விலங்கு…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 23, 2023
பார்வையிட்டோர்: 2,396 
 
 

“ஏ ! புள்ள..! மகா ! உன்னிய எங்கிட்டெல்லாம் தேடிப்புட்டு வாரேன்..! இங்கனக்குள்ள குந்திகிட்டு ஊர் நாயம் பேசிக்கிட்டு திரியுரவ ! உம் பொழப்பு நாறிடும்போலயே..! வெரசா எந்திரிச்சு வீட்டுக்கு போ…!”

“என்ன வெசயம்..? நானு இப்பத்தான் சோலியெல்லாம் முடிச்சுப் போட்டு சித்த நேரம் வெத்தலய உள்ள தள்ளிக்கிட்டு இருக்கேன்.அது பொறுக்கலியா இந்த பொறப்புக்கு…! இன்னா பொல்லாத தல போவுற காரியம்..? எவனாவது லச்ச ரூபாய வச்சுகிட்டு வாசக்கதவ தட்டுறானா…?”

“ஆனாலும் உனக்கு பேராசதான் போ…! உம் புருசன் இருக்கிற லச்சனத்துக்கு அது ஒண்ணுதான் கொறையா நிக்குது…! போலீசு புள்ள ! போலீசு..! அதுவும் பொம்பள போலீசு….நீ எங்கிட்டு இருந்தாலும் , தேடிக் கண்டியார சொல்லி ஆளனுப்பிட்டு , டீ குடிக்க அண்ணாத்த கடையண்ட நின்னுகிட்டு இருக்கு..! ரொம்பவே சிலுப்பிகிட்டு திரியாத..! உம் புருசன் என்ன ஏழரையக் கூட்டி வச்சிருக்கானோ…?”

“த்த்த்தூ… பேமானி….”

வெற்றிலையை அவன் மீது காரித்துப்புவதாக நினைத்து துப்பினாள். புடவையை இழுத்து செருகிக்கொண்டு , ஓட்டமும் நடையுமாக வீட்டை , வீடு என்ன…? குடிசையை நோக்கி விரைந்தாள் மகேசுவரி…!

மகா எனும் மகேசுவரி பிறந்த நேரம் சரியில்லை… ஜோசியரிடம் ஜாதகமா பார்த்தார்கள்..?? அக்கம்பக்கத்து மனிதர்களே அதைக் குறித்து விட்டார்களே !

“வயத்துல பிள்ளையக் கொடுத்து போட்டு எங்கடி தொலஞ்சான் உம்புருசன்?”

கனகாம்பரம்பரத்துக்கு அவன் எங்கே போனான் என்று தெரிந்தால்தானே !

“அவ ஜாதகம் அப்பிடி…! அப்பன் மொகம் தெரியாம வளரணும்னு அவ தலையெழுத்து…! தனியாளா வளக்கணும்னு உனக்கு விதிச்சிருக்கு…! “

மகா எவ்வளவு வேலை செய்தாலும் கனகாம்பரம் வாயிலிருந்து ஒரு நல்ல வார்த்தை வராது..

‘துக்கிரி’ , ‘தொடப்பகட்ட’ ‘மூதேவி’ இந்த பெயரில்தான் அர்ச்சனை தினம் தினம்..! மகேசுவரி என்ற பெயரே அவளுக்கு மறந்து போனது….!

தனபாலன் அவள் காதில் ‘மகா‘ என்று கிசுகிசுக்கும் வரையில்….

***

மகா எதையும் விளையாட்டாகவே எடுத்துக்கொள்ளும் குணம் கொண்டவள்.

‘போவுது போ! ஆத்தாக்காரி பெரிசா என்ன சொகத்த கண்டுபுட்டா..? புருசன் போன வெசனமெல்லாம் எம்மேல தானே பாயுது…கெடக்கட்டும்..விடு….!’

என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொள்வாளே தவிர , அம்மா மேல் பிரியம் என்பதே இல்லாமல் போயிற்று.

அதுவும் கனகாம்பரத்துக்கு வாய் காதுவரை நீளும்.அவள் வாயில் விழுந்துவிட்டால் மென்று , கடித்து துப்பாமல் விடமாட்டாள்.

வாயை மூடிக்கொண்டு , இல்லை காதையும் மூடிக்கொண்டு இருப்பதே உத்தமம் என்பதை புரிந்து கொண்ட மகா வேலையை முடித்துவிட்டு ஒரு நிமிஷம் கூட வீட்டில் தங்க மாட்டாள்..

பள்ளிக்கூட படிப்பும் ஆறாவது வரைதான்.

ஒரு திருவிழா, சாமி ஊர்வலம் , கடைகண்ணி விடமாட்டாள்..கையில் வளையல் வாங்கி அடுக்கிக் கொள்வதுதான் அவளுக்கு இருந்த ஒரே ஆசை..

“அந்த பச்சை கலரு வளவி எம்புட்டு…?”

“சல்லிசுதான்! பத்து ரூவா…!”

“என்னாது..? ஒரு வளவி பத்து ரூவாயா..? இது என்ன பகல் கொள்ளையாவுல்ல இருக்குது…?”

“ஏம்புள்ள..? வெவரம் புரியாத பொண்ணாயிருக்கியே…. இப்படி ஏமாளியா இருந்தா பயலுக உந்தலையில மொளாகாயவுல்ல அரச்சு தேச்சுடுவாக…! ஒரு டசன் பிள்ள..!”

“அதானே பாத்தேன்..எடுங்க…”

“கைய நீட்டு….மாட்டி விடுதேன்….”

“வளையல்காரன்ன கையத் தொடணும்னு எழுதி வாங்கி வந்திட்டீங்க போலியே…நானே போட்டுக்கிறேன்..”

“அப்படி பேசாத.. வளவி விக்கிறவரு அண்ணன் மொற தெரிஞ்சுக்க…கைய நீட்டு…”

கையை நீட்டினாள் மகேசுவரி….

“அந்த செவப்பு வளயல எடுங்க…!”

பின்னாலிருந்து கரகரகரத்தது ஒரு ஆணின் குரல்…”

“ஏந்தம்பி..! இந்த பொண்ணு வாங்கிட்டு இருக்கில்ல…என்ன அவசரம்..? யாருக்கு வளவி…? சம்சாரத்த கூட்டி வரலாமில்ல…?”

“கல்யாணமே இனிமேத்தான்… வளவி கல்யாண பொண்ணுக்குத்தான்..செவத்த கைக்கு செவப்பு வளயல் ..! எப்படி…?”

திரும்பிப் பார்த்தாள் மகா… அரும்பு மீசை வாலிபன்..ஷோக்கு பேர்வழி போலத் தெரிந்தான்…மகாவைப் பார்த்து பல்லிளித்தபோதே அவளுக்கு புரிந்து விட்டது…

***

கிணற்றில் தண்ணீர் மொண்டு தொட்டியை நிரப்பிக் கொண்டிருந்தாள் மகா… உச்சி வெயில்.. கையில் சிவப்பு கண்ணாடி வளையல்கள் சூரிய ஒளியில் சிவப்பு முத்துக்களை வாரி வாரி இறைத்துக் கொண்டிருந்தது .வர்ண ஜாலம் காட்டியது….

ஒருநிமிடம் வாளியைக் கீழே வைத்தவள் , மரத்தடியில் இருந்த துவைக்கும் கல்லில் உட்கார்ந்தாள்..

வளையல்களை குழந்தையைத் தடவுவது போலத் தடவி மார்போடு சேர்த்து அணைத்தவளின் உதடுகள் , ‘தனபால்..தனபால்‘ என்று முணுமுணுத்தன.

***

வளையல் கடையில் மீசைக்காரனைப்பார்த்து இரண்டு நாள் இருக்கும்… தோட்டத்தில் காய்கறி வாங்கிக் கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்த மகாவை வழிமறித்தான் அந்த சைக்கிள்காரன்….அதே அரும்பு மீசை அழகன்..

“ஏய் ! என்ன..? நடுரோட்ல நிறுத்தி வம்பு பண்ற அளவுக்கு தெகிரியம் வந்திடிச்சா….! மாறி நில்லு…!”

“மகா…தயவுபண்ணி நான் சொல்லுறத கேளு….வம்பு பண்ண வரல…”

பேரை வேறு தெரிந்து கொண்டானா..? கில்லாடிதான்…

“இல்லாம.. வளவி விக்க வந்தீங்களாக்கும்…?”

மகா இதுவரை யாரிடமும் , அதுவும் முன்பின் தெரியாத வாலிபப் பையனுடன் இப்படி இயல்பாகப் பேசியதே இல்லை.

அவனுடைய குரலில் இருந்த வசீகரமா , அல்லது கனகாம்பரத்தின் வசவுச் சொற்களைக் கேட்டு கேட்டு அலுத்துப் போன காதுகளுக்கு தேன் வந்து பாய்ந்ததா தெரியவில்லை…

இன்னும் அவனுடன் பேசிக் கொண்டிருக்கமாட்டோமா என்று மனசு ஏங்கியது…

“விக்க வரல…கையில பூட்டி அழகு பாக்க வந்தேன்..கைய கொஞ்சம்….”

அவனுக்கு சொல்லி முடிக்க பயமாயிருந்திருக்கவேண்டும்…

என்ன தோன்றியதோ தெரியவில்லை.. சட்டென கையை நீட்டி விட்டாள்…

கையிலிருந்த பச்சை வளையலை ஒவ்வொன்றாக கழட்டினான்..காகிதத்தில் பொதிந்து வைத்திருந்த சிவப்பு வளையல்களை பொறுமையாக எடுத்து..

“மகா..நானு போட்டுவிட்டா ஊரக்கூட்ட மாட்டியே..!”

“ம்ஹூம்….”

தொடர்கதையானது அவர்களது சந்திப்பு..

கனகாம்பரம் காதுகளுக்கு எட்டாமல் போகுமா…? ‘விட்டால் போதும் ‘ என்கிற மாதிரி பாராமுகமாயிருந்தாள்..

தனபாலுக்கு தூரத்து சொந்தம் ஒரு அத்தைக்காரி மட்டும்தான்…கோயிலில் வைத்து தாலி கட்டினான்…

அன்று இரவே வீட்டுக் கதவைத் தட்டியது போலீஸ்..முதலிரவை லாக்கப்பில் கொண்டாடிய முதல் மாப்பிள்ளை மகா புருஷனாகத்தான் இருக்கும்….! அவனுக்கு அதுதானே மாமியார் வீடு…!

***

தனபாலன் மகாமேல் உயிரையே வைத்திருந்தான்..வெறுங்கையுடன் அவளைப் பார்க்க வந்ததேயில்லை. இரண்டு முறை புதுப்புடவை , கழுத்துக்கு மாலை என்று அவளை அசரடித்து விட்டான்.

“மாமோவ்..இது வெல எம்புட்டு இருக்கும்…? எதுக்கு மாமா இதெல்லாம்..? நீ மகான்னு கூப்பிடயிலயே எம்மனசெல்லாம் நெறஞ்சு கெடக்குது…இது வேற இன்னாத்துக்கு….? ஆமா..! நீ அப்பிடி என்ன வேலதான் பாக்குற..?கவர்னரு வேலை கணக்காவுல்ல வாரி இறச்சுக்கிட்டு திரியுற? எப்பவும் எம்பொடவத் தலப்ப பிடிச்சுகிட்டு இல்ல சுத்துற..? எப்போ வேலக்கி போற? வர…? ஒரே மர்மமாவுல்ல இருக்குது….?”

“ஏன் மகா..? உனக்கு இன்னம் என்னவெல்லாம் வாங்கித்தரணுமுன்னு ஆசப்பட்டுகிட்டு கிடக்கேன்…என்னப் பிடிச்சிருக்கா இல்லியா..? அதமட்டும் சொல்லு….”

அவளுக்கு எல்லாமே பிடித்திருந்தது.. ஆனால் ஒன்று மட்டும் புரிபடவில்லை..மாதத்தில் பத்து நாட்கள் சேர்ந்தமாதிரி காணாமல் போய்விடுவான். வரும்போது முகம் வாடியிருக்கும்… கையில் காசு புரள எப்படியும் இரண்டு மூன்று நாட்களாகும்.

கேட்டு , கேட்டு அலுத்துவிட்டாள்…

பவுனுதான் ஒரு நாள் அவள் காதில் கிசுகிசுத்தாள்…

“மகா..உங்காளு சரியில்லடி…?”

“ஏன்.. உன் கையப் பிடிச்சு இழுத்தானா…”

“கையைத் தொட்டுத் தான் பாக்கட்டுமே..”

“வெவரத்த சொன்னாத்தானே தெரியும்..?”

“வெவரம் என்ன வெவரம்…? மத்தவங்க பையில இல்ல கை வரிசைய காட்டுறான்..?”

“பிக்பாக்கெட்டா….?”

“மகா..உனக்கு கற்பூர புத்திதான்.. ஆனாலும் அவனப்போயி நம்பிகிட்டு திரியுற…களவாணிப்பய..! போலீசு அடிக்கடி அவன பிடிச்சுட்டு போகுது.. முட்டிக்கு முட்டி தட்டி தொரய லாக்கப்புல வச்சு பூட்டுது போல…மகா.. உனக்கு வேண்டாண்டி அவனோட சாவாசம்…விட்டுப்புடு..உன்ன நடுத்தெருவுல நாற விடுவான் பாவி பய பிள்ள…!”

எல்லாம் புரிந்த மகாவுக்கு ஏன் இது மட்டும் மண்டையில் ஏற மறுக்கிறது…?

மறக்க மனம் கூடுதில்லயே…!

ஆத்தாக்காரி மீது தான் மொத்த ஆத்திரமும்..அம்மா சரியிருந்தால் கண்ட பொறுக்கி பின்னால் சுற்ற விட்டிருப்பாளா…?

திருடனாவேயிருக்கட்டும்… வளையல் பூட்டிவிட்ட கையால் தான் தாலி வாங்கிக் கட்டிக் கொள்வது என்ற வைராக்கியத்தில் இருந்தாள் மகேசுவரி….

***

கையிலிருந்த சிவப்பு கண்ணாடி வளையல்கள் கண்ணை உறுத்தியது.. ஒவ்வொன்றாகத் கழட்டினாள் .. ஒரு பெட்டியில் பூட்டி பத்திரப்படுத்தினாள்…

“மாமா…யாருக்கு கெடைக்கும் இந்த பாக்கியம்? மொத ராத்திரியே உன் திருட்டு புத்தியக் காட்டிப்போட்ட இல்ல…? உன் கையில என்னிக்கு விலங்கு மாட்டுறத நிப்பாட்டுறியோ அன்றைக்குத்தான் இந்த வளையல் என்கையில ஏறும்…பாப்பம்.. என்ன நடக்குதின்னுட்டு…?”

கனகாம்பரத்துக்கு சூடு சொரணை இருப்பதாகத் தெரியவில்லை..ஒவ்வொரு முறையும் தனபாலன் வெளியே வரும்போது அவனுக்கு தடபுடலாக கறியும் மீனும் ஆக்கி வக்கணையாக பரிமாறுவாள்.. நெற்றியில் வீரத்திலகம் இடாத குறைதான்…

எல்லாம் அவன் வாங்கி வரும் ஒரு கவுளி வெற்றிலைக்கும் கும்பகோணம் புகையிலைக்கும் மட்டுமல்ல…. அந்த ஜர்தா பீடாவுக்கும்தான்.. அதற்கும் மேலே…!அந்த சரக்கு…!அது போதுமே அவளுக்கு…!

மகாவும் ரோஷம் கெட்டுத்தான் போய் அவன் பக்கத்தில் படுப்பாள்…அவன் திருந்துவான் என்கிற நம்பிக்கைதான்….

இதற்கிடையில்தான் சேற்றில் மலர்ந்த செந்தாமரையாய் அவளை மகிழ்விக்க வந்தான் முத்துமணி….

திருடன் மகன்…

***

மகாவுக்கு இப்போதெல்லாம் ஒரே சிந்தனைதான்..

முத்துமணியை யாரும் திருடன் மகன் என்று அவன் காதுபட கூற விடக்கூடாது…

“அம்மோவ்..முத்துகிட்ட அவுங்கப்பனப்பத்தி ஏதாச்சும் ஒண்ணுகெடக்க ஒண்ணு சொன்னன்னு வையு ,. பிள்ளையத் தூக்கிட்டு கண்காணம போயிருவேன்….”

பள்ளிக்கூடம் போகிறவரையில்தான் பொத்தி பொத்தி வைக்க முடிந்தது…

நாலைந்து வருடம் பிரச்சனையில்லாமல்தான் கழிந்தது…

படிப்பில் படு சுட்டியாயிருந்தான் முத்து…எல்லா குழந்தைகளும் ‘ முத்து..முத்து…’ என்று அவனையே சுத்தி சுத்தி வந்தார்கள்… மகாவுக்கு நெஞ்சு கொள்ளாத பெருமை..

பையன பெரிய போலீசு ஆபீசராக்கணும்.. அப்பன மாதிரி திருட்டுப்பயலுகள வெளியில நடமாடவே விடக்கூடாது.

தனபாலனுக்கு முத்துமேல் கொள்ளை பிரியம்..

எப்போதாவது வந்தாலும் அப்பா தன்மீது காட்டும் பிரியத்தில் முத்து உச்சி குளிர்ந்துவிடுவான்…

முத்துவுக்கு எட்டு வயது இருக்கும். அவனை பள்ளிக்கூடம் அனுப்பிவிட்டு துணி வைக்க பின்கட்டுக்கு போனவள் வாசலில் ஏதோ சத்தம் கேட்கவே கையில் சோப்பு நுரையுடன் எட்டிப்பார்த்தாள்..

“ ஐய்யோ..என்னாச்சு என் பிள்ளைக்கு..சட்டையில ரத்தம்.. நெத்தியில கட்டு..மவனே..ராசா…”

“அம்மா.பயப்படாதீங்க..வகுப்புல யாரோ ஒரு பையன் முத்துவ ஏசிப்புட்டான்… முத்துவும் கை ஓங்கிட்டான்…அந்த பையன் முத்துவ தள்ளிவிட்டதில ஒரு சின்ன காயம்..ஆசுபத்திரி போய் ஊசியெல்லாம் போட்டிருக்கு.. ஒரு நாளு ரெஸ்ட் எடுத்தா போதும்..பத்திரமா பாத்துக்குங்க…”

டீச்சர் மேரி எல்லா விவரமும் சொல்லிவிட்டுத்தான் போனாள்…

“ஏம்மா..எங்கப்பா திருடனா…? களவாணிப்பய பிள்ளன்னு சொல்லி சிரிச்சானுங்கம்மா….!”

குழந்தை தேம்பி தேம்பி அழுதான்..

மகா அப்படியே தலையில் கையை வைத்துக் கொண்டு பிரமை பிடித்தவள் போல அரற்றினாள்….

“சொல்லும்மா…”

உலுக்கினான் முத்து..

****

முத்துவிடம் உடைத்துக் கூறவேண்டிய நேரம் வந்துவிட்டது..

“அம்மா..அப்பா பாவம்மா..! இந்த மொற அப்பா வரட்டும்.நானும் நீயும் அப்பாகிட்ட சொல்லி வேற ஏதாச்சும் வேல பாக்கச் சொல்லுவோம்..போலீசு கிட்ட எத்தினி வாட்டி அடிவாங்கியிருக்கும்…?நானு சொன்னா அப்பா கேப்பாரு…

நானு படிச்சு முடிச்சு வேலைக்கு போயி அப்பாவ வீட்ல உக்கார வச்சு சோறு போடுவேம்மா…நீ வேணா பாரு…”

முத்துவை இழுத்து அணைத்து வெறி தீர முத்தமிட்டாள் மகா….

தனபாலன் ஒன்றும் மாறுவதாய்த் தெரியவில்லை..

ஏதோ பையன் தலையெடுப்பான் என்ற நம்பிக்கையில்தான் மூச்சை இறுக்கிப் பிடித்துக் கொண்டு உயிர் வாழ்கிறாள் மகா…

அவளைப்பார்த்தே ஆகவேண்டும் என்று போலீஸ் ஏன் பிடிவாதம் பிடிக்கிறது? இதில் வேறு ஏதோ விவகாரம் இருக்கவேண்டும்…?

வாசலில் காக்கிசட்டைக்காரி நின்றிருந்தாள்…

“வணக்கம் சார்… நான்தான் மகா… என்ன கூட்டியாரச் சொல்லி ஆள் விட்டு அனுப்பினீங்களாமே…ஓட்டமா ஓடியாரேன்.. என்ன புதுசா வில்லங்கம் பண்ணிப்புட்டானா எம்புருசன்…?”

“உம்புருசன் கதை இருக்கட்டும்.. நான் வந்த விசயமே வேற…முத்துமணிங்கிறது யாரு…?”

“முத்துமணியா..? என்ன சொன்னீங்க…? எம்மவன் முத்துவா…?”

முத்து உன்னியும்தேடி போலீசு வர ஆரம்பிருச்சா…? ஐய்யோ..நான் பாவி..! அப்பனுக்கு பிள்ள தப்பாம பொறந்திருக்கானா…?

மடேரென்று தரையில் சாய்ந்தாள் மகா…

***

மயக்கம் தெளிந்து உட்கார்ந்தாள் என்னென்னவோ பிதற்ற ஆரம்பித்தாள்..

“அம்மா.. கொஞ்சம் நிறுத்து…! ‘முத்துமணின்னு ‘ பேரத்தானே சொன்னேன்…அதுக்குள்ள ஊரக்கூட்டி ஒப்பாரி வச்சிட்டியே….எந்திரிச்சு உக்காரு..

யாராச்சும் இந்த அம்மாவுக்கு ஒரு சொம்பு குடிக்க தண்ணி குடுங்க… எல்லாம் சந்தோச சமாச்சாரம் தான்…! போய் உள்ளதுக்குள்ள ஒரு நல்ல சீலயா எடுத்து கட்டிகிட்டு என்னோட நட ஸ்டேஷனுக்கு….!”

“அம்மா..தாயி..கையெடுத்து கும்பிடறேன்…பூடகப்பேச்செல்லாம் கேக்குற நெலமையில நானு இல்ல…சொல்லுதாயி….”

“மகா..எம்மேல நம்பிக்கையிருந்தா எம்பின்னாடி வா.. பெரிய ஆபீசரே உனக்காக காத்துகிட்டு இருக்காரு..நட வெரசா…”

“ஏண்டி மகா..இன்னா டவுட்டு உனக்கு..?ஆபீசர காக்க வச்சிப்புட்டு இங்கனக்குள்ள பஞ்சாயத்து பண்ணிகிட்டு திரியுற.. கெளம்பு.. நானும் வாரேன்…”

“வாங்கம்மா..யாரு வேணாலும் வரலாம்…”

***

போலீஸ் ஸ்டேஷன் போவதற்குள் மகா உயிர் போய்ப் போய் வந்தது…அந்த போலீஸ் பெண்மணி உள்ளே நுழைந்ததும் விரைப்பாக ஒரு சல்யூட் அடித்ததிலிருந்து அவர் பெரிய ஆபீசராயிருக்கவேண்டுமென்று மகா ஓரளவுக்கு புரிந்து கொண்டாள்..

“இவங்கதான் முத்துமணி அம்மா..மகேசுவரி….”

“ஒரு நாற்காலி கொண்டா…அம்மா உக்காருங்க..”

“இருக்கட்டுங்க…..”

இதுவரை போலீஸ் ஸ்டேஷனில் மகாவுக்கு கிடைத்த மரியாதையே வேறு மாதிரி இருக்கும்…

“அம்மா! முத்துமணி மாதிரி ஒரு பிள்ளையைப் பெத்ததுக்கு உங்களுக்கு மால போட்டு மரியாத செய்யணும்.வாய்யா தம்பி முத்துமணி…”

“மகா..இவரு டிஎஸ்பி..சத்தியமூர்த்தி…உன்னப் பாத்து பேசத்தான் காத்துகிட்டு இருக்காரு….!

அப்புறம் நடந்ததெல்லாம் ஒரு கனவு மாதிரிதான் இருந்தது மகாவுக்கு…..

***

பவுனு பேசப்பேச ஊர்சனம் ‘ ஆ’ வென்று வாயைப் பிளந்தது கேட்டுக் கொண்டிருக்கிறது..

“பிள்ளையின்னா, இது பிள்ள..நாமுந்தான் பெத்துவச்சிருக்கோமே…!

முத்து பள்ளிக்கோடம் போகையில வழியில ஒரு பையக் கண்டெடுத்திருக்கு..தெறந்து பாக்கையில அம்புட்டும் கட்டுகட்டா ரூபாநோட்டுங்க..பத்து லட்சமாமுல்ல..!

மணிப்பய நேரா டேசனுக்கில்ல போயிருக்கு..தொலச்சவரு ஆசுபத்திரியில நெஞ்ச பிடிச்சு கெடக்காரு..முத்துவுக்கு டேசனுல எம்புட்டு மருவாதி..? ஆயிரம் ரூபா பணமும் , படிப்பு செலவு மொத்தமும் ஏத்துகிட்டாராம் பணத்த தொலச்சவரு…

டிஎஸ்பி ஐயா முத்துவ நேர வந்து பாத்திருக்காருன்னா பாத்துக்குங்க….மகா…நீ எங்கியோ போயிட்ட தாயி…!”

***

மகா ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட்டாள்.

பெட்டியைத் திறந்து கண்ணாடி வளையல்களை எடுத்தாள் மகா..

“ராசா..இங்கிட்டு வாடா கண்ணு…இந்த வளவிய அம்மா கையில பூட்டு தங்கம்….! “

“நல்லாருக்கும்மா.. இத இத்தன நாளா எங்க வச்சிருந்த..?”

“அது பெரிய கதை கண்ணு….”

***

முத்துக்கண்ணு அம்மாவின் மேல் கால் போட்டுக் கொண்டே கையில் அவள் அணிந்திருக்கும் வளையல்களை நெருடியபடி,

“அம்மா..வளவி கதைய சொல்லும்ம்மா…”

“ஏண்டா..? எத்தினி வாட்டி கேப்ப…?”

எத்தனைமுறை கேட்டால் என்ன..? அப்பா , அம்மாவின் காதல் கதை அலுக்குமா மகனுக்கு….?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *