கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 16, 2019
பார்வையிட்டோர்: 97,006 
 
 

(1935ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

முத்துத் தீவு என்று ஒரு சிறு கிராமம் இருந்தது. ஆனால் அந்த ஊரில் முத்துக்கள் சேகரிக்கப்படவுமில்லை; அது ஒரு தீவுமில்லை. அந்த ஊர் வெகு தூரத்தில் தன்னந்தனியாக இருந்தது; அதை அடைவது சிரமம், அதனால் அந்தப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். பக்கத்து நகரம் கூடப் பல மைல் தூரத்தில் இருந்தது. இரண்டு மைல் தள்ளி கூடம், ஒரு இரவு படகுப் பயணம் போனால், பாலம், குதிரை வண்டியில் ஒரு மணி நேரம் சவாரி செய்து பிறகு பஸ்ஸில் மூன்று மணி நேரம் பயணம் செய்தால் கோர்த் திப்பாடு, ரயில் பயணம் என்றால், நகரத்துக்கும் அந்த ஊருக்கும் நானுாறு மைல் தூரம் இருந்தது.

முத்துத் தீவில் அப்பு என்றொரு சிறுவன் வசித்தான், இந்தச் சின்ன் ஊரில் வசித்தபோதிலும், அப்பு ஒரு நகரவாசியின் போக்கையும் ஊதாரிப் பழக்கங்களையும் கொண்டிருந்தான். அவனுக்குப் பணத்தின் அருமை தெரியாது; வீண் செலவுகள் செய்தான். காலையில் அவன் ஊரின் டிக் கடைக்குப் போவான்; கண்டதை எல்லாம் தின்பான். தெருவில் போகிற எந்த வியாபாரியையும் கூப்பிடுவான்; அவன் என்ன விற்றாலும் அதை எல்லாம் அப்பு வாங்குவான். தன் வயிறு புடைக்கிற மட்டும் அவன் அதனுள் தீனிவகைகளைத் திணிப்பான். மாலையில் சந்தை மைதானத் துக்குப் போவான். மீண்டும் உள்ளே தள்ளுவான்.

அப்பு சாப்பாட்டு ராமன் மட்டுமல்ல, சரியான அலங்காரப்பிரியனும் கூட விளையாடும்போது தினம் அவன் தன் உடைகளை கவனக் குறைவால் கிழித்துக்கொள்வான். பிறகு புதிய உடைகளுக்காக அடம் பிடிப்பான். மேலும், சதா அவன் தன் புத்தகங்களையும் பென்சில்களையும் தொலைத்தான்; புதியன கேட்டான். தினசரி பணத்துக்காகத் தன் அம்மாவை தொல்லைப்படுத்தினான். தன் கைப்பணம் தீர்ந்துவிட்டால் மேற்கொண்டு அம்மாவிடமிருந்து பிடுங்கலாம் என அவன் அறிவான்

அவன் பெற்றோருக்கு ஒரே பிள்ளை. அவர்கள் அவனுக்கு அதிகம் செல்லம் கொடுத்தார்கள். ஆயினும் அவன் அலட்சியமாகப் பணத்தை வீணாக்குவதைக் கண்டதும் அவன் பெற்றோர்கள் கவலைப்படலானார்கள். அவன் அப்பா அவனைக் கண்டித்தார். ஆனால் அப்பு அதைச் சட்டை செய்யவில்லை. அவன் சிரத்தையாய்க் கவனிப்பது போல் நடித்தான். எனினும், தந்தையின் வார்த்தைகள் ஒரு காதில் நுழைந்து மறு காது வழியாக வெளியேறின.

அப்பு புகைபிடிக்கத் தொடங்கினான். அவன் தந்தை அதை அறிந்து ஆத்திரம் கொண்டு, அவனைத் திட்டினார். அப்பு வெகுவாக அழுதான். அதனால் அவன் அம்மா குழம்பினாள். அவனை அணைத்துக்கொண்டு ஆறுதல் கூறினாள். பிறகு அவனுக்குச் சிறிது பணம் தந்தாள். அவனை விளையாட அனுப்பினாள். அப்புவின் அப்பா மிகவும் வருத்தப்பட்டார். தன் மகனின் கெட்ட பழக்கங்களுக்கும் ஊதாரித்தன நடவடிக்கைகளுக்கும் அவர் தன்னையே குறை கூறிக்கொண்டார். நிலைமை மிக முற்றி விட்டதோ? மிகுந்த யோசனைக்குப் பிறகு, அப்புவின் அப்பா தன் மகனின் ஆசிரியரது யோசனையையும் உதவியையும் நாடத் தீர்மானித்தார். ஆசிரியர் தம்மால் இயன்றதைச் செய்வதாக வாக்களித்தார்.

ஒரு நாள், ஆசிரியர் அப்புவைக் கூப்பிட்டனுப்பினார். அவனைப் பிரியமாய்த் தட்டிக் கொடுத்து, பிற்பகலில் அவனைத் தன் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அப்பு தடுமாறித் தவித்தான். ஆசிரியர் ஏன் தன்னைப் பார்க்க விரும்பினார்; தன் படிப்பு சம்பந்தமாக இருக்குமோ? பெருக்கல் வாய்ப்பாட்டில் அவர் தன்னைக் கேள்விகள் கேட்பாரோ?

ஆசிரியர் வீட்டு வாசலில் அப்பு தயங்கி நின்றான். ஆசிரியர் அவனை உள்ளே கூப்பிட்டார், அன்பாகப் பேசினார். அவனை உட்காரச் செர்ன்னார். அவர் நடந்து கொண்ட விதம் அப்புவின் பயத்தை நீக்கியது. அவன் நெஞ்சுத்துடிப்பு சீராகியது. அவன் நிம்மதிபெற்றான்.

“அப்பு, அடுத்த மாதம் இடைத்தேர்வு இருக்கிறதே. நீ நன்றாகப் படித்திருக்கிறாயா?” என்று ஆசிரியர் மென்மையாக விசாரித்தார். அப்பு தலையசைத்தான். ஆசிரியரின் நோக்கம் என்னவாக இருக்கும் என அவன் யோசித்தான். ஆனால் ஆசிரியர் சும்மா பத்திரிகையை எடுத்து அதைப் படிக்கலானார்.
அப்பு சோம்பலுடன் சுற்றி நோக்கினான். பத்திரிகையின் கடைசிப் பக்கத்தில் இருந்த ஒரு படத்தின் மீது அவன் பார்வை படிந்தது. விண்வெளிக் கப்பல் மேலே கிளம்புவதைக் காட்டுகிற நிழற்படம் அது. அப்பு படத்தையே கூர்ந்து கவனித்தான். ராக்கெட்டில் அவன் இருப்பது போலவும், அவன் விண்வெளியில் செலுத்தப்படுவது போலவும் அவனுக்குத் தோன்றியது. அவன் பரபரத்தான். அப்புவின் மூளையில் கேள்விகள் துறுதுறுத்தன. ஆனால் அவற்றை வெளிப்படுத்த அவன் தயங்கினான்.

அப்போது ஆசிரியர் தலையை உயர்த்தினார். அப்புவைப் பார்த்தார். “நீ என்னிடம் ஏதாவது கேட்க விரும்பினாயா?”

“ஸா..ர்..ர்.. நாம் நிஜமாகவே சந்திரனுக்குப் போக முடியுமா?” என்று அப்பு கேட்டான். அவன் கண்கள் மின்னின.

“ஒ, நீ பத்திரிகைப் படத்தை பார்த்தாயா? அது தான் ராக்கெட். அது மனிதனை சந்திரனுக்கு எடுத்துச் செல்லும். அமெரிக்கர்கள் அதைச் செய்திருக்கிறார்கள்.”

அப்புவின் மனசில் அநேக எண்ணங்கள் பளிச்சிட்டன. அவன் உள்ளத்தில் கனவுகள் நிறைந்தன.

“ராக்கெட்டில் ஏறிப்போக நாம் அமெரிக்காவுக்குத் தான் போகணுமா?” என்று அவன் கேட்டான்.

சந்தேகமில்லாமல்

“அமெரிக்கா எவ்வளவு தூரம் இருக்கும், ஸார்?”

“சுமார் பத்தாயிரம் மைல்கள். விமானத்தில் இரண்டு நாட்களிலும், கப்பலில் மூன்று வாரங்களிலும் சேரலாம்.”

“நாம் எங்கே விமானம் ஏற வேண்டும் முத்துத் தீவிலா”

ஆசிரியர் முறுவலித்தார். “இல்லை. சர்வதேச விமான நிலையங்கள் சென்னை, பம்பாய் போன்ற பெரிய நகரங்களில் தான் இருக்கின்றன. விமானம் மூலம் பிரயாணம் செயய ஏகப்பட்ட பணம் தேவை, தெரியுமா?”

அப்பு மிகவும் கிளர்ச்சியுற்றான். கேள்விகள் அவன் உதடுகளி லிருந்து உதிர்ந்தன. “விமானத்தில் பயணம் போக எவ்வளவு பணம் தேவைப்படும்?”

“நிறைய நிறையப் பணம் வேண்டும். உலகத்தையும் அதன் அதிசயங்களையும் காண ஒருவர் மிச்சம் பிடித்துப் பணம் சேமிக்க வேண்டும்.”

“திட்டமாக எவ்வளவு பணம், ஸார் அப்பு விடாது கேட்டான்.

ஆசிரியர் மகிழ்வடைந்தார். “நீ பிரயாணம் செய்து உலகத்தைக் காண விரும்புகிறாயா? இப்போது முதலே மிச்சப்படுத்து. நீ பெரியவன் ஆனதும் சுற்றிப்பார்க்கலாம். தெரியுமா, குழந்தாய். படகில் அடுத்த ஊர் போவதற்கே கால் ரூபாய் ஆகிறது!”

“எனக்குத் தெரியும், ஸார். குதிரைவண்டியில் கோர்த்திப்பாடு போக அரை ரூபாய். டவுனுக்கு பஸ்ஸில் ஒன்றரை ரூபாய்.”

“நல்லது. பிரயாணம் போக அதிகம் செலவாகும். பம்பாய் சேர மூன்று நாட்கள் பிடிக்கும். ரயில் கட்டணத்தை எண்ணிப்பார்!”

“நூறு ரூபாய் போதுமா?” என்று அப்பு ஆப்பாவித்தனமாய் கேட்டான்.

ஆசிரியர் சிரித்தார்.

“அன்பான பையா, உனக்கு அமெரிக்கா போக யாரும் இலவச விமான டிக்கட் தரமாட்டார்கள். ஆறு அல்லது ஏழாயிரம் ரூபாய் நீ வைத்திருக்க வேண்டும். உன் குடும்பச் சொத்து முழுதுமே அவ்வளவுக்குத் தேராது. அப்புறம் ராக்கெட்டில் போக லட்சக் கணக்கில் செலவாகும்!”

அப்பு முற்றிலும் மனம் சோர்ந்து போனான். அவ்வளவு பணத்தை அவன் எவ்வாறு சேகரிக்க முடியும்?

“வேறொரு வழி இருக்கிறது, மகனே” என்றார் ஆசிரியர்.

அப்புவின் முகத்தில் ஒளிபிறந்தது.

“நீ நன்றாகப் படித்து சிறப்புடன் விளங்கினால், அரசு உன் பயணச் செலவை ஏற்கலாம். ஆனால் நீ மேற்கொண்டு படிக்கவும் பெரும் அளவு பணம் தேவை.” ஆசிரியர் மேலும் சொன்னார், “மகனே, பணம் மதிப்புள்ளது. ஒவ்வொன்றுக்கும் உனக்கு பணம் தேவை.”

அப்பு மெளனமாக இருந்தான். அவன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.

ஆசிரியர் தொடர்ந்து கூறினார்: “பணம் சேமிக்கும்படி உன் அப்பாவிடம் சொல்லு. அவர் வீண்செலவு பண்ண வேண்டாம். உனது படிப்புக்காகவும், உன் எதிர்காலத்துக்காகவும் ஒவ்வொரு காசையும் அவர் மிச்சம் பிடிக்க வேண்டும். உன் அப்பா பணத்தை வீணடிக்கிறாரா, சொல்லு.”

அப்பு தலைநிமிர்ந்து நிற்க முடியவில்லை. அவன் தன்னிரக்கத்தால் வாடினான். தன் அழுக்குத் துணிகளை, கிழிந்த புத்தகங்களை, தனது பெருந்தீனியை அவன் எண்ணினான். அவன் கண்களில் நீர் பெருகியது.

ஆசிரியர் அவனைப் பெருமையோடு கட்டித் தழுவினார்.

முத்துத் தீவு என்ற சிறிய கிராமத்தில் அன்று ஒரு சிறு முத்து பிரகாசமாய் ஒளி வீசியது.

– ரண்டி சோமராஜு, தெலுங்கு கதை.

– சிறந்த கதைகள் பதிமூன்று, 13 இந்திய மொழிகளிலிருந்து சிறந்த கதைத்தொகுப்பு, முதற் பதிப்பு: 1935, தமிழில்: வல்லிக்கண்ணன், நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *