தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 9,122 
 
 

“என்ன டிரீட்?’

“ஒரு சில்க்.’

“சரி, 138 சீட்டு ஜெயிக்கறாங்க. ஒண்ணு குறைஞ்சாலும் உங்களுக்கு நான் சில்க் வாங்கித் தரேன்’ என்றார் சம்பந்தம்.
இருட்டு பிரியாத அதிகாலை நேரத்தில், சம்பந்தத்தோடு பெட் வைத்தக்கொள்வது, அனன்யாவுக்கு சுவாரஸ்யமாக இருந்தது. சம்பந்தம், ஆளும்கட்சி சேனலில் ரிப்போர்ட்டர். அவள் வருவதற்கு முன்பே கேமராமேனோடு அங்கே ஆஜராகி இருந்தார். நேற்று இரவு தூங்கியே இருக்க மாட்டார்.

“தலைவர் எழுந்துட்டாராமா?’

“என்ன கேள்வி கேட்கிறாய்?’ என்பது போல் ஒருமாதிரி விழித்துப் பார்த்துவிட்டு, “காலையிலேயே எழுந்துட்டாரு’ என்றார்.

இன்னும் சற்று நேரத்தில் கூட்டம் கூடத் தொடங்கிவிடும். எட்டு மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பம். ஒன்பது மணிக்கெல்லாம் முன்னணி நிலவரம் தெரிய ஆரம்பித்துவிடும். அதற்குள் ஒன்றிரண்டு சுவாரஸ்யமான ரிப்போர்ட்டுகளைத் தட்டி விட்டுவிட்டால், சூப்பர்.

எல்லா கண்களும் இங்கே, இந்தச் சாலையிலேயே குவிந்திருக்கின்றன. அனன்யா, அந்தச் சாலையை ஒருமுறை மீண்டும் பார்த்தாள். தொண்டர்களும் தலைவர்களும் அலுவலர்களும் நடந்து நடந்து அதிகார மமதை மிகுந்த சாலை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, காலை, மதியம், மாலை என்று ஏதேனும் ஒரு காரணத்துக்காக அந்த வீட்டுக்கு வந்திருக்கிறாள். கட்சித் தலைவரைச் சந்திக்க, தில்லியில் இருந்தும் பிற நாடுகளில் இருந்தும் தலைவர்கள் வந்த வண்ணம் இருந்திருக்கின்றனர்.

சந்திக்க உள்ளே போகும்போது, ஒரு சிலர் பேசுவர். வெளியே வந்தபின்னர் பேசுவது இன்னும் விசேஷம். முகத்தில் அகலமான புன்னகையோடு சிலர்; வார்த்தைகளைக் கோத்துக் கோத்து சமாளிக்கும் சிலர்; பெற்ற ரணத்தைப் பெருமையாக நீவிக்கொள்ளும் சிலர் என்று எண்ணற்ற முகங்கள், வாசற்படியருகே நின்றிருக்கின்றன. ஒரு சில முகங்கள், வேறு வாசல் வழியாக மீடியாவைத் தவிர்த்து நழுவியதையும் அனன்யா பார்த்திருக்கிறாள்.

தெருமுனையில் கார்களை நிறுத்திவிட்டு, கேமராமேன்கள் சகிதம் இன்னும் இரண்டு சேனல்காரர்கள் அந்தச் சாலையில் நுழைந்தார்கள். எல்லோர் கண்களிலும் தேர்தல் களைப்பு. கண் எரிச்சல். இன்று மாலைக்குப் பின்னர்தான் போய்ப்படுக்க வேண்டும். நிம்மதியாக முழு இரவு தூக்கம் போட்டால், நாளை காலை புதிய அரசு, புதிய மந்திரிகள். புதிய வேகம், புதிய எதிர்பார்ப்பு.

“ஹாய், வென் டிட் யூ கம்?’ ஹசீனா கையாட்டினாள்.

“5.30.’

“ஐ ஆம் லேட். எனி நியூஸ்?’

உதட்டைப் பிதுக்கினாள். ஏதாவது சொல்லியாக வேண்டும். காலை பிரிந்து கொண்டு இருக்கிறது. சாலையைத் துடைத்துவிட்ட மென்வெளிச்சம். தூரத்தில், கட்சிக்கரை பெண்கள் நடந்து வந்தனர். ஒவ்வொரு கட்சிக்காரராக வேறு வேறு திசையில் இருந்து குழுமத் தொடங்கினர். பார்த்துக் கொண்டு இருக்கும்போதே சின்னச் சின்னக் கூட்டங்கள்.
செல்ஃபோனில் ரிச்சர்டைக் கூப்பிட்டாள்.

“எனிதிங் இண்டரஸ்டிங்?’

“தலைவர் காலையிலேயே ரெடியாயிட்டார். இப்போதான், ஆளுங்க எல்லாம் வராங்க. வேறு முக்கிய லீடர்ஸ் யாரும் இன்னும் வரலை…’

“சரி, ஒரு ஸ்பாட் ரிப்போர்ட் மட்டும் கொடுத்துடு.’

அடுத்த சில நிமிடங்களில் கேமரா உயிர் பெற, அந்தப் புலர் காலையையும், பின்னணியில் தலைவர் வீட்டையும், மெல்ல மெல்லப் பெருகிவரும் தொண்டர்களையும் காண்பித்துக் கொண்டே வந்து, அனன்யா முகத்தருகே நிறுத்தினான் கேமராமேன் சந்தீப். அவள், தேர்தல் பதற்றம் சிறிதும் குறையாமல் பேசினாள். எதிர்பார்ப்பு, ஆவேசம், சாதனைகள் என்ற வரவழைக்கப்பட்ட உற்சாகம் அவளுக்கே எரிச்சலாக இருந்தது. எல்லாம் பழைய கதைகள்.

புதிதாக ஏதும் சொல்ல முடியவில்லை. சொல்ல ஒன்றும் இல்லை. சொல்ல ஒன்றும் இல்லை. ஏதாவது நடந்தால்தானே சொல்ல முடியும். ஒன்பது மணிக்குப் பிறகு ரவுண்ட் கட்டி அடிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் அவள் எப்பேர்ப்பட்ட கும்பலுக்குள்ளும் புகுந்து ஏதேனும் ஒரு தலைவரிடம் நான்கு வரிகள் வாங்கிவிடுவாள். இம்முறையும் அப்படி ஒரு சூப்பர் ஸ்டோரி அடிக்க வேண்டும். பார்வையாளர் கவனத்தை மொத்தமாக அள்ள வேண்டும்.

ஹசீனா, அங்கு வந்திருந்த தொண்டர்கள் மத்தியில் போய் பேசிக்கொண்டு இருந்தாள், ஒன்றிரண்டு பெண்கள் உற்சாகமாகத் துள்ளினார்கள். கேமராவில் முகம் தெரிகிறது என்றவுடனே என்ன பேசுகிறோம் என்று உணர்ந்துகொள்ளாமல், வார்த்தைகளைப் பொழியும் அவசரம். உணர்ச்சிகள் மட்டுமே முக்கியம்.

“இண்டலிஜென்ஸுல என்ன சொல்றாங்களாம்?’ சந்தீப் கேட்டான்.

“135ன்னு சொல்றாங்களாமே?’

“சான்ஸே இல்லை. பொய் சொல்றாங்க.’

அனன்யா அவன் முகத்தை வெறுமனே பார்த்தாள். உண்மையாக இருக்கலாம். மீடியாவில் சொல்வது, யாரோ கொடுக்கும் தகவல்கள்தானே. தென் மாவட்ட ரிப்போர்ட்டுகள் எல்லாம் வேறு விதமாக இருந்தன. உற்சாகம் குறைவாக இருப்பது தெரிந்தது. தமிழகம், மௌனமாக மனத்துக்குள் எதையோ உருட்டிக் கொண்டு இருப்பதை உணர முடிந்தது.
இதையெல்லாம் மீறி, ஆளும் அரசின் அசுரப் பிரசாரமும் நலத்திட்டங்களும் கோட்டைக்கு வழிகாட்டுமோ என்ற சந்தேகம் இருந்தது. சந்தேகத்தை பார்வையாளர்களிடம் சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்லை.

“கவுண்ட்டில் ஆரம்பிச்சுட்டாங்களாம். முதல்ல தபால் ஓட்டு கவுண்ட்டிங்.’

சம்பந்தம் சொல்லிக்கொண்டு இருந்தார். அருகே ஏராளமான ரிப்போர்ட்டர்கள், ஃபோட்டோகிராபர்கள், கேமராமேன்கள். தலைவர் வீட்டு வாசலில் கூட்டம் நெருக்க ஆரம்பித்துவிட்டது.
தலைவர் டி.வி. பார்த்துக்கொண்டு இருப்பதாகவும், பத்த மணிக்கு மேல் ஓரளவுக்கு முன்னணி நிலவரம் தெரிந்தவுடன் பேசுவார் என்று சொல்லிக் கொண்டார்கள். எந்த நேரமும் எதுவும் நடக்கலாம். யாரேனும் தலைவர்கள் வந்து பேசக்கூடும் என்ற எதிர்பார்ப்பில், சுவரோரம் சாய்ந்து கொண்டாள். நிறைய பேர் சாலையில், காதில் செல்ஃபோன்களோடு பேசிக் கொண்டே நடந்துகொண்டு இருந்தார்கள்.

தகவல்கள், கொட்டிக் கொண்டே இருந்தன. இன்னும் அரை மணியில் தலையெழுத்தின் கையெழுத்து தெரிந்துவிடும். அவளால், நிற்கவே முடியவில்லை. நிமிடங்கள் கரையக் கரைய வெயில் உறைக்க ஆரம்பித்து விட்டது. தலைவர் வீட்டு வாசலிலும் உள்ளேயேயும் ஓர் அபூர்வ அமைதி நிலவுவதாக அவளுக்கு தோன்றியது.

தூரத்தில் ஹசீனா அவசரமாகக் கிளம்புவது தெரிந்தது. ஒன்றிரண்டு பத்திரிகை ரிப்போர்ட்டர்கள், பைக்கை நோக்கி நடப்பதையும் பார்க்க முடிந்தது. என்னாயிற்று என்று புரிந்து கொள்ளும் முன்பு, டெலிஃபோன் ஒயரிலிருந்து பறக்கும் குருவிக் கூட்டம்போல், சடசடவெனக் கூட்டம் அங்கிருந்த விலகத் தொடங்கியது.

“லாயிட்ஸ் ரோடுல ஒரே கொண்டாட்டம்மா. சுமதி பேசினா. போஸ்டல் வோட்டுலேயே லீடாம்,’ சந்தீப் பக்கத்தில் வந்து சொன்னான்.

எல்லாம் நிமிடங்கள்தாம். சாலை மெல்ல மெல்ல வெறிச்சோடிப் போகத் தொடங்கியது. வழக்கமாக வரக்கூடிய போலீஸ் அதிகாரிகள் வண்டிகள் கூட அங்கே காணவில்லை. ஃபோன் அடித்தது. ரிச்சர்டு.

“ஏற்கெனவே சுமதி டீம், லாயிட்ஸ் ரோட் போயிடுச்சு. நீங்கள் போயஸ் கார்டன் போயிடுங்க. அங்கே ஏற்கெனவே சம்பத் இருக்கார்.’

“என்ன சார் ஆச்சு?’

ஒரு நிமிடம் மௌனம். ரிச்சர்ட் வார்த்தைகளுக்குத் தடவுபவர் அல்ல. உள்ளங்கையில் தமிழகம் பார்க்கும் மூத்த செய்தி ஆசிரியர்.

“கோபம்மா. கோபம். கிளின் ஸ்வீப். நம்பிக்கை பறிபோச்சேன்னு கோபம்…’

நிஜம் பொல்லாதது. உள்ளுக்குள்ளே கனன்று எரியும் ஆவேசம், வாக்குச் சீட்டில் வடிந்திருக்கிறது. பார்க்கத் தெரிந்தவர்கள், புத்திசாலிகள், பார்க்கத் தவறியவர்கள், தோல்வியாளர்கள்.

“ஒரு ரேப்-அப் பண்ணிக்கிட்டு அங்கே இருந்து கிளம்பிருங்க. தலைவர் பேசமாட்டார். அறிக்கை மட்டும் வரும். பார்த்துக்கலாம்.’

அனன்யா பேச ஆரம்பித்தாள்; “அலை. பயங்கரமான அலை. எப்படி வேண்டுமானாலும் இதைச் சொல்லலாம். கோபம், எரிச்சல், வெறுப்பு. அதைவிட முக்கியமாக, இது நம்பிக்கை இழப்பு. தாம் நம்பி வாக்களித்து ஏற்றிவைத்த அரசு தமக்கு எதுவும் செய்யவில்லையே என்ற சுய பச்சாதாபம். தம் முடிவுகளைத் தாமே திருத்தி எழுத முடியுமா என்று முயற்சி; நப்பாசை; எதிர்பார்ப்பு.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு இதே அலை இந்தச் சாலை பக்கம் வீசியது. இப்போது திசை மாறியிருக்கிறது…’

அனன்யா முகத்தில் இருந்து கேமராவை மெல்லத் திருப்பி, பின்பக்கம் இருந்த சாலையைக் காட்டத் தொடங்கினான் சந்தீப். தெரு முனை வரை, ஈ காக்கை கூட இல்லை. தார்ச் சாலையெங்கும் வெயில். தலைவர் வீட்டு வாசலில் இரண்டொரு காவலர்கள். தெருமுனையில், ட்ரை-சைக்கிளில் கீரைகளை அடுக்கி கொண்டு ஒரு கீரைக்காரி திரும்பினாள். கீரை பெயர்களை சொல்லிக் கூவிக்கொண்டே, மெல்ல அவள் கேமராவை நோக்கி வண்டியை உருட்டிக்கொண்டு வந்தாள். அவளை நிறுத்த எந்த அதிகாரமும் அங்கே இல்லை.

– ஆர். வெங்கடேஷ் (ஜூன் 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *