அகத்தியரும் தேரையரும்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 2,601 
 
 

தீராத தலைவலியால் தன்னிடம் வந்த நோயாளியின் மண்டையை அறுவைச் சிகிச்சை முறையால் பிளந்து பார்த்தார் அகத்திய மாமுனிவர். அவன் மூளையிலே ஒரு தேரை – கையால் எடுக்க வரவில்லை. அவன் மூளையைக் காலால் பற்றிக் கொண்டிருந்தது. எடுக்கவும் இயல வில்லை; நசுக்கவும் முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தபோது,

அவர் அருகில் இருந்த மாணாக்கர்களில் ஒருவர் – கொட்டாங்குச்சியிலே நீரைக் கொண்டுவந்து தேரையின் முன்னே காட்டினார். அது மூளையை விட்டுத் தண்ணிரிலே தாவிக் குதித்தது. நோயாளிக்கு வலியும் தீர்ந்தது.

முனிவருக்குப் பெரிதும் வியப்பு – நோயாளியை அறுவைச் சிகிச்சை முடித்து அனுப்பிவைத்தார்.

அதிலிருந்து அம் மாணக்கர்க்கு ‘தேரையர்’ என்றே பெயர் வழங்கலாயிற்று –

தம்மைவிடத் தம் மாணாக்கர் சிறந்திருப்பதா? அதை விரும்பாத அகத்தியரும், வடக்கே வெகு தொலைவில் உள்ள ஊருக்குத் தேரையரை மருத்துவம் செய்ய அனுப்பி விட்டார்.

ஆண்டுகள் பலவாயின. தன் மாணாக்கர் (தேரையர்) இன்னும் உயிரோடு – இருக்கின்றாரா என்று அறிய வேண்டி, அறிந்துவரும்படி மற்றொரு மாணவரை அனுப்பினார். போகும்போது அவரிடம், நீ சாலையிலே போகுங்காலத்துப் புளியமர நிழலில் தங்கி இளைப்பாறு: புளியங்குச்சியால் பல்துலக்கு; புளிய விறகைக் கொண்டு சமைத்து உண்டு செல் என்றார்.

அம் மாணவரும் குரு கட்டளைப்படியே முப்பது நாளாக நடந்துசென்று தேரையர் இருப்பிடம் சேர்ந்தார். வந்தவர் எலும்பும் தோலுமாக உடல் இளைத்திருப்பது கண்டு ‘என்ன காரணம்?’ என்று தேரையர் அவரை விசாரித்தார் அவர் அகத்தியர் சொல்லியனுப்பிய முறையை நவின்றார். (புளியங்கதை)

தேரையர் அவருக்கு ஆறுதல் கூறி, தன் வணக்கத்தை அகத்தியருக்கு தெரிவிக்கும்படி சொன்னார். அவர் புறப்படும்போது, நீ வேப்பமர நிழலில் தங்கி இளைப்பாறு; வேப்பங்குச்சியால் பல்துலக்கு, வேப்ப விறகு கொண்டு சமைத்து உண்ணு” என்று சொல்வி அனுப்பிவைத்தார்.

திரும்பும்போது அப்படியே செய்துகொண்டு நடந்து அகத்தியரை பார்த்தார் அவரிடம் பேச வாயைத் திறந்தார் அந்த மாணவர்.

அதற்குள் அகத்தியர், மாணவரை நோக்கி, “நீ ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. எனக்கு எல்லாம், தெரியும். தேரையர் உயிரோடு இருக்கிறான். நன்றாகவும் இருக்கிறான். மருத்துவத்தில் சிறந்து விளங்குகிறான். நீ அவனைக் காணும்போது மிகவும் இளைத்திருந்தாய் – காணாவிட்டால் திரும்பி இங்கே வந்திருக்கமாட்டாய்; இறந்திருப்பாய்; அவன் சொல்லித்தானே. வேப்பமர நிழலில் தங்கி, வேப்பங்குச்சியால் பல்துலக்கி, வேம்பு விறகால் சமையல் செய்து உண்டு நலமாக இங்கு வந்து சேர்ந்திருக்கிறாய்’ – என்றார்.

சித்த மருத்துவத்திலே இப்படி ஒரு வரலாறு உண்டு.

இது சித்தமருத்துவ வரலாற்றையும், சித்த மருத்துவர் களின் போக்கையும், புளியின் கொடுமையையும், வேம்பின் நன்மையையும் நமக்குக் காட்டுகிறது.

– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email
கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை (நவம்பர் 11, 1899 - டிசம்பர் 19, 1994) பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர். துவக்கத்தில் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோதும் அவரது திராவிடநாடு கோரிக்கையுடன் உடன்படாதவர். அது தமிழரின் தனித்தன்மையை நீர்த்துவிடும் என எண்ணினார். இவர் எழுதியுள்ள 23 நூல்களும்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *