அரை குறை அடிமைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 30, 2015
பார்வையிட்டோர்: 9,636 
 
 

தன்னுடன் வேலை செய்யம் டொக்டர் ஸ்டிவனின் முகபாவத்தைப் பார்த்துவிட்டு, இவன் என்ன நினைக்கிறான் என்று டொக்டர் சண்முகலிங்கத்தால் திட்டவட்டமாக எதையும் முடிவுகட்ட முடியவில்லை.

இளமையும் அழகுமாய் உருண்டு திரண்டு கொண்டு திரியும் நேர்ஸஸைகை; கண்டாற்தவிர,மற்ற நேரங்களில் ஒரு கற்சிலை மாதிரியான ஸ்டிவனின்; முகபாவத்தை வைத்துக்கொண்டு அவனைப் புரிந்து கொள்ளுதல் மிகக் கடினமான விடயம்.

கடந்த இரண்டு மூன்று கிழமைகளாக டாக்டர் சண்முகலிங்கத்திற்;கு வார விடுமுறை கிடைக்கவில்லை. அந்த டிப்பார்ட்மென்டில் ஒன்றிரண்டு பேர் ஹொலிடேயில் போய்விட்டார்கள், ஒன்றிரண்டுபேர் தங்களின் அவசர காரியங்களுக்கும்,சுகவீனமான காரணங்களுக்காகவும் சட்டென்று லீவ எடுத்துக் கொண்டபடியால் அவர்களின் இடத்தை சீனியர் டாக்டர் என்ற விதத்தில்; சண்முகலிங்கம்; நிரப்பவேண்டியிருந்தது.

அண்மையில் சண்முகலிங்கத்தின் தமக்கையின் குடும்பத்தினர் இலங்கையிலிருந்து வந்திருக்கிறாள்.வந்திருக்கிறார்களா? இல்லை,அவர்கள் இனவாத சிங்கள அரசால் அடித்து விரட்டப்பட்டிருக்கிறார்கள். இலங்கையில் தமிழர்களுக்கெதிராக,முக்கியமாக இலங்கையின் தலைநகரில் வாழ்ந்த தமிழர்களுக்கெதிராக,ஆடிமாதக் கடைசியில் கட்டவிழ்த்தப்பட்ட கலவரத்தால்,அவளின் பெரிய குடும்பத்தில் உயிரோடு எரிபடாமற் தப்பிப் பிழைத்தவர்கள்,அவனின் தமக்கையும் அவளின் கைக்குழந்தையும் அவளின் வயதுபோன மாமியார் மட்டுமே.

அவர்களைப்போய்ப் பார்க்கவேண்டும் என்று சண்முகம் நினைத்திருந்தான்.ஆனால் டிப்பார்ட்மென்டில் உள்ள டாக்டர்களின் தட்டுப் பாட்டால் அவனுக்கு லீவு எடுப்பது முடியாத காரியமாகவிருந்தது. டாக்டர் சண்முகலிங்கம்,டாக்டர் ஸடிவனின் டியுட்டியை எத்தனையோ முறைகள்; கவர் பண்ணி அவனுக்கு உதவியிருக்கிறான்.

அவன் அவசரமாகத் தனது குடும்பத்தைப் பார்க்க லண்டனுக்கு வெளியே இந்த வாரவிடுமுறையில் போகவேண்டியிருப்பதால அவனுக்குப் போடப்பட்டிருந்த டியுட்டியை ஸ்டிவன் பொறுப்பெறுக்க முடியுமா என்று ஸ்டிவனிடம் கேட்ட கேள்விக்கு மறுமொழியை எதிர்பார்க்கிறான் சண்முகலிங்கம்.;

அவனின் குடும்பத்தைப் பார்க்கப்போக வேண்டும் என்று அப்படி என்ன அவசரம், குடும்பத்துக்கு என்ன நடந்தது என்றெல்லாம் விபரித்துச் சொல்லும் மனநிலையில் அவனில்லை. அவனது குடும்பமும், அவர்களைப்போல் ஆயிரக்கணக்கான தமிழர்களும் இலங்கையில் அனுபவித்த கொடுமைகள் எத்தனை என்று விபரிப்பது?

கொழும்பில் வாழ்ந்த அவனது குடும்பமும் அவர்களைப்போல பல தமிழர்களும், ஆடிமாதக் கடைசி நாட்களில்,அவர்களின் வீடுகளிலிருந்து வெளியே இழுத்து வரப்பட்ட. பொதுத் தெருவில் உயிருடன் கொழுத்திய கதையைச் சண்முகலிங்கம் சொன்னபோது,அதை ஸ்டிவனால் நம்ப முடியவில்லை. நாகரீகமான உலகத்திலா இதெல்லாம் நடக்கிறது?

இலங்கையில் பிரச்சினை தொடங்கியபோது, தனது தமக்கை குடும்பத்தினருக்கு என்ன நடந்திருக்கும் என்று அவன் தவித்த தவிப்பும் வேதனையும் அவனுக்குத்தான் தெரியும்.தாங்கள் பிறந்த பூமியில் தமிழர்கள் எல்லாமிழந்த அகதிகளாகிறார்கள். தமிழர்கள்,தெருவில் இழுத்து வரப்பட்டுக் கொழுத்திக் கொலை செய்யப் படுவதை, அதே நாட்டிற் பிறந்து, ஒரேகாற்றைச் சுவாசித்து ஒரே நீரைக்குடித்து,அதே நிலத்தில் விளைந்த உணவை உண்ட பல சிங்களவர்கள் கைகொட்டிச் சிரித்துக் கொண்டாடுகிறார்கள்.

உல்லாசப் பிரயாணிகளாக ஆடம்பர ஹோட்டேல்களிற் தங்கியிருந்த வெளிநாட்டார், தங்கள் ஜன்னல்களுக்கப்பால் நடக்கும் மிருகத் தனமான நரபலிக் கேளிக்கைகளைக் கண்டு அதிர்ந்து போகிறார்கள்.

இலங்கை அரசாங்கத்தைக் கொண்டு நடத்தும் அமைச்சர்கள்.பிரமுகர்கள் இந்தக் கொலைவெறிக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவதாகச் செய்திகள் சொல்கின்றன. எத்தனையென்று தாங்குவது?

இலங்கையின் தலைநகரான கொழும்பில் மட்டும் ஐம்பதினாயிரம் தமிழர்கள் அகதிகளாக்கப் படடுத் தவிக்கிறார்கள்; என்று பிரிட்டிஷ் டி.வி சொல்கிறது. அதைப் பார்த்தபோது,சோகத்துடன், பட்டினியுடன் அகதி முகாம்களிற் தஞ்சமடையும் பல்லாயிரக்கணக்கான உருவங்களிற் தனது தமக்கையின் முகமும் தென்படுமா என்று துடித்திருதிருக்கிறான்.

அவனின் சிங்கள சினேகிதன் ஒருத்தனின் முயற்சியால்,தனது தமக்கை ஒரு அகதி முகாமிலிருக்கிறாள் என்று அவன் கேள்விப் பட்டான்.தமக்கையின் குடும்பத்தினர் பலருக்கு என்ன நடந்திருக்கும் என்று தனக்குத் தெரியாது என்று அவனின் சிங்கள நண்பன் சொன்னான். நண்பனுக்குத் தெரிந்திருநதாலும் அவற்றை டெலிபோனிற் சொல்லித் தனது நண்பனை வருத்த விரும்பவில்லை என்பதைச் சண்முகலிங்கம் புரிந்து கொண்டான்.

அதன்பின்,தமக்கையைத் தொடர்புகொண்டு, லண்டனுக்கு,அவளையும் குழந்தையையும் வர டிக்கட் அனுப்பி அவளை அழைத்திருக்கிறான்.

டாக்டர் சண்முகலிங்கம் திருமணமாகாத பச்சிலர்.அதனால் பச்சிலர்ஸ் விடுதியில் இருக்கிறான்.அங்கு தமக்கை குடும்பத்தை வைத்திருக்க முடியாது.அதனால் அவளின் மைத்துனர் வீட்டில் அவர்கள் தங்க ஒழுங்கு செய்திருக்கிறான்.அவளைப் பார்க்கப் போக, டியுட்டியை மாற்றச் சொல்லி ஸ்டிவனைக் கேட்டபோது எத்தனையோ மழுப்பல்களுக்குப் பின் ஸ்டிவன் சம்மதித்திருந்தான்;.

ஆனால் அப்படிச் சொன்ன ஸ்டிபன்,இப்போது வந்து தன்னால் சண்முகலிங்கத்திற்க உதவி செய்யமுடியாது என்று சொன்னபோது சண்முகலிங்கத்துக்கு வந்து கோபத்திற்கு அளவில்லை.

‘ஏன் உன்னால் முடியாது?’ ஆத்திரத்துடன் அதிர்கிறான் சண்முகம்.

‘இன்று வார்ர்ட்டில் அட்மிட் பண்ணப் பட்ட ஒரு நோயாளி தன்னை ஒரு வெள்ளையின டாக்டரும் தொடக்கூடாத’ என்று சொல்லி விட்டானாம்.இதனால் அந்த வார்ட்டில் வெள்ளையினமில்லாத ஒரேயொரு டாக்டரான சண்முகலிங்கம் கட்டாயம் அந்த நோயாளியைப் பார்க்க வேண்டுமாம்.

பிரித்தானியாவில் இப்படித் தைரியமாக ஆணையிடுபவன் ஒன்றில் பைத்தியமாக இருக்கவேண்டும் அல்லது ஒருகாலத்தில் வெள்ளையின ஆதிக்கங்களுக்கு எதிராக இந்தியாவிலோ அல்லது ஏதோ ஒரு ஆபிரிக்க நாட்டிலோ போராடியவரின் பேரப்பையனான இருக்கவேண்டும.; ஆனாலும் அப்படிச் சொன்ன நோயாளியின் துணிவைப் பாராட்டும் நிலையில் சண்முகலிங்கம் இல்லை.

அவனைப் போய்ப் பார்த்துச் சிகிச்சை கொடுக்க சண்முகம் நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறான். நோயாளி,ஒரு வெளிநாட்டான், லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தைக் கடந்து வரும் வழியில் அவன் வந்த கார் விபத்துக்குள்ளானதால் காலையுடைத்துக்கொண்டு படுத்திருக்கிறானாம்.

மிகவும் சிக்கலான உடைவுகளுடன் மிகவும் இரத்தமும் வெளியேறி அந்தப் புது நோயாளி அபாயமான நிலையிலிருக்கிறானாம்.டாக்டர் ஸ்டிவன் வழக்கம்போல் தனது மெல்லிய குரலில்,தனது வெளிறிய முகத்தைத் தாழ்த்தி வைத்துக்கொண்டு முணுமுணுக்கிறான்.

சண்முகலிங்கத்திற்குக் கோபம் வருகிறது. தனது குடும்பம், அவர்களின் வாழ்க்கையே உடைபட்டு,சிதறப் பட்டு,சின்னாபின்னமாகி அவர்கள் பிறந்த நாட்டில் வாழ வழியின்றி,குற்றுயிரும் குறை உயிருமாக அன்னிய நாட்டில் வந்து நின்று அவனின் உதவிக்குத் தவிக்கிறார்கள். தன் பிழையால் தன் காலை உடைத்துக்கொண்டு (வெளிநாட்டிலிருந்து) வந்தவன் இங்கிலாந்தின் வழிமுறை நுணுக்கங்கள் தெரியாமல் வாடகைக்காரை ஓட்டியபடியால் விபத்து நடந்ததாம்.ஸ்டிபன் தந்த விளக்கமிது),அன்னிய நாட்டு வைத்தியசாலையில் அட்மிட் பண்ணப்பட்டு, வெள்ளைக்கார டாக்டர் தன்னைத் தொடக் கூடாது என்று சட்டம் போடும்; இந்தப் புதுநோயாளி யார்?

‘நீ அவசரமாக லீவு எடுக்கத்தான் வேண்டுமா?’ ஸ்டிபன் சண்முகலிங்கத்தைக் கேட்கிறான். ஸ்டிபன் யாருடனும் அதிகம் பேசாதவன். மற்றவர்களின் விடயங்களில் அக்கறை காட்டாதவன். சண்முகலிங்கத்தின் ஆத்திரத்தை அவனாற் புரிய முடியவில்லை.

சண்முகலிங்கம் ஸ்டிபனுக்குப் பதில் சொல்லவில்லை. ஆறுமணி ட்ரெயின் எடுத்துக்கொண்டுபோய்த் தனது தமக்கை குடும்பத்தைப் பார்க்கவேண்டும் என்று திட்டம் போட்டிருந்தான். அதை அவன் ஸ்டிபனுக்குச் சொல்லி ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்க நேரமில்லை. சண்முகம்,தனது கை;கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தான். ஐந்தரை மணியாகிறது. இவன் நேரம் பார்ப்பதை அவதானித்த விட்டு,

‘என்ன உன்னுடைய காதலியைச் சந்திக்கப் போகிறாயா?அல்லது உனது சினேகிதர்களுடன் படம் பார்க்கப் போகிறாயா?’ இப்படிக் கேட்ட ஸ்டிபனைக் கோபிக்கும் நிலையில் சணமுகம் இல்லை.

படமா? என்ன கேட்கிறான் ஸ்டிபன்?

இலங்கையில் பிறந்த குற்றத்திற்காக இலங்கைத் தமிழரின் வாழ்க்கையே ஒரு பயங்கரப் படமாகி விட்டது.இதைவிட என்ன பயங்கரப் படத்தைப்போய்ப் பார்க்கவேண்டியிருக்கிறது?

ஸ்டிபனுக்குச் சண்முகலிங்கம் மறுமொழி சொல்லவில்லை.’காதற் படமா’ ஸ்டிபன் தனது கேள்வியைத் தொடர்கிறான். பதில் வரவில்லை.

‘இந்தியப் படமா?’ ஸ்டிபன் தொடர்கிறான். என்ன இவன் ஒரே கேள்விக் கணைகளையே தொடுக்கிறான்?அவனை மௌனமாக்கும் விதத்தில் ஆமாம் என்ற வித்தில் தலையாட்டினான்.

‘என்ன மாதிரியான இந்தியப் படம்@ ஸ்டிபனின் குரலில் ஒரு கிளுகிளுப்பு.; ஸ்ரிபன் எப்போதோ தான் ஒரு இந்தியப் படம்—காமசூத்திரா பற்றிய படம் பார்த்ததாகச் சொன்னான்.ஸ்டிபனின் முகத்தில் சண்முகலிங்கத்தைப் பார்த்து ஒரு குறும்புத்தனம் விளைடியாடியது. அதைப் பார்க்க சண்முகலிங்கத்திற்குக் கோபம் வருகிறது. இங்கு சண்முகலிங்கத்தை’இந்திய டாக்டராகத்தான்’ நடத்துவார்கள். இந்திப் படமென்றால் காமசூத்தராவும் கறிச் சட்டிகளுமா இவர்கள் நினைவில் வருகிறது?

‘ என்ன படமா? இந்தப் போர்த் தெய்வம் காளியைப் பற்றியது. காளி பற்றிக் கேள்விப் பட்டிருப்பாய்தானே?’ சண்முகலிங்கம் தனது மனதில் தொடரும் எரிச்சலைக் காட்டாமல் ஏதோ பதில் சொல்கிறான்.

ஸ்டிபனின் முகத்தில் சட்டென்று ஒரு குழப்பம் அவன் மனக் கண்ணில் தலையைக் கொய்து மாலையாகப் போட்டிருக்கும் காளியின் உருவம் வந்திருக்குமா?

தனது கையிலிருக்கும் ஸ்டெதஸ்கோப்பை கேள்விகள் கேட்டு எரிச்சல் படுத்தும் ஸ்டிபனின் அல்லது வெள்ளையின டாக்டர் தன்னைத் தொடக் கூடாது என்று சொன்ன நோயளியின் கழுத்திற போட்டு அழுத்தவேண்டும் என்ற கோபம் சண்முகலிங்கத்துக்கு வருகிறது.

ஸ்டிவனைக் கோபித்து என்ன பிரயோசனம். ஓரு இந்திய டாக்டர் மட்டும்தான் தன்னைப் பார்த்துப் பராமரிக்கவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் நோயாளியை அல்லவா கோபிக்கவேண்டும், லண்டன் ஹொஸ்பிட்டலில் நோயாளியாகப் படுத்துக்கொண்டு. தனக்குப் பிடித்த டாக்டர்தான் தன்னைப் பார்க்கவேண்டும் என்ற நினைப்பவனுக்கு என்ன நெஞ்சழுத்தம் இருக்கவேண்டும்?

அந்நிய நாட்டுற்கு வந்தும் மிகச் சுதந்தரமாகத் தனது விருப்பு வெறுப்புகளைக் காட்டும் சுதந்திரம், தாங்கள் பிறந்த நாட்டில் தமிழர்களுக்கு இல்லையே என்று நினைக்கும்போது சண்முகலிங்கத்துக்குத் தமிழரை அப்படி ஒடுக்கி வைத்திருக்கம் இனவாதம் பிடித்த இலங்கை அரசில் ஆத்திரப்படுவதைத் தவிர அவனால் வேறோன்றும் செய்யமுடியாது.

அவனது கால்கள், இயந்திரமாக, நோயாளியிருக்கும் வார்ட்டுக்குப் போய்க் கொண்டிருந்தாலும் மனம் எங்கேயெல்லாமோ அலைகிறது. அவனின் நண்பன் ராமநாதனும் அவனைக்கைதியாகச் சிங்கள அரசு வைத்திருந்த சிறைச்சாலையில் வைத்துச் சிறைச்சாலை அதிகாரிகளாலம் சக சிறைக் கைதிகளாலும் கொலை செய்யப் பட்டு விட்டானாம்!.

இராமநாதன்,மிகவும் சுதந்திர உணர்வுள்ளவன். எதையும் துணிந்து பேசுபவன். கொடுமைகளைக்கண்டு கொதித்தெழுபவன்.

அவன் ஒரு கடந்த வருடம்,,இலங்கையில் சிங்கள அரசின் கைதியாகிவிட்டான் என்ற செய்தி சண்முகலிங்கத்தின் சிந்தனையில் சம்மட்டியாக விழுந்தது.அந்தச் செய்தியைக் கிரகிக்கவே மனம் மறுத்தது.நீதிக்குத் தலைவணங்கி நேர்மையே இலட்சியம் என்று வாழ்ந்த இராமநாதன் இனவாத சிங்கள அரசியலின் மனச்சாட்சியை உலுக்கியிருப்பானா? அதற்கா இந்தத் தண்டனை?

இராமநாதன் இலங்கையில் ஒரு சாதாரண அரசாங்க ஊழியன்.உணவுக்கும்,வாழ்க்கையின் அத்யாவசிய தேவைகளுக்கும் உழைக்கும் நேரம் தவிர,மற்ற நேரங்களில் இலக்கியமே உலகம் என்ற மூழ்கிக் கிடப்பான்.

எப்போதாவது இருந்துவிட்டு அவனின் கவிதையொன்று ஏதோ ஒரு முற்போக்குப் பத்திரிகையில் வெளிவரும்.இனிமையாகப் பேசுவான். பல விடயங்களையும் தேடிப்படிப்பான், அவனோடு ஒருசில முற்போக்கு இளைஞர் கூட்டம் எப்போதும் காணப்படும்.

மருத்துவக் கல்லுரிக்குப்போய், வாழ்க்கை மிகவும் பிஸியாக வரமுதல் சண்முகலிங்கமும் இராமநாதனுடன் திரியும் ஒரு இளைஞனாகத்திரிந்தான்.

ஆரம்ப எழுத்தாளனாக,நிலவையும்,தென்றலையம் பற்றிய அழகிய கவிதைகள் எழுதியவன் தமிழினம் இனவாத சிங்கள அரசின் அடக்குமுறைக்குள் தள்ளப் பட்டபோது.அடிமைத்தனத்துக்கு எதிரான விடுதலையுணர்ச்சிகள் பற்றி எழுதினான்.இலங்கையின் தமிழ்ப்பகுதிகளில்,எங்கு திரும்பினாலும் துப்பாக்கி தூக்கிய இராணுவத்தினர் எமதூதர்களாகத் தமிழ்ச் சமூகத்தை அடக்கினார்கள். தாக்குதல்களும் கைதுகளும் நாளாந்தம் நடக்கும் சாதாரண விடயங்களாகி விட்டன.

அந்தக் கொடுமைகளின் பிரதிபலிப்புகள், மக்கள் அனுபவிக்கும் சொல்லவொண்ணாத் துன்பங்கள் இராமநாதனின் படைப்புக்களில் ஆவேசத்துடன் அதிர்ந்தன.

இலங்கையில் 1977ல் தமிழருக்கு எதிராகச் சிங்கள அரசு சார்ந்தவர்கள் அவிழ்த்துவிட்ட கொடுமை எழுத்தில எழுத முடியாதவை.இராமநாதனின் தந்தை அப்போது,சிங்களவர்களின் பகுதியான இரத்தினபுரியில், தனது குடும்பத்துடன் ஆசிரியராகவிருந்தார்.

இனவாதிகளின் தமிழர்களுக்கெதிரான வெறியாட்டம் பெரும் கலவரமாக வெடித்ததின் பிரதிபலிப்பு நகர் எங்கும் பரந்தது.

சிங்கள இனவெறியர்கள் கைகளில் பயங்கர ஆயதங்களுடன் தமிழர்களின் வீடுகள், வியாபார ஸ்தாபனங்கள் என்று பல இடங்களிலும் கோர தாண்வடத்தை அவிழ்த்து விட்டார்கள். ஏழைகளான இந்தியப் பரம்பரைத் தோட்டத் தொளிலாளர்களான தமிழர்களைச் சிங்கள இனவாதிகள் தாக்கமுhட்டார்கள் என்ற நம்பிக்கையில் இராமநாதனின் குடும்பம், இந்தியத் தமிழர் பரம்பரையினர்; வாழும் ஒரு தோட்டப் பகுதிக்கு ஒடினார்கள்.

ஆனால் அங்கு நடந்த கொடுமைகள் மனிதத்தைத் தலைகுனியப் பண்ணுபவை., ஒரு நாட்டில் ,இருமொழிபேசும் மனிதர்களில் பெரும்பான்மைச் சமூகம், தாங்கள் எண்ணிக்கையில் கூடியவர்கள் என்ற அகங்காரத்தை இப்படியா காட்டிக்கொள்வது?

இலங்கை நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலுப்பானவர்கள். இந்திப் பரம்பரையில்,இலங்கையின் மலையகத்தில் வாழும் தோட்டத் தொழிலாளர்களான தமிழர்கள்.ஆங்கில ஆட்சியில், இந்தியாவிலிருந்து நூற்றி ஐம்பது வருடங்களுக்கு முன் கூலிகளாகக்கொண்ட வரப்பட்டவர்கள். அடிப்படை வசதிகளற்ற அரைகுறை அடிமைகளாள வாழ நிர்ப்பந்திக்கப் பட்டவர்கள்.

இலங்கை சுதந்திரமடைந்தபின்னும் அவர்களின் நிலை மாறவில்லை. பெரும்பாலோனோர் நாடற்றவர்களாக்கப் பட்டு,.இந்தியாவுக்குத் துரத்தப் பட்டார்கள். மீதமுள்ளோர் வாழும் வாழ்க்கை மிகப் பரிதாப நிலையைக்கொண்டது. இழப்பதற்கு அவர்களின் உடல்களைத் தவிர எதுவுமற்றவர்கள்.

அவர்களையும் சிங்கள இனவாதம் விட்டு வைக்கவில்லை.

அவர்கள் வாழ்ந்த குடிசைகள் இரவிரவாக எரிக்கப் பட்டன. அதில் ஆழ்ந்த துயிலிலிருந்த அப்பாவித் தமிழர்களின் உயிர்கள் அக்கினிக்கு அர்ப்பணமாயின.

தப்பியோடியவர்களில்,இளம் செல்வியர்களின் பெண்மை இனவெறியன் பாலிச்சைப் பலியாகியது.இளம் ஆண்கள் கண்டதுண்டமாக வெட்டப்பட்டுச் சந்தியிலும் தெரு மூலைகளிலும் துண்டம் துண்டமாக எறியப் பட்டார்கள்.அவர்களின் உடலிலருந்து துண்டித்த தேயிலைக் கொழுந்துக்களின் மேல் தொங்கவிடப்பட்டிருந்தன.

ஆவர்களுடன் வாழ்ந்து கலவரத்தில்,எல்லாம் இழந்த நிலையில் இராமநாதன் குடும்பம் இரத்தினபுரியிலிருந்து,யாழ்ப்பாணம் வந்தபோது,சண்முகலிங்கம், இராமநாதனுடன் நெருங்கிப் பழகினான்.

இராமநாதனின் கதை கவிதைகளை ஆழமாக விமர்சிக்காவிட்டாலும், இராமநாதனின் அன்பான சினேகிதம் சண்முகத்தை அவனுடன் நெருங்கப் பண்ணியது.

தமிழர்களுக்கெதிராக ஆட்சியிலிருக்கும் அதிகாரத்தின் துணையுடன் நடக்கும் கோரங்கள்,மனிதத் தன்மையுடைய ஒரு நல்லரசு பதவிக்கு வந்தால் முடிவுக்கு வரும் என்று தனது நப்பாசையை வெளிப் படுத்துவான் சண்முகலிங்கம்.

இராமநாதன் விரக்தியான சிரிப்புடன்,’ இலங்கையில் எந்த அரசு பதவிக்கு வந்தாலும்,பெரும்பான்மை இனமான சிங்களவர்களைத் திருப்திப் படுத்துவதே அவர்களின் குறிக் கோளாகவிருக்கும். தமிழர்களின் உரிமைகளுக்கும் சமத்துவத்துக்கும் சார்பாக நடக்கும் எந்த அரசும் இலங்கையில் நீண்ட நாட்கள் பதவி வகிக்காது. இலங்கை நாடு பௌத்த சிங்களவர்களுக்கு இறைவனால் கொடுக்கப் பட்டது. இந்த நாட்டில் தமிழர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. அவர்களை அழிப்பது எங்கள் தார்மீகக் கடமை.அல்லது அவர்கள் எங்களின் அரைகுறையடிமைகளாக இருந்து விட்டுப் போகட்டும் என்றுதான் பெரும்பாலான சிங்கள அரசியல்வாதிகள் பிரசாரம் செய்து இனவாதத்தைத் தூண்டி விடுகிறார்கள்.இவர்களின் கையில் ஜனநாயகம் விலங்கால் மாட்டப் பட்டிருக்கிறது.அந்த விலங்கு உடைபடாதவரையில், உடைக்கப் படாதவரையில் தமிழர்களுக்கு விமோசனம் கிடையாது’. என்று ஆருடம் சொன்னான்.

‘இலங்கையில், ஒட்டுமொத்த சிங்களவர்களும் இனவாதிகளில்லையே. பல முற்போக்கு வாதிகளுமிருக்கிறார்கள். தமிழர்களிலும் பல முற்போக்கு சிந்தனையும் சமத்துவத்துக்காகப் போராடும் துணிவுமுள்ளவர்கள் இருக்கிறார்களே. இப்படியானவர்கள், இனபேதம், மொழிபேதம் மறந்து ஒட்டுமொத்தமாக, இலங்கையில் எல்லோரும் சமத்துவமாக வாழுக்கூடிய ஒரு நல்லாட்சி வரப் போராடமுடியாதா?’ அப்பாவித்தனமாக இராமநாதனிடம் கேள்வி கேட்பான் சண்முகலிங்கம்.

அந்தக் கால கட்டத்தில், இலங்கையிலுள்ள இடதுசாரிகள், சோசலிசம் பற்றியும்,நாட்டு ஒற்றமைக்காக ஒன்று திரண்டு புரட்சி செய்வது பற்றியும் தொண்டை கிழியக் கத்திக் கொண்டிருப்பார்கள்.அப்படியானவர்கள், ஏன் இலங்கையில் சிறுபான்மையினர் என்ற காரணத்திற்காக,மனிதாபமற்றவிதத்தில் ஒடுக்கப்படுவதை எதிர்த்துப் போராடாமல் இருக்கிறார்கள் என்பதை அரசியலறிவு அதிகமற்ற சண்முகலிங்கம் பல தடவைகளில் யோசித்திருக்கிறான்.

ஏத்தனையோ ஆண்டுகளுக்குப் பின், 83ம்ஆண்டில் தனது குடும்பம் இனக்கலவரத்தால் துரத்தப் பட்டு லண்டனுக்கு அகதிகளாக ஓடிவந்ததால் பழைய நினைவுகளை அசைபோட்டபடி, ‘இந்திய டாக்டரை’ எதிர்பார்த்திருக்கும் நோயாளியைப் பார்க்க ‘ஓர்த்தோபீடிக் வார்ட்டை’ நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறான் டாக்டர் சண்முகம்.

வெள்ளைக்காரர்களை வாட்டியெடுக்கும் புதுநோயாளி யாராயிருக்கலாம் என்ற அவன் மனம் பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தது. எட்டாம் மாடியிலுள்ள, அந்த நோயாளியைப் பார்க்கப் போக லிப்ட் பக்கம் சென்றான்.

அவன் மனம் இலங்கையிலுள்ள சொந்தக்காரத் தமிழர்களைச் சுற்றி வந்தது. தமிழர்களின் சுதந்திரமான வாழ்க்கை;கு இலங்கையில் இனி உத்தரவாதமிருக்கிறதா?

அவன் இனி இலங்கைக்குத் திரும்பிப் போகமுடியாது என்று அக்காவை எயார்போட்டிலிருந்து அழைத்து வரும்போது அவள் அவனுக்குச் சொல்லியதம் ஞாபகம் வருகிறது.

‘அக்கா இங்கிலாந்து எனது தாய்நாடில்லை.எப்போதோ ஒருநாள் நான் இலங்கைக்குத் திரும்பத்தானே வேண்டும்? வானத்துக்கீழ் வீட்டைக் கட்டிவிட்டு மழைக்குப் பயப்படலாமா,’அவன் அவளிடம் விரக்தியாகக் கேட்டான்.

‘தம்பி,இனவாதச் சிங்கள வெறியர்கள் எங்களை மிருகங்கள் மாதிரித் தேடியலைந்து பல கோரங்களைச் செய்தார்கள். ஆடிமாதம் கொழும்பிலுள்ள தமிழர்களைப் பலியெடுக்கமுதல் யாழ்ப்பாணத்திலும் திருகோணமலையிலும் அவர்களின் வெறியாட்டம் ஆரம்பித்தது. சைவ சமயத்தினரின் ஐம்பெரும் திருத் தலங்களில் ஒரு முக்கிய தலமான திருகோணமலைத் திருக்கோணேஸ்வரர் கோயிலையடுத்த பகுதியில் ஒரு பஸ்ஸை மறித்து நெருப்பூட்டி அதிலுள்ள தமிழர்களை நெருப்பூட்டி எரித்தார்கள்.அதை நீ இங்கிலாந்துப் பத்திரிகையிற் படித்ததாகச் சொன்னாய் ஞாபகமிருக்கிறதா?”அவள் மனமுடைந்து கதறியழுதபடி சொல்லிக் கொண்டு வந்தாள்.

‘ அது மட்டுமா, யாழ்ப்பாண்திலுள்ள பல டியுட்டரிகளுக்குள் புகுந்து,இளம் தமிழ் மாணவிகளைக் கடத்திக்கொண்டு போய்த் தங்கள் இராணுவ முகாம்களில் வைத்துப் பாலியற் கொடுமைகளைச் செய்து விட்டுக் கொலைசெய்து எரித்தார்கள்.அப்பாவித் தமிழர்கள் வீடுகளுக்குட் புகுந்து அவர்கள் செய்த அக்கிரமங்களை என்ன சொல்வேன்?’

அவளின் கதறல்கள் அவன் காதுகளில் இன்னும் ஒலிக்கிறது. அன்று அவசரமாக அவளைக் கூட்டிக்கொண்டு அவளின் கணவரின் சொந்தக்காரர் வீட்டில் சேர்த்ததற்குப்பின் அவளைப் போய்ப் பார்க்கவோ ஆறுதல் வார்த்தைகளை நேரிற் சொல்லவோ முடியாமல் அவன் டியுட்டி தடையாக இருக்கிறது. இன்று அக்காவைப் பார்க்கவேண்ம் என்று எடுத்த லீவைக் குழப்பும் அந்தப் புது நோயாளியில் அவனுக்கு ஆத்திரம் வந்தது.

அந்த நோயளியால் டாக்டர் சண்முகலிங்கத்தின் இன்றைய திட்டமெல்லாம் அநியாயமாகி விட்டது. யாரிந்த மண்டைக்கனம் பிடித்த நோயாளி,?

வெள்ளைக் காரர்களுடன் தர்க்கம் பண்ணும் தைரியம், வெள்ளையருக்கு எண்ணெய் கொடுத்து உதவும் அராபிய பிரபுக்களைவிட யாருக்கும் வராதே, யார் இந்தத் தைரியசாலி?

எட்டாம் மாடியில் காலடியெடுத்து வைத்தபோது, ஜன்னலுக்கப்பால் இலையுதிர்காலத்தில் மொட்டையாக நிற்கும் மரங்கள் இலங்கையில் எல்லாமிழந்து தவிக்கும் தமிழரை ஞாபகப் படுத்தியது. லண்டன் தெருக்களில் ஓடும் கார்கள் குழந்தைகளின் பொம்மை விளையாட்டை ஞாபகப் படுத்தின.

டெலிவிஷனிற் காட்டிய இலங்கைத் தலைநகரம் கொழும்பு ஞாபகத்தில் நிழலாடுகிறது.

லண்டன் பத்திரிகை ‘த டைம்ஸ்’,பிரசுரித்த, கொழும்பில், சிங்களக் காடையர்கள் தெருவில் உயிரோடு கொழுத்தம் படும் தமிழனின் எரியும் உடல் மனதில் வந்ததும் அவனின் உள்ளம் குமுறுகிறது.

அவன் கால்கள் அவன் பார்க்கப் போகும் நோயாளியிடம் விரைகின்றன.. அவனது தமக்கையின் கணவரைக் காடையர் தாக்கியதால் ஏற்பட்ட காயத்திற்கு, கொழும்பு வைத்தியசாலைக்குக்கொண்டு போனபோது அங்கிருந்த வைத்தியர்களும் தாதிகளும் தமிழ் நோயாளிகளைப் பார்க்க மறுத்தார்களாம்.’இங்கிருக்கும் சிங்கள நோயாளிக்கே உணவில்லை..பறத்தமிழனுக்கு உணவும் பாதுகாப்புமா?’ என்று வைது துரத்தி விட்டார்களாம்..அவரை வைத்தியசாலை ஊழியர்களே குத்திக் கொலை செய்தார்களாம்! இதுதானா போதிசத்துவனின் போதனை? இங்கு லண்டனில் என்னவென்றால்,தான் விரும்பிய வைத்தியரைத் தவிர வெறுயாரும் என்னைத் தொடக்கூடாது என்று சொல்ல, ஒரு சில மணித்தியாலங்களுக்கு முன் லண்டனுக்கு வந்திறங்கிய அந்நியனு;னுத் திமிர் இருக்கிறது!

இவன் யாராயிருக்கும்?

உடைந்த எலும்புகளைத் தூக்கித் தோரணங்களாகவும் காவடிகளாகவும் கட்டில்களில் பல நோயளிகள் படுத்திருக்கிறார்கள்.

‘யாரிந்த நோயாளி?’ அவன் எரிச்சலுடன் வார்ட் நேர்ஸைக்கேட்டான்.

‘ ஓ யெஸ்.. போய்ப் பாருங்களேன் வேடிக்கையை’ நேர்ஸ் நோயாளியிருக்கும் அறையைக் காட்டினாள்.

வெள்ளைக்காரர்களை ஆட்டிப் படைக்கும் இந்த வீரன் யார்?

இவன் எதிர்பார்த்து வந்ததுபோல் அந்த நோயாளி வெள்ளைக்காரனுக்கு எண்ணெயைக்காட்டி மிரட்டும் அராப் பணக்காரனில்லை.

விழிகளுக்குள் இரண்டு தீபங்களைப் பொருத்திப் பார்ப்பவரை நிலை தடுமாறவைக்கும் கூரிய பார்வையுடைய அவன் ஒரு அமெரிக்க இந்தியன்.

‘ஹலோ டாக்டா’,படுத்திருந்த நோயாளியின் முகத்தில் சண்முகலிங்கத்தைக்கண்டதும் ஒரு சந்தோச பாவம் தெரிந்தது. வார்த்தைகள் கலிரென்று ஒலித்தத.

இவன்தானா தன்னை ஒரு வெள்ளையின வைத்தியன் தொடக்கூடாது என்று சொன்னவன்?

ஸ்டிபன் சொன்னதுபோல் இந்த நோயாளியின் எலும்பு உடைந்ததால் அதிக இரத்தம் வெளியேறி வெளிறிப் போன நிலையில் இல்லை.அவன் முகத்தில் ஒரு அசாத்திய பிரகாசம். தன் சுயமையை நிலைநிறுத்தும் திகாத்திரத்தின் பிரதிபலிப்பா அது?

அந்தப் புது நோயாளி சண்முகலிங்கத்தின் சினேகிதன் இராமநாதனை ஞாபகப்படுத்தினான்.

சண்முகலிங்கம் தனது ஆச்சரியத்தைக் காட்டிக்கொள்ளாமல் உத்தியோக தோரணையில்,”ஹலோ’ சொல்லிக் கொள்கிறான்.

‘ எனக்குத் தெரியும்.. உலகத்தில் எந்த மூலையிலும் ஒரு இந்திய டாக்டர் இருப்பார் என்று’

நோயாளி மலர்ச்சியுடன் கூறுகிறான்.

டாக்டர் நோயாளியின் உடைந்த எலும்மைப் பரிசோதிக்கிறான். இந்த வைத்தியசாலையில் சண்முகலிங்கத்தை எல்லோரும் ‘ இந்திய டாக்டர்’ என்றுதான் சொல்வார்கள்.

தான் ஒரு இந்திய டாக்டராயிருந்தால் உயிர் தப்ப உலகத்தில் எங்கேயெல்லாமோ ஒடிக்கொண்டிருக்கத் தேவையில்லை என்று சொல்ல நினைத்தான் சண்முகலிங்கம்.

‘ வெள்ளைக்கார டாக்டர் உன்னைத் தொடக் கூடாத என்று சொன்னாயாம். உண்மையா?

டாக்டர் கேட்கிறான்.

‘ நீயும் ஒரு இந்தியன்.. எங்களை அடிமைகொண்ட வெள்ளைக்காரனை நம்புவாயா?’

‘நான் இந்தியனில்லை..இலங்கைத் தமிழன்’ டாக்டர் தன் சோகத்தைக் காட்டாமல் மறுமொழி சொல்கிறான்.

நோயளியின் முகத்தில் பெரிய ஆச்சரியம்!

என்ன ஆச்சரியப்படுகிறான் லண்டன் வைத்தியசாலைகளில் மட்டுமா உலகத்தில் எந்த மூலையிலும் ஒரு இலங்கைத் தமிழன் டாக்டராகவோ, எஞ்சினியராகவோ, அல்லது ஒரு ஆசிரியனாகவோ இருப்பான் என்பதில் ஏன் இவன் ஆச்சரியப்படவேண்டும்?

இலங்கையில் வாழமுடியாமல் அனாதைகளாக உலகமெல்லாம் ஓடிக்கொண்டிருப்பது இவனுக்கு ஏன் தெரிந்திருக்க வேண்டும்?

‘இதோபார் நான் என்ற வாசித்துக்கொண்டிருக்கிறேன் என்று’அவன் அளவிடமுடியாத ஆச்சரியத்துடன் தான் படித்துக்கொண்டிருந்த மகஸின் ஒன்றைக் காட்டினான்.’ அது லண்டனிலிருந்து வெளியாகும்’ நியு ஸரேட்ஸ்மன்’ என்ற முற்போக்கான பத்திரிகை.

அதில் இலங்கையில் தமிழருக்கெதிராக நடக்கும் கலவரம் பற்றிய கட்டுரையொன்று வெளிவந்திருந்தது.

தற்போது, இங்கிலாந்தில் பல பத்திரிகைகளில் இலங்கையில் நடக்கும் கொடுமைகளைப்பற்றிய செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன.

‘இன்று உலகத்தில் நடக்கும் கொடுமைகளுக்கெல்லாம் பிரித்தானிய வல்லரசின் சரித்திரத் தொடர் என்பதை நீ மறுக்கமாட்டாய்தானே?’ நோயாளி டாக்டரைக் கேட்கிறான். டாக்டருக்கு எரிச்சல் வருகிறது. இன்றைய அவனது திட்டத்தைக் குழப்பியடித்த நோயாளியுடன் உலக அரசியலை அலசம் நிலையில் அவன் இல்லை.

அவன் தனது கவனத்தை நோயாளியின் உடைந்த எலும்பில் செலுத்துகிறான்.

சிக்கலான உடைவு . ஏக்ஸ்ரே எடுத்துப் பார்க்கவேண்டும்.

இலங்கையில் எத்தனை தமிழர்களின் எலும்புகள் வெற்றுத் தடிகளாக சிங்கள வெறியர்களால் உடைக்கப் பட்டிருக்கும்?

கொழும்பிலுள்ள வெலிக்கடை என்ற இடத்தில் அடைத்து வைக்கப் பட்டிருந்து தமிழ் அரசியற் கதைகளைச் சித்திரவதைசெய்து கொலை செய்தார்களாம். அவன் நண்பன் இராமநாதன் என்ன சித்திரவதைகளுக்காளாகி இறந்தானோ கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

‘ உங்களின் இந்தியாவைத் தேடவெளிக்கிட்டுத்தானே இந்த வெள்ளையினம் எங்கள் நாட்டுக்கு வந்து எங்கள் இனம்போல் பலகோடி மக்களை அழித்தொழித்தது. அன்று உலகத்தைக் கூறுபோட்டவர்கள் இன்று ஆகாயத்தையே கூறு போடுகிறார்கள்’ நோயாளி உடைந்த காலின் வேதனை மறக்க அலட்டுகிறானா? அல்லது ‘இன்னுமொரு இந்தியனைக்’ கண்ட சந்தோசத்தில் தன் உள்ளக் கிடக்கையைக் கொட்டித் தள்ளுகிறானா?

‘நான் உன்னைப் பார்க்க வராமலிருந்தால் என்ன செய்வாய்?’ தனது தமக்கையைப் போய்ப்பார்ப்பதைத் தடுத்த நோயளியிடம் கொஞ்சம் கடுமையாக விசாhரிக்கிறான்.

‘ சாரி டாக்டா.;. உங்களின் தவிர்க்கமுடியாத திட்டத்தைப் பாழாக்கி விட்டேனா?’

தன்னிடம் கேள்வி கேட்ட நோயாளியை நிமிர்ந்து பார்க்கிறான் சண்முகலிங்கம்.

என்ன திடமான பார்வையும் உறுதியான கண்களும் இவனுக்கு?

இன்னொரு தரம் இராமநாதன் சண்முகலிங்கத்தின் நினைவுகளைச் சுண்டியிழுக்கிறான்.

இன்று சிங்ளவர்களால் இலங்கையில் தமிழர்கள் அழிக்கப் படுவதுபோல் இவன் இனமும் வெள்ளையின் ஆதிக்கவாதிகளால் அமெரிக்காவில் பல இடங்களிலும் அழிக்கப் பட்டு இன்று,அமெரிக்க அரசால் அனுமதிக்கப்பட்ட, ‘கூடுகட்டிய ‘இடத்தில் வாழும் சரித்திரம் சண்முகலிங்கத்துக்குத் தெரியும்.

‘ இலங்கையிலிருந்து இன ஒழிப்புக் கொடுமையிலிருந்து தப்பி வந்த எனது தமக்கையைப் பார்க்க ஒழுங்கு செய்திருந்தேன்..இலங்கையில் என்ன நடக்கிறது என்ற படித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னாய்.. என் தமக்கை கிட்டத்தட்ட எல்லாவற்றையும் இழந்து விட்டு வந்திருக்கிறாள்அவளைப் பார்க்கப்போவதை உனது பிடிவாதம் குழப்பி விட்டது’

சண்முகலிங்கம் அலுத்தபடி சொல்கிறான்.

‘இருபதாம் நூற்றாண்டில் ஹிட்லர் செய்த கொடுமையால் எத்தனைபேர் அழிந்தார்கள்? அந்த நாசமான சரித்திரம் இன்னும் எங்கேயோ தொடர்கிறது.மக்கள் சரித்திரத்திரத்திலிருந்து ஏதும் படித்ததாகத் தெரியவில்லை. நான் உனது நிலைக்காக மிகவும் வேதனைப் படுகிறேன் டாக்டர்’

நோளியின் குரலில் உண்மையான ஆதங்கம்.

.

பத்திரிகைகளில் எந்த செய்தியைப் பார்த்தாலும் அது தங்களைப் பாதிக்காதவரையில் அந்தச் செய்தியை ஒரு’செய்தியாக’ மட்டும் எடுக்காமல் இந்த இந்தியன் மனப் பூர்வமாகத் துக்கப் படுவது சண்முகலிங்கத்தை நெகிழப் பண்ணுகிறது.

‘ ஏன் உன்னுடைய காலை ஒரு வெள்ளையினத்தான் தொடக்கூடாத என்ற பிடிவாதம் பிடித்தாய்’ டாக்டர் நோயளியைக் கேட்கிறான்.

நோயாளியன் முகத்தில் ஆத்திரம், அத்துடன் சொல்லமுடியாத சோகம் பரவுகிறது.

‘எங்கள் நாட்டை அடிமை கொள்ள இவர்கள் எத்தனை கொடுமைகள் செய்தார்கள் என்ற தெரியும்தானே. போதாக் குறைக்கு, எங்களைப் பாதுகாக்கப் போராடிய எங்களை இன்றும் வில்லன்களாக்கி, ‘கவ்போய் அன்ட் இன்டியன்’ என்ற ஹாலிவுட் படம் எடுத்து எங்களை வாழ்க்கை முழுதும் அரை குரை அடிமைகளாக வைத்திருக்கும் அவசியத்தைத் தங்கள் பரம்பரையினரின் மனதில் விதைக்கிறார்கள். இவர்களை மதித்து. நம்பி எனது காலைக் காட்டச் சொல்கிறாயா?’

ஆத்திரத்துடன் கேட்கிறான் அமெரிக்க சிவப்பு இந்தியன்.

அரைகுறை அடிமைகள்!

அமெரிக்காவில் அமெரிக்க இந்தியர்கள் மட்டுமா அரைகுறை அடிமைகள்?

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலியரால் பாலஸ்தினியர் அரைகுறை அடிமைகளாகத்தானே நடத்தப்படுகிறார்கள்?

லத்தின் அமெரிக்க நாடுகளில் ஆதிக்குடிகள் அரைகுறையடிமைகள்,

இலங்கையின் செல்வத்தைக் கொடுக்கும் இந்தியத் தமிழ்ப் பரம்பரையின் அரைகுறையடிமைகள்.!

தமிழ்ப்பகுதிகளில் சாதி ரீதியாகத் தாழ்த்தப் பட்டு வாழும் தமிழர்கள் அரைகுறை அடிமைகள்!

உலகத்திலேயே பிரமாண்டமான ஜனநாயக நாடு என்ற சொல்லப் படும்;,இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் சுhதியடிப்படையில தீண்டாத மக்களாக-அரைகுறையடிமைகளாக வாழ்கிறார்கள்!

இதுவரை ஏதோ சில உரிமைகளுடன் வாழ்ந்த இலங்கைத் தமிழரும் இனிச் சிங்கள இனவாத அரசிலமைப்பில் அரைகுறையடிமைகள்!

அக்கா சொல்கிறாள்@ ‘இனி நாங்கள் அவர்களோட வாழமுடியாது.. எங்களுக்கென்று ஒரு தனிநாடு தேவை’!

தர்மசங்கடத்துடன் அதைக் கேட்டுக்கொண்டிருந்தான் சண்முகலிங்கம்.

பிரிவினையில் ஒற்றுமையா? நிம்மதியான எதிர்காலமா?

மத்தியதரைக்கடல் நாடுகளைத் துண்டாட்டம் செய்தது பிரித்தானிய வல்லரசு அங்கு என்ன இப்போது நடக்கிறது?

பாகிஸ்தானையும் பிரித்தானியர்கள் இந்தியாவிலிருந்து பிரித்துக் கொடுத்தார்கள். அவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்களா?

முற்போக்குவாதியான இராமநாதனும் தமிழர்களுக்கான சமத்துவத்துக்கு அவர்களுக்கு அவர்களே தங்கள் தனித்துவத்துடன் வாழும் தனிப் பிரதேசம் தேவை என்று சொன்னான்அப்படியான சிந்தனையை முன்னெடுத்ததாற்தானே அழிந்துபோனான், இப்படிப் போராட்டத்தை ‘ஒற்றுமையாக’ நடத்தும் தார்மீகப் பண்பு எங்கள் தமிழ்hகளிடமிருக்கிறதா?

சிங்களவனிடம் ‘அரைகுறையடிமைகளாக’ வாழாமல், எதிரியை அழித்து உரிமை பெறப் போராட ஆரம்பித்து ஒருத்தரை ஒருத்தர் அழித்துத் தமிழ் இனத்தையே பெலவீனப் படுத்தமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?

சாதி,மத, பிராந்திய வெறித்தன்மைக்கப்பால் எப்போது தமிழர்கள் தங்களை ஒரு ஒட்டுமொத்த சக்தியாக நினைப்பார்கள்?

பல கேள்விக் குறிகளுடன் தன் கடைமையைத் தொடர்கிறான் டாக்டர் சண்முகலிங்கம்.

(1983ம் ஆண்டு ஆடிமாதக் கலவரத்தில், இலங்கையில் தமிழர்களுக்கு எதிரா நடந்த உண்மைத் தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது)

(லண்டன் 1983) கனடா,’தாயகம்’ பிரசுரம்.01.10.1993

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *