ஓர் ஆண் எவ்வாறான தேவைகளுக்கெல்லாம் (அல்லது சேவைகளுக்கு) லாயக்கானவன் என்பது சில சந்தர்ப்பங்களில் வேடிக்கைக்குரிய விஷயமாயிருக்கிறது. ஆண் என்பவன் ஆணாக மட்டுமன்றி மனைவிக்குக் கணவனாகவும், பிள்ளைக்கு அப்பாவாகவும் இருக்கிறான்.
சரி, அப்பாவின் கதைக்குப் பிறகு வரலாம். உங்களை இப்போது நேரடியாக கதை மையத்துக்குக் கொண்டுபோக வேண்டியிருக்கிறது.
கொழும்பிலுள்ள அந்த வைத்தியசாலையின் குறிப்பிட்ட ‘வார்ட்’டிற்குப் போய்ச் சேர்ந்தபோது மாலை ஐந்து மணியாகியிருந்தது. வெளியார், நோயாளரைப் பார்வையிடும் நேரமாகையால் பரபரப்பாகவும், கலகலப்பாகவும் இருந்தது. (பொதுவாக வைத்தியசாலைகளில் நோயாளரைப் பார்வையிடும் நேரங்கள் கலகலப்பாகிவிடுகின்றன என்பதும் என்னவோ உண்மைதான்) நான் வைத்தியசாலைக்கு எந்த நோயாளரையும் பார்ப்பதற்காகப் போயிருக்கவில்லை. என் மகனை அந்த வார்ட்டில் அட்மிட் பண்ணவேண்டியிருந்தது. பத்து வயது மகன். முதல் நாள் இரவிலிருந்து வயிற்று நோவினால் துடித்துச் சோர்ந்துபோயிருந்தான். பிள்ளையின் வேதனையைத் தாங்கமுடியாது அவனைவிட நான் அதிகம் சோர்ந்துபோயிருந்தேன்.
அரச வைத்தியசாலையாயினும் அதன் தோற்றம் ஆச்சரியப்படும்வகையில் தூய்மையாயிருந்தது. மருந்து மணங்கள் இல்லை. குழந்தைகளுக்கான அந்த வார்ட் பலவிதமான விளையாட்டுப் பொம்மைகளால் நிறைந்திருந்தது. குழந்தைகள் பலர் தம் நோய் மறந்து, விளையாட்டுப் பொருட்களில் ஈடுபாடு கொண்டிருந்தனர்.
நான் என் மகனின் முகத்தைப் பார்த்தேன். மலர்ச்சியான ஒரு புன்முறுவல் அவனிடத்தில் தோன்றியது. அவனது மகிழ்ச்சிக்கு விளையாட்டுப் பொருட்கள் மட்டுமல்ல, ஆஸ்பத்திரியின் தூய்மையான தோற்றமும் ஒரு காரணம் என்பது எனக்குத் தெரியும்.
முதல் நாள் இரவு ஒன்பது மணியைப்போல் வயிற்றைக் கைகளால் அழுத்திகொண்டு அழத்தொடங்கினான். அடி வயிற்றில் வலி. முதலுதவியாக பனடோல் கொடுத்துப்பார்த்தோம். மனைவி, வேறு விதமான கை வைத்தியங்களையும் செய்துபார்த்தாள். அதற்கும் கேட்கவில்லை. படுக்கையில் சுருண்டு துடித்துக்கொண்டிருந்தான் மகன். பதினொரு மணியளவில் அண்மையில் இருந்த வைத்தியசாலைக்குக் கொண்டுசென்றேன்.
மகனைப் பரிசோதித்த வைத்தியர் முதலில் கேட்ட கேள்வி “பிள்ளையின் அம்மா வரவில்லையா?”என்பதுதான்.
“இல்லை நான் அவரது அப்பா!”
“இவரை வார்ட்டில் தங்கவைத்து, பரிசோதிக்கவேண்டும். கூடத் தங்குவதற்கு அம்மா தேவை!”
நான் பக்கத்தில் இல்லாது மகனை ஆஸ்பத்திரியில் விட்டுப் போக எனக்கோ மனச்சம்மதம் இல்லை.
“கிட்டத்தான் இருக்கிறோம். தேவையானால் கொண்டுவருகிறேன். இப்போது ஏதாவது மருந்து கொடுங்கள். போதும்!”
டொக்டர் என்னை ஒருமாதிரியாகப் பார்த்தார். பிறகு சில குளிசைகளைத் தந்தார். “இது வலியைப் போக்க உதவும். இது பிள்ளையை உறங்கவைக்கும்.”
வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரத்தில் மகன் உறங்கிவிட்டான். அவ்வளவு நேரமும் துடித்துக்கொண்டிருந்த என் மனது சற்று ஆறுதல் அடைந்தது. எனினும் உறங்காமல் விழித்திருந்தேன். மகன் நிம்மதியாக உறங்குகிறானா, வயிற்று வலி அவனது உறக்கத்தைக் கெடுக்குமா என்று கவனித்துக்கொண்டிருந்தேன். மெதுவாக அவனது அடி வயிற்றை அழுத்திப் பார்த்தேன். அழுத்தும்போது அவனுக்கு வலிக்கிறது. உறக்கத்திலும் முறுவலித்தான்.
அதிகாலை திரும்பவும் மகனை வைத்தியசாலைக்குக் கொண்டோட வேண்டியிருந்தது. உறக்கத்திலிருந்து விழித்ததும் அல்லது வலி தாங்கமுடியாது விழித்து அழத்தொடங்கி விட்டான். உடனடியாக ‘வார்ட்’டில் அனுமதிக்கப்படவேண்டும் என வைத்தியர் கூறினார். சிறிய சத்திர சிகிச்சை செய்யவேண்டி ஏற்படலாம். மகனைத் தள்ளுகதிரையில் இருத்தி வார்ட்டிற்கு கொண்டு சென்றோம்.
வார்ட்டை அடைந்ததும், உள் நுழைவது கஷட்டமாயிருந்தது. நடைபாதையில் பலர் நின்றுகொண்டிருந்தனர். பலர் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். இந்த அதிகாலையில் நோயாளரைப் பார்க்க இவ்வளவு பேர் வந்திருக்கிறார்களா?… அவர்களையெல்லாம் உள்ளே வரவிட்டிருக்கிறார்களே என்றெல்லாம் யோசித்தேன். ஒருவரிடம் இதுபற்றி விசாரித்தேன்.
“எங்களுக்கு படுக்கை… கட்டில் இல்லை. சிகிச்சைக்காக இந்த வார்ட்டிற்கு அனுமதிக்கப்பட்டு இப்படி உட்கார்ந்திருக்கிறோம்.”
எல்லாக் கட்டில்களையும் ஒரு கண்ணோட்டம் விட்டேன். சில கட்டில்களில் இருவர் படுத்திருந்தார்கள்.
மகனுக்கு சேலைன் ஏற்றவேண்டும் என டொக்டர் குறிப்பிட்டிருந்தார். என்ன செய்யப் போகிறார்களோ என எனக்குள்ளே கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தேன். அங்கிருந்த தாதிமார்களிடம் விசாரித்தேன்.
“கொஞ்சம் பொறுங்கள்… வார்ட்டைக் கவனிக்கும் டொக்டர் வந்ததும் முடிவெடுக்கலாம்!”
பொறுத்தேன். மகன் பொறுமை இழந்துகொண்டிருந்தான். வெளியே மழை பெய்யத்தொடங்கியது. அரைச்சுவரூடாக வார்ட்டிற்குள்ளும் தூவானம் அடித்தது. நோயாளிகள் மழைக்கு ஒதுங்கினார்கள். இன்னும் இடைஞ்சல் ஏற்பட்டது.
டொக்டர் வந்ததும் நோயாளிகளெல்லாம் பரபரத்து ஒரு வரிசையில் (கியு) நின்றனர். வரிசைக் கிரமமாக ஒவ்வொருவராக அவர் முன் சென்று பரிசோதிக்கப்படுவது வழமையான ஒழுங்கு போலிருந்தது. இவ்வளவு அடிப்படை வசதிகள் போதாத ஒரு வைத்தியசாலையில், அவர்கள் பெரிய மனதுடன் பணிபுரிவதை மனதிற் பாராட்டினேன். நோயாளிகளின் கஷ்ட நிலைமை பற்றிய இரக்க உணர்வும் ஒரு பக்கம்.
டொக்டரின் பணிப்பின் பேரில் ஓரளவுக்கு இயலுமான ஒரு நோயாளியை (அப்படி நான் நினைத்துக்கொண்டேன்.) இறக்கிவிட்டு அந்தக் கட்டிலில் மகனைக் கிடத்தினார்கள். இலையான்கள்(ஈக்கள்) அங்குமிங்குமாகக் கட்டில்களிலும் மொய்த்துக்கொண்டிருந்தன.
இந்தக் களேபரங்களில் மகனுக்கு வலி மறந்துவிட்டதுபோலிருந்தது. அவன் வேறு விதமாக அழத் தொடங்கினான்.
“இங்கை இருக்கமாட்டான். வெளியே கொண்டுபோங்கோ!…”
நான் அவனது கையைத் தடவி, காலைத் தடவி…தாக்காட்டிக்கொண்டிருந்தேன். ஓரிரு மணித்தியாலங்கள் போய்க்கொண்டிருந்தன. இடையிடையே தாதிகளிடம் விசாரித்தேன்.
“அவருக்கு இரத்த சோதனை செய்யுமாறு டொக்டர் எழுதியிருக்கிறார். அதற்காக வெயிட் பண்ண வேண்டியிருக்கிறது.”
எனக்கு வெயிட் பண்ண இயலவில்லை.
“அதைச் சீக்கிரம் பண்ணமுடியாதா?”
“அது சம்பந்தப்பட்ட ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.” அந்த விளக்கம் எரிச்சலை ஊட்டியது.. “இப்ப என்ன செய்வது?”
நாளாந்தம் ஆயிரக்கணக்கான நோயாளர்களைப் பராமரிப்பவர்களுக்கு ஒரு தந்தையின் துடிப்பை விளங்கிக்கொள்வது முடியாமலிருக்கலாம். எனக்குக் கொதி ஏறியது.
“மகனை இங்கிருந்து விடுவித்துவிடுங்கள்… நான் கொழும்புக்குக் கொண்டுபோய்க் காட்டுகிறேன்.”
“அதற்கு டொக்டரிடம் கேளுங்கள். நாங்கள் முடிவெடுக்க முடியாது.”
டொக்டரும் இணங்கவில்லை. நான் வற்புறுத்தலாயும் தயவுடனும் கேட்டேன்.
“உங்களுடைய சுயவிருப்பத்தின் பேரில் மகனைக் கூட்டிக்கொண்டு போவதாக எழுதிக்கொடுத்துவிட்டுப் போகலாம்….”
அப்படியே செய்தேன்.
கதையின் மையத்துக்கு உங்களைக் கொண்டுவருவதாகக் கூறிவிட்டு, பிறகு வெளியே சென்றுவிட்டேன் போலிருக்கிறது.
சரி, இதோ வந்தாயிற்று!
கொழும்பு வைத்தியசாலைக்கு வர நேர்ந்தது இவ்வாறுதான். கொழும்பு வந்து, முதலில் ஒரு குழந்தை ஸ்பெஷலிஸ்ட் டொக்டரிடம் காட்டியபோது, அவர் பரிசோதித்தபின் இந்த வைத்திய சாலைக்கு கொண்டுபோகுமாறு கூறினார்.
இங்கேயும் அதே மாதிரியான ஒரு பிரச்சினையை எதிர்நோக்க வேண்டியிருந்தது.
“பிள்ளையின் அம்மா வரவில்லையா?” வார்ட்டிக்குப் பொறுப்பான தாதி கேட்டார்.
“இல்லை அவசரத்தில் வந்தது. வீட்டில் மற்ற பிள்ளைகளுடன் தாயாரை விட்டு, நான் மட்டும் மகனோடு வந்தேன்.”
“பிள்ளையுடன் இரவு வார்ட்டில் தங்குவதற்கு அவரது அம்மா அல்லது யாராவது பெண்கள் தான் அனுமதிக்கப்படுவார்கள்.”
அந்தத் தாதிஅம்மா கடுமையான தொனியிற் கூறினார்.
“நான் புத்தளத்திலிருந்து வந்திருக்கிறேன். உடனடியாக அம்மாவைக் கூப்பிடமுடியாது…. நான் பிள்ளையின் அப்பா. இன்று இரவுமட்டும் என்னை அனுமதியுங்கள்… காலையில் தாயாரைக் கூப்பிட்டுவிடலாம்.!”
“இங்கு நோயாளருடன் தங்குவதற்கு ஆண்களை அனுமதிப்பதில்லை!”
நான் ஒரு பாசத்துக்குரிய அப்பாவின் முகத்துடன் அவ்விடத்தில் நின்றேன். ஆனாலும் நான் ஓர் ஆணின் முகத்தையும் கொண்டிருந்தேன். அந்த ஒரு காரணத்துக்காக, பிள்ளைக்கு நான் செய்யவேண்டிய கடமை (அல்லது உரிமை) மறுக்கப்படுவதுபோலிருந்தது. பிள்ளைகளுக்குத் தாயிடமிருந்து கிடைக்ககூடிய பரிவு, பணிவிடை, ஆதரவு அரவணைப்பு அனைத்தையும் என்னாலும் தரமுடியும்.
எனக்குப் படபடப்பு ஏற்பட்டிருந்தது. பிள்ளையை மட்டும் ‘வார்ட்’டில் மறித்து வைத்துக்கொண்டு, ஆண் என்ற காரணத்துக்காக எனக்கு அனுமதி கிடைக்காமற் போய்விடுமோ? இப்படிக் கடுமையான சட்டதிட்டங்கள் இருப்பது எனக்கு ஏற்கனவே தெரியாது. இந்நிலைமையில் மகனைத் தனியே விட்டுப் போக எனக்குச் சம்மதமுமில்லை.
இயன்றவரை அவர்களிடம் தயவுடன் கேட்டேன். வார்ட்டிற்குப் பொறுப்பான டொக்டரிடம் கேட்டுப்பார்க்குமாறு கூறினார்கள். இவற்றையெல்லாம் ஒரு பக்கத்திலிருந்து அவர் கவனித்துக்கொண்டிருந்தார். ஆரோக்கியமான இதயத்துடன் பல டொக்டர்கள் உள்ளனர் என்பதற்கு டொக்டராயிருந்த அந்த இளம்பெண்ணும் ஒரு சான்று!
அவருக்கு முன்னால் போய் மிகவும் மரியாதையுடன் நின்றேன். இன்னொருமுறை அவருக்கு விளக்கம் கூறினேன்.
“இன்று இரவு நில்லுங்கள்…. காலையில் தாயாரை அழைத்துவிட வேண்டும்… சரியா..?”
“சரி” (உங்களுக்கு பலகோடி நமஸ்காரம் தாயே!)
வார்ட் அரைச் சுவர்களினால் ஒவ்வொரு பகுதியாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பகுதிக்குள்ளும் ஆறு படுக்கைகள். ஒரு பக்கமாக எல்லா வார்ட்களையும் தொடர்பு படுத்தும் நடைபாதை.
நடைப்பாதையின் அரைச்சுவர் ஓரமாக உள்ள ஒரு படுக்கையை மகனுக்குக் கொடுக்குமாறு டொக்டர் பணித்தார். அப்படியானால் நான் வார்ட்டிற்குள் நுழையாமல் சுவர் ஓரமாக நின்றபடியே மகனைக் கவனித்துக்கொள்ளலாமாம். சட்டதிட்டங்களை மீறாமலும், எனது இக்கட்டான நிலமைக்கு உதவும் முகமாகவும் டொக்டர் இப்படியான ஒரு ஒழுங்குமுறையை மேற்கொண்டிருந்தார்.
இரவெல்லாம் நான் சுவர் ஓரமாகவே நின்றேன். மகனுக்கு சேலைன் ஏற்றினார்கள். அரைச் சுவருக்கு மேலாக கையை வார்ட்டிற்குள் செலுத்தி மகனைத் தடவிக்கொடுத்தேன்.
எனக்கு அசதியமாகவும், களைப்பாகவும் இருந்தது. முதல்நாள் இரவிலிருந்து நித்திரையில்லை. நெஞ்சுப் படபடப்பு.
மனதுக்குள் மகனுக்காகப் பிராத்தனை. நித்திரைத் தூக்கம்.. சிலவேளைகளில் சுவருடன் தலையை அடித்தது.
நடைப்பாதையில் ஒரு சில கதிரைகளும் போடப்பட்டிருந்தன. இரவுப்பணிக்காக வந்திருந்த தாதிமார்களில் சிலர் என்னிடம் வந்து: “அந்தக் கதிரையில் அமர்ந்து தூங்கலாமே!” எனப் பரிந்துரைத்தனர்.
நான் பெரிய மனதுடன், அவர்களது பரிந்துரையை நன்றி கூறி நிராகரித்தேன். இந்தளவு வாய்ப்பே எனக்குப் போதுமென்றிருந்தது. அதைவிடவும் மேலான ஒரு காரணம், எனக்கு மகனை விட்டு அந்தப்பக்கம் இந்தப்பக்கம் போக விருப்பமில்லை.
ஒவ்வொரு விதமான நோய்களுடன் ஒவ்வொரு குழந்தைகளும் இருந்தார்கள். உபாதை தாங்காத சில குழந்தைகளின் அழுகைச் சத்தங்களும் கேட்டன. அவர்களைத் தாய்மார் தேற்றி உறங்கவைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். பக்கத்துப் படுக்கையில் குழந்தையை வைத்திருந்த தாயார் எனக்குத் தேநீர் தாயாரித்துத் தந்தார்.
இரவாக ஆக, குழந்தைகள் உறக்கமடைந்துகொண்டிருந்தார்கள். அழுகைச் சத்தங்கள் குறைந்து கொண்டிருந்தன.
ஒரு கட்டத்தில் என்னாலும் தாங்கமுடியவில்லை. தூக்கம் அந்த அளவுக்குக் கண்ணுக்குள் முட்டிப்போயிருந்தது. கண்கள் மூடி மூடிச் சொருகிக்கொண்டிருந்தன. மகனும் உறக்கத்தில் ஆழ்ந்துபோயிருந்தான்.
காலாற அமரவேண்டும் போலிருந்தது. பக்கத்தில் இருந்த கதிரையிற் போய் அமர்ந்துவிட்டேன். கண்கள் இதுதான் சந்தர்ப்பம் என்று தாமாக மூடிக்கொண்டன. ஒரு குழந்தையின் வீரிட்ட அழுகைச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. உறக்கத்திலும் அந்த சத்தம் எனக்குக் கேட்டது. உறக்கத்துக்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட ஒரு நிலை.
எனினும் நான் அந்த சத்தத்தைப் பற்றிப் பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை. நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் உபாதையில் அழுகின்றனர். அவற்றைக் கவனிப்பதற்குத் தாய்மாரும், தாதிமாரும் இருக்கிறார்கள். நான், எனது மகனைப்பற்றி மட்டும் (உறக்கத்திலும்) கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன்.
நித்திரை இன்னுமின்னும் என்னைக் கவ்விப் பிடித்துக்கொண்டிருந்தது.
யாரோ என்னைத் தட்டினார்கள்.
திடுக்குற்று அரைகுறையாக விழித்தேன். என் முன்னே இரவு பணிபுரியும் தாதியொருவர் நின்றார்.
“ஓ” வெனக் குளறும் ஒரு குழந்தையின் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. மற்றப்படி அவரவர் பாட்டில் அரைத்தூக்கத்திலோ, முழுத்தூக்கத்திலோ அமைதியாய் இருந்தார்கள்.
“என்ன?” எனத் தாதியிடம் கேட்டேன்.
“ஒரு உதவி செய்ய செய்ய முடியுமா?”
நான் தடுமாறினேன். “என்ன உதவி?”
“என்னோடு கொஞ்சம் வர முடியுமா?..
இப்போது என் கண்கள் முழுமையாகத் திறந்து விழித்துக்கொண்டன.
“குழந்தையொன்று அழுது குளறிக்கொண்டிருக்கிறது. அழுது அழுது களைத்துவிட்டது. என்ன செய்தும் அடக்க முடியாமலிருக்கிறது…”
“நான் வந்து என்ன செய்வது?” (எனக்கு எவ்வித மந்திர மாயவித்தைகளும் தெரியாதே!)
“அழுகையை நிறுத்தாவிட்டால் பூதம் வந்து உன்னைப் பிடிச்சுக்கொண்டு போய்விடும் என்று குழந்தைக்குச் சொல்லியிருக்கிறோம். நீங்கள் வந்து கொஞ்சம் பயமுறுத்திவிடுங்கள்!”
அடக் கடவுளே! என்னை பார்க்கப் ப+தம்மாதிரியா இருக்கிறது? என்னைப் பார்க்க அவ்வளவு விகாரமாகவா தோன்றுகிறது?
இரண்டு நாட்களாக நித்திரை இல்லை, அலைச்சல். ஒருவேளை அப்படித்தான் தோன்றியிருக்கிறதோ என்னவோ! அந்தப் பெண்ணின் முன் எனது முகத்தைக் காட்டிக்கொண்டு நிற்பதற்குக் கூச்சமாகக்கூட இருந்தது. தலைமுடியைக் கையினால் கோதிவிட்டு சரிசெய்தேன். கண்களைத் துடைத்தேன்.
“வர முடியுமா?… ஒரு சின்ன உதவிதானே?”
சங்கடமாய் இருந்தது. குழந்தைகளைப் பயமுறுத்துவது எவ்வாறு என்பது எனக்குத் தெரியாது. அதில் சம்மதமும் இல்லை. அதிலும் நோய்வாய்ப்பட்டிருக்கும் ஒரு குழந்தையைப் பயமுறுத்துவது என்பது எவ்வளவு மோசமான செயல்?
“வாருங்கள்!” என்றவாறு நடந்தாள். செய்வதறியாது தாதியின் பின்னே மெல்ல நடந்து போனேன். ஓர் ஆணாகிய என்னைத் தயைகூர்ந்து இங்கு தங்குவதற்கு அனுமதியளித்தமைக்குக் கைமாறாக இப்படிப் பேய்வேடம் போடவேண்டியிருக்கிறதே?
போகிற போக்கில் கேட்டேன். “குழந்தை ஏன் அழுகிறது?”
“அப்பா வேண்டுமாம்!… இந்த நேரத்தில் எப்படி அப்பாவைக் கொண்டுவருவது?…”
குழந்தை அழுதுகொண்டிருந்த பகுதிக்குள் போனோம். தாயார் குழந்தையைத் தூக்கி வைத்திருந்தார். குழந்தை அழுது அழுது மாய்ந்துகொண்டிருந்தது. முகம் முழுவதும் கண்ணீர். மூக்கும் வடிந்திருந்தது.
“புத்தே..!” (மகன்..!)
எனது அழைப்புக் குரல் கேட்டதும் குழந்தையின் அழுகை சட்டென நின்றது. ஓர் அதிர்ச்சி போலவும், ஆச்சரியத்துடனும் அதன் பார்வை திரும்பியது.
நான் முகத்தை சற்று மறுபக்கமாகத் திருப்பிக்கொண்டு கைகளை நீட்டினேன்.
அது என்னிடத்தில் வந்துவிட்டது!
(மல்லிகை சஞ்சிகையிற் பிரசுரமானது.. 2004)