வேகம்…விவேகம்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 10,040 
 
 

“ஜாதகத்தை தூக்கிட்டு நாலு தெரு அலைஞ்சு பொருத்தமான வரனை சலிச்சு எடுத்தா மட்டும் போதுமா? உன் பொண்டாட்டிக்கு நாலு வார்த்தை நாசூக்காக தெரிந்திருந்தால் இந்நேரம் நம்ம வீட்டில் நல்ல காரியம் நடந்திருக்கும். இதுக்குத்தான் நான் அப்பவே தலை தலையா அடிச்சுண்டேன்…” என்று காலங்காலையில் புலம்ப ஆரம்பித்துவிட்ட அம்மாவையும், இதனால் சலனப்பட்டுக் கொண்டிருந்த மனைவியையும் எப்படி சமர் செய்வது என்று தெரியாமல் செய்தித்தாளுக்குள் முகத்தை மறைத்துக் கொண்டான் வெங்கட் என்றாலும் முற்பத்தைந்து வருடங்களுக்கு முன் தன் சகோதரிக்கு தன் பெற்றோர்கள் வரன் பார்த்த நிகழ்வுகள் அவன் நினைவுகளில் நிழலாடியது. செலவுகளை இழுத்துவிட்டுக்கொள்ளக் கூடாது என்று அப்பா ‘நாம மிடில் கிளாஸ்’ என்ற தொனியிலும், செலவுகளை பெரியதாக்கிக் கொண்டு அம்மா ‘நான் பட்ட பாடு என் பொண் படக் கூடாது’ என்ற தொனியிலும் செய்த கூத்தில் பெண் பார்க்க வந்த பல பிள்ளை வீட்டார்களும் பதில் ஏதும் கூராமல் காணாமல் போய்க் கொண்டிருந்தார்கள். “இப்போல்லாம் வீடு புதுசா கட்ட லோன் ஈஸியா கிடைக்கும் அப்பா. அதனால் இந்த வீட்டை விற்று கல்யாணத்தை முடித்தீர்கள் என்றால் நான் உடனே லோன் ஏற்பாடு செய்து நமக்கு வேறு புது வீட்டுக்கு வழி செய்து விடுவேன்” என்று மூக்கை நுழைத்து வெங்கட்தான் சகோதரியின் கல்யாணத்திற்கு திட்டம் போட்டுக் கொடுத்தான்.

“நான் பெண்ணை பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. நீயும் அப்பாவும் பார்த்து இவள்தான் என்று கையைக் காட்டினாள் அவள் கழுத்தில் தாலி கட்ட நான் தயார்” என்று தன் திருமணத்தைப் பற்றி பேசிய பெற்றோரிடம் வெங்கட் கூறியதற்கு பின்னால் அவன் மனதில் ஆழ்ந்த கருத்து ஒன்று இருந்தது. பெண் பார்க்கும் சம்பிரதாயம் என்று வரிசையாக பலரிடம் அவமானப் பட்டதால் நாமும் எந்த பெண்ணையும் அவளது குடும்பத்தையும் அவமானப் படுத்தக் கூடாது என்று அவன் தீர்மானமாக இருந்தான். “அதெல்லாம் சரிப்பட்டு வராது கண்ணா. சம்பிரதாயமாய் நீ போய் பார்க்காமல் நாங்கள் ‘சரி’ சொன்னால் அவர்களுக்கு அது சந்தேகத்தைதான் ஏற்படுத்தும்” என்று அம்மா நிதர்சனமாக கூறியதால் விஜயாவை பெண் பார்க்க சம்மதித்தான் வெங்கட். “ஜாதகம் நல்லா பொருந்தி நல்ல குடும்பமுமாக இருக்கு என்று நீங்க சொல்றதால வரேன். அங்க பொண்ணும் அவ குடும்பமும் எப்படி இருந்தாலும் ஓகே சொல்லிடனும்” என்றும் வெங்கட் தன் புரட்சி போக்கை கராராக சொல்லிவிட்டான். பெண் வீட்டில் ஆறு மணிக்கு சம்பிரதாயமாக தலை காட்டிய பின் ஏழு மனிக்கெல்லாம் ஆபிஸில் அவசரமாக ஒரு வேலை இருக்கிறது என்று வெங்கட் கிளம்பிவிட்டாலும் சம்பிரதாய பேச்சுக்கள் ஒன்பது மணிவரை நடந்தது என்று பின்னர் தெரிந்துக் கொண்டான்.

பிறகு ஒரு நாள் அம்மா “வேலை ஏதும் போகாமல் விஜயா காலேஜுக்கு போனதாலே விஜயா உன்னை விடவும் அதிகமா படிச்சிருக்கா” என்று பீடிகயாக பேச்சை தொடங்கிய போது அவளுக்கு பிடி கொடுக்காமல் “நான்தான் அப்பவே சொன்னேனே. விஜயாவுக்கு என் படிப்போ இல்லை வேலையோ பிடிக்குமா இல்லை பிடிக்காதா என்பதை தெரிந்து கொள்ளாமல் ஏன் என்னை பெண் பார்க்க வரச் சொன்னீர்கள்” என்று கடிந்து கொண்டு வெங்கட் ஆபிஸுக்கு கிளம்பி போய் விட்டான். இது நட்ந்து பல வாரங்களுக்கு பின் வெங்கட்டுக்கு ஆபிஸில் ஒரு போன் வந்தது. “என்னங்க வந்து பெண் பார்த்து விட்டு போனால் போதுமா? உங்க பதிலை எதிர்ப் பார்த்து இங்க நாங்க காத்திருக்கோம் என்பது கூட உங்களுக்கு புரியாதா?…” என்ற தோரனையில் விஜயாவே போனில் தொடர்பு கொண்டு கடிந்து கொள்வாள் என்று வெங்கட் சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை.

“அம்மா. விஜயா ஆபிஸுக்கு போன் செய்தாள். நீங்கள் இன்னமும் அவர்களைத் தொடர்பு கொள்ளவில்லையாமே? நான்தான் யாராயிர்ந்தாலும் ஓகே சொல்லலாம் என்று சொன்னேனே! இப்போ நானே அவளிடம் ஓகே சொல்லிவிட்டேன்” என்று கூறிய வெங்கட்டைப் பார்த்து பெற்றோர்கள் “இது விவேகமற்ற வேகம்” என்று கடிந்துக் கொண்டு திகைத்தார்கள் என்றாலும் அந்த வெறுப்பையும் திகைப்பையும் அவர்கள் கல்யாண களேபரத்தில் பூரணமாக வெளிப்படுத்த முடியாததால் வெங்கட் விஜயாவைக் கைப் பிடித்தான். ஆனால், அதனால் ஏற்பட்ட மாமியார் மறுமகளுக்குள் ஏற்ப்பட்ட பனியுத்தத்தை நிறுத்த வெங்கட்டால் இன்றுவரை முடியவில்லை. அம்மாவுக்குத் தன் பெண்ணின் கல்யாணத்தில் இழந்த வீட்டை தன் மகனின் கல்யாணத்தில் ஈடு செய்ய முடியவில்லையே என்ற ஒரு பழமையான நியாயத்தை விஜயா ஒரு முதிற்சியுடன் புரிந்து கொண்டாள் என்றாலும், அந்த முதிற்ச்சியே அவளது இயலாமைக்கும், தவிப்புக்கும் இன்றுவரை காரணமாக படுத்துகிறது.

காலம் வேகமாக சுழன்று வெங்கட் தன் மகனின் கல்யாணத்தை ஏற்பாடு செய்யும் தருணம் வந்தாலும், தன் எல்லா அனுபவ முதிற்சியுடனும் அதற்காக அவன் போடும் திட்டங்கள் ஒவ்வொன்றும் நிர்மூலமாகிக் கொண்டிருந்தன. “இந்த கலிகாலத்துல பையன் ஜாதகத்தை வைத்துக் கொண்டு அலைய வேண்டியிருக்கிறது” என்று எல்லோரும் பேசுவதில் இரண்டு வருடமாக வெங்கட்டும் விஜயாவும் துவண்டு போயிருந்தார்கள். இப்பொழுது சுரேஷ்’ம் பெங்களூருவிலிருந்து தன் வேலையை மாற்றிக் கொண்டு இங்கு வந்துவிட்டதால் வீட்டில் தினமும் நரகமாகத்தான் பொழுது நகர்ந்து கொண்டிருந்தது. “என்னப்பா! பாட்டி அடுத்த இன்னிங்க்ஸை தொடங்கி விட்டாளா? என் கல்யாணத்தை பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில்தான் அவ புலம்பறா. நான் என்ன பண்ணினேன் தெரியுமா? என் ஆபிஸ் நண்பர்கள் உதவியுடன் என் ஜாதகத்தை ஓசைப்படாமல் அப்லோட் பண்ணீ இந்த வரன் பார்க்கும் வேல!
யை வலைதளத்துக்குள் தள்ளிவிட்டேன். தினமும் ஆபிஸுக்கு இரண்டு மூணு காலாவது வருது. அதுல ஹரிணின்னு ஒருத்தியோட இரண்டு வாரமா பேச்சு வார்த்தை நடந்திட்டிருக்கு. அவளுக்கு இங்க நடக்குற எல்லா விஷயமும் தெரியும். சம்பிரதாயத்திற்க்காக அவ அப்பா இந்த வாரம் இங்க ஜாதகத்தோட நாளை காலையில் வருவார். நாளைக்கு சாயந்திரமே அவர் தங்கும் ஓட்டல் அறையில் பெண் பார்க்க ஏற்பாடு செய்திருக்கோம். வரும் தை மாதம் ஏழாம் நாள் எங்களுக்கு நன்றாக கூடி வருவதாலே அன்று கல்யாணத்திற்க்கான ஏற்பாடும் மும்முரமாக ஒரு கல்யாண காண்ட்ராக்டர் மூலமாக நடந்து கொண்டிருக்கிறது. நீங்க வந்து தலையில் வந்து அட்சதையை போட்டு ஆசிர்வாதம் பண்ணினால் மட்டும் போதும்” என்று வெங்கட் காதில் மகன் சுரேஷ் குசுகுசுவென்று ஒரு குண்டை தூக்கிப் போட்டு, வாசலில் வந்து ஹாரனை அடித்த ஆபிஸ் காரில் ஏற அவசரமாக கிளம்பிவிட்டான்.

“என்னங்க இப்படி? நம்ம கொஞ்சம் கூட மதிக்காமல் சொல்லிட்டு திரும்பிப் பார்க்காமல் போரான்?’ என்று வரிந்துக் கட்டிக்கொண்டு வந்த விஜயாவிடம் “ஒரு நல்ல காரியம் நடக்கப் போறதுன்னா நாம அதுல குறுக்கே நிக்கக் கூடாது? அம்மா சொல்றா மாதிரிக் கொஞ்சம் நாசூக்காக இருக்க கத்துக்கோ. அவனுக்கும் இன்னைக்கு வேகம் இருந்தாலும் நாளைக்கு தேவையான விவேகம் அனுபவத்தில் வரும்” என்று மேட்ரிமோனியல் பக்கத்திலிருந்து மற்ற பக்க செய்திகளை வெகுநாட்களுக்குப் பிறகு ஆர்வமாக படிக்க புரட்டினான் வெங்கட். அவளும் தனக்கு இப்பொழுதைய தேவை விவேகம் என்பதை சூசகமாக புரிந்துக் கொண்டு நகர்ந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *