இடங்கடத்தி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 31, 2020
பார்வையிட்டோர்: 7,388 
 
 

என்னங்க! ஏன் இவ்வளவு டென்சனா இருக்கீங்க? முதல் முதலா நேர்முக தேர்விற்குப் போவது போல, சும்மா தைரியமா போங்க, ஐந்து வருடம் குழந்தைங்களை வைது ஆட்டோ ஓட்டியஅனுபவம், இருபது வருடம் இந்த மாநகரப் பேரூந்தில் ஓட்டிய நீங்கள், ஓய்வு பெற்ற பிறகும் வேலைக்குப் போகனுமா? சிவனேன்னு இருக்கலாமே, என்ற தன் மனைவியின் வார்த்தையை, தனது பேரூந்திற்கு பின்னால் வரும் இரு சக்ரவாகனத்தின் ஹாரன் ஒலி போல மதிக்கவே இல்லை, அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து ஒரு மாதம் முன் ஓய்வுப்பெற்ற சந்தானம்.

போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்றால் ஓய்வூதியமும், ஓய்வு தொகுப்பூதியம் ஊழியர்களின், நாமினி அல்லது வாரிசுகளுக்குத்தான் கிடைக்கும். அவன் அனுபவிக்க முடியாது. அவன் வாழ்க்கை வேலைப்பார்க்கும் போதும், ஓய்வுப்பெற்ற பின்னும் சில்லரைக்கு தட்டுப்பாடு் ஏற்பட்டு கஷ்டப்பட்டே கழியும் என்பது எழுதப்படாத விதி.

வருமானத்திற்காக சந்தானத்திற்கு வேலைப் பார்த்தாக வேண்டிய சூழல், அதை ஏன் குடும்பத்தில் சொல்லி அவர்களின் கவலையைக் கூட்ட வேண்டும். எனக் காட்டிக்கொள்ளவில்லை.

குழந்தைகளை, மனிதர்களை ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு நலமோடு கொண்டு சேர்ப்பது என்பது முக்கியமான வேலை, என்னைய மாதிரி ஜீரோ ஆக்ஸிடென்ட் ஓட்டுநர்கள் நிறை பேர் இருக்காங்க, இருந்தாலும் பெரிய கம்பெனியில் வேலை, இந்த கோட், சூட் ,நேர்முகத்தேர்வு என்றால் பயமாகத்தான் இருக்கும்,எனக் கூறியவாறு கிளம்பினார் சந்தானம்.

“சென்னையில் மிகச் சவாலான ரூட் தாம்பரம் முதல் வேளச்சேரி ரூட். அந்த ரூட்டில் நீங்கள் பேரூந்து ஓட்டி பழக்கமானதால் உங்களுக்கு சிரமம் இருக்காது,

எங்கள் பணியாட்களை அழைத்துக்கொண்டு தாம்பரத்திலிருந்து சிறுசேரிக்கு காலை பத்து மணிக்குள் அழைத்து வந்து விடவேண்டும், காத்திருந்து பணி முடிந்ததும் அழைத்துச் செல்லவேண்டும்.
என்ன ஓகே வா? என்று கேட்டார் மென்பொருள் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அலுவலர்.

சரிங்க ஐயா, என்றார்.

முக்கியமாக ஒன்று, வேலையிலேருந்து நிற்பதாக இருந்தால் ஒரு மாதம் முன் கூட்டியே சொல்ல வேண்டும், தவறினால் நீங்கள் ஒரு மாத ஊதியத்தைத் தர வேண்டும். எனக் கூறி சம்பளம் 30000/- என தீர்மானித்து வேலைக்கான ஆர்டரை வாங்கிக்கொண்டு கிளம்பினார் சந்தானம்.

பணியாளர்களை காலையில் ஏற்றுவதும், இறக்குவதும், கம்பெனி வாசலிலே காத்துக் கிடந்து, மதியம் அங்கேயே சாப்பிட்டு, மாலை ஏற்றுவதும் இறக்குவதும் என செல்ஃப் எடுக்காத பேரூந்தை ஓட்டத்திலே வைத்தது போல சந்தானத்தின் இந்த ஒரு மாதம் உருண்டோடியது,

சம்பள நாள் இன்று,

“நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என வாங்க மறுத்துவிட்டு பணியிலிருந்து விலகிக்கொள்வதாகத் தெரிவித்தார் ஓட்டுநர் சந்தானம்.

ஏன் என்று தெரிந்துக் கொள்ளலாமா? என கேட்ட நிர்வாகியிடம்,

சார்., நான் குழந்தைங்களை வைத்து ஆட்டோ ஓட்டியிருக்கேன், சக மனிதர்களை மாநகரம் பூர ஏற்றி இறக்கியிருக்கேன் அதில் எல்லாம் மனசுக்கு ஒரு திருப்தி இருந்திச்சு,

இதுகளை, மன்னிக்கனும் சார், இப்படி சொல்றதுக்கு,

எல்லோரும் ஒரே கம்பெனியிலேதானே இருக்காங்க!

இவங்க என்ன சார்? பஸ்ஸிலே ஏறின உடனே ஆளுக்கு ஒரு செல்லை எடுத்துகிட்டு ஒன்னு காதிலே மாட்டிக்கிறாங்க, இல்லைனா, கீழே குணிந்தவாறே நோண்டிகிட்டே இருக்காங்க,

அக்கம், பக்கத்திலே யாரு இருக்கா, என்ன நடக்குது, எந்த கவலையும் இல்லாம, நேற்று அவர்கள் வந்தார்களா? இல்லையா, ஏன் உடம்பு ஏதும் சரியில்லையா என கூடக் கேட்காமல், அமர்ந்துக் கொண்டு

உண்மையான நட்பு, அன்பு, பாசம், பரிவு, பகிர்தல் என எதுவும் புரியாமல் முகநூலில் முகம் புதைத்து பொய்யான வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள். என்கிட்டக் கூட பேசறதில்லையே, சார்.

இவர்களுக்காக நான் காலை முதல் மாலை வரை இங்கேயே காத்துக் கிடக்கிறனே, சாப்டீங்களா? என்று ஒரு வார்த்தை கூட இந்த ஒரு மாதத்தில் யாரும் என்னிடம் கேட்டதில்லை, இந்த மாதிரி ஒரு இடத்திலே என் உழைப்பைக் கொட்டி, என் நேரத்தை பாழாக்க விரும்பலை, அதனால்தான் போகிறேன்.

நீங்க சொல்கிறது சரிதான், ஆனால் இவர்கள் இந்தக்கால இளைஞர்கள் அப்படித்தான் இருப்பார்கள். நீங்க உங்க வேலையை மட்டும் பார்க்கலாமே?

தப்பா நினைச்சுக்காதே சார், நீ எனக்கு நல்லதுதான் பண்ணினே. இது போல் சலனமற்றவர்களை பயணிக்கச் செய்வது வருத்தமாக இருக்கிறது என்று முடித்தார்.

ஓகே இது தான் உங்கள் முடிவு என்றால், வேற தெரிஞ்ச நல்ல ஓட்டுநர் இருந்தா சிபாரிசு பண்ணுங்கள் சந்தானம்! என்றார் நிர்வாகி.

எனக்கு தெரிந்த அமரர் ஊர்தி் ஓட்டுநர் ஒருவர் இருக்கிறார், அவரிடம் கேட்டுச்சொல்கிறேன் என்றுக் கூறி விட்டு புறப்பட்டார் சந்தானம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *