விஷப் பரீக்ஷை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 16, 2023
பார்வையிட்டோர்: 1,896 
 
 

(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருவேங்கட முதலியார் நினைத்தால் எந்தக் காரியத்தையும் ஸாதித்துக் கொள்ளும் வல்லமை யுடையவர். எந்த வேலையையும் முன்பழக்கமின்றியே ஒழுங்காகச் செய்துவிடுவார். அவர் மேற்கொள்ளும் முயற்சிகளெல்லாம் சாமானியமானவையல்ல. கையில் ஒரு தம்பிடி இல்லாமல் ஜில்லாபோர்டில் இருபதினாயிரத்துக்கு ஒரு கண்டிராக்டு எடுப்பார். மிடாவை யெடுத்துக் குடத்தில் போட்டுக் குடத்தையெடுத்து மிடாவில் போட்டுத் ‘தெகுடுதத்தம்’ பண்ணிக் காரியத்தை நிறைவேற்றிவிடுவார்.

ஒரு பெரிய கம்பெனியைத் தொடங்குவார். நாறு ரூபாய் ஸம்பாதித்துக்கொண்டு பத்திரிகைகளில் பிரமாதமாக விளம்பரம் செய்துவிடுவார். ஒரு மானேஜர், ஒரு காரியதரிசி, சில குமாஸ்தாக்கள் எல்லோரும் வேண்டுமென்றும் முன்பணம் ஒவ்வொரு வரும் இவ்வளவு இவ்வளவு கட்டவேண்டுமென்றும் விளம்பரம் செய்துவிடுவார். ஒரு வாரத்தில் பணக் காரர்களுடைய மாப்பிள்ளைகள் முன்பணத்துடன் வந்து விழுவார்கள். அந்த முன்பணத்தையெல்லாம் வைத்துக்கொண்டு கம்பெனியை ஆரம்பிப்பார்.

அவருடைய போக்கே ஒரு தனி மாதிரி, ‘இப்படித்தான் சாமர்த்தியம் பண்ணுகிறார்’ என்று ஒருவருக்கும் தெரியாது. அது பெரிய மூடுமந்திரமாக இருக்கும். எப்படியோ கம்பெனி ஆரம்பித்த நான் காவது மாதத்தில் வேலைக்காரர்களுடைய முன்பணங் களைப் பாங்கியில் போட்டுவிட்டு மூவாயிரரூபாய் லாபப்பணத்தைக் குலுக்கிக் கொண்டிருப்பார்.

இந்திரஜாலம், மஹேந்திரஜாலம் என்று வேறு எவைகளையோ சொல்வார்கள்; அதெல்லாம் பொய். முதலியார் பண்ணுவதுதான் உண்மையான இந்திர ஜாலம். இன்றைக்கு ராத்திரி, பணமில்லாமல் இரண்டு வாழைப்பழத்தை உரித்துப் போட்டுவிட்டுப் படுப்பார். நாலாவது மாதத்தில் ஆயிரக்கணக்கில் அவர் கையில் பணம் கொஞ்சும்.

இப்படி நடந்து வருகிறது அவருடைய கம்பெனி யென்றால், ‘இன்றைக்கு எவ்வளவு லக்ஷம் சேர்த்து வைத்திருக்கிறார்?’ என்ற கேள்வியை அல்லவா நீங்கள் கேட்கிறீர்கள்?

“ஐயா, பிச்சை” என்றால் அவர் கைக்குத் தம்பிடியும் காலணாவும் வருவதில்லை. வெள்ளிக் காசைத்தான் வீசி எறிவார். மாமன் மகளுக்குப் பிள்ளை பிறந்ததென்று கடிதம் வந்தது. பதினோராம் நாள் புண்யாஹவாசனத்துக்குக் காரில் போய் நின்றார். தொட்டில், குழந்தைக்குத் தங்க வளையல், தங்க அரைஞாண் முதலியவை , தாய்க்குப் புடைவை எல்லாம் சேர்ந்து இரண்டாயிர ரூபாய்க்குக் கணக்காகிவிட்டது.

எந்தமாதிரி சம்பாதிக்கிறாரோ அந்தமாதிரி செலவழிப்பதில் தீரர். அப்படியானால் கையில் காசு மிஞ்சுவதேது? அவர் கையில் பணம் இருக்கிறதென்று நம்பவே முடியாது.

2

வள்ளி, முதலியாரின் அருமைத் திருமகள். வசீகரமும் வனப்பும் வாய்ந்தவள். புஸ்தகப் பித்து அதிகம் உடையவள். எல்லாம் ஒருபுறம் இருக் கட்டும்; மாமன் மகன் பொன்னம்பலத்தினிடம் உயிரை அடகு வைத்தவள்.

இளமையிலிருந்தே பழகிய குழந்தைகள் அவர்கள். வள்ளி முதல் இங்கிலீஷ்ப் பாடத்தைக் கற்றுக் கொண்டது பொன்னம்பலத்தினிடந்தான். அவ்விருவர்களிடத்திலும் காணப்பட்ட அன்பை முறிக்க ஒருவராலும் முடியாது. கல்யாணம் பண்ணிக் கொள்ளும் முறையுடையவர்களாகையால் ஒருவரும் அவர்களுடைய விளையாட்டுக்குக் குறுக்கே நிற்கவில்லை .

வள்ளி பொன்னம்பலத்தை முன்போல் பார்த்துப் பழகுவதற்கு முடியாமற் போய்விட்டது. “என்ன இருந்தாலும் கல்யாணம் ஆன பிறகுதான் ஸ்திரீ புருஷர்கள்! வயது வந்த ஒரு பெண்ணை இப்படி ஒரு புருஷனிடம் பழகவிடலாமா?” என்று ஒரு கிழவி கூறிவிட்டால் மானம் போய்விடுமல்லவா? அறிவு வாய்ந்த வள்ளியின் அன்பென்னும் ஏரியையும் பொன்னம்பலத்தின் அன்பாகிய ஏரியையும் இடை யிலே விவாகம் என்னும் ஒரு வாய்க்கால் வெட்டிப் பிணைத்துவிடவேண்டும். அநேகமாகக் கல்யாணம் முடிந்துவிடும். சொந்தத்திற்குச் சொந்தம்; வெகு நாளாகத் தடையில்லாமற் பழகியவர்கள் ; கல்யாண மாகும் பருவம். இவைகளை விட வேறு என்ன வேண்டும்? வள்ளி தன் ஆருயிர்க்காதலனை உலகமறிய அன்பனாக்கிக்கொள்ளும் காலத்தை ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்திருந்தாள். அவளுடைய மனம் குதூகலத் துடன் அந்த நாளுக்கு அப்புறம் நடத்தப்போகும் வாழ்விலே நீந்திக்கொண்டிருந்தது.

வள்ளியின் தாயும் தகப்பனாரும் இனிமேல் அவளுக்குக் கல்யாணம் செய்துவிடவேண்டுமென்று தீர்மானித்தார்கள். ரூபாய் பதினாயிரமாவது செல் வழிக்கவேண்டுமென்பது முதலியார் விருப்பம். போன வருஷத்திலேயே ஏதோ பேச்சுவரும்போது, பொன்னம்பலத்தினிடமே அவர், “வள்ளிக்குக் கல்யாணம் பண்ணினால் இருபதினாயிர ரூபாயாவது செலவழிப்பேன். மாப்பிள்ளை ஆவென்று வாயைத் திறக்க வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார். இந்த வருஷத்தில் அவருடைய உதாரக்கை பையில் மூவாயிரத்துச் சில்லறை ரூபாய்களைத்தான் மிச்சம் வைத்திருக்கிறது. அவர் சொன்ன இருபதினாயிரத் துக்குப் போவது எங்கே? பதினாயிரத்துக்குத்தான் வழியேது? ஆனாலும் அவர் பயப்படவில்லை. எப்படி யாவது ‘தகல்பாஜி’த்தனம் பண்ணி எண்ணாயிரம் சேர்த்து விடலாமென்ற தைரியம் இருந்தது. பணம் வரட்டுமென்று காத்திருக்க அவருக்கு மனமில்லை. பணம் தம் தயவை எதிர்பார்க்கவேண்டுமேயொழியத் தாம் பணத்தின் தயவை எதிர்பார்ப்பதே இல்லை யென்பது அவர் அடிக்கடி கூறும் வீர மொழி. பொன்னம்பலம் பி.ஏ., பரீக்ஷையில் தேறிவிட்டான்; வள்ளிக்கும் பதினாறு வயதாகிவிட்டது. இனி, தாமதிப்பது பிசகென்று அவருக்குப் பட்டது.

3

“அவன் கிடக்கிறான் பிச்சைக்காரப் பயல்!” என்று சொல்லிக்கொண்டே காலை வீசிச் செருப்பைக் கழற்றி எறிந்தார் திருவேங்கட முதலியார். அவர் வரவை அவருடைய மனைவியும் வள்ளியும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள். அன்றைக்குத்தான் பொன்னம்பலத்தின் வீட்டிற்குப் போய்க் கல்யாண விஷயத்தைப்பற்றிப் பேசிவருவதாகச் சென்றார் முதலியார். வந்தபொழுது அவர் சொன்ன கோப வார்த்தைகள் வள்ளிக்கும் அவள் தாய்க்கும் புரிய வில்லை .

“என்ன சமாசாரம்? போன காரியத்தைச் சொல் லாமல் என்னவோ பேசுகிறீர்களே” என்று கேட் டாள் முதலியார் மனைவி.

“காரியம் என்ன காரியம்? படித்து விட்டால் கவர்னர் வேலையே வந்துவிட்டதாகக் கனவுகாண் கிறது! சரியாகப் பிழைக்கத் தெரியாத பையனுக்கு என்ன முடுக்கு இனிமேல் இவன் வேலைக்குப் போய்ச் சம்பாதித்து நல்ல நிலைக்கு வந்தபோதல்லவா இவனை நம்பிப் பெண்கொடுக்கலாம்? ஏதோ பழகின பாவத் துக்குக் கேட்டால் சாமர்த்தியத்தை என்னிடமே காட்டுகிறான்.”

“என்ன! நீங்கள் யாரைப்பற்றி என்ன சொல் கிறீர்கள் என்று சொல்லக்கூடாதா?”

“யாரைப்பற்றி – எல்லாம் அந்த மகா – ள – ள – ஸ்ரீ பொன்னம்பல முதலியாரவர்கள் பி.ஏ., இருக்கிறாரே, அவரைப்பற்றித்தான்.”

அருகில் மறைந்து கேட்டுக்கொண்டிருந்த வள்ளிக்குச் சமாசாரம் என்னவென்பது தெரியாமல் வயிற்றில் புளியைக் கரைத்தது.

“ஏன் அவ்வளவு கோபித்துக் கொள்கிறீர்கள்? அவன் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேனென்று சொல்லுகிறானோ?” என்றாள் முதலியாரின் மனைவி.

“அப்படி ஒரேயடியாகச் சொல்லிவிட்டால் அவன் கௌரவம் போய்விடுமல்லவா! வள்ளியைவிட அவனுக்கு யாரோ தேவலோக ரம்பை ஐசுவர்யங்க ளுடன் வருவது கெட்டுப் போகிறதோ? எப் பொழுதும் யாரையும் பூரணமாக நம்பிவிடக் கூடாது.”

“அவன் என்ன நம்பிக்கைமோசம் செய்தான்?”

“இருபத்தையாயிரம் ரூபாய்க்கு ஒரு குறிப்புத் தந்திருக்கிறான். அவைகளை யெல்லாம் செய்தா லொழியக் கல்யாணம் செய்துகொள்ள முடியாதாம்! அந்த இருபத்தையாயிரம் இருந்தால் ஒரு கழுதை கூட ஒரு பெண்ணைத் தலையில் வைத்துக் கூத்தாடுமே இவன் என்ன? படித்துவிட்டோமென்ற கர்வம்!”

“விவரமாக விஷயத்தைச் சொல்லக்கூடாதா?”

“இன்னும் என்ன விவரம் வேண்டியிருக்கிறது? இங்கேயிருந்து அவர்கள் வீட்டுக்குப் போனேன். உன் அண்ணாவிடம் பேசினேன். ‘எனக்கு ஒன்றும் தெரியாது. இந்தக் காலத்தில் இந்தமாதிரி விஷயங் களில் பிள்ளைகளுடைய விருப்பத்தின்படியே விட்டு விடுவதுதான் நல்லது’ என்று யோக்யமாகச் சொல்லி விட்டார். அவனிடம் பேசினேன். பல்லை இளித்தான்; உபசாரம் சொன்னான். பதினாயிரம் ரூபாய் ரொக்க மாகக் கொடுக்க வேண்டுமாம்; வயிரக்கடுக்கன் மண்ணாங்கட்டி தெருப்புழுதி எல்லாம் பதினாயிரத் துக்குச் செய்யவேண்டுமாம். பார்த்தாயல்லவா உங்கள் அண்ணன் வீட்டுச் சம்பந்தத்தை ! நம்மேற் பிசகு. வேறு யாரையாவது போய்க் கேட்டிருந்தால் சலாம் போட்டுக்கொண்டு கல்யாணம் செய்து கொள்வான்.”

“நீங்கள் தான் பதினாயிரத்துக்குச் செய்வதாக முன்பே சொல்லியிருக்கிறீர்களே.”

“லக்ஷரூபாய்க்குச் செய்வேன். அது என் இஷ்டம். இவனா கேட்கிறது? பணத்தையா கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறான்? இவனுடைய பேராசை இப்பொழுதுதானே தெரிகிறது!”

“சரி, என்னதான் செய்யப்போகிறீர்கள்?”

“என்ன செய்வது? நானாக ஒருவன் பேச்சுக்கு அடங்கி நடப்பதென்பது இந்த ஜன்மத்தில் இல்லை. அவ்வளவு ரூபாயும் இப்பொழுது இல்லை. இவ்வளவு பணப்பைத்தியம் பிடித்தவன் கல்யாணம் ஆனபின்பு நம்முடைய பெண்ணை நன்றாக வைத்திருப்பா னென்று எனக்குத் தோன்றவில்லை. எடுத்ததற் கெல்லாம் ‘பணம் வாங்கி வா’ என்று துரத்தியடித் தாலும் அடிப்பான்.”

“அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். சட்டென்று வெட்டிப் பேசிவிட்டால் அப்புறம் ஒட்டாது . வள்ளிக்காகவாவது பார்க்க வேண்டாமா? இவளுடைய சந்தோஷத்தை நாம் கெடுக்கலாமா?”

தூண்மறைவிலிருந்து. விக்கி விக்கி அழுங்குரல் கேட்டது . வள்ளிதான் அங்ஙனம் அழுதாளென் பதைச் சொல்ல வேண்டுமா? முதலியாருக்குக் கொஞ்சம் கோபம் ஆறியது.

“சட்! பயித்தியம்! எதற்காக நீ அழுகிறாய்? எங்களுக்கு உன் சந்தோஷத்தில் கருத்தில்லையா?” என்றார் முதலியார்.


பின்பு சில நாட்களாக வியாபாரப்பேச்சு நடந்தது. பொன்னம்பலம் இருபதினாயிரத்திலிருந்து பதினை யாயிரத்துக்கு இறங்கிவந்தான். ஆனாலும் அவன் மிடுக்கு மட்டும் வரவர அதிகமாயிற்றே ஒழியக் குறையவேயில்லை. முதலியாருக்கு ரோஷம் பொறுக்க முடியவில்லை; ‘சீ இனி இந்தப் பயலிடம் கெஞ்சு வதில்லை’ என்ற உறுதி கொண்டுவிட்டார்.

பாவம்! வள்ளியின் உயிர்தான் தேய்கிறது. தன் அருமைக்காதலன் இங்ஙனம் நடந்து கொள்வதை அறிந்து மிகவும் வருந்தினாள்; அவன் காலடியில் விழுந்து கெஞ்சிக் கேட்கலாமென்று நினைத்தாள்; கடிதமாவது எழுதி யாரிடமாவது அனுப்பலாமென்று எண்ணினாள். ஒன்றும் முடியவில்லை.

திருவேங்கட முதலியாருக்கு அந்த வருஷ முடி வில் இருபத்தையாயிர ரூபாய் லாபம் வந்தது. “கையில் தான் பணம் இருக்கிறதே; அவனுக்கு மனங்குளிரப் பண்ணிவிட்டு வள்ளியைக் கட்டிக்கொடுங்களேன். வள்ளி நமக்கு வேண்டுமென்றிருந்தால் அது செய் யுங்கள். அவள் உடம்பு பார்க்கக்கூடியதாக இல்லை. பெண்கள் மனசைப் புண்படுத்தும் பாவம் பொல்லாதது” என்று தம் மனைவி கூறுவதைக் கேட்ட முதலியார் பேசாமல் போய்விட்டார். பொன்னம் பலம் தம் இஷ்டப்படி நடப்பதாக வந்தாலொழியக் கல்யாணம் நடத்துவதில்லையென்ற முரட்டுப் பிடிவாதத்தில் அவர் ஈடுபட்டிருந்தார்.

4

இரண்டு வருஷகாலம் ஆயிற்று. அதற்குள் எத்தனை மாறுதல்கள் அதிக ஆசையினால் திருவேங்கட முதலியார் ஒரு பெரிய பாங்கியை ஏற்படுத்தி நஷ்டம் அடைந்தார். சொந்தக் கம்பெனி யும் சீர்குலைந்தது. இரண்டாவது வருஷத்தின் முதலில், ஆறுமாதகாலத்தில் அவருடைய உச்சநிலை தரைமட்டமாய்விட்டது. ஒன்பது மாதத்திற்குப் பிறகு பழைய நகைகளை விற்றுச் சாப்பிட ஆரம் பித்தார். பன்னிரண்டாவது மாதத்தில் புடைவை களையும் விற்றுவிடத் தொடங்கினார்.

வள்ளி உலர்ந்த கிழங்காகிவிட்டாள். அவளுக்கு மனம் என்பது ஒன்று இல்லாமலே போய்விட்டது. ஆசையெல்லாம் வீணாகப் போய் அடுத்தபடி மரணம் ஒன்றுதான் பரிகாரம் என்ற நிலையில் அவள் இருக் கிறாள். அவளுடைய காதல் அணியப்படாத வைரத் தைப் போலப் புறக்கணிக்கப்பட்டுக் கிடந்தது; ஆனாலும் நெகிழவில்லை; மூச்சுள்ளவரையில் நெகி மாது. வைரத்துக்கு நெகிழ்ச்சி ஏது?

5

அன்றுதான் அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு புதிய முறை தொடங்கப்படுகிறது. அதுவரை உண்டுவந்த அரிசிச் சோற்றை விட்டுக் கம்பங்களியைத் தின்னத் தொடங்கினர். அவர்கள் இருந்த நிலையென்ன வந்த நிலையென்ன இந்த வறுமையில் கல்யாணம் எங்கே! காதலன் எங்கே! ஸர்வம் மித்யை – எல்லாம் சொப்பனம்.


அந்த வீடு ஒரு சந்தில் உள்ள கூரை வீடு. வாசலில் என்றும் இல்லாதபடி மோட்டார் ஊதுகுழற் சப்தம் கேட்டது. உயர்ந்த உடை அணிந்து கொண்ட கோலத்துடன் உள்ளே ஒருவர் வந்தார். ”மாமா” என்ற தழுதழுத்த குரலோடு அவர் உள்ளே நுழைந்தார். முதலியார் மெல்ல எழுந்து நிமிர்ந்து பார்த்தார். அவருக்குத் தாம் பார்ப்பது உண்மையோ பொய்யோ என்ற ஸந்தேகம் வந்துவிட்டது; அவர் தம் எதிரே பொன்னம்பலத்தையல்லவா காண்கிறார் !

“பொன்னம்பலமா? எங்கேயப்பா வந்தாய்? இந்தத் துர்ப்பாக்கிய நரகவாசிகளிடத்துக்கு நீ வரலாமோ?” என்று ஹீனஸ்வரத்தில் முதலியார் சொல்லும் பொழுதே துக்கம் மேலே பேசமுடியாத படி அவர் தொண்டையை அடைத்துக்கொண்டது.

“நான் என்னுடைய வள்ளியைக் கல்யாணம் செய்துகொள்ள வந்திருக்கிறேன். இது சத்தியம். தாங்கள் ஒன்றும் யோசிக்க வேண்டாம்.”

“வள்ளீ” என்று ஒரு வீரிட்ட சப்தம் போட்டுக் கொண்டு முதலியார் மூர்ச்சையாகி விழுந்துவிட்டார். அவருக்கு உண்டான உணர்ச்சிமிகுதி அவரை வீழ்த்திவிட்டது. ‘வள்ளியையுமல்லவா நமது தரித் திரத்தில் இழுத்துக் கொண்டோம்! அப்பொழுதே அவனை ஸமாதானப்படுத்தி அவளைக் கட்டிக்கொடுத் திருந்தால் அவள் நன்றாக இருப்பாளே! நம் பெண் ணுக்கு நாமே பகைவனாக வந்தோமே!’ என்று நாள் தோறும் எண்ணி எண்ணி மனம் புண்ணான அவருக்கு அந்த உணர்ச்சி உண்டாவது ஆச்சரியம் இல்லை யல்லவா?

“அத்தை, வள்ளி எங்கே?” என்று அருகில் விம்மி விம்மி அழுது கொண்டிருந்த அவள் தாயைக் கேட்டான் பொன்னம்பலம். அவள் பேசமுடியாமல் பக்கத்திலிருந்த ஓர் அறையைச் சுட்டிக்காட்டினாள்.

“வள்ளீ!” என்று கத்திக்கொண்டு உள்ளே போனான் பொன்னம்பலம். அவன் போட்ட சப்தத் தால், களைத்துப் போய்த் தன்னை மறந்து படுத்திருந்த வள்ளி திடுக்கிட்டெழுந்தாள்; பார்த்தாள்; ‘சீ! என்ன சொப்பனம்? அவர் எதற்கு இங்கே வருகிறார்?’ என்று, கலங்கிய கண்களை மூடிப் படுக்கத் தொடங்கினாள்.

“வள்ளீ! சொப்பனமல்ல. நான் தான், உன் னுடைய பொன்னம்பலம். உன்னை இந்த நிலையில் பார்த்தும் கண்ணைப் பிடுங்கிக்கொள்ளாத பாதகன் பொன்னம்பலம். வள்ளி! என்னைப் பார்.”

வள்ளியின் கண்கள் திறந்தன. அழுத கண்ணுடன் நின்ற பொன்னம்பலம் கீழே தொப்பென்று உட்கார்ந்தான். வள்ளி அவன் மடியில் விழுந்தாள். அந்த அறை முழுதும் கண்ணீர் மயமாயிற்று.


பொன்னம்பலம் வேறு பரீக்ஷையொன்றில் தேர்ச்சி பெற்று மாதம் ஐந்நூறு ரூபாய் சம்பளத்தில் ஆந்திரதேசத்தில் உள்ள ஓர் ஊருக்குப் போனான். அந்தக் காலத்தில் முதலியார் மிடுக்குடன் இருந்தார். பொன்னம்பலம் போனது முதல் தன் தகப்பனாருக்கு அவர்களைப்பற்றி விசாரித்து எழுதுவான். அவரோ ஒன்றும் எழுதுவதில்லை. ஊருக்குப் போகும் போது பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்து விட்டான் அவன். ஒரு வருஷங்கழித்து விடுமுறைக்கு வந்தான். திருவேங்கட முதலியாரின் கேவலநிலை தெரிந்தது. தன்னுடைய வள்ளியைப் பெற்றுக்கொள்வதற்கு ஓடி வந்தான்; கண்டான் ; வருந்தினான்.


அந்த ஆனி மாதம் பொன்னம்பலத்திற்கும் வள்ளியம்மைக்கும் மிகச் சிறப்பாகக் கல்யாணம் நடைபெற்றது. எல்லாச் செலவும் பொன்னம்பலமே போட்டுக் கொண்டான்; கல்யாணம் ஆன ஒரு மாதத்தில் வள்ளியையும் அவளுடைய பெற்றோர் களையும் அழைத்துக்கொண்டு ஆந்திரதேசம் போய் விட்டான்.

6

“நான் இறந்து போயிருந்தால் என்ன செய் திருப்பீர்கள்?” என்றாள் வள்ளி.

“எனக்கும் விஷம் இருக்கிறது” என்றான் பொன்னம்பலம்.

“அவ்வளவு தூரம் கல்பனசுடையவர்களென்று நான் உங்களை நினைக்கவேயில்லை.”

“அதை ஏன் திருப்பித் திருப்பிக் கூறிப் புண் படுத்துகிறாய்? விஷப்பரீக்ஷை பண்ணி மோசம் போய் விட்டேன். ‘இவர் ஊதாரிச் செலவு பண்ணுகிறார். ஒரு காலத்தில் இவர் திண்டாடும்படி நேரும்’ என் பதை முன்பே நான் எண்ணினேன். பின்பு அப்படி ஒரு காலம் வருமென்று எனக்கு நிச்சயமாகத் தெரியும். அதற்கு என்னடா வழியென்று பார்த் தேன். ‘இருபதினாயிரம் ரூபாய் இவரிடம் ஏதாவது சாக்குச் சொல்லிப் பெற்றுக்கொண்டால் பின்பு உதவி செய்யலாம்’ என்று எண்ணினேன். நாமொன்று நினைக்கத் தெய்வமொன்று நினைத்துவிட்டது. அவர் ஒரே முரடராக இருந்தார். நானும் வேலைக்கு வந்தேன். ஊரிலிருந்து உங்களைப்பற்றி ஒன்றும் சமாசாரம் தெரியவில்லை. ஆனாலும் இவ்வளவு சீக்கிரத்தில் இந்த நிலைக்கு வருவாரென்று நான் எண்ணவில்லை. ஊருக்குப் போய் இறங்கினேன். என் தகப்பனார் – முன்பு ஒரு வரிகூட எழுதாதவர் – சாவகாசமாக உங்கள் சரித்திரத்தைச் சொன்னார். நாம் நினைத்ததெல்லாம் வீணாகிவிட்டதே! முழுவதும் போவதற்கு முன் போய் ஏதாவது செய்யலாமா வென்று பார்க்கலாம்’ என எண்ணி ஓடிவந்தேன். என்னுடைய வள்ளியை உயிரோடே பார்க்கும் மட்டாவது என் அதிருஷ்டம் இருந்ததே!”

திருவேங்கட முதலியாரிடமிருந்து கல்யாணத்தில் பெற்றுக்கொள்வதைப் பின்பு சமயத்தில் உதவலா மென்று பொன்னம்பலம் எண்ணிய எண்ணமே இவ்வளவுக்கும் காரணமாயிற்று. இப்பொழுதுதான் என்ன? விசாகபட்டணத்தில் முதலியார் பொன்னம் பலம் கொடுத்த ஐயாயிர ரூபாயை முதலாக வைத்து ஆரம்பித்த அச்சு நிலயம் அவருடைய அஸஹாய் சூரத்தனத்தால் நல்ல நிலைக்கு வந்திருக்கிறது. அதற்கும் பொன்னம்பலந்தானே காரணம்? அவனுடைய விஷப்பரீக்ஷை எவ்வளவோ ஸங்கடத்தை உண்டாக்கினாலும் அவனுடைய உண்மைக் காதலையும் நிரூபித்துவிட்டது.

– கலைஞன் தியாகம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 1941, கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *