அபூர்வ நண்பர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 10, 2022
பார்வையிட்டோர்: 3,262 
 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உலகத்தில் “தூர நோக்கு” பற்றிச் சிந்தித்துக் கொள்வார் மிகச் சிலரே…! மற்றைய பெரும்பாலோர் “அற்றைய நடப்புகளில் ஆர்வம் காட்டி, அதனிலேயே உழன்று. “தூரத்துப் பச்சை” நோக்கிக் காலத்தைக் கடத்தி விடுவார்கள். தூர நோக்குச் சிந்தனைக்கும், தூரத்துப் பச்சை இயல்புக்கும் தான் எத்தனையெத்தனை “பார தூரம்”? இந்தச் சித்தரிப்பு ஏதோ ஒரு தத்துவ உரையல்ல:இன்றைய சிங்கப்பூர் நடப்புகளின் ஒரு கண்ணோட்டம்…!

மனிதாபிமான வாழ்க்கையில் “பந்தங்கள்” என்பதற்கே பெரிய மதிப்பும் மரியாதையும் கொடுத்து வாழ்ந்து வந்த ஒரு காலக் கட்டமும் இந்த நிலைபெறு உலகின்கண் இருக்கத் தான் செய்தது என்பதற்கு இதோ மூன்று சாட்சியங்கள்..!

காலத்தின் கரைசலில் “பாசங்கள்” என்பதெல்லாம் ஏதோவோர் “பாசாங்கு” போல் ஆகித் தோன்ற, அதையும் எதிர்கொண்டு நின்று, இன்று: வெறும் “பாவங்கள்” நிற்கும் அந்த மூவரும் சூன்ம நிலையில் “கட்டியங்கள்” ஆவார்கள்.ஆன்ம நேயம் போற்றிய அந்த மூவர் தாம் யாவர்?

காலத்தின் மிகமிக விரைவான ஓட்டத்தில்தான் எத்தனையெத்தனை காரியங்கள் நடந்து முடிந்து விடுகின்றன….. எதிர்பார்ப்புகளை விட ஏமாற்றங்களே இவ்வுலகைப் பெரும்பாலும் ஆட்டிப் படைக்கின்றன. ஆட்கொள்ளுகின்றன. இதற்கும் அந்த மூவரே சிறந்த எடுத்துக்காட்டுகள்….! யார் அந்த மூவர்?

அதோ தெரிகிறதே… அந்தக் கட்டிடம் அந்தக் கால ‘அட்மிரால்டி ஹாஸ்பிட்டல்”! இன்று செம்பவாங் ஸ்ரீ நாராயண மிஷின் வயோதிக நோயாளிகளின் இல்லம்..! அங்கேதான் அந்த மூவரும் இப்போது “அடைக்கலம்’ ஆகியிருக்கின்றனர். காலத்தின் சுழற்சியில் மாற்றங்கள் ஏற்பட்டாலும், பழமையின் அடிச்சுவடுகள் ஆகிப் பழக்கத்திலும் புழக்கத்திலும் இருந்து வந்த இடங்களின் பெயர் அவ்வளவு எளிதாகப் பெயர் மாற்றம் பெற்று விடுவதில்லை..!

சிங்கப்பூரில் “ஜனசந்தடிமிக்க பகுதிகளுள் ஒன்றாக விளங்கும் சிராங்கூன் ரோட்டில் அமைந்துள்ள “தேக்கா மார்க்கெட்’ நவீனப் படுத்தப்பட்டு ஏதோ காரணத்தால் ‘ஜுஜியாவ்” என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்தாலும், மேண்டரின் மொழி பேசப்படுவோரின் வாய் மொழியாலும் தேக்கா” என்றே தேக்கமின்றிக் கூறும் இயல்பினை இன்றும் காணலாம். அதுபோலத்தான் அட்மிரால்டி ஹாஸ்பிடலும்: “அட்மிரால்ட்டியே” இல்லாது ஆனபோதும் அந்தப் பெயர் இலங்கிக் கொண்டிருக்கிறது.

வரலாற்றின் தேய்மானத் தலைமுறை தோன்றும் வரை வழக்கத்தின் கூற்றுகள் மாற்றப்படவே முடியாது என்பதற்குப் பலப்பல சான்றுகள் சொல்ல முடியும். அதற்கென்ன காரணம்..? அடிச்சுவடுகள் ஆழப் பதிந்தவை…!

முன்னாளைய அட்மிரால்டி ஹாஸ்பிட்டல் இன்றைய ஸ்ரீ நாராயண மிஷின் வயோதிக நோயாளிகள் பராமரிப்பு இல்லத்தின் வெளிப்புறப்பகுதி..! அதோ.. அழகியதோர் சிறிய பசுமைப் பூங்கா…! அங்கே அமைந்திருக்கும், யாரோ ஒருதர்மகர்த்தாவால் வழங்கப் பெற்றிருந்த ஒரு வட்ட மேசை அதனைச் சுற்றியும் இடைவெளி விட்டு அமைக்கப்பட்டுள்ள நகர்த்தவொண்ணா நான்கு நாற்காலிகள், அத்தனையும் பளிங்குக் கல்லால் ஆனவை; பதிக்கப் பெற்றவை…! ஆழப்பதிந்தவைக்கு அப்பழுக்கில்லை.

அந்தி சாய்ந்து கொண்டிருக்க அசைந்து வரும் தென்றல் அளவளாவி இயங்கும் நேரம்…! அந்த மூவரும் பளிங்கு நாற்காலிகளில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த முதியோர் இல்லத்தில் அடைக்கலமாகியிருக்கும் அனைவரிடமும் அன்புடன் பழகினாலும்-அவர்களின் தேவைகள் நிறைவுக்கு உதவினாலும் இந்த மூவரும் எப்போதும் தனித்துப் பேசியிருக்க வந்து விடுவார்கள். மாலை ஆறு மணியானதுமே குளித்து, இறைவழிபாடு மேற்கொண்டு ஆறரை ஆறே முக்கால் மணியளவில் அந்த “வட்ட மேசை மாநாட்டுக்கு” தவறாமல் வந்து அமர்ந்து கொள்ளும் வழக்கமுடையவர்கள். இதோ.. இன்றும் அப்படித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைக்கு நேற்று அல்ல; ஏறக்குறைய இருபதாண்டு கால நட்பின் முதிர்ச்சி உள்ளவர்கள்…! ஒருவர்க்கொருவர் உறுதுணையாய் வாழ்க்கையில் நடைபயின்றவர்கள்….! வாழ்க்கையின் வரலாற்று அடிச்சுவடுகளைப் பகிர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கும் வழக்கமுடையவர்கள்…!

ஒருதலைமுறையின் காலக் கட்டம் என்று சுலபமாக ஒரே வரியில் சொல்லிவிடலாம். வாழ்க்கைக் காலம் என்பது ஒரு வரியில் அடங்கக்கூடியதா? ஒவ்வொருவரின் வாழ்க்கைக் காலங்களும் ஒவ்வொரு வரலாற்று முக்கியத்துவங்கள் அடங்கியிருப்பதன்றோ …..? காவியத்துக் கற்பனை எல்லாம் பாவியத்துள் அடக்கிய பண்பியல் வாழ்க்கை முறைகளாகும்…!!

எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் இனிப்பான கசப்பான உண்மைகளும் உவமைகளும் பிறந்து கொண்டேயிருக்கின்ற ஓர் ஊற்றாறு போன்றதே வாழ்க்கையாகும். அத்தகைய வாழ்க்கையில் அழகிய “நீரோடைகளாய்”க் காட்சியளிக்கும் அந்த மூவரும் பேசி மாளாக் கருத்துகளின் அழிவே இல்லாத ஆத்மார்த்த உணர்வுகளின் அடிப்படையாய் விளங்கும் அந்த மூவரும் ஆதவன் மேற்றிசையில் அமைதியோடு மறைந்து சாயும் அந்தகாரமான அமைதிப் பொழுதில் கடந்த கால வாழ்க்கையின் நிழலோட்டங்களை வரைமுறையாக எண்ணிப் பார்த்து நேர் “வகிடெடுத்துப்” பரிமாறிக் கொண்டிருக்கின்றார்கள்…!

அத்துணை அளவு ஆத்மார்த்தங்களுக்கு அடிப்படையாக அமைந்தொளிரும் அந்த மூவர்தாம் யாவர்? ஆம், இன்று நேற்றல்ல; ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகால இணைவும் நெருக்கமும் உடையவர்கள். காலத்தால் பிரிக்க முடியாத கருத்துக் கருவூலங்களாய்க் கனிந்து இருப்பவர்கள். அந்தரங்க உள்ளுணர்வுகளின் ஆன்ம நேயத்தோடு அமைந்த அந்த மூவர்தாம் யாவர்?

ஆயிரத்துக் தொளாயிரத்து ஐம்பதாம் ஆண்டின் தொடக்கத்தில் “நேவல் பேஸ்” என்னும் நாவாய்த் தளத்தில் “அப்ரெண்டீஸ்” என்னும் அடிப்படைப் பயிற்சி பெறும் தொழிலாளர்களாக வேலைக்குச் சேர்ந்தவர்கள். பயிற்சி பெறும் காலக் கட்டத்திலேயே பழகிக் கொண்டவர்கள்.

பயிற்சி பெறும் தொழிலாளர்களின் வரிசையில் துறைகள் தோறும் பல பேர் நேர்முகப் பேட்டிக்கு வந்து பயிற்சிப் பணிகளில் சேர்ந்தார்கள். அவர்களுள் “வெல்டர்” பணிக்கு மனுச் செய்த வீ கூன் சான் என்பவரும், “பெலம்பர்” தொழில் துறைக்கு மனுச் செய்த பிச்சை முத்துவும் “எலக்ட்ரிஷியன்” ஆக மனுச் செய்த இஸ்மாயிலும் அடங்குவார்கள்.

ஒரே காலக் கட்டத்தில் ஒரே பணிமனையில் வேலைக்குச் சேர்ந்தாலும் “ஒத்த’ உயர் கருத்துடையவர்களே ஒருங்கிணைவார்கள். இனம் இனத்தோடு என்பது இது தானா…? வாழ்க்கைப் பண்புகளின் நடைமுறைகளோடு ஓத்துப் போகின்ற இயல்புடையவர்களே சேர்ந்து பழகும் விசித்திரங்கள், பெரியவர்கள் மத்தியில் மட்டுமல்ல; பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களிடையேயும் பரிணமிக்கக் காணலாம்.

பயிற்சிப் பட்டறையில்” பழகுமுகம் ஆகி, பழுது பார்க்கும் கப்பல்களில் பணி செய்யும் போது நெருக்கம் ஆகி, படர்ந்து வரும் வாழ்க்கை நலப் பதிவுகளில் பரிச்சயம் பெற்று, பாங்கு நிறை குடும்ப நண்பர்களாய்ப் பரிணமித்தவர்கள்….!

இந்த மூவரில் மூத்தவர் லீ கூன் சாய். அடுத்த மூப்பாளர் இஸ்மாயில். ஆக இளையவர் பிச்சைமுத்து…! இப்படிச் சொல்வதனால் ஏதோ ஒரு பத்துப்பத்து வயது மூப்பும் இளமையும் இருக்குமோ என்று எண்ணிக் கொள்வதற்கு இடமளிக்கக் கூடாது. இரண்டு மூன்று வயது ஏற்றத் தாழ்வுடையவர்களே ஆவார்கள்.

எங்கெங்கோ எப்படியெப்படியோ அத்துக்கூலிக்கு மாரடித்து, இறுதியாக “நேவல்பேஸ்” கப்பற்பட்டறைத் தொழில் வாய்க்கப் பெற்று வேலைக்குச் சேர்ந்தவர்கள்….! நிலைப்பாடான வேலையும் நிரந்தர வருவாயும் பெற்றதைப் பெறலரும் பேறாகக் கருதிக் கொண்டார்கள். அன்றைய நிலை அப்படி…! ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு என்ற அமைப்பு கூட இல்லாமல் வேலைக்கு ஆலாய்ப் பறந்த” நிலை …

“நேவல்பேஸ்’ தொழில் வாய்ப்பும் “பாரம்பரிய” அடிப்படையில் அமைந்த பேறு என்று கூடக் கூறலாம். ஆம். நேவல்பேஸில் பணியாற்றும் தொழிலாளர்களின் “வாரிசு”களுக்கு முதலிடம் என்ற அட்மிரால்டி சட்டத்தின் அடிப்படையில் அமைந்ததே இந்த வேலை வாய்ப்பு என்பதை அந்த மூவரும் நன்கு அறிந்து கொண்டதனால் தான் இந்த வாய்ப்பைப் பெறலரும் பேறாகக் கருதி மகிழ்ந்தார்கள்…!

அப்ரெண்டீசாக வேலைக்குச் சேர்ந்து பயிற்சி பெற்றுத் தேர்ந்த பின் அன்றாடக் கலி பெறும் தொழிலாளராக, அதற்கும் பின்னர்தான் மாதாந்திர வருவாய் பெறும் மானமிகு தொழிலாளர்களாகி மகிழ்ந்தார்கள்.

திக்காலுக்கொருவராய் வாழ்ந்து வந்த மூவரும் ஒரே திசையில் குடி பெயர்ந்து வந்து நிலைபெற்று வாழத் தலைப்பட்டார்கள். ஆம், செம்பவாங் பதினைந்தாவது மைல் கடற்கரையோரம் அமைந்திருந்த “கம்போங் மலாயு” பகுதி வீடுகளில் வாடகைக்கு வீடு தேடிக் கிடைக்கப் பெற்று மகிழ்ந்தார்கள்.

செம்பவாங் பதினான்காவது மைலில் நேவல்பேஸ் “மெயின் கேட்” அமைந்து இருந்தது. தங்கள் வேலையிடத்துக்குச் செல்ல வசதியாக இருக்கும் என்ற எண்ணத்தில் அங்கே வீடு தேடி அலைந்து அதிர்ஷ்ட வசத்தால் கிடைக்கப் பெற்று ஆனந்தம் அடைந்தார்கள். அருகருகே கிடைக்கப் பெற்று அமைந்து வீடமைப்பு வசதிகளும், இந்த மூவரின் ஆத்மார்த்தங்களின் இயல்புகளுக்கும் எழுச்சிகளுக்கும் அடிப்படையாய் அமைந்தன என்று துணிந்து கூறலாம்.

வெல்டர் லீ கூன் சாய்க்கு ஆறு பிள்ளைகள். முதல் ஐந்தும் பெண்கள், கடைசியில் ஒரு பையன்….! எலக்ட்ரீ ஷியன் இஸ்மாயிலுக்கு முதல் மூன்றும் பெண் பிள்ளைகள் இறுதியில் ஒரு பையன் …..! பெலம்பர் பிச்சை முத்துவுக்கு மூத்தது இரண்டும் பெண்கள், கடைசியில் ஒரே ஒரு பையன்..!

இந்த மூவருக்கும் சொல்லி வைத்தாற்போல கடைசிப் பிள்ளை பையன்களாய் அமைந்துவிட்டிருந்தார்கள். இந்தவொரு “மக்கட்பேறு” இந்த மூவரின் “ஜாதக பலன்” ஒருமைப் பாட்டினால் அமைந்த பேறோ…. காரியங்கள் அனைத்துக்கும் காரணங்கள் இருப்பதில்லை; காரணங்கள் எல்லாவற்றுக்கும் காரியங்கள் அமைவதில்லை….!

குடியும் குடித்தனமுமாய்த் திகழ்ந்த இந்த குடும்பங்களுக்குக் குறைந்தபட்ச வருவாய் போதுமானதாக இல்லை. “இல்லதன் இல்லவள் மாண்பானால்…” என்னும் உலகப் பொது மறை கூறும் தத்துவத்தின் தார்மீகங்களாய் இலங்கி நின்ற குடும்பத் தலைவியரின் சாமர்த்தியத்தாலும் சாதுரியத்தாலும் குடும்பங்கள் தழைத்தன.

வாழ்க்கை என்பதே போராட்டம்தான்..! “போராடிப் பெற்றார் புகழ்” என்பது போல் இந்த மூவர்தம் குடும்ப வாழ்க்கையின் “சுக துக்கங்கள்” எல்லாம், போராட்டத்தில் மலர்ந்த வெற்றிகளாய்ப் பொலிந்தன.

கட்டுச் செட்டாக வாழ்வதென்றால் “வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி” வாழ்வது என்பது தானே…! அந்த வகையில் கட்டாகவும் செட்டாகவும் வாழ்வதில் கை தேர்ந்து விளங்கிய மனைவியர்களைப் பெற்றதிலும் அந்த மூவரும் கொடுத்து வைத்தவர்களே…!

‘இல்லாள் அகத்திருக்க இல்லாததொன்றில்லை” என்ற ஆன்றோரின் அமுத வாக்கு மூவருக்கும் ஓர் அமைதியைத் தந்தது. பணிமனையாம் தொழிலகத்தில் அவர்கள்’ உழைத்தார்கள்: அணிமனையாம் எழிலகத்தில் “இவர்கள்” பாடுபட்டார்கள். பிள்ளைகளைப் படிக்க வைப்பது முதற்கொண்டு தங்களின் மாமன் மாமியர்க்குச் சேவை செய்வது வரை அனைத்தையும் எந்தக் குறையும் நேராதவாறு இல்லத்தரசிகள் இனிது கவனித்துக் கொண்டார்கள். மனங்கோணா மலர்ச்சியுடன் முகங்கோணாச் செயல் நிறைவும் மாட்சியுற மகிழ்ந்தார்கள்.

அதிகாலையில் உதித்தெழும் ஆதவன் அந்தி சாயும் மாலைப் பொழுதில் மறைந்து வீழ்வான்…! காலையில் மலர்ந்த பூக்கள் முற்பகலில் வாடி, பிற்பகலில் வதங்கி மாலையில் கருகிச் சருகாகும்…! மனித வாழ்க்கையின் பிறப்பு இரகசியங்களுக்கும் இவ்வாறு..! “பிணி, மூப்பு, சாக்காடு என்பது மனித வாழ்க்கையின் தவிர்க்கவே முடியாத மாண்புக் கூறுகள் ஆகும்” என்பது அமைதிப் பெருங்கடலாம் அன்புவழி புத்தபிரானின் அமுதத் தத்துவமாகும்.

“பிறப்பு என்றொன்று இருக்குமானால் இறப்பு நிச்சயிக்கப்பட்ட உண்மை” “ஆதி” என்றால் “அந்தம் இருந்தே ஆக வேண்டும்” இதுவும் மறைமொழி மாந்தர் கூறும் நிறை மொழி போற்றல் ஆகும்.

மூன்று குடும்பத்தின் முந்திய தலைமுறையினர் “முக்தி” பெற்று விட்டனர். இறப்பு என்பது நிச்சயிக்கப்பட்டுவிட்ட உண்மை என்பதனைத் தெளிந்த மூன்று குடும்பத்தினரும் ‘இருந்த வரை இலாபம்” எனக் கருதி ஈமச் சடங்குகள் அனைத்தும் நிறைவேற்றி வருந்தி மகிழ்ந்தனர். தொடர்ந்து வந்த துக்கங்களுக்குச் “செலவுகள்” உண்டே…!

எதிர்கொள்ளும் இன்ப துன்ப விளைவுகளுக்குச் செலவுகளும் சிரமங்களும் கருதாமல் “இருப்பும் இழப்பும்” எண்ணாமல் இதயங்கனிந்து செயல்பட வேண்டும். அதற்குப் பெயர்தான் வாழ்க்கை..!

வாழ்க்கையில் சோதனைகள் வரத்தான் செய்யும். “சோ”தனையின் கொம்பொடித்து நிமிர்ந்து நின்றால் அது “சா’ தனையாகும். சோதனையைத் தந்தருளும் இறைவன் சாதனையின் மலர்ச்சியிலே மனங்குளிர்ந்து அருள் புரிவான்.

தாய் தந்தையரின் பராமரிப்பு, ஈமச்சடங்கு முதல், தம்முடைய “தரத்தளவு” வாரிசுகளின் கல்வி அந்தக் தகுதிக்கேற்றவாறு “துணை” தேடித் தரும் செயல்பாடுகள் வரை அனைத்தையும் ஆரவாரமின்றிச் சமாளித்து முடிக்க வேண்டும் என்று எண்ணினாலும், தழைத்து வரும் “தகுதிதரம்” என்பனவற்றைக் கருத்திற் கொண்டு விட்டுக் கொடுக்கா நிலை போற்ற, விரும்பிக் கடன் பெற்றே ஆக வேண்டும்; வேறு வழி…?.”

இவ்வாறு எப்படியெப்படியோ கடன்பட்டு உடன்பட்டு வாழ்வின் நிகழ்வுகளாம் சுக துக்கங்கள் அனைத்தையும் எதிர்கொண்டு ‘வளையாத நெஞ்சினராய்” வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். நீறு பூத்த நெருப்பாகக் “கடன்” நெகிழ்ந்து கனிந்து கொண்டிருந்தது. எல்லாவற்றுக்கும் இறைவனையே பொறுப்பாக்கி விடக் கூடாதல்லவா? மனித முயற்சியின் மனோபலத்துடன் மூன்று குடும்பத்தினரும் வாழ்ந்து வந்தனர்..!

நாணய விவகாரங்களில் “நாணயம்” தவறாத நா நயம்பெற்று விளங்கியதனால் அறிமுகமாகி வட்டித் தொழில் புரியும் செட்டியார்களும் “வரையும் பத்திரம்” எழுதாமலேயே பணம் தந்து உதவினார்கள். சமயா சமயங்களில் சக தொழிலாள நண்பர்களின் உதவிப் பரிமாற்றமும் நிகழ்வதுண்டு…! இதிலொரு வேடிக்கை என்னவென்றால் “எடுப்பது பிச்சை; கொடுப்பது தருமம்” என்பது போல். இவர்கள் வட்டிக்கு வாங்கி வந்த கடனில் வேலையிடத்து நண்பர்களுக்குக் “கைமாத்து” கொடுத்து உதவுவதும் உண்டு. கைமாத்து பெற்றுக் களித்தோரில் “நாமம்” போட்டுவிட்டு நாசுக்காய் நடை பயில்வோரையும் அவர்கள் சந்தித்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டதுமுண்டு…!

வரதட்சிணை சீர்வரிசை என்பதில் தங்கள் தகுதிக்குச் சற்று மிகைபடச் செய்ய வேண்டிய நிலையேற்பட்டபோதும் அது பற்றிச் சிந்திக்காமல் “ஆம்” போட்டுக் காரியத்தை முடித்தார்கள். இவர்களின் இந்த “ஆமாம்” என்பதற்கு மூன்று பெரிய காரணங்கள் இருந்தன. ஒன்று பெண் பிள்ளைகளின் விகிதாச்சாரக் கூடுதல். மற்றொன்று “நம்பிக்கைக்குரிய நம்பி” கிடைப்பது அரிது. பிறிதொன்று வயது வந்த பெண் மக்களை வைத்துக் கொண்டிருப்பது அடி வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பதற்குச் சமமாகும் என்ற அனுபவ முத்திரை…. இவற்றையல்லாமல் வேறு “சில்லறைக்” காரணங்களும் சிலிர்த்து வருவதுண்டு.

முற்பிறப்பின் செய்தவமோ என்னவோ மூன்று குடும்பத்தின் மூத்த வாரிசுகளாகிய பெண் பிள்ளைகள் அனைவருக்கும் தங்கு தடையின்றி வரன்கள் வந்தமைந்த நற்பேறும் கண்டு மகிழ்ந்தனர்.

விரலுக்குத் தக்க வீக்கத்தையே இறைவன் தந்தருள்வான் என்பது தத்துவம்…! ஆயின், விரலுக்கு மிக்க வீக்கத்தின் வலியைப் பொறுத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தின் விரக்தியை மூன்று குடும்பத்தினரும் அனுபவித்துச் சோர்ந்தனர்.

மூன்று குடும்பத்தின் பெண் மக்கள் அனைவரும் குடும்பம்” பெற்று பிறந்தகம் நீங்கிப் புக்ககம் சென்று விட்டதனால் ஏதோவொரு பெரும்பாரம் நீங்கியது போல் மூன்று குடும்பத்தின் தம்பதியர்களும் பெருமூச்சு விட்டுக் கொண்டார்கள்.

கடைசிப் “பிள்ளையைக்” கருத்தில் கொண்டு வாழ்ந்து வந்தார்கள். அது “தூர நோக்கா….” அல்லது “தூரத்துப் பச்சையா…..” என்பது, காலவோட்டத்தின் கருணையிலான கட்புலனாக அமையும் ஒன்றாக இருக்கும்.

அடையாள அட்டையின் ? ஐடென்டிகார்டு: குறிப்புப்படி, ஐம்பத்தைந்து வயது நிறைவெய்தும் அந்த நாளை எதிர்பார்த்திருக்க வேண்டிய இன்றியமையா இக்கட்டில் அந்த மூவரும் காலம் கழித்துக் கொண்டு வந்தார்கள் என்று சொன்னால் அஃது மிகையாகாது. அல்லு பகல் அறுபது நாழிகையும் அதே எண்ணம், அத்தகைய நெருக்கடி: நாணயக் குமுறல்…!

அந்திய கால வாழ்க்கையின் பாதுகாப்புக்காக என்று அந்தக் கால ஆங்கிலப் பேரரசு அமைத்துத் தந்த அருமைத் திட்டமே இந்த மத்திய சேம நிதிச் சேர்ப்பு என்பது! அமைந்து வரும் வாழ்க்கைக் காலத்தில், வரவுச் செலவுக் கணக்கின் வரையறைகளைத் தீர்ப்பதற்குப் பயன்படுத்த வேண்டிய அத்தியாவசியமானதொரு ஆதங்கத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. இந்த மூவரின் வாழ்க்கைச் செழுமைகளே இதற்கு ஆதாரக் கூற்றுகளாகும்….!

ஐம்பத்தைந்து வயதை முன்பின்னாகக் கடக்கும் இந்த மூவரும் மத்திய சேமநிதி இருப்பை எடுத்து “கடன் உதவி’களைத் தீர்த்துக் கண்ணியமாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

இந்த மூவரும் இப்போதும் “செம்பவாங் ஷிப்யார்ட்” கப்பற்பட்டறையில் பணி புரிந்து வந்தனர். தொழில் நுணுக்கர்களின் இன்றியமையாத் தேவையாலும், அவர்கள் மூவரும் “மெடிக்கலி பிட்” என்று செம்பவாங் ஷிப்யார்ட் டாக்டரே உறுதிப் படுத்தியிருந்தமையாலும் தொழில் நீடிப்பு ‘எக்ஸ்டென்ன்’ கிடைக்கப் பெற்று வேலை செய்து வந்தார்கள்.

பிள்ளைகள் எத்தனை பேரானாலும் கடைசிப் பிள்ளையே செல்லப் பிள்ளை..! தாய்க்குத் தலை மகன் தந்தைக்குக் கடைசி மகன்” என்றொரு சம்பிரதாயமும் உண்டு. “கொள்ளி வைக்கப் “பிள்ளை” வேண்டும் என்பார்கள்….! தலையாய “பிள்ளை” இல்லை; “கடையாய” பிள்ளை இருப்பதிலே பெருமகிழ்வு கொண்டார்கள்.

முன்னவர்களின் வேடிக்கையான ஒரு கேள்வி… குழந்தை பிறந்திருக்கின்றது என்று கூறினால் “உனக்கா? ஊருக்கா? என்று கேட்பார்களாம். “உனக்கா? என்பதன் பதில் ஆண் மகவு…”ஊருக்கா?” என்பதன் பதில் பெண் மகவு..!

இந்த மரபு வழி பழக்க வழக்கங்களின் பதிவுப்படி பார்த்தால் “தனக்கு” என்பது ஒன்றே ஒன்று என்று “வரவு” வைத்து மகிழ்ந்தவர்கள். இந்தத் தார்மீகத்தை எண்ணியெண்ணி தூரத்துப் பச்சை” என்னும் பசுமையெழிலை மனக் கண்ணில் பார்த்து மகிழ்ந்தார்கள்.

இந்த மூன்று குடும்பத்தினரும் தங்களின் கடைசிக் கடமையினைச் செவ்வனே செய்து முடிக்க வேண்டும் என்று. சிரத்தையுடன் “பெண் பார்க்கும்” படலத்தில் முனைந்து நின்றனர்; காலக் கட்டத்தை உணராத பெற்றோர்கள்…!

இன்றைய இளையர்கள் பெற்றோர்களுக்கு “அந்தச்” சிரமத்தைக் கொடுப்பதில்லை. அந்த மூவரும் தங்கள் தம் வாரிசுகளின் “சுதந்திரத்துக்கு”ப் பச்சைக் கொடி காட்டி விட்டார்கள். பதிவுத் திருமணம்: பழங்காலப் பண்பு முறைப்படியிலான சம்பிரதாயத் திருமணம் ஆகியன எல்லாம் வரை முறையாய் நிகழ்ந்தேறின…!

மூன்று தம்பதியரும், தங்களின் மக்கள் எல்லோருக்கும் “மாலை” எடுத்துக் கொடுத்து மணக்கோலத்தை மனங்குளிரக் கண்டு மகிழ்ந்ததே போதும் என்று நெட்டுயிர்த்துக் கொண்டனர். அந்த அளவு தங்களுக்கு ஆயுள் நீடிப்பு தந்த ஆண்டவனுக்கு மனங்கனிந்து நன்றி கூறி வணங்கிக் கொண்டார்கள்.

பெண் பிள்ளைகள் எல்லோரும் பிறந்தகம் நீங்கிப் புக்ககம் சென்று நிலை பெற்று விட்டனர்; பிரச்சினையில்லை…!

இறுதிக்காலம் வரை இருக்க வேண்டியது இந்தப் “பிள்ளை” யோடு தானே என்று எண்ணி, “இருந்த இருப்பை” எல்லாம் அள்ளிக் கொடுத்து, அடுக்குமாடி வீடு ஒன்று வாங்கி, அதனைச் “செப்பம்” செய்வதிலும் செலவிட்டு “புகுமனை புகுவிழா” வினையும் ஏகதடபுடலாகச் செய்து மகிழ்ந்தனர்.

கிராமப் புற வாழ்க்கை இயற்கையின் எழிலோடு இனிமையும் எளிமையும் இணைந்ததாகும். இந்தச் சூழலில் வாழ்ந்து பழக்கப்பட்டு விட்டவர்களுக்கு எழுந்தமை அடுக்குமாடி வீடமைப்பு வாழ்க்கையும், அதனைச் சுற்றியமைந்துள்ள ஆடம்பரக் கடையமைப்புகளும் இயற்கையமைவு எதுவும் இல்லாச் செயற்கை வார்ப்படம் போல் காட்சியளிப்பதால் இம்மியளவும் பிடிப்பதில்லை..!

இத்தகு உள்ளத் தெளிவு கொண்டோராய் இலங்கிய இந்த மூவரும் தத்தம் இல்லறத்தை எழிலார்ந்த இயற்கைப் பின்னணியில் அமைந்துள்ள அந்தப் பழைய வாடகை வீடுகளிலேயே தொடர்ந்து வந்தனர்.

ஞாயிற்றுக்கிழமையில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எப்போதும் இந்த மூன்று குடும்பத் குடும்பத் தலைவியரும் சனிக்கிழமையன்று முற்பகலில் “பசாருக்கு” வந்து ஒரு வாரத்துக்குரிய காய்கறிகள் உட்பட சனி, ஞாயிறு விசேசங்ளை” யும் வாங்கிச் செல்வார்கள்.

செம்பவாங் பகுதி பதினைந்தாவது பதினான்காவது மைல் பகுதியில் “பசார்” இல்லை; பதின்மூன்றாவது மைல் பகுதியில் பழைய ‘கான்பெர்ரா கேட்” பகுதியில் நவீனப் படுத்தப்பட்டிருக்கும் சந்தைக்குத் தான் வந்தாக வேண்டும்.

அன்றொரு நாள் சனிக்கிழமை…! வழக்கம் போல் அவர்கள் மூவரும் புறப்பட்டு பேரூந்தில் வந்து “மார்கெட்டைப்” பைகளில் நிரப்பிக் கொண்டு வந்தார்கள். வழக்கம் போல் மூவரும் “ஷேர் போட்டு” டேக்சி எடுத்துச் சென்றார்கள்.

“வருவதற்கு ஒரே வழிதான்; போவதற்குப் பல வழிகள் உண்டு” என்று தமிழ் நாட்டுச் சிறுகதை மன்னன் புதுமைப் பித்தன் கூறியது எத்தனை அர்த்தமுள்ள தத்துவார்த்தப் பொன்னுரை..!

வருவதற்கு ஒரு வழி கண்ட அந்தப் புனிதவதிகள். போவதற்கும் “ஒரே வழி” கண்டு விடப் பொல்லாத “விதி” வந்து அமைந்ததோ…?

எது எப்போது எப்படி நடந்தேற வேண்டுமோ அது அப்போது அப்படியே நடந்து முடிவது தான் “விதி”யின் விளையாட்டாகும்….! “விதி” என்று பெயர் வரக் காரணம் என்ன..? மும்மையின் “அனுகூலம்” இம்மையில் “விதித்தபடி’ வந்து சேர்வதால் தான் அதனை “விதி” என்று ஆன்றோர்கள் அருளியிருக்கின்றனர்.

விதி; மண் சுமந்து செல்லும் லாரி வடிவில் வந்து டேக்சியை மோதிய “வினைத் தாக்குதலில் மூவரும் பலியானார்கள்…!

விதிப் பிரளயத்தின் முன் விக்கித்துப் போய் நின்றவர்கள் யார் யாரைத் தேற்றுவது என்ற தர்ம சங்கடமான நிலை தோன்றிய போது அவரவர்களின் ஆசுவாசத்திற்கு ஆண்டவனே காப்பு என்ற நிலையில ஆத்மார்த்தங்கள் அமைதியுற்றன…!

மனைவியரைப் பறிகொடுத்து விட்டு, தனிமைத் துன்பம் தகிக்க மாளாத் துயரத்தில் அழுந்தித் தோய்ந்தார்கள். அவரவர்களின் நன்தொடர் சம்பிராதய முறைப்படி ஈமக் கிரியைகள் அனைத்தும் ஈடுபாட்டோடு இனிது செய்து வருந்தினார்கள்.

ஒப்பாசரத்துக்காகவாவது, “எங்களோடு வந்து இருங்கள்” என்று பெண் பிள்ளைகள் எவரும் மன ஆறுதலுக்காக ஒரு வார்த்தை சொல்லாத நிலை கண்டு மனம் புழுங்கினார்கள். சம்பிரதாயச் சடங்கு பூர்வ நிகழ்ச்சிகளுக்குக் கூட ஏதோ, மூன்றாவது மனிதர்களைப்போல வந்து கலந்து கொண்டு அவசரம் அவசரமாகத் திரும்பிச் சென்று கொண்டிருந்த நிலையைப் மக்களைப் பெற்ற மகராசிகள் “மாணுலகில் ” இருந்து கவனித்து மனங் கசிந்திருப்பார்களோ என்று அந்த மூவருமே ஆத்மார்த்த உணர்வுகளோடு எண்ணிப் பார்த்துக் கொண்டார்கள். அவசரப் புறப்பாடுகளுக்கு அருந்தவப் புதல்விகளும் அவர்கள் தம் ”புருஷன் மார்களும்” கூறிய காரணங்கள் வேலை அடிப்படைகளாகவே இருந்தன. அவர்கள் மூவரும் இந்த அமைவுகளைப் பொருட்படுத்தவும் பெரிது படுத்தவும் இல்லை. முன்னோர்கள் பிறந்த பிள்ளைகளைப் பற்றிக் கேட்கும் கேள்வியை நினைத்துக் கொண்டு ஆறுதல் அடைந்தார்கள்.

எதிர்பார்த்திருந்தபடி பையன்கள் மட்டும், சொல்லி வைத்தாற்போல் தங்களின் தந்தையர்களைத் தங்களோடு வந்து தங்கியிருக்கும்படி அழைத்தார்கள். ஓராண்டு நினைவாஞ்சலிக்குப் பிறகு அது பற்றி யோசிப்போம் என்று. ஆழ்ந்த அமைதியோடு அந்த மூவரும் முடிவெடுத்திருந்தபடி முகம் கோணாமல் சொல்லி விட்டார்கள்.

“சட்டி சுட்டது கை விட்டது” என்ற நிலையா? ஒரு மரபு வழி உண்மையை நிலை நாட்டுவதற்காகச் சொன்ன வரவேற்பா..? பையன்கள் வற்புறுத்தவில்லை. மருமகள்களும் மறுத்து எதுவும் கூறவில்லை. “ஒன்றி விட்ட” பந்தங்கள் போல் இல்லாமல் “ஒன்று விட்ட உறவினர்கள் போல் நடந்து கொண்ட உண்மைகளை உதிர்ந்த ஒவ்வொரு சொற்றொடரின் நுட்பங்களை ஊகித்து உள்ளத்தளவில் ஓர் எடை போட்டுக் கொண்டார்கள். அது ஓர் அனுபவ முதிர்ச்சியின் அறிவு நுட்பமாகும்.

எத்தனையெத்தனைக் காலம் இனிது வாழ்ந்து வந்த வீட்டையும் இனிய சூழலையும் எளிதாகப் புறக்கணித்து விட்டு, “புதுக் குடியேற்றம்” பெற்றுச் செல்ல இயற்கை விரும்பும் மனங்களுக்கு இயலவில்லை…! இத்தனை விரைவாக, ‘தலைத்திவசம்” என்று நம்மனோர் கூறும் “ஓராண்டு நினைவாஞ்சலி” வந்து சேர்ந்திடுமோ…? நேற்று நடந்தது போல் நிலவும் நினைவின் நிழலோட்டப் பசுமைமாறா நிலையில் ஓராண்டு கழிந்து விட்டதை நினைத்துச் சோர்ந்தார்கள்.

தங்கள் தம் தர்ம பத்தினிகளின் தலைத்திவசத்துக்குச் செலவிடாமல் இருப்பரோ? புரோகிதர்களின் அறிவுரைப்படி ‘புண்ணிய தானங்கள்” அனைத்தும் பொலிவுறச் செய்து மகிழ்ந்தனர்.உயிரோடிருக்கும் காலக் கட்டத்தில் உவகையுறச் செய்ய முடியாதிருந்த நிலை எண்ணி வருந்தி, வீடு பேறின்பமாவது விளையட்டும் என்று விழைந்து வினை செயல் முடித்து ஆறுதல் பெற்றனர்.

அரசியல் சூழ்நிலைகளில் ஓர் “இறங்குமுகம்” தோன்றித் தொடர்ந்தது. அதன் நிகழ் வடிவத் தோற்றமாகச் செம்பவாங் கப்பற் பட்டறைக்கும் வரவு செலவில் இறங்கு முகம் ஏற்பட்டது.

கப்பற்பட்டறை ஆட்குறைப்பு இயக்கத்தில் ஈடுபட்டது. வயதளவில் தொடர்ந்து வேலை செய்யும் வாய்ப்பு பெற்றவர்களே முன்கூட்டிய “ரிட்டையர்ட்மெண்ட்” என்ற நிலையில் ஆட்குறைப்பு செய்யப்பட்டார்கள். ஏற்கனவே ரிட்டையர்ட் ஆகி நிற்கும் இந்த மூவரும் வேலையிழந்தனர்.

அன்றுவரை முதுமையின் தளர்ச்சி தோன்றாமல் ளமையின் மிடுக்கோடு பணியாற்றி வந்த இந்த மூவரும் இப்போதுதான் முதன் முறையாகத் தங்களின் வயது முதிர்ச்சியையும் தளர்ச்சியையும் ஒரு சேர உணர்ந்தனர். முதுமையின் உணர்வுகள் நரையிலும் திரையிலும் தோன்றுவதில்லை; முதுமையை உணர்த்துகின்ற செயல் வடிவங்கள் தோன்றும்போதுதான் உள்ளத்தின் அடித்தளத்தில் ஒரு வித “அதிர்ச்சி” தோன்றி, அந்த அதிர்ச்சி உணர்வே மூப்படைந்து விட்ட தளர்ச்சியுணர்வைக் காட்டத் தொடங்கும்…! இது ஒரு மனோதத்துவ உண்மை..! தங்களின் கடைசிச் சம்பளக் “கவரை”க் கண்கலங்கிப் பெற்றுக்கொண்டு, தங்களின் சக ஊழியர்களுக்கு “பை பை” சொல்லிக் கொண்டு வரும்போதே அவர்களுக்குத் ‘தளர்ச்சி’ தொடங்கி விட்டதென்று சொல்லலாம்.

எழிலார்ந்த எடுப்பான மிடுக்கு நடை தளர்ந்து, இனியதோர் ‘ஊன்றுகோல்” இயைந்து தேடும் எழில் முதுமைத் தளர்ச்சிக்கு இன்ப உறுதுணையாய் அவர்கள் எதிர்பார்த்த அந்த “தூரத்துப் பச்சை” அமைந்திடுமோ…?

“தூரத்துப் பச்சை” என்பதன் விளக்கம் என்ன? இக்கரைக்கு அக்கரை பச்சை: அக்கரைக்கு இக்கரைப் பச்சை… என்பதுதான் நடைமுறையாகும்.

தாயார்களின் தலைத் திவசத்துக்கு வந்து போன தங்களின் மைந்தர்கள், அதற்குப் பின் ஆறு மாத காலம் கடந்து விட்ட போதும் ஒருநாளாவது தங்களைப் பார்த்து ஆறுதல் சொல்லவோ தங்கள் அனுசரணையைக் காட்டவோ வரவில்லை… என்பதைப் பற்றி ஆதங்கத்தோடு அந்த மூவரும் அவ்வப்போது பேசிக் கொண்டார்கள்.

இன்னொன்றையும் பற்றி அவர்கள் மிகவும் ஆழமாகச் சிந்தனை செய்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டார்கள். ஆமாம்; அது என்ன?

வேலைக்கு அனுப்பாமல் வீட்டுப் பொறுப்புகளை மட்டும் பார்த்துக் கொள்ளுமாறு “இராஜாத்திகளாய்” வைத்திருந்த தங்களின் இல்லத்தரசிகள் கொடுத்த அந்த “இராஜ மரியாதை” தங்களுக்குக் கிடைக்கக் கூடுமோ என்பதுதான் அது…! “முக்கூட்டு” மாநாட்டின் முடிவு இல்லை என்பதாகும்…? ஏன்?

இருவரும் வேலை செய்தால் தான் இக்கட்டு நேரா இல்வாழ்க்கை அமையும் என்று கணவன் மனைவி இருவருமே தத்தம் தகுதிக்கேற்ப அமைந்திருக்கும் வேலை வாய்ப்புகளுக்குச் சென்று வியர்த்து விறுவிறுத்துவரும் போது அவர்களிடமிருந்து இராஜ மரியாதை உபசரிப்பை எதிர் நோக்க முடியுமா…? அறிவு பூர்வமாகச் சிந்தித்துக் கொண்டார்கள்.

செம்பவாங் ஷிப்யார்டில் வேலை வாய்ப்பிழந்து வீடு திரும்பியவர்கள் தத்தம் வீடுகளுக்குப் போவதன் முன்னம் “ஓரிடத்தில்” அமர்ந்து, தங்களின் எதிர்காலம் பற்றிப் பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

கட்டுமானத் தொழில் துறையில் காண்ட்ராக்ட்” எடுத்து “லேபர் சப்ளை ” செய்யும் கம்பெனிகளின் வழி, “அத்துக் கூலிகளாய்” வேலைக்குச் சேர்ந்து எப்போதும் உள்ள அந்த எளிமை வாழ்க்கையையே இப்போதும் தொடர்ந்து மேற்கொள்வது என்பதுதான் அந்த முக்கூட்டு மாநாட்டின் முடிவு…!

அப்படியமைந்ததொரு வாழ்க்கைக் காலமாக ஒரு சில ஆண்டுகள் நீங்கிச் சென்றன. ஐம்பத்தைந்து வயது நிறைவில், மத்திய சேமநிதி இருப்புத் தொகை அவ்வளவையும் எடுத்து அள்ளித் தெளித்து விட்ட பின்னர் சில ஆண்டுகள் செம்பவாங் ஷிப்யார்டில் வேலை நீட்டிப்பு வாய்ப்புப் பெற்று வேலை செய்த போது சேர்ந்த சிறு தொகையையும் இப்போது எடுத்து வந்து தங்கள் அஞ்சலகச் சேமிப்புக் கணக்குகளில் சேர்த்து விட்டார்கள்.

கள்ளத்தோணி வியாபாரம் போல் நடக்கும் “காண்ட்ராக்ட்” அத்துக்கூலிப் பணிகளில் அந்தச் “சேமிப்பு” இல்லை. உழைத்த “கட்டைகளுக்கு” உட்கார்ந்திருக்கத் தோன்றுமா? அன்றாடச் செலவுகளுக்கு ஆகட்டும்; “பொழுதும்” போகட்டும் என்று தான் அந்த வேலைக்குப் போய்க் கொண்டிருந்தார்கள்.

அந்த அத்துக்கூலி வேலை வாய்ப்பில் அவர்களுக்குப் புதியதொரு அனுபவம் ஏற்பட்டது. ஆம். பல நாட்டுத் தொழிலாளர்கள் “வேலை அனுமதி” பெற்று வந்து வேலை செய்து கொண்டிருந்தார்கள். இவர்களின் அண்டை நாடான மலேசிய நாட்டிலிருந்து வந்து அதிகாரபூர்வ அனுமதி பெற்றிருப்போர், அனுமதி பெறாது சட்ட விரோத நிலையில் பணி புரிவோர் ஆகப் பல தரத்தினரும் ரகத்தினரும் இருந்தனர்.

ஒட்டு மொத்தத்தில் சொல்வதென்றால் மட்டு மரியாதையற்ற பேச்சுகளில் அந்த மூவரும் அதிருப்தியடைந்தனர். அடிமட்டத் தொழிலாளர் களாகவும் கண்காணிப்பாளர்களாகவும்” சிறந்து விளங்கிப் பணி செய்து பழக்கப்பட்டவர்களுக்கு, பண்பாடற்ற நிலையில் பழகிக் கொண்டு இருப்போரிடையே வேலை செய்வது வெறுக்கத் தக்கதாக இருந்தது.

“மாண்புமிகு” என்பது வரும்; போகும்….! ஆயின், மானமிகு என்பது தான் நிலையானது. இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் “மானம்” கருதி, மூவருமே அத்துக்கூலி வேலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டனர்.

ஒரு சில மாதங்கள் ஓய்வு பெற்ற நிலையில் ஓடி மறைந்தன. இந்தக் காலக் கட்டத்தில் தான் தங்களின் “வாய்க்கு ருசியாகத்” தங்களின் சொந்தக் கைச் சமையலில் இன்பங் கண்டார்கள். பழமையின் அடிச்சுவடே இல்லாமல் பட்டினப்பாக்கம் பரிணமிக்கச் செய்ய வேண்டும் என்பது தான் அரசியலாரின் கொள்கை. அதனால் தனியார் நிலங்கள் எல்லாம் “நிலப் பற்றுமானம்” செய்து நவீனப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலையில் முயன்று கொண்டிருந்த அரசினர் அந்தப் பகுதி வாழ் வீட்டுச் சொந்தக்காரர்களுக்கு “நோட்டீஸ்” கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அந்தப் பரபரப்பான சூழ்நிலைகளுக்கு ஆட்பட்டுத் தவித்த ஆயிரக்கணக்கானோரில் அந்த மூவரும் அடங்குவார்கள்.

அரசாங்கத்து ஆணையை மீற முடியுமா? வீட்டைக் “காலி செய்து கொண்டு” வெளியேறித் தீர வேண்டும் என்ற விதிவசத்துக்குள்ளானார்கள்.

விடியாப் பொழுதா…? விடிந்தது பொழுது… வீட்டைக் காலி செய்து கொண்டு புறப்பட்டார்கள். வேறு வழி ஏதுமின்றி “தூரத்துப் பச்சை” நோக்கிச் சென்றார்கள். விருந்தினர்கள் வரவேற்கும் “முக மலர்ச்சி” கூட, அந்த வரவேற்பில் அவர்கள் காணவில்லை. “வந்து விட்டதே தொல்லை” என்பதன் வடிவமைப்புகளையே முகத் தெளிவில் வழிந்தொளிரக் கண்டு வருந்தினார்கள். “மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்” என்று உலகப் பொதுமறை தந்த வள்ளுவனாரின் வாய்மைக்கு இந்த மூவரும் தான் எடுத்துக்காட்டுகளா?

அறிவு பூர்வமாகச் சிந்தித்துக் கொண்ட அத்தனை முரண்பாடுகளையும் அந்த மூவரும் ஏக காலத்தில் எதிர்கொண்டு நின்றனர். “காத வழிப்” பிரிவு அல்லவே… ஆயினும் “காது வழி” தொடர்புக்குத் தொலைபேசி அமைந்தது…. ககனத்தின் சுருக்கம் தானே…!

“இராஜ மரியாதையை” எதிர்பார்த்து ஏங்கிய அவர்கள் தூரத்துப் பச்சையின் தோற்றம் வெறும் ஒரு “மாயை” என்று அறிவு பூர்வமாகவும், அனுபவ பூர்வமாகவும் ஒரு சில நாட்களில் உய்த்துணர்ந்து கொண்டு விட்டார்கள். அந்த ஆத்மார்த்த “வேள்வி” அடிப்படையில் மீண்டும் சந்தித்துப் பேசினார்கள்.

அறுபது வயதுக் கிழங்கள் அல்லவா……. அமைதியாக அமர்ந்து ஆழ்ந்து சிந்தித்தார்கள்… முந்திய நடப்புகளையும் பிந்திய எதிர்பார்ப்பு விளைவுகளையும் அடிப்படை தவறாமல் ஆலோசித்தார்கள். மூவரின் கருத்தும் ஓர் ஒருமைப் பாட்டுடன் அமைந்தொளிர்ந்தது.

“உங்களுக்கு ஆயுசு நூறுங்க; இப்பதான் உங்களைப் பத்திப் பேசிக்கிட்டிருந்தோம். இதோ வந்துட்டீங்க…!” என்று பல நூறு முறைகள் சக ஊழியர்கள் கூறியதுண்டு.

உதவிக்கரம் நீட்டிய போதெல்லாம், “நீங்க நூறாண்டு நல்லாயிருக்கணும்” என்று பெற்றோர் வாழ்த்தியதுண்டு..!

“காலத்தால் அழியாத கருத்துக் கருவூலங்களே… நூறாண்டு நூறாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ்ந்திடுக…” என்று கருத்தொருமித்து, உடன் பணியாற்றியிருந்த தொழிலாளத் தோழர்கள் பிரியா விடை விருந்தில் பேசி மகிழ்ந்ததும் உண்டு…!

மாசு மருவில்லா மனம் கனிந்த அந்த வாழ்த்துக்கள் ஒரு வேளை பலிதமாகி “நூறாண்டு” வாழ்ந்திடவும் கூடும் தான்…! அப்படி ஒரு வேளை ஆண்டவன் அருளால் ஆயுள் நீடிக்குமானால்..; எதிர்காலம்..?

அந்த மூவரும் “தூரத்துப் பச்சை”யின் பொய்மைத் தோற்றம் பொலிந்த போழ்து, அரசியல் தலைவர்களைப் போல் ஆக நெடுந்தூரம் எண்ணிப் பார்க்கும் “தூர நோக்குச்” சிந்தனையுடன் தங்களின் எதிர்காலம் பற்றி அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். உழைப்பதற்குத் தயாராக இருக்கும் அவர்களுக்கு ஒருவழி தோன்றாமல் இருக்குமா..?

அடுத்த நாள், செம்பவாங் பதின்மூன்றாவது மைலில் “சுல்தான்” திரைப்பட அரங்கு, செம்பவாங் தமிழர் சங்கம் ஆகியவற்றுக்குப் பின்னால் அமைந்தொளிரும் ஸ்ரீ நாராய மிஷின் தலைமைக் காரியாலயத்திற்குச் சென்று, மட ஆலயத்தின் “வெல்ஃபேர் ஆபீசர்” வெங்கட்ராம் அவர்களைச் சந்தித்துப் பேசினார்கள். பேச்சு வார்த்தைகளில் பெருத்த முரண்பாடுகள் எதுவும் இல்லாததால் உடன்படிக்கை காண்பது ஓர் எளிதான செயலாயிற்று.

ஸ்ரீ நாராயண மிஷினின் பொறுப்பில் இயங்கி வரும் “வயோதிக நோயாளிகள் இல்லத்தில்” வேலை வாய்ப்புப் பெற்றார்கள் குடியிருக்க ஓரிடம் குறைந்தபட்ச ‘அலவன்ஸ்’ ஊதியம், உணவும் உடையும்: தளர்ந்து விட்ட காலத்தில் “அடைக்கலம்” என்பது மட்டுமே இவர்களின் விழைவு. பிச்சை முத்து சமையல் உதவியாளர்; இஸ்மாயில் தோட்டக்காரர்; வீ கூன் சாய் உள்ளகத் தூய்மையாளர். கிளீனர், பொறுப்பேற்றுச் செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.

நிபந்தனை ஏதுமின்றிச் சேர்த்துக் கொள்ளும் நிலையிருந்தும், இந்த மூவரும் பேட்டிக்குள்ளாகி, உடன்படிக்கை முதலாய சடங்கு சம்பிரதாயத்துடன் ஒப்பந்த கையெழுத்தும் இட்டுச் சேர்வதற்கு உரிய காரணம் என்ன? என்று வெல்ஃபேர் ஆபீசர் வெங்கட்ராமன் விக்கித்துப் போனார் என்று கூடச் சொல்லலாம்.

நடமாடத்தக்க நோய் நொடி எதுவும் இல்லாத தாங்கள் பொய்யும் புரட்டும் கூறி இந்த முதியோர் இல்லத்தில் சேர்ந்து வேளை தவறாமல் உண்டு, வெறுமனே காலம் போக்குவது என்பது மனச்சாட்சிக்கு விரோதமான ஒரு செயலாகும் என்று கருதியதால் தான் இந்த முடிவுக்கு வந்தோம் என்று கூறிய போது இந்த உலகத்தில் மனிதாபிமானங்கள் அறவே செத்தொழிந்து போய் விடவில்லை என்பதிலே அந்த ஆபீசரும் மன நிறைவுகொண்டு மகிழ்ந்தார் என்றால் அஃது மிகையாகாது.

ஸ்ரீ நாராயண மிஷின் வயோதிக நோயாளிகள் வாழ்வில்லத்தில் இருக்கின்ற “உறுப்பினர்கள்” எல்லோரும் இந்த மூவரையும் தங்களையொத்தவர்கள் என்றுதான் கருதிக் கொண்டிருக்கின்றார்கள். ஏனென்றால் அங்கே வேலைக்குச் சேர்ந்த ஊழியர்களாய்த் தோற்றமளிக்காமல் உண்மை வயோதிகராய் உலவுகின்றார்கள். திடகாத்திரம் என்பது தெய்வம் தந்த திருவருள் என்ற நம்பிக்கையின் திரட்சி அல்லவா..?

இந்த மூவரும் தத்தம் கடமைச் செய்யும் போது இதற்கெல்லாம் வேலையாட்கள் உண்டு. உட்காருங்கள் பேசிக் கொண்டிருப்போம் என்று மற்றவர்கள் சொல்லும் போது, இயலும் போது செய்வோம்; அது நமது கடமை. இயலாமை ஏற்பட்டு விட்டால் விட்டு விடுவோம்; அது நமது முதுமை… என்று வினயமாகச் சிரித்துக் கொண்டே, மாலையில் இரவில் பேசிக் கொண்டிருக்கலாம் என்று கூறிச் சென்று விடுவார்கள்.

சிங்கப்பூர் அரசாங்கம் இப்போது கொண்டு வந்திருக்கும் “குறைந்த பட்ச வேலை ஓய்வுத் தேவைகளை நிறைவு செய்தல்” என்னும் மத்திய சேமநிதித் தொகை ஒதுக்கீட்டுத் திட்டம் தங்களைப் பொறுத்தவரை காலங் கடந்து வந்திருக்கின்ற ஒரு சலுகைத் திட்டமாகக் கருதி வருந்திக் கொண்டார்கள்.

காலம் காலமாய் உழைத்ததன் பலனாய் உருவாகியிருந்த ம.சே.நி. தொகை முழுவதையும் எடுத்து, பிள்ளைகள் காரணமாய்த் தாங்கள் பட்டிருந்த கடன்களுக்குத் தீர்வு கண்டதோடு. எஞ்சியிருந்தவற்றை எல்லாம் தூரத்துப் பச்சை நோக்கில் “ஏப்பம்” விட்டு விட்ட எகத்தாளத்தின் விளைவே இன்றைய இந்த நிலை… என்பதையும் அவர்கள் எண்ணிப் பார்த்துக் கொள்ளத் தவறவில்லை….!

இந்த உலகத்தில் மனிதாபிமானமும் நன்றியுணர்ச்சியும் அறவே செத்தொழிந்து போய்விடவில்லை என்பதற்கோர் எடுத்துக்காட்டுகளாய் இந்த மூவரின் ஆளுமைக்குட்பட்டு பணிபுரிந்து தொழில் நுட்பங்கள் கற்றுக் கொண்ட பலர் அவ்வப்போது இவர்களைப் பார்த்துப் போக வருவதுண்டு.

அவ்வாறு அவர்கள் வரும்போது “வெறுமனே ” வருவதில்லை. மரபுவழிப் பண்பாட்டின் படிதான் வருவார்கள். அதாவது குழந்தைகள் இருக்கும் குடும்பத்திற்குச் செல்லல், நோயுற்று மருத்துவ மனையில் இருப்பவரைப் பார்க்கச் செல்லல், முதியோர் இருக்கும் இல்லம் செல்லல் ஆகிய சந்தர்ப்பங்களில் “கையுறை” கொண்டு செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் ஆத்மார்த்தத்தோடு அவர்களுக்கு “வேண்டிய சிலவற்றை வாங்கிக் கொண்டு வருவார்கள்.

பதவியில் இருக்கும் போது கொண்டு வந்தால் அதற்குப் பெயர் “கையூட்டு”: அதனை ஏற்றுக் கொள்வது தவறு….! முதுமைத் தளர்ச்சியின் முழுமையில் இருக்கும் போது கொண்டு வந்தால் அதற்குப் பெயர் “கையுறை” இதன ஏற்றுக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. ஏனென்றால் இப்போது அவர்கள் எதையும் எதிர்பார்த்துச் செய்யவில்லை. எனவே, ஏற்றுக் கொள்ளலாம் என்றாலும் அவர்கள் தொழில் துறையின் “வாரிசுகளை ஏசத்தான் செய்வார்கள். அத்தகையவாறு அவ்வப்போது வருகின்ற தங்களின் அன்பு நண்பர்களிடம் இந்த மத்திய சேமநிதி இருப்பின் குறைந்த பட்ச ஓய்வுத் தேவைகளின் ஒதுக்கீடு குறித்து அறிவுறுத்துப் பேசுவார்கள்.

தங்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றங்களின் அனுபவ முதிர்ச்சிகளை விளக்கிக் கூறி அரசியலாரின் ஆழ்ந்த சிந்தனையின் பட்டொளிர் திட்டத்தின் பயன்கள் பற்றியும் எடுத்துச் சொல்வார்கள். பட்டறிந்த மூப்பறிவின் பயனுள்ள பிரதிபலிப்பு என்று பக்தி சிரத்தையுடன் ஏற்றுக் கொள்வார்கள். அது பற்றி ஆழ்ந்து சிந்தித்துத் தெளிவார்கள்.

எப்போதும் அரசியல் கருத்துக்களை மேலெழுந்த வாரியாக நுனிப்புல் மேய்ந்திடும் பழக்கப்பட்ட பொது மக்களுக்கு பட்டறிவு மிக்கோரின் பண்பார்ந்த தெளிவுரைகள் ஒரு பாட போதனையாக ஆகுமன்றோ…?

குறைந்த பட்சத் தொகையாக ஒரு முப்பதாயிரம் வெள்ளியை ஒதுக்கீடு செய்து வைத்து அறுபது வயதுக்குப பின் எழுபத்தைந்து வயது வரை மாதந்தோறும் இருநூற்று முப்பது வெள்ளியை ஏதோவொரு மாதாந்திர வருவாய் போலப் பெற்றுக் கொண்டிருக்கும் இந்த ஓர் அருமையான வரைமுறைத் திட்டம் அப்போது இருந்திருக்குமானால் ம.சே.நிதித் தொகை முழுமையையும் எடுத்து ஏப்பம் விட்டிருக்க முடியாது… எடுத்துக் கொள்ள அரசியல் சட்டம் அனுமதித்திருக்காது.

தங்கள் தம் உழைப்பின் உதிரிப்பாகம் ம.சே. நிதித் தொகை முழுமையையும் எடுத்து மகிழ்ச்சியுடன் முக்குளிக்க நினைப்போர்க்கு இந்தச் சட்டச் சீரமைப்பு இன்றைய நிலையில் ஒரு வேளை கசப்பாகத் தோன்றக் கூடும்.. ஆயின், இந்தச் சட்டம் தங்கள் “வாழ் நாளில்” வாராதிருந்த குறையை எண்ணி வருந்துகின்ற மூவரே பிழை திருத்தம் போல் அமைந்த சட்டத்தின் பிரதிபலிப்புகளுக்குச் சான்றுகளாய் விளங்குகின்றார்கள்.

ஆங்கிலப் பேரரசு ஆட்சியின் போது அமைக்கப்பட்ட இந்த முதுமைக் காலச் செழுமைச் செல்வமாம் ம.சே நிதிச் சேமிப்புத் திட்டம்; காலங்கள் தோறும் மாறி வந்த அரசியல் பின்னணிச் சீர்மையில் மாற்றங்கள் பெற்ற சம்பளப் பின்னணி நிலைகள் பொருட்படுத்தாது “சரிக்கு சரி”யாகத் தான் பெறும் சம்பளத்தில் இருபத்தைந்து விழுக்காடு வரை உயர்ந்து மேலீடு கண்டது. இரண்டரை விழுக்காட்டிலிருந்து இருபத்து மூன்று விழுக்காடு வரை “சம்பளப் பற்றுமானம்” செய்யப்பட்ட போது சலித்துக் கொண்டோர். சிறுதுளி பெரு வெள்ளம்” என்ற அமைப்பில் சிறுகச் சிறுகச் சேர்ந்து செழுமைமிக்கதொரு அடுக்குமாடி வீட்டினை விலை கொடுத்து வாங்கும் அளவு “சேமிப்பு” கருதிப் பார்க்க முடியாத அளவு கால ஓட்டத்தில் கனிந்திருப்பது கண்டு களித்து மகிழ்ந்த னர்.

அரசியலார் செய்யும் ஆழ்ந்த தூர நோக்குச் சிந்தனையில் மலர்ந்தொளிரும் நன்மை புரி திட்டத்தின் சட்டத் திருத்தங்களை ஆரம்பத்தில் அரசோச்சுவோரின் ஆதிக்க உணர்வின் பிரதிபலிப்பு என்றெல்லாம் அலுத்துக் கொள்ளும் குடிமக்கள் நாளடைவில் நயந்து வரும் பயன் கண்டு நனி மகிழ்வு எய்திச் சிறக்குங் காலத்தில போற்றிப் புகழ்வார்கள். இது நாளறிந்த நாடறிந்த நானிலமே அறிந்த உண்மை …..!

பாராளுமன்ற உறுப்பினர்கள் பத்தாம் பசலிகள் அல்லரே…. படித்தறிந்த பட்டறிவும் மிக்க பண்பாளர்களல்லவா? எல்லாப் பக்கமும் இயைந்து பார்த்தே சட்டத் திருத்தம் செய்வார்கள். ஆழ்ந்து சிந்திக்கத் தோன்றாக் காரணத்தால், நிலையால் ஆத்திரப்பட்டு; ஆட்சியின் சட்டத்திற்குட்பட்டு அடங்கிப் போய், பின் ஆரவமறச் சிந்தித்து அதன் பலன் காணும் போதில் ஆரவாரித்து மகிழ்ந்திடுவார்கள். இதுவுமொரு இயல்பேயாகும்.

இத்தகையவாறெல்லாம் தங்களின் தோழர்களுக்கு : அனுபவ முதிர்ச்சி பெற்ற அந்த மூவரும் எதிர்பார்ப்பு ஏமாற்றம் பற்றி எடுத்துரைத்து அறிவுரை கூறி மகிழ்வார்கள். அவர்கள் தம் அத்தியந்த நண்பர்களும் அவர்களின் அறிவுரைகளை மதித்துக் கேட்டுக் கொள்வார்கள்.

ஆய்த எழுத்து போல் அமைந்த அந்த மூவரும் அழித்தெழுதாச் சித்திரங்களாய் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். இரவு மணி எட்டாகி விட்டதன் எதிரொலியாகச் சுவர்க் கடிகாரம் ஒலித்து ஓய்ந்தது. ஆம்… அதோ.., தங்களின் சகாக்களுக்குப் பணி புரிய “தக்கன” செய்ய எழுந்து சென்று கொண்டிருக்கின்றார்கள்…

இப்போது இயற்கையின் பசுமை எழிலாய் “தூரத்துப் பச்சை”யைப் பார்க்கவே அவர்கள் விரும்புவதில்லை.

– கற்பனை மலர்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: டிசம்பர் 1995, தமிழவேள் நாடக மன்றம், சிங்கப்பூர்.

மு.தங்கராசன் தமிழகத்தின் திருச்சி மாவட்டம் முசிறி வட்டத்திலுள்ள தளுகை பாதர்பேட்டை என்ற ஊரில் 1934ல் பிறந்தார். இரண்டாவது வயதிலேயே தனது தாயை இழந்தவர், தந்தையோடு மலாயாவுக்கு வந்தார். ஜோஹூர் மாநிலத்திலுள்ள ‘நியூஸ்கூடாய்’ தோட்டத் தமிழ்ப் பள்ளியியில் ஆசிரியராக இருந்த தனது தந்தையிடம் தமிழ்க் கல்வியைக் கற்றார். 1955ல் ஆசிரியர் பட்டயம் பெற்ற இவர் உமறுப்புலவர் தமிழ்ப் பள்ளி உட்பட பல்வேறு பள்ளிகளில் தலைமையாசிரியராகவும் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1955ல் தமிழ்முரசில் பிரசுரமான…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *