ஆய்டா 2015

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: October 12, 2015
பார்வையிட்டோர்: 17,248 
 

கோவர்தனின் டயரியாய் இருப்பதே எனக்கு பெருமை.இன்னுமொரு பெருமையும் இருக்கிறது.
இந்த அறையில் இருக்கும் எத்தனையோ எண்மான (Digital) இயந்திரங்களுக்கு இடையில் நான் மட்டும்தான் காகித நூல்.

என் பெயர் “அய்டா 2035”

என்னில் எழுத அவர் உபயோகிக்கும் எழுத்தாணிதான் என் காதலி.

என்னை கீறி நினைவுகளை பதிப்பதில் ‪#‎அவள்‬ ‪#‎ஆசை‬ அளாதி.

கோவர்தன் ஒரு #விஞ்ஞானி.

ஆனாலும் அவரின் ஏக்கங்களை நான் மட்டுமே அறிவேன்.

அவரிடம் எத்தனையோ சாதனங்கள் இருந்தும், தன் எண்ணங்களை பதிக்க இன்னும் என்னைதான் பயன்படுத்துகிறார்.

அவருக்கு எப்படி இந்த பழக்கம் வந்ததோ தெரியாது.

இப்போது அவருக்கு 35 வயதுதான்.

தியாகமும், அர்ப்பணிப்பும் தான் அவர் அடையாளங்கள்.

அவருக்கு அழகான பெண் பார்த்து இருக்கிறார் கோவர்தனின் தாயார்.

பெண் பார்த்து நீண்ட நாட்கள், ஏன் நீண்டவருடங்களாக கூட இருக்கலாம், முந்திய டயரிக்குதான் அது தெரியும்.

இன்னும் ‪#‎திருமணம்‬ செய்துக் கொள்ளவில்லை.

ஆனால் இருவரிடத்திலும் மிகப்பெரிய காதல் இருக்கிறது என்பதை நான் அறிவேன்.

ஒரே ஒரு வித்தியாசம்தான்…

நர்மதா, 2035ம் ஆண்டிலும் மனித உரிமைகளுக்காக போராட்டம் வினோதப்பிறவி.
சித்திரவதைகளுக்கு எதிரானவள்.

நடக்கும் போது ஒரு எறும்பு மிதிப்பட்டதை கண்டால் கூட தாங்க மாட்டாள்.

நடக்கும் போது மிதிப்படுவது சகஜம்தானே என்பதை சற்றும் ஏற்றுக் கொள்ளாத மனம் படைத்தவள்.

அவள் இயல்பே அப்படித்தான்.

ஆனால் கோவர்தனோ…. மனிதர்களையும், விலங்குகளையும் வைத்து ஆராய்ச்சி செய்பவர்.

இந்த விடயத்தை அவர் நர்மதாவிடம் மறைத்தே வைத்திருந்தார்…

அவளிடம் சொல்லாத விசங்களை கூட என்னிடம் சொல்லிவிடும் அளவுக்கு நானும் அவரும் நெருக்கம்.

சில தினங்கள் என்னை அவர் கட்டிபிடித்துக் கொண்டு உறங்கியதும் உண்டு.

ஆனால் சில தினங்களாக அவரது காதலியை நான் காணவில்லை.

2035 ஜுன் 30ம் திகதி அவர்கள் இருவரும் ஒன்றாக இந்த அறைக்கு வந்தார்கள்.

“என்ன இது, இவ்வளோ டிஜிட்டல் டயரி எப்ஸ் வந்திருக்க ரைம்ல, நீங்க இன்னும் இந்த இத்துபோற டயரிய வச்சிட்டு இருக்கீங்க? நீங்களெல்லாம் விஞ்ஞானினு வெளியில சொல்லாதீங்க…. ஹி… ஹி…”

அவரின் காதலி என்னை சற்றே ஏளனப்படுத்தி விட்டு, அதை இல்லை என்று மறுத்து சிரித்தது நினைவு இருக்கிறது…

அன்றையதினம் இரவு, தமது 15 வருட கனவு நிறைவேறும் தருணம் வந்துவிட்டதாக என்னிடம் கோவர்தன் பதிந்தார்.

அதன்பிறகு நான் அவரை இந்த அறையில் பார்க்கவில்லை.

என்னையும் அவர் தேடவில்லை.

———–

அவரது ஆராய்வு மிகவும் விசித்திரமானது.

மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட கணினியை கொண்டு, மனிதனுக்கு உயிர் கொடுக்கும் செயல்.

அவர் இதில் வெற்றி அடைந்துவிட்டார் என்றே நினைக்கிறேன்.

அறையின் கதவை திறக்கும் சத்தம் கேட்கிறது…

அவரை தவிர வேறு யாரும் வர வாய்ப்பில்லை..

அவரை சந்தித்து 2 மாதங்கள் கடந்துவிட்டன.

இன்றுதான் வருகிறார்….

ஏதோ பதட்டத்துடன் என்னை தொட்டு, புறட்டுகிறார்…

2035 ஜுன் 20..

இது இன்றைய திகதி இல்லையே.
இன்று ஆகஸ்ட் 30 ஆகிவிட்டது.

ஆனால் இந்த பக்கமும் வெறுமையாக தான் இருந்தது.

பதட்டமாக தன் ஆராய்ச்சிக்குறிப்புகளை என்னில் எழுதுகிறார்.

அவர் வேகமாக எழுதி பார்த்திருக்கிறேன். பதட்டமாக எழுதி பார்த்ததில்லை.

கோவர்தன் ஏதோ குழப்பத்தில் இருக்கிறார்.

அடிக்கடி இறுமுகிறாரும் கூட.
அவருக்கு என்ன நடந்தது?
இரண்டு மாதங்களுள் அவர் என்னென்ன செய்தார் என்றே எனக்கு தெரியவில்லை.

கோவர்தன் எழுதுகிறார்….

“அய்டா (‪#‎AIDA‬) – ‪#‎செயற்கை‬ ‪#‎நுண்ணறிவு‬ ‪#‎மேம்படுத்தல்‬ ‪#‎செயலி‬ (Artificial intelligence Development App)

இறந்த மனிதனின் உயிர் போகினும், அவனின் ‪#‎மூளை‬ சாகினும், அவனின் ‪#‎நினைவுகள்‬, ‪#‎சிந்தனைகள்‬ ‪#‎மரணிப்பதில்லை‬. முளையின் பதிவுகள் தேக்கப்படுகின்றன.

இதனைக் கொண்டு இறந்த மனிதனை கணனியின் ஊடாக மீண்டும் உருவாக்க முடியும்.

இதற்காக நான் உருவாக்கிய மென்பொருள் இந்த “அய்டா”

இதன் முன்னோடி “ஸ்ரீபன் ஹோவ்கிங்”

அவரது ஆராய்ச்சியின் ஆரம்பத்தை நான் முடித்திருக்கிறேன்.

இறந்த மனிதனின் மூளையின் நரம்புகள் பாதிக்காதவாறு வேறுபடுத்தி, நான் உருவாக்கியுள்ள மூளைத் தொடுப்பானில் (Brine connector) சீராக பொருத்த வேண்டும்.

மூளையின் நரம்புகள் இந்த மூளைத் தொடுப்பானில் உள்ள நாடிகளினுடன் சுயமாக இணையும்.

அடுத்த கட்டமாக தானியங்கி சீராக்கி (‪#‎Automatic‬ ‪#‎error‬ ‪#‎fixer‬) ஊடாக மூளையின் இறந்து போன உயிரணுக்கள் மீளுருவாக்கம் செய்யப்படும்.

இவை மீளுருவாக்கம் செய்யப்பட்ட உடனேயே கணினியுடன் மூளை தொடர்பு கொள்ளும்.

“அய்டா” ஊடாக மூளைக்கு செயற்கை ‪#‎அறிவு‬ புகுத்தப்படும் போது, இறந்து போன மனிதனின் மூளையில் இருந்த எண்ணங்களை மீள கொண்டு வரவும், ஏனையவர்கள் அவருடன் தொடர்பு கொள்ளவும் முடியும்………”

இவ்வாறே தொடர்ந்து கோவர்தன் எழுதி கொண்டே போனார்.

திடீரென எழுதுவதை நிறுத்தி என்னை மூடி வைத்து விட்டு, கணினியில் ஏதோ செய்துக் கொண்டிருந்தார்.

பின்னர் மீண்டும் இன்றைய திகதிக்கான எனது பக்கத்தை திருப்பி எழுதலானார்.

சிறிது நேரத்தில் என் மீது அழுத்தமாக முற்றிப்புள்ளியை குத்தியவர், நீள மைக்கு பதிலாக என் மீது சிவப்பு மையை சிந்தினார்….

ஆனால் அதில் எழுத்துருவம் தெரியவில்லை.

அது கோவர்தனின் இரத்தம்…

தன் இடது கையால் மேசையின் மேல் இருந்த அவசர மணியை அழுத்தியவாறு, என்மீது தலையை சாய்த்து வீழ்ந்தார்…

சிறிது நேரத்தில் அறைக்குள் நுழைந்த சிலர் அவரை இழுத்து சென்றார்கள்…..

—-

இப்போது நொவம்பர் மாதம் 6ம் திகதி.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் மூடப்பட்ட கதவு, இன்று திறக்கப்பட்டது.

முன்னே கோவர்தனின் காதலியும், தாயாரும்.

“சாவுற வயசா அவனுக்கு. என்னையும், உன்னையும், இந்த ரூமையும் தவிர அவனுக்கு வெளி உலகமே தெரியாதே. அவனுக்கு போய் இப்படி ஒரு சாவா… யாருக்கு அவன் என்ன பாவம் செஞ்சான்…?

கோவர்தனின் தாயார் வடித்த கண்ணீர், கோவர்தன் ஏதோ ஒரு அசாதாரண மரணத்தை அடைந்துவிட்டார் என்பதை எனக்கு அறியப்படுத்தியது….

சற்று நேரம் மௌனமாக இருந்த கோவர்தனின் காதலி நர்மதா,

“அம்மா, நா கொஞ்சம் இங்க தனியா இருக்குறே(ன்)” என்கிறாள்…

அம்மா அறையை மூடிவிட்டு வெளியே போனதும், என் அருகில் வந்தாள்.

அவளும் அறியாத கோவர்தனின் நினைவுகளை சுமந்த என்னைக் கண்டு கண் களங்கினாள்.

டயரியை முதலில் இருந்தே படிக்க ஆரம்பித்தாள்…

இடையிடையில் சோக சிரிப்புகள்…..

“இன்று நர்மதாவிடம் எப்படியேனும் ஒரு முத்தத்தை வாங்கிவிட வேண்டும். வரும்போதெல்லாம் தன் தயோடே வந்துவிடுகிறாள். தனியாக பேச வாய்ப்பு கிடைப்பதே இல்லை…..”

ஜனவரி 15ல் இருந்த கோவர்தனின் குறிப்பை பார்த்து, அந்த வரிகள் மீது முத்தமிட்டாள்…

கோவர்தனுக்கு கிடைக்க வேண்டிய முத்தம், எனக்கு கிடைத்தது இன்னொரு பெருமை…

தொடர்ந்து படித்துக் கொண்டே போன அவள், ஜுன் 20ம் திகதி பக்கத்தை புரட்டினாள்.

“அய்டா (AIDA) – செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டு செயலி (Artificial intelligence Development App)”

“இந்தா இருக்கு…” – அவள்

ஏதோ அவளுக்கு நினைவுக்கு வந்துவிட்டது….
வேகவேகமாக அடுத்தடுத்த பக்கங்களை புரட்டுகிறாள்..

திடீரென என்னை மேசையில் வைத்துவிட்டு கதவுகளைத் திறந்து ஓடினாள்….

மாலை கோவர்தனின் அறையில்…

“தேங்ஸ் சதீஸ். நீ இல்லனா எனக்கு இந்த வேலைய செய்திருக்கவே முடியாது” நர்மதாவே மீண்டும்..

ஆனால் சதீஸ் யார்….?

“நோ ப்ரோப்ளம் பா… எல்லாம் உனக்காகத்தானே. லெட்ஸ் ட்ரை திஸ்” – (சதீஸ்)

குளிர்ந்த வெள்ளை நிற பெட்டிக்குள் இருந்து எதனையோ எடுக்கிறார்கள்.

அது ஒருவரின் மூளை.

அது கோவர்தனின் மூளையாக கூட இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.

————–

கோவர்தன் கண்டுபிடித்த மூளைத் தொடுப்பானில் அந்த மூளை இணைக்கப்படுகிறது.

இயந்திரங்கள் இயக்கப்படுகின்றன.

கணினி தொழிற்படுகிறது.

நீண்ட நாட்களாக இந்த அறையில் இல்லாது போன சத்தங்கள் மீண்டும் ஒலிக்கின்றன.

“எனக்கென்னவோ பயமா இருக்கு. என்னதான் லவ் பண்ணி இருந்தாலும், செத்து போன பிறகு பயம் வந்துடுது” – (நர்மதா)

“ஹா… ஹா… பயப்படாத… நான் கூட இருக்கேன்தானே…”– (சதீஸ்)

ட்டீட்…ட்டீட்…ட்டீட்….

ஏதே சத்தம் கேட்குது… சரியா கெனக்ற் பண்ணீயா? – (சதீஸ்)

“ஆமா.. டயரிய பாத்துதான் எல்லாம் செஞ்சேன்… அவர் எல்லாமே ஓட்டோவா நடக்கும்னு எழுதி இருக்காறு… – (நர்மதா)

“ம்ம்ம்ம்… கோவர்தன் புத்திசாலி… அவர் இறந்து போனது பெரிய இழப்புதான்” – (சதீஸ்…)

கணனியின் திரையில் மூளையின் வடிவத்தை ஒத்த கோடுகள் மேலும் கீழுமாய் கீறல்கீறலாக தெரிந்தன…

“என் முகத்தை தெரிவு செய்யுங்கள்”

திரையில் தெரிகின்ற கட்டளையை கண்ட நர்மதா, கணினியில் ஏற்கனவே இருந்த யாரோ ஒருவரின் புகைப்படத்தை தெரிவு செய்கிறாள்..

“இது என்னுடைய உருவம் இல்லை”

கணனியின் மறுப்பை கண்டு அதிருந்து போகிறார்கள் இருவரும்.

நர்மதாவின் கைப்பேசியில் இருந்த கோவர்தனனின் படத்தை “அஸ்பெரா” தொழில்நுட்பத்தின் ஊடாக கணினிக்குள் புகுத்தி, கணினி கேட்ட உருவத்துக்கு கோவர்தனின் படத்தை இணைக்கிறார்.

“பொறுங்கள். செயற்படுகிறது…”

“எனது குரலை தரவேற்றுங்கள்…”

நர்மதாவும் கோவர்தனும் பேசிக்கொண்ட குரல்பதிவுகள் எத்தனையோ இருக்கின்றன… அவற்றில் ஒன்றை கணினியில் ஏற்றினாள்…

கட்டளைத் திரையின் வர்ணம் மாறி, கட்டம் கட்டமாக நிரம்பும் (LOAD) சமிஞ்கை காட்சியளிக்கிறது….

சிறிது நேரத்தில் கோவர்தனின் கணினியோடு இணைக்கப்பட்டிந்த ஹலோகிராம் திரையில், கோவர்தனின் முகம் மட்டும் மேலெழுந்தது….

கண்ணை சிமிட்டி

“ஹாய் நர்மதா?”– (கோவர்தன்)

அச்சத்தில் குளிர்ந்து சுருங்கிய இருவரும், வார்த்தைகள் இன்றி திரையை வெறித்து பார்த்தனர்.

“பயப்படாத… நான் பேய் இல்லை. எனக்கு இப்போ உயிர் இல்லை. இது என்னோட மனசு.” – (கோவர்தன்)

“நா… நா… உங்கள்ட மறுபடி பேசுவேனு கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல.. – (நர்மதா)

சற்று முன்னர் அஞ்சி நடுங்கிய நர்மதா, திரைக்கு அருகில் சென்று ஹொலோகிராம் தொழில்நுட்பத்தில் மேலெழுந்துள்ள கோவர்தனின் முகத்தை கட்டிப் பிடிக்க முயற்சிக்கிறாள்…

கைகள் முகத்தை ஊடறுத்து பிடிக்க முடியாது போகிறது அந்த உருவம்.

“உங்களோட பேச மட்டும்தான் முடியுமா? உங்கள ஒருமுறையாவது தொட்டு பார்க்க முடியாதா? நீங்க எனக்கிட்ட எப்படியாவது ஒரு முத்தம் வாங்கீடனும்னு எழுதி இருக்கீங்களே… இப்போ ஆயிரம் முத்தம் தாறேன்.. ஒரே ஒருமுற முழு உருவத்தோட எனக்கிட்ட வாங்க… கோவி…. ப்ளீஸ்…” –

ஹலோகிராம் மூலம் எழும் உருவத்தை பார்க்க மட்டுமே முடியும். அதனை தொட்டு அரவணைக்க முடியாது என்பதை அறிந்த நர்மதா கோவர்தனிடம் கெஞ்சுகிறாள்.

இதற்கிடையில்,

“ற் இஸ் ஏ மிரேக்கல்… என்னால நம்பமுடியல”

சதீஸ்னின் ஆச்சரிய வார்த்தையை கேட்ட கோவர்தன்,

“சதீஸ், ப்ளீஸ்…. நீ கொஞ்சம் வெளிய இரு”

சதீஸ் வெளியில் சென்று கதவை மூடும் வரையில் காத்திருந்த கோவர்தன்,

“நர்மதா, எழுந்துரு… நா மறுபடியும் நீ ஆச படுற மாதிரியே முழு உருவமா உனக்கிட்ட வருவேன்…”

ஆச்சர்யம் கலந்த சந்தோசத்தோடு எழுந்த நர்மதா, கண்களைத் துடைத்துக் கொண்டு,

“உண்மையாவா… எப்படி?”

உண்மையாதான் சொல்றேன்… ஆனா அதுக்கு நீ ஒரு வேலை செய்யனும்…. – (கோவர்தன்…)

“என்ன வேணுனாலும் சொல்லுங்க… உங்களுக்காக நான் எத வேணுனாலும் செய்வேன்… பட் நீங்க கண்டிப்பா வருவீங்களா?”

“கண்டிப்பா வருவேன்… டயரியில ஆகஸ்ட் 30ம் திகதி பக்கத்தை எடுத்துதொடர்ந்து படி…. அதுல சொல்லி இருக்கிற மாத்திரியே செய்…”

“ ஓ.கே..நான் படிக்கிறேன்”

என்னை படிக்கிறாள் நர்மதா…

“AIDAவில் மூளை சரியாக இயங்கியதன் பின்னர் இறந்த மனிதனின் மூளையுடன் கணினியின் ஊடாக, சாதாரண மனிதன் தொடர்பு கொள்ள முடியும்.

மூளையின் எண்ணங்களை எண்மானமாக மாற்றி, கணனி வெளிப்படுத்துகிறது.

அதேபோன்று சாதாரண மனிதனின் கட்டளைகளை எண்ணங்களாக மாற்றி, அதனை மூளைக்கு அனுப்பி மூளையிடம் இருந்து பதிலை பெற்றுத் தருகிறது.

இந்த எண்ணங்கள் மூளையின் ஒரு மையத்தில் பதிவாகி இருக்கும்.

இந்த எண்ணங்களை “அய்டா”; உயிர்ப்பிக்கும். இதனை கணனியுடன் மட்டுமே மட்டுப்படுத்தினால், கணனி ஊடாக இறந்த மனிதருடன் தொடர்பு கொள்ள முடியும். அவரின் எண்ணங்கள், நினைவுகள், அறிவு, என அனைத்தும் அப்படியே மாறாதிருக்கும்.

ஆனால், உயிர்ப்பிக்கப்பட்ட மனிதரை, மீண்டும் ஒரு உடலுக்கு கொண்டு வருவது கூட இலகுவானது. ஆனால் சற்று சிக்கலானது….

அதிக தசை கொண்ட ஒரு விலங்கின் தசைகளை கொண்டு, மனித உடலையும், உருப்புக்களையும் உருவாக்கும் இயந்திரம் அடுத்த அறையில் இருக்கிறது.

இதற்கு Character shaper என்று பெயர்.

இது விலங்கின் தசைகளை பயன்படுத்தி இறந்த மனிதனை ஒத்த உருவத்தை உருவாக்கும்.

எலும்புகளுக்கு பதிலாக துருப்பிடிக்காத சாயம் கலந்து உருவாக்கப்பட்ட இரும்பு பயன்படுத்தப்படும்;.

உள்ளீடுகளை செலுத்தினால், துரிதமாக, சுயமாக அந்த இயந்திரம் மனித உருவத்தை தயாரித்துவிடும்.

பின்னர் அதனோடு மீள் உயிர் வழங்கப்பட்ட மூளையை இணைக்க வேண்டும்.

மனிதனின் உடலில் மூளை இணைக்கப்பட்ட மறுகணமே தாம் இறந்துவிட்டோம் என்ற தகவலை மூளை மறந்துவிடும் வகையில் நிகழ்ச்சியை உருவாக்கி இருக்கிறேன்.

இல்லை என்றால் மீண்டும் உயிர் பெரும் மனிதன் குழப்பத்துக்கு ஆளாக கூடும்.

ஆனால்…

இயந்திரத்தால் உருவாக்கப்பட்ட இந்த மனிதனுக்கு உயிர் இருக்கும். உணர்வு இருக்காது.

இந்த மனித உருவம் உருவாக்கப்பட்டது இறந்து போன தசைகளையும், உணர்வற்ற இரும்பையும் கொண்டு.

அவற்றால் இயங்க முடியாது.

எனவே அதனை இயக்குவதற்கு தசைகளுக்கும், எழும்புகளுக்கும், உறுப்புகளுக்கு உயிரணுக்களை செலுத்த வேண்டும்.

இதற்கு உயிருள்ள ஒரு மனிதனின் உயிரணுக்களை அவரிடம் இருந்து வோறாக பிரித்து, இயந்திரத்தின் மூலம் உருவாக்கப்பட்ட உடலில் செலுத்த வேண்டும்.”

இந்த வரிகளை படிக்கும் போது, நர்மதாவின் கைகள் நடுங்கின… துன்புறுத்தல்களை சற்றும் சகித்துக் கொள்ளாதவள்… எப்படி இதனை பொறுப்பாள்…

ஆனாலும் தொடர்கிறாள்…

“புதிய உடலுக்கு உயிரணுக்களைத் தானம் செய்யும் மனிதன், சில நாட்களில் பலவீனமடைந்து மரணித்துவிடவும் வாய்ப்பு இருக்கிறது”

படித்து முடித்த நர்மதா ஆத்திரம் அடைந்தாள்…

“நாம ரெண்டு பேரும் சேருறதுக்கு இன்னொருத்தர துன்புறுத்தி, அழிக்க சொல்றீங்களா? அவ்வளோ சுயநலவாதியா நீங்க…? ச்சீ… நா உங்கள என்னவோனு நினைச்சேன்..”

கோவர்தனின் லொஹோகிராம் உருவம் ஏதோ சொல்வதைக் கூட கேட்கவில்லை அவள்..

ஆத்திரத்தின் உச்சியில் இருந்த நர்மதா கோவர்தனின் முகம் தெரிந்த கணனி ஹொலோகிராம் திரையை உடைத்தெரிந்தாள்…

அங்கிருந்த அத்தனை இயந்திரங்களும் உடைக்கப்பட்டன.

அந்த இடம் அடையாளம் தெரியாமல் போனது.

எல்லாம் முடிந்த பிறகு கதிரையில் அமர்ந்தவள் கதறி அழுதாள்…. அவசரப்பட்டுவிட்டதாக நினைத்து மேசையை குத்தி தன்னை தண்டித்துக் கொண்டாள்… கையில் பட்ட என்னையும் தூக்கி வீச முயற்பட்டாள்…

இறுதியாக கோவர்தன் என்மீது சிந்திய இரத்தம் அவள் கண்ணில் பட்டது…

இரத்தம் படிந்த பக்கத்தில் ஏதோ எழுதி இருக்கிறது…

அவள் வாசிக்கிறாள்…

“இறந்துபோன என் நர்மதாவை நான் இப்படித்தான் மீட்டேன்”

– தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.

Print Friendly, PDF & Email

1 thought on “ஆய்டா 2015

  1. கதை மிகவும் அருமை உங்கள் கதை ஒரு நாள் உயிர் பெறும்
    வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *