கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 12, 2023
பார்வையிட்டோர்: 957 
 
 

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

செந்தழல் சூரியன் சாய்ந்து வீழ்கின்றான். 

வானஜோதி தயங்கி அணைகின்றது.

திகைத்த மாலை மயங்கித் துவழ்கின்றது.

செக்கர் வானம் கருகி இருள்கின்றது. 

காலையும், மாலையும் வானத்தில் தோன்றும் விந்தை களையும், வர்ண ஜாலங்களையும் பார்த்து வியப்புற்று, அதில் மயங்கித் தன்னைத் தானேயிழந்து திகைப்புற்று நிற்கின்ற அவன் இன்று ஏனோ ஒன்றையும் பொருட்படுத்தவில்லை?

இன்று அவன், அவன் நிலையிலில்லை.

அவனுக்கு ஒருவித அவசரம், வேகம். 

ஏன் இன்று அவனுக்கு இந்த உத்வேகம்? 

நீண்ட நாட்களாகப் பார்க்காத தன் அன்புத் தங்கையைப் பார்த்துவிட வேண்டுமென்ற அங்கலாய்ப்பு அவனுக்கு.

விண்ணில் தொங்கிக் கொண்டிருந்த முன்நிலவு எப்பொழுதோ மறைந்து விட்டது. 

இருளின் ஆக்கிரமிப்புக்குள் உலகம். 

இருள் திரையைப் பிளந்து கொண்டு ஆழக் கிணற்றின் துலாக்கொடியாய் நீண்டு நெடியதாய் செல்கின்றது கோப்பாய் கைதடி வீதி. 

மலை முகட்டிலிருந்து இருளில் இருளாய் இறங்கி வருகின்ற ராட்சத உருவாய், கையை வீசி, காலை எறிந்து, எட்டக் கவடு வைத்து வீச்சாய் நடந்து கொண்டிருக்கின்றான் அவன்.

சுடலைக் குருவியொன்று அலறியபடியே திடீரென அவனுடைய முகத்தில் உராய்வது போல வேகமாய்ப் பறந்து செல்கின்றது.

அவனுக்கு கணநேரத் திகைப்பு. நடையில் தளர்ச்சி.

கோப்பாய்ப் பாலத்தை அவன் நெருங்கிக் கொண்டிருக் கின்ற பொழுது, வடமேற்கு மூலையிலிருக்கின்ற தன்னுடைய கிராமத்தை ஆவலுடன் பார்க்கின்றான்.

பரந்து விரிந்து விசாலித்திருக்கின்ற இருள் வெளியின் அடிவானத் தொங்கலில் சயனித்திருக்கின்ற அவனது கிராமத்தில் பொட்டுப் பொட்டாய் வெளிச்சங்கள் மங்கலாய் மின்னிக் கொண்டிருக்கின்றன.

எண்ணையோ, தண்ணியோ கண்டறியாத பரட்டைத் தலைமயிர் காற்றில் பறக்கின்றது. செம்பாட்டு நிறக் கந்தல் சட்டை. ‘சின்னண்ணை எப்ப வருவான்? தின்னிறத்துக்கு என்ன கொண்டருவான்? என்று எதிர்பார்த்து, சடை விரித்துக் கருநிழல் பரப்பி நிற்கின்ற பூவரச மரத்தின் கீழ் எந்த நேரமும் ஆவலுடன் பார்த்துக் கொண்டு நிற்கின்ற அவனுடைய அன்புத் தங்கை தேவியின் மங்கல் தோற்றம் அவன் மனத்திரையில் நிழலாடு கின்றது.

தேவி பெயரளவில் சீதேவிதான். ஆனால் அவனுடைய வீட்டில் மூதேவிதான் நிரந்தரமாகக் குடியிருக்கின்றாள்.

தேவியைப் பார்த்துவிட வேண்டுமென்ற ஆவல் அலை அவனுடைய இதயத்தில் முட்டிமோதிக் கொண்டிருக்கின்றது.

அவனுடைய நடையில் உத்வேகம்.

மதர்த்து, மதாளித்து, மூச்சாய் கெம்பி எழும்பி வளர் கின்ற புது அடி மட்டத்துக் கதலி வாழைபோல இந்த ஆறு மாதங் களுக்கிடையில் செல்லக்கண்டனுடைய உடல் முறுகித் திரட்சி கண்டது வியப்புத்தான்.

விமானக் குண்டுத்தாக்குதல்கள், ஷெல்லடிகள், துப்பாக்கிச் சூடுகள் மத்தியிலும் அவனுடைய தோழர்கள் தடுத்து நிறுத்தியும் அவர்களுடைய வற்புறுத்தல்களையும் கேட்காமல், தனக்கு நேரவிருக்கும் உயிர் ஆபத்தையும் பொருட்படுத்தாமல், களத்தில் காயமுற்ற பல சக தோழர்களை, இயந்திர மனிதனைப் போல அவன் லாவகமாய்த் தூக்கிச் சுமந்து வந்து காப்பாற்றியுள்ளான். அவனுடைய மனத் துணிவையும், உடல் உடல் வலிமையையும் வீரதீரத்தையும் என்னவென்று சொல்வது!

இன்று அவன் தன்னுடைய அன்புத் தங்கையைப் பார்க்க வேண்டுமென்று பேராவலுடன் நடந்து கொண்டிருக்கிறான்.

கோப்பாய்ப் பாலத்தை தாண்டி அவன், றோட்டிற்கு அருகே தெற்குப் புறமாக உள்ள மயானத்தை நெருங்கிக் கொண்டிருக் கின்றான்.

அரைகுறையாய் எரிந்து கொண்டிருக்கின்ற பிரேதத் திலிருந்து எழுகின்ற நிணநெடி சோழகக் காற்றுடன் கலந்து வந்து அவனுடைய நாசியைத் துளைத்து ஒருவித அருவருப்பையூட்டுகின்றது.

அவனுக்கு வயிற்றைக் குமட்டுகின்றது.

அவன் வெறுப்புடன் காறித் துப்பிவிட்டு துரித கதியில் நடந்து கொண்டிருக்கின்றான்.

றோட்டின் இரு மருங்கிலும் இடையிடையே சடைவிரி கோலமாய் தியான நிலையில் நிற்கின்றன உப்புக் காற்றில் அடிபட்டு முற்றிக் கிழடு தட்டிப்போன பாரிய பூவரச மரங்கள்.

அவனுடைய வீட்டுப் படலையிலும் சடை விரித்துக்கருநிழல் பரப்பி நிற்கின்றது ஒரு முற்றிப் பருத்த பூவரசு மரம். சிறுவனாயிருந்த பொழுது அவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்தப் பூவரசில் ஏறிக் குதித்து விளையாடி யிருக்கின்றான். அது மாத்திரமல்ல, அந்தப் பூவரச மரத்தின் இலையைப் பிடுங்கிக் குழல் சுருட்டி “பீப்பீ” ஊதித் தனது தங்கைக்கு விளையாட்டுக் காட்டியிருக்கின்றான். அத்துடன் பூவரச மரத்தின் அடர்ந்த கரு நிழலில் மணித்தியாலக் கணக்காக எதையோ எதிர்பார்த்துக் கொண்டிருப்பான்.

மதிய வேளையில் வெயில் வெக்கை தாங்க முடியாமல் அன்னமுத்தாச்சி காற்றோட்டமாய் நிற்கின்ற அந்தப் பூவரச மரத்தடியில் சாய்ந்து, தனது வற்றி மரத்துப்போன கால்களை நீட்டி ஆசுவாசமாயிருக்கின்ற வேளைகளில் செல்லக்கண்டன் தனது தந்தை தேவியைத் தன்னுடைய தோளில் இருத்திக் கொண்டு அந்தப் பூவரச மரத்தைச் சுற்றிச் சுற்றித் துள்ளித் துள்ளி சாமியாடி ஓடிக் கொண்டிருக்க, அவள் கெக்கட்டம் விட்டுச் சிரிப்பொலியெழுப்ப, அன்னமுத்தாச்சி அதைப் பார்த்து லயித்துச் சிரித்து மகிழ்ந்து கொண்டிருப்பாள். அவனுக்கு அளவிலா ஆனந்தம்.

தங்கை தேவிக்கு மூன்று வயதாயிருக்கும் பொழுது தாயை அவர்கள் இழந்து விட்டார்கள். அண்ணன் ஊர் உலாத்தல்காரன். அப்பன் வெறிக்குட்டி. தங்கை தேவிக்கு செல்லக்கண்டன்தான் சகலதும். அவளுக்குச் சாப்பாடு தீத்துவது, அவளை நித்திரையாக்குவது, குளிக்க வார்ப்பது எல்லாம் அவனுடைய பொறுப்புத் தான்.

அரையிலிருந்து வழுகி விழுகின்ற அரைக்கால் சட்டையை வாழைநாரால் இறுக்கிக் கட்டிக்கொண்டு, எந்த நேரமும் கடை வாயால் வாணீர் ஒழுகிக் கொண்டேயிருக்கும். அவனுடைய மூக்கிலிருந்து வழிந்து கொண்டேயிருக்கின்ற சளியை அவன் அடிக்கடி உள்ளே உறிஞ்சிக் கொண்டே யிருப்பான். அல்லது தனது புறங் கையால் அதைத் தேய்த்து தனது காற்சட்டையில் துடைத்து விடுவான்.

“தங்கச்சி” என்று அவனுக்குக் கூப்பிட வராது. “அங்கச்சி” என்பான். “திவசம்” என்பதை “டிவசம்” என்றுதான் சொல்வான்.

செல்லக் கண்டன் எந்நேரமும் தேவியைச் சுமந்து கொண்டே திரிவான். அவர்களுடைய பகுதியில் நடக்கின்ற கல்யாண வீடுகள், திவச வீடுகள், கோயில் பூசைகள் எல்லா வற்றிற்கும் செல்லக்கண்டன் தேவியைத் தனது இடுப்பில் காவிச்சென்று அங்கு கிடைக்கின்ற சோற்றைத் தேவிக்குத் தீத்திவிட்டுத் தானும் உண்பான். இந்த வேளைகளில்தான் அவர்களுடைய வயிறுகள் ஓரளவு நிறையும். அவன் யாருக்காவது தொட்டாட்டு வேலை செய்தால் கூலியாக அவனுக்குக் கிடைக்கின்ற சாப்பாட்டைக் கொண்டு வந்து முதலில் தேவிக்குத் தீத்திவிட்டுப் பின்னர் எஞ்சியதைத் தான் உண்பான.

எந்த நேரமும் பசி சொல்லக்கண்டனுடைய வயிற்றைப் பிடுங்கித் தின்று கொண்டேயிருக்கும். ஆனால் அவனுக்கு எல்லாமே அவனுடைய அன்புத் தங்கை தேவிதான்.

“சின்னண்ணை, சின்னண்ணை” என்று அவனை வாஞ்சை யுடன் கூறிக்கொண்டு நிழல்போல ஒட்டிக் கொண்டேயிருப்பாள் தேவி. அவன் கொண்டு வருகின்ற சாப்பாட்டைத் தனது பிஞ்சு விரல்களால் அள்ளிச் சாப்பிட்டுக் கொண்டே அவனுக்கும் தீத்துவாள்.

அவன் படுத்திருந்து கொண்டு தனது கண்களை மூடி நித்திரை செய்வதுபோல பாவனை செய்ய, அவனுடைய கண் களைத் தனது தளிர் விரல்களால் திறக்க முயல்வாள். அவன் கண்கள் திறக்காவிட்டால் அவள் அவனுடைய நெஞ்சில் ஏறியிருந்து கொண்டு தனது பஞ்சுக் கைகளைக் குவித்து அவனுடைய மார்பில் பொத்துப் பொத்தென்று குத்துவாள். அதற்கும் அவன் கண் திறக்காவிட்டால் அவனுடைய தலை மயிரைப் பிடித்து இழுத்து அங்கும் இங்கும் தலையை ஆட்டுவாள். இதில் எழுகின்ற சுகானுபவத்தை அவன் தன் கண்களை மூடியபடி அனுபவித்துக் கொண்டேயிருப்பான்.

செல்லக்கண்டன் தன் அன்புத் தங்கையை ஒருநாளாவது அதட்டியதோ, அடித்ததோ இல்லை. தேவியை வெறியில் அப்பன் அடிக்கும் பொழுது அதைத் தடுக்க முயல்வான். அல்லது அவரை ஏசிச் சண்டை பிடிப்பான். அவ்வேளைகளில் அவனுக்குச் சரியான அடி விழும். தேவிக்கு செல்லம் கொடுப் பதாக செல்லக் கண்டனைத் தகப்பன் ஏசுவார்.

அவனுடைய தந்தை சண்முகம் வீட்டில் நிற்கின்ற வேளைகளில், தொட்டதற்கெல்லாம் செல்லக்கண்டனுக்கு ஏச்சும், பேச்சும், அடியும், உதையுந்தான்.

ஒருநாள் செல்லக்கண்டன் திடீரெனக் காணாமல் போய்விட்டான்.

அவன் சென்ற நாளிலிருந்து தேவிக்குச் சரியான உணவோ, உறக்கமோ இல்லை. “சின்னண்ணை, சின்னண்ணை” என்று எந்த நேரமும் அழுது கொண்டேயிருப்பாள். சகலத்தையும் இழந்து விட்டதான உணர்வு அவளுக்கு. அன்னமுத்தாச்சிதான் அவளுக்கு ஆறுதல் கூறி தேற்றி ஆதரவாக இருந்து வருகின்றாள்.

தனது தங்கையை விட்டுப் பிரிந்த நாள் தொட்டு செல்லக்கண்டனுக்கும் வேதனை தாங்க முடியவில்லை. மன நிம்மதியுமில்லை. அவனுடைய உள்ளம் துயரத்தில் தவித்துக் கொண்டேயிருந்தது.

ஆறு மாதங்களாக செல்லக்கண்டனுக்கு அஞ்ஞாத வாசம். மூன்று மாதங்கள் அவன் களத்தில், அவனுடைய உள்ளத்தில் தனது சகோதரியைப் பார்க்க வேண்டும். அவளுக்கு ஆதரவளித்து அவளை ஆளாக்கிவிட வேண்டு மென்ற உணர்வு மேலோங்கவும், பல பிரிவுகள் ஒன்றுக்கொன்று முனைப்பாக்கிக் கொண்டிருக்கவும் அவன் ஒருநாள் அங்கிருந்தும் காணாமல் போய்விட்டான். ஊருக்கு திரும்பினால் தான் ‘மாட்டுப்படுவேன்’ என்ற பயம் அவனுக்கு. அவன் ஒரு சாப்பாட்டுக் கடையில் வேலைக்குச் சேர்ந்தான். சம்பளம் று எவ்வளவென்று பேசவில்லை. அவனுடைய வேலையைப் பார்த்துத்தான் சம்பளம் முடிவெடுக்கப்படும். ஆனால் மூன்று நேரச் சாப்பாடு, கைச்செலவுக்கு சிறிய தொகை சில்லறை.

இன்று தனது தங்கையைப் பார்க்க வேண்டுமென்ற பேராவாலை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. என்ன நடந்தாலும் பரவாயில்லை, எப்படியும் தங்கையைப் பார்த்து விட வேண்டுமென்ற ஒருவித வெறியில் அவன் சென்று கொண்டிருக்கின்றான்.

அந்தப் பெரிய கல்லூரியைத் தாண்டித்தான் அவனுடைய வீடு செல்ல வேண்டும்.

அவன் தூரத்தில் வந்து கொண்டிருக்கும் பொழுது கல்லூரிக் கட்டடத்தில் மின்சார வெளிச்சம் தெரிகின்றது.

“இந்தக் காலத்திலை என்னண்டு லைற் எரியேலும்?” அவனுக்கு ஆச்சரியம்.

இண்டைக்கு இஞ்சை என்ன விசேடம்?

அவனுடைய உள்ளத்தில் கேள்விக்குறி.

கல்லூரியை அவன் அண்மித்ததும் ‘ஜெனரேட்டரின்’ இரைச்சல் கேட்கின்றது.

பல வர்ணங்கள் கலந்த கொடிகள் காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தன.

கல்லூரி மண்டபத்திற்குள் ஆரவாரம்.

என்ன நடக்கின்றது என்று அறியும் ஆவலுடன் அவன் உள்ளே செல்ல முயல்கின்றான்.

பாதுகாப்புக் காரணமாக மண்டப வாசல் மூடப்பட்டிருக்கின்றது.

ஜன்னலால் அவன் எட்டிப் பார்க்கின்றான்.

மக்களால் நிரம்பி வழிகின்றது மண்டபம்.

அவனுடைய கண்கள் மண்டபத்தைத் துளாவுகின்றன.

முன்வரிசையில்…..

“அப்பா!”

அவனுக்கு ஆச்சரியம்.

அரையில் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சால்வையால் போர்த்தியிருக்கின்றார்.

“அம்மா செத்த அண்டைக்கும் அப்பர் இப்பிடித்தான் வெள்ளை வேட்டி கட்டியிருந்தவர். ஆனா இண்டைக்கு?”

‘தேவி எங்கே?’

ஆவலுடன் அன்புத் தங்கை தேவியைத் தேடி அலைகின்றன அவனது விழிகள்.

‘அட, அங்கையிருக்கிறாள்!’

முன்வரிசையில் பெண்கள் மத்தியில் இருக்கின்ற தேவியைக் கண்டு விட்டன அவனது விழிகள்.

‘தேவிக்குப் பக்கத்தில் எங்கடை அன்னமுத்தாச்சியு மிருக்கிறா. அவவும் இருப்ப எண்டு எனக்கு நல்லாத் தெரியும்.’

அவனுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை.

‘சிவப்பு நிறத்திலை புதுச்சட்டை! தலையும் இழுத்து நல்லாய் பின்னிக் கட்டியிருக்கிறாள் தேவி’

‘எவ்வளவு லட்சணமாயிருக்கிறாள் என்ரை தங்கைச்சி!” அவனுக்கு பேரானந்தம்.

உடலில் புல்லரிப்பு

இப்பவே தேவியைத் தூக்கித் தன் தோளில் வைத்துக் கொண்டு பூவரச மரத்தைச் சுற்றி சாமியாடி ஓட வேண்டும். அவள் கெக்கட்டம் விட்டுச் சிரிப்பதைக் கேட்க வேண்டும் போலிருக்கின்றது அவனுக்கு.

“தங்கச்சி!”

தன்னை மறந்து, தன் மூச்சை அடக்கி உரத்துக் கத்து கின்றான் அவன் . அவனுடைய வஜ்ரக் குரல் மண்டபத்திலுள்ள ஆரவாரத்தைக் கிழித்துக்கொண்டு ஒலிக்கின்றது.

“தங்கச்சி ! தேவி!”

மீண்டும்உரத்துக் கத்துகின்றான்.

‘சின்னண்ணையின்ரை குரல்போலையிருக்கு!’

தேவிக்குப் போராச்சரியம்.

“தேவி! தங்கச்சி…..”

அவனுடைய எக்காளக் குரல் மண்டபத்தில் ஒலித்து எதிரொலிக்கின்றது.

‘செல்லக்கண்டன்ரை குரலாய்க் கிடக்கு போலை…….!’

அன்னமுத்தாச்சிக்கு வியப்பு.

‘இருக்காது. அவன் எப்போதோ செத்துப் போனானே. அது வேறை ஆரோ சத்தம் போடுறான் போலை கிடக்கு…. ‘

அன்னமுத்தாச்சி அமைதி கொள்கின்றா.

சபையில் பரபரப்பு.

தொலைவில் நிற்கின்ற இவன் இரண்டு இரும்புக் கரங்களின் உடும்புப் பிடியில்.

கறுப்பு உடுப்பு அணிந்திருந்த இருவர் அவனை மடக்கிப் பிடித்து, இழுத்துச் செல்கின்றனர். இதை யாரும் கண்டதாக இல்லை. அல்லது…….

சபையில் அமைதி.

அவர்கள் இருவரும் அவனை மண்டபத்திற்குப் பின்புறம் இருட்டிற்குள் இழுத்துச் செல்கின்றனர்.

கல்லூரிக்குப் பின்னாலுள்ள வயல் வெளிக்கு அப்பாலிருக்கின்ற மயானத்தில் எரிந்து கொண்டிருக்கின்ற பிணத்தின் சிதையிலிருந்து தீ ஜுவாலைகள் காற்றில் துடித்துக் கொண்டிருக்கின்றன.

அவனை இழுத்துச் செல்பவர்களுடன் இடையில் மேலும் இரு கறுப்பு உடுப்புக்கள் சேர்ந்து கொள்கின்றனர்.

தூரத்தில் நாயொன்று ஊளையிடுகின்றது. மண்டபத்திற்குள் ஒளிமயம்.

வெளியே பயங்கர இருள்,

மண்டபத்திற்குள், நாடகம் தொடங்குகின்றது.

மண்டபத்திற்குள் வெளியே?

மை இருட்டிலும் நாடகம் தொடங்குகின்றது.

நாடகம் உச்சக்கட்டத்தை அடைகின்றது. வெளியே?

நாடகம் முடிந்து விட்டது

நிசப்தம்.

இருள் மயம்.

மயக்கம் தெளிந்த செல்லக்கண்டனுடைய உடலெல்லாம் ஒரே வலி.

பேயிருளில் புல்தரையில் விழுந்து கிடக்கின்ற அவன் எழுவதற்கு முயற்சிக்கின்றான். முடியவில்லை. மண்டை பிளந்து விட்டது போன்ற உணர்வு.

தலையைத் தடவிப் பார்க்கின்றான். மண்டையின் வலது பக்க பின்புறம் மாங்காய் போலப் பிளந்திருக்கின்றது.

ரத்தம் கட்டியாக உறைந்திருக்கின்றது.

மூச்சுவிட முடியவில்லை அவனுக்கு. யாரோ அமத்தியிருப்பது போல நெஞ்சு இறுக்கமாக இருக்கின்றது.

பிரயத்தனப்பட்டு எழுகின்றான்.

அடிகள் எடுத்து வைக்க முடியவில்லை. கால்கள்நடுங்குகின்றன.

அடிவயிற்றில் தாங்க முடியாத நோவு.

மெதுவாக அடியெடுத்து வைக்கின்றான்.

நடக்க முடியவில்லை.

கஷ்டப்பட்டுத் தள்ளாடித் தள்ளாடி மெதுவாக நடக்கின்றான்.

தேவிக்காக அவன் கொண்டு வந்த பலகாரப் பொட்ட லத்தை நாய்கள் குதறித் தின்றபின் அது சுற்றிக் கட்டியிருந்த, கிழிந்து சிதைந்து போன வாழையிலையும் கடதாசியும் அவனுடைய காலில் இடறுப்படுகின்றன.

மெது மெதுவாக அவன் தட்டுத் தடுமாறி நடந்து கொண்டிருக்கின்றான்.

தகரம் அடிக்கும் சத்தம்.

“இஞ்சேரப்பா ஆரோ தகரத்திலை அடிக்கிறான் போலை கிடக்கு”.

அன்னமுத்தாச்சியை எழுப்புகின்றார் பதுங்கிக்கந்தையா.

“சும்மா கிடவணை” அரைகுறை நித்திரையில் கூறிவிட்டு மறுபுறம் திரும்பிப் படுக்கின்றாள் அவள்.

சிறிது நேரத்தின் பின் மீண்டும் தகரமடிக்கும் சத்தம். “முடிஞ்சுது. எல்லாம் முடிஞ்சுது” பதட்டத்துடன் கூறுகின்றார் கந்தையா.

“என்னப்பா முடிஞ்சுது? சும்மா அலட்டாமல் கிடவனப்பா” அவள் அசட்டையாகக் கூறுகின்றாள்.

“வந்திட்டான். அவன் வந்திட்டான், அவன் தான் தகரத் திலையடிக்கிறான்”.

அவருடைய குரல் நடுங்குகின்றது.

“ஆரப்பா அவன்? சொல்லித் துலையன்” எரிச்சலுடன் கூறுகின்றாள் அவள்.

“மனிசரை நித்திரை கொள்ளவிடன். சும்மா அரிச்சுக் கொண்டிருக்கிறாய்”.

அவளுடைய வார்த்தையில் கடுகடுப்பு.

தகரச் சத்தம் மீண்டும்.

“அங்கேர் அடிக்கிறானப்பா. அவன்தான் செல்லக் கண்டன்தான் வந்திட்டான்.”

நடுங்கிக் கொண்டே கூறுகின்றார்.

“என்ன விசர்க்கதை பேசிறாயப்பா? அவன் எப்பவோ செத்துப் போனானே.”

“ஓமோம். அவன் செத்துப் போனான்தான். ஆனா அவன் இப்ப பஞ்சமிப் பேயாய் வந்திருக்கிறான்.”

“என்ன பயித்தியகாரனைப் போல அலட்டிறாய்?” எரிச்சலாய் கூறுகின்றாள் அன்னமுத்தாச்சி.

“இல்லையணை, அவன்ரை பஞ்சமிப் பேய்தான் வந்தி ருக்கு. அவன் இளந்தாரியல்லே. அவனுக்கும் என்னென்ன ஆசைகள் இருந்ததோ? அதுதான் அவன்ரை ஆத்மா அந்தரப்பட்டு அலைஞ்சு திரியுது. ஆரைப் பலியெடுக்கப் போகுதோ?”

“சும்மா மனதைப் போட்டு அலட்டாமை கிடவப்பா.”

“இல்லையணை, முந்தநாள் தானே அவன்ரை செத்தவீடு கொண்டாடினது. அதுதான் அவன்ரை ஆத்மா அவஸ்தைபட்டு அலைஞ்சு திரியுது.

“செல்லக்கண்டன்ரை ஆவியுமில்லை. மண்ணாங் கட்டியுமில்லை. சும்மா பேசாமல் படு.”

“அப்பென்ன சத்தமணை?”

“அது….. அதுதான் சோழகக் காத்து கடுமையாய் அடிக்கு தல்லே. வேலுப்பிள்ளையின்ரை இரண்டாவது மகளின்ரை சாமத்தியச் சடங்கு நாளைக்கல்லே வைக்கினை. அதுக்குப் போட்ட செட்டியாற்றை பந்தலிலை கிடக்கிற தகரம் களண்டு சோழகக் காற்றிலை அடிபடுகுதப்பா. அதுதான் அந்தச் சத்தம். நீ பேசாமல் படணை”.

அன்னமுத்தாச்சி அமைதிப்படுத்துகின்றா கந்தைவை.

“விசர்க்கதை பேசிறாய் நீ. தகரமடிக்குதாம், தகரம். உனக்குக் கனமாய்த் தெரியுமே? செல்லக்கண்டன் பஞ்சமி யிலை செத்தவன். அவன்ரை பஞ்சமிப் பேய் பலி எடுக்காமை விடாதெண்டு, அதுக்குத்தான் சாந்தி செய்ய வேண்டுமெண்டு நேற்று எங்கடை அண்ணாச்சாமி ஐயர் சொன்னவர்.”

“அவர் கிடக்கிறார். அவர் வரும்படிக்குத்தான் அப்பிடிச் சொன்னவர். நீ எப்பன் அலட்டாமல் கிடவணை.”

நேரத்தின் நகர்வு.

சோழகக் காற்று ஊழையிடுகின்றது.

பனை மரங்கள் இரைந்து நர்த்தனமாடிக் கொண்டிருக்கின்றன.

தூரத்தில் நாய்கள் குரைக்கும் சத்தம்.

நாய்கள் குரைக்கின்ற சத்தம் வர வரக் கிட்டடியில் கேட்கின்றது.

தள்ளாடித் தள்ளாடி வந்து கொண்டிருக்கின்றான் செல்லக்கண்டன்.

நாய்கள் கடுமையாகக் குரைக்கின்றன.

வீட்டுப் படலையடிக்கு வந்துவிட்டான் அவன்.

படலை பூட்டிக் கிடக்கின்றது.

மேலே அண்ணாந்து பார்க்கின்றான்.

இருள் படலத்திற்கு மத்தியில் கிளை பரப்பிச் சடை

விரித்து நிற்கின்றது பூவரசமரம்.

“தங்கச்சி!” கூப்பிடுகிறான்.

குரலில் வேதானாவஸ்தை.

நிசப்தம்.

“தங்கச்சி தேவி!” முக்கி முனகிக் கத்துகிறான்.

அந்தப் பிராணாவஸ்தைக் குரலைக் கேட்ட அயலவர்கள் அருண்டெழுகின்றனர்.

“தேவி!”

உரத்துக் கத்துகின்றான் தன்னால் இயன்றளவு.

“சின்னண்ணையின்ரை குரல்!” பதைபதைத்தெழுகின்றாள் தேவி.

“அப்பா சின்னண்ணை கூப்பிடுகிறான் போலை கிடக்கு “

“அது வேறை ஆரோவாக்கும். அவன் எப்பவோ செத்துப் போனானே. நீ பேசாமல் கிடவடி”.

“நான் சொன்னன் செல்லக்கண்டன்ரை பஞ்சமிப் பேய் வந்திட்டுதெண்டு. அங்கேர் நாய்களும் அமளிதுமளியாக் குலைக்குதுகள்”.

கந்தையா நடுங்கிக் கொண்டே கூறுகின்றார். தகரம் அடிக்கும் சத்தத்தையும் நாய்கள் குரைப்பதையும் கேட்டு அயலிலுள்ளவர்கள் எழும்புகின்றார்கள். ஆனால் பயத்தில் ஒருவரும் வெளியே வரவில்லை.

“அதாரோ ஒழுங்கையாலை போகினையாக்கும். அது தான் நாயள் குலைக்குது!” என்கின்றாள் அன்ன முத்தாச்சி.

தகரம் தட்டும் சத்தம்.

அன்னமுத்தாச்சி புறுபுறுத்தபடியே எழுகின்றாள்.

“ஆரது?”

வெளியே வந்து அவள் கேட்கின்றாள், பதிலில்லை.

“ஆரப்பா அது?”

மீண்டும் கேட்கின்றாள்.

ஒரு சத்தமுமில்லை.

நாலு பக்கமும் பார்க்கின்றாள்.

அவளுடைய மாலைக் கண்களுக்கு ஒன்றும் புலப்படவில்லை.

“இந்தாளாலை நிம்மதியாய் படுக்கேலாமல் கிடக்கு. சும்மா அரிச்சுக் கொண்டு கிடக்குது.”

கூறிக் கொண்டே திரும்பிச் சென்று படுக்கின்றாள்.

நிசப்தம்.

நேரத்தின் நகர்வு.

“தங்கச்சி! ஆ”

ஆழக் கிணற்றின் அடியிலிருந்து எழுந்து வருகின்ற ஈனஸ்வரக் குரலின் முனங்கல்.

“ஐயோ! என்ரை சின்னண்ணை. என்ரை சின்னண்ணையைச் சாக்காட்டிறாங்கள்!”

திடுக்கிட்டெழுந்த தேவி அலறுகின்றாள்.

பயத்தில் அவளுடைய உடல் நடுங்குகின்றது.

“ஐயோ அப்பா, எனக்குப் பயமாய்க் கிடக்கு அப்பா…..” அவள் குளறி அழுகின்றாள்.

“தேவி ஏன் மோனை அழுகின்றாய்?”

தேவி தொடர்ந்து குளறி அழுததைக் கேட்டுக் கொண்டு கிடந்த அன்னமுத்தாச்சி எழுந்து பதைத்தபடியே கேட்ட வளாய் வேலிப்பொட்டுக்குள்ளால் வருகின்றாள்.

“ஏன் மோனை குளறுகிறாய்? என்ன நடந்தது?”

“ஐயோ ஆச்சி! என்ரை சின்னண்ணையை கறுப்பு உடுப்புப் போட்ட நாலஞ்சு கறுவல் தடியன்கள் கட்டிப் பிடிச்சு அவற்றை தொண்டையை நெரிக்க அவற்றை கண்முழி பிதுங்கி, நாக்கு நீண்டு வெளியாலை வந்து….”

“அது கனவு மோனை. நீ ஒண்டுக்கும் பயப்பிடாதை. நானிருக்கிறன். வா என்ரை வீட்டை.”

வேலிப் பொட்டுக்குள்ளால் தேவியைக் கூட்டிச் செல் கின்றாள் அன்னமுத்தாச்சி.

தேவிக்கு சலஞ்சலமாய் வியர்த்துக் கொட்டுகின்றது. அன்னமுத்தாச்சி அவளுடைய வியர்வையைத் தனது சேலைத் தலைப்பால் துடைத்துவிட்டு அவளை அணைத்துக் கொண்டு படுக்கின்றாள்.

தேவியின் இதயம் படபட வென்று அடித்துக் கொண்டி ருக்கின்றது.

“நீ ஒண்டுக்கும் பயப்பிடாதை மோனை, நானிருக்கிறன்'” தேவியைத் தேற்றுகின்றாள் அவள்.

அன்னமுத்தாச்சியைத் தேவி கட்டிப்பிடித்தபடியே கண்களை இறுக மூடிக்கொண்டு படுத்திருக்கின்றாள்.

நான்கைந்து கறுவல் தடியன்கள் கறுப்பு. உடுப்புடன் அவளுடைய சின்னண்ணையைக் கட்டிப்பிடித்து அவனுடைய தொண்டையை நெரிக்க, கண்முழிகள் பிதுங்க, நாக்கு நீண்டு வெளியே வருகின்ற காட்சி தேவியினுடைய மனத்திரையில் அடிக்கடி தோன்றுவதும் மறைவதுமாக இருக்கின்றது.

அவள் எப்பொழுது கண்ணயர்ந்தாள் என்று அவளுக்கே தெரியாது.

இரவு, அன்றைய தனது பயணத்தின் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

இருள் மெதுவாகக் கரைகின்றது.

தயங்கித் தயங்கி நிலம் வெளிக்கத் தொடங்குகின்றது. நிலத்தாயின் முகத்தில் துயரச்சாயல்,

விடிந்ததும் விடியாததுமாக எழுகின்றாள் தேவி. அவளுடைய மனதில் சஞ்சலம், உடலில் சோர்வு. நித்திரை விட்டெழுந்த தேவி ஏனோ படலையடியில் நிற்கின்ற பூவரச மரத்தடிக்குச் செல்கின்றாள்.

கலைந்தும் கலையாத இருளில் பூவரச மரத்தடியில் ஒரு ஆள்.

பயத்துடன் மெல்ல மெல்ல அவள் கிட்டச் சென்று பார்க்கின்றாள்.

மெல்லக் குனிந்து பார்க்கின்றாள்.

“சின்னண்ணை!”

அவளுடைய தொண்டைக்குள்ளிருந்து சத்தம் திக்கித் திணறி வெளியே வருகின்றது.

“சின்னண்ணை, சின்னண்ணை” தடுமாறியபடியே அவனை கூப்பிட்டு எழுப்புகின்றாள்.

பதிலில்லை.

அவனுடைய தலையை ஆட்டுகின்றாள்.

பேச்சு மூச்சில்லை.

“எணே அன்னமுத்தாச்சி, எணே அன்னமுத்தாச்சி இஞ்சை ஒருக்கா வாணை. எங்கடை சின்னண்ணை”.

“என்ன மோனை? என்ன?”

முற்றம் கூட்டிக்கொண்டு நின்ற அன்னமுத்தாச்சி என்னமோ ஏதோவொன்று பதைபதைத்து ஓடி வருகின்றாள்.

பூவரச மரத்தடியில் படுத்துக் கிடக்கின்ற செல்லக் கண்டனைப் பார்த்ததும் அன்னமுத்தாச்சிக்கு அதிர்ச்சி. அவளுக்கு மூச்சுத் திணறுகின்றது. அவள் திகைத்தவளாய் நிற்கின்றாள். ஒன்றுமே பேச முடியவில்லை.

“ஆச்சி, சின்னண்ணை எழும்புறானில்லையணை. அவனை எழுப்பணை.” கதறுகிறாள் தங்கை.

செல்லக்கண்டனைக் குனிந்து உற்றுப் பார்க்கின்றாள் அன்னமுத்தாச்சி.

அவனுடைய கண்கள் திறந்தபடியேயிருக்கின்றன. அவை எதையோ வெறித்துப் பார்ப்பது போலிருக்கின்றது.

வாய் ‘ஆ’ வென்று திறந்தபடியேயிருக்கின்றது.

அவள் குந்தியிருந்து பார்க்கின்றாள்.

அன்னமுத்தாச்சியின் கண் புருவங்கள் உயர்கின்றன. நெற்றி சுருங்குகின்றது. கூர்ந்து பார்க்கின்றாள்.

செல்லக்கண்டனுடைய தொண்டை வீங்கியிருக்கின்றது. அதில் நகக் கீறல் காயங்கள்.

“இது எப்பிடி நடந்தது? ஆர் இப்பிடிச் செய்திருப்பினை?” அவளுக்கு ஒரே குழப்பமாயிருக்கின்றது.

“செல்லக்கண்டன் எப்பவோ செத்துப் போனான் எண்டு தானே சொல்லிச்சினை. அதுதானே நாங்கள் முந்தநாள் அவன்ரை செத்தவீடு கொண்டாடினம்.”

அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

‘நேற்று ராத்திரி அவனுக்கு அஞ்சலிக் கூட்டம் கூட நடத்தினாங்கள்.’

“செல்லக்கண்டன் செத்துப் போனான் எண்டு அண்டைக்கு வந்து சொன்னவன் கறுப்பு உடுப்புப் போட்ட பொடியன். அவன் தான் நேற்று ராத்திரி செல்லக்கண்டனுக்கு அஞ்சலிக் கூட்ட த்தை ஏற்பாடு செய்து நடத்தினவன். அவனோடை இன்னும் மூண்டு நாலுபேர் ஓடியாடி கூட்டத்தை நடத்தினாங்கள். அவங்களாயிருக்குமோ?”

அவளுக்குச் சந்தேகம்.

‘கூட்டம் முடிஞ்சு நாடகம் துவங்க முந்தி வெளியாலை ஆரோ குழறிக் கேட்டுதே. அந்த நேரம் வெளியாலை போன கறுப்பு உடுப்புப் போட்ட மூண்டு நாலு பேரும் திரும்பி வரேல்லை. நாடகம் முடிஞ்ச பிறகும் அவங்களைக் காணேல்லை.

அவளது சிந்தனை எங்கோ ஓடுகின்றது.

‘இப்பதான் புரியுது விசயம்’

இடையிடையே நடக்கிற ஊர்வலங்களுக்கும் கூட்டங் களுக்கும் அன்னமுத்தாச்சி சென்றிருக்கின்றாள். அந்த நேரங்களில் இந்தக் கறுப்பு உடுப்புப் போட்ட மூன்று நாலு பேரையும் கண்டிருக்கிறாள். அவங்கள் தான் முன்னுக்கு நின்று இவைகளை நடத்துகின்றவர்கள் என்பதை அவள் அவதானித் துள்ளாள்.

அன்னமுத்தாச்சிக்கு விசயம் புரிந்துவிட்டது.

‘அவங்கள்’தான், அவங்களேதான் இந்தக் கொடுமை யைச் செய்தவங்கள்’ ஒரு முடிவுக்கு வந்தவளாய் அன்ன முத்தாச்சி செல்லக்கண்டனுடைய முகத்தை ஆராய்கின்றாள்.

அவனுடைய முகத்தில் விரக்தி, வேதனை, ஏக்க உணர்வு தெரிவதாய்ப் படுகின்றது அவளுக்கு.

செல்லக்கண்டனுடைய உதட்டில் இரண்டு இலையான்கள் இருப்பதை அவள் அவதானித்தாள்.

அவன் எடுத்த ரத்தவாந்தி கடைவாய் வழியே வழிந்து உறைந்து போயிருக்கின்றது.

இலையான்களைக் கலைத்துவிட்டு அன்னமுத்தாச்சி செல்லக்கண்டனுடைய திறந்திருந்த கண்களைக் தனது கைவிரல்களால் கஷ்டப்பட்டு மூடிவிடுகின்றாள்.

“ஐயோ! என்ரை செல்லக்கண்டா!” தனது தலையிலடித்துக் கொண்டு குளறுகின்றாள்.

“ஜயோ! என்ரை சின்னண்ணை!” வீரிட்டுக் கத்துகின்றாள் தேவி.

“தேவி உன்ரை சின்னண்ணை உன்ரை சின்னண்ணை…..” அவள் தேவியைக் கட்டிப்பிடித்துக் கொண்டு ஓலமிடுகின்றாள். அவர்களுடைய ஓலங்கள் அந்தப் பகுதியெங்கும் ஒலித்து எதிரொலிக்கின்றது.

அயலவர்கள் ஓடிவந்து குவிகின்றனர். ஒருவருக்கும் ஒன்றுமே புரியவில்லை.

“அட நேற்று ராத்திரி இவனுக்கு அஞ்சலிக் கூட்டம் நடந்தது. ஆனா இண்டைக்கு இவன்……..”

ஆச்சரியத்துடன் வைமன் கந்தையா கூறுகின்றார். புரியாப் புதிராயிருக்கின்றது அவர்களுக்கு. ஊரே கூடிவிட்டது.

அன்னமுத்தாச்சி மௌனமாயிருக்கின்றாள்.

“இப்பென்ன செய்யிறது?”

கந்தையா அவர்களைப் பார்த்துக் கேட்கின்றான்.

“எங்களுக்கு இவ்வளவும் போதும், நாங்கள் செய்த எல்லாத்துக்கும் பதிலாய், இதுக்கு மேலாலை எங்களுக்கு வேறை என்ன வேண்டிக்கிடக்கு.

எதையோ நினைத்தவளாக திடீரெனக் கூறுகின்றாள் அன்னமுத்தாச்சி. எல்லோரும் அவளை வியப்புடன் பார்க்கின்றனர்.

“நாங்கள் இனி மற்றவையளை நம்பியிருக்கக் கூடாது. எங்கடை அலுவல்களை நாங்களே பாக்கவேணும்”.

நிதானித்துக் கூறுகின்றாள் அன்னமுத்தாச்சி. அவளு டைய வார்த்தைகளில் நிதானம், உறுதி. அங்கு கூடி நின்ற அயலவர்கள் அனைவரும் துரித கெதியில் செயல்பட ஆரம்பிக்கின்றனர்.

முந்தநாள் அதே வளவில் நடந்த செத்த வீட்டுக் கொண்டாட்டத்தைப் போல அந்தக் கிராமத்திலை முன்னர் எப்பொழுதும் அவ்வளவு டாம்பீகமாக நடக்கவில்லை. தகரப் பந்தலென்ன, கதிரைகள், வெத்திலை பாக்கு, சுருட்டு, வாழைகள், தோரணங்கள் எல்லாம் பெரிய எடுப்புத்தான்.

அனுதாபம் தெரிவிக்க அறிந்தவர்கள், அறியாதவர்கள், பெரியவர்கள், பிரமுகர்கள் எல்லோரும் வளவு முட்ட முகமனு க்கு நின்றவர்கள் நீயா நானோவென்று எத்தனை பேர். அங்கு கூடியிருந்தவர்களின் பெரும் பகுதியினர் போலிகள் என்று யாருக்குத் தெரியப் போகின்றது.

இன்று செல்லக்கண்டனுடைய செத்த வீட்டில் அப்பகுதி யிலுள்ள சிறு தொகையினர் துக்கத்தில் பங்கு கொள்கின் றார்கள். அவர்கள் அத்தனை பேரும் அசல்களே.

முந்தநாள் செட்டியாருடைய தகரப் பந்தல் இந்த முற்றத்தில் போடப்பட்டிருந்தது. இன்று நான்கு கைமரங்கள் நடப்பட்டு தேடாவளையக் கயிறு கட்டப்பட்டு அதற்குமேல் கிடுகுகள் பரப்பப்பட்டிருக்கின்ற பந்தல். இதற்குள் சங்கத்துக் கதிரைகளில்லை. கதிர்ப்பாய் விரிக்கப்பட்டிருக்கின்றது.

கிடுகுப் பந்தலின் நடுவேயிருக்கின்ற பலகை வாங்கிலே செல்லக்கண்டனுடைய வாட்டசாட்டமான உடல் கிடத்தப்பட்டு வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருக்கின்றது.

அவனுடைய தலைமாட்டில் சித்தப்பிரமை பிடித்தவளாய் இருக்கின்றாள் தேவி. அன்னமுத்தாச்சி அவளை அணைத்துப் பிடித்தபடியே இருக்கின்றாள்.

கறுப்பு உடுப்புப்போட்ட இருவர் அப்பொழுதுதான் அங்கு பைசிக்கிளில் வந்து இறங்குகின்றனர்.

“அங்கை எங்கடை ஆயிரக்கணக்காண பிள்ளையள் தங்கடை உயிரையும் மதிக்காமல் எங்களுக்னகாக சண்டை பிடிச்சுச் செத்துக் கொண்டிருக்கிறாங்கள். இஞ்சை இந்த நாசமாய்ப்போன ஊர்ச்சோறு தின்னிக் குத்தியன்கள்……?”

அன்னமுத்தாச்சி மனதிற்குள் கறுவிக்கொள்கின்றாள்.

பசுபதியாக்கள் பச்சைக் கமுகை வெட்டிப் பிளந்து பூ வரசம் கம்புகளை வில்லாய் வளைத்துக் கட்டி அதற்கு மேலே வெள்ளைத் துணிகளைப் போட்டு மூடி பாடை கட்டிக் கொண்டி ருக்கின்றார்கள்.

செல்லக்கண்டனுடைய உடலைக் கிடத்துவதற்கு பச்சைத் தென்னோலையை இரண்டாகப் பிளந்து கிழித்து பன்னாங்கு பின்னிக்கொண்டிருக்கின்றார் கணபதி.

கிளைத்துச் சடைத்து இதுகாலவரை குளிர் நிழல் தந்து கொண்டிருந்த அந்தப் பூவரச மரம் தறிக்கப்பட்டு சாய்ந்து விழுந்து கிடக்கின்றது.

அன்னமுத்தாச்சி எழுந்து செல்லக்கண்டனுடைய தலை மாட்டில் மங்கலாய் எரிந்து கொண்டிருக்கின்ற குத்து விளக்கிற்கு எண்ணெயை ஊற்றித் திரியைத் தூண்டி விடுகிறாள்.

விளக்கு சுடர்விட்டு பிரகாசமாய் எரிகின்றது.

கறுப்பு உடுப்புப் போட்டவர்கள் நோட்டமிட்டுக் கொண்டு நிற்கின்றனர்.

“அநியாயமாய் ஏன் இந்தப் பூவரசைத் தறிச்சவை?”

சாய்ந்து விழுந்து கிடக்கின்ற பூவரச மரத்தைப் பார்த்த செல்லம்மா அக்கா கூறுகின்றா.

“நெஞ்சான் கட்டைக்கு.!”

அந்தக் கறுப்பு உடுப்புப் போட்டவர்களைப் பார்த்தபடியே கர்ச்சிக்கின்றாள் அன்னமுத்தாச்சி.

வெடித்துக் கிளம்பிய அவளுடைய வார்த்தைகளில் கனல் தெறிக்கின்றது.

செல்லக்கண்டன்தான் கர்ச்சிக்கின்றானோ என்று அங்கு நிற்கின்றவர்கள் திகைக்கின்றனர்.

கண்ணகியாய் நிற்கின்றாள் அன்னமுத்தாச்சி.

– 1998, வேட்கை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2000, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *