வேரிலும் காய்க்கும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 5, 2013
பார்வையிட்டோர்: 18,154 
 
 

“நீங்கள் தேடி வந்த வீடு இது இல்லை” என்று சொல்ல நினைத்தவள், சுதாரித்துக்கொண்டு “வாருங்கள், வணக்கம்” என்றாள் வனிதா.

வந்தவர் அவளின் அண்ணன் மாதவன். வசதியாக இருப்பவர். பெட்டிக்கடைக்காரனை காதலித்த குற்றத்திற்காக தங்கையென்ற உறவையும் மறந்து. “இந்த வீட்டில் உனக்கு இடமில்லை ,வெளியில் போடி நாயே” என்று மாலையும் கழுத்துமாக வந்து நின்றவர்களை துரத்தியவர், நாடு கடத்தியவர். இன்று தைரியமாக அவள் வீடு தேடி வந்திருக்கிறார். விந்தைதான்.

“என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள்?” என்று முகத்திலடித்தாற்போல் கேட்க அவள் பண்பு இடம் தரவில்லை. வீடு தேடி வந்தவருக்கு காபி கொடுத்து உபசரித்தாள், குற்ற உணர்ச்சியுடன் வாங்கி குடித்தார். படித்தும் வேலை கிடைக்காததால் பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்திய நடராஜை, வனிதா காதலித்தது குற்றமாகப்பட்டது. மாதவனுக்கு விரட்டினார். வாழ்ந்து காட்டவேண்டும் என்ற வைராக்கியத்தோடு ஊரை விட்டுபுறப்பட்டனர் நடராஜும் வனிதாவும். உழைப்பு உழைப்பு உயர்வு உயர்வு.

இப்போது வனிதாவுக்கு இருக்கும் ஒரே துணை அவளது மகன் விவேக். கணவன் நடராஜ் ஒரு ஆக்சிடெண்டில் இறந்து மூன்று வருடங்கள் ஓடிவிட்டன, விவேக் பெற்றவர்களின் லட்சியம் புரிந்து எம்.பி ஏ, படித்து விட்டு அமெரிக்காவில் பெரிய வேலையில்இருக்கிறான். அம்மா வனிதாவை அழைத்துப்போகவே வந்திருக்கிறான். எத்தனை நேரம் தான் பேசாமல் அமர்ந்திருப்பது?. மாதவன் மெல்ல ஆரம்பித்தான்.

“மாப்பிள்ளை இறந்ததுக்குக்கூட எங்களுக்குத்தகவல் சொல்லலே, என் நினைப்புக்கூட உனக்கு வரலையா?”

“பெட்டிக்கடைக்காரர் இறந்ததற்கெல்லாம் கவுரவப்பட்டவர்கள் வருவார்கலான்னுதான் சொல்லலே”

“வனிதா …நீ பழசையெல்லாம் மனசில வச்சுகிட்டு பேசறே ….ஏதோ புத்திகெட்டத்தனமா பேசிட்டேன், அதை மறந்துடும்மா, நம்ம உறவை பலப்படுத்திக்கத்தான் இப்ப நான் வந்திருக்கேன்”

“என்ன சொல்றீங்க?”, அதிர்ந்து போய் கேட்டாள் வனிதா.

“அம்மா வனிதா, உன் பையன் விவேக்கிற்கு என் பெண் ரமாவை மணமுடிக்க தீர்மானிச்சுட்டேன்”

“சாரி அண்ணா, நீங்க காலம் கடந்து வந்திருக்கீங்க?'”

“நீ என்ன சொல்றே வனிதா?”

“என் பையனுக்கு அமெரிக்காவில் பெண் பார்த்தாகி விட்டது, அடுத்தவாரம் திருமணம். அதற்கு அழைக்கத்தான் வந்திருக்கான், இந்தாங்க பத்திரிகை ”

“நம்ம பெண்ணுக்கு எந்த வரணும் திகைய மாட்டேனென்கிறது பேசாம உங்க தங்கை பையனுக்கே கொடுத்திடலாம், பெட்டிக்கடைக்காரனும்தான் போயாச்சே மாமனார் பெட்டிக்கடைக்காரராக இருந்தார்ன்னு யாருக்குத்தெரியும்? அமெரிக்காவிலே நல்ல சம்பளம்னு சொல்றாங்க, போய் கேட்டு முடிச்சுட்டு வாங்க ” என்று மாதவனின் மனைவியே சொன்னதால் தான் வந்தார் மாதவன்.

இல்லை என்றானதும், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல் மாதவன் கடுப்பாய் பேசினார்.

“ஏதோ என் மனசு அடிச்சுகிட்டுது, அதான் வந்தேன், நான் வந்தது தெரிந்தால் உன் அண்ணி ஒரே குதியாய் குதிப்பாள். பெட்டிக்கடக்காரனுக்கு என் பெண்ணா என்று பேயாட்டம் ஆடுவாள் நான் வரேன். நல்லா இருங்க, என்னை உன் அண்ணன் என்று யாரிடமும் தவறிக்கூட சொல்லிடாதே, எனக்குத்தான் அது கேவலம்”, துண்டை உதறித்தோளில்போட்டுக்கொண்டு புறப்பட்டார் மாதவன்.

அவர் போவதையே பார்த்துக்கொண்டிருந்தாள் வனிதா.

“என்னம்மா யோசிக்கிறே” விவேக் கேட்டான்.

“இல்லேப்பா ..வேண்டுமென்றால் வேரிலும் காய்க்கும், வேண்டாட்டி, எப்படி துச்சமா பேசிட்டுபபோறார் பார்த்தியா, வேடிக்கையாய் இல்லை?. மனிதர்களே இப்படித்தான்
மாமா”.

“நல்ல சமாளிப்பா பேசறார். அவர் இங்க வந்ததே வீட்ல தெரியாதது மாதிரி ….நல்ல நடிகர்ம்மா உன் அண்ணன்”, என்று சொல்ல, “போகட்டும் விடுப்பா, இயலாதவர்களின் அலட்டல், சரி நாம புறப்படுவோம்”

– அக்டோபர் 20-10-2000

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *