ஹீரோயின்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 7, 2016
பார்வையிட்டோர்: 7,805 
 

காலை பத்து மணி.

வீட்டிலிருந்து படப் பிடிப்பிற்கு புறப்படும் முன் தன் முகத்தை ஒரு தடவை கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள் பிரபல முன்னாள் ஹீரோயின் சியாமளாதேவி.

கண்களின் கீழே கரு வளையங்களும், பல வருடங்களாக தொடர்ந்து மேக்கப் போட்டதன் அடையாளமாக தடித்துப்போன கன்னங்களும், அடிக்கடி ஏற்பட்ட லிப்ஸ்டிக் உரசல்களால் வெளிறிய உதடுகளும், தலையில் அலை அலையாக வெளிப்பட்ட நரை முடியும், அவளுக்கு வயதாகி விட்டதை பறை சாற்றியது.

இருபது வருடங்களுக்கு முன் தனது குடும்பப் பாங்கான அமைதியான அழகினாலும், சிறந்த நடிப்பாற்றலாலும், தமிழக ரசிகர்களை தன் கட்டுப் பாட்டில் வைத்திருந்தாள் சியாமளாதேவி. பிரபல தமிழ்ப் பத்திரிக்கைகள் போட்டி போட்டுக்கொண்டு அவளை அட்டையில் பிரசுரித்து ரசிகர்களை மகிழ்வித்தன. அவள் கடித்த ஆப்பிளை ஏலத்தில் எடுக்க பெரிய போட்டியே நடந்த காலம் அது. அவளது அனைத்து படங்களும் நூறு நாட்களைத் தாண்டி ஓடிய நாட்கள் அவை. எத்தனையோ அவார்டுகள், ஷீல்டுகள், பாராட்டுக்கள் என மூச்சுவிட நேரமின்றி உற்சாகமாக வலம் வந்த ரம்மியமான வருடங்கள் அவைகள்.

வயதின் காரணமாக ஹீரோயின் அந்தஸ்திலிருந்து மெதுவாக அவள் ஒதுக்கப்பட்ட பின், சில வருடங்கள் அமைதியாக இருந்தாள். தனிமையும், தன்னை எல்லோரும் மறந்து ஒதுக்கி விட்டார்களோ என்கிற ஏக்கமும் அவளை ஆட்டிப் படைத்தன. அந்த ஏக்கத்தை தீர்க்கும் வகையில் சென்ற மாதம் ஒரு பிரபல தயாரிப்பாளர் அவளை வீட்டிற்கே வந்து சந்தித்து தான் எடுக்கப் போகும் ஒரு பெரிய பட்ஜெட் படத்தில், ஹீரோவின் அம்மாவாக நடிப்பதற்காக அவளிடம் பேசி மூன்று லட்சம் முன் பணமாக கொடுத்து ஒப்பந்தம் செய்தார்.

இன்று முதல், அதன் படப்பிடிப்பு ஆரம்பம். சியாமளாதேவியின் டிரைவர் எட்டிப் பார்த்து, “அம்மா ஷூட்டிங்கிற்கு நேரமாச்சு..போகலாமா?” என்றான்.

போர்டிகோவிற்கு வந்து, தன்னுடைய பென்ஸ் காரில் ஏறி பின் இருக்கையில் அமர்ந்து கொண்டாள். முதல் தடவையாக, ஹீரோயின் அல்லாத வயதான அம்மா ரோலில் நடிக்க வேண்டுமே என்கிற ஆதங்கம் அவளிடம் தோன்றியது.

அரை மணி நேர பயணத்திற்குப் பிறகு, ஷூட்டிங் நடக்கவிருக்கும் ஒரு பெரிய ஒரு பெரிய வீட்டின் முன் கார் நின்றது. சியாமளாதேவியைப் பார்த்ததும் புரொடெக்ஷன் மனேஜர் காரினருகே ஓடி வந்தார்.

சியாமளதேவி, அந்த வீட்டைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தாள். காரின் கண்ணாடியை சற்று இறக்கி, “மானேஜர் சார், இந்த வீட்டில்தான் ஷூட்டிங்கா?” என்றாள்.

“ஆமா மேடம்…இதே வீடுதான், டெக்னீஷியன்ஸ் எல்லாரும் வந்தாச்சு மேடம், மேக்கப் மேன் உங்களுக்காக ரெடியா இருக்காரு, ரிப்ளெக்டர், மொபைல் ஜெனரேட்டர் எல்லாம் ரெடிங்க.. ஹீரோவும், டைரக்டர் சாரும் இப்ப வந்துடுவாங்க”

சியாமளாதேவிக்கு மானேஜர் சொன்னது எதுவும் காதில் விழவில்லை. அந்த வீட்டைப் பார்த்தவுடன், காரின் நல்ல ஏ.ஸி யிலும் அவளுக்கு உடல் வியர்த்தது…. காரினுள்ளேயே அமர்ந்து கொண்டு, தலையை இரண்டு கைகளாலும் தாங்கிக் கொண்டாள்.

தன்னுடைய கடந்த காலத்தை நினைத்தபோது அவளுக்கு தலை வலித்தது.

1990ம் வருடத்தில் அவள் சினிமாவில் காலூன்றியதிலிருந்து பணமும், பெரிய புகழும் அவளைத் தேடி வந்தன. அவளுக்கு தான் சம்பாதித்த பணத்தில் கலை நயத்தோடு அரண்மனை போன்ற ஒரு பெரிய வீட்டைக்கட்டி அதில் நிரந்தரமாக குடியேற வேண்டும் என்கிற எண்ணம் அப்போது உதித்தது.

அதை உடனே செயல்படத் தொடங்கியபோதுதான், தன்னை ஒரு ஆர்க்கிடெக்ட் என்று அறிமுகப் படுத்திக்கொண்ட அழகான இளைஞன் ராம்குமாரை சந்தித்தாள். அந்த சந்திப்பு அடிக்கடி தொடர்ந்து, பிறகு காதலாக மாறியது. ராம்குமாரின் அன்பான பேச்சிலும், கவர்ச்சியான சிரிப்பிலும், சியாமளி, சியாமளி என்கிற கொஞசலிலும் சியாமளாதேவி சொக்கித்தான் போனாள். ராம்குமாரின் அறிவுரைப்படி பத்தாயிரம் சதுர அடியில் நிலம் வாங்கி, பூமி பூஜை போட்டு வீடு கட்ட ஆரம்பித்தாள்.

நாள் முழுவதும் பம்பரமாக ஷூட்டிங்கில் சுழன்றாலும், தன் வீட்டின் வளர்ச்சியிலும் அதிக அக்கறை காட்டினாள். வீட்டின் வளர்ச்சியும், ராம்குமாருடனான காதலின் வளர்ச்சியும் வேகம் பிடித்தன. ஒரு பிரபல நடிகையின் காதல் எளிதில் மறைக்கக் கூடியதா என்ன?

அவளையும் ராம்குமாரையும் இணைத்து ஏராளமான கிசுகிசுக்கள் பத்திரிக்கைகளில் பிரசுரமாயின. அவைகளை சியாமளாதேவி அவ்வப்போது மறுத்து வந்தாலும் காதல் என்னவோ அசுர வளர்ச்சி கண்டது.

சியாமளாதேவியின் பெற்றோர் அவளுடைய காதலுக்கு தீவிரமான எதிர்ப்பு காட்டினார்கள். நயமாகப் பேசியும் பின்பு மிரட்டியும் பார்த்தனர். எதிர்ப்பினிடையே வளர்வதுதானே காதல்? தான் விரும்பியபடியே ராம்குமாரை திருமணம் செய்துகொண்டு, பெற்றோரை விட்டு வெளியேறி தான் பார்த்து பார்த்து கட்டிய அரண்மனை வீட்டில் குடி புகுந்தாள் சியாமளாதேவி.

காதல் கல்யாணம் முதல் ஆறு மாதங்களுக்கு இனித்தது. பிறகு கசக்க ஆரம்பித்தது. ராம்குமார் தன்னை ஒரு ஆர்க்கிடெக்ட் என்று சொன்னது அவளை காதலிப்பதற்காக சொன்ன சுத்தமான பொய் என்று புரிந்தது. அவன் நிரந்தரமான வேலை எதுவுமின்றி வீட்டிலேயே அடைந்து கிடந்தான். சியாமளாதேவியின் சம்பாத்தியத்தில் வீட்டிலேயே உட்கார்ந்து தினமும் குடிக்க ஆரம்பித்தான். தன் கணவன் தன்னை ஏமாற்றியது மட்டுமின்றி அது பற்றிய குற்ற உணர்வு சிறிதும் இல்லாமல் மெத்தனமாக இருந்தது சியாமளாதேவிக்கு மிகுந்த வேதனையளித்தது.

எனினும் தன்னுடைய ‘குடும்பப் பெண்’ இமேஜ் ரசிகர்களிடையே அடிபட்டு விடக்கூடது என்பதால் பொறுமை காத்தாள். ‘கணவரிடமிருந்து தான் எதிர்பார்ப்பது அவரின் அன்பு மட்டுமே, அவர் எனக்காக எதுவும் சம்பாதித்து தர வேண்டாம்’ என்று தனக்குள் பொய்யுடன் சமரசம் செய்து கொண்டாள்.

சியாமளதேவி பிஸியாக படப் பிடிப்புகளை முடித்துக்கொண்டு இரவு வீடு திரும்பும்போது, அந்த வீட்டில் அவளுக்கு நிம்மதி கிடைக்காது. அவளது கணவனின் குடும்பத்தினர் பகலில் நன்கு தூங்கிவிட்டு, இரவில் மியூஸிக் சிஸ்டத்தை அலறவிட்டு கும்மாளமடித்தனர். அவளுக்கு என்ன வேண்டும், எது வேண்டும் என்று அன்புடன் அவளிடம் கேட்க அந்த வீட்டில் எவருமில்லை. இவள் உணர்வுகளுக்கு அங்கு மதிப்பேயில்லை. சியாமளாதேவி
மிகவும் கட்டுப்பாடான வெஜிடேரியன் என்று தெரிந்தும், வீட்டிலேயே புலால் சமைத்து உண்டனர். ஷூட்டிங் என்று இரவு பகலாக தொடர்ந்து நடித்து, கணவனுக்கும் அவனது குடும்பத்தாருக்கும் ஒரு பணம் காய்ச்சி மரமாகத்தான் இவளால் வாழ முடிந்தது.

துப்பில்லாத கணவனையும், அவன் குடும்பத்தினரையும் திருப்தி படுத்த வேண்டிய நிலையை நினைத்து அடிக்கடி நொந்து கொண்டாள். பணம், புகழ், சமுதாயத்தில் மரியாதை எல்லாம் இருந்தும் , தனக்கு குடும்ப வாழ்க்கை சரியாக அமையாமல் தான் ஏமாற்றப்பட்ட தன்னுடைய முட்டாள் தனத்தை எண்ணி எண்ணி தினமும் இரவு படுக்கையில் தூக்கம் வராது ரத்தக் கண்ணீர் விட்டாள். தானே இந்த அவல வாழ்க்கைக்கு அஸ்திவரம் போட்டது குறித்து கூசிப்போனாள். மறுபடியும் பெற்றோர்களிடம் திரும்பிச் செல்லலாமென்றால் ‘இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவர்களைப் பார்ப்பது’ என்று தனக்குள் மறுகினாள்.

பூகம்பம் வெடித்த அந்த நாள்…

இரவு பத்து மணி. ஷூட்டிங் முடிந்து தலைவலியுடன் மிகவும் அசதியும்சேர வீட்டிற்குள் நுழைந்தாள் சியாமளாதேவி. ராம்குமாரும் அவளது குடும்பத்தினரும் புது உடைகளில் மின்னியபடி, கைகளில் விஸ்கி கிளாசுடன் இருந்தனர். வீடு முழுவதும் கலர் கலரான பலூன்களால் தோரணம் கட்டப் பட்டிருந்தது. டைனிங் டேபிளின்மேல் விஸ்கி பாட்டில்களும், சிகரெட் பாக்கெட்களும், வித விதமான நான்-வெஜ் அயிட்டங்களும் பரத்தியிருந்தன.

நன்கு குடித்திருந்த ராம்குமார், “என்னடி இவ்வளவு லேட்? இன்னிக்கு என்னுடைய பிறந்த நாள்னு உனக்கு தெரியாதா?” என்று குரலை உயர்த்தி அவளை அதட்டினான். சியாமளாதேவிக்கு கோபம் தலைக்கேறினாலும், கணவனின் குடும்பத்தாரின் முன் அவனை விட்டுக் கொடுக்காமல் பொறுமையுடன், “சாரிங்க…எனக்கு ஞாபகமில்லை. உங்களுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்” அவன் கைகளைப் பற்றிக் கொள்ள தன் கையை நீட்டினாள்.

“என்னடி வெறும் கையை நீட்டற… லட்ச லட்சமா சம்பாதிக்கறயே, எனக்கு ஒரு பரிசும் கிடையாதா?” அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

இதைச் சற்றும் எதிர்பாராத சியாமளாதேவி, வேதனையும் அவமானமும் தாங்காது கண்களில் நீர் முட்ட,”என் வீட்ல அசைவமும், விஸ்கி பாட்டில்களுமா கும்மாளமடிக்க நீங்க யாரு? நீங்க எல்லோரும் இந்த வீட்டை விட்டு வெளிய போங்க… என்னை இந்த வீட்ல நிம்மதியா இருக்க விடுங்க, இது என் வீடு” அழுதபடி முதல் மாடியிலிருந்த தன் படுக்கையறைக்குச் சென்று கட்டிலில் குப்புற விழுந்து குமுறி குமுறி அழுதாள்.

அரைமணி நேரம் கழித்து விஸ்கி வாசனையுடன் அவளிடம் வந்த ராம்குமார், “நீ என்னை எல்லார் முன்னாலயும் அவமானப் படுத்திட்ட, இனிமே நீ இந்த வீட்ல இருக்கக் கூடாது, இது என்னுடைய வீடு… இன்னும் பத்து நிமிஷத்துல இந்த வீட்டை விட்டு வெளியேறனும்..” தான் கொண்டு வந்திருந்த வீட்டின் டாக்குமெண்டை காண்பித்தான்.

அவள் ஒன்றும் புரியாமல் அவ்னை ஏறிட்டுப் பார்த்தபோது, முகத்தில் குரூரப் புன்னகையுடன், “என்னடி அதிர்ச்சியாயிருக்கா? இந்த நிலத்தை என் பெயா¢ல்தான் ரிஜிஸ்தர் செய்து கொண்டேன். என் மேலிருந்த கண்மூடித்தனமன காதலும், நம்பிக்கையும் உன் கண்களை மறைத்துவிட்டன. இப்ப வீடு என்பேர்ல இருக்கறதுனால நீதான் இந்த வீட்டை காலி பண்ணனும்” என்றான்.

அப்போதுதான் சியாமளாதேவிக்கு, எவ்வளவு பெரிய அயோக்கியனிடம் தான் ஏமாந்து விட்டோம் என்பது உறைத்தது.

அமைதியாக எழுந்தாள். கோபம், ஏமாற்றம், வருத்தம், வெறுப்பு, சுய பச்சாதாபம் போன்ற எல்லா உணர்வுகளும் சேர்ந்து அவளை மரத்துப் போகச் செய்திருந்தன. நிதானமாக தன்னுடைய உடைமைகளை எடுத்து வைத்துக் கொண்டாள்.

வீட்டை விட்டு வெளியேறும் முன் ராம்குமாரைப் பார்த்து, “எல்லாமே என் தவறுதான். என் பெற்றோரை அவமதித்து உன்னை நம்பி வந்த எனக்கு என்ன தண்டனையளித்தாலும் தகும்…நான் ஒருத்தனுக்கு பிறந்தவளாயிருந்தால், உன் மூஞ்சில இனி முழிக்கமாட்டேன். என் உழைப்பின் வியர்வையில் கட்டிய இந்த வீடு உன்னுடையதாகவே இருக்கட்டும், இந்த வீட்டில்தான் நான் உன்னுடன் குடித்தனம் நடத்தினேன் என்பதை நெனச்சாலே எனக்கு அசிங்கமாகவும், அருவருப்பாகவும் இருக்கு, என் மீதும், என் ரசிகர்களின் மீதும் எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. என்னால மறுபடியும் இன்னொரு வீடு கட்டி உன் முன்னால வாழ்ந்து காண்பிக்க முடியும். ச்சீ, பொண்டாட்டி உழைப்பில் சோறு திங்கற நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா?” காறித் துப்பினாள்.

வெளியே வந்து தன் காரைக் கிளப்பிக் கொண்டு நேராக அவளது பெற்றோர்களின் வீட்டையடைந்தபோது இரவு மணி ஒன்று. பெற்றோரின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டு கதறி அழுதாள்.

‘வீடு மட்டுமல்ல, ஜாயிண்ட் அக்கவுண்டில் வங்கியிலிருந்த பணம் அத்தனையும் ராம்குமார் மறு நாளே வழித்து துடைத்து விட்டான்’ என்பது இரண்டு நாட்களுக்குப் பின்புதான் அவளுக்கு தெரியவந்தது.

புதிய வேகத்துடனும், வைராக்கியத்துடனும் நடிக்க முற்பட்டு, நிறைய பணம் சம்பாதித்தாள். மறுபடியும் இன்னொரு வீடு கட்டி தன் பெற்றோருடன் குடி புகுந்தாள்.

புரொடெக்ஷன் மானேஜர் காரின் கதவைத் தட்டி, “மேடம், டைரக்டர் வர்றாரு” என்றான்.

காரின் கதவைத் திறந்துகொண்டு இறங்கிய சியாமளாதேவி தன்னை நோக்கிவந்த டைரக்டரிடம், “சார், இந்த வீட்டில்தான் ஷூட்டிங்கா?” மறுபடியும் கேட்டாள்.

“ஆமா, கதைப்படி நீங்க ஹீரோவுக்கு அம்மா. இதுதான் ஹீரோவின் வீடு, வீட்டு ஓனர் யாரோ ராம்குமாராம், ஷூட்டிங் வாடகையாக அஞ்சு லட்சம் அட்வான்ஸ் குடுத்தாச்சு”

சியாமளாதேவி தன் வானிடி பேக்கைத் திறந்து செக் புக்கை எடுத்தாள். கார் பானெட்டின் மீது வைத்து, மூன்று லட்சம் தொகை எழுதி கிராஸ் செய்தாள்.

டைரக்டரிடம், “இந்த செக்கை புரொட்யூசரிடம் தயவு செய்து குடுத்துடுங்க…சில தனிப்பட்ட காரணங்களால என்னால இந்த வீட்ல நடிக்க முடியாது. நான் அவர்கிட்ட அப்புறமா போன்ல பேசிக்கறேன்” செக்கை டைரக்டரிடம் கொடுத்துவிட்டு, தன் காரினுள் ஏறிக் கொண்டாள்.

இருபது வருடங்களுக்கு முன்பு சினிமாவில் அவள் பெரிய ஹீரோயின், இன்று அவளது தனிப்பட்ட வாழ்க்கையிலும்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *