இதுவெல்லாம் குற்றமா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 5, 2022
பார்வையிட்டோர்: 3,911 
 

பரபரப்பாக அந்த சாலை இருந்தது. வாகனங்கள் பொறுமையின்றி ஒலிக்க வைத்த ஹாரன் சத்தமும், அதை விட மக்கள் அங்கும் இங்குமாக நடந்து செல்ல அவர்களை திசை திருப்பி கடைக்குள் இழுக்க நடைபாதை ஓரமிருந்த கடைகளின் ஆட்கள் கூவி அழைத்த அழைப்பும், அங்கிருந்த மின் கம்பத்தின் ஓரமாய் நின்றிருந்த இவனை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.

அவனை பொறுத்தவரை இப்பொழுது அவன் நினைவுகள் இந்த உலகத்திலேயே இல்லை. அவனுடைய பார்வை அவனுக்கு முன்னால் நின்றிருந்த பின்புறம் திறந்த ஆட்டோவின் மீதே ஈடுபட்டிருந்தது.

யாரும் அந்த வண்டியை சட்டை செய்வது போல தெரியவில்லை. அதனை தாண்டி சென்று கொண்டிருந்த பலருக்கு அந்த ஆட்டோ இடைஞ்சலாக இருந்தாலும் கண்டு கொள்ளவில்லை.

ஆரம்பத்தில் அந்த ஆட்டோ அவனை தாண்டி வந்து ஓரமாக நிறுத்தும் போதே இவனுக்கு மகா எரிச்சலாக வந்தது. அந்த ஓட்டுநரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி விடத்தான் நகர முயற்சித்தான்.

ஆனால் அதற்குள் அந்த ஓட்டுநர் கதவை திறந்து எங்கோ இறங்கி ஓடி விட்டான். சே..இவன் அவனை அழைக்க வாயெடுத்தவன் பின்புறம் திறந்திருந்த ஆட்டோவுக்குள் இருந்ததை பார்த்தான்.

குண்டு குண்டாய் மாம்பழங்கள், நல்ல சிவப்பு,மஞ்சள் கலந்து ஐம்பது அறுபது இருக்கலாம், ஒரு மலையாய் குவிந்து இருந்தது.

அதை பார்த்ததிலிருந்து அவன் எண்ணம் எல்லாம் அதன் மீதே இருந்தது. அதற்கு பிறகு அந்த பாதையில் இருந்த கடை சிப்பந்திகளின் இரைச்சலோ, வாகனங்களின் வழி விட சொல்லி ஒலிக்க விட்ட ஹாரன் சபதங்களோ எதுவும் தலையில் ஏறவில்லை.

மாம்பழங்களை எப்படி எடுக்கலாம்?, எப்படியும் ஒவ்வொரு பழமும் அரை கிலோவிலிருந்து ஒரு கிலோவாவது தேறும். அந்த ஓட்டுநரிடம் கேட்கலாம், அவன் தந்தால் உண்டு, முடியாது என்று சொல்லிவிட்டால்..!

மெல்ல அந்த ஆட்டோ பக்கமாக நகர்ந்தான்.ஆட்டோவை ஓட்டி நின்று கொண்டு சுற்று முற்றும் ஒன்றும் தெரியாதவன் போல் பார்த்தான்.

அவ்வளவு கூட்டம் அங்கு இருந்தும் ஒருவரும் அவனை கண்டு கொள்ளாமல் வருவதும் போவதுமாக இருந்தனர். இறங்கி போன ஓட்டுநர் வருகிறானா என்பது போல அவன் ஓடிய திசையை நோக்கி பார்த்தான். காணவில்லை. இனி நேரம் கடத்த முடியாது, அவன் சீக்கிரமே வந்து விடலாம்.

தன் பேண்ட் பாக்கெட்டில் எப்பொழுதும் மடக்கி வைத்திருக்கும் பிளாஸ்டிக் பையை ஆட்டோவின் மீது சாய்ந்தாவாறே பிரித்தான். மெல்ல கையை விட்டு ஒரு பழம் எடுத்து பைக்குள் போட்டான்.

ஒன்று..இரண்டு..மூன்று..ஹூஹூம் மனசு கேட்கவில்லை. மட மடவென இன்னும் இன்னும் போட பை வீங்கி அவனுக்கும் ஆட்டோவுக்குமே இடவெளி அதிகமாகி காட்ட ஆரம்பித்து விட்டது.

கை வேறு வலிக்க ஆரம்பித்து விட்டது. இடது கையால் எவ்வளவு நேரம் இந்த பையை பிடித்திருப்பது. அதுவும் பையை தூக்காத மாதிரியாகவும் இருக்க வேண்டும், ஆனாலும் தூக்கி கொண்டிருக்க வேண்டும்.

எப்படியோ பத்து பழமாவது போட்டிருப்போம், சப்தமே காட்டாமல் அப்படியே ஆட்டோவை ஒட்டியே நகர்ந்து அங்கிருந்த கடையின் முன்புற சுவற்றில் அந்த பையை சாய்த்து வைத்து விட்டு ஒன்றுமே தெரியாதவன் போல் முன்னர் இருந்த இடத்தில் வந்து நின்று கொண்டான்.

எங்கிருந்தோ ஓடி வந்த அந்த ஓட்டுநர் அவசரமாய் கதவை திறந்து தன் இருக்கையில் உட்கார்ந்து ஆட்டோவை அங்கிருந்து ஓட்டி சென்றான்.

ஆட்டோ அங்கிருந்து நகர்ந்தவுடன் தான் இவன் மனசு நிம்மதியாயிற்று. அப்பாடா, நல்ல வேளை பின்புறம் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் பழங்கள் குறைந்திருப்பதை கண்டு பிடித்திருப்பான். அருகில் நாம் நின்றிருப்பதால் நம்மிடம் வந்து ஏதாவது கேட்டிருப்பான். நிம்மதியாய் மூச்சு வந்தது.

அரை மணி நேரம் ஓடிய பின்னால் அவனது செல்லுக்கு ஒரு அழைப்பு. “யோவ் உன்னைய டிராபிக்க பார்க்க சொன்னா, மாம்பழம் லவட்டிகிட்டிருக்கே? அதுவும் யூனிபார்மோடோ?”.

ஐயோ நாம மாம்பழம் எடுக்கறதை பார்த்துட்டாங்களா? இது எப்படி? அவன் திணற “யோவ் நீ செய்யறதை அக்கம் பக்கம் இருக்கற காமிராதான் காமிச்சுக்கிட்டிருக்குதே. உனக்கு தெரியாதா?”

அடக்கடவுளே, மனசு பக்கென்று உணர கவலைப்பட்டான். அந்த கவலை எல்லாம், அவன் செய்ததை பார்த்து விட்டார்களே என்பதல்ல, இனி இந்த பழங்கள் பங்கு பிரிக்கப்பட்டு நமக்கு ஒண்ணோ இரண்டோதான் கிடைக்குமே என்கிற கவலைதான் இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *