‘கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்து வளர்த்துன நம்ம பையனை விட, வறுமைல வளர்ந்த சுமன் வாழ்க்கைல உயரத்துக்கு வந்தது எப்படி ? நம்ம பையனால ஜெயிக்க முடியலையே…?’ என்ற கேள்வி எழுபது வயது ஏகாம்பரத்தை உறக்கம் கெட வைத்தது.
ஏகாம்பரம் அரசு வேலையில் கைநிறைய சம்பாதித்தவர். மனைவியின் சொத்தும் கிடைக்க தனது ஒரே மகன் விமனை சுக போகமாக வளர்த்து படிக்க வைத்து திருமணமும் செய்து வைக்க, வேலை தேடிக்கொள்ளாமல் தன் மருமகள் சம்பளத்தில் குடும்பம் இயங்க, தன் பென்சன் பணத்தில் மகனுக்கு கைச்செலவுக்கு கொடுக்கிறார்.
ஏகாம்பரத்தின் பக்கத்து வீட்டு சுமன் சிறு வயதிலேயே தந்தையை இழந்து, வறுமையால் கூலி வேலைக்கு சென்றவன் இன்று ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆரம்பித்து கோடிகளில் புரல்கிறான்.
“ஏகாம்பரம், எதுக்கும் ஒரு அளவு வேணும். எல்லாத்தையும் நீயே கவனிக்க உன் பையன் அவனையே கவனிக்க தவறிட்டான்” என்ற நண்பன் பரந்தாமனின் வார்த்தை ஆணி அடித்த மாதிரி இருந்தது.
“ஒரு செடி வைக்கிறோம்னா அதுக்கு நாள் தவறாம தண்ணீர் ஊற்றி, உரம் போட்டு கவனிச்சா அதனோட வேர் கீழ் நோக்கி போகாது. தனக்கு தானே தண்ணீரை தேடி வாழத்தான் இயற்க்கை அதுக்கு வேர் கொடுத்திருக்கிறது. அந்த வேர் கீழே இறங்கினாத்தான் அந்த செடிக்கு பலம். நாமே கவனிச்சா அந்த வேர் கீழ் நோக்கி போகாம மேலேயே நின்னிடுச்சுன்னா சாதாரண காற்றுக்கும் விழுந்திடும். அந்த மாதிரி சுமனுக்கு உதவ ஆள் இல்லாததால ஆழமா வேர் விட்டு நீரை உரிஞ்ச பழகிட்ட செடியா மாறி உயரமா வளர்ந்திட்டான். உன் பையன நீயே கவனிச்சதால மேலயே வேர் விட்ட செடியா, சாதாரண காற்றுக்கு விழுகிற செடியா பிரயோசனமில்லாம இருக்கிறான்” என்று நண்பன் கூறியதைக்கேட்டு, ‘நம் மகனை வளர்த்த முறை நம் தவறு தான்’ என வேதனை கொண்டார் ஏகாம்பரம்.
“இப்ப மாற்ற முடியாது. வளைஞ்சு போற செடிய குச்சி வச்சு கட்டினா நேராகும். மரமான பின் சாத்தியமில்லை. வேணும்னா உன்னோட பேரப்பிள்ளைய, அவனோட வேலைய அவனே செய்யற மாதிரி வளர்க்கப்பாரு” என்ற நண்பன் பரந்தாமனின் மதிப்பு மிக்க வார்த்தையால் மனம் மாறிய ஏகாம்பரம், தன் மடியில் அமர்ந்திருந்த பேரனை கீழே இறக்கி விட்டார்.