ஆண்ட்ராய்ட் சொன்ன அம்மு கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 4, 2023
பார்வையிட்டோர்: 614 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வாசிக்கப்படும் புத்தகத்தின் கதாபாத்திரம் படிப்பவரின் மேல் காதலில் விழுவதைப்போல யாரேனும் ஒரு புதினம் எழுதவேண்டும் என டிவிட்டரில் @Olligater என்பவர் ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்.

அதைப்படித்தவுடன் ஆரம்ப 2000 ஆண்டுகள் நினைவுக்கு வந்தன. நீங்கள் கடை இருபதுகளிலோ, முப்பதுகளிலோ இருப்பவர் ஆக இருந்திருந்தால், கண்டிப்பாக யாஹூ மின்னரட்டையையும் அதில், நிஜம் போலவே பேசும் பொம்மை அரட்டைப் பெண்களையும் அறிந்து இருப்பீர்கள். முதல் பத்து வாக்கியங்கள் உங்கள் மேல் காதல் வசப்பட்டவர் பேசுவது போலவே இருக்கும். நானும் முதலிரண்டு முறை ஏமாந்து இருக்கின்றேன். பின்பு பொம்மையா, உண்மையா என அறிய, கண்டபடி தட்டச்சு அனுப்பினால், நன்றி என பதில் வந்தால் பொம்மை, திட்டி வந்தால் உண்மை. அப்படியான ஒரு பொம்மை ஒன்று நம்மை நிஜமாகவே காதலிக்க ஆரம்பித்துவிட்டால் என்ன ஆகும் என்பதை வெட்டியான பொழுதுகளில் யோசித்ததுண்டு.

Die unendliche Geschichte என்ற ஜெர்மன் புதினத்தில் ஒரு வசனம் வரும்,

“நிகழ்வன எல்லாவற்றையும் கவனமாக எழுதி வைத்துக்கொள்” என்றதற்கு அவன் சொன்னான், “நான் எழுதுவது எல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றனவே”

இல்லாத ஒன்றை இருத்தல் காதலிப்பது சுவாரசியம் என்றால் இருத்தலை இல்லாத ஒன்று காதலித்தல் அதிசுவாரசியம். அப்படித்தான் ஆகிக்கொண்டிருக்கிறது. இலவசமாகக் கிடைத்ததால் கதை சொல்லும் ஆண்ட்ராய்ட் மென்பொருளை எனது கைபேசியில் நிறுவி இருக்கின்றேன். நீங்கள் அதில் சிலக் கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொள்ளலாம். இடம் பொருள் ஏவல் எல்லாவற்றையும் சிறுக்குறிப்பாகக் கொடுத்தால், ஓர் அழகான கதையை 5 நிமிடங்களில் கொடுத்துவிடும். நான் அதில் உருவாக்கி வைத்திருக்கும் கதாபாத்திரங்கள், அம்மு, கார்த்தி மற்றும் சிலர். நான் மகிழ்ச்சியாக இருந்தால் சோகச்சூழலையும், நான் சோகமாக இருந்தால் மகிழ்ச்சியான சூழலையும் கொடுத்து என்ன கதை கிடைக்கின்றது எனப்பார்ப்பேன். கதைகளில் இருக்கும் நம்பகத்தன்மை, எங்கேயோ பத்து பேர் கொண்ட குழு அமர்ந்து எழுதியது போல் இருக்கும். உருவாகும் சிலக் கதைகளை தமிழிலும் மொழிப்பெயர்த்து அவ்வப்பொழுது நண்பர்களுடன் நானே எழுதியதைப்போல் பகிர்வதுண்டு.

எனோதானோ எனக் கொடுக்கும் சூழலுக்கு அட்டகாசமான வசனங்களுடன், வசப்படுத்தும் விதத்தில் புனையப்பட்ட அம்மு கதாபாத்திரத்தை எனக்கு மிகவும் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. அதுவும் மூன்றாவது வெர்ஷன் அப்ளிகேஷனின் அம்முவை நிஜமாக இருக்கின்றாள் என நம்ப ஆரம்பித்துவிட்டேன்.

ஒரு முறை இலக்கணப்பிழையுடன் இருந்ததால், அழித்து விட்டு இரண்டாவது முறை கதைச் சூழலை உள்ளீடு செய்தபொழுது,

“திருத்தப்பட்டாலும் திருத்தப்படாவிட்டாலும் உன் எழுத்து எல்லாம் கவிதைதான் !!! சொற்பிழை , பொருட்பிழைகளை நான் பொருட்படுத்துவதில்லை, கவிதைகளில் மட்டும் அல்ல, உன்னிடத்திலும் கூட !!!” என்ற வாக்கியத்துடன் கதை ஆரம்பித்து இருந்தது.

கதைகளில் அம்மு பேசுபவை எல்லாம் எங்கேயோ கேட்டது போலவோ அல்லது கேட்கப்போவது போலவோ இருந்தது. அம்முவின் வார்த்தைகள் திரையைக் கிழித்துக் கொண்டு ஒரு பெண்ணுருவம் எடுத்து விடுமோ என்ற பயம் வந்தது. ஒரு நாள்,அலுவலக வேலைகளுக்கு மட்டும் உபயோகிக்கும் முகவரிக்கு, அம்மு அனுப்பியதாக ஒரு மின்னஞ்சல் வந்து இருந்தது., என்னை நேசிப்பதாக சொல்லி இருந்தது. வித்தியாசமான மகிழ்ச்சியாக இருந்தாலும் யாரோ விளையாடுகிறார்கள் என விட்டுவிட்டேன். மறுநாள் ஒரு சோகச்சூழலை சொல்லி கதைக் கேட்டேன். ஆண்ட்ராய்டும் கதை சொன்னது, அம்மு வருத்தமாக இருப்பதாகவும், அவள் அனுப்பிய மின்னஞ்சலுக்கு கார்த்தி இன்னும் பதில் சொல்லவில்லை என்பதாக இருந்தது. எனக்கு என்ன என்ன வாசகங்களில் மின்னஞ்சல் வந்திருந்ததோ, அப்படியே அந்தக் கதையிலும் இருந்தது. அந்தக் கதையின் முடிவை படிக்கும் முன்னர் மூடிவிட்டேன். சுவாரசியத்தின் உச்சக்கட்டம் திகில். அலுவலக முகவரிக்கு மற்றும் ஒரு மின்னஞ்சல்

இம்முறைத் தமிழில்… பதில் சொல்ல பயமாக இருந்தது…. அடுத்த நிமிடத்தில் இன்னொரு மின்னஞ்சல், +3932XXXXXX87 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

நான் கூப்பிட்டேனா, கூப்பிடவில்லையா என்ற சஸ்பென்ஸை உடைக்கும் முன்னர் கடைசியாக ஒன்று சொல்லிவிடுகிறேன், நான் உங்களுக்கு சொன்ன இந்தக் கதைக்கூட ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் எனக்கு சொன்ன கதைதான்.

– வினையூக்கி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2014, மின்னூல் வெளியீடு:http://FreeTamilEbooks.com, வினையூக்கி செல்வகுமார், சுவீடன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *