(1990ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 15-16 | அத்தியாயம் 17-18 | அத்தியாயம் 19-20
அத்தியாயம்-17
மூர்த்தியைக் கண்டதும் பாகீரதிக்கு ஏதேதோ பேச வேண்டும்போலிருந்தது. பழைய நினைவுகளில் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் மேலிட்டுப் பேச முடியாமல் தடுமாறினாள்.
“இவர் தஞ்சாவூர் வேதபாடசாலைல சமைச்சிண்டிருந்தார். ஆனந்தராவ்னு பேர். ராவ்ஜினு கூப்பிடுவா. ராயர்னும் கூப்பிடுவா. சமையலுக்கு ஆள் வேணும்னு அப்பா எப்பவோ கேட்டிருந்தாராம். கிட்டப்பா இவருக்குத் துணையாக என்னை அனுப்பி லெட்டரும் எழுதிக் கொடுத்திருக்கார்.”
“ஓகோ, அப்படிச் சொல்லு. அதனாலதான் வந்திருக்கேன்னு சொல்லு!” என்று கேலியாகச் சிரித்துக்கொண்டே சொன்னாள் பாகீரதி.
“அப்படித்தான் இருக்கட்டுமே!” என்றான் மூர்த்தி.
“சரி, இப்பவே இவரை சமைக்கச் சொல்லட்டுமா? உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு. அதையே சமைக்கச் சொல்றேன்” என்றாள்.
மூர்த்தி இங்கே இரவு தங்கப் போகிறானா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ளவே பாகீரதி தந்திரமாக இப்படி ஒரு கேள்வியைப் போட்டாள்.
“கனபாடிகளைப் பார்த்துப் பேசினப்புறம்தான் தெரியும்” என்றான் மூர்த்தி.
“புதுக் கன்னுக்குட்டியைப் பார்க்கலையே நீ? வா பார்க்கலாம்” என்று அவனைத் தொழுவத்துக்கு அழைத்துச் சென்றாள்.
கன்றுக்குட்டியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு “எப்படி இருக்கு?” என்று கேட்டாள்.
“ரொம்ப அழகா இருக்கு!” என்றான்.
“உன்னாட்டம்!” என்றாள்.
“கிட்டா இல்லையா? எங்கே போனான்?”
“காஞ்சீபுரம் போயிருக்கான். ரெண்டு நாளாகும் வர. பங்குனி உத்திரம் பார்த்துட்டு வந்துருவான்.நீ இன்னைக்கே போகணுமா?”
“தெரியலை. கனபாடிகளைத்தான் கேட்கணும்” என்று பிடிகொடுக்காமல் பேசினான்.
“திருக்குறள் புஸ்தகத்துக்கு அட்டை போட்டு அனுப்பியிருந்தனே, பார்த்தயர்?”
“…பார்த்தேன். உன் உதவியை என்னைக்கும் மறக்க மாட்டேன். அந்தக் கடனை எப்ப எப்படி திருப்பித் தரப் போறேனோ, தெரியலை”
“அதுக்கென்ன? சந்தர்ப்பம் வராமலா போயிடும்? அப்ப வட்டியும் முதலுமாச் சேர்த்துக் கொடுத்துடு. அது சரி; அட்டைக்குள்ளே வேற ஒண்ணும் பார்க்கலையா?”
“பார்த்தனே!…”
“அதைப் பத்தி ஒண்ணுமே பேசமாட்டேங்கறயே!”
“எனக்கு பயம்மா இருக்கு…” என்றான்.
“என்ன பயம்? ஏன் பயப்படறே? எதுக்கு பயம்?”
“உன்னை நினைச்சுத்தான்…”
“என்னைப் பிடிக்கலையா உனக்கு?”
“பிடிக்கிறது…”
“அப்புறம் என்ன?”
“உன் அளவு தைரியம் எனக்கில்லே. உன்னாலதான் என் பிரம்மசரியமே போச்சு. நீ கெட்டதுமில்லாம என்னையும் நீ கெடுத்துட்டயே!”
“நான் கெடுத்தனா! நீயும் சம்மதப்பட்டுதானே கெட்டுப் போனே?”
“அந்த மாதிரி ஒரு நிலைல, உன் நிர்ப்பந்தத்துல நான் புத்தி மயங்கிப் போயிட்டேன்”.
“இது ரெண்டு பேருமே சேர்ந்து செய்த குற்றம்தான். இதுக்கு நான் மட்டும்தான் காரணம்னு சொல்லாதே! நீயும்தான்! இதை நீ அப்பவே யோசிச்சிருக்கணும்!”
“எப்ப?”
“உன் எச்சிலை நாள் விழுங்கறப்பவும், என் எச்சிலை நீ விழுங்கறப்பவும்…”
‘சே!’
உதடுகளை உள்ளங்கையால் துடைத்துக் கொண்டான்.
இச்சமயம் கனபாடிகள் முன் கட்டிலிருந்து “மூர்த்தி!” என்று குரல் கொடுக்கவே “இதோ வந்துட்டேன்!” என்று சொல்லிக் கொண்டே ஓடினான்.
“மூர்த்தி! உன்கிட்ட நிறையப் பேசணும். முக்கியமான விஷயம். ராத்திரி நீ இங்கயே என் கூடவே படுத்துக்க” என்றார் கனபாடிகள்.
‘அம்மாடி, பாகீரதியிடமிருந்து தப்பினேன்’ என்று எண்ணிக் கொண்டான்.
அணில் குட்டி ஒன்று கனபாடிகளைச் சுற்றிச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தது.
“ராமா, இங்க வாடா!” என்று அதைச் செல்லமாக அழைத்தார். அது ஓடி வந்து உரிமையோடு அவர் தோள் மீது ஏறி விளையாடியது.
“நீ போனப்புறம் இதுதான் எனக்கு செல்லப்பிள்ளை. இதை ஆசையோட வளர்க்கிறேன். பால் கொடுக்கிறேன். ‘ராமா, ராமா’ன்னு தினம் நூறு தடவை கூப்பிட்றேன். அதனால அந்த ராமன் பேரைச் சொல்ற புண்ணியம் கிடைக்கிறதே, அந்த ஒரு பலன்தான்! ஆனா இந்த அணிப் பிள்ளை கொள்ளி போடறதுக்கு உதவுமா? எனக்குச் சொந்தமா ஒரு பிள்ளை வேணாமா?” என்று வருத்தத்துடன் பெருமூச்செறிந்தார்.
கனபாடிகளின் பேச்சு மூர்த்தியைக் கண்கலங்கச் செய்தது.
“எனக்கு வயசாயிட்டுது மூர்த்தி! நான் இன்னும் ரொம்ப நாளைக்கு உயிரோட இருப்பேன்னு தோணலை. மனசுல எத்தனையோ விசாரங்கள். வெளியில் சொல்லிக்க முடியாத துக்கங்கள். இன்னைக்குக் காலைலகூட அக்கிரகாரத்து பிராம்மணாளெல்லாம் கும்பலா வந்து ‘மழை இல்லாம் ஊரே கஷ்டப்படறது. நீங்க வந்து விராடபர்வம் வாசிக்கணும்’னு கேட்டுண்டா, நான் முடியாதுன்னுட்டேன். அவா என்னை பாய்காட் பண்ணப்போறதா பேசிண்ட சமாசாரமெல்லாம் உனக்குத் தெரிஞ்சிருக்கும். கிட்டா சொல்லியிருப்பானே! அவா வந்து போனதுலேந்து மனசே சரியாயில்லே. லேசா ஜுரம் வேற வீசறது. ராத்திரி எனக்கு எதுவுமே வேணாம். கஞ்சி மட்டும் பண்ணாப் போதும்னு சொல்லிடு. போ, பாகீரதியிடம் சொல்லிட்டு வந்துடு!” என்றார்.
மூர்த்தி சமையல் அறைக்குப் போய் “கனபாடிகளுக்கு உடம்பு சரியில்லை. ‘ராத்திரி ஆகாரம் எதுவும் வேண்டம். ரவாக் கஞ்சி மட்டும் போதும்’னு சொல்லிட்டு வரச் சொன்னார்” என்றான்.
“நல்லவேளை! ரவையும் சர்க்கரையும் டப்பாவில வச்சிருந்தேன். பூனை உருட்டி, அத்தனையும் கீழே தனித்தனியா கொட்டி, ரெண்டும் ஒண்ணாக் கலந்து போச்சு. அதைப் பிரிச்செடுக்க முடியாதே. அத்தனையும் வீணாப் போயிடுமே. என்ன பண்ணலாம்னு யோசனை பண்ணிண்டிருந்தேன். வழி கண்டு பிடிச்சாச்சு! ரவாக் கஞ்சியாப் பண்ணிடலாமே! ஆக, இந்த உலகத்துல எது கெட்டுப் போனாலும் அதையே நல்லதா மாத்திடறதுக்கும் ஒரு வழி இல்லாமப் போகலேன்னு தெரியறது” என்றாள்.
பாகீரதி என்ன சொல்கிறாள், எதைக் குறிப்பிட்டுச் சொல்கிறாள் என்று மூர்த்திக்கு விளங்கி விட்டது
“சரி, அப்பாவுக்கு ரவாக் கஞ்சி. உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு. ராவ்ஜியை பண்ணச் சொல்றேன்” என்றாள் பாகீரதி.
“எனக்குத் தனியா ஒண்ணும் வேணாம். பாடசாலைப் பசங்களோடு சேர்ந்து சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. அவா என்ன சாப்பிட்றாளோ அதுவே போதும்” என்றான்.
“கிட்டப்பா லெட்டர் கொடுத்தனுப்பியிருக்கார்னு சொன்னயே? என்ன எழுதியிருக்கார் தெரியுமா?”
“எனக்கெப்படி தெரியும்?”
மூர்த்தி எதற்குமே பிடிகொடுக்காமல் பேசியது பாகீரதிக்குச் சற்று எரிச்சலாயிருந்தது.
“நீ ரொம்ப மாறிட்டே மூர்த்தி! நான் உன்னையே நினைச்சு நினைச்சு உருகிண்டிருக்கேன். நீயானால் என்கிட்ட அக்கறை இல்லாம அலட்சியமாப் பேசிண்டிருக்கே. என் மனசை நீ புரிஞ்சுக்கலை. உன் மாதிரி என்னால் உறவை வெட்டிக்க முடியலை. உனக்கு யாரோ சொக்குப் பொடி போட்டு நன்னா மயக்கி வெச்சிருக்கா. அந்தக் கழைக்கூத்தாடிப் பெண்தானே?” என்று அழ ஆரம்பித்து விட்டாள் பாகீரதி.
“கனபாடிகள் எனக்காகக் காத்துண்டிருப்பார். நான் போறேன்” என்று சொல்லிவிட்டு நழுவினான் மூர்த்தி.
அன்றிரவு அழுக்கு கடிகாரத்தில் மணி பதினொன்று அடிக்கும் வரை கனபாடிகள் பேசிக்கொண்டேயிருந்தார்.
“மூர்த்தி! நீ என்னை மறந்தாலும், யாரை மறந்தாலும் வேதத்தை மறக்காம இருக்கயே, அதை நினைச்சு ரொம்ப பெருமைப்படறேன். வேதம்தான் நமக்கெல்லாம் வழிகாட்டி. அந்த ஒளி விளக்கை நாம் அணையவிடக் கூடாது. ரிஷிகள் தங்கள் தபோபலத்தின் சக்தியால் வானவெளியில் சப்தரூபமாக உலவும் வேத மந்திரங்களை கிரகித்து இந்த பிரபஞ்சத்துக்கு வழங்கியிருக்கா. ஆனா இந்த மந்திரங்களை உண்டாக்கியவா ரிஷிகள் அல்ல. அவர்கள் கிரகித்துத் தந்தவர்கள் தான். வேதம் அநாதியானது, அதற்கு மூல புருஷன் யாரும் கிடையாது. ‘அபௌருஷேய’ என்றுதான் சொல்வார்கள்.
காலம் காலமாக ஒலி வடிவமாகவே காப்பாற்றப்பட்டு வரும் வேதத்தைப் போற்றி வளர்ப்பவர்களைத்தான் ‘வேதவித்து’ என்கிறார்கள். வித்துக்கள் இல்லையென்றால் பயிர்கள் இல்லை. பயிர்கள் தழைக்க வித்துக்கள் அவசியம். அதைப்போல வேத வித்துக்கள் நசித்துப் போனால் வேதமே தழைக்காமல் போய் விடும். நீ இந்தப் புனிதமான பணியைப் பாதில விட்டுவிடாதே” என்றார்.
மூர்த்தி உணர்ச்சி வசப்பட்டான்.
‘மனதிலே பூட்டி வைத்துள்ள ரகசியங்களையெல்லாம் அக்கணமே அவர் எதிரில் கொட்டிவிடலாமா?’ என்று யோசித் தான். ஆனாலும் சொல்லாமல் கட்டுப்படுத்திக்கொண்டான்.
“மூர்த்தி,என் அந்திம காலத்துக்கு உதவியாக உன்னை என் புத்திரனாக ஸ்வீகாரம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று எண்ணியிருந்தேன். உன் அப்பா உன்னை என்னிடம் அழைத்து வந்து ஒப்படைத்தபோதே இதற்கு அவருடைய சம்மதத்தையும் பெற்றிருந்தேன். ‘இனி அவனுக்கு மாதா, பிதா, குரு, தெய்வம் எல்லாம் நீங்கதான்’ என்று சொல்லிட்டுப் போனார். இதை உன்னிடம் சமயம் வாய்க்கும்போது சொல்லி உன்னை என் புத்திரனாக்கிக்கொள்ளும் காலத்தை எதிர்நோக்கியிருந்தேன். ஆனா இப்ப கிட்டப்பா எழுதியுள்ள கடிதத்தைப் படிச்சப்புறம் அந்த எண்ணத்தை அடியோட மாத்திக்கொண்டு விட்டேன்” என்று கூறியவர் “இந்தா, கிட்டப்பா என்ன எழுதியிருக்கார்னு நீயே படிச்சுப்பார்” என்று அந்தக் கடிதத்தை மூர்த்தியிடம் தந்தார் கனபாடிகள்.
அத்தியாயம்-18
கனபாடிகள் தந்த கடிதத்தை மூர்த்தி மெளனமாகவே படிக்கவும், “உரக்கவே வாசிக்கலாம், பரவாயில்லை” என்றார்.
“உரக்கவா? எதுக்கு?” என்று யோசித்துவிட்டு உரக்க வாசிக்கத் தொடங்கினான்.
சங்கர கனபாடிகளுக்கு கிட்டப்பா சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணி எழுதிக்கொண்டது-
கலியாணத்துக்குத் தாங்கள் வருவீர்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்தேன். ஏதோ இக்கட்டான நிலை தங்களால் வர முடியவில்லை என்று கிட்டா மூலம் அறிந்து காரணமாகத் கொண்டேன்.
மூர்த்தி இங்கேயே சப்தரிஷி பாடசாலையில் சேர்ந்து விட்டான். அவனைப் பற்றிய கவலை வேண்டாம். மிக உத்தமமான பையன். சமையல் வேலைக்கு ஆள் தேவை என்று கடிதம் எழுதியிருந்தீர்கள்.
ஆனந்தராவ் என்பவரை அனுப்பியிருக்கிறேன். ரொம்ப சாதுவான மனிதர். நளபாகமாய்ச் சமைப்பார். அவருக்குத் துணையாக மூர்த்தி வருகிறான்.
நிற்க, சிதம்பரத்திலுள்ள தங்கள் சகோதரி கௌரி அம்மாளும் அவள் புருஷனும் இங்கே வந்திருந்தார்கள். ஒரு நல்ல பிள்ளையாகப் பார்த்து சுவீகாரம் எடுத்துக்கொள்ளப் போகிறார்களாம். ‘உங்க சப்தரிஷி வேதபாடசாலையில் யாராவது பொருத்தமான பையன் இருக்கானா?’ என்று கேட்டார்கள்.
“வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்? நம்ப மூர்த்தி இருக்கானே, அவனையே தத்து எடுத்துகொள்ளலாமே!” என்று யோசனை சொன்னேன். அவர்களுக்குப் பரம சந்தோஷம். ஒருவேளை நீங்களே இப்படி ஒரு எண்ணம் வைத்திருக்கலாம், மூர்த்தியை சுவீகார புத்திரனாக்கிக் கொள்ளும் அபிப்ராயம் உங்களுக்கே இருக்கலாம் என்று நினைக்கிறார்கள். எதற்கும் உங்களை ஒரு வார்த்தை கேட்டு விட்டுப் பிறகுதான் முடிவு செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டுப் போயிருக்கிறார்கள். இதுபற்றி அவர்களிருவரும் தங்க ளிடம் பேசுவதற்கு அச்சப்படுவதால் அவர்கள் சார்பில் நானே இக்கடிதம் எழுதுகிறேன். உங்கள் அபிப்ராயம் தெரிந்த பிறகு தான் மேற்கொண்டு ஆக வேண்டியதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
அடியேன் ஏதேனும் அதிகப்பிரசங்கித்தனமாக எழுதி யிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.
இப்படிக்கு
சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன்
கிட்டப்பா.
சுனபாடிகள் சற்றுநேரம் கண்களை மூடி யோசித்தபின் ஒரு முடிவுக்கு வந்தவராய் ‘ம். அப்புறம்?’ என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டு ஈரத் துணியால் உடம்பைத் கொண்டார். “ஒரே புழுக்கமாயிருக்குடா! விசிறி துடைத்துக் எடுத்துண்டு வந்து கொஞ்சம் வீசறயா?’ என்று கேட்டார். மூர்த்தி ஓடிப்போய் விசிறி எடுத்து வந்து வீசத் தொடங்கினான்.
“நீ என்ன நினைக்கிறே மூர்த்தி?” என்று அவனை சம அந்தஸ்தில் உயர்த்தி வைத்துக் கேட்டார் கனபாடிகள்.
“இதல நான் நினைக்கறதுக்கு ஒண்ணுமில்லை. நீங்க எது சொன்னாலும் அதுவே எனக்கு வேத வாக்கு. உங்க இஷ்டப்படி நடந்துக்குவேன்” என்றான்.
“சரி; கௌரி ஆசைப்படறாளாம்… அவளுக்கும் புத்திர பாக்கியம் இல்லே. உனக்கு சம்மதம்னா கிட்டப்பாவுக்கு லெட்டர் எழுதித் தரேன்,நீ நாளைக்கே புறப்பட்டுப் போகலாம்” என்றார்.
கனபாடிகளுக்குத் தூக்கம் வரும்வரை வீசிக்கொண்டிருந்துவிட்டு அப்புறம்தான் படுத்தான்.
பொழுது விடிந்ததும் ஆற்றங்கரைப் பிள்ளையார் கோவில் ஞாபகம் வந்துவிட்டது அவனுக்கு. ஆற்றையும் கோவிலையும் ஒரு முறை பார்த்துவிட்டு வரவேண்டும் போல் ஆசையாக இருந்தது.
“ஆற்றுக்குப் போய் ஸ்நானம் பண்ணிட்டு அப்படியே பூஜைக்கு ஜலம் கொண்டு வரட்டுமா? கிட்டாகூட ஊரில் இல்லையே!” என்று பாகீரதியிடம் கேட்டான்.
அவள் குடத்தைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு ‘அப்படியே தஞ்சாவூர் போயிடமாட்டயே!’ என்று கேலியாகக் கேட்டுச் சிரித்தாள்.
அவன் ஆற்றங்கரை படித்துறையில் போய் நின்று பார்த்த போது அந்த இடம் பாலைவனமாய்க் காட்சி அளித்தது. பசுமை யெல்லாம் போய் காய்ந்து கிடந்த கரையோரப் புதர்களை ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.
ஆற்றுக்கு நடுவே பெரிதாகப் பள்ளம் வெட்டி ஊற்றெடுத்திருந்தார்கள். அந்தத் தேக்கத்திலிருந்து ஓடிய வாய்க்கால் ஒரு பட்டத்தின் வால்போல் தெரிந்தது.
இதே படித்துறையில் அன்று வெள்ளத்தில் சிக்கித் திணறியபோது தன்னைக் காப்பாற்றிய மஞ்சுவின் நினைவு தோன்ற “பாவம்! மஞ்சுவிடம் சரியாகக்கூடப் பேசாமல் வந்து விட்டேன். ‘சர்க்கஸ் கம்பெனியில் சேரலாமா?’ என்று அவள் கேட்டபோது அலட்சியமாக ‘அது உன் இஷ்டம்’ என்று பதில் சொல்லிவிட்டு வந்து விட்டேன். ரத்தம் கொடுத்துவிட்டதால் நன்றிக்கடன் தீர்ந்து விட்டதாக நான் நினைத்தது எத்தனை அகம்பாவம்! கழைக்கூத்தாடிப் பெண்தான் என்றாலும் அவளுக்குள்ள பண்பும் பெருந்தன்மையும் எனக்கு இல்லையே!” என்று எண்ணித் தன்னனைத்தானே நொந்து கொண்டான்.
சாவகாசமாகத் தண்ணீரில் உட்கார்ந்துகொண்டு கைகளால் அளையத் தொடங்கினான். பிறகு மல்லாந்து படுத்து அந்த வெதவெதப்பான குளுமையில் நீண்ட நேரம் அமிழ்ந்திருந்த பின் எழுந்தான். அப்புறம் துணிகளை உலர்த்தி, திருநீறு அணிந்து, குடத்தில் நீர் நிரப்பிக் கொண்டதும் கரையேறி கோயிலுக்குப் போனான். பிள்ளையாரை வணங்கிவிட்டு நந்தவனம் சுற்றி பூக்களைத் தேடினான். ஒரே ஒரு நந்தியாவட்டைப்பூ அபூர்வமாய்ப் பூத்திருந்தது! அதைப் பறித்துக் குடத்து நீரில் போட்டுக் கொண்டு பாடசாலை நேரக்கி நடந்தான்.
“கனபாடிகள் என்னை எதுவுமே கேட்காமல் சகஜமாய்ப் பேசுகிறாரே! கோபமோ வருத்தமோ எதுவுமே முகத்தில் காட்டிக் கொள்ளவில்லையே! ஒருவேளை எல்லா சமாசாரங்களையும் தெரிஞ்சிண்டுதான் இப்படித் தெரியாததுபோல் இருக்காரோ?” என்று வியந்தான்.
கடிதத்தை அவர் உரக்கப் படிக்கச் சொன்னதற்குக்கூட ஏதாவது உள் அர்த்தம் இருக்க வேண்டும். அவர் மன ஆழத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று எண்ணிக் கொண்டான்.
பூஜை முடிந்து, சாப்பிட்டானதும் கனபாடிகளை நமஸ்கரித்து ‘ஊருக்கு போயிட்டு வரேன்” என்று சொன்னபோது அவர் உள்ளே போய்ப் பெட்டியைத் திறந்து புத்தம் புது பட்டு வேட்டி ஒன்றை எடுத்து வந்தார்.
“இந்தா, பிரம்மசாரிக்கு நாலு முழம் வேட்டி போதும். என்னிடம் இந்த எட்டு முழம் வேட்டிதான் இருக்கிறது. இப்போதைக்கு இதை இரண்டாக மடித்துக் கட்டிக்கொள். என் ஆசீர்வாதம்!” என்றார்.
“இப்போதைக்கு என்றால் அதற்கு என்ன அர்த்தம்?” என்று யோசித்தபடியே பின்கட்டுக்குப்போனான். அங்கே பாகீரதி கொடியில் துணி உலர்த்திக் கொண்டிருந்தாள்.
“போயிட்டு வரேன் பாகீரதி!” என்று அவளிடம் சொல்லிக் கொண்டபோது அவள் கண்கள் பனித்திருப்பதைக் கண்டு “வருத்தமா?” என்று கேட்டான்.
“எனக்கு நீ அத்தை பிள்ளை ஆகப்போறயே, அந்த சந்தோஷம்!” என்றாள் பாகீரதி!
“உனக்கெப்படி தெரியும்?”
“ராத்திரி லெட்டரை உரக்கப் படிக்கச் சொன்னாரே, அப்பா! எல்லாத்தையும் கேட்டுண்டுதான் இருந்தேன்” என்றாள். “ஓகோ! நீ கேட்கணுங்கறதுக்குத்தான் உரக்கப் படிக்கச் சொன்னார் போலிருக்கு. இப்பத்தான் புரியறது!” என்றான்.
“வந்ததும் வராததுமாக் கிளம்பிட்டயே! அப்படி என்ன அவசரம்? அந்தக் கூத்தாடிப் பெண் முகம் மறந்து போச்சோ?” என்று குத்தலாய்க் கேட்டாள் பாகீரதி.
“அவள் ரொம்ப நல்ல பெண். நீ நினைக்கிற மாதிரி யெல்லாம் இல்லே” என்று சொல்லிவிட்டு அவசரமாய்க் கிளம்பிவிட்டான்.
தஞ்சாவூர் போய்ச் சேர்ந்ததுமே கனபாடிகள் எழுதித் தந்த கடிதத்தைக் கிட்டப்பாவிடம் கொடுத்தான்.
அதை அவர் பிரித்துப் படித்தார்.
“கிட்டப்பாவுக்கு ஆசீர்வாதம் உன் கடிதம் படித்தேன். எனக்குப் பூரண சம்மதமே. கௌரி விருப்பப்படியே நடக்கட்டும். ததாஸ்து” என்று சுருக்கமாக எழுதியிருந்தார்.
“மூர்த்தி! உனக்கு சமாசாரமெல்லாம் தெரியுமோ? கனபாடிகள் சொன்னாரா?” என்று கிட்டப்பா கேட்டார்.
“தெரியும்; உங்க லெட்டரை என்னிடமே கொடுத்துப் படிக்கச் சொன்னார்.”
“படிச்சயா?”
“படிச்சேன்.”
“கௌரிக்குப் பிள்ளையாகப் போறதுல உனக்குச் சம்மதம் தானே? கனபாடிகளுக்கு என்ன பதில் சொன்னே?”
“கிணத்துல் விழச் சொன்னாலும் விழத்தயார்னு சொன்னேன்!”
“எல்லாக் கிணத்துலயும் இப்ப தண்ணியே இல்லாம வறண்டு கிடக்கே, அந்த தைரியமா!” என்று கேட்டுச் சிரித்தார் கிட்டப்பா.
அவனும் சிரித்தான்.
“சரி; கௌரி அத்தைக்கு இன்னைக்கே எழுதிப் போட்டுடறேன். சுபஸ்ய சீக்கிரம்!” என்றார் கிட்டப்பா.
“நான் பாடசாலைக்குப் போகட்டுமா?” என்று கேட்டான் மூர்த்தி.
“கொஞ்சம் இரு. முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டனே நேத்து அந்தக் கழைக்கூத்தாடிப் பெண் உன்னைப் பார்க்க வந்திருந்தாள். ‘என்ன சமாசாரம்?’னு கேட்டேன். யாரோ சர்க்கஸ்காரனாமே, அவன் அடிக்கடி வந்து சர்க்கஸ்ல சேரச் சொல்லி தொந்தரவு பண்றானாம். மூர்த்தி சம்மதிச்சாத்தான் சேருவேன்’னு பதில் சொல்லிட்டானாம்.
“அப்படி என்ன உறவு உனக்கும் அந்தக் குடுமிக்காரப் பையனுக்கும்?’னு கேட்டுச் சண்டை போட்றானாம் அவன். அடிக்கடி வந்து ‘அந்தக் குடுமிக்காரப் பையனை ஒழிச்சுக் கட்டிடறேன் பார்’னு கலாட்டா பண்றானாம். குடிகாரனாயிருப்பான் போலிருக்கு! மூர்த்தி வந்தால் ஜாக்கிரதையா இருக்கச் சொல்லுங்க. அவருக்கு ஏதாச்சும் ஆயிட்டுதுன்னா அதை என்னால தாங்கிக்க முடியாதுன்னு என்கிட்டே வந்து அழுதாள். யாருப்பா அந்த சர்க்கஸ்காரன்?” என்று கேட்டார் கிட்டப்பா.
– தொடரும்…
– வேத வித்து, முதற் பதிப்பு: மே 1990, சாவி பப்பிளிகேஷன், சென்னை.
அன்புடையீர்,
தங்களது வலைத்தளம் சிறுகதை.காம் ஐ நான் பார்க்க நேர்ந்ததை ஒரு பாக்கியமாகக் கருதுகிறேன். இந்த தளம் எண்ணற்ற கதைகள் கொண்டிருப்பதும் வளரும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் இருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சியுறுகிறேன். நான் படித்த திரு சாவி அவர்களால் எழுதப்பட்ட ‘ வேத வித்து’ அருமையிலும் அருமை. அவருடைய நடை, வார்த்தைகளின் கையாளல், யதார்த்தத்தை புரிய வைக்கும் திறன், ஆகியவற்றை மெச்சாமல் இருக்க முடியாது. தாங்கள் இந்தக் கதையை பிரசுரித்தமைக்கு கோடானுகோடி நமஸ்காரங்கள்.