அறுந்த காற்றாடி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 2, 2024
பார்வையிட்டோர்: 247 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அறுபட்ட காற்றாடி காற்றின் போக்கில் மிதந்து சென்றது. அப்படித்தான் சிகாமணியும் பிறந்தபோதே அறுத்துவிடப் பட்டான். சாவுக் கத்திதான் தொடர்பு நூலைத் துண்டித்தது. அவன் பெற்றோர்கள் யாரென்று தெரியாது வியாதியால் ஒழிந்தார்கள். 

காற்றாடி காற்றின் போக்கில் மிதந்தது. சிகாமணியும் மிதந்து சென்றான். வாழ்க்கைச் சம்பவங்களின் ஓட்டத்தில் அவனும் ஓடினான்; அவற்றை எதிர்க்கவில்லை. குறிக்கோள் ஏதாவது இருந்தால்தானே எதிர்க்க? வாழ்க்கைச் சுழலில் பல சந்துகளிலும், வளைவுகளிலும் புகுந்து புரண்டிருக்கிறான். ஆனால் அவன் உள்ளம் மட்டும் தூய்மையாக இருந்தது. 

ஆம், அவன் உள்ளம் தூய்மையாக இருந்தது; கறைப்பட வில்லை. 

மாலை ஐந்தரை மணி : வேலை செய்துவிட்டு வந்துகொண்டிருந் தான். ஐந்துக்கெல்லாம் வேலை முடிந்துவிடும். அரை மணியில் மவுண்ட்ரோடிலிருந்து ரிப்பன் மாளிகை வரை வந்துவிட்டான். 

அவன் கண்கள் சுழன்று சுழன்று பார்த்தன. பரந்து விரியும் ரோடின் நடுவே தண்டவாளத்தின்மேல் ஓடும் டிராம்,மனித மூட்டையின் பாரத்தால் மெதுவாக ஓடுகிறது. அந்த டிராம் அவன் வேலை செய்துவந்த கம்பெனி ஹெட் கிளார்க்கை ஞாபகப் படுத்தியது. தண்டவாளத்தின்மேல் டிராம் ஓடியது. ஹெட் கிளார்க்கோ முதலாளி, மானேஜர் முதலியவர்கள் கிழித்த கோட் டின் மேலேயே ஓடினார். தண்டவாளத்தை விட்டுப் பெயர்ந்தால் வண்டி கவிழ்ந்துவிடாதா?மேலும் கம்பெனியின் சட்டதிட்டங் களும், அவர் தலைக்குமேல் தொங்கிக் கொண்டிருந்தன. அவை டிராம் வண்டியின்மேல் இருந்த மின்சாரக் கம்பிகளை ஞாபகப் படுத்தின. அவர் வேலைக்கு வேண்டிய அதிகாரத்தை, மின் சாரத்தை, அவை கொடுத்தன. 

சிகாமணி ரிப்பன் மாளிகைப் பிளாட்பாரத்திலேயே நின்றான். அந்த ‘ஹெட்கிளார்க்’ பாவம்! மானேஜர் வேலையைக் கூடச் செய்யவேண்டி இருந்தது, டிராம் வண்டி படியில்கூடப் பிரயாணிகளை ஏற்றிக்கொள்வதைப்போல. 

அவன் சிரித்தான். உலகத்தின் செயல்களை – பைத்தியக்காரத் தனமான அர்த்தமற்ற செய்கைகளை -க் கண்டு அநாவசியமாகச் சிரிக்கும் குழந்தைச் சிரிப்பு அது. அவனுள்ளிருந்த குழந்தைதான் சிரித்தது. ஒவ்வொருவர் உள்ளத்திலும் குழந்தை இருக்கிறது. துன்பத்தைக் கண்டு மனம் ஒடியாமல் சிரிக்கும்போது தன் உள் இருக்கும் குழந்தைதான் சிரிக்கிறது. அதை நாம் கொன்று விட்டோம்; கொன்று வருகிறோம். 

சிகாமணியின் கண்கள் அகன்ற தருவை நோக்கின. ஆற்றின் நடுவில்தான் வேகம் அதிகம். அந்தப் பெரிய வீதி வழியாகப் பட்டின வாழ்க்கையின் வேகம், நுரை கிளம்பிச் சுழித்துச் சென்றது. கொந்தளிப்பு, அகோர வேகம், காது செவிடு படும் சத்தம்……அப்பப்பா! 

அதோ, பஸ் பேய்போல இரைச்சலிட்டுப் புகைப் படலங்களை உதறிக் கொண்டே போகிறது. கார்கள்…அப்பா! தலைதெறிக்கும் வேகத்தில் ஓடுகின்றன. கூட்டம்; பாதசாரிகள். பெண்கள், குழந்தைகள், ஆண்கள், வீதியின் இருபுறங்களிலும் புரள்கின்றனர். வீதியின் நடுவில் டிராம். இடது புறத்திலும், வலது புறத்திலும் கார்கள், ஜட்கா, சைக்கிள், கட்டைவண்டி, பஸ் முதலியன. ஓரங்களில், நடை பாதைகளில் பாதசாரிகள். தெரு எல்லையில் கடைகள், ஓட்டல்கள், சத்திரங்கள், ரெயில்வே ஸ்டேஷன்கள். எங்கோ ஓர் ஓட்டலிலிருந்து கிராமபோன் இரைகிறது; ‘கிரீச் ‘சிட்டுக் கத்துகிறது. 

சுழல்களின் போக்கில் போனான் சிகாமணிஜன சமுத்திரம் தன் போக்கில் அவனையும் அடித்துச் சென்றது. ரிப்பன் மாளிகைக்குப் பின்புறத்தில் வி.பி.ஹால். இரைச்சலை சமுத்திர அலைகளை, பேய் வண்டிகளை விட்டுச் சிகாமணி சந்தில் புகுந்தான். 

சத்தம் பின் தங்கிவிட்டது. புயலிலிருந்து தப்பி, வீட்டுக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொள்வதைப் போலிருந்தது சிகாமணிக்கு. 

முச்சந்திக்கு வந்தான். மணி சரியாக 5-45. கார் ஒன்று வேகமாகச் சென்றது. வீதியைக் கடக்காமல் நின்றான். 

சைக்கிள் ஒன்று சென்றது. சைக்கிளை ஓட்டிக்கொண்டு போன உருவத்தைப் பார்த்தான் சிகாமணி. அவனது நிலையில் லாமல் சுற்றும் கண்கள் வழக்கத்துக்கு மாறாக நிலைபெற்றன; அந்த உருவத்தின்மீது பதிந்தன. திடீரென்று அந்த உருவத்தைப் பார்த்துக்கொண்டிருந்த கண்கள் விரிந்தன. வாயும் வேகமாக மூச்சை உள்ளிழுத்தது…… ஏன்? 

சைக்கிள்மேல் இருந்தவள் ஒரு பெண் ; ஆங்கிலோ இந்தியப் பெண். அதனாலோ சிகாமணியின் பதற்றம்? அல்ல. அப்பெண் அவனுக்கருகிலேயே விழுந்துவிட்டாள். 

நடுத்தெருவில் பெண் ஒரு கீழே அலங்கோலமாகக் விழுந்தது, சுற்றியிருந்த பேடிகளுக்குத் தமாஷாக இருந்தது. தாணாக்காரன் கூடப் பீடிப் புகையை விட்டுக்கொண்டே சிரித்தான்; ராஸ்கல்! 

பதறியபடியே அப்பெண்ணை ஓடித் தூக்கினான் சிகாமணி. அவளது முழங்காலில் அடிபட்டு இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. வெள்ளைத் தோலில் ஒரே சிவப்புக் கறை. 

பெஞ்சியில் உட்கார்ந்திருந்த சிகாமணியின் மனத்தில் எண்ணங்கள் அலைமோதின; கொந்தளித்தன. 

அப்பெண்ணுக்கு மருந்து போட உள்ளே அழைத்துச் சென்றனர் நர்ஸ்களும், ஒரு டாக்டரும். 

சிகாமணி பெஞ்சியில் அவளுக்காகக் காத்துக் கொண் டிருந்தான்.ஆஸ்பத்திரியின் மருந்து நாற்றங்களைக்கூடக் கவனிக்க வில்லை. காத்துக்கொண்டு இருக்கும் நோயாளிகளையுங்கூடக் கவனிக்கவில்லை. இளம் டாக்டர்களின் மிரட்டல்களையும், பீற்றல் களையும் கூடக் கவனிக்கவில்லை. 

அவன் மனத்தில் பல எண்ணங்கள் அலைமோதின ; கொந்த ளித்தன…..ஆம், அதனால்தான். 

அப்பெண் சிகாமணிக்குத் தெரியும். வருஷக்கணக்கில் அல்ல; மாதக் கணக்கில் அல்ல; நாள் கணக்கில்தான். பல நாட்களும் இல்லை. மூன்று நாட்களே. 

வழக்கம் போலவே அன்றும் ஐந்து மணிக்கு வேலை முடிந்தது. அப்பெண்ணை முச்சந்தியில்தான் முதல் முதல் சந்தித்தான். அப்போது மணி 5-45. அவள் சைக்கிளில் அவனுக்கு எதிரில் சென்றாள். 

மறுநாளும் அப்படியே. மூன்றாவது நாளும் அப்படியே. 

அம் முச்சந்தியில் வரும்பொழுது, அவனை அறியாமலே அவன் கண்கள் அவளை எதிர்பார்த்தன. ஒவ்வொரு நாளும் அவளைச் சந்திப்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது, விதியின் சதியா? அல்லது தற்செயலா? 

என்ன இருந்தாலும் அவன் மனம் மட்டும் அவளை எதி பார்ப்பதை நிறுத்தவில்லை. மூன்று நாளே சந்தித்தான்; மூன்று நாளும் வெவ்வேறு விதமான உடைகளை அவள் உடுத் திருந்தாள்.அவள் உடை போட்டோப்படத்தைப் போல் அவன் மனத்தில் பதிந்துவிட்டது. 

முதல் நாள் சிவப்பில் பச்சை பார்டர்; ‘ஜம்பர் கை’, முக்கோண வடிவத்தில் கழுத்து. 

இரண்டாவது நாள் மஞ்சள் கலந்த சிவப்பு….. சைக்கிள் பின்னால் சில புத்தகங்கள். 

மூன்றாவது நாள் …… தூய வெள்ளைக் கவுன்; காலில் ரோஸ் கலர் மேல்ஜோடு. அழகான பாதம்; உயர்ந்த ஷூஸ். 

நான்காவது நாள்தான் கிளிப்பச்சை.. 


உட்கார்ந்திருந்த சிகாமணி எழுந்தான். 

புன்முறுவலுடன் கட்டுப் போட்டுக்கொண்டு வந்தாள் அவள். நல்ல காலம், அவள் கொஞ்சம் வலியோடு நடந்தாலும்,சாதாரண மாகவே நடந்தாள். சிகாமணியின் முகம் மலர்ந்தது. 

ரிக்ஷாவில் அப்பெண் உட்கார்ந்து கொண்டாள். சைக்கிள் ‘பங்க்சராகி’ (Puncture) விட்டது. அதைத் தள்ளிக்கொண்டே ரிக்ஷாவின் பக்கத்தில் சென்றான் சிகாமணி. 

ரிக்ஷாக்காரனிடம் அப்பெண், “குதிரை ஆஸ்பத்திரி தெரியுமா?” என்று கேட்டாள். 

தமிழ் அழகாகத்தான் பேசினாள் என்பதைச் சிகாமணி கவனித்தான். 

“தெரியும், மிஸி” என்றான் ரிக்ஷாக்காரன். 

“அதுக்கு எதிர் சந்து; மாதா கோவிலுக்குப் பக்கத்தில்” என்றாள். சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வந்த சிகாமணியைக் கடைக்கண்ணால் அவள் பார்த்தாள். அவனுக்கு நன்றி கூற வாயெடுத்தாள். என்ன காரணத்தினாலோ அவளுடைய சிவந்த முகம் பின்னும் சிவந்தது. 

தாங்கள் எனக்காக ரொம்பக் கஸ்டம் எடுத்துக் கொண் டீங்க என்றாள், ஒரு விதமாக. அவள் குரலின் இனிமையைத் தான் சிகாமணி கவனித்தான். குறையைக் கவனிக்கவில்லை. 

“அதெல்லாம் ஒன்றும் இல்லை என்றான் சிகாமணி. பிறகு சிறிது நேரம் பொறுத்து, “இனிமேல் இந்தச் சைக்கிளை உபயோ கப்படுத்த வேண்டாம். அதனால்தானே …. 

“சைக்கிள் மேல் ஒண்ணும் பிசகில்லை. நான் ‘ஸ்பீடாக’ வந்தது தப்பு. வீட்டில் எனக்காக ‘மதர்’ காத்திருப்பாளே என்று தான்……” 

சம்பாஷணை முதலில் பொதுவாக இருந்தது. பிறகு அவளுடைய குடும்பத்தைப் பற்றித் திரும்பியது. அதிலிருந்து தாய், மகள் இருவரும் தனியாக இருக்கிறார்கள் என்றும், அவள் மெடிகல் காலேஜில்’ படிக்கிறாள் என்றும் தெரிந்துகொண்டான். 

வீடு வந்தது. ரிக்ஷாவிலிருந்து இறங்கினாள். சிகாமணியின் உதவியைப் புன்சிரிப்போடு ஏற்றுக்கொண்டாள். பக்குவமாக அணைத்தவாறே வீடு சேர்த்தான். சிகாமணியே பணம் கொடுக்க முன்வந்தான். அவள் மறுத்துவிட்டாள். 

வெளியில் விட்டிருந்த சைக்கிளையும் வீட்டிற்குள் கொண்டு போனான். அப்போதுதான் அவனது கண் அவ்வீட்டைச் சுற்றிப் பார்த்தது. 

வெள்ளைக்கார முறைப்படி அவ்வறை அலங்கரிக்கப் பட்டிருந்தது. ஜன்னலுக்கு ‘பிளைண்ட்’ (Blind) என்ற நீலத்துணி போடப்பட்டிருந்தது. கதவுகளின் மேல்பாகம் மெல்லிய துணியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அறையின் குறுக்கில் ஒரு கம்பளி. பல சோபாக்களும், நாற்காலிகளும் சுற்றி இருந்தன. அறையின் நடுவில் இருந்த மேஜையின்மேல் புஷ்பச் செண்டுகள் வைக்கப் பட்டிருந்தன. எதிர்புறச் சுவரில் பெரிய ஏசுநாதரின் படம் மாட்டப்பட்டிருந்தது. 

அவளுடைய தாய், கால் கட்டுடன் இருந்த தன் மகளைப் பார்த்துப் பதறிப் போனாள். “லார்ட் ஜீசஸ் (Lord Jesus) என்று சொல்லியபடியே மகளை இறுகப் பற்றிக்கொண்டாள். 

மகள் சிகாமணியைச் சுட்டிக் காட்டினாள். “அவர்தாம் என்னைக் காப்பாற்றினார்…….” 

அவள் பெயர்தான் மேரி ஷெல்லட். 

சிகாமணி அவ்வீட்டை விட்டு வெளிவர இரவு ஒன்பது மணி ஆயிற்று. 

3 

காற்றின் போக்கில் மிதந்துகொண்டிருந்த காற்றாடி, மரக் கிளையில் மாட்டிக்கொண்டது; காற்றை எதிர்த்து நின்றது. 

சிகாமணிக்குக் குறிக்கோள் ஒன்று அகப்பட்டுவிட்டது. வாழ்க்கைக்குக் காரணம் கிளம்பிவிட்டது.சிகாமணி இப்பொழுது முற்றும் மாறிவிட்டான். 

அவனுடைய அலங்கோலமான உடைகள் போயின. சோம்பல் தோய்ந்த நடவடிக்கை அடியோடு ஓடிவிட்டது. 

மேரி ஷெல்லட் என்ற அவள் தான் இவ்வளவிற்கும் காரணம். இருவரும் அன்றிலிருந்து நெருங்கிப் பழகினர்; தினம் தினம் சந்தித்தனர். 

முதலில் சிகாமணியிடம் அவள் மேலான அபிப்பிராயம் கொள்ளவில்லை. நாளடைவில் அவன் தன் இளமைச் சம்பவங்களைப்பற்றிக் கூறினான்.  

சிகாமணிக்குப் பல வேலைகள் தெரியும். புதிதாகப் பார்க்கும் எந்த விஷயத்தையும் கிரகித்துக்கொள்வான். 

அவன் பல பேரோடு பழகி இருக்கிறான். நல்லவர்கள் கெட்டவர்கள், சிறியவர்கள் பெரியவர்கள், குடிகாரர்கள் குடியாதவர்கள், மைனர்கள் ஒழுங்கானவர்கள் எல்லோரிடமும் பழகியிருக்கிறான். உலகத்தில் இரு பாதியும் அவனுக்குத் தெரியும். உலகம் முதல் பாதி மறுபாதியாகப் பிரிக்கலாம். ஒரு பாதி முதலாளிகள். மறுபாதி தொழிலாளிகள். முதல் பாதியில் செல்வம்,சுகம்,சந்தோஷம், ஓட்டல், கிளப், மோட்டார் சவாரி, எஜமானத்துவம்.மறுபாதி அதற்கு நேர் எதிர்: வறுமை, நோய், பசி,பிணி, அடிமைத் தொழில், சாவு. 

இரண்டிலும் அவன் உள்ளம் ஒட்டவில்லை. வாழ்க்கை ஜலத்தில் அவனும் நீந்தினான்; ஜலம் ஒட்டவில்லை. மீனின்மேல் நீர் ஒட்டுமா? 

சிகாமணிக்கு எந்த வேலையும் இழிவல்ல. மாட்டுக்காரனாக இருந்திருக்கிறான். புளி மூட்டையைக்கூடத் தெருவில் ஓட்டி விற்றிருக்கிறான். ஓட்டல் வேலை முதல் கிளார்க் உத்தியோகம் வரையில் எல்லாம் செய்திருக்கிறான். அவன் கல்வியெல்லாம் தன் சொந்த முயற்சியால் கற்றதுதான். 

ஆம், அவனைக் குழந்தை என்றுதான் சொல்லவேண்டும். மேரி அவன் மேல் இரக்கந்தான் கொண்டாள். அவனைத் திருத்தி மனிதனாக்க விரும்பினாள். 

உலகம் அவனை மதிக்க வேண்டும். பாவம்! அவனுக்கு நன்மை செய்வதாக அவள் எண்ணிக் கொண்டாள். ஆனால் தீமையைத்தான் புகட்டினாள். 

தினம் தினம் அவனுக்குப் போதிப்பாள். 

அவன் அலக்ஷ்யச் சிரிப்புச் சிரித்தான். ஆனாலும் அவனிடம் மாறுதல் ஏற்பட்டு வந்தது. முன்பு சம்பளத்தை அப்படியே செலவு செய்வான். இப்பொழுது சேமித்து வைக்க ஆரம்பித்தான். அவளும் ஆதரவு காட்டினாள். 

நாளடைவில் சம்பளம் அதிகம் கிடைக்கும் உத்தியோகம் செய்ய விரும்பினான். 

அவன் மாறுதல் அவனுக்கே தெரியவில்லை. 

”நீ குழந்தையல்ல ; மனிதன், மனிதன், வாலிபன்” என்றாள் அவள். 

அவன் சிரித்தான். ஆனாலும்,”நீ மனிதன்,வாலிபன்” என்ற சொல்லை அவன் உள்ளம் மறக்கவில்லை. 

4

ஆபீஸ் மணி 4-45 அடித்தது. 

சிகாமணி எழுந்தான். நேரே மானேஜர் அறைக்குச் சென்றான். மேஜைமேல் எழுதிக்கொண்டிருந்த அவர் சிகாமணி யைக் கண்டதும் தலையை நிமிர்த்தினார். 

அவருடைய மூக்குக் கண்ணாடி, அவர் நிமிர்ந்த வேகத்தில், மூக்கின் பள்ளத்திலிருந்து கிளம்பி மறுபடியும் அமர்ந்தது. சிகாமணி, தாம் கூப்பிடாமல் வந்தது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. 

சிகாமணி ஒரு காகிதத்தை அவரிடம் நீட்டினான். 

அதைப் பார்த்ததும் அவர் சிகாமணியை நிமிர்ந்து பார்த்தார். ”என்ன இது?” என்று கேட்டார். அதிகாரம் செய்து பழகிய குரலில், பின்னும் அதிகாரம் தொனித்தது. 

“எனது ராஜிநாமா” என்றான் சிகாமணி, அமைதியாக.

“இது என்ன முட்டாள்தனம்?” என்றார் மானேஜர்.

சிகாமணி அமைதியை இழக்கவில்லை. சிறிது நேரம் சிகாமணியையே உற்றுப் பார்த்தார் மானேஜர்.அவனைப் போலப் பலரை அடக்கி ஆண்டவரல்லவா அவர்? 

“ஓ, இப்போது தெரிகிறது ! நேற்றே முதலாளியிடம் உன்னைப் பற்றிச் சொன்னேன் – சம்பளம் உயர்த்துவதைப் பற்றி இங்கே பார் என்று கையினால் நோட்புக்கை விரித்து, ஓர் இடத்தைக் காட்டினார். அது சம்பள ஜாப்தா. அவனுடைய பெயருக்கு எதிரில் ரூ.20 என்று போடப்பட்டிருந்தது. யுத்த காலப் படியையும் நீக்கிப் பார்த்தால், சம்பள உயர்வு ரூ.5. 

சிகாமணி பேசாமல் இருந்தான். 

மானேஜருக்கு ஒன்றும் விளங்கவில்லை. சிகாமணி போய் விட்டால், ஆளுக்குப் பஞ்சம்! 

மானேஜர் விட்டுக் கொடுக்க நினைத்தார். ரூ.25 ஆக ஆக்கினார். 

சிகாமணி தான் உண்மையாகவே ராஜிநாமாச் செய்வதாக அவ சொல்லி நம்ப வைக்கக் கால்மணி நேரம் ஆயிற்று. சண்டை போட்டுத் தனக்கு சேரவேண்டிய தொகையை வாங்கிக் கொண்டான். 

மணியைப் பார்த்தான்; 5-15 ஆகியிருந்தது. 

அவசரமாக நடந்தான்; கால் மணி நேரத்தில் ரிப்பன் மாளிகை வரையில் வந்துவிட்டான். 

வேகமாகச் சந்தில் நுழைந்தான். அவன் மனத்தில் சொல்ல முடியாத ஓர் உணர்ச்சி, இன்ப வேதனை. 

மூன்று மாதத்துக்கு முன் இருந்த சிகாமணி வேறு. பழைய சிகாமணி ஓடுவதை வெறுத்தான் ; வேகத்தை எதிர்த்தான். புதிய சிகாமணியோ வேகத்தை விரும்பினான். 

முச்சந்திக்கு ஓடினான். ரிப்பன் பில்டிங்க்ஸ் கடிகாரத்தைப் பார்த்தான்; 5-35 ஆகி இருந்தது. இன்னும் பத்து நிமிஷம் காத்திருக்க வேணும். 

முன்பு, மூன்று மாதத்திற்கு முன்பு, அவளைப் பார்ப்ப தற்காக ஓடி வரவில்லை. இன்று ஓடி வந்திருக்கிறான். 

அந்தச் சந்திப்பிற்கு முன் குழந்தையாக இருந்தான்; இப்போது…

ஏன் அவள் இன்னும் வரவில்லை? ஏனோ, அவன் உள்ளம் காலையிலிருந்து நிலைகலங்கி இருந்தது. அவள் வருவாளா? ஒரு வேளை… 

அவன் மனம் நடந்ததை விட்டு இனி நடக்கப் போவதைச் சித்திரித்தது. 

ஆம், இன்றுதான் அவள் தன்னை மணப்பதாகச் சொல்லி இருந்தாள். கிறிஸ்தவனாகி விட்டால் என்ன? 

அழகான மனைவி, நல்ல வேலை, பணத்தில் புரளும் வாழ்க்கை. அவன் மனம் என்ன என்னவோ எண்ணியது! 

கடிகாரத்தைப் பார்த்துத் திரும்பினான். மணி நெருங்கி விட்டது. அவன் கை சம்பள ஜேபியில் விளையாடியது. 

திரும்பினான். அதோ வருகிறாள், புன்சிரிப்புடன் புத்தம் புதிய சைக்கிள். புத்தம் புதிய உடை. 

மகிழ்ச்சியால் பொங்கிய மனம் துள்ளியது. அவள் நெருங்கி விட்டாள். 

துள்ளிய மனம், ‘பொடுக்’கென நின்றது! 

அவனை நெருங்கிய சைக்கிளை எதிர் சந்திலிருந்து வந்த ராணுவ லாரி மோதியது. அவளுடைய உயிரற்ற உடம்பை, தசைப் பிண்டத்தைத் தரையில் மோதியது; அவள் உயிரைக் கௌவிக்கொண்டு சென்றது. ராணுவ லாரியை ஓட்டிக் கொண்டு சென்ற, குடித்திருக்கும் டிரைவரின் எக்காளச் சிரிப்பு! 


கிளை வெட்டப்பட்டது. காற்றாடி, அறுபட்ட காற்றாடி, ஊழிக் காற்றில் தள்ளாடி, உருண்டு உருண்டு கொண்டே சென்றது.

– கதைக் கோவை (தொகுதி IV), 75 எழுத்தாளர்கள் எழுதிய 75 சிறந்த சிறுகதைகள், முதற் பதிப்பு: 1945. அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *