கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 12, 2024
பார்வையிட்டோர்: 2,287 
 
 

(1967ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பொறி ஐந்துபொறி ஆறு | பொறி ஏழு

ஆத்ம சோதனை 

என்னைச் சார்ந்த எல்லா விஷயங்களுமே, என்னிலிருந்து தொடங்க வேண்டுமென்று விரும்புபவன் நான். ஆனால் அதற்கு விதி விலக்காக, இந்தச் சேவையில் மட்டும் என்னுடைய சகோதரர்களையும் சகோதரிகளையும் பின்பற்றியிருக்கிறேன். 

மயக்கம் அடைந்த நிலையில் என்னிடம் ஒப்படைக்கப்பட்ட அல்லிக்கு மேலும் தொல்லை தரக்கூடாதென்று எண்ணி, இந்தப் பகுதியின் முடிவு வரை அவளது ஆத்ம சோதனையிலேயே என்னை ஈடுபடுத்தினேன். ஆனால் முடிவிலோ, என்னையும் மீறி அவளுக்குச் சுகுணாவின் மூலம் ஒரு பேரதிர்ச்சி ஏற்பட்டு விட்டது. அதற்கு நான் என்ன செய்வேன்? 

‘சிருஷ்டியின் முன் சிருஷ்டிகர்த்தன் சாமான்யமானவன்’ என்பது உண்மைதானோ, என்னவோ…? 

மா.கு.நெடுமாறன் 

பொறி ஆறு 

கனவு 

உதயத்தின் சௌந்தர்யம் உலகத்தையே சுவர்க்க மாகத்தான் ஆக்கிவிடுகிறது. 

இருள் விலகாத வானம். பனி விலகாத பூமி. இவற்றின் மத்தியிலே அருணோதயத்தின் ஜோதிக் கதிர்கள் ஊசலாடுவதைப் பார்க்கும் போது, இயற்கையின் எல்லை யற்ற பேரழகிற்கே ஓர் எல்லை ஏற்பட்டு விட்டதைப் போன்ற பிரமை இதயத்தில் ஏற்படுகிறது. 

படுக்கையில் படுத்தபடி வைகறையின் இந்த வரம்பு கடந்த வனப்பைக் கண்ட அல்லியின் நெஞ்சம் மகிழ்ச்சியால் துள்ளியது. அதன் அடிவாரத்தில் ஆயிரம் கற் பனைகள் எழுந்தன. 

‘சில்’லென்று வீசிய இளங்காற்று அவளது உடலின் வழியாகப் புகுந்து, அவளுடைய உள்ளத்தைத் தொட்டது, வீசும் தென்றலின் ஸ்பரிசம் இவ்வளவு மென்மையானதா…? 

அல்லியின் விழிகள் ஒருமுறை குதூகலத்தால் மூடித் திறந்தன. திறந்த விழிகள் சிவந்திருந்தன. ஆமாம்; இரவு முழுவதும் அவள் தூங்கவே இல்லை. 

அளவுக்கு மீறிய துன்பத்தைப் போலவே, அளவைக் கடந்த இன்பமும் மனத்தின் சாந்தியைக் கெடுத்துத் தான் விடுகிறது. 

அல்லியின் நெஞ்சில் நினைவுகள் குறுகுறுத்தன. அந்த நினைவுகளின் ஒவ்வொரு அணுவிலும் கோடிக்கனவுகள். 

“அத்தான்…!” 

பெருமூச்சோடு அவளது உதடுகளில் பிறந்த இவ் வார்த்தையில் ஆழம் காண முடியாத பந்தமும் பாசமும் தொனித்தன. அந்தத் தொனியில் துயின்ற எண்ணங்கள் காதலியின் அற்புதத்தை கதையாகச் சொல்லி மகிழ்ந்தன. 

“அத்தான், நீங்க எவ்வளவு நல்லவங்க…! அனாதையா யிருந்த எனக்கு ஆதரவு தந்ததும் இல்லாம உங்க வாழ்க்கையிலே பங்கு பெறுகிற பாக்கியத்தையும் தந்திட்டீங்களே! நெசமாகவே நான் அதிர்ஷ்டக்காரி தானா அத்தான்?”’ 

அல்லி தன் இதயத்தோடு பேசினாள். 

‘………… புழுதியிலே கிடந்த பூமாலையை எடுத்து சாமிக்குச் சாத்துறது மாதிரி, விதி என்னை எங்க அத்தானோட கொண்டு சேர்த்திடுச்சு. இதுக்காக நான் இப்போ யாருக்கு நன்றி சொல்றது? அத்தானுக்கா?… இல்லாட்டி தெய்வத்துக்கா…? ம்… இனிமே என்னைப் பொறுத்தவரையிலே என்னோட அத்தான் தானே எனக்குத் தெய்வம்…?…’ 

அல்லியின் இதயம் பேசிற்று; 

‘நானும் அவுங்களும் மணையிலே உட்காருறப்போ…ம் தூரத்திலே நிக்கிறபோதே ‘திருட்டுப் பார்வை பாக்கிற திலே குறைச்சல் இல்லே. இதிலே பக்கத்திலே போயும் உட்கார்ந்திட்டா! அவ்வளவு தான்!… என்னதான் பிரியம் இருந்தாலும் இவுங்களுக்கு இவ்வளவு அவசரம் கூடாது; பாவம் அவுங்களுக்குத் தான் என்மேலே எவ்வளவு அன்பு! இதுக்கெல்லாம் வட்டியும்முதலுமா… இருக்கட்டும் இருக்கட்டும்; இன்னும் பத்து நாளுதானே? அப்புறம் கல்யாணம் ஆன மறுநாளைக்கே…! 

எதையோ நினைத்துக் கொண்ட அல்லி ‘களுக்’ கென்று ‘களுக்’கென்று சிரித்தாள். அழகுச் சிரிப்பின் மெல்லிய அலைகள் மிதந்து நின்ற தென்றலோடு தேய்ந்து மறைந்தன. 

ஓர் இளம் பெண்ணுக்கு, அவளுடைய திருமணச்செய்தி இவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்குமா? ஆமாம், அல்லி யைப் பார்த்தால் தெரியவில்லையா…? 

பத்து நாட்களுக்குப் பின், பங்குனித் திருநாள் ஒன்றில் நடக்க இருக்கும் தன்திருமணத்தை நினைத்து நினைத்துப் பூரித்தாள் அல்லி. 

“அத்தான், அத்தான்!” என்று அவளது உள்ளம் அடிக்கு ஆயிரம் முறை அருணாசலத்தை அழைத்து அழைத்துக் கொண்டாட்டம் போட்டது. 

நேற்றுவரை யாரோ ஒரு ‘அவர்’ ஆக இருந்த ஒருவன், இன்று படீரென்று தன் இதயம் முழுவதும் எதிரொலிக்கும் ‘அத்தான்’ என்ற பந்தச் சொல்லுக்குப் பாத்தியம் ஆகிவிட்டதை நினைத்தபோது, அவளுக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது! 

காதலின் ஜீவ சக்தி, உணர்ச்சிகளின் இயல்புகளில் மட்டு மல்ல, உயிரின் பாசத்திலே கூட புதுமையை மலர வைத்து விடுகின்றது. 

நெருக்கமற்றுக் கிடந்த இரண்டு இதயங்களுக்கு மத்தியில் வாஞ்சைகளின் சிறகுகள் விரிக்கப்படும்போது. எல்லாவற்றையும் கடந்த ஒரு பிணைப்பு – எல்லா உணர்வுகளையும் ஊடுருவிய ஓர் இணைப்பு நிகழ்ந்துதான் விடுகிறது. இந்தச் சங்கமத்திற்குப் பெயர்தான் காதலா? 

ஆமாம்! 

அல்லிக்கு எப்பொழுதுமே இன்றுபோல இவ்வளவு அழகானதாக உலகம் இருந்ததில்லை. கண்ணில் பட்ட பொருளெல்லாம் ‘காவிய மகத்துவம்’ பெற்றுவிட்டதாக தோன்றச் செய்யும் இந்தச் சக்தி, காதலைத் தவிர வேறு எதில் இருக்கிறது? 

அல்லியின் விழிகள் கிழக்கு வானத்தைச் சந்தித்தன. இப்போது, அங்கு சற்று முன் சிந்திக்கிடந்த இரத்த சிவப்பு இல்லை. மங்கலான வெண்மை — பயத்தால் வெளிறிய முகத்தைப் போல மங்கியதொரு வெளுப்பு அதில் பரவியிருந்தது. அந்த சிவப்பைப் போல இந்த வெளுப்பு, அப்படி ஒன்றும் பார்ட்பதற்கு நன்றாகத் தோற்றம் தரவில்லை. இதைக்கண்ட அல்லியின் முசம் ஏனோ திடீரென்று வாடியது. திருப்தியற்ற நினைவுகள் அவளது உள்ளத்தை முற்றுகையிடத் தொடங்கி விட்டன. 

ஒரு விதத்திலே நம்ம அத்தானோட மனசும் இந்த கிழக்கு வானத்தைப்போலத்தானே இருக்கு! ஒரு சமயத் திலே சிவப்பு: இன்னொரு நேரத்திலே வெளுப்பு; இன்னும் ஒரு வேளையிலே காட்டேரி யைப்போல கறுப்பு ! அவுங்க மனசும் கிட்டத்தட்ட இப்படித்தானே இருக்குது? 

‘அன்னிக்கு ஒரு நாள் ‘டிக்கெட்டுக்காரர்’ கிட்டே அகப் பட்டுக்கிட்டபோது அவுங்க பேசின சட்டம், போன வாரம் அந்த சாத்தையன் தன்னைப்பத்தி ஏதோ சொன் னதைக் கேட்டுக்கிட்டு உண்மை புரியாம அவுங்க செஞ்ச ஆர்ப்பாட்டம்!…… அம்மம்மா!… … 

நடந்ததை இப்போது நினைத்துப் பார்த்தபோது அடி வயிற்றிலிருந்து எழுந்த விம்மலை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள் அல்லி. ஆனால் நெஞ்சிலிருந்து பிரவகிக்கும் நினைவுகளை அவளால் அடக்க முடியவில்லையே! 

நினைவுகளே இப்படித்தான், சனியன்கள்! அவைகள் ‘வா’ என்றாலும் வருவதில்லை.’போ’ என்றாலும் போவ தில்லை. இஷ்டப்பட்டால், வருவதும் இஷ்டம் போலப் போவதும்!”’அடப் பிசாசுகளா! 

‘அன்னிக்கு அந்தச் சிங்கப்பூரு ‘சாத்தானை’க் கண்டுப் பிட்டு மயக்கம்போட்டு விழுந்தவ மறு நாள் சாயந்தரம் தான் கண் விழிச்சுப் பார்த்தேன். என் எதிர்த்தாப்பிலே நின்னுக்கிட்டு இருந்தாங்க. நான் மயக்கம் தெளிஞ்சதைப் பாத்திட்டு, அவுங்க ஆசையோட பாசமா பேசு வாங்கன்னு நினைச்சு நான் அவுங்களையே ஆவலோடே பார்த்தேன்.ஆனால் அவுங்க என்னைப் பார்த்து ‘உர்’ன்னு மூஞ்சியை வச்சிக்கிட்டு “ஏ அல்லி! நான் ஒன்னை கேட் கிற கேள்விக்கெல்லாம் ஒளிக்காம ‘டக்’ ‘டக்’ குன்னு யதில் சொல்லணும்.ஏதாவது ஒளிச்சியோ, அப்புறம் தெரியும் சேதி! ஆமாஞ்சாமி ஆணை’ன்னு பீடிகைபோட்டுக் கிட்டு அவுங்க கேள்விகளைக் கேட்டப்போ, ‘இந்தக் கேள்விகளைக் கேட்கிறதுக்கு முன்னாலே, எனக்கு அவுங்க கையாலேயே ஒரு துளி விஷத்தைக் கொடுத்திருக்கக் கூடாதா?’ன்னுதான் தோணிச்சு. 

என்னென்ன கேள்விங்க? ……..? எப்படிப்பட்ட வார்த் தைங்க?’ இங்கே நீ வர்றதுக்கு முன்னாலே ஊரிலே என்ன செஞ்சிக்கிட்டிருந்தே? உனக்கும் சிங்கப்பூர் சாத் தையாவுக்கும் எத்தனை நாளாத் தொடர்பு? அப்புறம் ஏன் அவனை விட்டுட்டு ஓடியாந்தே?”ன்னுல்லாம் கேட்டு என்னோட உசிரையே கருக வெச்சாங்களே! அதுக்கப் புறம் நான் அவுங்க காலிலே விழுந்து, நடந்த விஷ யத்தை எல்லாம் ஒண்ணு விடாம சொல்லி அழுத பிற் யாடு, அவுங்க துடிச்சத் துடிப்பு …! 

“உன்னைப்போயி சந்தேகப்பட்டேனே அல்லி? உண் மையை உனக்கு முன்னமேயே செந்தாமரை சொல்லிச்சு. இருந்தாலும் எனக்கு சந்தேகம் நீங்கலே; அதனாலே தான் உன்னையே கேட்டேன்; தப்பா நினைச்சுக்காதே அல்லி; தயவு செஞ்சு என்னை, மன்னிச்சுக்க அல்லி’ன்னு அவுங்க கெஞ்சின கெஞ்சல்! பாவம், அதைப்பாத்தப்போ எனக்கே கூட மனசு கஷ்டமாகத்தான் இருந்துச்சு. 

‘அன்புள்ள இடத்திலேதான் ஆத்திரமும் இருக்கும்! என்மேலே அவுங்களுக்கு அவ்வளவு பிரியம் இல்லேன்னா எதுக்காக இந்தசிங்கப்பூர்க்காரன் சொன்னதைக் கேட்டுப் புட்டு அவ்வளவு துடிதுடிக்கணும்? கடைசியிலே, உண்மை புரிஞ்சதுக்கப்புறம் என்னோட முகத்தை நிமிர்த்தி ‘கண்ணுல்லே’ இதுக்காகவா அழுகிறது? யாரு கோவிச் சுக்கிட்டது! உனக்குச் சொந்தமானவன்தானே? அதுக் காக இப்படிக் கண்ணாலே தண்ணி விடலாமா? எங்கே, என்னைப் பாத்துக் கொஞ்சம் சிரி; கொஞ்சம்! ம்.. இன்னும் கொஞ்சம் …!’ன்னு அவுங்க கொஞ்சின கொஞ்சல்; இருந்தாலும் அவுங்களுக்குக் கொஞ்சம் கூட வெட்கமே இல்லை; பாவம், அத்தான்!” 

பாசத்தின் உணர்வுகள் பச்சாதாபத்தினால் பதை பதைத்தன. 

அல்லியின் கடை விழிகளில் லேசாக நீர் தேங்கி யிருந்தது. அது என்ன, ஆனந்தக் கண்ணீரா? ஆமாம், அப்படித்தான் இருக்கும்! 

தாபத்தின் துடிப்புக்களை தாளமாகக் கொண்டு மீண்டும் நினைவுகள் இசைபாடத் துவங்கின. 

என்ன இருந்தாலும் அவுங்களுக்கு இவ்வளவு கோபமும் முரட்டுத் தனமும் இருக்கக் கூடாது. இஷ்டப் படி பேசுறதும் கட்டுப்பாடு இல்லாமல் நாலு பேர் நாலு சொல்லும்படியா நடக்கிறதும்…! இருக்கட்டும்; என் கழுத்திலே தாலி ஏறட்டும். பிறகு நான் சொன்னபடி தான் அவுங்க நடக்கணும். இதுபோல, கண்டபடி’காளை’ மாதிரி சுத்தறதுங்கிற பேச்சு. அதுக்கப்பாலே இந்த அல்லிக்கிட்டே நடக்காது.” 

இனம் புரியாத நம்பிக்கையும் பலமும் அவளது சோர்ந்து கிடந்த மனசை நிமிர்த்திவிட்டன. அவள் நிமிர்ந்து உட் கார்ந்தாள். அவளது விழிகள் வெளிவானின் விளிம்பு கட்குத் தாவின. அந்தப் பார்வையில் ‘மகத்தானதோர் புதிய பொறுப்பினை ஏற்கப் போகிறோம்’ என்ற பெரு மிதம் மட்டுமா இருந்தது? இல்லை; பாவத்தின் பாதங் களில் சுருண்டு கிடக்கும் ஓர் ஆத்மாவைத் தூக்கி நிமிர்த்தப் போகிறோம்,என்ற நிறைவும், ‘இருண்டு கிடக்கும் ஒரு வாழ்க்கைக்கு ஒளி ஊட்டப் போகிறோம்’ என்ற நிம்மதியும் கூடத் தான் சுடர் விட்டன. 

அருணாசலத்தின் இருட்டிப் போன வாழ்வில் ஒளி ஏற்ற வந்த அழகுத் தீபமா அல்லி? 

ஆமாம். அவள் அப்படித்தான் நினைத்தாள். 

அருணாசலத்தின் ‘பாலைவன உள்ளத்தில் ‘வசந்த’த்தைப் பரப்ப வந்த தெய்வமா அல்லி…? 

ஆமாம். அல்லி அப்படித்தான் கருதினாள். 

அருணாசலத்தின் பொய்மை சூழ் வாழ்விற்குப் புது ரத்தம் பாய்ச்சவந்த ‘சத்தியதேவதை’யா அல்லி…….? 

ஆமாம், ஆமாம்! அல்லியின் மனக் குரலில் இந்த எண்ணங்கள் தாம் ஒலித்துக் கொண்டிருக்கின்றன! 

அழகுத் தீபத்தின் அற்புதச் சுடரை காலமெனும் புயற் காற்று அசைக்கலாம். ஆனால், அந்தப் புனிதச் சுடரை அதனால் அணைத்து விட முடியாது. எந்தப் புயலுக்கு நடு விலும் அந்தப் புனித தீபம் -அழகுத் தீபம் ஆடும் தீப மாக நின்று ஒளி வீசிக்கொண்டே இருக்கும்! 

பாலையிலே வந்துதித்த அந்த வசந்தத்தை இயற்கையின் கொடுமைகள் சாகடிக்க நினைக்கலாம்.ஆனால் ‘வசந்தம்’ சாகாது. அதன் இலட்சியங்கள் முடிவு பெறும் வரை அது சாகவே சாகாது. 

பொய்மையின் இருண்ட நகங்களில் ‘சத்திய தேவதை யின் இரத்தக் கறை படியலாம். ஆனால் வாழ்வின் உயிர்ப்பாக இருக்கும் அவளை அதனால் கொன்றுவிட முடியாது. நிச்சயமாக, சத்தியமாக முடியவே முடியாது! 

அல்லி ஒரு தீபம்; அல்லி ஒரு வசந்தம்; அல்லி ஒரு சத்திய தேவதை! அவள் வாழ்வாள்; அவளது இலட்சியங்களும் வாழும்; அருணாசலம் வாழும்வரை; அல்லது அவளது தடம் புரண்ட வாழ்வு செத்து வீழும் வரை! விதியின் சட்டமா இது? இல்லை; விதியே இதுதான்! 

அல்லியின் சிந்தனைகள் அவளது உள்ளத்தைப் போலவே மெய்ம்மறந்து திரிந்தன. 

சுவர்க் கடிகாரம் ஏழு முறை ஒலித்து நிறுத்தியது. 

”ஐயய்யோ, இவ்வளவு நேரம் ஆயிடுச்சே?’ என்று அவசர அவசரமாக எழுந்த அல்லி அறைக்கு வெளியே நடந்தாள். 

எதிரே வந்தாள் நாச்சியாரம்மா.”ஏம்மா, இப்பத்தான் எழுந்திரிச்சியோ? சீக்கிரம் பல் விளக்கிவிட்டு வா;சூடா இட்லி தர்றேன்!” 

“சரிங்கம்மா” 

அல்லி நடந்தாள். அவள் நடையில் ஒரு துள்ளல். 

“அவுங்களுக்குத்தான் என் மேலே எவ்வளவு பிரியம்.”- அவளது மனம் நினைத்தது. 

இலைக்கு முன் உட்கார்ந்து கொண்டு “ஏன் ஆச்சி, வாத்தியாரய்யா வரலியா?” என்று கேட்டாள் அல்லி.

“அவரு பூஜை பண்ணிக்கிட்டு இருக்காரு அம்மா; வர நாழி செல்லும்; நீ சாப்பிடு.” என்ற நாச்சியாரம்மா வின் குரலில் பரிவு இருந்தது. 

சாப்பிட்டுக் கொண்டிருந்த அல்லியின் விழிகளைக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த ‘சலங்கை’ இழுத்தது. ‘இனிமே அதை நாம்ப கட்டிக்கிடவே முடியாதா? நிரந் தரமா அதை விட்டுட வேண்டியதுதானா? ம்! கல்யாணம் ஆயிட்டப்புறம் ‘குடும்பம்’ நடக்கிறதை கவனிக்கிறதா, அல்லது ‘சலங்கை’யைக் கட்டிக்கிட்டு ஆடறதுக்குப் போறதா? வேணுமானா எப்பவாச்சும் நான் ஆடறதைப் பார்க்கணுமுன்ணு அத்தான் சொன்னா அப்ப கட்டிக்கிடலாம்……! 

முடிவுகளே முடிவுகளுக்கு மருந்தாக இருந்தன. 

“நாளன்னிக்குத்தானே அம்மா, நிச்சயதாம்பூலம்?” 

”ஆமாம்மா!”

அல்லிக்குச் சொல்வதற்கே வெட்கமாக இருந்தது.

”அப்போ,நாளை ராத்திரிக்கே அவுங்க எல்லாம் வந்திடுவாங்க. அவுங்களோட ‘அது’வும் கூட வருமில்லே?”

நாச்சியாரம்மாவின் குரலில் ஏன் அந்தக் குறும்பு? 

”எது?” 

தெரியாதவள்போல் கேட்டாள் அல்லி. 

”எதுவா? புரியாததுபோல நடிக்கலாமுன்னு பார்த்தாயா? எங்கே என் முகத்தைப்பார்த்துச் சொல்லு, நான் எதைக்கேட்டேன்னு நெசமா உனக்குத் தெரியாதா அல்லி? “

அல்லிக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. 

”போங்க ஆச்சி!”

கையைக் கழுவிவிட்டு மானைப்போலத் துள்ளி அறைக்கு ஓடினாள் அல்லி. 

படுக்கையில் புரண்ட அல்லி மீண்டும்கனவில் ஆழ்ந்தாள். கனவுகளைப்போல உயிருக்குப் பலம் தரக் கூடியது உல கத்தில் வேறு என்ன இருக்கிறது? எதுவுமில்லை. ஆகை யினால், வாழ்க கனவுகள்! 

‘”உனக்கு ஒரு தபால் வந்திருக்கும்மா!” 

“அவுங்க லெட்டராத்தான் இருக்கும். இப்ப வேறுயாரு நமக்குக் கடுதாசு எழுதப் போறாங்க?” 

கடிதத்தை எடுத்தாள். 

‘அவுங்களது இல்லியே? யாரு, சுகுணாவா?.. பேரே புதுசா இருக்கே……..’ 

கடிதத்தைப் பரபரப்புடன் படிக்கத்துவங்கினாள்.அவளது உதடுகள் நடுங்கின… …! 

“அன்புள்ள அல்லி, 

முன்னே பின்னே தெரியாம லெட்டர் எழுதறேன்னு தப்பா நினைச்சுக்காதே; சந்தர்ப்பம் இப்படி ஆயிடுச்சு. 

என்னோட அத்தான் அருணாசலத்தை நீ கட்டிக்கப்போறி யாமே? இது உனக்கே நல்லா இருக்கா? 

அவுங்க அப்பா-என்னோட அம்மாவோட அண்ணன். எங்க அம்மா சாகிறபோது அவுங்க கையாலேதான் என்னைப் பிடிச்சுக் கொடுத்திட்டுச் செத்தாங்க. அதிலேருந்து ‘அதுக்கு நான்தான்; எனக்கு அதுதான்’னு பெரியவங்களே தீர்மானிச்சு வச்சுட்டாங்க. 

இப்போ இடையிலே வந்த நீ அந்த முடிவை மாத்தி விடப் போறியா? 

எனக்குக் கடவுள் தந்த ஒரேஒருநாதியே எங்க அத்தான் தானே? அதையும் நீ பிடுங்கிக்கப்போறியா? அப்படின்னா என்னோட ஆசையெல்லாம் மண்ணுதானா? என்னோட நெனைப்பு எல்லாம் பகலிலே கண்ட கனவைப் போல. பழசாப்போன கதையைப்போல பாழாகப் போகவேண்டி யதுதானா? 

நீயே நல்லா யோசிச்சுப்பாரு அல்லி. யோசிச்சுப் பார்த் திட்டு ஒரு முடிவுக்கு வா! 

என்னோட அத்தான்தான் எனக்கு எல்லாம். அவுங்களை நான் பிரிஞ்சுட்டா, நீ எங்களைப் பிரிச்சுட்டா அப்புறம் என் கதி….? 

ஒரு பொண்ணை நீயே வீணா கொன்றுபோடப் போறியா அல்லி?…’

அதற்குமேல் அல்லியால் படிக்க முடியவில்லை. 

அல்லியின் தலை சுழன்றது. பிரளயத்தின் கொந்தளிப்பில் அகப்பட்டுக்கொண்ட துரும்பைப்போல அவள் தத்தளித்தாள். 

இதயத்தில் கூடவா எரிமலை இருக்கிறது. 

”ஐயோ அத்தான்! அத்தான்!” அவளது நெஞ்சின் கதறல் அவளைக் கொன்று விடும்போல் ஒலித்தது.

“ஆ…கடவுளே…!” பாவம் அல்லிக்குப் பைத்தியம் பிடித்து விடும்போல் இருந்தது.

– தொடரும்…

– ஆடும் தீபம் (நாவல்), முதற் பதிப்பு: மார்ச் 1967, செல்வி பதிப்பகம், காரைக்குடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *