அவன் பார்த்துப்பான்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 11, 2015
பார்வையிட்டோர்: 10,515 
 

இன்று

சாப்பாட்டுக் கூட்டம் அலை மோத ஆரம்பித்தது.

”எல்லோரும் ஒரே லைன்லே வாங்க” என்ற குரல் மாற்றி மாற்றி ஒலித்தது.மூலையில் ஒரு கை வண்டியில் அமர்திருந்த அவன் இருப்பு கொள்ளாமல் தவித்தான்.

”மூதேவி….. எப்போ வந்து சேருமோ…. பாத்திரம் காலியாகி வெறும் பருக்கை கூட கிடைக்காது போல இருக்கே……சண்டாள மூளி……..கொன்னு போடறேன்”……….

எரிச்சலில் கோபம் அதிகம் வந்தது. இரண்டு நாளாக சாப்பிடாதது வயிறு எரிந்தது. வயிற்றை தடவிக்கொடுக்க முடியாமல் கைகள் இரண்டிலும் கட்டு…..கட்டுக்கள் வழியே சீழ் வழிந்தது. கால்கள் இரண்டும் அழுகி என்றோ கீழே விழுந்துவிட்டிருந்தது…வெறும் கட்டுக்கள் முட்டியின் கீழே நீட்டிக்கொண்டிருந்தன.என்ன கோபம் வந்தாலும் அது மனதோடுதான். அவளிடம் காட்ட முடியாது. அவளுக்கு கால்கள் இன்னும் இருந்தன கைகளிலும் நான்கு ஜந்து விரல்கள் விழாமல் இருந்தன.அவனை அங்கே இங்கே வண்டியில் தள்ளிக்கொண்டு போக அவள் வேண்டும்…முகம் காட்டலாம் ஆனால் கோபிக்க முடியாது……

“முண்டை …..எங்கே போய் தொலைந்தாள்…?”

அவளை அவன் முதல்முதலாகப் பார்த்தபோது அவனால் நடக்க முடிந்துகொண்டிருந்தது. அவளைப் பார்த்ததே ஒரு புண்ணியவானின் புண்ணியத்தால்.

”இங்கே பாருங்க…..எங்க சங்கம் ஒரு ஏற்பாடு செஞ்சிருக்கு…..எல்லாருக்கும் லெப்பரசி ஹாஸ்பிடல்ல நாங்க வைத்தியம் பார்க்கப்போறோம்.காசு,பணம் எதுவும் நீங்க கொடுக்கவேண்டாம். இனிமேல் கோவில் வாசலிலே பிச்சை எடுக்கவேண்டாம்.பிரட் பன் ஆஸ்பத்திரியே கொடுக்கும்…மருந்தும் கொடுக்கும், அங்கேயே இருங்க…..”

காலையும் மாலையும் சாப்பாடு என்ற வார்தைகள் அமிர்தமாக இனித்தன.
இவர்களைப் போல இன்னும் பலர் வந்திருந்தனர்.அப்பொதுதான் அவளைப் பார்த்தான்.உடல் அழுகியதுதன் ஆனால் இளமை அழுகவில்லை….காமம் அடங்கவில்லை.அருகருகே அமர்ந்தனர். பெயர் பரிமற்றம் பின் சிரிப்பு பரிமற்றம் பின் அழுகிய கைகள் பரிமற்றம்….காமம் பற்றிக்கொண்டது.

”ஏய் நாம சேர்ந்துப்போமா….?”

“சரி, இங்க வுடமாட்டாங்களே?”

“அய்ய இங்க ஏன்? வா நாம் போயிடலாம்!”

”சாப்பிட என்ன பண்ணுதாம்?”

”ரெண்டுபேரும் சேர்ந்து பிச்சை எடுப்போம். எவ்வலவு ஜென்மங்கள் இருக்கு பாவப்பட்டு பணம் போட!”

அன்றிலிருந்து இருவரும் இணைந்தார்கள். தெரு ப்ளாட்ஃபார்ம் வீடானது. யாரோ புண்ணியவான் கொடுத்த கம்பளி, குடிசை கூறையானது. அவன் தனியாக பிச்சை எடுத்தபோது கிடைத்ததை விட அவளுடன் சென்றபோது அதிகம் கிடைத்தது. வெற்றிலை போட முடிந்தது. சாராயக்கடைகளில் தூக்கி எறியப்பட்ட பாட்டில்களிலிருந்து சில துளிகள் அவ்வப்போது கிடைத்தன. சில நாட்கள் அவளுக்கு கனகாம்பரம் வாங்கிக்கொடுக்க முடிந்தது.

எல்லாம் கடந்த சில மாதங்களாக மாறி விட்டன. அவனுக்கு நோய் முற்றிப்போய் கால்கள் இரண்டும் கொஞ்சம் கொஞ்சமாகத்துண்டாகி தரையில் விழுந்துவிட்டன.தேய்த்தபடி தான் அவனால் நடக்க முடிந்தது.

“அய்யே! நீ ஒரு இடமா குந்து. இந்த கோயில்ல நெறய ஜனங்க வரும் நீ இங்க பிச்சை இடு. நா அங்கே இங்கே போய் எத்தையாவது வாரியாறேன்”.

இப்படித்தான் ஒரு நாள் இந்த வண்டியை வாரி வந்தாள்.

ஒரு நாள் கோவில் வாசலுக்கு கொண்டு வந்தாள்

“இதப்பாரு, உன்னிய வெச்சு தள்ள முடியல. நீ இங்கயே குந்து. நா போய் அங்க இங்க கெடச்சதக்கொண்டு வாரேன்”. அன்றிலிருந்து மறுபடியும் தனியாக செல்ல ஆரம்பித்தாள்.

சாப்பாடு லைன் நீண்டிருந்த்து. வயிறு எரிந்தது.கீழே இறங்கிப்போகலாம் என்றால் தனியாக இறங்க முடியாது.சரி, கைகளை வைத்து தள்ளலாம். முயன்றான். சொரணையே இல்லை. வண்டி கல்லில் இடித்து பின்னால் சென்றது.ஆசுவாசத்தோடு திரும்பிப்பார்த்தான். தெருக்கோடி வரை அவள் நிழல் கூடத்தெரியவில்லை. சாம்பார் சாதத்தின் வாசம் நாக்கில் நீர் வரவழைத்த்து. பக்கத்தில் இருந்தவர்கள் எப்பவோ வாங்கிச்சென்று விட்டனர். புதிதாக வந்த இவனை கண்டு கொள்ளவில்லை. கூட்டத்தில் தங்களுக்குக்கிடைத்தாலே போதும் என்ற எண்ணம் போலும்.

“அய்யா புண்ணியவானே என்னையும் கொண்டு அங்கே விடேன்”

யாரும் காதிலேயெ வாங்கிகொள்ளவில்லை.

“அம்மா அய்யா கொஞ்சம் பாருங்க! ஒரு கைப்பிடி சாதம் வாங்கி இந்தப்பாவிக்கு கொடுங்க”

காதில் வாங்கியவர்கள் வரும் காரைக்கூடப்பொருட்படுத்தாமல் எதிர் ப்ளாட்ஃபார்முக்குச்சென்றனர்.

“பாவி பொம்பள, ஊர் மேயக்கிளம்பிட்டா! மூதி! கை கால் அவிய..”

கோபத்தில் வார்த்தைகளின் காரம் அவனுக்குப்புரியவில்லை.

ஆயிற்று, பாத்திரம் சுரண்டும் சத்தம். இனி அவனுக்கு சோறு இல்லை. காலி வயிறு எகத்தாளம் போட்டுச்சிரித்தது.

” நோ ஸ்வீட்டீ இதெல்லாம் நாம சாப்பிடக்கூடாது! இதை நீ ஏன் வாங்கின? இஃபெக்ஷன் வரும். பிரசாதங்கரது விபூதி குங்குமம் தான். வாயில் எதையும் போடக்கூடாது தூக்கிப்போடு

அம்மா சின்னப்பெண்ணிடம் சொல்லிக்கொண்டே கடந்து சென்றாள்.

“அம்மா புண்ணியவதி உனக்கு அயுசு நூறும்மா! இந்தப்பிச்சைக் காரனுக்குப்போட்டுடுங்கம்மா”

திரும்பிக்கூடப்பார்க்காமல் அந்த இலை அவன் பக்கம் வந்து விழுந்த்து.

கேட்டது கிடைத்துவிட்ட்து. அவனுக்கு மிக மகிழ்ச்சி. குனிந்து எடுக்கச்சென்றான்.

“வள்”..மேலே விழுந்து இலையைக்கவ்விச்சென்றது நிறைமாத கறுப்பு நாய்.

“எச்சக்கல நாயே! என்னியக்கொல்ல வந்த பேயே!”

அவன் எழுதமுடியாத வார்த்தைகளில் கத்தினான். இலையை நாய் இழுத்துச்சென்று குப்பையில் போட்டது.சுற்றி உள்ளவர்கள் ச்சோ போட்டனர்.

ஆனால் பார்த்துக்கொண்டிருந்த அந்தகிழவன் சிரித்தான்.”அவன் பார்த்துப்பான்”

அன்று

தெருக்கோடியில் பச்சைப்புடவை தெரிந்தது. யார் அது அக்ரஹாரத்துக்கு உள்ளே வரது?..மல்லிகா…அவருக்கு ஜிவ்வென்றது. முதலில் மோஹ ஜிவ். பின் கோப ஜிவ்!

“வாடி வா! மாட்டேனென்ன்னு பிகு பண்ணின இல்லே..இப்ப உன்னை ஓட ஓட விரட்டறேன் பாரு.

மல்லிகா ஒரு வருடம் முன் அவர் வீட்டு வேலை செய்ய வந்த பெண். முழுகாமல் இருந்த பார்வதிக்கு வீட்டு வேலை செய்ய வந்தவள். வயது பதினாறு இருக்கும். வீட்டைக்குனிந்து நிமிர்ந்து பெருக்கியபோது வீடு சுத்தமாச்சு அவர் மனது குப்பையாச்சு. பார்வதிக்கு நிறை மாசம். கிட்டே போக முடியவில்லை.

“டீ சின்னக்குட்டி! இங்க வா”

”சொல்லுங்க சாமி..எதுனா வேணுங்களா?”

”தாகமா இருக்குடி சின்னபோண்ணு ஏதாவது பண்ணேன்””

”அய்யோ அடுப்பங்கரைக்கு நானு போகமுடியாதுங்களே. அம்மா காலை வெட்டிப்புடுவாங்க”

”சரிடீ வா மாந்தோப்புக்கு போகலாம்”

அவளுக்குப்புரிந்தது.

“அய்யா நான் என் மச்சானைக்கட்டிக்கப்போறேன். நீங்க தப்பா பேசுதீங்க..உங்க வீட்டு வேலையே வேண்டாம்.சாமி”

எடுத்துச்சொருகிய பாவாடை தழையவிட்டு.போனவள்தான்.

மச்சானைக்கல்யாணம் செய்துகொண்டதாக கேளிவிப்பட்டார்,

அவளா இது..மாசமா …..தக்காளி கெட்டுது போ

”ஏய் மல்லிகா எங்கே வந்தே?”

”அய்யா நல்லா இருக்கீங்களா? அம்மாவ பாத்துபுட்டு போகலான்னு வந்தேன்””

”என்ன தைரியண்டீ உனக்கு? காலை வெட்டிப்போட்டுடுவேன்! வேலியைத்தாண்டாத”

”அய்யா நீங்க பெரிய மனுசங்க. இந்தப்பாவி ஏதானும் தப்பா பேசியிருந்தா மன்னிச்சிடுங்க சாமி. இந்த ஆளு குடிச்சுப்புட்டு போலீசுல மாட்டி ஜெயிலுல இருக்கு சாமி. நா மாசமா இருக்கேன். பசி வயத்தைக்கிள்ளுது. நீங்க தருமம் பண்ன வேண்டாம். அம்மா மகராசி வேலை தரட்டும், நா செய்யறேன் ஒரு கை பிடி சோறு போதும் சாமி!”

“நா பசின்னு கூப்பிட்டபோது என்ன சொன்னே?”

”சாமி அது தப்பு சாமி. ரொம்ப பசி தாகமா இருக்கு ஒரு வாய் சோறாவது கொடுங்க”

உள்ளே சென்று மண் பானையிலிருந்து தட்டு நிறைய சோறு எடுத்து வந்தார்

“சாமி நீ நல்லா இருக்கணும்”..கண்களில் பசியின் தீவிரம்..கையை நீட்டினாள்.

தட்டு நிறைய சாதத்தை கீழே தரையில் கொட்டினார்.

“நாயே, பொறுக்கித்தின்னு!”

தூரத்தில் சென்று கொண்டிருந்த கிழவர் சிரித்தார். “அவன் பார்த்துப்பான்!”

Print Friendly, PDF & Email

1 thought on “அவன் பார்த்துப்பான்

  1. லதா மேடம்….ஒவ்வரு வரிகளும் மிக அழமனவைகள்….படித்து முடித்ததும் மனசை பாதிக்கும் கதை…மிக்க மிக்க நன்றி மேடம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *