ஆட்டோ ஓட்டுபவரை துரித படுத்தினாள் கமலா. “என்ன ஓட்டுகிற? சீக்கிரம் பார்த்து போப்பா.”
“மாமி, பார்த்து ஓட்டினால் சரியாக போய் சேரலாம். சீக்கிரமா ஓட்டினால் நம்மை பார்க்கத்தான் எல்லாரும் வருவார்கள்.”
“பேச்சில் ஒண்ணும் குறைச்சல் இல்லை. பத்திரமா அந்த டி.வீ ஷோ ஸ்டுடியோவில் என்னை இறக்கி விடு.”
“ஆ, மாமி இறங்குங்கள். உங்க இடம் வந்தாச்சு.”
முணுமுணுத்துக்கொண்டே பணம் கொடுத்து விட்டு விடுவிடுவென ஓடினாள் கமலா.
லிப்ட் பட்டனை அழுத்து அழுத்து என அழுத்தினாள். “அவசரம் என்றால் அண்டாவில் கூட கை விட முடியாது.” எனக்கூறிக்கொண்டே மீண்டும் அழுத்தினாள்.
“அம்மா, பார்த்து, பட்டன் உள்ளே போய் விடப்போகிறது. லிப்ட் வொர்க் ஆகவில்லை. எந்த ப்ளோர் போக வேண்டும்?” கேட்டார் செக்யூரிட்டி.
“மாமியார்-மருமகள்” டி.வீ. ஷோ நடக்குதே அந்த ஸ்டுடியோவுக்கு போகணும்.”
“ஒ, அதுவா?, இப்படியே பின் வழியாக போங்கள். இந்நேரம் ஆரம்பித்து இருப்பார்களே?” என்றார் செக்யூரிட்டி.
அதற்குள் கமலாவின் சிநேகிதி தாரிணி பார்த்து விட்டாள். “என்ன இவ்வளவு நேரமா ஆகும்? சீக்கிரம் வா.” எனக்கூறி கமலாவை அழைதுக்கொண்டு விடுவிடுவென சென்றாள் தாரிணி.
மறுநாள் சாயங்காலம் மணி ஐந்தரை இருக்கும். ஆபீசில் இருந்து வந்த ரமா முகம் கழுவி ரெடி ஆகி, ஒரு பையை எடுத்துக்கொண்டு,
“அம்மா, அம்மா” எனக்கூப்பிட்டாள். என்ன என்பது போல் கமலா அவளைப்பார்த்தாள். “தைப்பதற்கு துணி உள்ளது. டைலரிடம் கொடுக்க போகிறேன். அப்படியே சூட்கேஸ் வாங்க வேண்டும். அடுத்த வாரம் ராம் ஊருக்கு போக தேவைப்படுகிறது.” என்றாள் ரமா.
“நாளை நானும் அப்பாவும் பஜாருக்கு போகிறோம். அப்பொழுது சூட்கேஸ் வாங்கி வருகிறோம்.” – கமலா.
“இல்லைம்மா, அதை பார்த்து வாங்க வேண்டும்.” – ரமா.
“எனக்கு நன்றாக பார்த்து வாங்க தெரியும். இப்போ நான் வேற வெளியில் கிளம்பிக்கொண்டிருக்கிறேன். வருவதற்கு எப்படியும் எட்டு மணி ஆகிவிடும். எல்லோருக்கும் சப்பாத்தி, கூட்டு பண்ண வேண்டுமே. நீயும் கிளம்பி விட்டால் யார் பண்ணுவது? அதற்குதான் சொன்னேன்.” – கமலா.
முகத்தை ஒரு வெட்டு வெட்டிக்கொண்டு விர்ரென்று கிளம்பினாள் ரமா.
ராகவன் , கமலாவை அமைதியாக பார்த்தார். கமலா,”ஆமாம், கையில் புத்தகத்தை வைத்துக்கொண்டு இங்கு என்ன பார்வை? அதுவும் கண்ணாடி விளிம்புக்கு மேலே இருந்து. முதலில் மூக்கு கண்ணாடியை கண்ணுக்கு நேரா இழுத்து விட்டுக்கோங்கோ.”
“அது சரி, நாளைக்கு பஜாருக்கு போறோம்னு எனக்கு தெரியாதே.” – ராகவன்
“இப்போ தெரிஞ்சாச்சு இல்லே.” – கமலா
“உனக்கு சூட்கேஸ் எல்லாம் பார்த்து வாங்க தெரியும்னு எனக்கு அதுவும் இப்போதான் தெரியும்.”
“வெடுக்குன்னு விறுவிறுன்னு போனாளே அது தெரியலியாக்கும்.”
“ஆமாம், எங்கோ கிளம்பனும்னு சொன்னியே, இன்னும் கிளம்பலியா?”
“எனக்கு மூடே போய் விட்டது. எனக்கு தாரிணியிடம் பேச வேண்டும்.” என்று சொல்லி தாரிணிக்கு மொபைலில் கால் போட்டு பேச ஆரம்பித்தாள் கமலா.
“அம்மா சாப்பிட வாங்க” ரமா அழைத்தபோதுதான் வெகு நேரமாக தான் பேசிக்கொண்டிருந்தது கமலாவிற்கு தெரிந்தது.
எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தனர்.
“மாமா, ஏன் சப்பாத்திக்கு இவ்வளவு சக்கரை போட்டுக்கறீங்க?” – ரமா
“தாத்தா, உங்களுக்கு சுகர் ஏற்கனவே ஆரம்ப நிலையில் இருக்கு. மறந்துடாதீங்க.” பேரன் ரங்கேஷ்.
“ராம் ஏன் இன்னும் வரவில்லை?” – ராகவன்
வேலை இருப்பதால் கொஞ்சம் லேட் ஆகுமாம் மாமா.” – ரமா
“சக்கரையை ஒதுக்கி விட்டு கூட்டு போட்டு கொள்ளுங்கள்” – கமலா
“கமலா, அடுத்த வாரம் கண்ணுக்கும், காதுக்கும் ச்வீட். இப்போ நாக்குக்கு ச்வீட்.” என சொல்லி கட கடவென சிரித்தார் ராகவன்.
ஒன்றும் புரியாமல் ராமாவை பார்த்தாள் கமலா. ரமாவோ சிரிப்பை அடக்க முடியாமல் முகத்தை சற்று திருப்பி கொண்டாள். புரிந்தது. தாரிணியிடம் பேசிக்கொண்டிருந்ததை எல்லோரும் கேட்டு உள்ளனர். ‘இருக்கட்டும் பார்த்துக்கொள்கிறேன்’ என மனதில் சொல்லிக்கொண்டாள்.
ராமும் சிறிது நேரத்தில் வந்தான். சாப்பிட்டு முடித்தான்.
“அம்மாவிற்கு என்ன? உடம்பு எதாவது சரி இல்லையா?” ரமாவிடம் கேட்டான். ரமா ஒன்றும் பதில் சொல்லவில்லை.
“ஒன்றும் இல்லைப்பா, தூங்க போய் விட்டாள்.” – ராகவன்
“ஒ, அப்படியா” – ராம்
கமலாவிற்கு கோபம். ராகவனிடம் பேசவே இல்லை. அவரும் ஒன்றும் சொல்லவில்லை.
மறுநாள் மதியம் மூன்று மணி அளவில் தாரிணி, கலா, நிர்மலா வந்திருந்தனர். கலா, கமலாவை பார்த்து “கங்க்ராட்ஸ் கமலா, ஷோவில் நன்றாக பேசினே” என்றாள். நிர்மலாவும் தன் ஆச்சரியத்தை வெளிபடுத்தினாள்.
கமலாவிற்கு சந்தோஷமாக இருந்தது. அவர்களுக்கு சாப்பிட டிபன் செய்து கொடுக்க உள்ளே போனாள். உள்ளே மாவு ஒன்றும் இல்லை. ராகவனிடம் ரவை வாங்கி வர சொன்னாள்.
“பார், இதெல்லாம் நான் சொல்லக்கூடாது. வீடு என்றால் எல்லாம் ரெடி ஆகா ஸ்டாக்கில் இருக்க வேண்டாமா? ரமா வந்த உடன் நறுக்குன்னு சொல்றேன் பார்”, பொருமினாள் கமலா.
“சொல்லக்கூடாதுன்னு சொல்லத்தானே போறே?” – தாரிணி நக்கலாக கேட்டாள். கமலா பதில் ஏதும் சொல்லாது ராகவன் வாங்கி வந்த ரவையை உள்ளே எடுத்துக்கொண்டு போனாள்.
தாரிணி, கலா, நிர்மலா ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டு மெல்லிய குரலில் கமலாவை கிண்டல் செய்துக்கொண்டிருந்தனர்.
“எப்படித்தான் இவள் அந்த ஷோவில் மருமகளுக்காக பேச முடிந்ததோ, தெரியவில்லை.” – கலா
“ரொம்ப சாமர்த்தியமானவள். எதிர் தரப்பு பேசும் பொழுது, இவள் அதை மறுத்து எப்படி பேசினாள்!! மருமகளும் நம் வீட்டு பெண்தானே. மனதளவில் கூட வேறு மாதிரி நினைக்கக்கூடாது அப்படி, இப்படின்னு. அம்மம்மா!! இவள் பேச்சை நம்மால் நம்பமுடியாது.” – நிர்மலா
“சத்தமாக பேசாதீங்க. அவள் காதில் விழ போகிறது.” – தாரிணி
டிபின், காபி எடுத்து வந்தாள் கமலா. “உனக்கு அடுத்த வாரம் பார். எவ்வளவு பாராட்டு கிடைக்க போகிறது ஷோவை பார்த்தவர்களிடம் இருந்து. எப்படி உன்னால் இந்த மாதிரி எல்லாம் பேச முடியுது?” “இந்த மாதிரி”க்கு ஒரு அழுத்தம் கொடுத்தாள் தாரிணி. சொல்லி விட்டு கலாவையும், நிர்மலாவையும் பார்த்தாள். அவர்களும் பொருள் புரிந்து புன்னகைத்தனர். கமலாவிற்கு புரியாதா என்ன?
சட்டென்று
பதில் கொடுக்க வரவில்லை அவளுக்கு. தானும் ஒப்புக்கு சிரித்தாள் கமலா.
அந்த மாமியார் – மருமகள் ஷோ ஒளிபரப்பாகிய நாள் அன்று வீட்டில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பார்த்தனர். அதில் மருமகளிடம் மாமியார் எப்படியெல்லாம் அனுசரணையாக நடந்துக்கொண்டால் அந்த வீட்டில் அம்மா-பெண் உறவு மலரும் என அழுத்தம், திருத்தமாக பேசினாள். அவளுக்கு நிறைய கைதட்டல் கிடைத்தது.
குடும்பத்துடன் பார்த்து கொண்டிருந்த கமலா இனம் புரியாத் தர்ம சங்கடமாக உணர்ந்தாள். அங்கிருந்து எழுந்து செல்ல வேண்டும் போல் இருந்தது. நிகழ்ச்சி முடிந்தவுடன் ஒருவரும் ஒன்றும் சொல்லவில்லை. அது வேறு இன்னும் குத்துவது போல் இருந்தது. அன்று வந்த சிநேகிதிகளும் சற்று குத்தலாக நகைத்ததும் நினைவிற்கு வந்து உறுத்தியது. அப்பொழுது அவள் ஐந்து வயது பேரன் ரங்கேஷ்,
“பாட்டி, ரொம்ப நல்லா பேசினே பாட்டி” என உரக்க சொன்னான். “ஆமாண்டா கண்ணா, அன்றைக்கு நான் லேட்டாக போனேனா, இந்த சைடு காலியாக இருந்தது அங்கே அவசரமாக உட்கார்ந்து விட்டேன்.” கமலா
என்ன சமாளிக்கிறாள் இவள்! “ஒன்றும் புரியவில்லை ரங்கேஷிற்கு” ராகவன் கூறிவிட்டு எழுந்து சென்றார் உள்ளே
அன்று இரவு கமலா ராகவனை பிலு,பிலுவென பிடித்தாள். “இந்த வீட்டில் எனக்கு ஒன்றும் அதிகாரமே இல்லையா?, நான் என்ன மூன்றாவது மனுஷியா?” கதவை தாண்டி குரல் வெளியே வராத அளவு, ஆனால் தன எரிச்சலை வெளி படுத்தும் வண்ணம் கேட்டாள்.
“அதிகாரமே உன் கையில்தானே இருக்கிறது. இதில் என்ன சந்தேகம் உனக்கு?” – அமைதியாக ராகவன் கேட்டார்.
“போதும் நடிக்காதீர்கள். இவ்வளவு நாள் இல்லாமல் இப்பொழுது எல்லோர் எதிரிலும் என்னை கிண்டலாக, மறைமுகமாக பேசுகிறீர்கள்.”
“நான் எப்போ கிண்டல் அடித்தேன்?”
“அதான் அன்றைக்கு எல்லோரும் சாப்பிடும் போது, நாக்கு, மூக்கு, கண்ணுக்கெல்லாம் ச்வீட்ன்னு சொன்னீர்கள். அந்த ரமாவும் தலையை திருப்பிக்கொண்டு சிரிக்கிறாள். என்ன இதெல்லாம்?”
“ஒ, அதுதான் அன்று என்னுடன் பேசாமல் இருந்தியா?”
“இப்பவும் ஒன்றும் பேசவில்லை. என் இடம் இந்த வீட்டில் என்ன, எங்கு இருக்கிறது? எனக்கு தெரியவேண்டும்.”
“நீ உன்னிடத்திலேயேதான் இருக்கிறாய். என்ன சந்தேகம்? எனக்கு புரியவில்லை.”
“மருமகள் கிண்டலாக சிரிக்கும் அளவிற்கு அப்படி என்ன நான் செய்து விட்டேன்?”
“மருமகள் சிரித்ததை நான் பார்க்கவில்லை. உன்னுடைய டி.வீ. ஷோக்காக ச்வீட் பத்தி சொன்னேன்.”
ஆமாம், உன்னை ஒன்று கேட்க மறந்து விட்டேன். போன வாரம் உன் சிநேகிதிகள் வந்து போன பிறகு நீ ஏதோ அவர்களை திட்டி கொண்டிருந்தாயே, எதற்கு?” – ராகவன்
“நான் என்ன கேட்டேன், இது என்ன, பதிலுக்கு ஒரு கேள்வி, ஒரு சம்மந்தமும் இல்லாமல்?” – கமலா
“உன்னிடம் யாரும் பேசவில்லை. நீ திடீரென்று இப்படி என்னிடம் கத்துவது எதனுடன் சம்மந்தம்?” – மடக்கினார் ராகவன்.
“என் நியாயம் எனக்கு.” – கமலா
“எல்லோருக்கும் இருக்கு. அதற்கென்ன இப்போ?”- ரா கவன்
“நல்லா பேச வருது” – கமலா
“எனக்கு பேச்சு இருக்கு. உனக்கு அதிகாரம் இருக்கு.”
கோபத்துடன் முறைத்து விட்டு பேசாமல் படுக்க சென்றாள் கமலா. தூக்கம் வர வெகு நேரம் ஆனது.
ஒரு வாரம் ஓடியது. யூ டியுபிலும், நேயர்கள் கடிதத்திலும் நிகழ்ச்சியை பாராட்டியவர்கள், கமலாவையும் பாராட்டி இருந்தனர். நல்ல மாமியார் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என கமலாவிற்கு பாராட்டு மழை.
கமலாவிற்கு சந்தோஷமாக இல்லை. கமலாவின் தர்மசங்கடம் ராகவனுக்கும் புரிந்தது. மற்றவர்கள் எதிரில் கேட்க வேண்டாம் என இருந்தார்.
இரண்டு நாட்கள் சென்றன. அப்பொழுதும் கமலா அப்படியேதான் இருந்தாள். அவள் அப்படி இருப்பது ராகவனுக்கும் வேதனையாக இருந்தது. வீட்டில் யாரும் இல்லாத பொழுது அவரே கமலாவிடம் மெல்ல பேச்சு கொடுத்தார். “நீ எதையோ நினைத்து கவலை படுகிறாய் என தெரிகிறது. என்னவென்று சொல்.”
உடனே கொட்டி தீர்த்தாள் ,”இப்படி செய், அப்படி செய் என சொன்னால் நான் கெட்டவளா? வாம்மா, போம்மா என நாடகம் செய்தால்தான் நல்லவளா? வயதில் பெரியவள்தானே?”
“புரியும் படி சொல்.”
“ஒண்ணா, ரெண்டா? இதோ போன வாரம் கூட சூட்கேஸ் வாங்கபோறேன்னு கிளம்பிட்டா. யார் வீட்டு வேலை செய்வதாம்? ஆறு வருடமா நானும் என் நிலைக்காக வாய் விட்டு சொல்லி வருகிறேன். இதை உணர்ந்து நடந்தால் நானும் இனிமையாகத்தான் பேசுவேன். ஒரு பக்கமாகவே பார்ப்பது என்ன நியாயம்?” மனதில் உள்ளதை வெளிப்படையாகவே கொட்டினாள் கமலா.
“நிலை” போராட்டம் ஒரு ஈகோ போராட்டம் கமலா. அது தன்னிலை விட்டு இறங்காது. அதற்கு பசியும் அதிகம்.” – ராகவன்
தொலைபேசி மணி அடிக்கவே பேச்சு நின்றது. ராகவன் தொலைபேசியை எடுத்து “ஹலோ” என்றார். “சொல்லும்மா சாந்தி, எப்படி இருக்கே? மாப்பிள்ளை சௌக்கியமா?” பெண்ணிடம் விசாரித்தார்.
கல்யாணம் ஆறு மாதம் முன்புதான் நடந்தது. நல்ல பெண். அம்மா சொல்வதை கேட்பாள். சொல்வதை செய்வாள். வேலைக்கு செல்வதில் விருப்பம் இல்லாதவள். மற்றபடி வீட்டு வேலைகளை செய்வதில், சமையல் செய்வதில் விருப்பம். இதுவே அவள் அம்மாவிற்கு வருத்தம். இந்த காலத்தில் வேலைக்கு செல்லும் பெண்ணுக்குத்தான் டிமாண்ட் அதிகம் கல்யாண மார்க்கெட்டில். ஆனால் நல்ல வேளை, மாப்பிள்ளை
வீட்டார்
அதை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. வீட்டை நன்றாக கவனித்துக்கொண்டால் போதும் என்றனர். சாந்திக்கு அவ்வளவு சாமர்த்தியம் போதாது என்பதிலும் கமலாவிற்கு வருத்தம். அதனால் இன்னும் அதிக பாசம் பெண் மீது.
ராகவனிடம் இருந்து அவசரமாக தொலைபேசியை வாங்கி பேசினாள் கமலா.
சாந்தி, மாப்பிள்ளை பற்றி விசாரித்தாள். ராகவனுக்கும் பெண் பேசுவதை கேட்க வேண்டும் என ஸ்பீக்கரில் போட்டார்.
“நான் இங்கு நன்றாக பழகி கொண்டு வருகிறேன் அம்மா. நல்ல பேர் எனக்கு.”
“அது சரி. உன் மாமியார் உன்னிடம் எப்படி இருக்கிறாள்? உன்னை நன்றாக பார்த்து கொள்கிறாளா?” – கமலா
“நல்லவர்கள் அம்மா. அடுத்த வாரம் ஒரு கல்யாணத்திற்காக சென்னைக்கு வருகிறார்கள் மாமியார். நம் வீட்டிற்கும் வருவார்கள்.” – சாந்தி
“நீயும் வருவதுதானே?” – கமலா
“நானும் வர இருந்தேன். ஆனால் என் மாமியாரின் தங்கை வருகிறார்கள். அப்பொழுது யாரும் இல்லை என்றால் எப்படி? அதுதான் மாமியார் என்னை இங்கே இருக்க சொன்னார்கள்.”
“அடி அசடே, எதையாவது சொல்லி நீயும் வருவதுதானே?” – கமலா
“அம்மா, ரமா அண்ணியை நீ சொல்வது போல்தானே செய்ய வேண்டும் என்று சொல்வாய். என்னை மட்டும் வேறு மாதிரி செய்ய சொல்கிறாய்?” – சாந்தி
“அசடு,அச …..” சுர்ரென மின்னல் கீற்று மனதை வெட்டி பேச்சை நிறுத்தியது. அனைத்தையும் ஸ்பீக்கரில் கேட்டுக்கொண்டிருந்த ராகவனின் மனதை வெளிச்சமாக பிரதிபலித்த அவர் கண்களின் கூர்மை கமலாவின் “நிலையை” சிற்பமாக செதுக்கி அவளையே அவளுக்கு கண்ணாடியாக காண்பித்தது. புரிகிறது. “நிலை”யின் அடித்தளத்தில் உள்ள வேற்றுமை வேறு வேறாக பார்க்க வைக்கிறது. ஊடுருவும் அது வலுவான
வெறுப்பாக வேரை அழித்துவிடக்கூடாது.
“அம்மாவும் அதைத்தான் சொல்கிறாள் சாந்தி. மாமியார் சொன்னது போலவே செய்.” – சமயோசிதமாக ராகவன் பேச்சை முடித்தார்.
“சாந்திக்கு எதிர்ப்புகளை சந்திக்க சாமர்த்தியம் கிடையாது. ஆனால் என்னுள் எது அவளுக்கு எதிர்ப்பு அடித்தளத்தை விதைக்கத்தூண்டுகிறது?” உள்ளுக்குள் குலைந்தாள் கமலா.
கமலாவின் குனிந்த தலையும், அவளின் பேச்சின் வேகத்தடையும் , அவள் கண்கள் புலப்படுத்திய தடுமாற்றமும் ராகவனுக்கு ஒரு நம்பிக்கை ஒளியைக்கொடுத்தது.
“கமலா புரிந்துக்கொள்கிறாள். நல்லவள்தான். பண்படவேண்டும் அவ்வளவுதான்.” ராகவன் மனதில் நினைத்துக்கொண்டார்.