கடவுள் ஒருவனல்ல

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 3, 2023
பார்வையிட்டோர்: 1,367 
 

(1985 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இடமாற்றக் கடிதத்தில் ‘பன்குளம் தமிழ் மகாவித்தியாலயம்’ என்று போடப்பட்டிருப்பதைக் கண்டவுடனே வேலையை விட்டாலென்ன என்ற எண்ணந்தான் முதலில் தோன்றியது.

நடந்து முடிந்த கலவரத்தின் போது பன்குளத்திலிருந்து அகதிகளாக வந்தவர்கள் கூறிய செய்திகளை நேரடியாகவே கேட்டு எனக்குள்ளேயே இரத்தக் கண்ணீர் வடித்தவன் நான்!

பன்குளத்திலேயே பிறந்து, வளர்ந்து குடும்பஸ்தகர்களான பலர், இப்போது அந்த மண்ணை நினைக்கவே பயப்படுகின்றனர். அப்படியிருக்கும் போது என்னால் மட்டும் பன்குளத்திற்குப் போக முடியுமா, போகாமலும் இருக்க முடியாது. ஏனென்றால் கல்வி அலுவலகத்தின் பணிப்பு!

நான் ஒரு ஆசிரியன்…..!

வழமைபோல் அரசியல் தலைவர் தொடக்கம். அலுவலகப் ‘பியூன்’ வரை சந்தித்தாகி விட்டது. முடிவு? தோல்விதான்!

கொழும்பு வரை சென்று பார்க்கலாம் அவ்வளவிற்கு எனக்குப் பலமில்லை. ஏதோ நடப்பது நடக்கட்டும் என்ற முடிவோடு இடமாற்றத்தை ஏற்றுக் கொண்டு விட்டேன்.

பன்குளம் தமிழ் மகாவித்தியாலயம் ஏழரை மணி. நான் அமர்ந்திருக்கிறேன்.

அதிபரின் அலுவலகம்

காலை அதிபர் என்னைச் சந்தேகத்தோடு பார்ப்பது எனக்குப் புரியாமலில்லை. முறையான இடமாற்றத்தை நான் பெற்று வரவில்லை. ஆதலால் தான் அவர் சந்தேகப் படுகின்றார்.

வருடத் தொடக்கத்தில் தான் முறையான இடமாற்றங்கள் நடைபெறும். ஆனால் எனக்கு மூன்றாந் தவணை ஆரம்பத்தில் மாவட்டததுக்குள்ளேயே இடமாற்ற் வழங்கப் பட்டுள்ளது.

இந்த இடமாற்றம் ஏன் நடந்தது?

அதிலும்

‘கந்தோர் செல்வாக்கில்லாத வாத்திகள், வாத்துக்குச் சமமானவர்கள். வாழ்க்கை முழுவதும் சேறுதான் தஞ்சம்.’

நான் ஒரு பட்டதாரி. மன்னாரில் வங்காலையைப் பிறப்பிடமாகக் கொண்டவன். நான் பிறந்த மண்ணிலிருந்து ‘உயர் கல்வி மேயப் புறப்பட்ட முதல் ஆத்மா நான் தான். வங்காலையிலேயே ஆசிரிய நியமனம் பெற்று, பின் திருகோணமலையில் நிலாவெளிக்கு இடமாற்றம் பெற்று இன்று பன்குளத்திற்கு மாற்றப் பட்டுள்ளேன்’.

‘மாஸ்ரர் உங்கடை சொந்த இடம்’

‘மன்னாரில் வங்காலை’

‘ஸ்பெஷல் செய்தீங்களா?’

‘ஓம்…. அரசியல், விஞ்ஞானம்’

‘பேராதனைப் பல்கலைக் கழகந்தானே’

‘ஓம்….’

‘அதென்ன திடீரென்று இடமாற்றம்’ அதிபர் சுற்றி வளைத்து, தனது சந்தேகத்தை மெதுவாகத் திரை நீக்கம் செய்கிறார்.

‘நான் தான் விரும்பி வந்தன்…..’ ஆனால், மீசையில் மண்படவில்லை என்று கூறுவார்களே அதுதான்.

‘மாஸ்ரர், இப்ப நடை முறையிலை உள்ள ‘ரைம்ரேபிளை’ மாத்திறது கஷ்டம். இந்த வருஷம் முடிய இன்னம் மூண்டு மாதந்தானே கிடக்கு. ஒரு மாதிரிப் பார்த்துச் சமாளியுங்கோ. புதுவருஷத்தோடை பார்த்துச் செய்வம்’ அதிபர் கூறுகிறார்.

முதல் பாடம் முடிகின்றதை அறிவிக்க மணி அடிக்கப்படுகிறது.

அப்போதுதான் ஐந்து ஆசிரியைகள் ‘பூச்செண்டு’ போல் சேர்ந்து வருகின்றனர். இவர்கள் தூர இடங்களிலிருந்து இலங்கைப் போக்குவரத்துச் சபை வாகனங்களின் முகட்டில் உள்ள வெள்ளி நிறமான எலியோடிக் கம்பியைப் பிடித்துப் பிரயாணம் செய்து வருபவர்கள் என்பதை அவர்களது சோர்வு நிலை காட்டுகிறது.

‘மிஸ் பரிமளகாந்தி. மிஸ் றாஜி, மிஸ். நாகேஸ்வரி.’ அதிபர் அனைவரையும் எனக்கு அறிமுகம் செய்கிறார்.

‘அலம்பல் தடியால்’ அடிப்பதுபோல் ஒரே சிரிப்பில் சகலரது அறிமுகங்களையும் ஏற்றுக் கொள்கிறேன்.

‘மாஸ்ரர், இண்டைக்கு நாலாம் வகுப்பு ரீச்சர் லீவு…… இண்டைக்கு அந்த வகுப்பை….’அதிபர் தனது கட்டளையை வேண்டு கோளாக்கிக் கூறுகிறார். நானும் ஏற்றுக் கொள்கிறேன்.

பட்டதாரி என்ற பட்டயத்தினால் இதுகாலவரை எனது கற்பித்தல் மேல்வகுப்புக்களுடனேயே நடந்திருக்கின்றது. இன்றுதான் முதல் முறையாக நாலாம் வகுப்பு

நான் அதிபரிடம் விடை பெற்றுக் கொண்டு நாலாம் வகுப்பைத் தேடி நடக்கிறேன்.

நாலாம் வகுப்பு முப்பதுக்கு மேற்பட்ட மாணவர்கள். ஆசிரியர் ‘சிங்காசனத்து’க்கருகில் நிற்கிறேன்.

‘வணக்கம் சேர்…..’ மாணவர்களின் வரவேற்பு. நானும் பதில் வணக்கம் கூறி, கதிரையில் அமர்கிறேன்.

நான்காம் வகுப்பு மாணவர்களின் பார்வை மட்டுமல்ல, அந்த மண்டபத்தில் நான்கு வகுப்புகள் அமைந்திருக்கின்றன. தொண்ணூறு வீதமான மாணவர்களின் பார்வை என்மீதே படிந்திருக்கின்றன. புதியவனல்லவா?

‘இப்ப என்ன பாடம்?’

‘தமிழ்’

ஒரு தமிழ் புத்தகம் தாருங்கோ’ ஒரு மாணவி தமிழ் புத்தகமொன்றைக் கொண்டு வந்து என் மேசை மீது வைக்கின்றாள்.

‘எத்தனையாம் பாடம்…..’ நான் அவளிடம் கேட்கிறேன். அவள் புத்தகத்தை எடுத்து விரித்துக் கொடுக்கிறாள்.

‘…..நாற்பத்தேழாம் பக்கம், ஏழாம் பாடம், உழைக்கும் கரங்கள்’ அந்த மாணவியே கூறுகிறாள்.

‘சரி போயிருங்கோ’ கற்பித்தலுக்கு முன் புத்தகத்தையும், பாடத்தையும் விளங்கிக் கொள்ள வேண்டுமே! அந்த மாணவி போய் அமர்கிறாள்.

நாற்பத்தேழாம் பக்கத்தின் மூலையை மடித்துக் குறிப்பு வைத்து, புத்தகத்தின் முன் பகுதியைப் பார்க்கிறேன்.

அட்டைப் படம் ரமணியால் கீறப் பட்டுள்ளது. அந்தப் படத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது. படத்தின் கருத்தை என்னால் ஊகிக்க முடியவில்லை. அடுத்த பக்கத்தில் ‘இலவசப் புத்தக விநியோகம், இலங்கை மாணவ சமுதாய வரலாற்றில் ஒரு மைல்கல். அடுத்த பக்கத்தில் புத்தகத்தை ஆக்கியோரின் பெயர் விபரங்கள். மிகப் பெரும் கல்விமான்கள். சிலர் எனக்கு அறிமுகமானவர்கள்.. அனைவரும் இலக்கியப் பரப்பில் பெரும் ஆலமரங்கள்.’

சமுதாயத் தீர்க்க தரிசனம் மிக்க எழுத்தாளர்களின் சங்கமிப்பிலேயே இப்புத்தகம் பிரசவிக்கப் பட்டுள்ளதை நினைக்கும் போது என் மனம் சிலிர்க்கிறது.

புத்தகத்திலே ஒரு பற்று ஏற்படுகிறது. உள்ளடக்க விபரத்தையும் பார்த்து, பாடத்தைப் புரட்டுகிறேன். மடித்து விடப்பட்ட பக்கம் ‘உழைக்கும் கரங்கள்’. பாடத்தை மேலோட்டமாகப் படிக்கிறேன். பாடத்தைத் தெரிந்து, அதனூடாக தேசியப் பரப்பில் மிக முக்கிய கருத்தொன்றை விளக்கியிருக்கின்றனர்.

நபிகள் நாயகத்தின் வாழ்க்கையில் ஒரு சம்பவத்தைத் தெரிந்து, அதனூடாக தேசியப் பரப்பில் மிக முக்கிய கருத்தொன்றை விளக்கியிருக்கின்றனர்.

கடவுளின் முடிவு மாசற்றது. மாற்றமில்லாதது. அப்படிப் பட்ட ஒரு கடவுளின் வாயிலிருந்து தொழிலாள வர்க்கத்திற்கு நிலையானதொரு தனித்துவத்தை நிலை நிறுத்தியிருக்கின்றனர்.

தொழிலாளிக்கு மகனாகப் பிறந்து, தொழிலாளர் சமுதாயத்திலேயே வளர்ந்து, வக்கரித்துப் போன எனது மனதிற்கு இந்தப் பாடம் இதமாக இருக்கிறது. இந்த நான்காம் வகுப்பே ஒரு உயர்தர வகுப்பாக இருந்தால் மிகப் பெரும் விரிவுரையை நடத்தியிருப்பேன்!

நபிகள் நாயகம் ஒரு தொழிலாளியின் கைகளைப் பிடித்து முத்தமிட்டு ஆனந்தக் கண்ணீர் சிந்துகிறார்.

இதுதான் பாடத்தின் உள்ளடக்கம். மக்களின் வணக்கத்துக்குரிய கடவுளின் வணக்கத்துக்குரியவன் இந்தத் தொழிலாளி!

உயர்ந்த உத்தி! சமயத்திற்கும், தொழிலுக்கும் ஒரு பாலம். இந்தப் பாலந்தான் நாட்டின் பாலம்.

சில நிமிடங்களுக்குள் வானளாவச் சிறகடித்த என் மனம் வகுப்பில் இறங்குகிறது. என்னை நிலைப்படுத்திக் கொள்கிறேன்.

‘எல்லோரும் எழும்பி வாருங்கோ….’ சகல மாணவர்களும் எழும்பி வந்து எனது மேசையைச் சுற்றி அரைவட்டமாக நிற்கின்றனர்.

ஒரு மாணவி பாடத்தை மிகவும் அழகாக வாசிக்கிறாள். நான் இடையிடையே விளக்கம் கொடுக்கிறேன். வாசிப்பும் மேலோட்டமான விளக்கமும் முடிகிறது.

‘நபிகள் நாயகம் என்பவர் யார்?’

‘முஸ்லிம்களின் வணக்கத்துக்குரியவர்.’

‘அந்த நபிகள் நாயகம் கடவுளிடம் என்னத்தை வேண்டினார்’

ஒரு நல்ல தொழிலாளியின் கைகளைக் காட்டும்படி

‘நல்ல தொழிலாளியின் கைகளை நபிகள் நாயகம் எப்படி அறிந்து கொண்டார்?’

‘தொழிலாளியின் கைகள் மரத்துப் போயிருந்தன.’

எனது கேள்விகளுக்கு மாணவர்கள் சரிவரப் பதில் கூறிக் கொண்டிருப்பது கற்பித்தலில் இலகுவையும், விருப்பத்தையும் ஏற்படுத்துகிறது.

‘மரத்துப் போயிருந்த அந்தக் கைகளைக் கண்டவுடன் நபிகள் நாயகம் அவர்கள் என்ன செய்தார்கள்’ பாடத்தின் உயர் நிலையத்தைத் தொட்டு நிற்கிறேன்!

‘கைகளை முத்தமிட்டு ஆனந்தக் கண்ணீர் சிந்தி மகிழ்ந்தார்’ அந்தத் திருத் தூதரே ஒரு தொழிலாளியின் மரத்துப் போன கைகளை முத்தமிட்டு, ஆனந்தக் கண்ணீர் சிந்தி மதிக்கிறார், இல்லையா? மூலக் கருத்தை தெளிவு படுத்தி நிலைநிறுத்த வேண்டுமென்பதற்காக அவர்களால் கூறப்பட்ட பதில், கேள்வியாக்கிக் கேட்கிறேன்.

‘இதிலிருந்து நீங்கள் என்னத்தைப் புரிந்து கொள்கிறீர்கள்’

சகலரும் மெளனமாக நிற்கின்றனர்.

அனுபவச் சாயலே படாத இளம் இதயங்களில் தத்துவ வித்துக்கள் முளைக்குமா….? விதைக்க வேண்டும். அதை முளைக்க வைக்க வேண்டும். அதுதான் ஆசிரியப் பணி!

மாதா பிதா ‘குரு’ தெய்வம்! வார்த்தையளவிலாவது குருவுக்கு ஒரு மதிப்புண்டு.

‘நபிகள் நாயகம் அந்தத் தொழிலாளியின் கைகளை முத்தமிட்டு ஆனந்தக் கண்ணீர் சிந்தி மகிழ்கின்றாரே இதிலிருந்து நீங்கள் என்னத்தைப் புரிந்து கொள்கிறீர்கள்’ நான் திரும்பவும் கேட்கிறேன்.

முன்பு போல் சகல மாணவர்களும் மௌனமாகவே நிற்கின்றனர். அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

‘சரி.. நபிகள் நாயகம் யார்?’

‘முஸ்லீம்களின்……..”

‘முஸ்லீம்கள் நபிகள் நாயகத்தை பின்பற்றுகின்றார்கள் இல்லையா?’

‘ஆம்….’

‘அந்த நபிகள் நாயகமே ஒரு தொழிலாளியைப் போற்றினால், மற்றவர்களா தொழிலாளியா பெரிசு?’

‘தொழிலாளி தான் பெரிசு சேர்’ மாணவர்கள் கூறுகின்றனர்.

‘அதை எப்படிச் சொல்லலாம், தொழிலாளர் கடவுளுக்கும், கடவுளைப் போன்றவர்கள் இல்லையா’

‘ஓம் சேர்’

‘அப்படித்தான்’

‘சேர்……

‘என்ன…….’ நான் அவனது முகத்தைப் பார்க்கிறேன். அவன் மெளனமாக நிற்கிறான். ஆனால் அவன் எதையோ கேட்கத் துடிக்கிறான் என்பதை என்னால் உணர முடிகின்றது.

‘உங்கடை பேரென்ன?’ அந்த மாணவனை நான் கேட்கிறேன்.

‘நவநீதன்’

‘நவநீதன், நீங்கள் எதையும் கேட்கலாம். பயப்படாமல் கேளுங்கோ’ நான் அவனை உற்சாகப்படுத்துகிறேன். அவன் என்னையும் பார்த்து, ஏனைய மாணவர்களையும் பார்க்கிறான். கண் குளித் தசைக்குள், சுழல்கின்ற அவன் கண்களிலே பய உணர்வு.

‘நவநீதன் கேளுங்கோ…..’

‘சேர்..’

‘தொழிலாளி தானே ஆகப் பெரிய கடவுள்’

‘ஓம்….’

‘அந்த ஆகப் பெரிய கடவுளை ஆராவது சுட்டுக் கொல்லுவாங்களா நாக்குத் தளதளத்து, ஒவ்வொரு சொற்களும் துன்பப் குழியில் புதைந்து, ஊறிப் பிய்ந்து வருகின்றன. கண்களிலே மெல்லிய கண்ணீர்த் திரை.

‘ஆகப் பெரிய கடவுளை ஆராவது கட்டுக் கொல்லுவாங்களா?’ அவன் கேட்ட கேள்வி எனது செவிப் பறைகள் போர்ப் பேரிகையின் தோலாய் அதிர்கிறது.

இவன் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்டான்? இவன் ஏன் கலங்குகிறான்?

எனது சிந்தனைச் சங்கிலி எல்லையின்றி நீள்கிறது. முடிவு தோல்வி. எனது பார்வை இப்போது நவநீதனில் குத்தி நிற்கிறது.

சிறுத்து மெலிந்த தோற்றம், எண்ணையின்றிப் பஞ்சடைந்த தலைமயிர், காமாலைக்காரனின் கண்களைப் போல் வெளுறிய கண்கள், அழுக்கடைந்து கிழிந்த களிசான் சேட்.

இரத்தம் கசிகின்ற வறுமைப் புலியின் கீறல்கள். எனது இதயம் அவனது உருவத்தைத் தொட்டு நிற்கிறது. அவனது கண்களில் பனித்த கண்ணீர் கீழ் இமைகளில் வரம்பு கட்டி நிற்கிறது.

‘சேர் இந்தப் பள்ளிக்கூட றோட்டாலை போய் பெரிய றோட்டிலை ஏறிறம். அந்த மூலையிலை ஒரு கொட்டில் இருக்கு. அது தான் நவநீதன் வீடு.’

‘நவநீதன்ரை அப்பா பாவம் சேர்’

‘அப்ப தொழிலாளி எப்படிப் பட்டவன்’

‘கடவுளுக்கும் கடவுள்’ சகல மாணவர்களும் கூறுகின்றனர்.

‘சேர், அப்பிடியெண்டால் தொழிலாளி தான் ஆகப் பெரிய கடவுள் இல்லையா சேர்’ இது வரை மௌனமாக நின்ற ஒரு மாணவன் கேட்கிறான்.

வண்டிலை காட்டுக்குக் கொண்டு போய், கொள்ளி தறிச்சு ஏத்திக் கொண்டு வந்து விக்கிறவர். கரைச்சி ஆத்தையும் தாண்டித் தான் சேர் காட்டுக்குப் போக வேணும். ஒருதரும் பயந்து போறதில்லை. நவநீதன்ரை அப்பாவுக்கு எத்தினை தரம் பாம்பு கடிச்சிருக்கு. அவற்றை கையிலை ஆணி வைச்சு அடிச்சாலும் அவருக்கு நோகாது சேர். கொள்ளி கொத்திக் கொத்தி அவ்வளவுக்கு மரத்துப் போச்சு’

‘இந்த இடமெல்லாம் சண்டையள் நடந்திதே. அண்டைக்குச் சேர், நவனீதன்ரை அப்பா காட்டுக்குப் போய் கொள்ளி ஏத்திக் கொண்டு வந்தார். கரைச்சி ஆத்தையும் தாண்டி பெரிய றோட்டுக்கு வந்து, அந்த முருகன் கோயிலடியிலை ஆரோ அவரைச் சுட்டுப் போட்டாங்கள். அவர் அந்த இடத்திலையே செத்துப் போனார்.’ ஒரு மாணவன் மிகவும் வேதனையோடு கூறி முடிக்கிறான்.

‘அதுக்குப் பிறகு என்ன நடந்தது’ மாணவனால் நிறுத்தப் பட்ட கண்ணீர்க் கதையைத் தொடர வைக்கிறேன்.

‘அதுக்குப் பிறகு என்ன சேர்! செத்தவீடும் செய்யேலாது, நாலைஞ்சு பேர் சேர்ந்து நவநீதன்ரை அப்பாவைத் தூக்கிக் கொண்டு போய் தாட்டுப் போட்டு வந்தவை’ அந்த மாணவன் கதையை முடிக்கிறான்.

‘ஆகப் பெரிய கடவுளை ஆராவது சுட்டுக் கொல்லுவாங்களா…..!’ நவநீதன் ஏன் கேட்டான் என்பது இப்போது தான் புரிகிறது.

நபிகள் நாயகம் கட்டி முத்தமிட்டு, ஆனந்தக் கண்ணீர் வடித்த அந்தத் தொழிலாளிக்கும், நவநீதன்ரை அப்பாவுக்கும் வித்தியாசம் இல்லை.

நவநீதன்ரை அப்பாவும் ஆகப் பெரிய கடவுள் தான்! அந்த ஆகப் பெரிய கடளின் முடிவு?’

‘சேர்….’ நவநீதன் என்னை அழைக்கிறான்.

நான் அவனைப் பார்க்கிறேன்.

‘சேர்….. தொழிலாளி தானே ஆகப் பெரிய கடவுள். அப்பிடியெண்டால் என்ரை அப்பாவும் ஆகப் பெரிய கடவுள்தானே? ஆகப்பெரிய கடவுளை ஆராவது சுடுவாங்களா சேர்? நீங்கள் பொய்தானே சொல்றீங்க?’

நவநீதன் சிறுபிள்ளைத்தனமாகத் தான், இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டான். ஆனால் அந்தக் கேள்வியின் அடிநாதக் கருத்து, தேசிய நிலையின் மொத்த வடிவம்!

நவநீதனின் அப்பா, அவரும் ‘ஆகப் பெரிய கடவுள்தான்’ அந்த ஆகப் பெரிய கடவுள் தான் சுடப்பட்டார். ஆனால் ஆகப் பெரிய கடவுள் இந்த மண்ணில் ஒருவனல்ல!

நவநீதனின் கேள்விக்குரிய இந்தப் பதில் கருவண்டாய் எனது இதயத்தைக் குடைகின்றது.

இந்தப் பதிலை நான் அவனிடம் கூறிவிடலாம். அவனால் இந்தப் பதிலைப் புரிந்து கொள்ள அவனால் முடியுமா?

நான் மௌனமாக இருக்கிறேன். எனது ‘ஆசிரிய கடமையை’ என்றோ ஒரு நாள் காலம் நிறைவேற்றும்.

பாடசாலை மணி ஒலிக்கிறது.

பாடம் முடிந்து மாணவர் கலைகின்றனர்.

– இதழ் 185 – ஜனவரி 1985, மல்லிகைச் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஜூன் 2002, மல்லிகை பந்தல் வெளியீடு, கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *