ஃபானி புயலும் நானும்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 24, 2019
பார்வையிட்டோர்: 11,541 
 
 

“டேய் மழடா…” என்று அருகில் இருந்த நண்பர் ஆரவாரமாக கூச்சலிடும் போது, நான் அவர் அருகில் தான் அந்த வாடகை வீட்டின் விட்டத்தைப் பார்த்துக்கொண்டு படுத்திருந்தேன். அந்த ஆரவாரம் கலந்த மகிழ்ச்சிக் குரலைக் கேட்டு “அப்டியாணா….” என்றபடி ஆர்வமுடன் எழுந்து வாசலை நோக்கி ஓடினேன். அந்த நண்பரும் என் பின்னாடியே வந்தார்.

மரத்தால் ஆன வாசல் கதவைத் தாண்டி இரண்டு அடியில் உள்ள இரும்பாலான வெளிக்கதவைத் திறந்து வெளியே பார்த்துக்கொண்டு “ஆமாணா, மழ பெய்து… ” என்று ஆச்சரியமாக மகிழ்ச்சியாகவும் என் முகம் மாறியது.

ஆச்சரியப்படும் அளவுக்கு அப்படி என்ன என்று கேட்டால், இருக்காதா பின்னே, நான் பாண்டிச்சேரிக்கு வந்து நான்கு மாதம் ஆகிறது. நான் வந்தது முதல் ‘பாண்டிச்சேரியில் மழை’, என்ற வாக்கியம் என் காதுகளிலோ அல்லது செய்திகளிலோ ஒரு துணுக்கு கூட கேட்டது இல்லை. பாண்டிச்சேரி என்ற கடலோர பாலைவனத்திற்கு வந்துவிட்டேனோ என்ற அச்சம் கூட எனக்கு இருந்தது. அதனாலே தான் அந்த ஆச்சரியம்.

அது அப்படி ஒன்றும் பெரிய மழை அல்லதான், அதனால் தெருவில் வந்து நின்று வானத்தைப் பார்த்தேன். கிரீஸ் டப்பாவை வானத்தில் கொட்டி விட்டது போல மேகங்கள் சூழ்ந்து நின்றது (என் அலுவலகத்தில் ஒரு பெண், அவள் கூந்தலை விரித்து படரவிடும் போது அது அவளின் பின்புறத்தை காணாமல் போகச் செய்திருக்கும், அதுபோல் கருமேகங்களால் வானம் காணாமல் போயிருந்தது, இப்படியும்வர்ணிக்கலாம்). “இன்னைக்கு சரியான மழ இருக்கு” என்று மனதில் நினைத்துக் கொண்டு மறுபடியும் வாசலில் போய் நின்று மழையை ரசித்துக் கொண்டிருந்தேன்.

அந்த தார் வீதியின் ஓரத்தில் சிறிது கொட்டிக் கிடந்த மண்ணில் இருந்து வாசனை வந்து கொண்டிருந்தது. சரியாக ஒரு பத்து நிமிடம் கழித்து வாசனை மட்டும் வந்தது, மழை சிறிது சிறிதாக குறைந்து காதலியின் முத்தம் போல தூறல் மட்டும் முகத்தில் விழுந்து கொண்டிருந்தது.

அப்போது எனக்கு ஒரு எண்ணம் எழுந்தது, “இந்த க்ளைமேட்கு ஒரு டீ, ஒரு சிகரெட், செமையா இருக்கும்”, என்று மனதில் நினைத்துக்கொண்டு கடிகாரத்தைப் பார்த்தேன். அதில் சிறிய முள் ஆறை நோக்கிக் கண் அடித்துக் கொண்டிருந்தது. பெரிய முள், சிறிய முள்ளிடம் கோபித்தது போல், நேர் எதிர் திசையில் பார்த்துக் கொண்டிருந்தது. நான் தினசரி தேநீர் அருந்தும் நேரம்தான் அது, என்றாலும் அந்த மாலை நேரம் எனக்கு சிறப்பாகவும், உள்ளூர மனதில் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

உடனே வீட்டின் உள்ளே சென்று அலமாரியில் மடித்து வைக்கப்படாத ஒரு சாம்பல் நிற டி-சர்ட்டை உருவி எடுத்து, அதில் என் உடம்பைத் திணித்துக்கொண்டு வாசல் வந்து சேர்ந்தேன். அதே சாரல் விழுந்து கொண்டிருந்தது, லேசாக வீசிய காற்று என் காதலிகளை நினைவுக்கு கொண்டு வந்தது. மெதுவாக டீக்கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

டீக்கடை என் வீட்டிலிருந்து வடக்கில் பத்து மீட்டர் தொலைவில் சென்று இடது பக்கம் மறுபடியும் இருபது மீட்டர் சென்றால் வந்துவிடும். தினமும் அங்குதான் சென்று தேநீர் அருந்துவேன். திரும்பும் தெரு முனையில் ஒரு பஞ்சர் கடை இருக்கும், அதன்பின் முஸ்லிம் பெண் ஒருவர் காலனி கடை வைத்திருப்பார், இப்படியாக பலதரபட்ட கடைகள் இருக்கும்.

அந்தக் கடைகளைக் கடந்து டீக்கடையை நெருங்கி விட்டேன். நெருங்கும் போதே தென்றாலாய் வீசிக் கொண்டிருந்த காற்றின் வேகம் கொஞ்சம் கூடியது. பாண்டிச்சேரியின் எல்லைப் பகுதி வழியாக வந்த அந்த மெதுவான காற்று, அங்கு மறைவாக வளரும் கஞ்சா செடிகளை முகர்ந்து பார்த்து விட்டு போதையில் புயலாக மாறி வழி தெரியாமல் இந்த சாலைகளில் வந்து வேகமாக அலைந்து கொண்டிருந்தது.

கடை உள்ளே சென்ற உடன் ஒரு குரல் விரக்தியுடன் வந்தது, “லேசா காத்தடிச்சா போதுமே, எப்படா கரன்ட ஆஃப் பன்னலானு காத்துட்டு இருப்பாங்க போல… “, என்று சொல்லிக்கொண்டு ஒரு டீ போடும்படி கடைக்காரரிடம் கேட்டார் அந்த மெலிந்த சரீரம் கொண்டவர், ஆம் மின்சாரம் அணைந்து ஐந்து நிமிடங்கள் இருக்கும். இந்த நிலையில் அது நல்லதுதான் என்று நினைத்துக் கொண்டேன். “தம்பி உனக்கு டீ போடவாப்பா… ” என்று அந்த நரைத்த முடி கொண்ட கடைக்காரர் கேட்டார். நானும் “ம் ஆமாணே ஒரு டீ… ” என்றவாறு அமர்வதற்கு இருக்கையை பார்த்தேன், அவை முன் பெய்த மழையில் சிறிதாக நனைந்திருந்தது. சரி நின்று கொண்டே இந்த மழையையும் காற்றையும் ரசிக்கலாம் என்று முடிவு செய்து கொண்டேன்.

ஆனால் இப்போது காற்று ரசிக்கும் படியாக இருக்கவில்லை. அகோரமாக வீசிய காற்று அங்கு சாலையோரம் சிறிதாக வளர்ந்து இருந்த புங்கை மரங்களிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தது. அந்த சிறிய மரங்களும், சாலையின் மறுபக்கம் இருந்த பெரிய வேப்ப மரங்களும், சில பெயர் தெரியாத மரங்களும், புயல் காற்று அடிப்பது போல ஆடிக்கொண்டு அங்குள்ள சிறிய வீடுகளை பயமுறுத்திக் கொண்டிருந்தது. ஆம் அது புயல் காற்று தான், நான்கு தினங்களுக்கு முன்னால் செய்தித்தாளில் படித்த ஞாபகம் வந்தது, அதற்கு ஃபானி என்று கூட பெயர் சூட்டியிருந்தார்கள். ஆனால் அது இரண்டு தினங்களுக்கு முன்னால் ஒடிசா பக்கம் திசை திரும்பி விட்டது என்றும் ஒரு செய்தி படித்திருந்தேன். எது உண்மை என்று இப்போது புலப்பட்டுவிடும் என்று சாலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க, தேநீரும் கையில் வந்து விட்டது, அந்த நேரத்தில், அந்த தேநீரின் சுவையை சொல்லவே முடியாது. அவ்வளவு சுவை.

மின்சாரம் இல்லா அந்த சாலையில் வாகனங்களின் முகப்பு விளக்குகள் சிறிய மயக்க உணர்வை ஏற்படுத்தி இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக, பால் கொதித்துக் கொண்டிருந்த அந்த பாத்திரத்தின் மூடி என் முன்னால் கீழே விழுந்தது. சிறிது பயந்து விட்டேன் என்று கூட சொல்லலாம், “இத்தாப்பா அத இங்க எடு,” என்று கடைக்காரர் என்னிடம் சொல்லிவிட்டு, “இந்தாடி இங்க வா, இத உள்ள எடுத்து வையி, இது நம்ம கூரைய பிக்காம விடாது,” என்றவாறு காஸ் அடுப்பை அணைத்தார். அந்த கடைக்காரரின் மனைவி பால் பாத்திரத்தை சிறிய துணியால் பிடித்து தூக்கி உள்ளே வைத்தாள். இதிலிருந்து காற்றின் உக்கிரத்தை என்னால் உணர முடிந்தது.

அப்போது மழை அவ்வளவாக பெய்ய வில்லை. புயல் காற்று மேகங்களின் ரோமங்களை மட்டும் தன் வேகத்தால் உதிர்த்திக் கொண்டிருந்தது சிறு தூரல்களாக.

பின்னாலிருந்த ஒரு குரல், “ஹே,… தள்ளாத தள்ளாத,” என்று கூறிக் கொண்டே வெளியில் நின்று கொண்டிருந்த சைக்கிளைப் பிடிக்கச் சென்றது. பத்து ரூபாய் மதிப்பிலான தேநீரை பருகி விட்டு, க்ளாஸை சர்க்கரை டப்பா அருகில் வைத்துவிட்டு, பதினைந்து ரூபாய் மதிப்பிலான சிகரெட்டை வாங்கிப் பற்ற வைத்தேன். நான் கரைப்பதை விட அந்த போதைக் காற்று என் சிகரெட்டை கரைத்துக் கொண்டு மேலும் போதையாகிக் கொண்டிருந்தது.

தூரத்தில் எங்கோ உள்ள கடைகளின் பெயர்ப் பலகைகள் மத்தள இசைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. சாலை எதிரே இருந்த காய்கறிக் கடைகள் இன்னமும் மூடாமல் இருப்பதை, ஒரு நொடி ஒளி தந்த மின்னல்களால் காண முடிந்தது. சாலை ஓரமாக ஒரு நாற்பது வயது உள்ள நடுத்தர பெண், விரிந்த குடையை மடக்க முயற்ச்சித்து, என்னைக் கடந்து சென்றாள். ஒரு முதிய வயது பெண் குடை இல்லாமல் மிக சௌகரியமாக கடந்து சென்றாள். அந்த பெண்ணிற்கு ஒருவேலை குடைகள் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கலாம்.

பெருமழை வருவதற்குள் வீட்டிற்கு சென்று விட வேண்டுமென்று என் மனம் சொல்லவே, இருபத்து ஐந்து ரூபாவை கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு, பாதி கரைந்த சிகரெட்டை வைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன். முழுதும் இருட்டியிருந்த அந்த சாலையில், எதிர்வரும் வாகனங்களின் மஞ்சள் விளக்குகள் கண்களை கூச வைத்தது. கை ஒன்றை இரு புருவங்களுக்கு மேல் வைத்துப் பார்த்துக்கொண்டு நடந்தேன்.

சிகரெட் கரைந்து முடிந்தது, வீட்டின் வாசலும் வந்து விட்டது. மழையின் வேகம் இப்போது கொஞ்சம் கூட ஆரம்பித்திருந்தது. அப்போது அங்கு ஒரு சம்பவம் நடந்து முடிந்ததைக் காண முடிந்தது, இரண்டு வயது மதிக்கத்தக்க ஒரு புங்கைமரத்தை இரண்டு பேர் இழுத்துக்கொண்டு, எங்கள் வீட்டின் அருகில் இருந்த காலியான இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள்.

அது எங்கள் பக்கத்து வீட்டின் வாசல் முன் நின்று கொண்டிருந்த மரம், வேரோடு முறியாமல், தண்டின் பாதியில் ஒடிந்து இருந்தது. அந்த வீட்டு அம்மா கூட, மரம் முறிவதற்கு முன்னால், “ஹே, தள்ளாத தள்ளாத.. “, என்று சொல்லியிருக்கலாம் என்று நினைத்துக்கொண்டே என் வீட்டின் உள்ளே சென்றேன்.

இதுதான் வானிலை ஆய்வு மையம் அறிவித்த ஃபானி புயல் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இரு தினங்கள் கழித்து ஒடிசாவில் புயல் பெரு வாரியாக தாக்கியது என்பதை அறிந்தேன். அந்த புயலின் உக்கிரத்தை சில காணொளிகள் மூலம் காண முடிந்தது. அது நான் இங்கு பார்த்த ஃபானி புயல் போல இல்லை, புயலே இல்லை என்று கூட சொல்லலாம். ஒடிசா பகுதிகளில் பெருவாரியாக சேதம் ஏற்பட்டிருந்தது. தேர்தல் நேரம் என்பதால் அந்த சேதங்களைப் பார்ப்பதற்கு, மாண்புமிகு பிரதமர் அவர்கள் நேரில் சென்றார். அப்போது நான் நினைத்துக் கொண்டேன், “கஐா புயலும் தேர்தல் நேரத்தில் வந்திருக்கலாம்”, என்று.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *