செல்வன் சரியான ஜோதிடப் பைத்தியம் என்று கற்பூரம் அணைத்துச் சத்தியம் செய்தால்கூட உங்களால் நம்ப முடியாது. அத்தனை நாகரிகமாக இருப்பான். அவன் தோற்றத்தை வைத்து நீங்கள் அவனை ஒரு மென்பொருள் தொழிலாளி என்றோ, உயர் நிறுவன அதிகாரி என்றோதான் கற்பனை செய்துகொள்ள முடியும். சாதாரண குமாஸ்தா என்றல்ல!
தினசரி, தொலைக்காட்சியில் விரல்களில் எல்லாம் வண்ணக்கற்களில் மோதிரங்கள் அணிந்துகொண்டு பேசும் அந்தப் பெரியவர் சொல்லும் நாள் பலன்களைச் செல்வன் தவறவிடுவதே இல்லை.
பொதுவாக, அவர் உத்தியோ கஸ்தர்களுக்குச் சொல்லும் பலன் கள் எல்லாம், ‘மேலதிகாரிகளுக்கு இணக்கமாக இருங்கள். முறைத்துக் கொள்ள வேண்டாம். சக ஊழியர் களை நம்பி வேலையை ஒப்ப டைக்க வேண்டாம். கீழே வேலை செய்பவர்கள் உதவிகரமாக இருக்க மாட்டார்கள். யாரையும் நம்பி ஷூரிட்டி கையெழுத்துப் போட வேண்டாம்’ என்பதாகவே இருக்கும். என்ன ஆச்சர்யம்! அவை எல்லாம் சரியாகவும் இருக்கும்.
இன்றைக்கு ‘வாழ்க்கைத் துணைவருடன் வாக்குவாதம் வேண்டாம்; மனக் கசப்பு உண்டாகும்’ என்று சொல்லி வைத்திருந்தார். அதனால், ‘தொடர்ந்து மூன்றுநாட் களாக உப்புமாவா?’ என்று தொண்டை வரை வந்த கேள்வியை விழுங்கிக்கொண்டு, சுமதி கொடுத்த டிபன்பாக்ஸை மறு பேச்சில்லாமல் வாங்கிக்கொண்டு ஆபீஸ் கிளம்பினான் செல்வன்.
சவிதா. நல்ல பெயர். மங்கிய வண்ணத்தில் ஜீன்சும் ஷார்ட் டாப்சும்! சில முகங்கள் தங்கள் குணத்தைப் பட்டவர்த்தனமாகக் காட்டிக் கொடுக்கும்; சில முகங்களில் தென்படும் அழுத்தம் ஆச்சர்யம் அளிக்கும். இது எதுவும் இல்லாமல், இன்ன வகையென்று விவரிக்க முடியாத ஒரு முகம் சில சமயம் தென்படும். அப்படி ஒரு முகம் சவிதாவுடையது!
”என்ன குரூப்மா படிக்கிறே?” என்றான் செல்வன்.
”காமர்ஸ் அங்கிள்!”
”கம்ப்யூட்டர் சயின்ஸ் உண்டா?”
”உண்டு சார்! கூடவே பிரெஞ்ச் படிக்கிறா. சொல்லேன்மா அங்கிள்கிட்ட!” என்றாள் ஜெயந்தி. சவிதாவின் அம்மா.
ஒரு வாரமாக செல்வனைச் சந்திக்க முயன்றுகொண்டு இருந்தாள் ஜெயந்தி. இன்றைக்குதான் வாய்த்தது.
சுமதியோடு ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவள் ஜெயந்தி. கணவன் இல்லை. பெண்ணை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்ற அவா துரத்த, ஒவ்வொருவகுப் பாகப் பார்த்துப் பார்த்துச் சேர்த்து இருந்தாள். சுமதி இவளைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறாள்.
”பிரெஞ்ச் படிச்சேன். இப்ப கிளாஸைக் கட் பண்ணிட்டேன்!”
”எதைத்தான் நீ ஒழுங்கா படிச்சே? ஷிவ் கேராவைப் படிக்கச் சொல்லு, ராத்திரி முழுக்கப் படிப்பே!”
ஜெயந்தியின் வார்த்தைகளில் தெறித்த வெறுப்பு, செல்வனையும் வருத்தியது. சவிதா வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள்.
”நீங்கதான் சார் இவளுக்கு நல்லதா நாலு வார்த்தை எடுத்துச் சொல்லணும்! தனியரு மனு ஷியா இவளை வளர்க்க நான்எவ் வளவு கஷ்டப்பட்டு இருப்பேன்? அம்மான்னு ஒருஅக்கறைகெடை யாது; மரியாதை கெடையாது; பொறுப்பு கெடையாது.”
பேசும்போதே அழுகை முட்டிக்கொண்டுவந்தது ஜெயந்திக்கு. சட்டென அவளைத் தோளில் அணைத்துக்கொண்டு, சமாதா னப்படுத்த முயன்றாள் சுமதி.
சவிதா ஒருமுறை ஜெயந்தியைத் திரும்பிப் பார்த்துவிட்டு, மீண்டும் நாளிதழில் முகத்தைத் திருப்பிக்கொண்டுவிட்டாள். அவள் மன தில் என்ன எண்ணம் ஓடுகிறது என்பதைப் படிக்கவே முடிய வில்லை.
”ப்ளஸ் டூ வந்தாச்சு, ஒழுங்கா படிபடின்னு சொல்றேன்… கேக் கறாளா? இன்னிக்கு இருக்கிற போட்டியில எவ்வளவு மார்க் வாங்கினாலும் போதாது. ஆனா, முழுசா ஒரு ரெண்டு மணி நேரம் புக்ஸை எடுத்து வெச்சுக்கிட்டு இவ படிச்சு நான் அறியேன். கேட்டா, வாயில கொழுக்கட் டையை வெச்சுக்கிட்டுப் பதிலே சொல்லமாட்டேங்கறா. பின்னே ராத்திரியெல்லாம் ரூம்ல லைட் எரியுதே, என்னன்னு போய்ப் பார்த்தா, அந்தக் கடன்காரன் ஷிவ் கேரா புக்ஸை வாங்கி வெச் சுக்கிட்டு, மாஞ்சுமாஞ்சு படிச் சிட்டிருக்கா. அதுவா நாளைக்கு இவளுக்குச் சோறு போடப் போகுது? வந்த ஆத்திரத்துல ஒரு நாள் எல்லாத்தையும் தூக்கிப் போட்டு எரிச்சுட்டேன்!”
பேசப் பேச… ஜெயந்தியின் குரல் உடையத் தொடங்கிவிட்டது. ஆதங்கம். வேதனை. வலி.
”சரி, நீ உள்ள வா!” என்றபடி, ஜெயந்தியை சுமதி அடுத்து இருந்த அறைக்கு அழைத்துச் சென்றாள். சட்டென அந்தஅறை யில் பலத்த மௌனம் நிலவத் தொடங்கியது. செல்வனுக்கு என்ன சொல்வது என்று தெரிய வில்லை. இதுபோன்ற சந்தர்ப்பங் களைக் கையாளுவதில் அவனுக் குப் பழக்கமே இல்லை.
மிஞ்சிமிஞ்சிப் போனால், சவிதாவுக்குப் பதினாறு, பதினேழு வயது இருக்குமா? பெரும்பாலும் இவன் வங்கியில் கல்விக் கடன் கேட்க வரும் பையன்களும்பெண் களும் இவளைவிட மூத்தவர்க ளாகவே இருப்பார்கள். அவர் களோடு அவன் அதிகம் பேசியது, அவர்களின் படிப்பு பற்றித்தான். சொந்த விஷயங்களை அதிகம் பேசியதில்லை.
”நீங்க நிறையப் படிப்பீங்களா, அங்கிள்?”
”ம்… இந்த புக்ஸெல்லாம் என்னுடையதுதான்!”
”லக்கி! என்ன மாதிரி புக்ஸ் படிப்பீங்க?”
”ஃபைனான்ஸ். அதுதான் எனக்குப் பிடிச்ச ஒரே சப்ஜெக்ட். தவிர, கொஞ்சம் ஜோசியம்.”
”ஷிவ் கேரா படிச்சிருக்கீங்களா அங்கிள்?”
”நீ படிச்சிருக்கியா?”
”அவரோட ஒவ்வொரு புக்கும் எனக்கு மனப்பாடம் அங்கிள்! அம்மாதான் எல்லாத்தையும் ஒரு நாள் போட்டு எரிச்சுட்டாங்க. அவங்க பயங்கரமா ஸீன் போடுவாங்க அங்கிள். ‘நீ இனிமே ஷிவ் கேரா படிச்சியானா, நான் தற்கொலை பண்ணிப்பேன்’னு ஒரே டார்ச்சர். சரி, எதுக்குத் தொந்தரவுன்னு சைலன்ட் ஆகிட்டேன். ‘என்கிட்ட பேசமாட்டியா’னு அதுக்கும் ஒரு ஸீன்…”
”அம்மா சொல்றதுலயும் நியாயம் இருக்கில்லையா?”
”என்ன அங்கிள் நியாயம்? எல்லாரும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சா, எவன் போய் விவசாயம் பார்க்கிறது? சி.ஏ., படி, எம்.பி.ஏ., படின்னு ஒரே பிடுங்கல். நான் தெளிவா இருக்கேன் அங்கிள். எனக்கு என்ன பிடிச்சிருக்கோ அதான் படிப்பேன். ஷிவ் கேரா சொல்வான், ‘எல்லாத்தையும் பெரிசா யோசி, வித்தியாசமா யோசி, உபயோகமா செய்’னு. சின்னத்தனத்தை எல்லாம் விட்டு டும்பான். லைஃபுக்கு ஒரு பர்ப் பஸ் வேணுமில்லையா, அங்கிள்? பர்ப்பஸ்தான் ட்ரைவிங் ஃபோர்ஸ்! சும்மா நானும் எம்.பி.ஏ., படிச்சுட்டு யு.எஸ். போனா, அதனால யாருக்கு என்ன பிரயோஜனம்?” என்றவள், சற்று இடைவெளி விட்டுத் தொடர்ந்தாள்…
”நான் தோத்துப் போயிட்டேன் அங்கிள்! நான் என்ன நினைக் கிறேன்கிறதை அம்மாவுக்கு என் னால புரியவைக்க முடியலை. ஆனா, புரியவைப்பேன். அதுக் குக் கொஞ்ச நாளாகும். அது வரைக்கும் அம்மா போடறஸீனை எல்லாம் பார்த்துக்கிட்டுதான் இருந்தாகணும்!”
”என்ன புரியணும் எனக்கு? என் பொண்ணு, கௌரவமா நாலு பேர் முன்னால தலைநிமிர்ந்து நடக்கணும், கை நிறை யச் சம்பாதிக்கணும்னு ஆசைப் படறேன். அது தப்பா? நான்தான் இப்படி ஆயிட்டேன். அவளாவது சந்தோஷமா இருக்க வேண் டாமா?”
செல்வன் சமையலறை கடப்பைக் கல் மீது ஏறி உட்கார்ந்து கொண்டான். ஜெயந்தி, எதிரே டைனிங் டேபிள் நாற்காலியில் அமர்ந்து இருந்தாள்.
”கண்டிப்பா! ஆனா, நீங்கபயப் படற மாதிரி சவிதா ஒண்ணும் பண்ணிடலையே! அவ தன் னோட லைஃப் பத்தித் தெளிவா இருக்கா. அவ குழந்தை இல்லே!”
”என்ன சார் பெரிய தெளிவு? எங்கேயோ ஊர் ஊரா போவாளாம், என்னவோ என்.ஜி.ஓ. வேலையாம், சேவை பண்ணுவாளாம். எங்கேர்ந்துதான் இந்தப் பைத்தியக்காரத்தனங்களை எல் லாம் இவ கத்துக்கிட்டாளோ? பைசாவுக்குப் பிரயோஜனம் உண்டா, சொல்லுங்க?”
கால மாற்றம். புது எண்ணங் கள்; புது மோகங்கள். ஒவ்வொரு கட்டத்திலும் புதியது பழையதாகி வரும் மர்மம்தான் இது. புதிய சிந்தனைகளோடு சேர முடியாமல் தவிக்கும் தவிப்பு இது. எதுசொன் னாலும், ஜெயந்திக்குப் புரியுமா? அவளின் அளவுகோல்களுக்குள் சவிதா வரவில்லை. பிரச்னை அதுதான்.
”இந்த ஷிவ் கேரா கடன்காரன் மெட்ராஸ் வராமலா போயி டுவான்! வரட்டும். நேரா போய், நாக்கைக் புடிங்கிக்கிற மாதிரி நாலு வார்த்தை கேக்கறேன். எல்லாம் அந்த கடன்காரனால வந்த வினை. அவன் புஸ்தகத்துல அப்படி என்னதான் இருக்குமோ… படிக்கிறா, படிக்கிறா, அப்படிப் படிக்கிறா! அதுல நூத்துல ஒரு பங்கு பாடப் புஸ்தகத்தைப் படிச்சாகூட, ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்துடுவா சார் இவ!”
”ஜெயந்தி, எமோஷனல் ஆகாதீங்க! உங்க பொண்ணு மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்கு இல்லையா?”
”நம்பிக்கை இல்லாமலா சார் இவ்வளவு தூரம் கரடியா கத்திக் கிட்டு இருக்கேன்! ஆனா, என் நம்பிக்கையை வீணடிச்சுடுவா ளோங்கிற பயம்தான் என்னை ஆட்டிப் படைக்குது. உங்களையே எடுத்துக்குங்க… பெரியவனை ஆர்.ஈ.சிக்கு அனுப்பிட்டீங்க. உங்களுக்கு பேங்க் வேலை. நாளைக்கு திவ்யாவை சி.ஏ., சேர்த்துடுவீங்க. இன்னும், கூட இருக்கிற பசங்க எல்லாம் ஐ.டி. கம்பெனி, யு.எஸ்னு போய்க் கிட்டு இருப்பாங்க. இவ மட்டும் சேவை செய்யறேன் பேர்வழினு அத்துவானக் காட்டுல அலை யணும்னு தலையெழுத்தா?”
சுயமாகச் சிந்திக்கவிடாத சமூக அழுத்தம். வெற்றி ஃபார்முலா எதுவோ, அதுவே அனை வருக்குமானது. வேறொருஃபார் முலா, வேறொரு பாதை, வேறொரு திசை எல்லாம் கன விலும் நினைக்கத்தக்கது அல்ல. தேவையில்லாமல் தலையைக் கொடுத்துவிட்டோமோ என்று செல்வனுக்குத் தோன்றியது.
”ஜெயந்தி, என்னை நீங்க உதாரணமா எடுத்துக்கிட்டதால இதைச் சொல்றேன். நிஜத்துல நானெல்லாம் இப்போ ஒரு முட்டுச் சந்துல போய் நிக்கறேன். எனக்கு என்ன தெரியும், சொல்லுங்க? சுயமா ஒரு திறமையும் கிடையாது. என்னிக்கோ எழுதின பேங்க் பரீட்சை. அதிர்ஷ்டம் அடிச்சுது. உள்ளே வந்துட்டேன். அதுவும் கவர்மென்ட் பேங்க். ஒவ்வொரு நாளும் எவ்வளவு இம்சை தெரியுமா? லைஃப் முழுசும் வேஸ்ட்! நாளைக்கு ரிடையர் ஆகும்போது, எதுக்கும் பிரயோஜனம் இல்லாம இருப் பேன்…”
சுமதி முறைப்பது போல் இருந்தது. சட்டென செல்வன் தன்னிலைக்குத் திரும்பினான்.
”இதுல சரி எது, தப்பு எதுன்னு சொல்றது ரொம்பக் கஷ்டம் ஜெயந்தி. அவ வழியில அவளை விட்டுடுங்க. ஃப்யூச்சர்ல அவ நல்லா வருவா!”
ஜெயந்தி முகத்தில் தெரிந்தது வெறுப்பா, சலிப்பா என்றுதெரிய வில்லை. செல்வன் பால்கனிப் பக்கம் போய் சிகரெட் பற்ற வைத்துக்கொண்டான்.
படித்த காலத்திலும், வேலைக் குச் சேர்ந்த புதிதிலும் செல்வ னுக்கு இருந்த உத்வேகம், தைரி யம், தன்னம்பிக்கை எல்லாம் இன்று மாயமாக மறைந்துவிட்டது. வாழ்வின் பெரு இருள் எந்நேர மும் தன் மீது கவிழலாம் என்ற பயமே இன்று கோலோச்சுகிறது. ஒவ்வொரு நாளையும் தொழிற் சங்கங்களிடமும் ராசிபலன்களிட மும் ஒப்புக் கொடுத்துவிட்டு,ஏதே னும் அதிசயம் நிகழாதா என்று ஏக்கத்தோடு காத்திருக்கிறான்.
கீழே ஸ்கூட்டி கிளம்பும் சத்தம் கேட்டது. சவிதா வண்டியை ஓட்ட, பின்னால் ஜெயந்தி அமர்ந் திருந்தாள். சுமதி அவர்களை வழியனுப்பிவிட்டு உள்ளே வந்தாள்.
”உங்களுக்குப் பேசவே தெரியலை. தத்துப்பித்துன்னு உளர்றீங்க. அந்தப் பொண்ணுக்கு நல்லதா நாலு வார்த்தை அட் வைஸ் பண்ணி அனுப்புவீங் களா… அதை விட்டுட்டு, ஏதோ முட்டுச் சந்துல நிக்கறேன், வேஸ்ட்டா நிக்கறேன்னெல்லாம் பேசறீங்க. என்னாச்சு உங்களுக்கு?” என்று படபடத்தாள்.
செல்வனுக்கு அன்று காலை மோதிர விரல்காரர் சொன்ன தினப் பலன் ஞாபகம் வந்தது. வாழ்க்கைத் துணைவருடன் மனக்கசப்பு! இதுபோன்ற தருணங்களில் வழக்கமாக செல்வன் கைக்கொள்ளும் சிறந்த மருந்தை இப்போதும் பழகத் தொடங்கினான். மௌனம்!
– 18th ஜூன் 2008