இருந்த எஸ்.ஐ.யைப் பார்த்தார்.

அவர் உடனே வாசுவின் பக்கம் திரும்பி, “”உன்னை அடிச்சான்னு சொல்றியே அவன் பேரென்ன? விலாசம் சொல்லு” என்றார்.

வாசு அவர்கள் பேசிக் கொண்டிருந்த விவரங்களை நினைவு படுத்திப் பார்த்தான்.

“அண்ணே… பெருமாள் அண்ணே அவன் பொய் சொல்றான்’ என்று அவர்களில் ஒருவன் சொன்னது நினைவுக்கு வந்தது.

“”அய்யா அவரை நான் அதுக்கு முன்ன பார்த்தது இல்லீங்கய்யா. எனக்கும் அவருக்கும் முன் விரோதம் ஏதும் இல்லீங்க… அவரோட வந்தவங்க பெருமாள் அண்ணன்னு கூப்பிட்டாங்க… அந்த கட்சி போஸ்டர் ஒட்ட வந்ததால் அவரு அந்த கட்சியை சேர்ந்தவருன்னு நினைக்கிறேன். மத்தபடி அவரு விலாசம் எல்லாம் ஏதும் தெரியலங்கய்யா” என்றான் வாசு.

அப்போது எஸ்.ஐ. இன்ஸ்பெக்டரிடம் ரகசியமாக சில செய்திகளைப் பரிமாறிக் கொண்டார். பிறகு, “”சார் இவனை உடனே ஆஸ்பத்திரிக்கு அனுப்புவோம்” என்றார். இன்ஸ்பெக்டர் தலையாட்டியவுடன், “”ஏய், 303 இங்க வா… இந்த ஆளை அழைச்சிக்கிட்டு ஆஸ்பத்திரி போய்ட்டு வா… பேப்பர்லாம் வந்து பாக்கலாம்” என்றார்.

வாசு, அந்த கான்ஸ்டபிளின் மொபெட்டில் அவரோடு ஆஸ்பத்திரிக்குப் போனான்.

“”ஆமாம்… அவன் சொல்ற அந்த பெருமாளு யாரு?” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.

இந்த கேஸ சீரியசாகக் கொண்டு போக நினைக்கிறாரே என்று யோசித்த எஸ்.ஐ. “”அவன் ஒரு ரெüடிப் பய சார்… சாராயம் காய்ச்சி வித்துக்கிட்டிருந்தான். கஞ்சா யாவாரம் பண்ணுவான். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அவம் பொண்டாட்டியை நடுரோட்டில அடிச்சே கொன்னு போட்டான்… யாரும் சாட்சி சொல்ல வராததால கேஸ் ஒண்ணுமில்லாமப் போயிருச்சி… இப்ப கட்சி… கட்ட பஞ்சாயத்துன்னு சுத்திக்கிட்டுத் திரியறான்” என்று அவனைப் பற்றி ஒப்புவித்தார்.

இன்ஸ்பெக்டர் தீவிரமாக யோசித்தவராக, “”அதுக்காக அந்தப் பயலை அப்படியே விட்டுடமுடியுமா நாம ஏழைகளுக்கு பாதுகாப்பு குடுக்கத்தானே இருக்கோம்? இந்த அப்பாவியை மாட்டை அடிக்கிற மாதிரி போட்டு அடிச்சிருக்கானுக” என்றவர்,

“”இந்தாப்பா 244, போயி அந்த பெருமாள் பயலை இழுத்துக்கிட்டு வாய்யா” என்றார்.

“”அவன் சுத்த அலம்பல் புடிச்ச பய… எங்க கெடக்கானோ?” என்று முனகிக் கொண்டே கான்ஸ்டபிள் வெளியேறினார்.

ஒரு மணி நேரம் கழித்து வாசுவின் புகாரை ரைட்டர் எழுதிக் கொண்டிருந்தார். ஆஸ்பத்திரியில் வாசுவுக்கு பாண்டேஜ் போட்டு அனுப்பியிருந்தார்கள். அப்போது கான்ஸ்டபிள் அழைத்து வந்த பெருமாள் ஆரவாரத்துடன் தனது நண்பர்களோடு உள்ளே நுழைந்தான்.

“”பெருமாள் யாருடா?” என்று அதிகாரக்குரலில் கேட்டார் இன்ஸ்பெக்டர்.

“”நான் தாங்க..” என்றான் பவ்யமாக.

“”நீ மட்டும் வா… உன்னோட வந்தவங்களை எல்லாம் வெளியே போய் நிக்கச் சொல்லு…”

“”அவங்க நடந்த சம்பவத்தைக் கண்ணால பாத்தவங்க… சாட்சி சொல்ல அழைச்சிட்டு வந்தேன்” என்றான்.

“”எனக்கே யோசனை சொல்றியா? அவங்களை முதல்லே வெளியே போகச் சொல்லு” என்றார் மீண்டும் கோபமாக.

அந்த நேரம் வாசலில் கட்சிக்கொடி பறக்கும் கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து கட்சிக்கரை வேட்டி, நீண்ட துண்டுடன் ஓர் அரசியல் பிரமுகர் வாய் நிறைய சிரிப்புடன் உள்ளே வந்தார்.

அங்கே நிலவும் அசாதாரண சூழ்நிலையைப் புறந்தள்ளி விட்டு “”வணக்கம், இன்ஸ்பெக்டர் சார்… அய்யா தான் சமீபத்தில மாற்றலாகி வந்திருக்கீங்களா? கேள்விப்பட்டேன். அய்யாவை உடனே வந்து பாக்கணுன்னு நினைச்சேன்… கட்சி வேலையா சென்னைக்கு போயிட்டேன். நேத்து திரும்பி வந்தப்ப தான் கேள்விப்பட்டேன். இந்த பெருமாள் பய ஏதோ வம்பு வளர்த்துட்டான். நான் போகும் போது அவன்கிட்ட சொல்லிட்டு தான் போனேன். கட்சி வேலைக்குப் போற இடத்தில ஒண்ணும் தகராறு கொண்டு வராத… எனக்கு ஆயிரம் வேலை கெடக்கு… இதுக்கெல்லாம் நேரமில்லேன்னு.. அப்புறம் அவனைக் கூப்பிட்டு நல்லா டோஸ் விட்டேன். அவனை வுட்டுடுங்க… நீங்க கேட்ட ஊருக்கு டிரான்ஸ்பர் கிடைக்கலன்னு கேள்விப்பட்டேனே உண்மையா?” என்றார்.

இன்ஸ்பெக்டர் அவர் பேசுவதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தவர் இடையில் தன்னைப் பற்றிக் கேள்வி கேட்டதும் சுதாரித்துக் கொண்டு, “”ஆமாம்” என்று தலையசைத்தார்.

“”அப்படியா அங்க யாரு இருக்காங்க?”

“”அப்பா… அம்மா… வயசானவங்க… மனைவி பிரைமரி ஹெல்த் சென்டர்ல வி.ஹெச்.என்.ஆ இருக்கா…”

“”சரி. உங்களுக்கு நீங்க கேட்ட இடத்துக்கு டிரான்ஸ்பர் கிடைக்க நானாச்சி. கவலைப்படாதீங்க… இன்னும் 10 நாளில் உங்களுக்கு ஆர்டர் கிடைக்கும். மத்தபடி இந்த பயலுக்கு நிறைய எச்சரிக்கை குடுத்திருக்கேன். இவனைப் பத்தி நீங்க இருக்கிற வரைக்கும் எந்த கம்ப்ளைண்டும் வராது… அடிபட்ட வாசுவும் நமக்கு வேண்டிய பையன்தான்… அவனுக்காகிற மருத்துவ செலவு, இந்த பயலால கடையில அவனுக்கு ஏற்பட்ட நஷ்டம் எல்லாத்தையும் நான் சரி பண்ணிடறேன்” என்றவர் இரண்டு கைகளையும் தூக்கிக் கும்பிட்டு விட்டு எழுந்தார்.

இன்ஸ்பெக்டரும் மரியாதை நிமித்தமாக நாற்காலியிலிருந்து எழுந்து விடைகொடுத்தார்.

இன்ஸ்பெக்டர் அவர் போவதையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு திரும்பினார். பெருமாள் எந்திரத்தனமாய்க் கும்பிட்டுவிட்டு அங்கிருந்து நழுவினான்.

சொந்த ஊருக்குப் போகலாம்… குடும்பத்துடன் இருக்கலாம் என்ற நம்பிக்கை அவர் முகத்தில் மகிழ்ச்சியை வரவழைத்தது.

“”யோவ் வாசு நீயும் அடிச்ச… அவனும் அடிச்சான். பாத்து பக்குவமா நடந்துக்க… ஒரு தொழில் பண்ற நீ, எப்படி நெளிவு சுளிவா நடந்துக்கணும்னு தெரியாது? போய் ஆக வேண்டியதைப் பாரு. இனி அந்தப் பசங்க உன் வழிக்கு வரமாட்டாங்க. போயிட்டு வா” என்றார் வாசுவைப் பார்த்து.

– தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி நடத்திய சிறுகதைப் போட்டிக்கு வந்த கதைகளில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை

– தில்லையாடி ராஜா (செப்டம்பர் 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *