தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 11,119 
 
 

சென்னையில் நீச்சல் குளம், ஜிம், மால் என்று எல்லா வசதிகளுடன் இருக்கும் அபார்ட்மென்ட் ஒன்று வாங்கிட வேண்டும் என்று ராதா, குமார் இருவருக்குமே ஆசை. சென்ற வாரம் பார்த்துவிட்டு வந்த அபார்ட்மென்ட், நினைத்ததற்கும் மேலாக பல வசதிகளுடன் இருந்தது. ஆனால், விலை தான் எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிகம். “”எப்படியாவது பணம் புரட்டி வாங்கி விடலாங்க…” என்று ராதா ஆர்வத்துடன் சொல்ல, குமாருக்கும் அந்த வீட்டை எப்படியும் வாங்கி விட வேண்டும் என்ற ஆசை வந்தது. விலைதான் பிரமிப்பாக இருந்தது.
“”எனக்கும் ஆசையாத்தான் இருக்கு ராதா… ஆனா, அவ்ளோ பணத்துக்கு என்ன பண்றது? ஓரளவுக்குத்தான் ஹவுசிங் லோன் போட முடியும். மாசாமாசம் தவணை கட்டணும். வீட்டுச் செலவுகள் வேற இருக்கு.”
“”என் நகையெல்லாம் தந்திடுறேன்ங்க… அடகு வச்சிடலாம்.”
இருவரும் அமர்ந்து, எப்படி கூட்டிக் கழிச்சுப் பார்த்தாலும், பத்து லட்சம் வரை துண்டு விழுந்தது.
“”நான் ஒண்ணு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே…”
“”சொல்லு…”
வீடு2“”கிராமத்துல ஒங்க பூர்வீக வீட்டுல, உங்கம்மாவும், அப்பாவும் மட்டும்தானே இருக்காங்க, பேசாம அதை வித்துட்டு, அந்த பணத்தையும் போட்டா, இந்த அபார்ட்மென்ட்டை வாங்கிடலாமே… உங்கம்மாவையும், அப்பாவையும், நம்ம அபார்ட்மென்ட்ல நம்ம கூடவே வச்சுக்கலாம்.”
ராதா சொல்ல, குமாருக்கு முதலில் தயக்கமாக இருந்தது.
கொஞ்சம் யோசித்து பார்த்தபோது, அது தான் சரி என்று தோன்றியது. அப்பா, அம்மாவையும் கூடவே வைத்து பார்த்து கொண்டது போல இருக்கும் என்று, தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டான்.
வீடு விற்பது தொடர்பாக அப்பாவிடம் பேச, உடனே கிராமத்திற்கு செல்லலாம் என்று ராதா சொல்ல, ஒரு நிமிடம் யோசித்தான். அவன் கிராமத்திற்கு சென்றே பல வருடம் ஆகிவிட்டது. அப்பாவும், அம்மாவும் அவ்வப்போது சென்னை வந்து போய் கொண்டிருந்தனர். வரும்போதும் போகும் போதும், “எப்போ ஊருக்கு வருவே?’ என்ற கேள்வியை தவறாமல் கேட்டுப் போவர். இப்போது திடீரென வீட்டை விற்க வேண்டும் என்று போய் நின்றால், என்ன சொல்வார்களோ என்ற அச்சம் எட்டி பார்த்தது.
ஆனாலும், பேசித்தானே ஆக வேண்டும்? அடுத்த வாரமே புறப்பட்டனர்.
“”வாப்பா குமார், வாம்மா…” என்று வந்தவர்களை வரவேற்று, “”ஹே… குட்டி…” என்று பேத்தி பப்பியை தூக்கி கொண்டார் குமாரின் அப்பா.
மதிய உணவு முடிந்து, ராதாவும், குழந்தையும் கண் அசர, தோட்டத்தை ஒரு சுற்று சுற்றி விட்டு வரலாம் என்று கிளம்பினான் குமார். தோட்டத்தில் இருந்த மாமரம் காய்த்திருந்தது. ஒரு மாங்காயை பறித்து அப்படியே கடித்தான். அதன் புளிப்பும், துவர்ப்பும் உள்ளே இறங்க, மாங்காயின் சுவை அபாரமாய் தெரிந்தது. துண்டை விரித்து, மாமரத்தின் அடியில் படுத்தவன், சுகமாய் காற்று வீசவே கண்ணயர்ந்து விட்டான்.
“”அப்பா, அப்பா…” பப்பியின் குரல் கேட்டு கண்விழித்தவன், “”என்னம்மா தனியாவா தோட்டத்துக்கு வந்தே?” என்று குழந்தையை பக்கத்தில் இழுத்து மடியில், அமர்த்தி கொண்டான்.
“”இல்லப்பா, தாத்தா வந்து இருக்காங்க. ராசையா வந்தாரா, அவரு அந்த மரத்துல இளநி பறிக்கிறாரு, தாத்தா அங்க நிக்கிறாங்க பாருங்க…” சற்றே தூரத்தில் இருந்த தென்னை மரத்தைக் காட்டினாள் குழந்தை.
இளநீரை சீவி ராசையா தர, அதை ஆசையுடன் பருகினான் குமார். அப்படியே குடிக்க தெரியாமல் தடுமாறிய பப்பிக்கு, எப்படி மேல கொட்டி கொள்ளாமல் இளநீரை குடிப்பது என்று பொறுமையாய் சொல்லி கொடுத்தான். இருந்தாலும், அவள் பாதி இளநீரை மூக்கிலும், மீதியை சட்டையிலும் ஊற்றி கொள்ள, ராசையாவுக்கு ஒரே சிரிப்பு.
“”மெட்ராஸ் புள்ள இல்ல, அப்படித் தான் இருக்கும் சின்னய்யா,” என்று சொல்லி விட்டு, பொறுமையாய் இன்னொரு இளநீரை சீவி, குழந்தையிடம் கொடுத்தான்.
“”எப்ப சொல்ல போறீங்க? வந்து ஒரு நாள் ஓடி போச்சு,” இரவில் குமாரிடம் கிசுகிசுத்தாள் ராதா.
“”கொஞ்சம் பொறுமையா இரு. நாளைக்கு கேக்கறேன். இவ்ளோ பெரிய தோட்டத்தோடு கூடிய முற்றம் வச்ச வீடு… அப்பா ஒத்துப்பாரான்னு தெரியலை,” தயக்கம் தெரிந்தது குமாரின் குரலில்.
“”நீங்க கேக்கறீங்களா, இல்லை நான் பேசட்டுமா?” ராதா குரலை உயர்த்த, “”நானே நேரம் பார்த்து நாளைக்கு பேசறேன். நீ அதுவரை கொஞ்சம் சும்மா இரு,” என்ற குமார், அவள் மேலே பேசுவதை தவிர்க்க, தூங்குவது போல பாசாங்கு செய்தான்.
காலையில் குமார் எழும்போதே, பப்பி பக்கத்து வீட்டு பிள்ளைகளுடன் தெருவில் பாண்டி ஆட்டம் ஆடி கொண்டிருந்தாள். அவர்கள் ஆடுவதில் சுவாரசியம் ஏற்பட, திண்ணையில் அமர்ந்து, அம்மா கொடுத்த காபியை ருசித்தபடியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
கொஞ்ச நேரத்தில் பிள்ளைகள், “கண்ணாம்பூச்சி ரே, ரே…’ விளையாட துவங்கினர். அவர்கள் விளையாட்டை பார்த்து கொண்டே இருந்த அவனுக்கு, தன் சிறுவயது நினைவுகள் வந்து சென்றன. நினைவுகள் தந்த சந்தோஷத்தில், தன்னை மறந்து அமர்ந்திருந்தவனை, அம்மாவின் குரல் கலைத்தது.
“”தம்பி குளிக்கலை? குளிச்சிட்டு வந்தா சாப்பிடலாம்ல? சூடா இட்லி ஊத்தறேன், உனக்கு பிடிக்கும்ன்னு, அம்மியில் வெங்காய சட்னி அரைச்சு இருக்கேன்.”
தோளில் துண்டை போட்டு கொண்டவன், வீட்டு பின்கட்டு வழியாக, தோட்டத்தை ஒட்டி இருந்த குளத்திற்கு குளிக்கச் சென்றான். நீண்ட நாட்களுக்கு பின், குளத்தில் நீச்சல் அடித்தது, மனதிற்கு சந்தோஷமாய் இருந்தது.
இட்லியும், கூடவே நெய் மணக்கும் வெல்ல அப்பமும், சோள பணியாரமும் செய்திருந்தார் அம்மா. பப்பி ரசித்து சாப்பிடுவதை கண் கொட்டாமல் பார்த்தான் குமார்.
“”நாம என்ன சாப்பிடவா வந்தோம்? வந்ததில் இருந்து உங்க அம்மா விருந்து சமைக்கறதும், அதை நீங்களும், உங்க பொண்ணும் ரசிச்சு சாப்பிடறதுமா பொழுது போயிட்டிருக்கு… வந்த வேலைய பாருங்கன்னா… அதை விட்டுட்டு,” ராதா நொடித்தாள்.
“”ராதா… நானே உன்கிட்ட பேசணும்ன்னு நினைச்சேன்,” குமார் தயங்கியபடி பேச துவங்கினான்.
“”உங்க அப்பாகிட்ட பேச சொன்னா, என்கிட்டே பேசணும்ன்னு சொல்றீங்க?” சந்தேகமாய் பார்த்தாள்.
“”இந்த வீட்டை விக்கறது பத்தி, நான் அப்பாகிட்டே பேசப் போறது இல்லை,” விஷயத்தை வளர்க்காமல் சொல்லி விட்டான்.
“”ஏன் பயமா?” ராதா குரலில் கேலி தெரிந்தது.
“”பயம் கிடையாது. இங்க வந்து தங்கின இந்த ரெண்டு நாளில், நாம எதையெல்லாம் நகர வாழ்க்கையில் மிஸ் பண்ணறோம்ன்னு புரிஞ்சுக்கிட்டேன். இந்த காத்து, பசுமை கொஞ்சும் தோட்டம், வற்றாத குளம், கள்ளம் கபடமற்ற ராசையா மாதிரியான மக்கள், நாம் காலப்போக்கில் மறந்து போன விளையாட்டை எல்லாம் நினைவில் வைத்து விளையாடுற குழந்தைகள்… எல்லாத்துக்கும் மேல, அம்மாவோட கிராமத்து மணம் கமழும் பலகாரம்,” கண்மூடி ரசித்து, அவன் பேசி கொண்டிருக்க, இடை வெட்டினாள் ராதா.
“”உங்களுக்கு மூளை ஏதும் குழம்பலையே?”
“”சின்ன வயசுல இருந்தே, நகரத்து வாழ்க்கைக்குப் பழகிப்போன உனக்கு, இது எதையும் புரிஞ்சிக்க முடியாது. ஆனா, எனக்கு கிராமத்து வாழ்க்கைன்னா என்னன்னு தெரியும். அதே போல, நகரத்து வாழ்க்கையும் தெரியும். பப்பிக்கு நம்மால, “ஏசி’ வாங்கி தர முடியும். ஆனா, இதே போல சுத்தமான காத்த வாங்கி தர முடியுமா? இங்க பக்கத்து வீட்டு பசங்க, எதிர் வீட்டு பசங்கன்னு ஓடி விளையாடறா, நாம இப்போ இருக்கற வீட்டிலோ, இல்லை போக போற அபார்ட்மென்ட்டிலோ, அவளுக்கு இவ்ளோ நண்பர்கள் கிடைப்பாங்களா?
“”அங்கே, குழந்தைகள் பள்ளி விட்டா, அந்த கிளாஸ், இந்த கிளாஸ்ன்னு தான் போறாங்களே தவிர, இப்படி வெளியில் வந்து விளையாடறது எல்லாம் குறைஞ்சு போச்சே ராதா… நீயே கூட பப்பியை எத்தனை கிளாசிற்கு அனுப்பற?”
“”இப்ப என்ன சொல்றீங்க? பேசாம இங்கேயே வந்துடுவோமா?” ராதாவின் கிண்டல் புரிந்தது.
“”நிறைய நாள் கழிச்சு, இப்போ வந்து இங்க தங்கினப்பத்தான் எனக்கே சிலது புரிஞ்சுது. இந்த வீட்டை நாம வித்துட்டா, இவ்ளோ நல்ல விஷயங்களை மிஸ் பண்ணறதோட, வீட்டோட இணைந்த நினைவுகளையும் மிஸ் பண்ணிடுவோம். நான் தவழ்ந்து ஓடி விளையாடியது இந்த வீட்டில் தான். நம்ம பப்பிக்கு இங்கே தானே தொட்டில் போட்டோம்; இப்படி எத்தனையோ நினைவுகள், அப்பா, அம்மாவுக்கு இந்த வீட்டோட இருக்கும் தானே? அது, எதையுமே நான் கலைக்க விரும்பல. குழந்தைக்கும், தாத்தா பாட்டி வீடுன்னு வந்து, போறதுக்கு ஒண்ணு இருக்கணும். இது எல்லாத்தையும் யோசித்துதான், நான் இந்த வீட்டை விற்பதை பத்தி அப்பாகிட்டே பேச விரும்பலை,” உறுதியாய் கூறினான் குமார்.
அவன் ராதாவிடம் உள்ளறையில் பேசி கொண்டிருக்கும் போதே, கூடத்து சுவரில் இருந்த கிறுக்கல்களை எல்லாம் காட்டி, “”இது எல்லாம் யார் எழுதியது தாத்தா?” என்று பப்பி கேட்பது, சாளரத்தின் வழியாக தெரிந்தது.
“”உன் அப்பா, உன் வயசுல இருக்கும் போது எழுதியது. வருஷா வருஷம் வெள்ளையடிக்கும் போது, அதை எல்லாம் விட்டுட்டு அடிக்க சொல்வேன்… அதை பார்க்கும் போது, உன் அப்பா இன்னும் குழந்தையா இங்க வளைய வர்ற மாதிரி இருக்கும்,” என்று அப்பா சொல்வது, குமாருக்கு தெளிவாக கேட்டது.
“வீடுங்கறது ஜடப்பொருள் இல்லை; அது உணர்வுகளோடும், நினைவுகளோடும் சம்பந்தப்பட்டது என்பது எவ்வளவு உண்மை?’ என்ற எண்ணம் வந்தது. இதை எப்படியாவது ராதாவுக்கு புரிய வைக்க வேண்டும் என்று எண்ணி கொண்டான். புரிய வைத்து விடலாம் என்ற நம்பிக்கை அவனுக்குள் துளிர்த்தது.

– நித்யா பாலாஜி (டிசம்பர் 2012)

கம்ப்யூட்டர் சயின்சில் எம்.பில்., பட்டம் பெற்றவர். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கவிதை எழுதுவதில் ஆர்வமுள்ளவர். மாணவ பருவத்திலிருந்தே கதை எழுதுவதில் விருப்பமுள்ளவர். இவரது சிறுகதைகள், பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன. சமையல் குறிப்புகளுக்கான ஒரு வலைதளம் வைத்து உள்ளார். மலர் ரங்கோலி போடுவதிலும் திறமை உள்ளவர்.
டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிப்பதாக கூறும் இவர், இந்த பரிசு, நிறைய எழுத வேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டியுள்ளதாக கூறுகிறார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *