கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 23, 2024
பார்வையிட்டோர்: 2,066 
 
 

(சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நாவல்)

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6

அத்தியாயம்-3

யமுனாவுக்கு நல்ல பசி. இந்த மாளிகை அவளுக்குப் புதிதல்ல. குளிர்ந்த நீரை வாளியில் நிரப்பி வைத்திருக்கிறான் சுப்பையா. அவள் முகத்தைக் கழுவிக் கொண்டு உணவு மேசைக்கு முன் வந்தமருகிறாள்.

களைக் கோசைக் கீறி வேக வைத்து மிளகுப்பொடி தூவி வைத்திருக்கிறான். பூக்கோசும் காரட்டுமாக சாம்பார். சன்ன அரிசிச் சாதத்தை ஆவி பரக்கத் தட்டில் வடிக்கிறான்.

“இந்த வருஷம் மார்க்கெட்டில் களைக் கோசே இல்லை. நேத்து மரியன் கொஞ்சம் கொண்டு வந்தான். சுதீருக்குத்தான் ரொம்பப் பிடிக்கும்…”

‘சுதீர்’ என்ற ஒலியைக் கேட்கையிலேயே யமுனாவின் உடலில் ஒரு சிலிர்ப்பு பரவுகிறது. கமலம்மாவின் விழிகள் அவளிடம் நிலைக்கின்றன.

“…அங்கே அவனை பார்க்கலேம்மா?”

“இல்லையேம்மா?”

“பின்ன… கார் அந்தப் பக்கம் தானே கொண்டு போனதாக டிரைவர் சொன்னான்? பாதி வழி போய் இவனை இறக்கி விட்டானாம்?”

“வந்தாரோ என்னமோ? அங்கே… எதற்கு வருகிறார்?”

“ஏம்மா, நீ இப்பல்லாம் அவனோடு பேசறதில்லையா?”

கமலம்மாவின் உதடுகள் உணர்ச்சியை அடக்க முடியாமல் துடிப்பது நன்றாகத் தெரிகிறது.

“சுப்பய்யா? அப்பளம் பொரிக்கலியா?”

“வேண்டாம்மா, இதுவே அதிகம்…” என்று குறுக்கிடுகிறாள் யமுனா.

“சரி, வடுமாங்காய் கொண்டு போடு சுப்பய்யா!”

பவானி ஆற்றின் கரையில் காட்டுமா என்றோர் இனம் உண்டு. குத்தகைகாரர்கள் சலகை சலகையாக இறக்கிக் காரமடைச் சந்தையில் கொண்டு போய் விற்பார்கள். அது காய்க்கோ பழத்துக்கோ உதவாது. ஆனால் வடுவாக இறக்கி உப்பிலிட்டால் அமுதமாக இனிக்கும்.

குருடன் கிடைத்த நூலைப் பற்றிக் கொண்டு நடப்பது போல் மனசை எதை எதையோ நினைத்து ஓட விட்டாலும், சரடு அறுந்து போகிறது.

சுதீர்…சை. அவள் எதற்காக இங்கு வந்தாள்? அங்கு குழந்தைகளுடன் பள்ளிக் கொட்டகையில் முரட்டுக் கம்பளத்தைப் போர்த்துக் கொண்டு முடங்கியிருக்கலாம். தன் வெற்றிக் கனவுகளில் திளைக்கப் பேசிக் கொண்டு உறங்கியிருக்கலாம். இங்கே தோல்வியை நினைக்க வருவாளோ?

கமலம்மாவின் அறையில் இன்னொரு கட்டில்; மெத்தென்ற கம்பளம் நான்காக மடித்துச் செருகப்பட்டிருக்கும் படுக்கை. தலையணை உறையில் பூநூல் வேலைப்பாடு கண்களைக் கவருகிறது. கமலம்மா வெகு நேர்த்தியாகப் பூநூல் வேலை செய்வார். இரண்டு கிளிகள் மேலும் கீழுமாகச் சிவந்த மூக்குகளில் ‘பீஸ்’ என்ற ஆங்கில எழுத்துக்களை – அமைதி என்ற பொருளுடைய சொல்லை – கவ்விப் பிடித்துக் கொண்டிருக்கின்றன.

“இது எப்போது போட்டீர்களம்மா? இந்த டிசைன் வெகு அழகு!”

“நூல் கோத்து ஊசி குத்தினால் கண்ணில் தண்ணி கொட்டுது. ஆனாலும் இப்பல்லாம் ராத்திரி கண்ணைக் கொட்டினால் தூக்கமே வரதில்லே. இப்படி முழங்கையை ஊனிண்டு உக்காந்திருக்கமேன்னு ஒண்ணு தொடங்கினேன். அஞ்சு மாசம் ஆச்சு அது போட. மனசு தான் சாந்தி கொள்ளலே…”

பீஸ்… பீஸ்… சாந்தி… சாந்தி!

பிரார்த்தனையின் முடிவில் தந்தை சாந்தி சொல்வது அவளுடைய செவிகளில் ஒலிக்கிறது.

ஓம் சாந்தி : ஆப சாந்தி : அந்தரிக்ஷம் சாந்தி :
வனஸ்பதய சாந்தி : சாந்தி : சாந்தி…

அலைகள் அடங்கி, அடங்கி, அடங்கி, அடங்கி…

அந்த சாந்தி, அமைதியை, இந்த இரு கிளிகள் மூக்கில் வைத்துக் கொண்டிருக்கும் காட்சியினால் கொண்டு வர முடியவில்லை. இரண்டு கிளிகள் ஜோடி – ஆணும் பெண்ணும் தானா?

“கமலம்மா! அமைதிக்குப் புறாவை அல்லவோ பறக்க விடுகிறார்கள்? நீங்கள் கிளியைப் போட்டீர்களே?”

“புறாவுக்குப் பளிச்சென்று பச்சை வண்ண உடம்பும் சிவப்பு மூக்கும் கொடுக்க முடியுமாம்மா? பூ நூல் வேலைக்குப் பூக்களும் கிளிகளும் தான் அழகாக எடுப்பாக இருக்கும். வானமும் கடலும் நாரைகளும் ஓவியம் தீட்ட நன்றாக இருக்காமலா இருக்கும்” என்று மொழிகிறார் கமலம்மா.

அமைதியையும் விடுதலையையும் ஆனந்தத்தையும் புறாக்களைப் பறக்க விடுவதன் மூலம், ஒரு அடையாளம் போல் (Symbolic) மெய்ப்பிக்கின்றனர். கூட்டில் அடைத்த கிளியைப் பறக்க விடக் கூடாதா?

“ஏன் கூட்டில் அடைத்த கிளியைப் பறக்க விடுவதில்லை கமலம்மா?” கமலம்மா நெற்றிச் சுருக்கங்கள் ஆழமாகக்கீற்றிட யோசனை செய்கிறார். அவர் உண்மையில் யோசனை செய்கிறாரா? இல்லை அவளையே பார்க்கிறாரா?

“ஏன் கமலம்மா?”

“எனக்குத் தெரியலியேம்மா?”

“ஒருகால் சுதந்தரத்தின் ஆனந்தத்தையும் முழுப் பயனையும் கிளியினால் உயரப் பறந்து எடுத்துக் காட்ட முடியாதென்றிருக்குமோ? மனிதன் சொல்லிக் கொடுத்ததைச் சொல்லிக் கொண்டு கூரிய மதியின்றி, கூண்டுக்குள் இருக்கத் தகுதி தான் என்று மழுங்கிக் கிடப்பதாலிருக்குமோ?”

“என்னமோ? அதனால் தான் பெண்களைக் கிளிகளுக்கு ஒப்பாக்குகிறார்கள்; கிளிக்குச் சுதந்தரம் கொடுப்பதையும் பலர் விரும்பவில்லை…” என்று தனக்கே உரிய வகையில் பொருள் காண்கிறார் கமலம்மா.

“எப்படியானாலும் இந்த மாதிரி நன்றாக இருக்கிறது கமலம்மா. சுதந்தரம் வேண்டும்! கிளிகளுக்குச் சுதந்தரம் வேண்டும்! ஆனாலும் அந்தச் சுதந்தரம் ஒரு வரையறைக்குள் செயல்பட வேண்டும்!”

யமுனாவின் குரலில் உற்சாகம் பொங்குகிறது. கமலம்மா உளம் நெகிழ்கிறார்.

“இந்த நாலு கோட்டு வரையறை இருக்கிறதே, கமலம்மா! இதற்கும் பொருள் இருக்கிறது, உங்களுக்கு நினைப்பிருக்கா கமலம்மா! சபர்மதி ஆசிரமத்தில் இருந்த போது, காந்திஜி, அப்பா எல்லோரும் தினமும் மாலையில் நடக்கப் போவார்களாம். சிறைச்சாலை மதில்சுவர் வரையிலும் போய்த் திரும்புவார்களாம். அப்பாவிடம் அந்த மதிலைக் காட்டி பாபுஜி, “சிறையில் இருக்கும் போது தாம் விடுதலையை இழந்து விட்டதாக நினைக்கிறோம். ஆசிரமத்தில் விடுதலையுடன் இருக்கிறோம். இந்த மதில் புறத்தே தெரியும் சுவர் அதை நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறது. ஆசிரமத்தில் இதைப் போல் புறச் சுவர்களில்லை. ஆனால் அகத்தே சத்தியம், எளிமை, தியாகம், அஹிம்சை ஆகிய நற்பண்புகளைச் சுவராக எழுப்பிக் கொண்டாலே நாம் விடுதலையின் முழு இன்பத்தையும் பயனையும் பெற முடியும்” என்பாராம். விடுதலை, தீய சக்திகளுக்கும் எழுச்சி கொடுத்து விடக்கூடும் என்பதை அவர் வலியுறுத்தி இருக்கிறார். விடுதலை என்பது வெறும் அரசியல் விடுதலை மற்றுமில்லை என்று கூறி இருக்கிறார். தனி மனிதனின் ஒழுக்க உயர்வினாலேயே ஜனநாயக அரசு வெற்றிகரமாகச் செயல்பட முடியும். இதை விடுதலை பெற்ற நாட்டின் அரசியல் தலைவர்கள் பிடியாகப் பற்றி இருந்தால் இன்று இப்படி ஒரு சீர்கேடு வந்திருக்குமோ?”

கமலம்மா பேசவில்லை.

“ஏன் கமலம்மா? நீங்கள் ஏதோ என்னிடம் பேச வேண்டுமென்று சொல்லி இங்கே கூட்டி வந்தீர்கள். நானே பேசிக் கொண்டிருக்கிறேனே?…”

அவர் கூரையைப் பார்க்கிறார்.

கண்களில் மளமள வென்று நீர் பெருகுகிறது.

“சே…சே… என்னம்மா இது…?

“ஒண்ணுமில்லே குழந்தை… நான் என்னவெல்லாம் நினைச்சிருந்தேன்! இந்த வீட்டில் நீங்கள் குடும்பம் பண்ண வரும் போது இதை எப்படியெல்லாம் அலங்கரிக்க வேணும்னு பைத்தியக்காரி போல் நாள் பூர கற்பனை செய்வேன். இப்ப… சாந்திங்கிற நினைப்பே வேம்பாப் போயிட்டது…”

“நினைக்கிறதெல்லாம் நடந்துவிட்டால் வாழ்க்கையில் என்னம்மா இருக்கிறது? சுகத்துக்கும் துக்கத்துக்கும் இடைப்பட்ட ஒரு போராட்டந்தான் வாழ்க்கை. இரண்டையும் அமைதியாகக் கடப்பதில்தான் வாழ்க்கையின் வெற்றி அடங்கி இருக்கிறதென்று அப்பா சொல்வார்.” கமலம்மாவுக்குத் தன் முன் இருபத்து மூன்று வயசுக்குரிய அரிவையொருத்தி உட்கார்ந்திருப்பதாகத் தோன்றவில்லை. அநுபவம் வாய்ந்ததொரு மூதாட்டி இதம் கனிய அமர்ந்திருப்பது போல் தோன்றுகிறது.

“யமுனாம்மா, இவனைக் குடும்பத்திலிருந்தே ஒதுக்கினாற் போல் செய்துவிட்டார்கள். சொத்து, சுகம், பந்தம் எல்லாமே பிரிஞ்சாப்போல்தான். எஸ்டேட்டுக்கா போகிறான்? எஸ்டேட்டுக்கும் இவனுக்கும் சம்பந்தமில்லையென்றே ஒதுக்கி விட்டார்கள். வைக்கோற்பிரியில் பொறியை வச்சுக் கட்டுவார்களா? அவர்களைச் சொல்லியும் குற்றம் இல்லை. ஒரு வருஷமா ஒண்ணு மாத்தி ஒண்ணில் லாக்கவுட்டு, அடிதடி, சண்டை, கொலை. தான் பிறந்த குடிக்கே துரோகம் பண்ணினா எப்படி? அவனப்பா இதை எல்லாம் பார்க்காமப் போயிட்டார்…”

உள்ளூற மொட்டுவிடும் துயரத்தைத் திருகி எறிந்து கொண்டு யமுனா அசைவற்றிருக்கிறாள்.

“லண்டனுக்கும் அமெரிக்காவுக்கும் எத்தனை பையன்கள் போகவில்லை? இவன் மட்டும் படிக்கப் போனவன், என்னென்ன பேச்சுகளெல்லாமோ இறக்குமதி செய்து கொண்டு வந்தது என் கொடுமை…”

“அதெல்லாம் சும்மா, கொள்கையைப் பிடித்துக் கொள்ள இங்கே வழி இல்லையா கமலம்மா? வசதி இல்லாத குடும்பங்களில் வாழ்க்கை ஏமாற்றமாகப் போகும் போது இப்படி வன்முறைப் புரட்சிக் கொள்கைகளில் இறங்குவது நடக்கக் கூடியதென்றெண்ணினேன். இப்ப, அளவு மீறி வசதி வாய்ப்புக்கள் இருக்கும் போது, எந்த வகையிலேனும் விறுவிறுப்புத் தேட, இப்படியும் ஒரு கொள்கை வலையில் விழமுடியும்னு புரிகிறது. அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது…”

“என்னென்னமோ சொல்றாம்மா. இம்மாதிரி விறுவிறுப்பா புத்தி தீட்சண்யமாக இருக்கும் இளசுகளை, கட்சி வலைக்குள் கொள்கைகளைக் காட்டி இழுக்க பெரிய தலைகளெல்லாம் அன்றாடம் டீயில் ஒரு துளி கஞ்சாவையோ அபினையோ கூடக் கலந்து கொடுப்பாளாமே? தச்சு ராஜீவெல்லாம் சொல்றதுக. எனக்கென்ன புரிகிறது? கைநழுவிப் போவதுதான் தெரிகிறது…”

கமலம்மாவின் துயரம் நெஞ்சைத் திறந்து கொண்டு வருகிறது. யமுனாவுக்கு ஊமைக் காய்ச்சல் குபீரென்று வெளிக்கிளம்பி விட்டாற் போலிருக்கிறது.

“கமலம்மா, நீங்கள் ஒன்றுமட்டும் திடமாக நம்புங்கள், இவர்கள் கொள்கைப்படி நம் நாட்டில் புரட்சி வந்து சமமாக முடியவே முடியாது. இந்த வழியே தப்பு வழி. தப்பு வழியில் இறங்கியவர்கள் எப்படியும் ஒருநாள் நேர் வழிக்குத் திரும்பித்தானாக வேண்டும். நீங்கள் நிச்சயமாக நம்புங்கள்.”

யமுனாவின் கண்கள் ஒளிருவதையே விடாய் தீர்த்துக் கொள்ளும் வறியனைப் போல் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அந்த முதியவள் விளக்கை அணைத்து நீல பல்பைப் போட்டுவிட்டு யமுனா படுக்கிறாள். கமலம்மாவும் கம்பளியை இழுத்து விட்டுக் கொண்டு தலையைச் சாய்க்கிறார்.

யமுனாவுக்குப் படுக்கை பொருந்தவில்லை. ஜன்னல் கதவுகளைச் சாத்தி இருப்பதால் போலும், மேலும் கம்பளியைப் போட்டுக் கொண்டதும் உடலின் குளிர்ச்சிக்கு அது இதமாக இல்லை. செவிமடல்கள், கண்களில் இலேசான வெம்மை. கம்பளியைத் தள்ளினாலோ உடலின் மேல் குளிர் ஓடுகிறது. ஆனால் உட்சூட்டை அந்தப் புறக்குளிர்ச்சி குறைத்து சமமாக்கவில்லை.

கண்களை மூடினாலும் உறக்கம் கொள்ளவில்லை.

“ராம்…ராம்…ராம்…ராம்…ராம்…”

உதடுகளை மட்டும் அசையச் சொல்லிவிட்டு நெஞ்சம் எங்கோ செல்கிறது.

“அவன் என்ன கொண்டு போகிறான்?”

“அரிசியும் கொஞ்சம் கிழங்குமாவும்.”

“எங்கு கொண்டு போகிறான்? எதற்குக் கொண்டு போகிறான்? அவன் யார்?”

கேள்விகள் நாவரையிலும் வந்து தங்கி விடுகின்றன. அம்மா நிற்காமலே அப்பாவின் குடில் பக்கம் போகிறாள்.

“அம்மா!… அம்மா!…”

“சுதீர் அந்தப் பக்கம் எதற்கு நடமாடுகிறானாம்?”

முள்ளியாற்றின் அக்கரை அண்டை மாநிலம். ரங்கனின் அப்பன் அங்கே போய்க் குடித்துவிட்டு மதுவிலக்குச் சட்ட ஒழுங்கைக் காப்பாற்றுவான்.

கூப்பிடு தொலைவில் மின் நிலையம் எழும்பிக் கொண்டு இருக்கையில் இங்கு கிடைக்கும் பங்கீட்டு அரிசியை அரை வயிற்றைக் கால் வயிறாக்கி மீத்து, ஆற்றைத் தாண்டி அப்பால் இரட்டிப்புப் பட்டினி விலைக்கு விற்று வயிறு நிரம்பக் குடித்தவர்களை அவள் அறிந்திருக்கிறாள்.

‘அம்மா இரட்டிப்புப் பட்டினி விலைக்கு விற்கிறாளா? அல்லது அந்தப் பாவப்பட்ட ஏழைகளுக்குப் பசித்தீ இருக்குமிடத்தில் புரட்சித் தீயை ஒரு பக்கம் துரோகிகள் மூட்ட உதவி செய்கிறாளா? இரண்டு நாட்களாக அம்மாவின் நடப்பில் கரவு காண்பதால் பேச்சில் சரளமில்லை. நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்குக் கூப்பிடவில்லை. யாரிடம் சொல்வது? அம்மாவிடம் சொல்லலாமா? அவளை வயிற்றில் வைத்து வளர்த்த நாள் முதல் அன்பு நெறியே சத்தென்று ஊட்டி இருக்கும் அம்மாவிடமேயா ஐயப்பாடு?’

‘ஒருகால் அம்மாவும் இப்போது இந்தப் புரட்சிகளில் நம்பிக்கை கொண்டிருப்பாளோ?’

கண்களை மூடிமூடிப் புரண்டாலும் உறுத்தல் மாய்ந்து குளிர்ந்த உறக்கம் அவளைத் தழுவவில்லை. கண்ணாடிக் கதவுகளைச் சாத்திக் கொண்டு தான் படுத்திருக்கிறார்கள்; அதனால் வெளியே புயலடித்தால் கூட உள்ளே அது அமைதியைக் குலைக்காது. ஆனால் உள்ளத்து அமைதியின்மையை வெளியே பிரதிபலிப்பது போல், செவிகளில் ஏதேதோ மெதுவாக விழுகின்றன.

காற்றில் சருகுகள் பறக்கின்றன.

எழுந்து கதவை நீக்கிப் பார்த்தால் கமலம்மா விழித்து கொள்வார். உண்மையில் அவரும் உறங்குகிறாரோ?

அவள் மெல்ல ஓசைப்படாமல் முன்னறைக்கு வருகிறாள்.

சன்னல் கதவை நீக்கிப் பார்க்கிறாள். தொலைவில் எங்கோ வளைவுச் சாலையில் தெரு விளக்கொன்று தெரிகிறது. குளிர்ந்த காற்று வீசுகிறது. இரவின் தன்மை கன்னங்களைத் தழுவும் போது இதமாக இருக்கிறது. மலை முகடுகளில் மேகங்கள் குவிகின்றன போலும்.

மக்கள் வேண்டித் தவமிருக்கும் மழை.

காற்று வலுத்து மரங்களைப் பேயாட்டமாடச் செய்யும் சடார் படாரென்று கண்ணாடிக் கதவுகளில் மோதி எறியும் மழைச் சாரலை எதிர்நோக்கிக் கொண்டு அவள் சன்னலுக்கு வெளியே கையை நீட்டிக் கொண்டு நிற்கிறாள்.

அவர்களுடைய ஆசிரமம் இருக்கும் தாழ்வரைப் பகுதிகளில் அந்த மாவட்டத்திலேயே மிகக் குறைவான அளவு மழைதான் பெய்யும். அந்தக் கானங்கள் கூடலூர்ப் பகுதிக் கானகங்களைப் போல் வளமானவை அல்ல. என்றாலும் அந்த மழைக்கே குடிலின் ஓரங்களில் கழுதைகளோ, நாய்களோ, வந்து ஒண்டி நிற்கும். சில சமயங்களில் மான் கூட வருவதுண்டு. ஒரு தடவை செந்நாயொன்று வந்ததாக ரங்கன் சொன்னான். “பேசாமலிரு, அது வந்த வழியே போய்விடும்” என்றாராம் அப்பா. இப்போது சுற்று வட்டம் காட்டையே அழித்து நாடாக்கி விட்டார்கள். மான்கள் கூட வருவதில்லை. ஒருவருக்கொருவர் நம்பிக்கை மாறி அச்சம் தலைதூக்கி நிற்கிறது.

அவள் பார்த்துக் கொண்டே இருக்கையில் வீட்டின் கீழே சாலையின் வளைவில் ஏதோ லாரி வரும் ஓசை. வெளிச்சம் பாய் விரித்தாற் போல் சாலையில் படிகிறது. பிறகு அணைகிறது. சாலை மேலேறிச் சுற்றினாற் போல் வீட்டுக்கு வரும் பாதை… அந்தப் பாதையிலேயே கண்களைப் பதித்துக் கொண்டு அவள் நிற்கிறாள். நெஞ்சத் துடிப்புகள் செவிகளையே நிறைக்க வலுக்கின்றன. அவன் வளைவுப் பாதையில் ஏறி வரவில்லை. குறுக்கே ஏறி நேராக வாயிலில் நிழல் தட்ட வருகிறான்.

அதற்கு முன் கொக்கியைத் திறந்து கிளிக்கென்ற ஓசையுடன் பூட்டைத் திறக்கிறாள் யமுனா.

அவள் அவன் உள்ளே வரும்போது விளக்கைப் போடாமல் ஓரத்தில் விலகி நிற்கிறாள்.

அவன் உள்ளே நுழைந்து கிளிக்கென்று கதவைச் சாத்துகிறான். பிறகு விளக்கைப் போட்டுவிட்டு நேராக அவளைப் பார்க்கிறான். மேலே பளபளக்கும் மெழுகுச் சீலை போன்ற துகிலில் ஜிப்போட்ட ஜாக்கெட்; நெடிது வளர்ந்த தோற்றம். கமலம்மாவின் கம்பீரமான முகத்தின் வார்ப்பு. முடி வாராமல் கலைந்து கிடக்கிறது. முகத்தில் ஒழுங்கு இல்லாத ஐந்தாறு நாளையக் கருமை.

“ஓ…ஹ்!” என்று ஒலியெழும்புகிறது. புன்னகை விரிகிறது.

“எனக்காகக் காத்திருக்கிறாயா யமு.”

மெல்லிய குரலோடு அவள் அருகில் நெருங்குகிறான்.

அவள் ஒதுங்கிக் கொள்கிறாள்.

“ரொம்பக் கோபம் போலிருக்கு!”

நாற்காலியில் உட்கார்ந்து காலணிகளைக் கழற்றி எறிகிறான். அவற்றைப் பார்த்தால் நெடுந்தொலைவு நடந்து வந்திருக்கிறானென்று தோன்றுகிறது.

குளியலறைக்குள் அவன் சென்று கதவடைத்துக் கொள்கையில் அவளுள் ஓர் போராட்டம் நிகழ்கிறது.

கமலம்மா எழுந்து வருவாரா? அல்லது எழுப்பலாமா?

சுப்பையா உள்ளே போர்த்து மூடிக் கொண்டு உறங்குவானாக இருக்கும். அவனை எழுப்புமுன் கமலம்மா எழுந்து விடுவார்.

இது நல்ல சந்தர்ப்பம்.

மனம் விட்டுப் பேசலாமல்லவா?

ஆனால் அவனைப் பார்க்கும் போது தன்னுடைய ஆற்றல்களெல்லாம் ஒளிந்து கொள்ள, தேர்ந்தெடுத்த சொற்களெல்லாம் மறந்து போய்விடுமோ?

கெய்ஸரில் சுடுநீர் இருக்கும், அல்லது குளிர்ந்த நீரில் தான் இப்படித் தலையைத் துவட்டிக் கொண்டு வேற்றுடை மாற்றி வருகிறானோ? அவனாகவே சாப்பாட்டு அறைக்குள் சென்று விளக்கைப் போடுகிறான். கமலம்மா எழுந்து வரவில்லை.

இது வழக்கமோ?

ஆனால்… வழக்கமாக அவனுக்கு யார் கதவு திறப்பார்களோ?

“நீ சாப்பிட்டாச்சா யமு?”

பரிவு மேலிடும் விசாரணை.

“ஹும், அம்மாவை எழுப்பட்டுமா?”

“வேண்டாம். நான் நேரம் கெட்ட நேரத்தில் வந்தால் கதவைக் கூட இடிக்க மாட்டேன்…”

அவளை நோக்கி, கண்கள் சிறுக்க ஓர் சிரிப்பு.

“பின்னே?”

“அதற்கெல்லாம் வழி இருக்கிறது.”

“ஏன் இந்தத் திருட்டுத்தனம்? ஏன் நேர்வழியை விட்டுவிட்டு இப்படி நடமாட வேண்டும்?”

அவனே தட்டுக்களை வைத்துக் கொண்டு ஆறிப்போன ரொட்டியையும் களைக்கோசையும் எடுத்துப் போட்டுக் கொள்கிறான்.

“இதுதானா? நான் சூடாக்கிக் கொண்டு வரட்டுமா?”

“வேண்டாம்; வேண்டாம். உட்கார் யமு. உன்னைப் பார்த்துப் பேசி எத்தனை நாட்களாச்சு! நான் இப்பத்தான் கீதாமஹால் போஸ்டர் பார்த்து உன்னை நினைச்சிட்டு வந்தேன்…”

“நானும் உங்களைப் பார்த்துப் பேசணும்னு உக்காந்திருக்கிறேன், அது தெரியுமா?”

ஆறிப்போன ரொட்டி; அதுவும் சுப்பையாவுக்கு ரொட்டி செய்யத் தெரியாது போலும்! தோல் போல் இழுக்கிறது. தாடைகள் அசைய அசைய அதைக் கடித்து அவன் மெல்லுகிறான்.

“என்ன யமு, பார்க்கிறே?”

“ஒண்ணுமில்லே…”

“என்னமோ பேசணும்னியே? நான் சாப்பிடறப்ப நீ பேசு; நான் கேட்கிறேன்.”

“என்ன பேசறதுன்னு புரியவில்லை. பேச எனக்கு வாயில்லாம அடிச்சப்புறம் பேச்சு எழும்புமா?”

மேசையில் அவளுடைய விரல் கோலமிடுகிறது. அவனை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.

“யமு, உன்னைப் பார்க்கும் போது எனக்குச் சிரிப்புத் தான் வருகிறது…”

“ரொம்ப நன்றி.”

அவன் தட்டில் கைகழுவிட்டுத் தண்ணீரை மடக்மடக்கென்று குடிக்கிறான். பிறகு கைகளைத் துடைத்துக் கொண்டு எழுந்திருக்கிறான்; ஒரு சிகரெட்டைக் கொளுத்திக் கொண்டு அவளருகில் நாற்காலியை இழுத்துக் கொண்டமருகிறான்.

“யமு நீ பேசலியா?”

“உங்களிடம் என்ன பேசுவது? என் அம்மா, ‘குட்டி சினந்து வீட்டைக் கொளுத்துவதாகப் பயமுறுத்தினால் சிரிக்கத்தானே தோன்றும்’ என்றாள். என்னால் அப்படி நினைக்க முடியவில்லை. நான் எப்படிப் பொருட்படுத்தாமலிருப்பேன்? இரத்த வெறிக்கு ஒன்றுமறியாத மக்களைத் தூண்டி விடுவதால் உங்களுடைய சித்தாந்தம் நிறைவேறி விடுமா? உலகம் தோன்றிய நாளிலிருந்து எவரும் வன்முறையில் சாந்தியும் இன்பமும் காணலாம் என்று கூறியிருக்கவில்லை. அது அன்பு நெறியினாலும் கொல்லாமையினாலும் தான் வளர முடியும். இரத்தப் புரட்சி செய்து சமத்துவம் கண்டிருக்கும் நாடுகளில் அச்சமில்லாத – ஐயமில்லாத – அவநம்பிக்கையில்லா அமைதி இருக்கிறதா என்று நீங்கள் நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொண்டு சொல்லுங்கள். புரட்சி செய்ய வேண்டும்; நான் ஒப்புகிறேன். ஆனால் இப்படி வேண்டாம். ஊரூராய்ப் படை திரண்டு போய் மக்களின் மனங்களின் அன்பு நெறியை வளர்க்கப் பாடுபடுவோம். அந்தப் படையின் முன்னணியில் நிற்க நான் வருகிறேன். இது… இது… வேண்டாம்”

அவன் கருமை படர்ந்த மோவாயைக் கையால் தேய்த்துக் கொண்டு சிரிக்கிறான்.

“இந்த நாட்டின் பேதைமை எல்லாம் ஒன்று சேர்ந்த உருவம் ஒன்று எப்படியிருக்குமோ, அப்படி இருக்கிறது உன்னைப் பார்த்தால்! இவ்வளவு படிப்புப் படித்து கண் முன் நடக்கும் இத்தனை அநீதிகளையும் பார்த்து, ஏமாற்று மோசடிகளுக்குக் காந்தி என்ற கவசத்தைப் போட்டுக் கொள்ளும் சந்தர்ப்பவாதிகளைத் தெரிந்து கொண்டு, யமு… எனக்கு ஒரு பெரிய ஏமாற்றமாக நீ காட்சி கொடுக்கிறாய்…”

“நீங்கள் அந்த முதலை வாயில் விழுந்து விட்டீர்கள். தப்பி வர முடியாமல் சுற்றிச் சுற்றி வருகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். என்னைப் பேதை என்று சொல்லும் உங்களை, நான் அறிவாளி, மிகுந்த செயல் திறமையும், வாக்குவன்மையும் உடைய தலைவர் என்று நினைத்துத் தான் பார்க்கிறேன். இந்த வழியைச் சரி என்று நம்ப முடியவில்லை. கையில் இரத்தக் கறையைத் தோய்த்துக் கொண்டு எளியரை அச்சுறுத்துவது, தொண்டையைக் கிழிப்பதும், குடலை எடுப்பதும், நாகரிகமடைந்த மனிதன் ஒப்பும் செயல்களா?”

அவன் விழிகள் பெரியதாக உறுத்துப் பார்க்கின்றன. அவளுக்குப் புல் நுனிகளாய்க் கைகள் நடுங்குகின்றன. ஆனாலும் சமாளித்துக் கொள்கிறாள். குபீரென்று பயங்காட்டிச் சிரிப்பது போல் சிரிக்கிறான்.

“பரவாயில்லை யமு… நீ பயங்கொளி இல்லை. உன்னைப் போன்றவர்கள் ஒரு முனையில் நின்றால் நூறு நூறாய்ப் படை திரண்டெழுவார்கள். இந்த நாட்டின் ஆற்றலனைத்தும் இப்படி அஹிம்சை என்ற ஆஷாடபூதித் தனத்திலும், அன்பு என்ற போலிப் புரட்டிலும் சிறை இருக்கிறது. தளைகளை உடைத்தெறியுங்கள்! புரட்சிக்கு வழிகோலுங்கள்! யமுனா, ஆற்றுத் தண்ணீர் போகட்டும் போகட்டும் என்று விட்டுக் கொண்டே இருந்தால், அதுவாக இந்தா என்று நிலங்களுக்குப் பாயாது; மின்சாரத்தைக் கொடுக்காது; வெள்ளமாய் ஊரை அழிக்கும். இல்லையேல் கடலில் போய்ப் பாழாகும். அதைத் தடுத்துக் குப்புற விழச்செய்துதான் பலன் பெற வேண்டும். ஒரு சிலரே திரும்பத் திரும்ப நாட்டின் செல்வங்களை அநுபவிக்கும் இந்த முறை ஒழிய வேண்டும். அது ஒழியாது; ஒழிக்க வேண்டும். யமுனா நாற்பத்தேழில் கிடைத்த சுதந்திரம் கொழுத்த முதலாளிகளுக்குத்தான் என்று தெரிந்து கொள். ஐந்தாண்டுத் திட்டங்கள் இந்த நாட்டின் ஒரு சில முதலாளிகளையே கொழுக்க வைத்திருக்கிறதென்றுணர்ந்து கொள்! உன்னுடைய காந்தியின் அஹிம்சை, கோழைகளின் சாக்கு. அதை விட்டெறிந்து விட்டு உண்மையான புரட்சிக்கு எங்களுடன் வா. உனக்குப் பயங்கள் துச்சம் என்பது எனக்குத் தெரியும்…” சம்பங்கிப் பூவிலிருந்து பொன் பொறிகள் சிதறினாற் போல் இருக்கிறது.

“உன்னைப் போன்ற இளம் தலைமுறையின் கைகளில் தான் இந்த நாட்டுக்கு விமோசனம் வரப்போகிறது. கைராட்டையிலும் பண நாயகத்திலும் விமோசனம் வர முடியாது; புரட்சியானாலேயே வரும்…”

தான் கோழையாக நிற்பது போன்ற உணர்வை அவளுக்கு அந்த கணத்தில் அவன் தோற்றுவிக்கிறான்.

‘செய் அல்லது செத்துமடி’ என்று காந்தியடிகள் முழங்கிய போது இந்நாட்டு இளைஞர்களும் யுவதிகளும் எப்படி எழுந்தார்கள்? எப்படி ஆவேசமாக முன் வந்தார்கள்?

அதைத் தாயும் தந்தையும் ஜோசஃப் அம்மாவனும் சொல்லித்தான் அவள் அறிந்திருக்கிறாள். அப்போது பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் புரட்சியில் இறங்கினார்கள். அது என்ன புரட்சி?

இப்போது… அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

அந்த சில விநாடிகளில் வியப்பும் மருட்சியும் கொண்ட விழிகள் அவன் மீது நிலைக்கின்றன. பின்வாங்கத் துணியாத சாவை மதியாத, கொள்கையையே தருமம் என்று இரத்தக் குழம்பில், நெருப்புக் குழிக்குள் அடி வைக்கும் துணிவு… அது பலவீனத்தை அடிப்படையாகக் கொண்டிருக்குமா?

மென்மையைக் குரலில் குழைத்துக் கொண்டு புன்னகை செய்கிறான். அவளுடைய அம்மா, அந்தக் காலத்தில் கமலம்மாவுடன் ஆசிரமத்துக்கு வரும் இந்தப் பிள்ளையை ‘சுதீரா’ என்று அழைப்பாள். வசந்தத்தின் தொடக்கத்தில் ஒரு மழை பெய்ததும் குவியல் குவியலாகப் புறப்பட்டு வரும் வண்ணத்துப் பூச்சிகளைச் சிறுமியாய் அவனுக்குக் காட்டி மகிழ்ந்திருக்கிறாள் அவள். பின்னர் கல்லூரி இளைஞனாக அவன் அங்கு வந்தபோது அவள் முகையவிழும் பருவத்தில் உலகையே அறியத் துடிக்கும் ஆர்வத்துடன் அவனிடம் கேள்விகள் கேட்டதுண்டு. கவலையோ கடினமோ அறியாத மலர்ந்த முகம். அவனுடைய கைகள் பெண்ணின் கைகளைப் போல் மென்மை வாய்ந்தவை. அவன் சிரிக்கும் போது காற்றில் பூச்சரம் அவிழ்ந்து உதிர்ந்தாற் போல் இருக்கும். புன்னகை பூத்தாலே கன்னங்கள் குழியும். அந்த சுதீரன் எங்கே?

மனிதனாக வளர்ந்து பெற்ற மென்மையான பரிணாம அங்கிகளை உரித்துக் கொண்டு, விலங்குத் தன்மையை அப்பட்டமாகக் காட்ட முனையும் இந்த சுதீரன் எப்படி உருவானான்?

“நீ இப்படிப் பார்த்து ஆளைப் பைத்தியமாயடிக்காதே…” அவன் முகத்தில் உறைந்திருந்த உணர்ச்சிகளின் நெகிழ்ச்சி மின்னுகிறது. கைப்பிடி அவளைப் பற்றி இழுக்கும் அளவுக்கு வலுக்கிறது.

அவள் விலுக்கென்று பின்னுக்கு இழுத்துக் கொண்டு திரும்புகையில் கமலம்மாவின் மீது மோதிக் கொள்கிறாள்.

“என்னை எழுப்பியிருக்கலாமே? இடியும் மின்னலுமாக இருக்கு… ஜன்னலெல்லாம் சாத்தியிருக்கா?”

யமுனா படுக்கையில் வந்து உட்காருகிறாள்.

வெளியே மழை சடார் படாரென்று அடிக்கிறது. காற்றில் மரங்கள் பேயாட்டம் ஆடுகின்றன. அவள் உலகில் கண்விழித்த நாளாய் உள்ளத்தில் வேரூன்றி வளர்ந்திருக்கும் ஒரு பெருமரமும் பேயாட்டம் ஆடுவது போலிருக்கிறது.

அத்தியாயம்-4

விடியும் நேரத்திலேயே உறங்கினாலும், கண் விழிக்கும்போது சுறுசுறுப்பாக இருக்கிறது. படுக்கையில் கமலம்மாவைக் காணவில்லை. யமுனா குளியலறைக்குச் சென்று காலைக் கடன்களை முடித்து, இதமான வெந்நீரில் நீராடிய பின், சேலையைச் சோப்புப் போட்டுக் கசக்கி வெளியே உலர்த்தப் போகிறாள். முதல் நாள் பெய்த மழை ஈரத்தில் பசுமை மின்னுகிறது. விண்மணி பளிச்சென்று முகம்காட்டி அந்தப் பசுமை கண்டு பூரிக்கிறது. அவள் பின்வாயில் வழியாக உள்ளே கூடத்துக்கு வரும்போதுதான் மலையாளம் கலந்த அம்மாவனின் மழலைத் தமிழ் செவிகளில் விழுகிறது. தம் கதர் சால்வையுடன் அவர் உட்கார்ந்திருக்கிறார். சுதீர் பைஜாமாவும் சிகரெட் புகையுமாகச் செட்டில் சாய்ந்து மலையாளத்தில் பேசுகிறான்? ஆம், மலையாளத்தில் “சமரத்திண்டே ஃபர்ஸ்ட் காஷுவாலிட்டி” என்று ஏதோ செவிகளில் விழுகின்றன.

“குட் மோர்னிங், எந்தா யமு, சுகமில்லையோ?” என்று கேட்கிறார் கையில் ஆவி பறக்கும் தேநீர் கிண்ணத்துடன்.

“ஒன்றுமில்லையே?”

“பின்ன கண்ணெல்லாம் சிவந்து இடுங்கி…”

சுதீர் எங்கோ பார்த்துப் புகை விட்டுக் கொண்டிருக்கிறான்.

“எப்போது வந்தீர்கள்!”

“குஞ்ஞம்மையும் கமலம்மையும் ஒருபாடு நேரம் கண் முழிச்சு சம்சாரிச்சதாக்கும்!”

அவள் அதற்கு மறுமொழி கூறாமல் சுதீரை உறுத்துப் பார்க்கிறாள். அவன் காலை மடக்கிக் கொண்டு புகையை விட்டுக் கொண்டிருக்கிறான். இந்த சுதீர் முன்பு எத்தனை மரியாதையுள்ள நாகரிக மனிதனாக நடந்து கொண்டிருந்திருக்கிறான்? நீதிபதி வீட்டுக் குழந்தைகளின் செல்லப் பிராணியாகச் சொகுசாக வளர்ந்த நகரத்து நாகரிக நாய், பொன்னைத் தேடிப் பனிக்கண்டத்துக்குச் சென்ற பேராசை மனிதனுக்குத் துணை போக, கொஞ்சம் கொஞ்சமாக நாடு நகர வாசனைகளை எல்லாம் உதிர்த்து, நள்ளிரவில் குந்தியிருந்து ஊளையிடக் கானகத்துக்குத் தன்னைப் பழக்கிக் கொண்ட கதை நினைவுக்கு வருகிறது. மனித குலம் நாகரிகப் பரிமாணத்தில் முன்னேறிய பின் திசை கெட்டுத் தறிகெட்டுக் குப்புற விழத் திரும்பிப் பார்க்கிறது.

“எந்தா யமு?”

“பிரேக் ஃபாஸ்ட் சாப்பிடம்மா. உடம்புக்குச் சுகமில்லையாம்மா?” கமலம்மா பூஜையறையிலிருந்து வருகிறார்.

“பேர் பேராகக் கேட்கிறீர்கள்?…”

முரமுரத்த ரொட்டி வில்லைகளும் வெண்ணையும் பழப் பச்சடியும் கொண்ட தட்டத்தை ஏந்தி வருகிறான் சுப்பையா.

“காப்பியா, டீயா…” என்று அவன் மெல்லக் கேட்கையில், “டீயே இருக்கட்டும்” என்று கூறிவிட்டு யமுனா ரொட்டி வில்லையில் வெண்ணை தடவிக் கொண்டு, “நீங்கள்?… நீங்கள்?” என்று சுதீரையும் ஜோசஃபையும் பார்க்கிறாள்.

“இன்னிக்கு இங்கே ஏதானும் வேலை இருக்கா யமு?” என்று கமலம்மா கேட்கிறார்.

“இல்லே, பொருட்காட்சி சாமான்களைப் பிரேமாவும் ரங்கனும் எடுத்துக் கொண்டு வருவார்கள். நான் எல்லோருடனும் போகிறேன் ஆசிரமத்துக்கு.”

“அப்ப… அடுத்த மாசமோ, அதற்கடுத்த மாசமோ மெட்றாஸ் வருவாய்?”

“அது-நிச்சயமில்லை. ஒரு நினைப்பு இருக்கிறது. வந்தால் உங்களைப் பார்க்காமல் போவேனா?”

“நீ பெரியப்பா வீட்டில் தங்குவாய்…”

“எனக்கு எல்லாம் ஒன்று தான் கமலம்மா…”

“பின் அங்கே வந்து தங்கு. எனக்குச் சந்தோஷமாக இருக்கும்.”

“சரி. கமலம்மா என் துணிகளை இங்கே உலர்த்தி இருக்கிறேன். ரங்கன் வந்தால், கொடுத்து விடுங்கள்; நான் சொல்லிவிட்டுப் போகிறேன்…”

“இருக்கட்டுமே!”

விடைபெற்றுக் கொள்ளும்போது கமலம்மாவைக் குனிந்து வணங்கத் தோன்றுகிறது.

வாயிலில் மழை நீர்த் துளிகளை வயிரமாகத் தாங்கி மின்னிக் கொண்டு ஐந்தே இதழ்களுடன் கட்டவிழ்த்திருக்கும் அரக்கு வண்ண வெல்வெட் ரோஜாவைக் கிள்ளி அவன் ஈரக் குழலில் செருகுகிறார் கமலம்மா.

“வண்டி இருக்கே, கொஞ்சம் இருங்களேன்? டிரைவர் வந்திடுவான்…?”

“வேண்டாம்மா, மழை பெய்த சுகத்தில் நடக்கச் சந்தோஷமாக இருக்கும்… வரேம்மா…”

“வரேம்மா! எந்தா சுதிர்? பின்னக் காணாம்!”

“ரைட்டோ?”

அவன் வாசலில் வந்து நிற்கிறான். சிரிப்பதுபோல் தோன்றுகிறது. யமுனா பேசவில்லை. வளைவு திரும்பி, கீழே இறங்கிப் பாதையில் நடக்கின்றனர். தலை மறையும் வரையிலும் மேட்டில் நின்று கமலம்மா பார்க்கிறார்.

வெயில் பளிச்சென்று விழவில்லை; நீளம் தெரியமல் வானமெங்கும் பஞ்சுப் பிசிறுகள் சிதறிக் கிடக்கின்றன. எப்போதேனும் காற்றின் அசைவில் அவை விலகும்போது பளிச்சென்று நீலமாகச் சிரித்துக் கொண்டு கதிரோன் தன் குழந்தைகளாகப் பசுமைகளை மெல்ல வருடுகிறான். உடனே பொறுக்காத பஞ்சுத் துணுக்குகள் அந்தச் சிரிப்பை மாய்க்க ஓடோடி வருகின்றன.

“ராத்திரி நல்ல மழை. இந்த வருஷத்துப் பஞ்சக் கொடுமை போச்சு. உறக்கம் கொள்ளாத சந்தோஷம்” ஜோசஃப் மௌனத்தைக் கலைக்கிறார்.

“நீங்கள் சுதீரோடு என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள்?” என்று அவரைக் கேட்டாள் யமுனா.

“நானா? என்ன பேசினேன் சுதீரோடு? காப்பிக்கும் சாய்க்குமுள்ள வித்தியாசங்கள்…”

“அதில் சமரத்திண்டே காஷுவாலிட்டி என்ன வந்தது?…”

“அதோ? நான் அரசியல் ஒண்ணுமே பேசவில்லையே. யுத்தம்னு வந்தால் உண்மை போகும் அல்ல? அதான். ஏது சமரத்திலும் முதல் காஷுவாலிட்டி இப்ப சத்யமாணு?”

“அம்மாவா, எனக்குப் பெரிய போராட்டமாக இருக்கிறது. நாம் பைத்தியக்காரத்தனமாக, நடக்காத இலட்சியத்தைப் பற்றிக் கொண்டு போறாடுகிறோமோன்னு தோன்றுகிறது. எனக்குத் தெரிஞ்சே முன்ன நான் படித்த போது ஹாஸ்டலில் பூரி கூடச் செய்ய மாட்டார்கள். அப்போதே டில்லியிலிருந்து ஒரு அம்மா, காந்திய சர்வோதயம் கொண்டாடுபவர், வந்தால் எல்லா வகையும் செய்வார்கள். நம் ஆசிரமத்தில் இருந்து வரும் குழந்தைகளே வெளியே அழுக்குப் படிந்த தின்பண்டங்களைக் கண்டால் வாங்கித் தின்கிறார்கள். ஆசிரமத் தொண்டர்கள் வாழ்நாள் முடியக் கதர், எளிமை, கொல்லாமை, தூய்மை என்று பிரதிக்ஞை எடுத்துக் கொள்கிறோம். பிரேமா ஆசிரமத்தை விட்டு வீட்டுக்குப் போனால் நைலக்ஸ் வகைதான் உடுத்துகிறாள். போன மாசம் யாரோ ஒரு நீண்ட முடி வெள்ளைக்கார ஜோடி நம் குடிசையில் வந்து தங்கினார்களே, அவர்கள் கஞ்சா கொண்டு வந்திருந்ததாக ரங்கன் சொன்னான். இந்த மலையில் கஞ்சா பயிரிடுகிறார்களா என்று விசாரிக்கவே அவர்கள் வந்ததாக துரை சொன்னார். இந்த உலகத்தை நாம் என்ன செய்ய முடியும்?”

ஜோசஃப் மறுமொழி ஏதுமே கூறவில்லை.

சுமதி தாயி, மாதாஜியுடன் காலையிலேயே புறப்பட்டுப் போய்விட்டாளாம். துரையும் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற குழந்தைகளும் கூடக் காலை பஸ்ஸில் ஆசிரமத்துக்குத் திரும்புகிறார்கள்.

யமுனாவும் ஜோசஃபும் வரும்போது பஸ் போய்விட்டது. அடுத்த பஸ் நேராக அந்த வழியில் செல்லாது. எனினும் காத்திருந்து அதில் ஏறுகின்றனர். பிற்பகல் இரண்டரை மணிக்கு அது மஞ்சூரில் வந்து நிற்கிறது. அணைக்கட்டும் மின்நிலையமும் வந்த பிறகு பெருத்த ஊர். பஸ் நிற்குமிடம் வழக்கம் போல் கசமுசவென்றிருக்கிறது. மழை பெய்திருப்பதால் சரிவுகளில் பெண்கள் மண்வெட்டியும், கொத்தும், கூடையுமாகச் சளைக்காமல் வேலைக்கு இறங்கி விட்டனர். படுகப் பெண்டிர் மண்ணின் செவ்வியர்.

சரிவில் கொத்திக் கொண்டிருக்கும் பெண்ணைப் பார்த்துக் கொண்டு நிற்கையில், யமுனாவின் முகத்தில் ஏக்கத்தின் சாயல் படருகிறது. “அந்தப் பெண்ணைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. அரசியலின் அவலங்களைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் காலமறிந்து உழைத்து விளைவு காண்பதற்காக வாழ்கிறாள். அறிவு வளர வளரப் பிரச்னைகளும் சங்கடங்களும் தான் வளருகின்றன. அறியாமை போற்றக் கூடியதொன்றாகிறது.”

“அறியாமை – அறிவு, இரண்டையும் சரியான பொருளில் கண்டு நீ சொல்லவில்லை. வெறும் ஏட்டுக் கல்வியினால் அறிவு கூடிவிட்டதாகவும், பத்திரிகை படித்து அரசியல் அக்கப்போர்களை விவரிக்காததனால் அறியாமை நிறைந்தவளென்றோ ஏன் எடைபோடுகிறாய்? ஆனால் யமு, இப்பப் பாரு. உன்னைப் பார்த்துக் கொண்டு அவள் வேலை மறந்து நிற்கிறாள்?” இது ஜோசஃப்.

உண்மைதான். அந்த நங்கை இவளைப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள். யமுனா சிரிக்கையில் அவளும் புன்னகை பூக்கிறாள்.

“இது எந்தொரு சல்யம் பிடிச்ச வாழ்வு. அந்தப் பெண் எத்தனை அழகு! எத்ர பாக்யசாலி! ஒருபாடு படுச்சு, டீச்சர் உத்தியோகம் பார்ப்பது எத்ர கேமன்மை யானு! ‘இப்படி வெயிலும் பனியும் கொண்டு, மழயும் சகிச்சி, மானத்தையும் மண்ணையும் பார்த்து வாழ்வதொரு வாழ்வா!’ன்னு நினைச்சிருக்கும் யமு. மனுஷ மனசுக்குத் திருப்தி ஒருபோதும் கிடையாது. தியாகத்திலே ஆரம்பிச்சு அஞ்சு ஏக்கரும் பத்து ஏக்கரும் வாங்கினவர்கள், பொது வாழ்வில் சுயநலப்பசை ஒட்டி ஒட்டிப் பதவிப் பித்தாகி விட்டதைக் கண்ணால் பார்க்கலே? கிடச்சதைச் செம்மையாக்கிக் கொள்ள அறிவு வேணும். ஒரு செரட்டைச் சில்லுகிட்டியெங்கிலும் அதையும் தேச்சு மினுக்கிக் கலாவஸ்துவாக ஆக்குவதுபோல் வாழ்க்கையை வாழணும் குஞ்ஞே. சுகதுக்கம் சமமாகும் போள் ஏக்கமேது; நம்பிக்கையோடு முயற்சி செய். பலனைப் பற்றிக் கவலைப்படாதே. அதுதானல்லோ கீதாசாரியன் சொன்னதுங்கூட?”

“அம்மாவா! பதவியிலமர்ந்தால் அப்படிச் சமமாகப் பார்க்க முடியாதென்று தான் நீங்கள் கரையோரமாக ஒதுங்கி விட்டீர்களா?”

மூக்குக் கண்ணாடிக்குள்ளிருக்கும் விழிகள் அவளைப் பார்த்துச் சிரிக்கின்றன.

“பதவியில் அமருமுன் நம்முடைய தலைவர்களின் பேச்சுகளும் நடப்பும், பிறகு கொள்கைகளைக் கையாள ஆட்சி கைக்கொண்டு பிறகு மாறிப் போவதால் தான் இளந் தலமுறை நம்பிக்கையில்லாமல் போனது. தனிமனிதனின் ஒரு தூய்மையான நடப்பினாலேயே நாணயம், ஒழுங்கு எல்லாம் இருந்தாலே சமுதாயமும், ஜனநாயக அரசாட்சியும் மேன்மையாகும்…”

“இதற்கு நம்மால் இப்ப என்ன செய்ய முடியும் அம்மாவா?”

“உம்…?…யமு, இந்த நூற்றாண்டு ஆகோஷமெல்லாம் எதற்கு? நமக்கு விளம்பரமா? அல்ல. ஒரு பத்து நூறு குட்டிகள் இளந்தலமுறை கண்டு கேட்டு மனசில் வாழ்க்கையின் நல்ல நல்ல நெறிகளெல்லாம் பதியணும். இந்த நூற்றாண்டுத் திட்டமாக, வெறும் பாதயாத்திரையோடு நிற்காமல், மூலை முடுக்கெல்லாம், முக்கியமாக மனுஷ மதிப்புகளுக்கு இடம் கொடுக்காத நகரத்தில் நெறியோடு கூடிய வாழ்க்கைக்குப் பிரசாரம் செய்ய வேணும். இது என்னோட யோசனை…”

யமுனா மௌனமாக நிற்கிறாள்.

“அம்மையிடமும் அச்சனிடமுங்கூட இதே சொன்னது. ஏற்கெனவே முதிர்ந்து வழிமாறிப் போனவர்களைத் திருத்துவதை விட, இனி வளரும் தலைமுறைக்கு நல்ல வழிகாட்டுவது அவசியம் அல்ல? மூலைக்கு மூலை எலிமெண்டரி ஸ்கூல் மிடில் ஸ்கூல் ஹைஸ்கூல் எங்கும் பிரசாரம் செய்யணும். ஒரு நல்ல சமுதாயத்துக்கு வித்திடணும். யமுனா உரச்சு நிற்கணும் எந்தா?”

“செய்யலாம் அம்மாவா…”

“இதில் ஒரு சங்கடம். ஏது மண்ணாங்கட்டிக்கும் அரசியல் கலர் பூசினால்தான் இப்போள் விளம்பரம் கிட்டும். நாட்டுக்கார் மத்தியில் கொடி கட்டிப் பரன்ன சினிமாக்காரங்களே, இந்த கதிக்கு வந்திருக்கும் போது நாம் எம் மாத்திரம்? ஒரு பத்து ஸ்கூலில் சர்வோதய சேவா சிரமத்தைச் சேர்ந்த யமுனா காந்தியப் பிரசாரம் செய்யப் போவதாக ஏற்பாடு செய்யலாம்னு வச்சால், ஒவ்வொரு ஸ்கூலும் அரசியலுக்கு அப்பால் இருக்கணும். அரசு ஸ்கூல் ஒருவகை, மானேஜ்மெண்டாயிருந்தால் ஒரு குறிப்பிட்ட கட்சிண்ணு சார்ந்து இருந்தால் கஷ்டம்…”

ஆசிரமம் வழியாகக் கோவை செல்லும் பஸ் முக்கி முனகிக் கொண்டு வருகிறது. அந்தப் பாதையில் சுற்றி வளைந்து மலையை விட்டிறங்கும் பஸ் அது ஒன்றுதான். ஆசிரமத்திற்குச் சாலையில் இறங்கிய பின் செம்மண் பாதையில் நடக்க வேண்டும்.

சாலையில் வந்து இறங்கும் போது மாலையில் ஐந்தே கால் மணியாகியது. வானம் இருண்டு கிடக்கிறது. கானகத்தினிடையே மனிதப்பூண்டின் அரவம் கேட்காத அமைதி. அடர்ந்த காடுகள் மண்டிக் கிடக்கும் ஆற்றின் கரைகளினூடே அவள் சிறுமியாய் ஜோசஃபுடன் எத்தனை நாட்கள் குதித்து நடந்திருக்கிறாள்! அணைத்திட்டங்கள் வருமுன்பு அங்கு பள்ளிக்கூடம் கிடையாது. அப்பாவும் அம்மாவும் மருந்துப் பெட்டியையும் ஊசிக்குழாயையும் தூக்கிக் கொண்டு மலைகளையெல்லாம் சுற்றப் போய் விடுவார்கள். ஜோசஃப் அம்மாவன் பாதையைச் சீர் செய்வார். ஆற்றுத் தண்ணீரை இறைத்து விளைநிலம் பாலிப்பார். மாலையில் ஒவ்வொரு கிராமமாக பஜனை செய்யப் போவார். படிப்புங் கூடக் கற்பிப்பார். அவள் இருளக் குழந்தைகளிடையே அரசகுமாரியைப் போல் அச்சமின்றிச் சுற்றுவாள். காடை, உடை, புளி, ஆல், அத்தி, கோங்கு மரங்களிடையே காட்டுக் கொடிகள் பின்னிப் படர்ந்து கிடக்கும் இடங்களில் வன விலங்குகளின் அச்சம் உணராமல் முன் செல்வாள். ‘காட்டுத் தோழர்களே, நாங்கள் வருகிறோம்’ என்று இருவரும் கைகளைக் கொட்டிக் கொண்டு செல்வார்கள். சிவந்து நீரோட்டம் வாய்ந்த நெல்லிக்கனிகளைக் கடித்துக் கொண்டு சென்ற அந்த நாட்கள் எவ்வளவு இன்பமானவை!

ஒருமுறை சுதீரை அழைத்துச் சென்று யாரோ ஒரு இருளப் பிள்ளையைக் கத்தச் சொல்லி, கரடி கத்துகிறது என்று அச்சுறுத்திக் கைகொட்டிச் சிரித்திருக்கிறாள். அவன், இப்போது அவளை அச்சுறுத்திப் பார்க்கிறான்.

பாறை இடுக்குகளில் பெரிய கொடுக்கோடு குடியிருக்கும் தேள் வர்க்கங்களைக் காட்டி, அம்மாவன் அவளுக்குக் கொல்லாமையும் அஞ்சாமையும் பழக்கியிருக்கிறார். பெரிய புற்றுக்குள் பாம்பு இருக்குமோ என்று குச்சி கொண்டு குத்திப் பார்க்கக் கூடாது என்று சுதீருக்கு அந்தக் காலத்தில் அவள் விளக்கியதுண்டு. அங்கே திறந்த வெளிபோன்று அகன்ற சரிவில் ஆறு உருண்டைக் கற்களுக்கிடையே குழந்தைச் சிரிப்புச் சிரித்துக் கொண்டு வரும். அணைத்தேக்கம் வந்த பிறகு அந்த அழகுகளெல்லாம் கனவாகி விட்டன. மின்நிலையத் திட்டம் நடைபெற்ற காலத்தில் வண்ண வண்ணமாக மக்கள் அங்கே உல்லாசப் பொழுது போக்க வருவார்கள். அவளும் அம்மாவனும், தந்தையும் தாயும், ரங்கனும் அவன் குழந்தைகளும், காலையில் அங்கு சென்று பிரார்த்தனை பாடி, நீராடி, கூட்டாஞ் சோறு பொங்கி உண்டு களித்த நாட்கள் பல. கமலம்மா உதகை ஸீஸனுக்கு வந்தால் ஆசிரமத்தில் வந்து ஒரு வாரம் தங்குவார். அவருங்கூட அந்த இடத்துக்கு அழைத்துச் செல்லச் சொல்வார். அம்மாவன் கமலம்மாவுக்காகவே தனியாக ஒரு குடிலைத் தம் கைகளால் கட்டினாராம். இப்போதும் அது விருந்தினர் குடிலாக இருக்கிறது. இப்போது கமலம்மா அங்கு வந்து தங்குவதில்லை. உதகைக்கு வந்தாலும், இம்முறை ஆசிரமத்துக்கு வரவேயில்லை…

ரி…ம் ரீ…ஈம் என்ற குழளொலி அவள் சிந்தையை துண்டித்துத் தூக்கி வாரிப் போடச் செய்கிறது.

சாலையின் ஓரமாக அவள் விலகிக் கொள்கிறாள். அந்த நீல வண்டி சுர்ரென்று வந்து உராய்ந்தாற் போல் நிற்கிறது.

“சுதீர்…”

சுதீர் தான் ஓட்டும் ஆசனத்திலிருந்து கதவைத் திறந்து கொண்டு சிரிக்கிறான். காட்டுமிராண்டித் தோற்றம் காண்பித்த கருமையும் காதோரத் தூண்களும் கூட மழிக்கப்பட்டு முகம் மென்மை இயல்பைக் காட்டுகிறது.

“உங்க பஸ்ஸைப் பிடிக்கணும்னு துரத்திக் கொண்டு வந்தேன். இந்தா யமு?”

யமுனாவிடம் சிரித்துப் பேசி, அந்தப் பழுப்பு நிறப் பாக்கெட்டைக் கொடுக்கிறான்.

“என்னது இது?”

“உன் சேலை. விட்டுப்போய் விட்டாயே? வேறொன்றுமில்லை; பயந்துவிடாதே!”

“நன்றி, இதை… நீங்கள் கொண்டு வருவதற்காகவா… வாருங்கள்!”

“ஏன், இதைக் கொண்டு வருவதற்காக நான் வரக் கூடாதா?” ஒரு சிரிப்பு. சண்பகப் பூக்கள் இளங்காற்றில் சிதறுகின்றன. கதவைச் சாத்துகிறான்.

“நீங்கள் உள்ளே வரலியா?”

“இல்லே. கோயமுத்தூர் போகிறேன். ஆறரை மணிக்கு ஒரு மீட்டிங்.”

வண்டி பாதையில் மெல்ல இழிந்து செல்கிறது.

சேலையை அழகாக மடித்துக் காகிதப் பைக்குள் வைத்துக் கட்டியிருக்கிறார். கமலம்மா தான் கட்டியிருப்பார்.

கோயமுத்தூர் கூட்டத்துக்குப் போகிறேன் என்று சொல்லியிருப்பாரோ; போகும்போது கமலம்மா புடவையைக் கொண்டுபோய்க் கொடு என்று சொல்லியிருப்பாரோ?

உள்ளே வந்து காகிதத்தைப் பிரிக்கும் போது மேலாக ஒரு துண்டுக் கடிதம் இருக்கிறது. “நேற்றிரவு பண்புக் குறைவாக நடந்திருந்தால் மன்னித்துவிடு. சுதீர்…”

– தொடரும்…

– வேருக்கு நீர் (இந்திய அரசின் சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நாவல்), முதற் பதிப்பு: 2010, நாம் தமிழர் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *