(2003 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மேல் மாடியில் நின்று சிரத்தையோடு பாதையை வெறித்துப் பார்த்தேன். கீழே நெடுஞ்சாலை பரபரப்பாகிக் கொண்டிருந்தது. விரையும் வாகனங்களும், பாதசாரிகளுமே நகரின் பிரதான பாத்திரங்கள். வேலை தேடித் தேடி அலைந்து அலுத்து, இறுதியில் அறிந்த ஒருவரின் அனுசரணையில், ஒருவாறு வேலை கிடைத்தது. இது பிரமாதமான வேலையில்லை. சுறுசுறுப்பாக வியாபாரம் நடக்கும் ஹோட்டல் ஒன்றில், பில்மாஷ்டர் வேலை.
பட்ட துன்பங்களுக்கு மாதம் மூவாயிரம் கிடைக்கிறது. இப்போதைக்கு இது பரவாயில்லை . ஆனால், மிகச் சமீபத்தில் எனக்கு இங்கு வேலைமாற்றம் கிடைத்திருப்பது மனதிற்கு இசைவாயில்லை. இது ஒரு துர்அதிர்ஸ்ட நிகழ்வு. மகளைக் காட்டி அம்மாவைக் கட்டிவைத்த சங்கடம், எனக்குள் கீழே சைவ ஹோட்டலில் தேனீர் சிற்றுண்டி சாப்பாடு, என்று கச்சோடம் அபாரமாய் களைகட்டும். மேலே மாடியறைகளில், பகல் பொழுதுகளிலும் தோல் வியாபாரம் தூள் பறத்திக் கொண்டிருக்கும்.
தோல் வியாபாரம் என்றால், லெதர் பேக், வியாபாரமல்ல. இளம் பெண்கள் உடல் விற்றுப் பிழைக்கும், அவசர சிற்றின்ப கூடம். நடுத்தர நகர மனிதரின் உடற்தேவைக்கான இரகசிய அந்தப்புறம் வக்கிரங்களை மனதில் தேக்கி வைத்துக் கொண்டு, வெறிகொண்ட விலங்குகளாக இங்கு வந்து வேட்கை தணித்துச் செல்வர் பலர்.
கொழும்பு நகரின் பேய் சந்தடிக்குள் இது ஒன்றும் பரம ரகசியங்கள் அல்ல. எயிட்ஸ், சிபிலிஸ் போன்ற பாலியல் நோய்கள் பெருக, இவர்கள தான் காரணிகள். சாப்பாடு பில் கிழிக்க வந்து சரக்கு பில் கிழிக்கும் சங்கடம் என் மீது சுமத்தப்பட்டுள்ளது. இது நான் எதிர்பார்த்திராத நெருக்கடிகளில் ஒன்று. வேலையை விட்டுவிட்டுப் போய் விடவேண்டும் குற்ற உணர்வின் அழுத்தத்தில் சிக்கி, மனம் கசங்கித் தடுமாறுகிறேன்.
வாழ்க்கையில் நினைத்தது எல்லாமே கைகூடிவிடுகிறதா? என்ன? நிர்ப்பந்தங்கள் தான் மனிதனைப் போட்டு சக்கை பிழிகிறது. ஏதாவது அலுவலகமொன்றில் கௌரவமான தொழில் செய்ய வேண்டும் என்ற என் நினைப்பில் மண்விழுந்து போனது. நெருக்கடி மிகுந்த இயந்திரத்தனமான இரைச்சல் கொட்டிக் கிடக்கும், பயங்கரக் குகைக்குள் வசமாக சிக்கிக் கொண்டு தடுமாறுகிறேன். சுயவிருப்புகள் மறுதலிக்கப்பட்ட, வாழ்விற்கான கொடூரங்கள் இங்கு நிலவுகின்றன.
விருப்பு, வெறுப்பென்று இங்கு யாரும் பெரிதாய் அலட்டிக் கொள்வதில்லை. அவரவர்க்கான பாத்திரங்களில், எல்லோரும் கச்சிதமாக நடித்து முடித்து விட வேண்டுமென்பது, இங்கு தீவிர நடைமுறையில் இருக்கிறது. இங்கு ஊதியத்திற்காக உடலையும் மனதையும் தாரைவார்க்க வேண்டுமென்பது பொதுவிதி. இந்தத் தொழிலை மனதார வெறுக்கிறேன் நான். மனிதனுக்கு சுயகௌரவமும், மானமுமே பெரிது.
“இப்போதைக்கு இந்த வேலையைச் செய், பிறகு பார்த்து நல்ல வேலையொன்று தரலாம்” என்ற முதலாளியின் கட்டளை. நெஞ்சில் உதறலெடுக்கிறது. காலச் சூழலும், நிர்ப்பந்த அழுத்தங்களும் எந்தவொரு யோக்கியனையும், படுகுழிக்குள் தள்ளிவிடலாம். சூழலினால் தடம்புரண்டு போனவர் கூட சமூகக் குற்றவாளிகளாகித் தீர வேண்டிய கட்டாயம். சூழல்களின் நெருக்குதல்கள் எப்போதுமே நியாயங்களைப் புறம்தள்ளியே பார்க்கிறது. மனசாட்சியின் குரலால் ஓங்கியறையப்பட்டவனாக தத்தளித்துப் போகிறேன் நான்.
இந்த நாற்றமடிக்கிற சகதிக்குள்ளிருந்து தப்பியாக வேண்டுமே! அதற்கென்ன வழி? முதலாளிக்கு இப்பிரதேச காவல் நிலையத்தில், நிறையவே செல்வாக்குண்டு. அரசியல்வாதி களிடமும் அவருக்கு மிகுந்த நெருக்கம். கைமடிப்புகள் அடிக்கடி காவல் நிலையத்திற்குப் போய்ச் சேருவதினால்தான். இங்கு நடைபெறும் பாலியல் வியாபாரம் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றது. இந்த ஈனத் தொழிலில் நானும் சம்பந்தப்பட்டுள்ளேன என்பதை என் குடும்பத்தார் அறிய நேரிட்டால்……. எப்படித்தான் அவர்கள் முகத்தில் விழிப்பேன்?
இங்கு பல பெண்கள் பாலியல் தொழிலுக்காக அமர்த்தப்பட்டுள்ளனர். மொனிக்கா, சரீனா, தினேஷா, ரீட்டா….. இவர்களுள் மிகவும் வயது குறைந்தவள் சரீனா. வடிவானவளும் கூட. சீவி சிங்காரித்துக் கொண்டு, கையில் ஹேண்ட்பேக் சகிதம், காரியாலயப் பெண்கள் போல் பாவனைகாட்டி, காலையிலேயே இவர்கள் இங்கு வந்துவிடுவார்கள். சிரிப்பும், கும்மாளமுமாக வருவோரைக் குஷிபடுத்தி, காசு கறப்பதில் கைதேர்ந்தவர்கள் இவர்கள்.
வரும் வாடிக்கையாளரிடம் பேரம் பேசி காசை வசூலிப்பது, எனக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலை. சிவந்து கொழுத்து வாட்டசாட்டமான ஆகுருதி கொண்டவன் நஸீர். இவன் இத் தொழிலின் பிரதான இணைப்பாளன், கைட், அழகாக உடுத்துக் கொண்டு கௌரவமுள்ளவனாக நடித்து, தெருவழியே போகும் நபர்களை, மோப்பம் பிடித்து, ஆசை வார்த்தை கூறி, இங்கு அழைத்து வருவான்.
உருப்படிகளின் எண்ணிக்கைப்படி இவனுக்கு கமிஷன் கிடைக்கும். நீண்ட காலமாகவே இவனது பிரதான தொழில் இதுதான். இவனது உருவத்தைக் கண்டாலே மலம் தின்னும் பன்றியின் ஆசூயை என்னில் மேலோங்கும். அவ்வளவு வெறுப்பு, என்றாலும் அதனைக் காட்டிக் கொள்ளாமல், மேலோட்டமாகக் கதைப்பேன்.
கூட்டிக் கொடுப்பவனுக்கு இஸ்திரிக் குலையாத உடுப்பு. உதட்டில் எப்போதும் சிகரெட். இவனெல்லாம் ஒரு மனிசனா? என்ற கேள்வி மனதில் சீறியெழும். நீ மட்டும் என்ன, விரும்பியோ, விரும்பாமலோ, இந்தக் கேடுகெட்ட தொழிலைத் தானே செய்கிறாய்? என்று மனசாட்சி என்னை நிர்தாட்சண்யமாய் இடித்துரைக்கும். மனசாட்சியின் அலறலை எத்தனை நாளைக்குத் தான் தடுத்து நிறுத்த இயலும்? இங்கிருந்து சீக்கிரமே வெளியேறி விட வேண்டும். அதற்கான ஒரு தருணத்தை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறேன்.
வாடிக்கையாளர் பார்வையில் இளம் சிட்டு சரினாவுக்கே கிராக்கி அதிகம். இரவு பகலென்று உடல் வருத்தி பணியாற்ற வேண்டிய நிலை அவளுக்கு. என்றாலும் மற்றவர்களை விட சரீனாவுக்குத்தான் வருவாய் அதிகம். பேரம் பேசுபவர்கள் அவளது ரேட் உச்சத்திலிருந்தாலும் அவளையே ஆசையோடு விரும்புவர்கள். காழ்ப்புணர்ச்சி காரணமாக மற்ற மூவரும், இவளோடு முரண்படுவார்கள்.
இவர்களது பார்வையில் நான் ஒரு அப்பாவியாக இருந்தேன். அவர்களோடு நெருங்கி அரட்டையடிப்பதை நான் தவிர்த்து வந்தேன். நிறைய கெட்ட கதைகள் பேசி, என்னைச் சீண்டி தங்கள் பக்கம் இழுக்கப் பார்ப்பார்கள். இந்த மாய வலைகளில், சிக்கிக் கொள்ளாது, மௌனம் தரிப்பேன். தமக்குள் பச்சையாக அனுபவங்களைப் பரிமாறிக் கொள்வார்கள்.
வரும் நபர்களின் சேட்டைகளை அசைபோட்டு சிலேடையாகச சொல்லி ரசிப்பார்கள். கூச்சம் என்பது இவர்களது அருகில் போனதும் இல்லை. சீ! இந்தப் பெண்கள் பாலியல் களியாட்டங் களில் எவ்ளவு கீழ்த்தரமாகிப் போனார்கள். இந்தப் பாவங்களை எங்கு போய் கொட்டிப் பிராயச்சித்தம் தேடப் போகிறார்கள்? எனக்குள் கேள்வி எழுப்புவேன். ஒவ்வொரு அறையிலும் ஒட்டைபோட்டு, மற்றவர்களின் வெறியாட்டங்களை இரகசியமாக ரசிப்பார்கள். இவர்களது உலகம் விசித்திரமானது!
வாழ்க்கைப் பின்னணி பயங்கரச் சோக மூட்டம் கவிந்ததாக இருக்கும். இந்தத் தடம்புரளங்களை இவர்கள் ஆரம்பத்தில் விரும்பி ஏற்றுக்கொண்டவர்கள் அல்லர்! வாழ்வு இவர்கள் மீது, இரக்கமற்ற கொடூரங்களை அள்ளி வீசுகிறது. இவர்கள் நம்பிக்கை தளர்ந்து சருகுகளாக அலைக்கழிக்கப்படுகிறார்கள். மன அழுத்தங்களினால் மதுபானம், போதை வஸ்து, என்பவற்றுக்கு கெதியில் அடிமையாகிப் போவார்கள்.
சில வேளைகளில் தங்கள் தவறுகளுக்காக சுய விசாரணையில் இறங்கி, மனம் வருந்துவார்கள். நீதிமன்ற தீர்ப்புக்களால் இவர்கள் திருந்தும் மார்க்கம் இல்லை. முதலில் ஒருவனால் வஞ்சிக்கப்பட்டு, பிறகு பலராலும் ஏமாற்றப்பட்டு, நிர்க்கதிக்கு உள்ளான சோக வரலாறு இவர்களுடையது. இந்த மோசமான தொழிலை, கை விடவும் மனம் ஒப்பமாட்டார்கள்.
அன்றிரவு ஐந்தாம் நம்பர், அறையிலிருந்து, மிக மோசமான அலறல் சத்தம் கேட்டதும், திடுக்குற்றேன். சரினாவின் அறை யிலிருந்துதான் அந்த அபயக்குரல் கேட்டது. அன்று அவளுடன் சல்லாபிக்க வந்தவன் ஒரு வாட்டசாட்டமான கறுப்பு இன நீக்ரோ. கொழும்பில் தரித்துள்ள வெளிநாட்டு கப்பலொன்றில் வேலை செய்பவன். ஆறடி உயரத்தில் இறுகிக் கனத்த உடலமைப்போடு பார்ப்பதற்கு பயங்கரத் தோற்றம் கொண்டவனாக இருந்தான்.
‘கைட்’ நஸீர் அவனை இங்கு அழைத்து வந்திருந்தான். சரீனாவின் கூக்குரலும், அழுகையும் தொடர்ந்தவண்ணம் இருந்தன. நான் கதவைத் தட்டி இருவரையும் வெளியே வரும்படி கூறினேன்.
அவனது பிம்பம் வெறுப்பூட்டுவதாய் இருந்தது. சுருட்டை முடி, வீங்கிப் பெருத்துத் தொங்கும் அவலட்சண உதடுகள், தலைமயிர் குட்டையாகவும், ரௌத்திரம் குடிகொண்ட இறுகிக் கனத்த முகமும் பார்ப்பதற்கு அச்சமூட்டிக் கொண்டிருந்தது. சரீனா, கிடுகிடா விறைத்த உடலோடு, பீதியில் நடுங்கிக் கொண்டிருந்தாள்.
“இவன் மணித்தியாலக் கணக்காய் என்னை சித்திரவதை செய்து கொல்றான். போதைமருந்து ஏற்றிக்கொண்டு வந்திருக் கிறான். இவன் மனிஷன் இல்ல. காட்டு மிருகம். இவனுடைய காசைத் திருப்பிக் கொடுத்து வெளியே துரத்துங்கள். இவனோட இருக்க என்னால ஏலாது.”
சரீனாவுக்கு மூச்சு இரைத்தது. பார்க்க பரிதாபமாக இருந்தாள். காசைத் திருப்பித் தருவதாகவும், உடனே இங்கிருந்து போகும்படியும் நான் அவனிடம் உரத்ததொனியில் சொன்னேன்.
“காசு எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன். இவளை மீண்டும் என்னோடு இருக்கச் செய். இல்லாவிட்டால் எல்லோரையும் உதைத்து நொருக்குவேன்.”
இங்கு நடக்கும் களேபரத்தில் மற்ற மூன்று பெண்களும், மாடிப்படியிலிருந்து மெதுவாகக் கீழிறங்கி நடந்தனர். அது, சரீனாவுக்கு ஏற்பட்ட பயங்கர அனுபவம், தமக்கும் ஏற்படக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்விலாக இருக்கக்கூடும். ‘கைட்’ நஸீர் எங்கிருந்தோ விரைந்து வந்து, நீக்ரோவை சமாதானப் படுத்தி, போகுமாறு சொன்னான்.
“உனக்கு வேறாகப் பணம் தந்திருக்கிறேன். நாயே! என்னையா துரத்தப்பார்க்கிறாய்?” என்று சினம் தலைக்கேறி, நஸீரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். நிலைமை மோசமாகவே முதலாளிக்குப் போன்’ செய்து, உடன் வரும்படி கூறினேன். சிறிது நேரத்தில் எதற்கும் தயாராக ஐந்து காடையர் சகிதம் முதலாளி பிரசன்னமானார். வந்தவர்கள் நீக்ரோவைப் பிடித்து கீழே தள்ளினார். அவன் போக மனமின்றி, முரண்டு பிடிக்கவே, காடையர்களில் ஒருவன் இடுப்பிலிருந்து கத்தியை உருவிக் காட்டி கொன்றுவிடுவதாகப் பயமுறுத்தினான்.
நீக்ரோ கறுவிக்கொண்டே கீழிறங்கி நடந்தான். ஒரு பிரளயம் நிகழ்ந்து முடிந்த அமைதி அங்கு நிலவியது. எல்லோரது மனதிலும் சிறிய ஆசுவதம். சில கணங்கள் கழிந்திருக்கும். கடை வாசலில் பொலிஸ் அதிகாரிகளும், நீக்ரோவும் திடீரென கடைக்குள் வந்தனர்.
அவர்கள் முதலாளிக்கு நெருக்கமான பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அல்லர். அத்தனை பேரும் புது முகங்கள். இங்கு, விபச்சாரம் செய்வதாகவும், காடையர்கள் தனது பணத்தைக் கொள்ளையடித்ததாகவும் நீக்ரோ தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு கொடுத்துக் கூட்டி வந்துள்ளான்.
அவர்கள் தடதடவென்று மேல் மாடிக்கு விரைந்து வந்தார்கள். நான் சட்டென்று பின்புறம் மறைந்து கொண்டேன். என் நெஞ்சில் பயங்கர அச்சம் புகுந்து கொண்டது. தொண்டை உலர்ந்து நாவரண்டது. வயிற்றுக்குள் பனிக்கட்டி உருகிய சிலிர்ப்பு. என்ன நடக்கப் போகிறதோ? என்று தடுமாறினேன்.
‘கைட்’ நணீரையும், நான்கு பெண்களையும் வளைத்துப் பிடித்து, ஜீப்பினுள் ஏற்றினர். முதலாளி இதனைத் தவிர்ப்பதற்கு
பெரிதும் முயன்று பார்த்தார். இயலவில்லை. யார் யாருக்கோ ‘ போன்’ செய்தார். நான் மாடியில் நின்றவாறு பாதையை நோட்டமிட்டேன். ஜீப் உறுமியது. புறப்படுவதற்கு சரீனாவைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருந்தது. அவள் ஜீப்புக்குள் அமர்ந்திருந்தவாறு, எனக்கு கையசைத்தாள். அவர்களது முகங்களில், பரபரப்போ கவலையோ சிறிதும் இருக்கவில்லை .
பொலிஸ், ரிமாண்ட், நீதிமன்றம், யாவும் அவர்களுக்குப் பழகிப் போன மாமூலான விஷயங்கள். கோர்ட்டுக்குப் போவதற்கு முன் முதலாளி இவற்றையெல்லாம் தன் செல்வாக்கினாலும், பணத்தினாலும், சமாளித்து விடுவார். நாளையிலிருந்து இங்கு பழையபடி தொழில் தொடரும். ஆனால், என்னால் ஒரு நிமிடம் கூட இங்கு மேலும் தரித்திருக்க முடியாது.
ஒருவரிடமும் சொல்லிக் கொள்ளாது, மெதுவாக, கடையை விட்டு வெளியேறி, பாதையில் செல்வோரோடு சங்கமித்தேன். இனி இந்தப் பக்கம், தலை வைத்தும் படுக்கக் கூடாது என்ற உறுதியான தீர்மானம், நெஞ்சில் கனமாக உறைந்திருந்தது.
– செப்டம்பர் 2003 – நிஜங்களின் வலி சிறுகதைத் தொகுப்பு , மீரா பதிப்பகம், முதற்பதிப்பு: 23.05.2005