(1996ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8
அத்தியாயம் ஐந்து
முகாமின் பொழுதுபோக்கு அனுபவங்கள் சில….
ஆரம்பத்தில் முதலிரண்டு கிழமைகளும் எங்களுக்கு வாழ்க்கையே வெறுத்துப்போயிருந்தது. ஜன்னலினூடு தொலைவில் விமானங்கள் சுதந்திரமாக கோடு கிழிப்பதைப்பார்க்கும்போது. தொலைவில் வறிய கறுப்பினத்துக் குழந்தைகள் விளையாடுவதைப் பார்க்கும்போது சுதந்திரமற்ற எங்களது நிலை நெஞ்சினை வருத்தியது. விசர் பிடித்தவர்களைப்போல் நாம் ஐவரும் எங்கள் எங்களது படுக்கைகளில் புரண்டு கிடந்தோம்.
ஊர் நினைவுகள் நெஞ்சில் பரவும். வீட்டு நினைவுகள். கௌசல்யாவின் நினைவுகள் சிறகடிக்கும். கலவர நினைவுகளின் கொடூரம் கண்களில் வந்து நிற்கும். எத்தனையோ கனவுகள், எத்தனையோ திட்டங்கள், பொறுப்புகள் இருந்தன. வெளியில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் இருண்ட பகுதிக்குள் வந்து இப்படி மாட்டுப்படுவோமென்று யார் கண்டது. இவர்களால் ஏன் எங்கள் நிலைமைகளை உணர முடியவில்லை. எல்சல்வடோர். ஆப்கானிஸ்தான் இளைஞர்களின் வாழ்க்கை எவ்விதம் வீணாக்கிக் கொண்டிருக்கின்றது. குற்றச்செயல் புரிந்தவர்களையும், கொடுமை காரணமாக நாடு விட்டு நாடு ஓடி வந்தவர்களையும் ஒன்றாக வைத்திருக்கின்றார்கள். கைதிகளைப்போல் சட்டதிட்டங்கள். காவலர்களின் அதட்டல்கள், உறுக்கல்கள், தத்தமது நாடுகளில் நிகழும் நிகழ்ந்த அனர்த்தங்களிலிருந்து உற்றார் உறவினரைப்பிரிந்து. நொந்த மனத்துடன் வரும் அகதிகளை இவர்கள் மேலும் வருத்தும் போக்… எம்மைப்பொறுத்தவரையில் நாம் இன்னும் கலவரத்தின் கொடூரத்திலிருந்து மீண்டிருக்கவில்லை. அதற்குள் எங்களுக்கு இங்கு ஏற்பட்டுவிட்ட நிகழ்வுகள் மேலும் எம்மை வருத்தின. எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கின்றது. அப்பொழுது நான் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். ‘நான் விரும்பும் நாடு’ என்னும் தலையங்கத்தில் எழுதும்படி வகுப்பில் தமிழாசிரியர் பணித்திருந்தார். அதற்கு நான் தேர்ந்தெடுத்த நாடு அமெரிக்கா. அதற்காக நான் குறிப்பிட்டிருந்த காரணங்கள்: அமெரிக்கா மிகப்பெரிய ஜனநாயக நாடு.ஆபிரகாம் லிங்கனைப்போன்ற ஒரு சாதாரண விறகு வெட்டி கூட ஜனாதிபதியாக வர முடியும் சாத்தியமுள்ள நாடு அமெரிக்கா. அமெரிக்காவில் மனித உரிமைகள் மதிக்கப்படுகின்றன. அவர்களது சுதந்திர தேவி சிலையே இதற்குச்சான்று. இவ்விதமாக எழுதியிருந்தேன். ஆ னால் இன்று யாராவது இப்படியொரு கட்டுரையினை எழுதச்சொன்னால் நிச்சயம் அமெரிக்காவைத் தேர்ந்தெடுக்க மாட்டேன். அகதிகளாக ஓடி வருபவர்களைப் பெரிதாக அரவணைக்க வேண்டாம். ஆனால் அவர்களை மேலும் மேலும் மனோரீதியாக வருத்தாமலிருக்கலாமல்லவா.
இதே சமயம் சட்ட விரோதமாக நாட்டினுள் நுழைபவர்கள் விடயத்தில் அமெரிக்கா ஒரு வித்தியாசமான. விநோதமான சட்ட மொன்றினையும் இயற்றி வைத்திருக்கின்றது. நீதியையும். நியாயத்தையும் பாதுகாக்கத்தான் சட்டங்கள். ஆனால் அந்தச்சட்டம் எந்த நியாயத்தைப் போதிக்கின்றதோ தெரியவில்லை. ஆனால் அந்தச்சட்டத்தினை நாங்கள் உணர்ந்ததே தற்செயலாகத்தான். அதுவும் மூன்று மாதங்கள் கழிந்துவிட்ட பிறகுதான். அது மட்டும் தெரியாமல் போயிருந்தால் சில வேளை இன்னும் நாம் அமெரிக்கத் தடுப்பு முகாமில்தான் இருந்திருப்போமோ தெரியவில்லை.
இன்னுமொரு வழியில் தடுப்பு முகாம் வாழ்க்கை இப்பிரபஞ்சத்தின் சார்புத்தன்மையினை எங்களுக்கு வெளிக்காட்ட உதவியதென்றுகூடக் கூறலாம். வெளியிலிருந்தபோது விரைவாக ஓடிக்கொண்டிருந்த காலம் தடுப்பு முகாமினுலுள்ளேய ஓடவே மாட்டேனென்று சண்டித்தனம் செய்தது. எதிர்காலம் நிச்சயமற்றிருந்தது. முடிவெதுவும் தெரியாத திரிசங்கு நிலை. இருந்தாற்போலிருந்து விரக்தி கலந்த உணர்வுகள் வெடிக்கத்தொடங்கி விடும். சோர்வு தட்டிப்படுக்கைகளில் படுத்திருப்போம். தொடர்ந்தும் இப்படியே இருப்பது எங்களுக்கு எந்தவிதப்பலனையும் தரப்போவதில்லை என்பது மட்டும் தெளிவாகப்புரிந்தது.
ஒரு நாளிரவு ஐவரும் படுப்பதற்கு முன்னால் இராஜசுந்தரத் தாரின் கட்டிலில் ஒன்று கூடினோம். இதற்கிடையில் தடுப்பு முகாம் வாழ்க்கை எங்கள் பழக்க வழக்கங்களில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது. சிவகுமாரின் வாயிலிருந்து அடிக்கடி தகாத வார்த்தைகள் வெளிவரத் தொடங்கியிருந்தன. ரவிச்சந்திரன் இரவில் படுக்கையில் சாய்ந்து . ‘லைற்’ அணைந்ததும் ‘ஊ’ என்று ஊளையிடுவது போல் சப்தமிடுவான். இவனுக்குப் பதிலை டானியலும் அவ்விதமே அனுப்புவான். இவர்களைத்தொடர்ந்து ஏனையவர்களும் அவ்விதமே அந்நிகழ்வில் கலந்து கொள்வார்கள். அச்சமயம் சிறைக்காவலர்கள் வந்து ஒழுங்கை நிலை நாட்டிச்செல்வார்கள்.
இதே சமயம் ரவிச்சந்திரனுக்கு ஆங்கில அறிவு மிகவும் மட்டாகவே இருந்தது. இவற்றையெல்லாம் கணக்கிலெடுத்து, அன்றைய கலந்துரையாடலில் எங்களது நிலைமையை அலசி ஆராய்ந்தோம். அன்றைய கலந்துரையாடலில் பொழுதைப் பயனுள்ளவாறு எவ்விதம் கழிப்பது என்பது பற்றியும், எமது எதிர்கால நடவடிக்கைகள் என்ன என்பது பற்றியும் விவாதித்ததில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன:
அமெரிக்காவில் அகதிநிலைக்கோரி விண்ணப்பித்திருந்ததாலும், ஏற்கனவே பொஸ்டன் தமிழ் அமைப்புகள் எம் விடயத்தில் கை போட்டு விட்டதாலும். எது செய்தாலும் அவர்கள் மூலமாகவே அவர்களைக்கலந்து ஆலோசிக்க வேண்டுமெனவும், கனடா செல்வதற்கு ஏதாவது வழிகள் இருக்கும் பட்சத்தில் அது பற்றி ஆராயும் பொறுப்பை அவர்களிடமே விட்டு விடுவதென்றும் முடிவு செய்தோம். அதே சமயம் தகாத வார்த்தைகளைப் பாவிப்பதை நிறுத்துவதென்றும், ரவிச்சந்திரனுக்கு இராஜசுந்தரத்தால் ஆங்கிலம் படிப்பிப்பதென்றும் மேலதிக முடிவுகளும் எடுக்கப்பட்டன.
இதே சமயம் எங்களுக்கு எங்களைப்பற்றியும், எங்களது கலந்துரையாடல் பற்றியும் எடுத்த முடிவுகள் தொடர்பாகச் சிரிப்பாக வுமிருந்தது. அன்றைய எமது கலந்துரையாடலினை அடுத்து, அடுத்த சில நாள்கள் எம் நெஞ்சினில் சிறிது நம்பிக்கை துளிர் விட்டிருந்தது. அவ்விதம் கலந்துரையாடியதன் மூலமெங்கள் நெஞ்சின் பாரமும் ஓரளவு குறைந்திருந்தது.
என்னைப்பொறுத்தவரையில் தொடர்ந்தும் தேவையற்ற சிந்தனைகள் நெஞ்சினைத்தாக்க விடுவதில்லையென்று உறுதி செய்து கொண்டேன். என் பொழுதினைக் கூடுதலாக தொலைக்காட்சி பார்ப்பதிலும், டேபிள் டென்னிஸ் டானியல், ரிச்சர்ட் ஆகியோருடன் விளையாடுவதிலும், சிவகுமார். ரவிச்சந்திரனுடன் சதுரங்கம் விளையாடுவதிலும் கழிக்கத்தொடங்கினேன்.
சதுரங்க விளையாட்டினைபொறுத்தவரையில் ஸ்பானிஷ் சிறைக்காவலருக்குத்தான் நன்றி கூற வேண்டும். சிறைக்காவலர்கள் சிலரும் சில சமயங்களில் தங்களுக்கிடையில் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அந்த ஸ்பானிஷ் சிறைக்காவலரிடம் கேட்டபோது, எந்த வித முறைப்புமில்லாமல் ஒரு சதுரங்க மட்டையி னையும், காய்களையும் கொண்டு வந்து தந்தான்.
இது தவிர சமயம் கிடைக்கும்போதெல்லாம் உடற்பயிற்சியும் செய்யத்தொடங்கினேன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பொறுத்த வரையில் காலையில் ‘கார்ட்டூன்’களையும், செய்திகளையும் பார்ப்பதில் விருப்பமாயிருக்கும். தடுப்பு முகாமில் இருந்தவர்களில் பெரும் பான்மையானவர்கள் ‘கார்ட்டூன் ‘களைப்பார்ப்பதில் விருப்பம் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. ‘பிங் பாந்தர்’. ‘டொம் அன்ட் ஜெர்ரி’ முதலான கார்ட்டூன்களையே பெரும்பாலானவர்கள் பார்த்து இரசித்தார்கள். இதே சமயம் எமது தடுப்பு முகாமினுள்ளிருந்த ‘வென்டிங் மெஷின்’களிலிருந்தும் பானங்கள், உருளைக்கிழங்குப் பொரியல் போன்றவற்றைப்பெற முடிந்தது. அதற்காக எங்கள் தடுப்பு முகாம் பொறுப்பதிகாரியிடம் ஆரம்பத்தில் கொடுத்து வைத்திருந்த எங்கள் பணத்திலிருந்து ஐந்து டொலர்களோ. பத்து டொலர்களோ சில்லறையாக மாற்றித்தரும்படி நேரத்துடனேயே கூறி வைத்தால். பெரும்பாலும் ஓரிரு வாரங்களில் மாற்றித்தருவார்கள்.
இதற்கிடையில் டானியல், ரிச்சர்ட் மற்றும் அப்துல்லா ஆகியோருடன் நெருக்கமாகப் பழகத் தொடங்கியிருந்தேன். ரிச்சர்ட் வித்தியாசமான பிறவிகளிலொருவன். எந்நேரமும் பைபிளும் கையுமாகத்தானிருப்பான். இவனுக்கு ஆத்திரம் வந்தே நான் பார்த்ததில்லை. இவனது வாழ்க்கை மிகவும் எளிமையானது. சிக்க லில்லாதது. எல்லாவற்றையும் கடவுள் மேலேயே போட்டுவிடுவான். மற்றவர்கள் எல்லாரும் அமெரிக்கச்சட்ட, திட்டங்களை விளாசு விளாசென்று விளாசித்தள்ளும்போது இவன் ஒரு நாளாவது அமெரிக்க அரசு மீது ஆத்திரப்பட்டதே கிடையாது. எனக்கே அது வியப்பாக விருந்தது. ‘ரிச்சர்ட், உனக்கு உண்மையிலேயே இவர்கள் மேல் ஆத்திரம் வரவில்லையா?” என்று கேட்டால் அதற்கு அவன் ‘இல்லை. இவர்கள் எனக்குச் சாப்பாடு போடுகிறார்கள். தங்க உதவி செய்கின்றார்கள். அதற்காக இவர்களுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். கடவுளையும் வேண்டுகின்றேன்’ என்பான். சில வேளைகளில் இவனது கடவுட் பக்தி அதி தீவிரமான. மூடத்தனம் நிறைந்ததோ என்று கூட நான் நினைத்ததுண்டு. இவன் கடவுளைத்தவிர, ஏன் நவீன விஞ்ஞானத்தைக்கூட நம்ப மறுப்பவன். பூமி உருண்டை வடிவமானதென்று சொல்வதை இவன் நம்பவே மாட்டான். ஒரு விதத்தில் பார்க்கப்போனால் இவன் மேல் எனக்குப்பொறாமை கூட ஏற்பட்டது. இவனைப்போல் மட்டும் இருந்து விட்டால் வாழ்க்கையில் பிரச்சினையென்று ஒன்றுமில்லாதல்லவா போய்விடும்… இல்லையா?
இவனுக்கு முற்றிலும் எதிரானவன் டானியல். இவனது கடவுள் சேகுவேரா. கொரில்லாப்போராட்டம் பற்றிய நூலொன்றினைச் சமயம் கிடைக்கும்போதெல்லாம் படித்தபடியிருப்பான். இவனது குடும்பம் முழுவதுமே சல்வடோர் அரச படைகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப்பலியாகியிருந்தது. இவனது அண்ணன் ஒரு கொரில்லா அனுதாபி. அரச படைகள் இவனது அண்ணனைச் சுட்டுக்கொண்டு விட்டிருந்தன. இந்நிலையில் இயல்பாகவே டானியல் சிறிது ஆவேசத்துடனிருந்தான்.
இவ்விதமான எங்கள் வாழ்க்கையில் ஒருவித மகிழ்ச்சியினை ஏற்படுத்த விரும்பிய சிறைக்காவல் அதிகாரிகள் வாரத்திலொருநாள். அதுவும் அரை மணி நேரம். நாம் விரும்பினால் நாமிருந்த தடுப்பு முகாம் கட்டடத்திற்குச்சொந்தமான. சிறிய முள்ளுக்கம்பிப்பாதுகாப்புடன் கூடிய விளையாட்டு மைதானத்தில் விளையாட அனுமதிப்பதிப்பதாகக் கூறி அழைத்துச்செல்வார்கள். வெளியுலகைக்காணும் மகிழ்ச்சியுடன் நாமும் செல்வோம். எங்களை அம்மைதானத்துக்குக்கூட்டிச்செல்வதே ரு வேடிக்கையான அனுபவம்தான். இரண்டிரண்டு பேராக விலங்கிடுவார்கள். முன்னுக்கும், பின்னுக்கும் பலத்த பாதுகாப்புடன் எம்மைக் கூட்டிச்செல்வார்கள். மைதானத்துக்குச் சென்றதும் விலங்குகளை நீக்கி விளையாட விடுவார்கள். அதற்காகப்பந் தொன்றினைத்தருவார்கள். நாம் ஒருவருக்கொருவர் எறிந்து பிடித்தோ அல்லது காலால் அடித்தோ விளையாடிக்கொண்டிருப்போம் அச்சமயங்களில் இடையில் குறுக்கிட்டு, விளையாடியது போதுமென்று மறுபடியும் விலங்கிட்டு ஐந்தாவது மாடியிலிருந்த தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்வார்கள். தனித்துவமான முறையில் மனித உரிமைகளைப் பேணும் அவர்களது நடவடிக்கைகள் ஒரு சமயம் எங்களுக்குச் சிரிப்பையும். வெறுப்பையும் ஒருங்கே தந்தன.
மிகப்பெரிய பயங்கரவாதிகளாக எம்மை உருவகித்து. விலங்கிட்டு இவர்கள் அழைத்து வருவது உண்மையிலேயே எங்கள் மேல் கொண்ட பயத்தினால்தானா என்பதில் எங்களுக்கு ஒரு சந்தேகமிருந்தது. எங்கள் சந்தேகத்தை அப்துல்லாவின் பதில் ஒருவிதத்தில் தீர்த்து வைத்தது எனலாம். ‘உண்மையில் இவ்விதம் விலங்கிடுவது. சிறையில் வைத்திருப்பது எல்லாம் எங்களை மனோரீதியாகப் பலவீனப்படுத்தத்தான். இதைத்தாங்காமல் சிலர் தாமாகவே முன்வந்து தம்மை நாடு கடத்தும்படி கேட்டு விடுவார்கள். இவ்விதம் என் நாட்டைச்சேர்ந்த முகமட் முன்னர் சென்றிருந்தான். ஆனால் இன்று அவனது நிலை என்ன என்பது பற்றி யாருக்குமே தெரியாது?’
அதே சமயம் ஆப்கானிஸ்தானைப்பொறுத்தவரையில் அமெரிக்கா சோவியத்துச் சார்பு அரசாங்கத்துக்கு எதிராக முஜாகிதீன் கொரில்லா அமைப்புக்கு உதவி செய்து வருகின்றது. ஆனால் அந்நாட்டு நிலைமைகளினால் ஓடிவரும் அப்துல்லா போன்றவர்கள் விடயத்தில் கண்டும் காணாதது போலிருக்கின்றது. ஒரு வேளை அகதிகளென்ற பெயரில் ஆப்கான் அரசின் உளவாளிகள் வருகிறார் களென்ற சந்தேகமோ?
அத்தியாயம் ஆறு
தமிழகத்துப் பாதிரியார் ஏபிராகாமின் வருகை!
வ்வொரு நாளையும் ஒரு புது நாளாகக் கருதி, எங்கள் தடுப்புமுகாம் வாழ்வை மறக்க எண்ணி, ஏனையவற்றில் கவனம் செலுத்த முயன்றுகொண்டிருந்தபோதும் முற்றாக எங்களால் அவ்விதம் செய்ய முடியவில்லை. எத்தனை நேரமென்றுதான் தொலைக்காட்சி பார்ப்பது? ‘டேபிள் டென்னிஷ்’ விளையாடுவது? தேகப்பயிற்சி செய்வது? சுதந்திரமற்ற தடுப்பு முகாம் வாழ்வின் கனம் இடைக்கிடை எம்மை மேலும் மேலும் அமுக்கத்தொடங்கிவிடும். இத்தகைய சமயங்களில் படுக்கைகளில் வந்து புரண்டு கிடப்போம். இதே சமயம் வெளியில் இல்லாததைவிட அதிக அளவில் உள்ளே எங்களுக்கு ஒரு வசதி இருக்கத்தான் செய்தது. உலகின் எந்த மூலை முடுக்கில் உள்ளவர்களுடனும் தொடர்பு கொள்ள எங்களால் முடிந்தது. சட்டவிரோதமாகத்தான். பெரிய பெரிய நிறுவனங்கள் பலவற்றின் தொலைபேசிக்குரிய கடனட்டை இலக்கங்கள் ஏதோ ஒரு வழியில் முகாமில் உள்ளவர்களுக்குக்கிடைத்தவண்ணமிருந்தன. எப்படிக்கிடைத்ததோ அவர்களுக்கே வெளிச்சம். யாரோ ஒரு மேற்கு இந்தியன் ஒருவனின் பெண் நண்பர் தொலைபேசி நிறுவனமொன்றில் ‘ஆபரேட்டரா’க வேலை செய்வதாகவும். அவள் மூலம் அவன் பெற்றுக்கொள்வதாகவும் கதை அடிபட்டது. அத்தொலைபேசி இலக்கங்களை அவன் அங்குள் ளவர்களுக்கு குறைந்த அளவு பணத்துக்கு விற்றுக்கொண்டிருந்தான். சிலருக்கு இலவசமாகவும் கொடுத்தான். இவ்விதம் கிடைக்கும் இலக்கங்களைக்கொண்டு உலகின் மூலை . முடுக்குகளையெல்லாம் தொடர்புகொள்ள முடிந்ததால், தடுப்பு முகாம் வாசிகள் தம் நாடுகளி லுள்ள தம் உறவினர்கள், நண்பர்களுடன் நாள் முழுவதும் உரையாடிக் கொண்டிருப்பார்கள். இவ்விதமாக யாழ்ப்பாணத்திலுள்ளவர்களுடன் கூடத்தொலைபேசி மூலம் கதைக்கக் கூடியதாகவிருந்தது. ரவிச் சந்திரனின் வீட்டில் தொலைபேசி வசதி இருந்தது. ஓரிரு சமயங்களில் காலை ஏழு மணிக்குப் பொங்கும் பூம்புனலைத் தொலைபேசியினூ டு கேட்டுக்கூட மகிழ்ந்ததுண்டு. இச்செயலில் சட்டவிரோதத்தன்மை எம் தடுப்பு முகாம் வாழ்வின் உளவியல் வேதனையின் முன்னால் உருண்டோடிவிட்டது.
இவ்விதமாகக் கிடைக்கும் தொலைபேசி இலக்கங்கள் விரைவிலேயே செயலற்றுப் போய்விடும். அவற்றுக் குரிய நிறுவனத்தினர் தம் தொலைபேசி இலக்கங்களைப்பாவித்துப் பலர் கதைப்பதை அறிந்ததும், அவ்விலக்கங்களைத் தடை செய்து விடுவார்கள். இவ்விடத்தில் புதிய இலக்கங்கள் கிடைத்து விடும். பழையன கழிதலும், புதியன புகுதலுமாக எங்களது சர்வதேசத் தொலைபேசி உரையாடல்களும் நீண்டுகொண்டே சென்றன.
இதே சமயம் ஆரம்பத்தில் எம் விடயத்தில் அக்கறை செலுத்திய பொஸ்டன் தமிழ் அமைப்பின் அக்கறை சற்றே குறைந்தது. அவர்களில் சிலர் நியூயார்க் வந்து போயிருந்தார்கள். ஆனால் எங்களை எட்டிப்பார்க்கும் அளவுக்கு அவர்களுக்கு நேரம் கிடைக்க வில்லை. அதே சமயம் ஓரிரு நல்ல உள்ளங்களும் இல்லாமலில்லை. ஒருநாள் எங்களைச் சந்திக்க யாரோ பார்வையாளர்கள் வந்திருப்பதாக அறிவித்தார்கள். எங்களுக்கு வியப்பாகவிருந்தது. எங்களைத்தேடி விருந்தாளிகளா? யாராகவிருக்குமென்று மண்டையைப்போட்டு உடைத்துக்கொண்டோம். கட்டையான உருவம். கனிவான குரல் வளம் அவற்றுக்குச் சொந்தக்காரரான. தமிழகத்தைச்சேர்ந்த ஆனால் தற்போது நியூயார்க்கிலுள்ள கிறிஸ்த்தவ ஆலயமொன்றில் பணி புரியும் பாதிரியார் ஏபிரகாம்தான் எங்களை அவ்விதம் எங்களைச் சந்திக்க வந்திருந்தார். எங்களுக்கு வாசிப்பதற்கென்று பத்திரிகைகள் சிலவற்றையும் கொண்டு வந்திருந்தார்.
தடுப்பு முகாமில் விருந்தினர்களைப்பார்ப்பதற்கு ஒரே சமயத்தில் இருவரை அனுமதிப்பார்கள். விருந்தினரையும், எம்மையும் கம்பி வலை பிரித்திருந்தது. சந்திப்பதற்கு நானும் . இராஜசுந்தரத்தாரும் சென்றிருந்தோம். சுதந்திரமற்ற சிறை அனுபவத்தால் விரக்தியுற்றிருந்த நிலையில். பாதிரியார் ஏபிரகாமின் சந்திப்பு ஆறுதலாக, இதமாக விருந்தது.
‘ஏதாவது என்னால் முடியக்கூடிய உதவிகள் ஏதுமிருந்தால் கூறுங்கள்’, பாதிரியார்தான் கேட்டார்.
எங்களைப்பொறுத்தவரையில் முதலாவது பிரச்சினை தடுப்பு முகாமை விட்டு எவ்விதம் வெளியேறுவது என்பதுதான். ஏற்கனவே தடுப்பு முகாம் வாழ்வனுபவத்தால் கலங்கிப்போயிருந்த இராஜசுந்தரம் கூறினார்:
ஃபாதர் என்ற மனுசி, பிள்ளைகளை ஊரிலை விட்டு வந்திருக்கிறன். இவங்கள் அறுவான்கள் இப்பிடியே உள்ளுக்கையே வைத்திருப்பான்கள் போலைக்கிடக்குது. வெளியிலை போறதுக்கு ஏதாவது வழிபற்றி விசாரித்தீங்களென்றால் நல்லது.
‘ஒன்றுக்குமே கவலைப்படாதீங்க. எனக்குத்தெரிந்த கிறிஸ்த்த அமைப்பொன்றில் வேலை செய்கிற லாயர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் விசாரித்துப்பார்க்கிறேன். உங்களுக்கும் என்ன தேவை யென்றாலும் தொலைபேசியில் அழையுங்கள். முடிந்தால் உதவி செய்வேன்’
இவ்விதம் பாதிரியார் ஏபிரகாம் கூறினார். உண்மையில் பாதிரியாருடனான சந்திப்பு கடலில் அகப்பட்டுத்தத்தளித்துக் கொண்டிருப்பனுக்குத் துரும்பொன்று அகப்பட்டதைப்போன்று எங்களுக்குப் புதிய நம்பிக்கையினைத்துளிர்க்க வைத்தது. பாதிரியார் ஏபிரகாமுடனான சந்திப்பை முடித்துக்கொண்டு மீண்டும் எம் படுக்கைகளுக்குத்திரும்பியபொழுது. சிவகுமார். அருள்ராசா ஆகியோர் எம்மைச் சூழ்ந்து கொண்டார்கள். பாதிரியாருடனான சந்திப்பு பற்றிய விபரங்கள் முழுவதையும். ஒரு சொல் விடாது. ஞாபகப்படுத்துக் கூறும்படி கேட்டுத்துளைத்து விட்டார்கள்.
‘இளங்கோ. பார்த்தியா! யாரோ முன்பின் தெரியாத ஃபாதர். அதுவும் எங்கடை நாட்டைச் சேராத, இந்தியாவைச்சேர்ந்த ஃபாதர். பேப்பரிலை எங்களைப்பற்றிய விபரங்களைப்பார்த்து விட்டு ஆறுதல் கூற வந்திருக்கின்றார். ஆனால், எங்கடை பிரச்சினையிலை தலையைப்போட்ட எங்கடை ஆட்கள் நாங்கள் எப்படியிருக்கிறமென்று கூடப்போன் அடித்துப்பார்க்கவில்லை.
சிவகுமாரின் குரலில் சலிப்புத்தட்டியது.
‘தமிழ் அமைப்பைச்சேர்ந்தவர்களெல்லாரும் இந்த நாட்டிலை எஸ்டாபிலிஸ்ட் பண்ணிய சிட்டிசன்காரன்கள். நாங்களோ இந்த அரசுக்கு வேண்டாத விருந்தாளிகள். நமக்கேன் வம்பு என்று ஒதுங்கி விட்டார்கள் போலை. அருள்ராசா இவ்விதம் கூறியதும் ஒருவிதத்தில் சரியாகத்தானிருந்தது. இந்தச் சூழலில்தான் பாதிரியார் ஏபிரகாமின் வருகையின் முக்கியத்துவம் எங்களுக்கு விளங்கியது. பாதிரியார் ஏபிரகாமைப் பொறுத்தவரையில் எங்கள் விடயத்தில் பெரிதாகக் கவனமெடுத்திருக்கத்தேவையில்லை. அவ்விதம் கவனமெடுத்து. எம்மை வந்து சந்தித்து. ஒன்றிரண்டு ஆறுதல் வார்த்தைகள் கூறிச் சென்றார்களே! அவ்விதம் அவர்கள் எம்மை வந்துச் சந்தித்துச்சென்றதே எவ்வளவோ மேல் என்று பட்டது.
இதன் பிறகு எங்கள் கவனம் பாதிரியார் ஏபிரகாம் கொண்டு வந்திருந்த பத்திரிகைகளின் பக்கம் திரும்பியது. எங்களைப்பற்றிய செய்திகளை வெளியிட்டிருந்த பல்வேறு நாடுகளைச்சேர்ந்த பத்திரிகைகள் அவை. பொஸ்டன் குளோப். சிலோன் டெய்லி நியூஸ்.
ஏசியன் மொனிட்டர். மற்றும் மத்திய கிழக்கைச்சேர்ந்த ஹல்ப் டைம்ஸ் ஆகிய பத்திரிகைகளே அவை. இதில் ஹல்ப் டைம்ஸ்ஸில் வந்திருந்த செய்தி எமக்குச்சிரிப்பினைத்தந்தது. இரண்டு வாரங்களில் எமக்குத்தீர்வு கிடைக்குமென்னும் கருத்துப்பட, அமெரிக்க அரசதிணைக்கள அதிகாரியொருவர் கூறியிருந்தது பிரசுரமாகியிருந்தது. அதில் பொஸ்டன் குடிவரவு அதிகாரி ஒருவர். திமோதி லீலன் என்பது அவரது பெயர். தாம் மத்திய அரசிடம் எங்களது வழக்கைத்துரிதப்படுத்துமாறு கேட்டுள்ளதாகவும், இரண்டு வாரங்களில் முடிவு கிட்டலாம் எனக்கூறியிருப்பதும் கூட அப் பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது. டெய்லி நியூசில் பொஸ்டனிலிருந்து. நியூயார்க்குக்கு நாம் மாற்றப்பட்ட விடயமும். பொஸ்டன் தமிழ் அமைப்பைச்சேர்ந்தவர்கள் எங்களுக்காகச் சட்டத்தரணியொருவரை அமர்த்தியுள்ள விடயமும் பிரசுரமாகியிருந்தன. இவ்விதம் எங்கள் விடயத்தில் பெரிதாகத்தலையிட்ட பொஸ்டன் தமிழ் அமைப்பினர் பின்னர் ஏன் பின் வாங்கினார்கள் என்பதற்கான காரணம் மட்டும் சரியாகத் தெரியவில்லை.
பாதிரியார் ஏபிரகாம் எங்களைச்சந்தித்துப்போனபின் இரண்டு நாட்களின் பின் வேறிரண்டு எதிர்பாராத விருந்தாளிகள் எங்களைச் சந்திக்க வந்திருந்தனர். ஸ்பார்ட்டசிஸ்ட் அமைப்பினைச்சேர்ந்த ஒலிவர், இங்கிரிட் ஆகிய இருவருமே அவர்கள். ‘ஸ்பாட்டசிஸ்ட்’ கட்சியினரைப்பொறுத்த அளவில் அவர்கள் ட்ரொஸ்கியைப் பின்பற்றும் மார்க்சியவாதிகள். இவர்கள் பத்திரிகையில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை பற்றிய கட்டுரை வெளியாகியிருந்தது. அதில் ஜே.ஆரின் அமெரிக்க சார்பு அரசுக்கெதிராகத் தமிழ் சிங்களப்பாட்டாளிகள் ஒன்று சேர்ந்து போராட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டிருந்தது. எங்களை ஏதோ புரட்சிகரப் போராளிகள் போல் உருவகித்துக்கொண்டு. எங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு சிங்கள, தமிழ் பாட்டாளிகளின் ஒன்றிணைந்த போராட்டத்தில்தான் தங்கியுள்ளதென்பதை அடிக்கடி எடுத்துக்கூறினார்கள். அமெரிக்க அரசு எங்களை நடத்தும் விதம் பற்றிக்கவலைப்பட்டுக்கொண்டார்கள்.
இவர்களைப்பற்றி இராஜசுந்தரத்தாருக்கும். சிவகுமாருக்கும் நல்ல அபிப்பிராயமில்லை. ‘இவங்களெல்லாரும் சி.ஐ.ஏ.காரங்கள். எங்களை நாடி பிடித்துப்பார்க்க வாறாங்கள். என்று இராஜசுந்தரத்தார் கூறியபொழுது, அவரது குரலில் ஒருவித எச்சரிக்கை உணர்வு தென்பட்டது.
– தொடரும்…
– அமெரிக்கா (நாவல்), முதற் பதிப்பு: 1996, மகுடம் பதிப்பக வெளியீடு, இலங்கை.