விடியற்கலை பின் நிலவுப் பொழுதாதலால் காகங்கள் சற்று முன் கூட்டியே கரைய ஆரம்பித்துவிட்டன.
விழிப்பு வந்துவிட்ட நிலையிலும் எழுந்திருந்து வேறு வேலைகளில் ஈடுபட மனம் வராத சுகமான பொழுது. படுக்கையிலேயே புரண்டு படுத்தான் சேஷாத்ரி. ஒரு பக்கம் மட்டும் மிருதுவான தலையணை தட்டுப்பட்டது.
விழிப்பு நிலை மாறுகிறது. மோன நிலை …….. கால்களை யரோ அசைப்பது போல் உணர்கிறான். இளக்கித்தான் கொடுக்கிறான். வழக்கமான அந்தச் செயல் அன்றும் நடக்கிறது போலும். அதில்தான் எவ்வளவு சுகம்! திருமாலே சுகம் காணும் நிலையன்றோ…!
இப்போது அவள் மடியில் அவன் கால்கள் பதிந்திருக்கின்றன. வளையலணிந்த கரங்கள் இதமாகப் பிசைந்து விடுகின்றன. எவ்வளவு நேரம் இதை அனுபவித்தானோ தெரியாது. ஒரு குட்டித் தூக்கம் அவனை ஆட்கொண்டு விட்டது.
விழித்துப் பார்த்தபோது – பார்ப்பதேது? இருட்டுத்தான் விலக வாய்ப்பில்லையே! – உணர்ந்தான் கால்கள் வெறும் தலையணையில்தான் இருக்கின்றன. காகங்களோடு மற்ற பறவையினங்களும் கோலாகலமாகக் கூச்சலிடுகின்றன. இவைகளோடு சேராமல்…… ஆனால் தனியாக எங்கோ ஒரு கோழி கூவுவது நீண்டு ஒலிக்கிறது. எல்லாம் கலந்து கேட்கும்போது அவனுக்குள் ஓர் இன்ப போதை.
தன்னை இழந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறான். அது முன் வாசல் அறை. வீதியில் எங்கெங்கோ தண்ணீர் தெளிக்கும் ஓசை தாள கதியில் ஒலிப்பதாக – தாளத்திற்குக் கட்டுப் பட்டு ஒலிப்பதாக நினைக்கிறான். தினமும் நடக்கிற நிகழ்ச்சிதான்! தூங்கி விடுவதால் எதையும் கவனிக்காமலேயே போய்விடுகிறது.
தூங்க வேண்டாதபோது தூங்கினால், பரவசமான எவ்வளவு இன்பங்களை இழந்து விடுகிறோம்! மனித வாழ்க்கைக்கு தூக்கம் ஒரு சாபக்கேடா? இல்லையில்லை… அதுதான் அவன் புத்துயிர் பெற வழி! அளவான தூக்கம் அவனுக்கு வேண்டித்தான் இருக்கிறது. கண்களைத் திறக்காமலேதான் இருக்கிறான். நல்ல விழிப்பு நிலை. இரவு நன்கு தூங்கி விழித்ததனால் அல்லவா இந்தத் தெளிவான சிந்தனை! தலையணையிலிருந்து தலை புரள்கிறது. இது என்ன? வெம்மையான மிருதுத் தன்மை! வாடிய மல்லிகையின் சுகமான மணம்? வாடிய மல்லிகைக்கு மணமா? இதேது ஆச்சரியம்! கேள்விப் படாத செய்தி! இதை யாரும் கேள்விப் பட முடியாது. அவனும் அனுபவத்தில்தான் உணர்கிறான். தன் தலை இப்போது அவள் மடி மீது.
அவன் காதில் மட்டும் தேனினும் இனிய மெல்லோசை.”பாஸ்வானுதேதி விகஸானி சரோருஹானி ……. ஸம்பூரயந்தி நிநதை : ககுபோ விஹங்கா…” சூழ்நிலையின் ஒற்றுமையுடன் துயிலெழுப்புவது யார்? ரேடியோவில் கூட விடிந்து வெகுநேரம் கழித்தல்லவா இது கேட்கும். சிறுதும் சந்தர்ப்பப் பொருத்தமில்லாமல்!
அவனது இரு கைகளும் உயர்கின்றன. மறுபடி கீழ்நோக்கி வருகின்றன… அதனிடையில் ஒரு தாமரை மலர்… வாடிய மல்லிகையின் மணம்! அவன் முகத்தில் படிந்துவிட்டது. தாமரைக்கு வெம்மை ஏது? அது எப்போதும் தண்ணீரில் இருப்பதால் குளிர்ச்சியாக வன்றோ இருக்க வேண்டும்! அது நன்கு மலர்ந்திருப்பதை உணர்ந்தான்.
‘ஓ! சூரியன் உதிக்கப் போவதை எண்ணி மலர்ந்து விட்டதோ!’ அவன் இரு கன்னங்களும் இப்போது குளிர்ந்த உணர்ச்சியை அனுபவிக்கின்றன… அது எங்கிருந்து வந்தது… கைகளால் கண்டு விட்டான். ஐந்து இதழ்களுள்ள இரு மலர்கள் ! அதில் கலகலக்கும் இந்த ஒலி எங்கிருந்து வந்தது?
சீ சுயநலமா? யாருக்கு? எனக்கா? இருக்காது. அதெப்படி வரும். அவள் இதில் இன்பம் காண்கிறாள். அதை நானும் அனுபவிக்கிறேன். முன்னால் கொடுத்ததை இப்போது பெறுகிறேன். என்னது? கொடுத்ததைப் பெறுவதோ, பெற்றதைக் கொடுப்பதோ – இதென்ன வியாபாரமா? இல்லையில்லை, மல்லிகையின் மனம், தேனின் இன்பச் சுவை, தண்ணிலவின் ஒளி இவைகளால் வரும் இன்பம்தான் ஒருதலைப்பட்டது. நாம் அனுபவிக்கும் நேரத்தில் நம்மால் அவைகளுக்குப் பயனேதுமில்லை. ஆனால் இந்த உயிருள்ள மென் மலர்?
சிந்திக்கச் சிந்திக்கத் தெளிவு பெற்றான். எவர் சுய நலமும் இதில் இல்லை. பின்…? இருவருமே இன்பம் அனுபவிக்கின்றனர். ஒவ்வொரு வேளையில் ஒவ்வொரு விதம். ஒருவர் கொடுப்பதும் மற்றவர் பெற்றுக் கொள்வதும், இதற்கு இதுதான் சட்டம்,. அவ்வளவே… இது ‘இறைவனின்’ விதி – இயற்கையின் போக்கு.
அன்புடன் குழந்தையின் ‘பட்டுப் போன்ற’ மேனியை அள்ளி ஆசையுடன் அணைக்கும் தாய், தான் இன்பம் பெறுவதுடன் மட்டுமா நிற்கிறாள். அந்தக் குழவியும் அநதச் செய்கையால் வர்ணிக்க இயலா உவகை அடைகின்றதன்றோ! அதை அந்தக் குழந்தை சொல்ல இயலாமலே, அனுபவிக்க மட்டும் செய்கிறது. இங்கு, இருவரும் இதை உணர்கிறோம், சொல்கிறோம்.
அதனால்தான் அது பன்மடங்கு பெருகிக் காண்கிறது. இது தேக தர்மம் ‘ வெறும் உடல் உணர்ச்சி அல்ல’ – பரஸ்பரம் அன்பு செலுத்தி – நீங்காக் காதலுடன், அதே சமயம் விருப்பு வெறுப்புகளுக்கும் ஈடு கொடுக்கும் இரண்டு தேகங்களின் ‘தர்மம்’. இதற்கு ஊடல் கூடல் இரண்டிலும் அதற்கேற்ற சுவை உண்டு, சிந்தனை தொடர முடியவில்லை… எங்கெங்கோ தயிர் கடையும் ஓசை கேட்கிறது.
“கோஷாலணேஷு ததிமந்தன தீவ்ர கோஷா:
ரோஷாத்… கலிம்… வி.. த..ததே”
என்னது? ! பதறிபோய் எழுந்து உட்கார்ந்தான். அந்த அறைக்குள் இன்னும் வெளிச்சம் வரவில்லை, அவன் குரல் பலமாக ஒலிக்கவில்லை. ஆயினும் அதில்தான் எவ்வளவு கோபம்.
‘இறைவனை எண்ணி மனம் லயிக்க வேண்டிய இந்த பவித்திரமான வைகறையில்……
மேலே என்ன சொல்வதென்று அவனுக்கு விளங்கவில்லை. இதை என்னிடம் வந்து…” மேலே நினைக்கவும் முடியவில்லை. நினைக்கவும் முடியாமல் ஒரு மௌனம். அது எப்படி சாத்தியமாகும். பேசும் வாய் பேசாவிட்டால் மௌனம்,. நினைக்கும் மனம் அதை நிறுத்தினால் மௌனமா? அப்படியானால் நடக்கும் கால்…….’குகுப்’ என்று சிரித்துவிட்டான்.
அதே வேகத்தில் எழுந்திருந்தும் விட்டான்; அவன் சொல்ல வார்த்தைத்தான் சொல்லவே இல்லையே!
அப்பாடா… என் “வெங்கடேசனை” எழுப்பத்தான் எத்தனைப் பாடு…! பத்மாவின் கொஞ்சும் தீங்குரல் காதில் கேட்டது. தொடர்ந்து படுக்கையைத் தட்டி, மடிக்கம் ஒலி.
ஓகோ இந்த எண்ணத்துடன்தான் தினமும் ‘இதைச் சொல்லி’ என்ன எழுப்ப வருகிறாளா? அடேடே நான் தான் எவ்வளவு அறியாதவன். தினமும் தூங்கிவழிந்து……… இன்றுதான் அவனுக்கு ஏதோ ஒன்று புரிந்தது.
அவன் சந்தேகம் இப்போது தீர்ந்துவிட்டது. அவள் அவனை கணவனாக மட்டும் காணவில்லை. கண் கண்ட ‘அவனா’கவும் நினைக்கிறாள். அவள் எதுவும் சொல்லி எழுப்பலாம். அவள் அவனில் ‘அவனை’ப் பார்க்கிறாள். அவளுக்கு அவனே ‘அவன்!’
ஆனல் அவன் விஷயம் வேறு. அவன் எண்ணும்படியே தன்னை எண்ணக்கூடிய பரிபக்குவம் அவனுக்கு வரவில்லை. இல்லறத்தானுக்கு இப்போதைக்கு அது அவசியமும் இல்லை. அவனுக்கு அந்த எண்ணம் வரட்டு ஜம்பத்தில்தான் போய் முடியும்!
பற்றற்ற ஒருவன்தான் தன்னில் ‘அவளை’ க் கண்டு பிரம்மானந்த சுகம் பெற்று அநுபூதி நிலை அடைய முடியும். ஆகவே அவன் அதனைச் சொல்லும்போது ‘லோக நாயகனான “அவனை” மட்டும்தான் குறிக்கலாம். ‘மாயக்கள்ளி!’ மென்மையான இவளுக்கு தன் பேரில் எவ்வளவு திட பக்தி! வியந்தான்!
சாலம் காலமாக உலகின் உயிர்க் கூட்டம் அனைத்தும் ‘அவனை’ நாயகனாக வைத்துத் தன்னை ‘பெண்’ மனமாகக் கொண்டு காதல் செய்து வந்ததன் தெளிவு அன்று அவன் மனதில் மிகத் தூய்மையான பொழுதில் இடம் பெற்றது.
‘அறத்திற்கு இணக்கமான முறையில், இன்பத்திலும் இருப்பவன் நான்’ என அந்தக் கள்ளக் கண்ணன் கூறிய மொழியின் உண்மையும் அநுபவ பூர்வமாக உணர்ந்து கொண்டான். அந்தப் ‘பரவச’ நிலை கிட்டாவிட்டால் அன்று அவன் அதை உணர்வதேது?
இத்தனை நாள் அவளது குரல் ‘குரலின்பத்தில்’ மட்டும் லயித்து அதைக் கேட்டு வந்த அவன் அதன் முழுப்பொருளை உணராததற்கு மிகவும் வெட்கப்பட்டான். “என் சீனிவாசன்” அதில்தான் எவ்வளவு ஆழ்ந்த நம்பிக்கை. அந்த வார்த்தையல்லவா அவனை உணரும்படி செய்துவிட்டது.
ஊதுவத்தியின் மணம் குளிர்ந்த மென் காற்றின் வழியே தவழ்ந்து வர தெய்வீகச் சூழ்நிலை கொண்ட நிசப்தமான அந்த வைகறையில் இரண்டு ஒற்றுமையான குரல்களின் இனிமை, என்றுமே ‘உறங்காத அந்த வெங்கடேசனை’ அந்த வீட்டிலிருந்தபடியே துயிலெழுப்பிக்கொண்டிருந்தன.
(குடியரசு – 30 – 08 – 1965 )