ஆசிரிய மாணவ நண்பர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 4, 2018
பார்வையிட்டோர்: 5,680 
 

நாளை காலை வழிபாட்டு நேரத்தில் மாணவர்களுக்கு என்ன சொல்லப்போறோம் என்று யோசித்து கொண்டிருந்தார் ஆசிரியர் பாலா. மறுநாள் காலை வணக்கத்தை அனைவருக்கும் சொல்லி இதோ ஆரம்பித்துவிட்டார். பள்ளியில் காமராசர் பிறந்த நாளிற்காக போட்டிகள் தொடங்கப்பட்டன. ஆசிரியரிடம் போட்டியில் கலந்து கொள்ள பெயர் கொடுத்த அனைத்து மாணவர்களும் கலந்து கொள்கின்றனர். அவரவர்க்கான செயலில் ஈடுபாடு கொண்டு வெற்றியும் தோல்வியும் அடைகின்றனர்.

ஆசிரியர் கண்ணன் அனைத்து மாணவர்களையும் சமமாக கருதும் மனம் கொண்டவர். போட்டியில் கலந்து கொண்டு தோற்றுவிட்டால் மற்ற மாணவர்கள் நம்மை கேலி செய்வார்களோ என்று எண்ணுதல் தவறு என்று அனைத்து மாணவர்களிடமும் சொல்கின்றார். கலந்து கொள்வது என்பதே மிகப்பெரிய வெற்றிதான் என்று மாணவர்களிடம் கூறி ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள 75 சதவீத மாணவர்களைப் போட்டியில் கலந்து கொள்ள உற்சாகப்படுத்தினார். மாணவர்களும் அவரவர்க்கான தேடலில் கிடைத்த பதில்களை வைத்து போட்டியில் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் வெற்றியின் களிப்பையும், ,தோல்வியில் அடைந்த சிறுமுயற்சியை பெருமுயற்சியாக ஆக்கிட உத்வேகமும் பெறுகின்றனர். போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினராக வந்தவர்கள் பரிசு வழங்கினர். குறிப்பாக கிட்டத்தட்ட தான் கலந்து கொண்ட 8 போட்டிகளிலும் முதன்மை இடம் பெற்று சாதனை படைக்கிறாள் தமிழ்ச்செல்வி. பாராட்டாத ஆசிரியர்களோ ,விருந்தினர்களோ , மாணவர்களோ இல்லை. அனைவரும் பாராட்டினார்கள். அவள் மகிழ்ச்சியின் உச்சத்தில் பறந்து கொண்டிருந்தாள். அக்கா மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்ட அவள் தம்பி பிரபாகரன் ஓடிவந்து அக்காவை தூக்கநினைத்து தூக்குகிறான். ஆனால் முடியாமல் சிரித்து கொள்கின்றான்.

தன் தம்பியைத் தூக்கி அணைத்து அன்புமுத்த மழை பொழிகின்றாள் தமிழ்ச்செல்வி. அவள் படிப்பிலும் கூட படுசுட்டி. வகுப்பில் தொடர்ந்து முதல் மதிப்பெண் பெறுவதையே இலக்காகக் கொண்டவள். பள்ளியில் இப்படி ஆனால் வீட்டிற்கு சென்றாளோ விரத்தியின் உச்சியில் சோர்ந்து கிடப்பாள். என்னாச்சு என்று ஆசிரியர் கண்ணன் விசாரிக்க தாயும் , தந்தையும் குடும்பத் தகராறில் இறந்த செய்தி அறிந்து திடுக்கிட்டார். பள்ளியில் தன் சக ஆசிரியர்களிடம் பேசி மாணவிக்கு பல உதவிகளைச் செய்தார். பத்தாம் வகுப்பில் அவள் பெற்ற மதிப்பெண் 485 ஆகும். சுற்றுவட்டாரத்தில் எந்தப்பள்ளி மாணவர்களும் இவ்வளவு மதிப்பெண் பெறவில்லை. தனியார் பள்ளி மாணவர்களும் இவள் மதிப்பெண்ணைவிட குறைவாகவே எடுத்திருந்தனர். தனியார் பள்ளியைக் கொண்டாடும் சில பெற்றோர்களும் ஆச்சரியம் அடைந்தார்கள்.

சில தனியார் பள்ளிகள் தமிழ்ச்செல்வியை தங்களது பள்ளியில் சேர்த்துக்கொள்ள சலுகைகளை அறிவித்தனர். ஆசிரியர் கண்ணனோ சில பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளை ஆரம்பக்கல்வி முதல் மேல்நிலைக்கல்வி வரை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். ஆனால் பட்டப்படிப்பு என்று வருகிறபோது மட்டுமே அரசு கல்லூரிகளை(மருத்துவ ,பொறியியல் )நாடுகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்து. ஆனால் தமிழ்ச்செல்வி அப்படியில்லை ஆரம்பக்கல்வி முதல் பத்தாம்வகுப்பு வரை அரசுப்பள்ளியிலே படித்துவிட்டாள் , இனிமேலும் அனைத்தையும் அரசு கல்விநிலையங்களிலே படிக்க வைக்க வேண்டும் என்று தன் சக ஆசிரியர்களிடம் சொல்கின்றார். இது மற்றவர்களுக்கு அரசுப்பள்ளிகள் மீது நம்பிக்கையை வரவைக்கும். பிறகு தமிழ்ச்செல்வியும் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேல்நிலைப்பள்ளயில் சேர்ந்து படித்தாள். அப்படி வளர்ந்தவள் இன்று அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படிக்கின்றாள்.

ஆக படிப்பு என்பது வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமோ, மட்டும,அல்லது தாய்,தந்தை இருப்பவர்களுக்கோ வருவதில்லை. ஆர்வமும் ,விடாமுயற்சியும் இருந்தாலே வந்துவிடும். ஆசிரியர்கள் மாணவர்களைக் கண்டறிந்து அவர்களின் உள்ளார்ந்த திறனை வளர்க்க பாடுபடவேண்டும். அவர்களிடம் சிறிதளவு கவனம் செலுத்தினாலே சாதனை படைப்பார்கள். D.ED ,B.ED படிக்கும் போது மாணவர்களை தனிநபர் ஆய்வு செய்வது வழக்கம். வேலை கிடைத்து வந்த பிறகு படித்தனவற்றை பின்பற்றினாலே மாணவ சமுதாயம் வளம் பெறும். ஆகவே ஆசிரியர்கள் ஆகிய நாம் இத்தகைய செயல்பாட்டில் கவனம் செலுத்துவோம். மாணவர்களும் தன் திறனை , இயலாமையை போக்கிட வழிகாண ஆசிரியர்களிடம் உண்மையைச் சொல்லுங்கள்.

ஆக கல்வியின் தரத்தை மாணவர்களோடு சேர்ந்து நாமும் கண்ணனைப் போன்றே செயல்படுவோம் ,மாணவர்கள் தமிழ்ச்செல்வியை உதாரணமாக கொள்ளுங்கள் என்று தமிழாசிரியர் பாலா பேசி முடித்தார். இப்படி பேசி முடித்தவுடன் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் உற்சாகமாக கைத்தட்டினர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *