ஆடரங்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 10, 2021
பார்வையிட்டோர்: 2,390 
 

கூட்டம் ஒன்றும் பிரமாதமாக இல்லை. ஏதோ பொறுக்கி எடுத்த சிலருக்கு, உபயோகப்படக் கூடியவர்களுக்கு, கலை உலகிலே முக்கியஸ்தர்களுக்கு மட்டுந்தான் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. பத்துப் பதினைந்து பெண்மணிகள், ஏழெட்டுக் குழந்தைகள், இருபது ஆண்கள்-இவ்வளவுதான். பெண்களில் சிலரையும், குழந்தைகளையும் தவிர மற்றவர்களெல்லாம் கலை உலகில் பெரிய ஸ்தானம் வகிப்பவர்கள்; அந்தச் சில பெண்களும் குழந்தைகளுங்கூடப் பெரியவர்களின் வீட்டுக் குழந்தைகளும், பெண்களுந்தான். லஷ்மி பாக்கியசாலி. அவளுடைய அரங்கேற்றம் நல்ல சுபசூசகங்களுடன் கலைத்தூண்’களின் நிழலில் நடக்க இருந்தது.

லக்ஷ்மி உள்ளே வரும்போதே, “கீழே விரித்திருக்கும் விரிப்பு வழுக்காதே?” என்று சபையில் யாரோ கேட்டதும், “வழுக்காது; அநேகமாக வழுக்காது” என்று யாரோ சொன்னதும் அவள் காதில் விழுந்தன. குனிந்து பார்த்தாள். ரப்பரைப்போல ஏதோ ஒரு விரிப்பானது கீழே விரிக்கப்பட்டிருந்தது. அது அறை அகலம் முழுவதுங்கூட இல்லை. நடு அறையில் நாலடி அகலத்துக்குத்தான் இருந்தது. முழுவதும் அந்த விரிப்பிலேயே நாட்டியம் ஆடிவிட முடியாது. தரையிலும் கால் படத்தான் படும். விரிப்பு வழுக்காது போலத்தான் இருந்தது. ஆனால் காலைத் தரையிலிருந்து விரிப்புக்கு மாற்றும் போது அதிக ஜாக்கிரதையாகத்தான் இருக்கவேண்டும். தடுக்கிவிட்டால் ஆபத்து… ஆமாம், ஜாக்கிரதையாகத்தான் இருக்கவேண்டும்! அதென்ன, நாட்டிய மேடையா, எல்லாச் செளகரியங்களும் இருக்க? சாதாரண வீட்டில் ஒரு கூடம்; இந்தச் சந்தர்ப்பத்துக்கு நாட்டிய அரங்காக, லக்ஷ்மியின் அரங்கேற்றத்துக்காக மாறியிருந்தது; அவ்வளவுதானே! எவ்வளவு அசெளகரியமிருந்தாலும் கூட்டம் அதிகம் இல்லாதது பற்றி லக்ஷ்மிக்குப் பரம திருப்தி. என்ன இருந்தாலும் அவள் சிறுமிதானே? தைரியம் கொஞ்சம் இருந்தது; வாஸ்தவந்தான். இன்று இங்கே சபையில் கூடியிருந்தவர்கள் பெரியவர்கள் கலையைப் பற்றி முற்றும் அறிந்தவர்கள்; வயதானவர்கள்; தன் நாட்டியத்தில் எவ்வளவு குற்றம் குறையிருந்தாலும் சரியாகப் பயிற்சி பெறாதவள், சிறுமி என்பதற்காகத் தன்னை மன்னித்துவிடக் கூடியவர்கள் என்று எண்ணினாள் லக்ஷ்மி. அது அவளுக்குக் கொஞ்சம் ஆறுதல் அளித்தது.

எதிரே சுவரில் பெரிய சரஸ்வதி படம் ஒன்று மாட்டியிருந்தது. அதை நோக்கிக் கையைக் கூப்பி வணங்கினாள் லக்ஷ்மி. அப்புறம் மெல்லெனச் சதங்கை ஒலிக்க, இரண்டடி முன்னால் எடுத்துவைத்துச் சபையை நோக்கித் தாழ்ந்து கைகூப்பி வணங்கினாள். அதே வினாடி மத்தளம் முழங்கிற்று. ‘வயலின்’ இசைத்தது. நட்டுவனாரும் கலந்து பாட ஆரம்பித்துவிட்டார். நாட்டியத்தை ஆரம்பிக்க, லஷ்மியின் கையும், காலும் துடித்தன. சுற்றுமுற்றும் பார்த்தாள். அவள் தாய்மட்டும் ஏன் முகத்தை அப்படிச் சிணுக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்? ‘எதையாவது மறந்துவிட்டேனோ?’ என்று எண்ணினாள் லஷ்மி. சதங்கை, கச்சை, டோலக்கு, பொட்டு, தலையணி எல்லாம் சரியாகத்தானே இருந்தன? இதென்ன இப்படி ஆரம்பிக்கும் போதே தடங்கலாகச் சகுனம்? அவள் தாய் ஏதோ சைகை காட்டினாள்… என்ன? என்ன அது? மறுபடியும் வணங்கச் சொன்னாள். யாரை? லக்ஷ்மி சபையைப் பார்த்தாள். ஓ!

லக்ஷ்மி சதங்கை ஒலிக்க லாகவமாக நடந்து போய்ச் சபையில் முன் வரிசையில் உட்கார்ந்திருந்த மிஸ் ஊர்வசியை வணங்கினாள். என்ன பைத்தியக்காரத்தனம்! அவள் தாய் எவ்வளவோ தரம் சொல்லியிருந்தும் ஏன் இது இப்படிக் கடைசி விநாடியில் மறந்துவிட்டது! அசட்டுத்தனம்! அவள் தாய் படித்துப் படித்துச் சொன்னாளே! கடைசி நிமிஷத்தில்… நல்ல வேளை, கடைசி நிமிஷத்திலாவது ஞாபகம் வந்ததே! அந்தமட்டும் சரிதான். மிஸ் ஊர்வசி எவ்வளவு அபூர்வமான, வசீகரமான பாவத்துடன் அவளுடைய வணக்கத்தை ஏற்றுக்கொண்டாள்? அவளுடைய முகத்திலும், கையிலும் சட்டென்று ஒரு விநாடியில் தோன்றி மறைந்த அசைவுதான் எவ்வளவு அதிசயமானது! உண்மையிலேயே மிஸ் ஊர்வசியை நாட்டியக் கலையின் சிகரத்தை அடைந்தவள் என்று சொல்லுவதில் தவறில்லை என்பது அந்த ஓர் அசைவிலேயே லக்ஷ்மிக்குத் தெரிந்துவிட்டதுபோல் இருந்தது. இப்படி யோசித்துக்கொண்டே லக்ஷ்மி மெதுவாகத் தன்னுடைய ஆரம்ப ஸ்தானத்துக்கு நகர்ந்தாள். மிஸ் ஊர்வசியைப் போலத் தானும் ஆகிவிட வேண்டுமென்று அவள் உள்ளத்திலே தோன்றிற்று. இன்று ஆரம்பம், முன்னோக்கி நாட்டியமாடி நகர.

இதோ நாட்டியம் ஆரம்பித்துவிட்டது. முதலில் மூன்று பாட்டுக்களுக்கு அபிநயம் பிடிப்பது ரொம்பக் கஷ்டமான காரியம். லக்ஷ்மியின் மனம் அபிநயத்தைத் தவிர வேறு எதிலும் ஓடவில்லை. வரிசைக் கிராமமாகப் பாட்டனார் சொல்லித் தந்திருந்தபடி, தாளம், பாவம் தவறி, விட்டுப் போகாமல் நாட்டியமாடினாள். நாலாவதாகப் பாடப்பட்டது ஓர் எளிய பதம். அது லக்ஷ்மிக்கு மிகவும் பழக்கமானது; நாட்டியமாட ஆரம்பித்த நாட்களிலிருந்து அவளுக்குப் பாடமானது. அதற்கு இசைந்து ஆடிக்கொண்டிருக்கும்போது லக்ஷ்மி மறுபடியும் நாட்டியக் கலையையும், மிஸ் ஊர்வசியையும், சபையையும் கவனிக்க ஆரம்பித்தாள்.

மிஸ் ஊர்வசி முகத்தில் சலனமே இல்லாமல் உட்கார்ந்திருந்தான். தன் நாட்டியம் அவளுக்குப் பிடித்திருந்ததா இல்லையா என்று அவள் முகத்திலிருந்து லக்ஷ்மியால் அனுமானிக்க முடியவில்லை. சிலசமயம் ஊர்வசியின் கண்கள் சபையில் அவள் அருகில் உட்கார்ந்திருந்த ஒருவருடைய கண்களை நாடித் தேடுவதை லக்ஷ்மி கவனித்தார். அந்த மனிதர் ஊர்வசியுடன் வந்தவர் என்று லக்ஷ்மிக்கு ஞாபகம் வந்தது. அவர் அபிப்பிராயத்தை அறிய விரும்பியவள் போல ஊர்வசி ஏன் அப்படி அடிக்கடி அவர் முகத்தை நோக்கினாள்? ஊர்வசியையும் விட அவர் நாட்டியக் கலையைப் பற்றி அதிகம் அறிந்தவராயிருப்பாரோ? அல்லது, ஒரு தீர்மானத்துக்கு வருமுன் அவர் அபிப்பிராயத்தையும் கலந்து அறிந்துகொள்வது நல்லது என்று ஊர்வசி எண்ணினாளோ? தன் நாட்டியம், தன் வயதுக்கு எவ்வளவுதான் உயர்ந்தானாலும், ஊர்வசிக்கு உயர்ந்ததாகப்படாது என்பது லக்ஷ்மிக்கும் தெரியாத விஷயமல்ல. ஏதோ குற்றங்குறைகள் அதிகம் இல்லை, முன்னேற இடமிருக்கிறது’ என்று ஊர்வசி சொல்லிவிட்டால் போதும் என்று எண்ணினாள் லசஷ்மி.

அந்தப் பதம் முடிந்துவிட்டது. அடுத்த பதம் கொஞ்சம் கடினமானது. அது நடக்கும்போது லக்ஷ்மியால் வேற எதைப்பற்றியும் சிந்திக்க முடியாது. அப்படியும் அவள் வெகு சிரமப்பட்டு ஊர்வசியும், அவளுடன் வந்த நண்பரும் தன் நாட்டியத்தைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்களுடைய முகபாவத்திலிருந்து அறிந்துகொள்ள முயன்றாள். சபையில் இரண்டொருவர் இடையிடையே “சபாஷ்!” என்றார்கள். ஆனால் அவர்களுடைய சபாஷால் மட்டும் லக்ஷ்மி திருப்தி அடைவதாக இல்லை. ஊர்வசியும், மற்றவரும்…? ஆனால், நிச்சலனமாயிருந்த அவர் முகத்தில் திடீரென்று ஒரு புன்னகை தோன்றிற்று. அந்தப் புன்னகையின் நிழல்போல ஊர்வசியின் முகத்திலும் லேசான ஒரு புன்னகை படர்ந்தது. அது கேலிப் புன்னகைதான்; சந்தேகமில்லை என்று லக்ஷ்மிக்குத் தோன்றிற்று. அவள் லயம் தவறிவிட்டது. அதைக் கவனித்த அவள் தாயும் பாட்டனும் விதவிதமான சைகைகள் காட்டினார்கள்; முகத்தை சிணுங்கிக் கொண்டார்கள். லக்ஷ்மி ஏதோ சமாளித்துக்கொண்டு ஊர்வசியையோ அவள் நண்பரையோ கவனிப்பதில்லை என்ற திடசங்கல்பத்துடன் நாட்டியமாடினாள். ஆனால் அவளையும் அறியாமலே அவள் கண்கள் அந்தப் பக்கந்தான் சென்றன. அவர்கள் இருவர் முகத்திலும் ஏளனப்புன்னகை இன்னமும் படர்ந்திருந்தது.

அதற்கடுத்த நாட்டியம் துவக்கும்போது லக்ஷ்மியின் மனத்தில் ஒரு கசப்பு தோன்றிவிட்டது. பத்து வருஷங்கள் வெற்றியில்லாமல் பொதுஜனத்தின் கீழ்த்தரமான அபிருசிகளுடன் போர்தொடுத்து ‘ரிடையராகி’ விட்ட கலைஞன் மனத்தில் கூட அவ்வளவு கசப்பு ஒருங்கே திரண்டு காணப்படுமா என்பது சந்தேகந்தான். குழந்தைதான் எனினும், வயது அதிகம் ஆகாதவன்தான் எனினும், கலையிலே உள்ள ஒரு தேர்ச்சியினாலும், பழக்கத்தினாலும் அவள் உள்ளமும், உணர்ச்சிகளும் கனிந்து நிறைந்திருந்தன. அவள் வயதுச் சிறுமிகளுக்கும் சாதாரணமாக எட்டாத சிந்தனைகளும், ஆர்வங்களும், உணர்ச்சிகளும் அவளுக்கு எட்டின. அவள் ஊர்வசியையும் சபையில் மற்றவர்களையும் மறந்துவிட்டுப் பாட்டைத் தானும் சொல்லிக்கொண்டு, பாவத்தில் ஈடுபட்டு நாட்டியும் ஆட ஆரம்பித்தாள். தன் நாட்டியம் எப்படியிருக்கும் என்றோ, அதைப்பற்றி மற்றவர்கள் என்ன சொல்லுவார்கள் என்றோ, இந்த ஒரு பாட்டின் போது அவள் கவலைப்படவில்லை. அது முடிந்தவுடன் சபையில் ஒரே ஒரு குரல் மட்டும் வெகு உற்சாகத்துடன் ‘சபாஷ்’ என்றது. யார் அப்படிச் சொன்னவர் என்று லஷ்மி கண்ணைத் திறந்து பார்த்தாள்; இரண்டாவது வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபன். அவனுக்கு நாட்டியத்தைப் பற்றி ஏதாவது தெரியுமோ, தெரியாதோ, சிறுமிக்கு உற்சாக மூட்டவேண்டியது அவசியம் என்று தெரிந்திருந்தது. இதைப்பற்றி லக்ஷ்மி யோசித்து முடிக்குமுன் சபையில் சிலர் கை தட்டினார்கள். வேறு சிலர் லேசாகக் கையைத் தட்ட முயன்றார்கள். அதிகச் சப்தம் செய்யாமல், தன்னையும் அறியாமலே லக்ஷ்மியின் கண்கள் ஊர்வசியின் பக்கம் திரும்பின. அவள் முகத்தில் சிறிதும் சலனமில்லாமலே ஓர் உத்ஸாகமும் இல்லாமலே உட்கார்ந்திருந்தாள். அவள் நண்பரும் அப்படியே, மரக்கட்டை போல, அவள் நாட்டியத்தையும் அவள் உடலையும் அதற்கப்பாலும் ஊடுருவிப் பார்ப்பவர்போல உட்கார்ந்திருந்தார்.

அடுத்த நாட்டியம் ஆரம்பமாயிற்று. அதுவும் சற்றுக் கடினமானதுதான்; எனினும் லக்ஷ்மி தன் கவனம் முழுவதையும் நாட்டியத்திலே செலுத்தாமல் சபையிலும் செலுத்தி ஆடினாள். சபையில் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தது அவள் காதில் விழுந்தது. ‘பாவம்! சின்னப் பெண். ரொம்பக் கஷ்டப்படுத்தக்கூடாது”. அப்படிச் சொன்னவர் யார் என்று ஊர்வசி திரும்பிப் பார்த்ததை லக்ஷ்மி கவனித்தாள். முந்தி இருந்த கசப்பு மறுபடியும் அவள் மனத்தில் தோன்றிவிட்டது. ஊர்வசி என்ன அவ்வளவு பிரமாதமாகவா நாட்டியமாடினாள்? அதெல்லாம் ஒன்றுமில்லை. பெரிய இடம்; எது செய்தாலும் புகழுவதற்கென்றே ஒரு கோஷ்டி சதா உடன் இருக்கும் ‘ஊர்வசியின் வெற்றியும் புகழும் கலையின் வெற்றியல்ல; அந்தஸ்தின் வெற்றி, அவ்வளவுதான்’ என்று பிறர் சொல்லக் கேட்டது லக்ஷ்மிக்கு ஞாபகம் வந்தது. அது உண்மையாகத்தான் இருக்கும் போல் இருக்கிறது என்று தோன்றியது. லக்ஷ்மிக்கு கலையில் படிப்படியாக அடி எடுத்துவைத்துச் சிரமப்பட்டு முன்னேறியிருந்தால் ல கூடி மியின் கஷ்டங்களைக் கண்டு அவளுக்கு அனுதாபம் பிறந்திராதா? முகத்தில் இப்படி எவ்வித அசைவும் இல்லாமே உட்கார்ந்திருக்க முடியுமா? ஆனால் தானும் நாட்டியத்தில் முழு மனத்தையும் செலுத்தாமல் ஊர்வசியைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால் நாட்டியம் சரியாக வருமா? அது தன்மேல் பிசகுதானே என்று எண்ணினாள் லக்ஷ்மி.

ஏதோ சிந்தனையாக, அடி எடுத்துவைத்துப் பாவத்தை ஒட்டி வேகமாக நகரும்போது கால் விரிப்பில் தட்டிவிட்டது. தடுமாறிக் கீழே விழுந்துவிட்டாள். சபையில் ‘த்ஸொ த்ஸொ’ என்று அனுதாபக் குரல்கள் கேட்டன. ஓரிரண்டு குழந்தைகள் சிரித்தன. மற்றவர்கள் தன்னைத் தூக்கிவிட வருமுன், லக்ஷ்மி சமாளித்துக்கொண்டு தானே எழுந்துவிட்டாள். அவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. உதட்டைப் பிதுக்கி அழுகை வராமல் அடக்கிக் கொள்ள வெகு சிரமப்பட்டாள். என்ன அவமானம் இது, அரங்கேற்றத்திலேயே ஆடையைச் சரிப்படுத்திக்கொள்ள அவள் ஆடரங்கிலிருந்து உள்ளே ஒரே எட்டில் தாவிப் போய்விட்டாள். அவள் காதில் ஏதோ முரசடிப்பதுபோல் இருந்தது; சபையில் பேசிக் கொள்ளப்பட்டது. ஒன்றும் அவள் காதில் விழவில்லை. அவள் கண்கள் தெளிவாக எதையும் காண வில்லை. அவள் இதயம் படபடவென்று அடித்துக்கொண்டது.

அப்போது சபையில் ஒரு தாடி மீசையுள்ள பெரியவர், பெரிய சரிகை அங்கவஸ்திரத்துடன் எழுந்து நின்று பரதநாட்டியத்தைப் பற்றிப் பொதுவாகவும், அன்று ஆடிப் பெண்ணைப் பற்றியும், அவளைப் பயிற்றுவித்த நட்டுவனாரைப் பற்றியும் புகழ்ந்தும் சில வார்த்தைகள் பேசினார். இதில் பாதிக்கு மேல் லக்ஷ்மியின் காதில் விழவில்லை; காதில் விழுந்ததையும் அவள் சரியாக அர்த்தம் பண்ணிக் கொள்ளவில்லை. ஆடை அணிகளைத் திருத்திக்கொண்டு, மறுபடியும் அரங்குக்குள் பிரவேசிக்கத் தயாராக நின்றாள். அப்பொழுதும் அவள் கண்கள் ஊர்வசியையே நாடின.

என்ன ஆச்சரியம்! பெரியவர் பேசிவிட்டு உட்கார்ந்ததும் ஊர்வசி எழுந்து நின்று, சாவதானமாக, லக்ஷ்மியின் நாட்டியத்தைப் பற்றிப் பேசினாள். நாலைந்து நிமிஷங்களே பேசினாள்; வழக்கமான, சம்பிரதாயமான, சில வார்த்தைகளே சொன்னாள். ஆனால் அந்த வார்த்தைகளில் தனிப்பட்ட ஓர் அர்த்தம் தொனித்தது. லக்ஷ்மியின் காதில் ஊர்வசி முதலில் எழுந்து எதுவும் பேசுவதாக இல்லை என்றும், ஆனால் சிறுமியாகிய அவள் கால் தடுக்கி விழுந்ததும் அனுதாபம் பிறந்து சிறுமியாதலால் உற்சாகமூட்ட இரண்டொரு வார்த்தைகள் சொல்லவேண்டும் என்று சொல்லுகிறாள் என்றும் லக்ஷ்மிக்குத் தோன்றிற்று. முதலில் ஊர்வசியிடம் அவளுக்குக் கோபம் வந்தது. ஆனால் ஊர்வசி சிறுமியை ஆசிர்வதித்துத் தன் பேச்சை முடித்தபோது அவள் மனத்தில் இருந்த கோபம் மறைந்துவிட்டது. ஊர்வசி உட்கார்ந்ததும் உள்ளம் நிறைந்த ஒரு கனிவுடன் அரங்குக்குள் பிரவேசித்து லக்ஷ்மி சபையையும், ஊர்வசியையும் மறுபடியும் ஒருதரம் வணங்கிவிட்டு ஆட ஆரம்பித்தாள்.

இந்தத் தடவை அவள் மனத்தில் கலையைத் தவிர வேறு எந்த ஞாபகமும் இல்லை.

– தஞ்சைச் சிறுகதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 1999, காவ்யா வெளியீடு, பெங்களூர்

Print Friendly, PDF & Email

பகடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

சதிவிரதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *