கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 2, 2023
பார்வையிட்டோர்: 1,780 
 
 

‘சக மனிதர்களை பணம்,உடல் அழகு,பதவி,படிப்பு போன்றவற்றை வைத்து மதிக்காமல் குணத்தை வைத்து மதிக்க வேண்டும்’ என நினைப்பான் அழகு. அழகு என்ற பெயருக்கேற்ப குணத்தால் அழகானவன். உடல் அழகு குறைவு தான். உடலிலும் ஒரு கால் நடக்க முடியாதது ஒரு குறைதான்!

சிலருக்கு கோடீஸ்வரன் என பெயரிருக்கும். வறுமையில் வாடுவர். பெயரிலாவது அழகு இருக்கட்டும் என்ற அதீத ஆசையால் அம்மா வைத்த பெயராக இருக்கலாம் என நினைப்பான். நினைவு தெரிவதற்க்குள் அம்மா மறைந்து விட,அப்பா மறுமணம் செய்து கொண்டது மேலும் குறையாகி விட்டது.

‘தான் மட்டும் பிரம்மாவாக இருந்திருந்தால் அனைவரையும் குறையின்றி படைத்திருப்பேன்’என நினைப்பான்!

பல இடங்களில் உறவுகளாலும்,பிறராலும் நிந்திக்கப்படும் போது மனிதர்களை இனிமேல் சந்திக்காமல் இருக்க மிருகங்கள் வாழும் காட்டிற்குள் சென்று விட வேண்டுமென நினைப்பான்!

‘அழகை விட அறிவின் செயலால் தான் மனிதன் உயர்வு பெறுகிறான்’ என தனது ஆசிரியர் சொன்னதை ஆழமாக மனதில் பதிய வைத்தான்!

பிறர் கேளிக்கைகளில் வீணடித்த நேரத்தை பயனுள்ளதாக மாற்ற முடிவு செய்து தனது நிலையை மாற்றினான். பலர் பார்ட்டிகளில் நேரத்தை கழித்த போது, அழகு பாட்டி வீட்டில் படிப்பில் கவனம் செலுத்தினான். படிப்பில் முதல் மாணவனாக வந்தான். ‘மனித செயல்களால் உலகம் பெறும் நன்மை, தீமைகள்’ என்ற தலைப்பில் அழகு எழுதிய ஆராய்ச்சி கட்டுரை உலகளவில் அவனைக் கொண்டு சென்று சேர்த்தது!

வெளிநாடுகளில் அழகானவர்களை விட குறையுள்ளவர்கள் அதிகம் சாதித்திருப்பதை உதாரணமாக எடுத்துக்கொண்டான். இவனது திறமையை அறிந்த பத்திரிக்கை ஆசிரியர் ஒருவர் ஐ.நா.வில் பேச வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார். உடல் குறைகளை கொண்டவர்கள் மற்றவர்களால் எவ்வகையிலெல்லாம் நிராகரிக்கப்படுகிறார்கள்,தனக்கேற்பட்ட கசப்பான அனுபவங்கள்,அதையே சாதகமாக்கி படிப்பில் சாதனையாக்கிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டது அனைவரையும் கவர்ந்தது. அதே சமயம் உடலால் குறையுள்ளவர்கள் பெறும் துன்பத்தை கேட்க அதிர்ச்சியாகவும்,வேதனையாகவும் இருப்பதை பலர் தேம்பி அழுது‌ கண்ணீர் சிந்தியதை வைத்து அறிந்து கொள்ள முடிந்தது!

மீடியாக்கள் தலைப்பு செய்திகளாக அவனது பேச்சை ஒளிபரப்பு செய்தன. பத்திரிக்கைகளின் தலைப்புச்செய்தியானான். அந்த வருடம் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் இரக்கப்பட்டு அழகுவை திருமணம் செய்து கொள்ள முன்வந்த போது அதை நிராகரித்தான். “உங்களை மணம் புரிய போட்டியில் பலர் இருப்பார்கள். ஆனால் இந்த உலகில் அழகில்லாத,அனைவராலும் நிராகரிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கே வாழ்வளிப்பேன். இந்த புகழைப்பயன்படுத்தி உங்களை மணந்தால் மற்றவர்களுக்கும் எனக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும்” என்ற போது உலகிலேயே முதன்மையான மனிதனாக உயர்ந்து நின்றான் அழகு!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *