கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 18, 2024
பார்வையிட்டோர்: 4,370 
 
 

(1984 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நேரம் ஆறரையாவது இருக்கும் போலிருந்தது. வேணி அடுப்படியில் அலுவலாயிருக்கிற அரவங் கேட்டது. மெல்ல விழித்த கண்களை மூடிக்கொண்டான். கண்களும் தலையும் லேசாக நொந்தன. உடம்பில் சூடாயிருக்கலாம். நேற்றிரவு நித்திரை வேறு குறைவு. சாப்பாடில்லாமலும் இரண்டு நாளைக்கு அவனால் இருக்கமுடியும் ஆனால் ஒரு நாளைக்கு நித்திரை எட்டு மணித்தியாலத்திற்குக் குறைந்தாலும் அவனால் தாங்க முடியாது. அடுத்த நாள் பகல் ஒன்றும் ஓடாது. ஒரே அலுப்பாயிருக்கும். சிலநேரம் காய்ச்சல் மாதிரியிருக்கும். படுத்தால் தூங்கவேண்டும் என்று நினைத்தால் போதும்- இரண்டு நிமிடத்திற்குள் தூங்கிவிடுவான். அதேபோல் இத்தனை மணிக்கு எழும்பவேண்டும் என்று நினைத்துப் படுத்தால் எல்லாம் வைத்தது மாதிரி எழும்பிவிட முடிகிறது. பத்துப் பதினைந்து நிமிஷம் முந்திப் பிந்தியிருக்கலாம். இது எப்படியென்று அவனுக்கு நெடுக ஆச்சரியமாயிருந்தது. என்றாலும் அப்படித்தான் நடக்கிறது. 

இரவில் மாத்திரம் நித்திரை குழம்பினால் பிறகு கண்களை மூடுவது பெரும் பாடாகிவிடும். அந்த நேரம் பார்த்து இரவின் அமைதியில் எல்லா யோசனைகளும் தலை தூக்குகின்றன. வீட்டுக் கஷ்டம். வேலைக் கஷ்டம் நண்பர்கள், உறவினர்கள் அவ்வப்போது ஏற்படுத்தி விடுகிற நோக்காடுகள் – எல்லாம் அந்த நேரம் பார்த்து நினைவுக்கு வருகின்றன. ஆனாலும இந்த வேளைகளில் சில அருமையான யோசனைகளும் அவனுக்குள் தெறித்திருக்கின்றன. ஒரு பகல்பொழுதில் அல்லது சாதாரண இயந்திர முடுக்கலான நாளாந்த ஓட்டமொன்றின் போது இப்படியான சிந்தனைகள் பொறி தட்டியிருக்குமா? என்பது ஐமிச்சமே. அலுவலக வேலை ஒன்றில். குடும்பப் பிரச்சனை ஒன்றில் -இப்படி இரண்டு சந்தர்ப்பங்களில், அவை அவனை வழி நடத்தின. தடைக்கற்களைப் படிக்கற்களாக்க முடிந்தது. இவ் விரண்டையும் யோசிக்கையில். சாமத்து விழிப்பைச் சகித்துக்கொள்ளலாமென்பது மட்டுமன்றி வரவேற்கலாம் போலவும் இருக்கும். ஆனால் தொல்லை அடுத்தநாள் விடிய எழும்பும்போதுதான் அவனறியாமலே அரை அல்லது முக்கால் மணித்தியாலம் கூடுதலாகத் தூங்கியிருப்பான். நேரத்திற்கு விழிப்புக் கொண்டால் அசதி வரும். 

நேற்றிரவு இப்படி இடையில் விழிப்புத் தட்டவில்லை தான். என்றாலும் படுக்கைக்குப் போக நேரமாகிவிட்டது. கண்களை மீண்டும் மெல்லத் திறந்தான். இனித் தூக்கம் வராது. ஆனால் எழும்பவும் மனமில்லாதிருந்தது. ஆறரை மணிச் செய்திக்கான முன்னிசை பின்வீட்டு றேடியோவிலிருந்து மெல்லக் கேட்டது. கண்ணாடி யன்னல்களால் பழுப்பு ஒளி கசியத் தொடங்கியிருந்தது. இந்த ஜன்னல்கள்தாம் இந்த அறைக்கு அழகு. அதுமட்டுமல்ல. அவைதாம் அறையை வாழ்விடமென்ற தகுதிக்கானதாக்குகின்றன. இந்த அறை. முன்னால் நாலடி அகலப் பல்கனி. இடப்பக்கத்தில் சின்ன அடுப்படி. கீழே இறங்கினால் குளியலறை இதற்கு வாடகை இரு நூற்றைம்பது ரூபா. இந்த ஜன்னல்கன் தனியா கீழறை. பல்கனி மட்டத்திற் கெழுந்து உரசி ஆடுகிற வாழைத்தோகைகளின் கீழே மறைந்து விடுகிற கொழும்பு நகரின் வரட்டுத்தனம். இந்த மூன்றையும் கருதியே அவன் இந்த வாடகைக்கு ஒத்துக்கொண்டான். அவன் சம்பளத்துடன் பார்க்கும் போது இது அதிகப்படிதான். 

ஜன்னல்கள் இரண்டடி இரண்டடியாக நாலு தொடர்ந்தாற்போல. ஐந்தடி உயரம். கண்ணாடி. கிழக்கே பார்த்தவை. நிலா இராக்களில் பின் வீட்டுக் கூரைக்கும் மேலாக நிலவொளியை உள்ளே வர அனுமதிப்பவை. 

இந்த வாழையிலைகளெல்லாம் அலையலையாகப் படர்ந்து ஏதோ நிலவுலகத்திற்கு மேலே வான மண்டல வாழ்வு சித்தித்திருக்கின்ற பிரமை தருவன. ஆனைவாழை கதலி மொந்தன் எல்லாமிருந்தன. வீட்டுச் சொந்தக்காரரின் ஓய்வு நேரங்களும். இந்த மண்ணும் அவற்றை மதர்க்க விட்டிருந்தன. அடிமரங்கள் இங்கிருந்து இலேசில் தெரியமாட்டா. தெரிந்தால் தென்னைமாதிரியிருக்கும். இந்த இலைகளில் குறுக்கும் நெடுக்கும் ஓடித்திரிகிற அணிற்பிள்ளைகள். இருந்திருந்துவிட்டு வந்து ஒளிந்து கொள்கிற குயில்கள் – இவையெல்லாம் இந்தக் கொங்றீற்கட்டை மறக்கச் செய்வதில் அவனுக்கு எவ்வளவோ உதவி செய்கின்றன. 

பக்கத்து வீட்டுக் கூரை முகட்டிலிருந்து மைனா பேசத் தொடங்கிவிட்டது. இவர்களுடைய இப்போதைய வாழ்வில் அழகு சேர்ப்பதில் இந்த மைனாக்களுக்குப் பெரும் பங்குண்டு. இதன் இணை தெற்கே நிற்கிற இலவ மரத்தின் உச்சியிலிருந்து பதில் கொடுக்கும். இப்போதும் கொடுக்கலாம். எழுந்து. பல்கனியில் நின்று பார்த்தால். வாழையின் பச்சை இலைகளின் மேல் சுவரின் பிறைவளைவுச் சாளரத்தினடியில், சித்திரம் போல இலவங்கொப்புகளும் அதன் ஒரு மூலையில் இலையோடோ. காயோடோ மறைந்து மைனாவும் தெரியக்கூடும். 

இப்படியே கிடந்து மைனாவையும் வானத்தையும், வாழை இலைகளையும், அணிற்பிள்ளைகளையும் பார்த்துக்கொண்டு நாளைக் கழித்துவிட முடியாது. அன்றைய வேலைகள் நினைவுக்கு வந்தன. அலுப்பாயிருந்தது. எரிச்சலாயிருந்தது. நாளாந்தம் இதே படிதான். ஆறேமுக்காலுக்கு எழும்பினால் ஏழேமுக்காலுக்குள் வெளிக்கிடலாம். அரைமைல் நடந்தால் எட்டுமணிக்கு பஸ் எட்டுமணியென்றால். பஸ் எட்டுக்கு வந்துவிடவேண்டுமென்றில்லை. எட்டேகாலும் ஆகலாம். அடைத்து நெரித்துக்கொண்டு வரும். ஏறமுடிந்தால் பெரிய அதிர்ஷ்டம். ஏறுதழுவலை நினைவூட்டும். குளிப்பது துவைத்த துணி அணிவது என்பனவற்றையெல்லாம் இந்த பஸ் பயணம் அர்த்தமற்றதாக்கிவிடுகிறது. எட்டேமுக்காலுக்குள்ளாவது போய் இறங்கிவிட்டால் போதும் அவன் வேலை ஒன்பது மணிக்கு இடையிலும் பத்து நிமிட நடை இருந்தது. 

வேலையென்றால் ஒரேவேலை. நாள் முழுதும், மாதமுழுதும் வருடமுழுவதும் – வேலையிற் சேர்ந்த நாளிலிருந்தே ஒரேவேலை. ஒரே மாதிரியான வேலை. சகாக்கள். சிகரெட். தொழிற் சங்கம் இவைதாம் அந்த அலுவலகத்தை அவனளவில் உயிர்த்துடிப்புள்ளதாக ஆக்குபவை. பின்னேரம், ஐந்துக்குப் புறப்பட்டால் வீடு வர ஐந்தரையாகும். தேநீரின் பின், குளித்து மீண்டும் வேணியுடன் புறப்பட்டால், சாமான் வாங்குகிற வேலைகளும் முடிந்தமாதிரியுமிருக்கும். உலாவியது மாதிரியுமிருக்கும். கார் பஸ் புகைகளில் தெருவின் நெரிபாட்டில் எதிரே கண்ணைக் கூசப்பண்ணி வருகிற வாகனங்களில் மோதிவிடுகிறமாதிரி வருகிற சைக்கில்களில் இந்த “உலவுகிற” என்பதன் அர்த்தம் அடிப்பட்டுப் போனாலும். மழை நாட்களில் இதுவும் கிட்டாது வருடத்தில் பாதி மாலை மழை. 

எட்டுமணிக்குப் பிறகு வீடு வந்தால் அப்பாடா என்று கையைக் காலை நீட்ட முடிகிறது. வாடகையின் கடூரத்தையும் வீட்டுக்கார ஆட்களின் சில்லுவண்டித்தனங்களையும், கொழும்பின் வரட்சியையும் மீறி. அவர்களுக்கு நல்லதொரு இல்லமாய் இந்த அனெக்ஸ் அமைந்தது. இதுதான் ஆறுதல். இது இந்த இல்வாழ்வு எட்டுவருடமாய் அவனை அவளும், அவளை அவனும் பார்க்கிற வாழ்வாய்த்தானிருந்தாலும்- அவர்கள் இருப்பிற்கு ஒரு பரிமாணங் கொடுத்தது. இந்த எட்டிற்குப் பிற்பட்ட வேளைகளே அவன் விரும்புவன. அவளுக்கும் அப்படியாய்த்தானிருக்கும். அமைதி, ஓய்வு, புத்தகங்கள். படுக்க முன் ஒரு மணி நேரமாவது படித்தால்தான். தின்றது செமித்ததுபோலிருக்கும். அன்றைய தினம் ஒழுங்காய் முடிந்த உணர்ச்சி வரும். நகரிலிருந்து நான்கு முக்கிய நூலகங்களில் அவன் சேர்ந்திருந்தான். 

இந்த வாழ்வில் அழகுகளைச் சேர்க்க அவர்கள் முயன்றார்கள். இந்த இல்லம். ஜன்னலிற் படரவிட்ட “மணிப்பிளான்ற் கொடி. பல்கனி. ஆகாயத்து நீலமும் வாழைப் பச்சையும், ஈர்த்துக்கொள்கிற புத்தக ஈடுபாடு, எட்டு மணிக்குப் பிற்பட்ட வேளை – இவையெல்லாம் அவர்கள் தேடியவையே. 

கண்களைத் திறந்தான். 

“எழும்புங்கோ…” என்றாள் வேணி. 

“…ஏழு மணியாகப் போகுது” 

“ம்…” என்றான். 

அவள் திரும்ப அடுப்படிக்குப் போனாள். 

இன்று காலையில் இந்த நேரத்தில் அவன் வித்தியாசமானவனாயிருந்தான். எல்லாம் வீண் என்று பட்டது. எதனாலென்று தெரியவில்லை. திரும்பத் திரும்ப இதே நாட்கள். இதே மாதிரி, ஒரு கிழமை லீவு போட்டுவிட்டு இருவருமாக யாழ்ப்பாணம் போய் வந்தாலென்ன என்று யோசனை வந்தது. ஆனால், இந்த மாதம் முடியும்வரை இன்னும் மூன்று வாரங்களுக்கு லீவெடுப்பது சிக்கலான காரியம் என்பதும் கூடவே நினைவு வந்தது. மண்ணாங்கட்டி வேலையும், மண்ணாங்கட்டி சீவியமும். 

ஆறேமுக்கால் இருக்கலாம். நிமிர்ந்து படுத்தான். குளிர் இன்னமும் பலமிழக்கவில்லை. மைனா தன்பாட்டில் பேசிக்கொண்டிருந்தது. அவனுக்கு இன்றைய வேலைகளெல்லாம் நடைமுறை வரிசையில் நினைவுக்கு வந்தன. கோப்பி, பிரஷ். குளியலறை சாப்பாடு. உடுப்பு. நடை. பஸ். புழுதி. புகை, புழுக்கம் அவதி.. தன்மேலேயே ஆத்திர மாயிருந்தது. நான் ஒரு முட்டாள். இந்த முப்பத்திரெண்டு வருடமாக வெட்டிக் கிழித்தது என்ன? இப்போது ஆறேமுக்கால் என்று அவதிப்பட்டுத்தான் எதைக் காணப்போகிறேன். 

நேற்றுங்கூட மைனாதான் அவனை எழுப்பியது. படுக்கையால் எழும்பி, படத்தருகில் ஒரு நிமிஷம் கண் மூடி நின்று. கோப்பிக் கோப்பையுடன் வெளியே வந்தால் மைனா தெரியும். பின் வீட்டு முகட்டில். பனியில் நீர்த்த இளம் மஞ்சள் முதல் வெயிலில் அலகால் சிற்குகளைக் கோதிக் கோதிப் பேசுகிற மைனா, இலவமரத்து ஜோடியைக் கூப்பிடுகிற மைனா. 

இன்று ஏன் இப்படியிருக்கிறது? இரவு என்ன கனவு கண்டேன்? நினைத்துப் பார்க்க முயன்றான். ஒன்றும் தெளிவாயில்லை. பக்கத்து மேசையில் வேணி பிரஷ்ஷை ஆயத்தமாய் எடுத்து வைத்திருந்தாள். ஏழு மணிக்கு ஐந்து நிமிஷம் என்றது மணிக்சூடு. எழும்பவா விடவா என்று யோசித்தான். கைகளை நீட்டி நெட்டி முறித்தான். போர்வையைத் தள்ளிவிட்டு டக்கென்று எழும்பினான். தான் உசாராயிருப்பது போன்ற பாவனை அவனாலேயே அதை ஏற்க முடியாமலிருந்தது. கட்டிலிலேயே உட்கார்ந்தான். 

வேணி திரும்ப வந்தாள். 

“எழும்பியாச்சா?” 

“ம்ம்…” 

“என்ன ஏதும் சுகமில்லையே?” 

“ம்ம்…” 

எழும்பினான். ஏழு ஐந்து படத்தருகில் ஒரு நிமிஷம் கண்மூடி நின்றான். பிரஷ்ஷை எடுத்துக்கொண்டு அடுப்படிக்குப் போய் கோப்பியுடன் வந்தான். பிரஷ்ஷை மீண்டும் வைத்துவிட்டுக் கோப்பையுடன் பல்கனிக்குப் போனான். மைனா கூரையில்தானிருந்தது. ஆனால், பேசவில்லை. கழுத்தை இடுக்கி. மேற்கே தலையைச் சாய்த்து, ஏதோ கவலை மாதிரிக் குந்தியிருந்தது. தெற்கே இலவமரம் தெரிந்தது. அதன் பின்னால் கருமேகங்கள் அணிவகுத்திருந்தன. மேகமூட்டம் மேற்கிலும் அடர்ந்து தெரிந்தது. இன்றாவது லீவு போடலாமா? என்று யோசித்தான். முடியாது என்று பட்டது. 

இந்தப் படிகள் சுருள் படிகள். இரண்டடி அகலம் வரும். கொங்கிறீட்டில் கட்டி வெள்ளை அடித்திருந்தது. வீட்டில் ஒரு பகுதியைத் தனியாக வாடகைக்கு விட வசதியாகப் பின்னர் கட்டியிருக்க வேண்டும்.ஏறும் போது எவருக்கும் மூச்சு வாங்கும். இறங்கும் போது அடிஅடியாய் வைக்க வேண்டும். கீழே முற்றம் அழகாயிருந்தது. வெள்ளை மணல் விளக்குமாற்றுக் கோலம். வரம்பெல்லாம் பூஞ்செடிகள் வீட்டைச் சுற்றிக் கொண்டு முன் புறம் வருகிற இந்தப் பாதை இவர்களுக்கானது. இதுகூட இரண்டடிதான். நடந்தான். 

சடபடாவென்று சத்தங் கேட்டது. வாழைப் பாத்திக்குள் எங்கோ சுருட்டிக் கொண்டு கிடந்த வீட்டுக்காரரின் நாய் இவனைக் கண்டதும் உடம்பைச் சிலிர்த்துக் கொண்டு எழுந்து அவசரமாய் வந்தது. செம்மஞ்சள். ஏதோ கலவனாம். அவனுக்கு நாய்களைப் பிடிப்பதில்லை. அதிலும் வேலை வினைக்கெட்டு வளர்க்கிறவர்களின் செல்லங்களாகி விளையாடுகிற இந்த பிராணிகளில் வெறுப்பே வருகிறது. இதற்கும் இந்த வீட்டில் நடவாத நடப்பு கிட்ட வந்தாலே ஒரு சிணியும் இறைச்சியும் மணமும் எப்போதும் அடிக்கின்றன. இப்போதும் அடித்தன. 

இந்தக் கழுதைக்கு நான் கேற்றைத் திறக்கப் போகிற சங்கதி எப்படி எப்போதும் விளங்கி விடுகிறது? ஒவ்வொரு தரமும் இதை வெளியில் விட்டு விடாமல் கேற்றைத் திறந்து சார்த்துவது பெரும்பாடு. கிடைக்கிற நீக்கலில் தலையை நுழைத்துவிடும். நாயை விட்டுவிடாமல் கேற்றைத் தாண்டுவதென்பது வலுசிக்கலான காரியம்.போதாக் குறைக்கு அதன் உடம்பெல்லாங்கூட காற்சட்டையில் தேய்த்து விடுகிறது அதற்கு இப்போது குட்டைவேறு பிடிக்கத் தொடங்கியிருக்க வேண்டும் என அவன் நம்பினான். 

தெரு அளப்பதில் ஒழுங்கை முகப்பிலிருந்து குப்பைத் தொட்டியை அளைவதில் – தெருக்கரைப் புற்களை அவசரமாக மோப்பம் பிடிப்பதில், ஓடி ஓடி ஒவ்வொரு மரமாகப் பார்த்துப் பின்னங் காலைத் தூக்குவதில். அடுத்தடுத்த வீட்டு அல்சேஷசன்களின் குரல்களில் வெருண்டோடுவதில் இதற்குப் பரமானந்தம் ஒன்று கிடைப்பது நன்றாகத் தெரிகிறது. அல்லது அதன்மட்டில் இதுதான் சுதந்திரமோ? ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கக் கூடிய இந்தப் பிறவியை எக்காரணம் கொண்டும் வெளியில் வரவிடக் கூடாது என்பது முதலில் வேண்டுதலாகவும் பிறகு வெருட்டலாகவும் வீட்டுக் காரரால் அவனுக்கு விடப்பட்டிருக்கிறது. 

பாதை முடிகிற இடத்தில் புற்றரை பத்தடிக்குப் பத்தடி சதுரமாக வளர்ந்த புலி. அதைத் தாண்டினால் கேற். இவ்வளவு நேரமும் பின்னால் வந்துகொண்டிருந்த நாய். இப்போது முந்திக்கொண்டு கேற்றடிக்கு ஓடியது. கொழுக்கியில் அவன் கை வைக்கு முன்பே மூக்கை நுழைத்தது. மேலிற் பட்டுவிடாமல் விலகி நின்று கொழுக்கியைக் கழற்றினான். கேற்றை மெல்ல நீக்கினான். ப்றூணோ விழுந்தடித்து நுழைந்து, அவன் மறிப்பதற்குள் ஒழுங்கையில் பாய்ந்தது. 

இப்போது பயப்படாமல் கேற்றைத் திறந்தான். வெளியே வந்து கொழுக்கியை மாட்டினான். “மிஸ்டர்…. என்று காரமான குரல் கேட்டது. வீட்டுக்காரரின் மனைவி முன் கதவடியில் நின்றா. 

“எனன. எங்கட நாயை நீங்கள் வெளியாலை விட்டிட்டுப் போறீங்கள்?”. 

மனுசியின் முகம் கோபத்தில் கோணியிருந்தது. உள்ளுக்கிருந்து பார்த்து விட்டு ஓடி வந்திருக்க வேண்டும். அந்த ப்றூணோவின் முகத்திற்கும் இதற்கும் அதிகப்பட்ச வேற்றுமையில்லை என்பதாக இப்படியான வேளைகளில் அடிக்கடி படுகிறது. ஒரு கண்ணாடிதான் வித்தியாசம். அந்தக் கேள்விக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. 

“ஓம்…” என்றான். 

மிஸிஸ். பஞ்சாட்சரத்திற்கு ஆத்திரம் உச்சிக்கு ஏறியிருக்கலாம். 

“இனி அதைப் பிடிக்கிறது ஆர்? “

“நான் போக விடேல்லை… தானாகத்தான் ஓடினது”. 

“அதை விடாமல் போகத் தெரியாதா?” 

“அதெப்படி? எனக்கு முதல் அது ஓடுதே..?” 

“வேணுமெண்டு போகவிட்டிட்டு இப்ப சொல்றீர்”. வயதுக்கு  எவ்வளவோ மூத்த மனுசிதானென்றாலும். ‘ங்கள் இப்போது ர் க்கு இறங்கிவிட்டதில் அவனுக்கும் சினம் கனன்றது. 

“அதை நீங்கள் கட்டி வைக்கவேணும்……..”

“கட்டிக்கொண்டிருக்க வேற வேலை இல்லையா?” 

“எனக்கும் நாய் பிடிக்கிற வேலை இல்லை….”

மனுசி. கோபத்தில் ஒரு நிமிடம் குழம்பி நின்றது தெரிந்தது 

“பின்னேரம் அவர் வரட்டும் நீங்கள் கெதியா வேற இடம் பாருங்கோ..” 

“அவர் வரட்டும்….கதைப்பம்..” அவன் சொன்னான் “ஆனால் கெதியா வேற இடம் பார்கேலாது….மூன்றுமாத நோட்டீஸ் நீங்கள் தரவேணும். அதுமுந்தி ஒப்புக்கொண்ட விஷயம்”

இது. அமைதியான தனி ஒழுங்கையாயிருப்பதில் ஒரு நன்மை. இந்தச் சணடையை அதிகம்பேர் பார்த்திருக்க முடியாது. மிஞ்சிப்போனால், பக்கத்து வீட்டுக்கும். முன்வீட்டுக்கும் கேட்டிருக்கலாம். ஆனால் அவர்களுக்கு. அவனிலும் பார்க்க அதிகமாக இந்த மனுசியைத தெரிந்திருக்கும். 

வேணிக்கு நிச்சயமாகக் கேட்டிராது. ஆனபடியால் போய் விளங்கப்படுத்தத் தேவையில்லை. பின்னேரம் வந்து சொல்லிக்கொள்ளலாம். 

இந்தப் பிரச்சினையில் ஐந்து நிமிஷம் வீணாகிவிட்டது. காலையின் புத்துணர்வும் கெட்டுவிட்ட மாதிரியிருந்தது. அவன் நடக்கத் தொடங்கினான். 

ஒழுங்கை அமைதியாக இருந்தது. அந்த அமைதியே அழகாகவும் எதிரே ஐம்பது யார் தூரத்தில் கொழும்பு பரபரத்துப் பறந்துக்கொண்டிருந்தது. ஒரு ராட்சத ர். வி.யில் மாதிரி தெரு தெரிந்தது. ஒழுங்கை வந்து மிதக்கிற இடத்தில் இடப்புறம் தபாற்பெட்டியும். வலப்புறம் குப்பைத் தொட்டியும் காவல். கிழக்கே திரும்பி நடந்தான். வெய்யில் முகத்திலடித்து எரிந்தது. அதிலுங் கூடுதலாக மனம்! எழிய குணம் என்னதான் பெரிய மனுஷ வேஷம் போட்டாலும் உள்ளேயிருக்கிறது சூத்தைதான். 

வேணி பாவம். இபப்படியான ஆட்களுக்கு நடுவில் நாள் முழுவதையும் கழிக்க வேண்டியிருக்கிறது. அவன் திரும்பி வருகிறவரை ரேடியோவும் புத்தகங்களுமே கதி. சிலநேரம் மைனாக்களும் வரலாம். ஆனால் மைனாக்கள் மத்தியானத்தில் வருமா என்பது அவனுக்கு நிச்சமாய்த் தெரியவில்லை. 

யாழ்ப்பாணத்துச் சனங்களென்று நம்பி வந்ததெல்லாம் பிரயோசனமில்லை. வாடகைக்கு அனெக்ஸ் தேடுகிறபோதெல்லாம் வீட்டுக்காரர்களும் யாழ்ப்பாணத்து ஆட்களில் வாரப்பாடு காட்டுவதை அவன் கண்டிருந்தான். ஆரம்பத்தில் இது ஒரு பெருமை தரக்கூடிய விஷயமாகவும்பட்டது 

பிறகு இந்தத் ‘தேடல்’ அநுபவ முதிர்ச்சியின் பின்தான் விஷயம் புரிந்தது. அவர்களையென்றால், ‘எழுப்புவது’ சுலபம். சண்டை, சச்சரவு. கோடு முறைப்பாடெல்லாமிராது. பயந்து உடனே விட்டுவிடுவார்கள். இதுதான் அந்தப் பரவலான பிரியத்தைக் கொடுக்கிறது. 

இந்த அனெக்சுக்கு வந்து இரண்டு வருஷமாகிவிட்டது. முதல் வருஷத்தில் பிரச்சினைகளேயில்லை. இப்பொழுது இலேசு இலேசாகத் தலை தூக்குகின்றன. இன்று கொஞ்சம் அதிகம்தான்.இனி. அனேகமாக. அடுத்த வருஷத்துக்குள் விட்டுவிட வேண்டிய நிலை வரலாம். அப்படி விடச் செய்வதில் வீட்டுக்காரர்களுக்கு ஆதாயமுண்டு. இந்த ஒரே பகுதி தொடர்ந்து இருந்தால். வாடகையெல்லாம் ஒப்புக்கொண்ட தொகைதான் வரும். கூட்டுவது கஷ்டம். ஒரு ‘பிடி’ வேறு. இவையெல்லாம் இந்தக் கூடிய பட்ச மூன்றாண்டு விதிகளாற் தகர்க்கப்பட்டு விடுகின்றன. அடுத்த வருஷம் புதிய ஆட்கள் வரும்போது வாடகை முந்நூற்றைம்பதோ நாநூறோ என்று ஆக்கலாம். ஏற்கெனவே இருப்பவர்களிடமெல்லாம் இப்படி அதிகரித்துவிட முடியாது. 

இந்த இடத்தை விட்டால் பிறகு எங்கே போகவேண்டியிருக்கும்? அதெல்லாம் தெரியாது. சொல்ல முடியாது. மூன்றுமாத நோட்டீஸ் கிடைத்தவுடன் தெரிந்தவர்களிடம் சொல்லிவைக்கவேண்டும். இரண்டு மாதமே மீதி என்றிருக்கும் போது தரகர்களைத் தேடவேண்டும். கடைசி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறும் விடிய விடிய எலாம் வைத்தெழும்பி ஒப்ஸேவரும் கையுமாய் கடனோ உடனோ பட்டு பொக்கற்றில் சில ஆயிர அட்வான்சுங் கொண்டு கொழும்பைச் சுற்றிப் பறக்க வேண்டும். மூலைக்கு மூலை. அந்த லேன் எங்கே. இந்த மாவத்தை எங்கே? இது என்ன நம்பர். எத்தனை அறை. எது பாதை. எவ்வளவு அட்வான்ஸ்.. இதெல்லாம் ஒரு சடங்காகவே நடக்கும். 

அநேகமான இடங்களிற் சொல்வார்கள் முக்கியமாகத் தமிழ் வீடுகளில் எங்களுக்குக் காசு முக்கியமில்லை. ஆட்கள்தான் முக்கியம். துணை. துணைதான் தேவை. நல்ல ஆட்கள். யாழ்ப்பாணமா?மிக நல்லது.உங்களைப் பார்க்கத் தொல்லை இல்லாதவர்களாகவே படுகிறது. அட்வான்ஸை உடனே தரவேண்டும். வாடகையெல்லாம் முதலாந் திகதியே தந்துவிட வேண்டும். விளக்குகளெல்லாம் பத்து மணிக்குள் நூர்த்துவிட வேண்டும். விருந்தாளிகள் வரப்படாது. விறகு அடுப்பு எரிக்கப்படாது. 

இந்தத் ‘துணை என்கிற சங்கதி சுவாரஸ்யமானது. அது எப்போதும் ஒருவழிப்பாதை. முக்கிமாக வீட்டுக்காரர்கள் வெளியூருக்குப் போகும்போது வீட்டைப் பார்த்துக் கொள்ளவேண்டும். இரவில் குறிப்பிட்ட நேரத்திற்கு எல்லாம் விளக்குகளையும் போட்டு அணைக்க வேண்டும். அல்லது கள்வர்களுக்கு வீட்டில் ஆட்களில்லாதது தெரிந்துவிடும். இனி இப்படி நாய்களுள்ள வீடென்றால் பாண் வாங்கிப் போடவேண்டும். இதெல்லாம் உதவி – இதை செய்பவர்கள் துணைகள். 

இந்தக் கண்றாவியையெல்லாம் பார்க்கும் போது, கல்யாணமாகிக் கொழும்பிற்கு வந்தபோதே சின்னதாக ஒரு வீட்டை வாங்கியிருக்கலாம் என்று படும். அப்பொழுதெல்லாம் விலை இப்படி ஏறியிருக்கவில்லை. பலபேர் செய்தது மாதிரி ஊரிலிருந்த காணியை – வீட்டை விற்றுவிட்டு இங்கே வாங்கியிருக்கலாம். ஆனால் அவன் அதை விரும்பவில்லை. முட்டாள் வேலை வேணியும் நினைத்தாள். ஐம்பத்தெட்டுக் குப்பிறகு கொழும்பில் வீடு வாங்கியவர்கள் மூளையில்லாத வேலை செய்தவர்கள். *என அவன் முடிவு. இதை எழுபத்தேழும் நிரூபித்தது. 

எழுபத்தேழு கலவரத்தில் இந்த இடத்திற்கு வந்தாயிற்று. அந்த நாட்களை நினைத்தாலே வயிற்றுக்குள் ஏதோ செய்கிறது. இங்கே இருக்கவும் முடியாமல் அகதிமுகாம் நெரிசலும் பிடியாமல். வருவது வரட்டுமென அவனும் வேணியும் ரயிலில் போனார்கள். வேணி துணிச்சல்காரிதான். கடவுள் புண்ணியத்தில் பத்திரமாகப் போய் சேர்ந்தார்கள். இத்தனைக்கும் பஞ்சாட்சரம் குடும்பம் அங்கே போக்கிடமில்லாமல் இந்த வீட்டை விட்டு வரவும் முடியாமல் இங்கேதானிருந்தார்கள். 

திரும்பிவர மூன்றோ. நாலோ மாதங்களாயின. ஊரிலிருந்து ஒரு காலை ரயில் புறப்பட்டு பிற்பகலில் இங்கே வந்து. வீடெல்லாம் துடைத்துத் துப்பரவாக்கிக் குளிக்க இரவு பத்து மணியானது. கொழும்புடன் மீண்டும் ஒட்டிக்கொள்ளக் கொஞ்ச நாட்களாயின. அந்த நாட்களில் பஞ்சாட்சரம் குடும்பம் அண்ணையோ. தம்பியோ என்றிருந்தார்கள். கலவர நினைவுகள் மங்க மங்க உறவும் தூரப் போனது. நீ குடியிருப்பாளன். நான் வீட்டுக்காரன். 

இன்னொரு எழுபத்தேழு வருமா? நினைக்கவே பயமாயிருந்தது. சந்தி திரும்பியதும் பஸ் தரிப்புத் தெரிந்தது. முகத்திற் சுட்ட வெய்யில் இப்போது இடக் கன்னத்தைப் பதம் பார்த்தது தரிப்பில் வழமையான கூட்டம் இல்லை. இப்போது தான் பஸ்ஸோ. பஸ்களோ போயிருக்க வேண்டும். நேரத்தைப் பார்த்தான். சரியாக ஐந்து நிமிஷம் வழமையான நேரத்திலும் பிந்தியிருந்தது. நஷனல்காரச் சிவலை மனிதர். நரைத் தலை சூட்கேஷ்காரர்.சளக் சளக்கிற மூன்று பெண்கள் இவனுடன் பழக்கமாகிவிட்ட சிங்கள இளைஞன் பெயர்கூட இன்னுந் தெரியாது இவர்களைக் காணவில்லை. வழக்கமான சக பிரயாணிகள். அந்த பஸ் போய்த்தானிருக்கவேண்டும். அவன் கொஞ்சம் பிந்த. பஸ் கொஞ்சம் முந்தியிருக்கிறது. அவ்வளவுதான். 

இன்றைக்கு எழுந்ததிலிருந்து பட்ட கஷ்டமெல்லாவற்றிற்கும் ஈடுமாதிரி எதிரே தெரிந்தது. நன்றாகப் பாத்தான். தூரத் திருப்பத்திலிருந்து மேலேறி இரைந்து வருகிறது அவன் பஸ்தான். போதாக் குறைக்கு நெரிசல் இல்லாமல் வருவது மாதிரியும் இருக்கிறது. 

தெரு விளக்குத் தூண் நிழலிலிருந்து வெளிவந்து கையை நீட்டினான். அவன்தான் ஒரே ஆள். இதில் ஏற. பஸ் லீ வாக இருந்தது. வாசலுக்கு நேர் இருக்கையில் குந்தினான். எல்லாமாக ஏழெட்டுப்பேர் கூட இல்லை. இந்த நேரத்திற்கு இப்படி ஒரு பஸ் வருகிறது. இவ்வளவு நாளும் எப்படித் தெரியாமல் போயிற்று? 

ஸீஸன் ரிக்கற்றை எடுத்துக்கொண்டிருந்தபோது, ‘ஹலோ கிருஷ்ணா… என்று அருகில் கேட்டது. யார்? பையை மூடிக்கொண்டு நிமிர்ந்தான். கொண்டக்டர் சிவா! ஹலோ சிவா’ ஆச்சரியமாய் இருந்தது. சந்தோஷமாயிருந்தது. சிவாவை இங்கே இந்த நேரத்தில். இந்த வெறும் பஸ்ஸில் சந்தித்தது வலு சந்தோஷமான சங்கதிதான். ஊரவன். பாலியகால நண்பன். எவ்வளவு காலத்திற்குப் பின். கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு முன்பாக ஒரு நாள் இதே இடத்தில். இதே ரூட் பஸ்ஸில் சிவாவை சந்தித்தான். ஆனால் அப்போது மத்தியானம். பஸ் நிரம்பி வழிந்தது. இருவரும் பேசமுடியாதிருந்தது. போதாக் குறைக்கு அன்றைக்கு இந்த சிவா புதிரொன்றை வேறு போட்டுவிட்டுப் போயிருந்தான். இன்றைக்குக் கேட்கலாம். 

“எப்படி கிருஷ்ணா.. அண்டைக்கும் கதைக்க முடியாமல் போச்சு…” சிவா முன் ஸீற்றில் இவனைப் பார்த்தபடி குந்தினான். ஸீஸன் ரிக்கற்றை நீட்டிய கையைப் பிடித்துக்கொண்டான். 

“..இங்கை கிட்டத்தானா இருக்கிறீர்? “

கிருஷ்ணன் இடத்தைச் சொன்னான். சிவா ரிக்கற்றில் அடையாளம் பண்ணிக் கொடுக்குமட்டும் பார்த்திருந்தான். “நீர் இந்த ரூட் தானா? எவ்வளவு காலம்?” 

“இல்லை நான் பிலியந்தலை. இண்டைக்கு மட்டும் இந்த ரூட்… இந்த பஸ்ஸையும் அரைவாசியிலை திருப்பி விட்டிருக்கு”. 

“இது இண்டைக்கு மட்டுந்தானா?” கிருஷ்ணனுக்கு ஏமாற்றமாயிருந்தது. 

“சரி, பிறகெப்படி? …சொல்லும்..” சிவா கேட்டான். 

“நீர் தான் சொல்ல வேணும் உம்மட்டத்தான் முக்கியமான ஒரு விஷயம் கேட்க வேணும்”. 

“அதென்ன?…” சிவாவுக்கு ஆச்சரியம் வந்திருக்கும். 

பஸ் அடுத்த தரிப்பில் நின்றது. இரண்டு பேர் ஏறினார்கள். சிவா எழுந்து மணியை அடித்துவிட்டு, அவர்களுக்கு ரிக்கெற் கொடுக்கப் போனான். கிருஷ்ணனுக்கு ஏமாற்றமாயிருந்தது. போன முறை போலத்தான் இம் முறையும் நடக்கப் போகிறது போலிருக்கிறது. கதைக்க நேரங் கிடைக்கப் போவதில்லை. 

சிவாவுக்கு முன் வழுக்கை பள பளத்தது. தாடியும் மீசையும் அடர்ந்திருந்த சிவந்த முகத்திற்கு இந்த வழுக்கை நன்றாய்த் தானிருக்கின்றது. சிவா சரளமாகச் சிங்களம் பேசுகிறான். இவ்வளவு வேகமாக அவன் தமிழிற் கூட சின்ன வயதில் பேசிய ஞாபகமில்லை. இதைத்தான் போன தடவை கேட்கமுடியாமற் போனது. சிவா ஏன் தமிழ்ப் பிரயாணிகளுடன் கூட சிங்களத்தில் பேசுகிறான்? தமிழர்கள் என்று நிச்சயமாகத் தம்மை அடையாளங் காட்டுகிறவர்களிடங் கூட? 

அவனுக்கு காது குத்தியிருக்கிறது. துவாரம் தெரிகிறதா? என்று கிருஷ்ணன் பார்த்தான். இங்கிருந்து வடிவாகத் தெரியவில்லை. பஸ் அடுத்த முடக்கில் திரும்பியது. கைபிடிக் கம்பிகளைப் பற்றாமலே. சிவா அநாயாசமாக இவனை நோக்கி வந்தான். “தள்ளியிரும்” இவன் பக்கத்திலேயே உட்கார்ந்தான்.. காதுகுத்தியிருக்கவில்லைத்தான். 

“என்ன கேட்க்கப் போறதெண்டு சொன்னீர்?” சிவாவின் குரல் கொஞ்சம் சப்தங் குறைந்திருந்ததாக இப்போது பட்டது. 

“நீர் ஏன் தமிழ் ஆட்களோடு கூட சிங்களத்திலை பேசுறீர்?”

“இவையள் தமிழ் ஆட்களா?…..” 

சிவா. ஒரு சீற் தள்ளியிருந்த அந்த இருவரையும் பார்த்தான்.

“இல்லை. அவையில்லை. ஆனா போன முறை கவனிச்சன்…”  

சிவா சிரித்தான். 

“இது என்ன கிருஷ்ணா. உமக்குத் தெரியாதா….?” 

“என்ன?” 

“நான் எந்தெந்தத் தொங்கலெல்லாம் போய் வர வேண்டியவன்…இன்னாரெண்டு தெரிஞ்சால் சிக்கல் தானே?” கிருஷ்ணனுக்குக் கோபம் வந்தது. 

“உமக்குத் தாழ்வு மனப்பான்மை……” சிவா இப்போதும் சிரித்தான். 

“இருக்கலாம்…எனக்குமட்டுமில்லை….அது எங்கட சனத்துக்கே நல்லா ஏற்படுத்தப்பட்டிருக்கு ஆனா. என்னைப் பொறுத்தளவில் இன்னொரு காரணமும் இருக்கு.. “

“என்ன அது” 

“பயம்!” 

கிருஷ்ணன் ஒரு நிமிஷம் பேசாமல் சிவாவைப் பார்த்தான். 

“ஸொறி.சிவா…”கிருஷ்ணன் சொன்னான் 

“நீர் சொல்றது சரி தான்..நான் கேட்டதுக்குக் கோபியாதையும்…”

“இதுக்கென்ன கோபம்.ஒரு நாளைக்கு எத்தனையோ தரம் இந்தக் கேள்வி எனக்குள்ளையே வருகுதுதானே'”

சிவா மீண்டும் கிருஷ்ணனின் கைகளைப் பிடித்தான். 

பஸ் தடங்கலில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது. உள்ள சனத்தையெல்லாம், முன்னால் போனது அள்ளிக் கொண்டு போயிருக்கும். 

கிருஷ்ணனின் இடம் நெருங்கிக் கொண்டு வந்தது. 

“நான் இறங்க வேணும் சிவா இனி இந்த ரூட்டிலை எப்ப வருவீர்?”

“அது சொல்லேலாது….” 

“அப்ப வீட்டை வாருமன் ஒரு நாளைக்கு… விலாசம் இப்ப தெரியுந்தானே?” 

“கட்டாயம்..”  சிவா தானே எழும்பி மணியடித்தான். 

வழமையான நேரத்திற்கே வந்து இறங்கியாயிற்று. இந்த பஸ் இப்படி ஒவ்வொரு நாளும் வந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும். இப்போது ஆறுதலாகவே நடக்கலாம். அவதிப்படத் தேவையில்லை. வெய்யில் இன்னமும் சுட்டது. தலையைத் திருப்பி அண்ணாந்து பார்த்தான். மேகங்கள் இங்குமிருந்தன. மைனாக்களின் நினைவு வந்தது. வேணிக்கு அப்போது தான் போட்ட சத்தம் கேட்டிருக்குமா? கேட்டிருந்தால். தவித்துக் கொண்டிருப்பாள். 

பஞ்சாட்சரம் குடும்பங்கூட பாவமென்றுதான் இப்போது படுகிறது. ஒரு நாய்க்காக இவ்வளவு கத்தியிருக்கவேண்டியதில்லை. அவர்கள் செய்த முட்டாள்வேலை. ஊரைவிட்டு இங்கு வேரூன்ற முயன்றது. ஆனால் ஒரு விதத்தில் பார்க்கும் போது அதைக்கூட பிழையென்று சொல்லமுடியாது. இது தான் தலைநகரென்றிருக்கிறபோது எங்களுக்கும் இங்கே உரித்திருக்கிறது தான்….. 

நடைபாதைகள் என்று இந்தத் தெருவில் இல்லை. இரண்டு பக்கங்களிலும் புடைத்துப் பருத்த வாகைகள். இன்னும் காட்டுத் தீ மரங்கள். மஞ்சளும், சிவப்புமான இதழ்கள் உதிர்ந்து கிடந்தன. அடுத்த மரத்தடியில் விலகி நடக்கவேண்டும். கொக்குகளுக்கும், காகங்களுக்கும் விருப்பமான இடமாக அது திகழ்கிறது. கீழே தார் றோட்டெல்லாம் வெள்ளையடித்த மாதிரி இருந்தது. நாற்றம் மூச்சு விடச் சங்கடப்படுத்தியது. அவசரமாகத் தாண்டினான். மாலைகளிலென்றால். இப்படிக் கீழே நடப்பதுகூட ஆபத்து. மழை நாட்களில் இன்னும் மோசம. 

இந்த இடத்தோடும். இந்தத் தெருக்களோடும் பத்து வருடங்களுக்கு மேலாகப் பரிச்சயம். ஆனாலும் எழுபத்தேழுக்கு முன்னிருந்த ஒட்டுதல் இப்போதில்லை என உணர முடிகிறது. ஒரு அந்நியம் தெரிகிறது. யாரோ பின்னால் விரைந்து வரும் சப்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான். நல்லலிங்கம். 

“வரட்டா தம்பி? நேரமாச்சு’ 

“ஓமோம்…” என்று விடைகொடுத்தான். ஓடாத குறையாகத் தாண்டிப் போனார். அடுத்த கந்தோரில் வேலை செய்கிறவர். எட்டே முக்காலுக்கு இங்கு நிற்கவேண்டிய ஆள். வத்தளையிலிருந்து வரவேண்டும். குடும்பம் மட்டக்கிளப்பில் தனியாகச் சமைத்துச் சாப்பாடு கட்டிக்கொண்டு பஸ்ஸையும். பிடித்து இவ்வளவுதூரம் வருவதென்றால் கஷ்டந்தான். உழைப்புக்காக ஊரைவிட்டு வந்து இப்படி அல்லல்படுகிற எங்கள் ஆட்கள் எல்லோருமே பாவந்தான். இது ஏன் இப்படியானது? சிவா சொன்ன பதில். சின்ன விஷய மில்லை என்று தான் படுகிறது. தான் என்ன செய்யலாம்-இந்த இழுவையில் அகப்பட்டுப் போகிற ஒரு துரும்பு? 

எதிரே. பதுர்தீனின் வண்டிக்கடை நின்றது. தள்ளுவண்டியில் சோடா, சிகரற்.வெற்றிலை. இனிப்புக்கள் எல்லாம் வைத்துக்கொண்டு பதுர்தீன் வியாபாரம் செய்கிறார். இதுதான் அவர் இடம். இந்த வாகை மரத்தடி வண்டிக்குச் சில்லுகளிருந்தாலும் வேறிடத்தில் கண்ட ஞாபகமில்லை. வீட்டுக்குத் தள்ளிப் போய்வர மட்டும் பாவிக்கிறாராயிருக்கும். கொம்பனித் தெருவிலிருக்கிறார். வெள்ளி பகல் தவிர்ந்த எல்லா நாட்களிலும் எல்லா நேரங்களிலும் பதுர்தீன் கடையை இங்கே காணமுடிகிறது. 

“வாங்க தொரே…” என்றார் பதுர்தீன. 

“…..எத்தனை? மூணு தானா?” 

எப்படியும் ஐம்பது வயதுக்கு மேல் மதிக்கக் கூடிய பதுர்தீன் ‘தொரே’ என்கிறபோதெல்லாம் அவனுக்குக் கஷ்டமாயிருக்கிறது. 

“மூண்டுதான் ” என்றான கந்தோர் கன்ரீனில் சிகரட் கிடைப்பதில்லை. 

ஒரு வெறும் பெட்டியில் போட்டுக் கொடுத்து விட்டு சில்லறையை வாங்கினார். 

“மழை வர்ற மாதிரியிருக்கே…. குடை இல்லாம வாறீங்களே..” 

இவருக்கு எப்படி உரத்துப் பேச முடிகிறது? 

“வரட்டும், வரட்டும்…” அண்ணாந்து பார்த்தான். 

“நான் வரட்டடா?” 

“சரி. வாங்க”. 

கிருஷ்ணனுக்கு இந்த மனிதரை நன்றாகப் பிடிக்கிறது. எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கிறார். இரண்டு பாஷையும் தண்ணிப்பட்டபாடாக வருகிறது. தமிழிலும் உரத்துப் பேசுகிறார். 

சிவாவின் பதிலையும் பதுர்தீனையும் எந்தளவுக்கு சேர்த்துப் பார்ப்பது சரி? 

கந்தோர் வாசல் இங்கிருந்து தெரிந்தது. வளைந்த முதுகும் விரைந்த நடையுமாய் ஜஸ்ரின் எதிர்ப் பக்கத்திலிருந்து வந்து உள்ளே நுழைகின்றான். இன்றைக்கு எவ்வளவாக வேலையிருக்கும்? கையிலிருப்பதை அரை மணித் தியாலத் திற்குள் முடித்துக் கொடுத்துவிடலாம். அது இன்று சரிபார்க்கப்பட்டு. பிழை ஏதுமிருந்தால், திருத்தவேண்டி வரும். மற்றும் படி புதிதாக ஏதும் வந்தாலொழிய நேரம் கிடைக்கும். வீட்டிற்குக் கடிதமெழுதலாம் எப்போது வருகிறோம் என்றெழுதுவது? மாதவன், தன் லீவு முடிந்து திரும்புகிற வரைக்கும். லீவு கிடைக்கப் போவதில்லை. அவன் வர இன்னும் ஒரு கிழமைக்கு மேலாகும். மாதம் முடிய வருகிறோம் என்றுதான் எழுத முடியும். 

தன் மேசைக்கு வந்த போது எட்டு ஐம்பத்தைந்து. பையை வைத்துவிட்டு லாச்சியைத் திறந்து பேனையை எடுத்துக் கொண்டு போனான். கையெழுத்து வைத்து விட்டு வரும்போது. ஜி. பி. எழுந்து கூட வந்தான். “உன்னோடு ஒரு கதை…” 

“என்ன அது?”

கிருஷ்ணனுக்குப் பக்கத்தில் இன்னொரு கதிரையை இழுத்துப் போட்டுக் கொண்டு ஜி.பி. உட்கார்ந்தான். 

“சொல்லு…. ” என்றான். கிருஷ்ணன், லாச்சியைத் திறந்தபடி.

“நான் வந்தது அரை மணித்தியாலத்துக்கு முந்தி…” என்றான் ஜி. பி. சிங்களத்தில் 

“பக்கத்துக் கந்தோர் ரைப்பிஸ்ட் பெட்டை எட்டரைக்கு வருமட்டும் நீ அப்படித்தான் வருவாய்!” 

“பகிடி வேண்டாம் மச்சான் எங்கம் அப்ளிகேஷன்கள் போட்டோமில்லையா?” 

“இந்தா ஜி.பி.. நீ அரை மணித்தியாலம் முந்தி வாறதுக்கும் எங்கட அப்ளிகேஷன்களுக்கும் என்ன சம்பந்தம்?” 

“சுமதிபால தெரியுந்தானே உனக்கு?” 

“என்ன. மூண்டாவது கொப்புக்குப் பாய்கிறாய்?” 

“சுமதியைத் தெரியாதா உனக்கு….” ஜி. பி. மீண்டும் கேட்டான்.

“எந்த? ‘எம்’ செக்ஷன்?” 

“அவனே தான்…. அவனை வரும்போது ரயிலில் சந்தித்தேன்” 

“ம்ம்?” இனி அடுத்தது. எங்கே இவன் பாயப்போகின்றான் என்று கிருஷ்ணன் யோசித்தான். 

“எங்கட அப்ளிகேஷன் கதை எல்லாம் முடிந்தது!..”

அவன் சொன்னான் 

“என்ன அது?.. பேய்க்கதை” 

“வருத்தம் தெரிவித்து பதிலும் ரைப் பண்ணியாச்சாம்.பெரியவர் கையெழுத்துப் போடவேண்டியதுதான் மிச்சம்….” 

“உண்மைதானா?….” 

“உண்மைதான். சுமதி பொய் சொல்லமாட்டான்”.

“என்னத்துக்காம்? என்ன காரணம்..?” 

“பெர்னாண்டோ. இங்க வா……’ ஜி. பி. இவனை விட்டு விட்டு பெர்னாண்டோவைக் கூப்பிட்டான். அவனும் வந்த பிறகுதான் இனி இவன் பதில் சொல்வான். கிருஷ்ணன் பையை லாச்சிக்குள் வைத்து மூடினான். 

பெர்னாண்டோ தனியே வரவில்லை. பின்னால். நந்தாவும் அநுலாவும்- 

“உங்களுக்குத் தெரியுமா சங்கதி?’ ஜி. பி. அந்த மூவரையும் பார்த்துக் கேட்டான். 

“எல்லோருக்கும் சொல்லு விஷயத்தை….’ கிருஷ்ணன் எழுந்து போனிடம் போனான். 

சுமதிபால தன் இடத்தில் தானிருந்தான். ஜி. பி. சொன்னது சரி. அவ்வளவையும் சுமதி இவனுக்குச் சொன்னான். 

“ஏ.டி. க்கு என்ன ஆட்சேபம்?’ 

“ஒண்டல்ல….இரண்டு’ 

“என்னவாம்?’ 

“முதலாவது உங்கட ஸேவிசிலை ஆட்கள் குறையத் தொடங்கிவிடுமாம். மற்றது. வெளிக்கள ஆட்கள் தங்களுக்குப் போட்டி என்று எதிர்க்கக்கூடும்…..” 

“அது அவருடைய ஊகந்தானே?” 

“நீர் தானே உங்கட யூனியன் காரியதரிசி” சுமதி கேட்டான் 

“ஓம்..” 

“ஒரு தரம் அவரை நேரிலை கண்டு பேசுமேன்..” 

“அதுதான் செய்யவேணும்…. இதுக்கிடையிலை சரியான நிலவரம் அறிய உம்மட்ட ஒருக்கா வரலாமா?”

“வாரும்..” 

கிருஷ்ணன் தன் இடத்திற்குத் திரும்பியபோது ஒரு கும்பல் நின்றது. 

“என்னவாம்?” 

“யாருக்குப் போன் பண்ணினாய்?” 

அவன் பதில் சொல்வதற்குள் பெரேரா வந்தார். 

“ஐஸே. என்ன இது? என்ன கும்பல்?இப்ப என்ன நேரம்?”

“இல்லை மிஷ்டர் பெரேரா” கிருஷ்ணனிடந் திரும்பிக் கேட்டார். 

“வேறென்ன? ஏ.டி. யைத் தான் காணவேணும்……” 

“கோட்டைக்கெல்லா போகவேணும்? இப்பவே போகப்போறியா?”

“போகத்தான் வேணும்… ஆனா. கையிலை ஒரு சின்ன வேலை இருக்கு. ” 

“நீ போ மச்சான்… நான் செய்து கொடுக்கிறேன் அதை……” என்றான் பெர்னாண்டோ. 

“அப்ப பிரச்சினையே இல்லை….” பெரேரா சொன்னார். பையை எடுத்து வெளியே வைத்தான். யூனியன் ஃபைலை எடுத்துப் பைக்குள் திணித்துக் கொண்டு லாச்சியைச் சாத்தியபோது ஒரு யோசனை வந்தது. ஏ. டி. க்காகக் காத்திருக்கிறபோதாவது வீட்டுக்கு கடிதமெழுத முடியலாம். லாச்சியை மீண்டுந் திறந்து ஒரு ஒற்றை, முத்திரை என்வலப், எடுத்துப் பைக்குள் வைத்தான் 

அந்தக் கிழவனுக்கு வடிவாச் சொல்லு. பூட்டிக் கொண்டிருந்தபோது நந்த சொன்னான். 

கதிரையைத் தள்ளிவிட்டு எழுந்தான். “வெற்றிக்கு வாழ்த்துக்கள்…”. அநுலா சிரித்தான். 

“…வழமைபோல வெற்றிக்கு!” முருகவேள் திருத்தினான். எல்லோரும் சிரித்தார்கள். 

வெளியே வந்தபோது பத்து மணிக்கு ஐந்து நிமிஷமிருந்தது. பத்தரைக்குள் போய்விட முடியுமா? பஸ் கிடைப்பதைப் பொறுத்தது. மந்தாரமில்லாமல் வெய்யில் நல்ல வெளிச்சமாக இருந்தது. 

அப்போது வந்திறங்கிய நிறுத்தத்திலிருந்துதான் கோட்டைக்கு பஸ் எடுக்கவேண்டும். நடந்தான். 

என்ன தொரே. உடனே திரும்புறீங்க?…. பதுர்தீன் யாரோ வாடிக்கையாளருடன் சம்பாஷணையை இடைமுறித்துக் கொண்டு இவனைப் பார்த்துக் கேட்டார். 

“கோட்டைக்கு ஒரு அலுவல் போய்வர வேண்டியிருக்கு…” 

இன்றைக்கு பஸ்ஸைப் பொறுத்தளவில் ராசியான ஒருநாளாயிருக்க வேண்டும். வந்து நின்றதும் நிற்காததுமாய் 107 வந்தது.சன னமும் அவ்வளவில்லை. உண்மையில் இது பஸ் பயணத்திற்கு ஒரு தோதான நேரம். இந்தப் பத்துப் பதினொன்றை அண்டிய வேளை காலைக் கும்பல் போயிருக்கும். மதியப் பரபரப்புக்கு நேரமிருக்கிறது. 

ஜன்னலருகோடு ஸீற் கிடைத்தது. எதிர்காற்று முகத்திலடித்தது. ஏ. டி. இந்த நேரத்தில் இருப்பாரா? இருக்கவேணும்.சந்திக்கமுடியுமா? மூட் எப்படியிருக்கும்? எப்படியாவது அப்ளிகேஷன்களை ஒப்புக் கொள்ளப்பண்ணவேணும் முப்பத்தைந்து பேருடைய எதிர்காலம்! ஊழியர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக நிறுவனத்திற்கும் நன்மை என்று ஏன் உணர மறுக்கிறார்கள்? 

இந்தத் தொழிற்சங்க வேலை மீண்டும் எப்படியோ தன்னிடமே வந்து சேர்ந்திருக்கிறது. எழுப்பத்தேழுக்கு முதல் ஒரு மூன்று வருஷம் அவன்தான் சங்கத்தின் இந்த அலுவலகக் கிளைக் காரியதரிசியாக இருந்தான். கிட்டத்தட்ட நூறுக்கும் மேல் உறுப்பினர்கள். அதில கால்வாசிதான் தமிழர்களென்றாலும் இந்தக் கௌரவம் அவனைச் சேர்ந்தது. 

எழுபத்தேழில் இதிலும் ஒரு நெருடல் ஏற்படத்தான் செய்தது. மனதை உறுத்துகிற நெருடல். அதோடு போட்டது போட்டபடியே போய். திரும்பிவந்து ஓராண்டுக்குள் மீண்டும் இந்தப் பொறுப்பை எற்றுக் கொள்ள எப்படி முடிந்தது? கடந்த வருடாந்தக் கூட்டத்தில் தன் பெயர் பிரேரிக்கப்பட்போது. மறுதலிக்க உன்னிய நாக்கை அடக்கியது எது? இன்னுந்தான் தெரியவில்லை.பார். பார் என்னை இன்னமும் மதிக்கிறார்கள். என்று நடப்புக் காட்டும் முனைப்பா? அதுவே. தன்னிடமும் அங்கீகாரத்தை வேண்டி நிற்கும் – தாழ்வு மனப்பான்மை எங்கோ ஒளிந்திருக்கிறதைக் காட்டுகிறதா? ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது விசித்திரமாயும், வியப்பாயும் எல்லாமே கோமாளித்தனமாகவும். இருந்திருந்து விட்டுப் படுகிறது. 

மூன்று பாஷைகளிலும் வாயடிக்ககக் கூடிய வலு. பேயன் போல அலைகிற தன்மை. காரியத்தைக் கொண்டு போகிறதாக மற்றவர்கள் – நினைக்கிற கெட்டித்தனம். இவையெல்லாம் உண்மையிலேயே உள்ளனதானா? உள்ளதென்றாலும். பெருமை என்ற கரட்டின் பின்னால் நடக்கிற கழுதைப் புத்தியென்றே படுகிறது. ஒப்புக்கொண்டாயிற்று. மீறவும் முடியாது. ஒப்புக்கொள்ளாமல் அல்லது கிடைக்காமல் போயிருந்தால் அதுவும் தன் ஈகோவுக்கு எப்படியிருந்திருக்கும்? 

இந்த வாழ்க்கையில் – தனக்கோ. தன் குடும்பத்துக்கோ. தன் சமுதாயத்திற்கோ எந்தப் பிரயோசனமுமில்லாத இந்தச் செக்குமாட்டு வாழ்க்கை என்று அடிக்கடி வருகிற உறுத்தலால் உபயோகமாக ஏதாவது செய்யவேண்டுமென்று அடிக்கடி கிளர்கிற முனைப்பின் குறைந்தபட்ச வெளிப்பாடாயுமிருக்கலாம். 

சரி. இப்போ போய். ஏ. டி. யைக் கண்டு வாதம்பண்ணி. அப்ளிகேஷன்களை ஒப்புக்கொள்ளவைத்து…அது வெற்றிதான் கிருஷ்ணன் வீரனாகலாம். அதன் பிறகு எக்ஸாம். அதைப் பாஸ் பண்ணுவது ஒரு பொருட்டல்ல. அதுவும் சரி. பிறகு? உத்தியோகத்தில் ஒரு படி மேலே போகலாம். போய் அடுத்த அடி விழ விட்டு விட்டுப் போகப்போகிற உத்தியோகந்தானே …அதற்காக ஏனிந்தப்பாடு? இந்த மாயமான் வேட்டை? 

எழுபத்தேழில் ஊரோடு நின்ற அந்த மூன்று மாதங்களில் என்னென்ன யோசனைகள் வந்தன? எத்தனை தொழில்களைச் செய்ய முயன்றான்? ஊரில் – சரி, மிஞ்சிப்போனால் யாழ்ப்பாணத்தில் எல்லா லாருமே கட்டிடங்களைக் கட்டப் போகிறார்களா?என்ன? என்றாலும் கட்டிட வேலைகள் என்றொன்றைத் தொடக்கலாம். ஒரு பெயர்ப் பலகை போட்டுக்கொண்டால் சரி, மார்க்கட் பிடிக்கும் வரை போர்ட்டைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. தோட்டஞ் செய்யலாம். கோழி வளர்க்கலாம்… அதுவா, இதுவா அதுவும். இதுவுமா என்றெல்லாம் கொஞ்சங்கொஞ்ச ஆயத்தங்கள் செய்துகொண்டிருக்கும்போது, வந்தவர்களெல்லாம் ஒவ்வொருவராகத் திரும்பத் தொடங்கியிருந்தார்கள்….. 

கடைசி ஆளாகக் கந்தோருக்கு வந்தபோது ‘இவ்வளவு நாளும் என்ன செய்தாய்?’ ‘அவ்வளவுக்குப் பயந்துவிட்டாயா?’ என்றெல்லாம் இங்கத்தியச் சகாக்கள் கேட்டார்கள். வராமலும் ஒன்றும் செய்திருக்க முடியாது என்பதையும் சொல்ல முடியாது. மெல்லச் சிரித்துவிடலாம். அந்த நாட்களில் சுப் ஒன்றைச் சொல்வான். “மச்சான்.இப்ப எவன் தன்ர சுய கௌரவத்தையும் அதே நேரம் இவர்களின்ர நல்லெண்ணத்தையும் காப்பாற்றிக் கொள்கிறானோ. அவன் சிறந்த ராஜதந்திரி…” 

பஸ்ஸால் இறங்கியபோது சரியாகப் பத்தரை . இந்தத் தெருவைக் கடப்பது யமகண்டம். கொழும்பின் வரட்சியைக் காட்டுகிற கோட்டை தலைமை அலுவலகத்திலிருந்து, வலு பாடுபட்டுத் தான் இப்போதைய இடத்திற்கு வேலையை மாற்றிக் கொண்டிருந்தான். அங்கே கொஞ்சமாவது பச்சை தெரிகிறது. புழுதி, புகை, நெரிசல், வெக்கை- எல்லாம் இல்லையென்றில்லை. குறைவு. 

சுமதியைத் தேடிப் போனான். அவன் இடத்தில் இல்லை. இப்போ வந்துவிடுவானென்று சொன்னார்கள். முன்னாலிருந்த கதிரையில் உட்கார்ந்தான். ‘எப்படி கிருஷ்ணன்? உங்களுக்கென்ன, குடுத்துவைச்ச நீங்கள்…..” சுமதிபாலவின் இடத்திற்கருகிலிருக்கிற சிவராசா சொன்னார். கிருஷ்ணனுக்கு எரிச்சலாக இருந்தது. 

“ஏன் ஐயா?” என்றான். 

“கந்தோரிலை கையெழுத்தைப் போட்டு நினைச்ச இடமெல்லாம் உலாத்தலாம்… எங்களைப் போல ஃபைலுகளோட மாரடிக்கிற வேலையில்லை…” கதைத்தால் கனக்க வரும். ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு பேசாதிருந்தான் இந்த ஸேவிஸில் இருக்கிறவர்களுக்கு இப்படி ஒரு மனக்குறை! 

“உடனேயே வந்தாச்சா?. என்றபடி சுமதி வந்தான். 

விசேஷமாக ஒன்றுமிருக்கவில்லை. அப்போது தொலைபேசியில் சொன்னதுதான் இப்போது நேரிலும் சொல்ல இருந்தது. 

“எதற்கும் ஏ. டீ. யோடு பேசிப் பார்க்கலாம் நம்பிக்கைக்கு இடமிருக்கிறது…”என்றான். 

மீண்டும் மேசைக் காட்டில் ஒற்றையடித் தடம் பிடித்து வெளியே வரவேண்டியிருந்தது. இது உண்மையிலேயே தனி உலகந்தான் இடத்தால் சனங்களும், சனங்களால் இடமும் குறுகிக் குறுகி… 

ஏ.டி உள்ளே தானிருந்தார். ஆனால் பிஸியாம் யாரோ வெளிநாட்டுக்காரர்களுடன் ஏதோ டிஸ்கஷன் என்று அவருடைய காரியதரிசி சொன்னா. இப்போ தான் வந்திருக்கிறார்கள். இன்னும் அரை மணித்தியாலமாவது ஆகும். 

சந்திக்க வேண்டுகிற விபரங்களை எழுதிக் கொடுத்துவிட்டு. வரவேற்பறையில் போய் உட்கார்ந்தான். மற்ற நாட்களென்றால் இங்கே வெவ்வேறு பிரிவுகளிலுள்ள நண்பர்களைச் சந்திக்க – அலுவல்களைப் பார்க்கப் போயிருப்பான். இன்று நேரத்தை வீணாக்காமல் வீட்டுக்குக் கடிதமெழுத வேண்டும். 

வீட்டுக்குப் போய். மூன்று மாதங்களுக்கு மேலாகிவிட்டது. மூன்று மாதங்களுக்கொருமுறை போய், ஒவ்வொரு மாதம் நின்று விட்டு வருகிற வழமை. கல்யாணத்திற்கு முந்தி நினைத்தபோதெல்லாம் நின்றுநின்றாற்போல் போய்வர முடிந்தது. இருந்தாற்போல யோசனை வரும். வீட்டுக்குப் போகவேண்டும் போலிருக்கும். லீவு போடுவான். ரூம் மேற்றுக்கு ஃபோன் பண்ணுவான். கையை வீசிக்கொண்டே ரயிலேற முடிந்தது. இடங்கிடைத்தால் சரி. இல்லாவிட்டால் எங்காவது ஓரிடத்தில் பழைய பேப்பரைப் போட்டுவிட்டுக் குந்திக் கொள்ளலாம் லீவும் அப்போது பிரச்சனையாயில்லை. கல்யாணத்திற்குப் பிறகு அப்படியெல்லாம் போய் வந்துவிட முடியாதிருந்தது. இங்கும் சின்னதோ- பெரிதோ வீடென்றாகிவிட்டது. இனி. இரண்டு பேருமாகப் போய் பத்து நாளைக்கு முன்பே இடம் றிசேவ் பண்ணி வைக்கவேண்டும்…. அதன் பிறகுதான் இந்த மூன்று மாதத்திட்டம் நடைமுறையில் வந்தது. இங்கிருந்து போனால், இந்த வரட்சியெல்லாந் தீர ஊரில் முக்குளித்து ஊறித் திளைத்துத் திரும்பும்போது கொஞ்சம் மனமில்லாமல்தானிருக்கும். வருஷத்தில் லீவென்பதே மிஞ்சுவதில்லை. இங்கிருக்கிற நாட்களில் கிழமைக்கொரு கடிதம் தப்பாது. இந்தக்கிழமை இன்னமும் போடவில்லை. 

ஊர் நினைவு, வீட்டுப்பாசம் என்றெல்லாவற்றுடனும். பொறுப்பென்று ஒன்றும் இலைமறைகாயாய் இருக்கத்தான் செய்கிறது. அப்பராய் மட்டுமின்றி, அண்ணனாய்த் தம்பியாய், ஆசானாய்த் தோழனாய் என்றெல்லாம் ஒரு பெரு மரமாய்க் குடைகவித்து – நிழல் அளிக்கிற ஐயா இருக்கு மட்டும் விளையாட்டுப் பிள்ளைதானென்றாலும் அவரில்லாத காலத்தில்.. இவையெல்லாவற்றையும் தன்னோடு கொண்டு அவர் போனால்….பொறுப்பெல்லாந் தோளில் வரும்…… ‘அவரில்லாத’ என்ற நினைவுக்காகத் தன்னில் கோபம் வருகிறது. 

கடிதத்தை முடித்து. திரும்ப வாசித்து, உறையிலிட்டு. முத்திரை, முகவரி வேலைகளை முடித்தபிறகும் ஐந்து நிமிஷம் இருந்தது. ஏ. டி. யின் ஸ்ரெனோ சொன்னதில் இருபத்தைந்து நிமிஷங்கள்தான். கழிந்திருக்கின்றன. அரைமணியென்று விதியா என்ன, அஞ்சும் ஆகலாம். முந்தியுமிருக்கலாம். போய்ப் பார்ப்போம். 

இப்போது ஸ்ரெனோவையும் காணவில்லை. என்ன செய்யலாமென்று யோசிப்பதற்குள், ஏ. டி. யின் அறைக் கதவைத் திறந்து கொண்டு அந்த மனுசி வந்தது. செயற்கைப் புருவங்கள் செயற்கை மரியாதை. ஆனால் பாவம் நல்ல மனுசி. 

“இன்னும் அரைமணித்தியாலம் ஆகும் போலிருக்கிறது… உங்கள் துண்டை அப்போதே கொடுத்து விட்டேன்….”

அப்படியானால், பதினொன்றே முக்காலாகும். பன்னிரெண்டிற்கு அந்தாள் சாப்பாட்டிற்குப் போய் விடும். இடையில் பதினைந்தே நிமிஷங்கள் நிச்சய மில்லாத பதினைந்து நிமிஷங்கள் சாப்பாட்டால் திரும்பி வர ஒன்று ஒன்றரை ஆகும். இன்று நல்ல வினைக் கேடுதான். அப்போதும் சந்திப்பது எந்தளவுக்கு நிச்சயம்? வேறெந்த அவசர அலுவல் வருமோ? நாலும் ஆகலாம். சாப்பாடு….? போய்ச் சாப்பிட்டு வருவதிலும் சாப்பிடாமலிருப்பது பரவாயில்லை. வேண்டுமானால் இங்கே கன்ரீனில் ஏதாவது கடித்துக் கொள்ளலாம். நின்று தூங்க வேண்டியது தான்…. 

இதற்கெல்லம் இந்தப் பேயனை விட்டால் வேறெவன் கிடைப்பான்? இதுகள்தான் கணிப்பைத் தருகின்றன. சகாக்களின் மரியாதையைத் தருகின்றன. பிறகு. தன்முனைப்பைத் திருப்திப் படுத்தப் பார்க்கின்றன. இந்த முட்டாள்தனமெல்லாம் எதற்கு? 

இப்போது என்ன செய்யலாம்? மூர்த்தியிடம் போகலாமென்று பட்டது. மூர்த்தி இங்கு வேலை செய்யத் தொடங்பிய காலத்திலிருந்தே நண்பன். அதற்கு முதல் தெரிந்தவன. 

மூர்த்தியோடு தனபாலுங் கூட இருந்தான். உற்சாகமாக வரவேற்றார்கள். 

“வந்திருக்கிறாயெண்டு சுமதி சொன்னான்…..ஏ. டி. யைச் சந்திச்சாச்சா?”. 

கிருஷ்ணன் விபரம் சொன்னான். 

ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு விலை இருக்கத்தான் செய்கிறது. என்று யாரோ சொன்னதைப் போல ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சமயத்தில் இளகத்தான் செய்கிறார்கள். எவ்வளவு தான் வரண்டு தெரிந்தாலுங் கூட. 

சிலர் அடிக்கடி இளகுகிறார்கள். சிலர் இருந்திருந்து விட்டு இளகுகிறார்கள். ஆனால் இவர்கள் எப்போதோ ஒரு தருணத்தில் இளகுகிறார்கள்…..இதுதான் வித்தியாசம். மனதிலிருப்பவை அந்த நேரத்தில் வெளிச்சங் காண்கின்றன. தண்ணி, இந்த சாத்தியப் பாட்டை. சிலபேருக்கு சில சமயங்களில் அதிகரிக்கலாம். தண்ணியில்லாமலும் சாத்தியமுண்டு. வேறுபல காரணங்களிருக்கக்கூடும். 

தனபால். இந்த வரிசையில் கடைசி வகையைச் சேர்ந்தவனாகத் தன்னை இன்று இனங்காட்டினான். இந்த அலுவலகத்தில் தனபாலும் கிருஷ்ணனும் நாலாண்டு காலம் ஒரே சமயத்தில் வேலை செய்திருக்கிறார்கள். என்ன தான் பெரிய கந்தோர் என்றாலும். இரண்டு பேரும் வெவ்வேறு பிரிவுகள். என்றாலும் நாளைக்கு ஒருதரமாவது சந்திக்க முடிந்திருக்கிறது. இருந்தாலும் ஆளுக்காள் காணுகிற இடத்தில் புன்னகைப்பது கூட இல்லை. முதலில் இரண்டொரு நாள் கிருஷ்ணன் முறுவல் காட்டியும். தனபால் பிரதி பலிக்காததில் தானும் விட்டு, பிறகு முற்று முழுதான அந்நியம் இருவரிடை குடிகொண்ட ஞாபகமிருக்கிறது. 

ஆனால், இப்போது மூர்த்தி இடையில் வந்ததிலிருந்து. இந்த நிலைமையில் லேசான மாற்றம் ஏற்படத் தொடங்கியிருக்கிறது. சாதாரண சகபாடி உறவு குடிகொள்ள ஆரம்பித்திருக்கிறது. பகிடி முசுப்பாத்தி கூட. 

மூன்று பேருமாகக் கன்ரீனில் ரீ குடித்துக் கொண்டிருக்கும் போது தனபால் சொன்னான். 

“மச்சான்.உனக்குத் தெரியுமா…..? உன்னை மற்றப் படியான் என்டெல்லோ எனக்கு முந்தி ஆரோ சொல்லி வைச்சான்கள்? தனபால் சிரித்தான். 

“எந்தப் படியான் என்டால்தான் என்ன?….” கிருஷ்ணனும் சிரித்துக் கொண்டு. இந்தக் கூற்றால் தனக்கு ஆத்திரமெதுவும் ஏற்படவில்லை என்ற நிச்சயத்தில் பெருமிதம் கொண்டு சொன்னான். 

“கன நாளைக்குப் பிறகு அண்டைக்கு…. இவன் மூர்த்தி தான் சொன்னான்…எட பேய? அவன் சுண்டியெடுத்த வெள்ளாளனெல்லோ…. எண்டு,,. “

இந்த இடத்தில் கணமேயெனினும் டக்கென்று தன் மனம் கிளுகிளுத்ததைக் கிருஷ்ணனால் உணர முடிந்தது. அதனால். அடுத்த கணத்தில் தன்தோல்வியையும். 

அதுக்குப் பிறகுதான் இப்ப துணிஞ்சு அவனோட தேத்தண்ணி குடிக்க வந்திருக்கிறாய்……. …மூர்த்தி நக்கினான். 

கிருஷ்ணனுக்கு நெஞ்சு நிறைந்த சிரிப்புச் சிரிப்பாக வந்தது. இன்றைக்கு இப்போதுதான் இப்படிச் சிரிப்பு வந்திருக்கிறது. 

“சரி. அதை விட்டிட்டு நீ வந்த காரியத்தைப் பார்…நேர மென்ன?…” 

“பதினொன்று முப்பத்தைஞ்சு…”

எழுந்து நடந்தார்கள். 

“உங்கள் துரதிஷ்டம்..” என்றா ஏ.டி.யின் ஸ்ரெனோ. இவனைக் கண்டதும். 

“….அவர்களுடன் வெளியே போய் விட்டார். லஞ்ச் முடிந்து வந்ததும் உங்களைச் சந்திப்பதாகச் சொன்னார்”. 

“அடி சக்கை.” 

“என்ன செய்யப் போகிறாய்?” என்றான் மூர்த்தி. 

“ஒண்டரை மட்டும் நிண்டு காய வேண்டியது தான்.. “

“என்னோட வந்து சாப்பிட்டு வா.” 

“எனக்குப பசியில்லை மூர்த்தி. ஆனா வீணா மினைக்கெடவேண்டியிருக்கு. நீ போய்ச் சாப்பிடு”. 

“அவ்வளவுக்கும் என்ன செய்வாய்?” 

“லைபரியிலை இருக்கலாம்…. எப்படியெண்டாலும் இண்டைக்குச் சந்திக்கத்தான் வேணும்…” 

அலுவலக நூல் நிலையத்திற்குப் போனான்.சிவசுந்தரம் உற்சாகமாக வரவேற்றார். புதினப் பத்திரிகைகள் பகுதி கசமுச வென்றிருந்தது. புத்தகங்கள் சஞ்சிகைகள் பக்கம் அவ்வளவு சனமில்லை. 

கொங்கிறீற்றையும். இரும்பையும். யந்திரங்களையும் சுமக்கிற கடதாசிகளை விலக்கி, விலக்கி எதையென்றில்லாமல் ஒவ்வொன்றாகப் பார்வையால் மேய்ந்து கொண்டு.. 

அப்போதுதான் அந்த சஞ்சிகை தட்டுப்பட்டது. வெளிநாட்டு ஆங்கில சஞ்சிகை. அருமையான கட்டுரைகளிரண்டு அதிலிருந்தன. இந்து சமுத்திரமும் உலக சமாதானமும், மற்றது யு.எஃப்.ஓ. என்கிற பறக்குந்தட்டுகள் பற்றியது. 

தூரத்து மூலையொன்றின் தனிக் கதிரையாகப் பார்த்து நடந்தான். ஒன்றரைக்குள் படித்து முடியாவிட்டால் சிவசுந்தரத்திடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு எடுத்துப் போகவேண்டும். 

– ஈழமுரசு 1984 

– ரஜனி பிரசுரம் 1985

– எழுதப்பட்ட அத்தியாயங்கள், முதற் பதிப்பு: மே 2001, மல்லிகை பந்தல் வெளியீடு, கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *