கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 27, 2016
பார்வையிட்டோர்: 6,606 
 
 

அவர்களுக்கு திருமணமாகி மூன்று மாதங்கள்தான் ஆகியிருந்தது.

இருவரும் நல்ல வசதியான குடும்பம். முதல் ஒருமாதம் உறவினர்கள் ஒருவர்மாற்றி ஒருவர் அவர்களுடன் இருந்தனர். கடந்த இரண்டு மாதங்களாகத்தான் இருவரும் தனித்து விடப்பட்டனர்.

பெங்களூர் இந்திராநகரில் ஒரு அபார்ட்மென்ட்டில் தனிக்குடித்தனம். அவன் பெயர் பாலாஜி. அவள் அபி. இருவரும் மெத்தப் படித்திருந்தனர். அவன் எம்.ஈ. ஒரு மானுபாச்சரிங் கம்பெனியில் புரொடெக்ஷன் மானேஜர். இவள் மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோஷியல் ஒர்க்ஸ் பட்டதாரி. மனித வள மேம்பாட்டுத் துறையில் கெட்டிக்காரியாம். தற்போது ஒரு ஐ.டி. ஸ்டார்ட்அப் கம்பெனியில் ஹெச்.ஆர் மனேஜர். இருவருக்கும் கைநிறைய சம்பளம்.

மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் முயற்சியில் ஏராளமான ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தனர்.

அன்று ஞாயிற்றுக்கிழமை காலை.

இருவரும் சோம்பலுடன் மெதுவாக எழுந்திருந்து பல் தேய்க்க பாத்ரூம் சென்றனர். அவன் வாஷ்பேஸின் கண்ணாடிமுன் நின்று புதிய டூத்பேஸ்டை எடுத்து அதை ஓரத்திலிருந்து ஆரம்பித்து மெதுவாக பிதுக்கி பிரஷ்ஷில் எடுத்துக்கொண்டான். அவள் அவனை உரசியபடி நின்றாள்.

பிறகு அவள் அதே டூத்பேஸ்டை நடுவிலிருந்து பிதுக்கி தன்னுடைய பிரஷ்ஷில் எடுத்து பல்தேய்க்கலானாள்.

“ஓ காட்… நடுவில எதுக்கு பிதுக்கற? அதை தினமும் ஓரத்திலிருந்து மெதுவாக பிதுக்கிக் கொண்டேவந்தால், கடைசி நாளன்று அதை தூக்கி எறிய வசதியாக இருக்குமே?”

அவளுக்கு முனுக்கென்று கோபம் வந்தது.

“ஏன் நடுவில பிதுக்கி எடுத்து தேய்த்தால் என் பற்கள் வெளுக்காதா? நம்ம வீட்டு பேஸ்டுதான, அத நான் எங்க பிதுக்கினா என்ன? கடைசில எல்லாத்தையும் சேர்த்து அமுக்கி பிதுக்கி உபயோகித்தால் போயிற்று….இதுக்கு ஒரு பெரிய ப்ராசஸ் உண்டா என்ன?”

அவன் மெளனம் காத்தான். அவள் அவ்விதம் அவனை எடுத்தெறிந்து பேசியது அவனுக்கு கிஞ்சித்தும் பிடிக்கவில்லை

பொதுவாக ஞாயிறுபகல் அடிக்கடி கொஞ்சிக்கொண்டு சில்மிஷங்கள் செய்து கொள்பவர்கள் அன்று சற்று விலகியே இருந்தனர். அவள் தன்னுடையை லாப்டாப்பைத் திறந்து வைத்துக்கொண்டாள். அவன் கட்டிலில் படுத்து தூங்கினான்.

‘பரிவாக தன்னிடம் பேசாது அது என்ன ஓ காட் நடுவில எதுக்கு பிதுக்குற என்று கிண்டலாக ஒரு பேச்சு? இவனுக்கு நாகரீகம் தெரியவில்லை’ என்று உள்ளுக்குள் பொருமினாள்.

அன்று மாலை தனியாக வெளியேசென்று தனக்கென்று பெரிய சைஸில் வேறு ஒரு ப்ராண்ட் பேஸ்ட் வாங்கிவந்தாள். மறுநாளிலிருந்து அதை தன் இஷ்டத்துக்கு பிதுக்கி பல்தேய்த்துக் கொண்டாள்.

பாலாஜி அபியிடம் எப்போதும்போல் இயல்பாக இருந்தான். வெளியே பேசிக்கொண்டாலும் இருவரும் உடல்ரீதியான தாம்பத்யத்தில் ஈடுபடவில்லை. விலகியே படுத்தார்கள். இருவருக்கும் ‘அதில்’ ஆசை கொட்டிக் கிடந்தாலும் ஈகோ காரணமாக யார் முதலில் ஆரம்பிப்பது என்று ஒரு மெளன யுத்தம் அவர்களிடையே நடந்து கொண்டிருந்தது.

ஆறு மாதங்கள் இம்மாதிரி வறட்டு வீம்பில் ஓடின. எனினும் இவர்கள் இருவரும் ரொம்ப சந்தோஷமாக குடித்தனம் நடத்துவதாக உறவினர்களும், நண்பர்களும் நினைத்தனர்.

அன்று சனிக்கிழமை மாலை. அபி வேலைபார்க்கும் ஐடி கம்பெனி ஆண்டு விழாவைக் கொண்டாட ஊழியர்கள் எண்பதுபேரும் இந்திராநகரில் உள்ள டாய்ட் பீர்பப் சென்றனர். அதில் இருபதுபேர் பெண்கள்.

விதவிதமான ப்ளேவர்களில் எட்டு விதமான பீர், பெரிய பெரிய அலுமினிய பாய்லர்களில் தயாராவதை ஆர்வத்துடன் பார்த்து புரிந்து கொண்டபின் அதை அனைவரும் சாம்பிள் டேஸ்ட் செய்து பார்த்தனர். பிறகு அனைவரும் தங்களுக்கு பிடித்த ப்ளேவர்களில் பீர் ஆர்டர் செய்து ரசித்து குடித்தனர். ஒரே கூத்தும் கும்மாளமுமாக டாய்ட் அதகளப்பட்டது.

பலர் தங்கள் கையில் நீளமான பீர்கோப்பைகளுடன் போட்டோ எடுத்து அதை ஸ்மார்ட்போன் மூலமாக தங்கள் முகநூலில் பீற்றிக் கொண்டனர். பின்பு அங்கேயே டின்னர் முடித்துவிட்டு கிளம்பும்போது இரவு பதினொன்றாகிவிட்டது. அபி பீர் குடித்தது முதல் அனுபவம். அவளுக்கு பீர் ரொம்பவும் பிடித்து இருந்தது. இனிமேல் அடிக்கடி இங்கு வரவேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டாள்.

அபார்ட்மென்ட் திரும்பியதும், பாலாஜி வந்து கதவைத் திறந்தான்.

“என்ன அபி இவ்வளவு லேட்?” என்றவன் அவளை உற்றுப் பார்த்துவிட்டு, மூக்கை உள்ளிழுத்து இரண்டுமுறை சுவாசித்தான்.

“குடிச்சியா அபி?”

“ஆமா இன்னிக்கி எங்க கம்பெனி ஆண்டுவிழா. அதுனால எல்லாரும் பீர் குடிச்சோம்.”

“ஓகே, படுத்து தூங்கு….டேக் கேர்.”

அவள் தன் பெட்ரூமில் சென்று படுத்தவுடன் பீரின் தாக்கத்தில் உடனடியாக தூங்கிவிட்டாள்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை.

பாலாஜி காலையில் ஆறுமணிக்கு எழுந்தான். உடம்பை வருடும் இந்தக் குளிரில் அபியுடன் ஒரு வாக் சென்று வந்தால் அவளிடம் மனம் விட்டுப் பேசலாம் என்று நினைத்தான்.

அவளை செல்லமாக வலது கன்னத்தில் முத்தம் கொடுத்து எழுப்பினான்.

அவள் கண்களை திறந்து பார்த்தாள்.

.
“டியர்… வாக்கிங் போகலாம் வர்றியா?”

“ஓ….. அப்படின்னா நான் குண்டா இருக்கேன். உடம்பை குறைன்னு என்னை

சொல்றீங்க அப்படித்தானே?”

“அதுக்கில்லம்மா வாக்கிங் போறது ஹெல்த்துக்கு நல்லது”

“அப்போ என்னை நோயாளின்னு முடிவே பண்ணிட்டீங்க…”

“இல்லை இல்லை ….சரி, நீ வரவேண்டாம் விடு”

“அப்ப என்னை சோம்பேறின்னு சொல்றீங்க..”

“ஐயோ இல்லை….ஏன் எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சுக்கிற?”

“அப்போ இவ்வளவு நாளா உங்களை சரியா புரிஞ்சுக்காமத்தான் இருந்தேனா?”

“நான் அப்படிச் சொல்லலை….மறுபடியும் பாரு”

“அப்படித்தான் சொன்னீங்க. அப்ப என்ன நான் பொய் சொல்றேனா?”

“ஐயோ ஆள விடு காலங்காத்தால ஏன் நமக்குள்ள சண்டை?”

“நான் சண்டைக்காரிதான்….ஆமாங்க”

“ஒகே நானும் வாக்கிங் போகல போதுமா?”

“அதுக்கு ஏன் என்னைக் குத்தம் சொல்றீங்க? வாக்கிங் போக அலுப்பு உங்களுக்கு.”

“சரி அப்ப நீ தூங்கு, நான் தனியா போய்க்கிறேன், சந்தோஷமா?”

“உங்களுக்கு எங்க போனாலும் தனியா போய் என்ஜாய் பண்ணனும். அதுக்குதான இவ்வளவும் பேசினீங்க?”

“தனியா வாக்கிங் போகும்போது என்னத்த என்ஜாய் பண்ண முடியும்?”

“அங்க எவளாவது வாக்கிங் வருவா இல்ல?”

வெறுத்துப்போனான் பாலாஜி. எவ்வளவு யோசித்தும், தான் என்ன தவறு செய்தோம் என்று அவனுக்கு விளங்கவே இல்லை!

டயர்டாகி மீண்டும் படுத்துவிட்டான்.

அவர்களுக்குள் மெல்லிய விரிசல் இப்போது ஆரம்பித்துவிட்டது. இனி அந்த விரிசல் பரஸ்பர மரியாதை, புரிதல், அனுசரித்தல், பொறுமை, விட்டுக்கொடுத்தல் போன்றவைகளால் சரி செய்யப்படுமா அல்லது வீம்பு, பிடிவாதம், வறட்டுக் கெளரவம், ஈகோ போன்றவைகளால் பெரிதாகி விவாகரத்து வரை போகுமா?

காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *