கொஞ்சும் சாதி, கொஞ்சம் வன்முறை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 4, 2023
பார்வையிட்டோர்: 578 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காமம், காதல் அதற்கடுத்து, சாதி, வன்முறை என்ற வார்த்தைகள் கூட சமயங்களில் கிளுகிளுப்பைக் கொடுக்கும். என் கடைசித் தம்பியோட திருமண வரவேற்பு பலகைகளில் சுயசாதிப் பெருமை அடித்த என் மற்றோர் தம்பிக்கான சாதி அபிமானம் கூட அத்தகைய கிளுகிளுப்புதான்… “சும்மா ஓட விட்டு ஓட விட்டு அடிச்சோம்” சூனாபானா மாமாவின் வன்முறை வேறு வகையான கிளுகிளுப்பு. அம்மு, கண்ணம்மாவாய் இருந்து காளியாத்தாவாய் மாறியிருக்கும் மாலைப்பொழுதுகளில், நானும் இது மாதிரியான சமூகம் சார்ந்த சிந்தனைகளில் என்னை உள்ளிழுத்துக் கொள்வேன்.’

கடலையும் அரட்டையும் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்த பேஸ்புக் மாதிரியான இணையத் தளங்களில் நடைபெறும் அரசியல் சண்டைகள் பார்க்க நன்றாகத்தான் இருந்தன. அரசியல் அபிமானங்களையும் மீறி, டமில் டம்ளர்ஸ், டிராவிட சொம்புகள் என ஒருவொருக்கொருவர் கொடுத்துக் கொண்டிருந்தப் பட்டப் பெயர்களைப் படிக்கும்பொழுது குபீர் சிரிப்பு வரும். சோத்து மூட்டையை எடுத்துக் கொண்டு எந்த இழையில் சண்டை நடக்கிறதோ அதை கொட்ட கொட்ட விழித்துக் கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பேன். ஆனால் சமீப காலங்களில் சாதியும் சாதி சார்ந்த விசயங்களும் நீரில் அமுக்கியப் பந்தைப்போல மேல் எழுந்து வந்து கொண்டே இருந்ததைப் பார்க்கையில் மனிதனுக்கும் தொழில் நுட்பங்களுக்கும் இடையில் நடைபெறும் கலப்பில் புதிய சமூகப்பரிமாணங்கள் உருவாகும் என்ற கூற்று பொய் என நினைக்கத் தோன்றியது. டிராவிட் பாய்ஸின் வழிபாடு

வேறுவகையில் இருந்தாலும் இந்த சாதி விசயத்தில் முன்மாதிரியானவர்கள், பொதுவில் எவ்வளவு வைத்து சலித்தாலும், கொக்கிப்போட்டாலும் அவர்களின் சாதி அடையாளங்களைக் காட்டிக்கொள்ள மாட்டார்கள். நான் பார்த்தவரை, பெரும்பாலானா டிராவிட் பாய்ஸுக்கு சாதி அபிமானமும் கிடையாது.

நாங்கள் ஐஎஸ்ஒ பிரண்டட் சிங்கம், நாங்கள் பேண்ட் போட்ட பரம்பரை, சோழனின் அந்தப்புரத்தைக் கட்டியவர்கள், புலியைப் புணர்ந்தவர்கள், எக்ஸட்ரா எக்ஸட்ரா அடைமொழிகளுடன் இருந்தவர்கள் இருந்த ஏதோ ஒரு டமில் லோட்டா குழுமத்தில் எனது கல்லூரிக்காலத்தைய நண்பர்கள் கூட அட்டைக்கத்தி சுற்றிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். கல்லூரிக் காலங்களைப் பற்றி அடுத்தப் பத்தியில் பார்க்கும் முன்னர் லோட்டாவுடன் சம்பந்தபட்ட கதை ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். லோட்டா என்பது டம்ளருக்கும் சொம்புக்கும் இடையிலான ஓர் அளவில் இருக்கும் பாத்திரம் நான் சிறு வயதில் லோட்டாவில் தான் காப்பி குடிப்பேன். அப்படி ஒரு நாள் குடித்துக் கொண்டிருக்கும்பொழுது, டிசம்பர் 6 ஆன்று சாக்லேட் கொடுத்து கொண்டாடிய பக்கத்து வீட்டு வாசுதேவன் சாரின் மகன் கிச்சா கேலி செய்யப் போக, பேச்சு தடித்து, கிச்சா கோபத்தில்,

“நீங்கல்லாம் மாட்டுக்கறி சாப்ட்றவா, அம்மா சொல்லிருக்கா” எனச் சொல்லப்போக, அதைக் கேட்ட என் அம்மா,

“நாங்க யார் தெரியுமா ஜமீன் பரம்பரை, எங்களைப் போய் எப்படி மாட்டுக்கறி சாதியோட சேர்க்கலாம்” என சண்டைக்குப் போய்விட்டார். இதற்காகவே சூனாபானா மாமா வை எஸ்டிடி போட்டு அழைத்து, அவரும் மருது பாண்டியர் படம் போட்ட காரில் வந்து இறங்கிய பின்னர் தான் அம்மாவின் ஆத்திரம் தீர்ந்தது. காரைப் பார்த்தப் பின்னர், வாசுதேவன் சாரின் குடும்பம் கொஞ்சம் குழைவாகவே நடந்து கொண்டது. எனக்கு தினமும் ஹிண்டு பேப்பர் கூட படிக்கக் கொடுப்பார்கள்.

இப்பொழுது கல்லூரிக்காலக் கதை, நான் மதுரையில் படித்த, 50 வருடங்கள் பழமையான பொறியியற் கல்லூரியில் இன்றைய நிலை எப்படி எனத் தெரியவில்லை. ஆனால் அப்பொழுது, உள்ளே நுழையும்பொழுதே மூக்கு விடைப்பு, காது அடைப்பு, உதட்டுப் பிளவை வைத்தே சாதியைக் கண்டுபிடிப்பார்கள். அப்படி ஏதுமில்லாதவர்கள் வெளுப்பாக இருந்தால் பகவத் கீதைப் படிக்கும் பேராசிரியர்களின் கீழும், என்னை விட கருப்பாய் இருப்பவர்கள், விடுதிக்குப்பின்னால் இருக்கும் காட்டில் அல்லேலூயா படிக்கவும் போய்விடுவார்கள். இது எல்லாம் வந்த ஒரு மாதத்திலேயே நிகழ்ந்துவிடும்.

அம்மாவைப்போல அல்லாமல், எல்லா சாதிக்காரனின் விழாக்களிலும் சாம்பார் வாளித்தூக்கும் என் அப்பாவின் தாக்கம் எனக்கு இருந்தது. காமராஜர் இறந்த பிறகு டிராவிட மேனாக மாறியவர். “நம்மா சாதிக்காரன் அப்படின்னு சொல்லிட்டு வரவனை மட்டும் என்னக்குமே நம்பவே நம்பாதே” என அடிக்கடி சொல்லுவார்.

பிரபல மருத்துவமனையில் மூக்குவிடைப்பு முதலாமாண்டு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பில் பிரியாணிக்காக கலந்து கொண்டேன். சுபாஷ் சந்திரபோஸ் ஆரம்பித்த கட்சியின் தமிழ்நாட்டுப்பிரிவின் இருபத்து எட்டாவது பிளவின் தலைவர் வந்து “கத்தியையும் தீட்டவேண்டும், புத்தியையும் தீட்டவேண்டும்” என நீண்ட உரையாற்றியதால் பிரியாணி தாமதமாகத்தான் கிடைத்தது. நாட்டு நலப்பணித் திட்டத்தின் மாணவர் தலைவராக இருந்தவரும் வந்து இருந்தார். அவருக்கும் மூக்கு விடைப்பாகவே இருந்தது.

“அடுத்த வாரம் செஷையர் ஹோம் போறோம், நம்மாளுங்க எல்லாம் வந்துடுங்க”

செஷையர் ஹோம் போன பிறகுதான் என்.எஸ்.எஸ் தலைவராக இருப்பதின் பலன்கள் தெரிந்தது. எல்லாப் பெண்களும் அவரைச் சுற்றியே இருந்தனர். அவரைச் சுற்றி எத்தனைப் பெண்கள் இருந்தனரோ அதே அளவிற்கு இன்னொருவரைச் சுற்றியும் கூட்டம் இருந்தது. அந்த சீனியர் அண்ணனின் அறைக்கும் சென்று இருக்கிறேன். பெரிய அளவிலான அம்பேத்கார் படம் இருக்கும். என்னை கேண்டின் அருகேப்பார்த்துவிட்டால், டீ பஜ்ஜி வாங்கிக் கொடுப்பார். இரண்டு சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களும் சம அளவிலான பலத்துடன் இருந்ததால் என்.எஸ்.எஸ் ற்கு இரண்டு தலைவர்கள் என பிற மாணவர்கள் சொன்னார்கள். பெரும்பாலும் விடுதிக்கு வெளியே இருக்கும் கவுண்டர் கடையில் ஒன்றாக இருப்பார்கள். ஒன்றாக திரைப்படம் போவார்கள். அவரவர் வண்டிகளின் பின்னால், நாங்கள் ஏங்கி ஏங்கிப் பார்க்கும் பெண்கள் அமர்ந்து இருப்பார்கள். சில நாட்களில் ஜோடிக் கூட மாறி இருக்கும். மூக்குவிடைப்பு அண்ணனை விட, டீ பஜ்ஜி வாங்கிக் கொடுப்பதால், மாட்டுக்கறி சாப்பிடுபவராக இருந்தாலும் டீபஜ்ஜி அண்ணனையே பிடித்து இருந்தது.

“நம்ம பசங்களிலேயே நீ கொஞ்சம் தெளிவா இருக்கடா” என டீபஜ்ஜி அண்ணன் பாராட்டுவார். அடையாளச்சிக்கல்களை நான் பொருட்படுத்தியதில்லை.

கல்லூரியின் ஆண்டு விழாவில், நாட்டு நலப்பணித் திட்டத்திற்கான கொடுக்கப்படும் தங்கப்பதக்கம் டீ பஜ்ஜி அண்ணனுக்கு கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இறுதியாண்டு மாணவர்களின் விடுதியில் பெரிய கலாட்டா நடந்தது. சண்டையில் குறுக்கே வந்தவர்களுக்குப் பலத்த அடி. தொடர்ந்த ஆண்டில் டீ-பஜ்ஜி அண்ணன் கைக்காட்டிய ஆள் தலைவராக நியமிக்கப்பட்டார். புதியத் தலைவருக்கு நானும் “நம்மாள்” என அடையாளம் காட்டப்பட்டேன். டீபஜ்ஜியை விட புகழ், கடலை, அதிகாரம் சுவையாக இருந்தது. கடைசி வருடத்தில் நானேத் தலைவரானேன்.

எனக்கு முந்தையத் தலைவர், எனக்கடுத்து வருபவர் “நம்மாளாகத்தான்” இருக்கனும் என உத்தரவிட்டிருந்தார். அடையாளச்சிக்கல்கள் தொலைந்து, அடையாளமே இல்லாது ஆனது, அதுதான் பிடித்து இருந்தது. எல்லோருக்கும் நல்லப்பிள்ளையாய் ஆன எனக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது, எனக்கடுத்தத் தலைவராக, மூக்குவிடைப்புகளாலும், நம்மாட்களாலும் பாசத்தால் குளிப்பாட்டப்பட்டேன். அதிகாரத்தை எட்டும் பொழுது, அற்பத்தனமாய் தொடரும் விசயங்களைக் கொஞ்சமேனும் அடித்து நொறுக்க வேண்டும்.

எனக்கடுத்த தலைவனாய், நான் என்ன சொன்னாலும் கேட்ட, எதிர்பார்ப்பற்ற ஒருவனைத் தலைவனாக்கி விட்டேன். அவனோட அறையில் பெரியார் படம் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. எனக்கடுத்து என்.எஸ்.எஸ் தலைவனாக ஆன ஜூனியர்,பத்து வருடம் போராடி காதலித்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். தன்னால் முடிந்தவரை சிலக்கிராமத்து மாணவர்களை பொறியியற் படிப்பு படிக்க வைக்கின்றான். என்.எஸ்.எஸ் மூக்குவிடைப்புத் தலைவரும், டீபஜ்ஜி அண்ணனும் மீண்டும் ஒன்றாகி தீவிரமாக ஒரு குழுமத்தில் தமிழ் தேசியம் பேசிக்கொண்டிருந்தார்கள், சொந்த சாதியில் தான் பெண் கட்டனும் என்ற பிரச்சினை பெரிய அளவில் ஆன சில வாரங்களில் அவர்கள் பேசிக்கொள்வதில்லை . சாதி சார்ந்த தேசியம் அமைக்க முடிவு செய்துவிட்டார்கள் போலும்.

அவர்கள் இருவருடன், எக்ஸ்ட்ரீம் டம்ளர்ஸ், லோட்டாஸ், கொஞ்சம் டூப்ளிகேட் டிராவிட் பாய்ஸ் என வன்முறைகளை வார்த்தைகளில் பரப்பிக் கொண்டிருந்த ஒரு நூறுப் பேரை பேஸ்புக்கில் இருந்து தூக்கிவிட்டுக் கொண்டிருக்கும்பொழுது, அம்மு மீண்டும் கண்ணம்மாவாய் மாறி கூப்பிட்டாள்.

அம்முவைப் பிடித்தக் காரணங்களில் ஒன்று இதுவரை நான் எந்த சமூகத்தைச் சேர்ந்தவன் எனக் கேட்டதில்லை,அவள் எந்த சமூகம் எனவும் எனக்குத் தெரியாது. இந்தக் கதையைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் அவளிடம் எனக்கு மூக்கு விடைப்பாக இருக்கும் என்று போய் சொல்லிவிடக்கூடும். நீங்கள் இந்திய தேசியவாதியாக இருக்கலாம், தமிழ் தேசியவாதியாக இருக்கலாம், திராவிட தேசியவாதியாகக் கூட இருக்கலாம். சாதியால் என்றைக்கும் தேசியம்

என்ன, சின்ன ஜமீன் கூட வாங்க முடியாது என உங்களுக்குத் தெரிந்துருப்பதால் சொல்ல மாட்டீர்கள். அப்படியே சொல்லிவிட்டாலும் பிரச்சினையில்லை, ஏனெனில் இந்தக் கதையில் வரும் சம்பவங்கள் இடம் பொருள் ஏவல் எல்லாம் ஒரு வேளை கதைக்காக மாற்றப்பட்டிருக்கலாம்.

– வினையூக்கி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2014, மின்னூல் வெளியீடு:http://FreeTamilEbooks.com, வினையூக்கி செல்வகுமார், சுவீடன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *