விபரீதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 24, 2022
பார்வையிட்டோர்: 1,061 
 
 

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு விபரீதம்.

எங்கே? எப்போது? எப்படி? எல்லாம் திட்டமிடப்பட்டுவிட்டது.

மனைவி அலமேலுவுக்குக் கடிதம், ஒரு லட்சம் பணம் அனுப்பியிருக்கும் விபரம் எல்லாம் எழுதியாகிவிட்டது. அந்த விபரீதத்தை அரங்கேற்றச் செல்லும் வழியில் அஞ்சலகத்தில் பதிவுத் தபாலில் சேர்த்துவிட்டு அடுத்த அரை மணி நேரத்தில் எல்லாம் முடிந்தாக வேண்டும்.

தொழுநோயாளி கூட தற்கொலைக்குத் துணியமாட்டான். தற்கொலைதான் அந்த விபரீதம். ஏன் இந்த விபரீத முடிவு. ஐந்து மாதம் பின்னோக்குவோமா?

தன் அலுவலகம் தனக்குத் தந்திருந்த ஹீரோ ஹோண்டாவில் நான்காம் தடத்தில் வழக்கமான வேகத்தில் பூபதி. மூன்றாம் தடக் கார் ஒன்று தடம் மாறியது முன்புறம். பக்கப் பார்வைக் கண்ணாடியில் மோதி வலது பக்கத் தோம்பில் நிலைக் குத்தி இடது பக்கம் சாய்ந்தான் பூபதி. விருட்டென்று இறங்கி வந்தான் கார் உரிமையாளன் ஆன்ட்ரூ. மோட்டார் சைக்கிளைத் தூக்கி நிறுத்தினான். பூபதியைத் தூக்கிவிட்டான். அவன் மீது பார்வையை ஓட்டினான். முழங்கால் பேண்ட் நைந்தது. அதில் கொஞ்சம் ரத்தச் சிராய்ப்பு. இடது தோள்பட்டையில் சிராய்ப்பு. வண்டிக்கும் சில சிராய்ப்புக்கள். ஆள் உருப்படியாக நின்று கொண்டிருந்தான். சில வினாடிகள் மௌனம். யார் பேச்சைத் துவங்குவது? ஆன்ட்ரூவே துவங்கினான். பூபதி தொடர்ந்தான்.

இப்போது என்ன செய்யலாம்?

இன்சூரன்ஸில் மோதிக் கொள்வதானால் விபரங்கள் எடுத்துக்கொள். கைத்தொலை பேசியில் படம் பிடித்துக் கொள். தவறு என்னுடையதுதான். நமக்குள் தீர்த்துக் கொள்வதானாலும் அதற்கும் தயார். சொல்.

ஐநூறு வெள்ளி கொடு. நானே விழுந்து விட்டதாக அலுவலகத்தில் சொல்லிவிடுகிறேன்.

அவ்வளவு முடியாது. இருநூறு வாங்கிக் கொள். சேதம் சுமார்தான். உன் செலவு நூறு கூட வராது.

பேரம் இழுத்தது. ஆன்ட்ரூ மீண்டும் தொடங்கினான்.

இருநூறு வாங்கிக்கொள். வேண்டுமானால் உனக்கு இன்னொரு சன்மானம் தருகிறேன்.

என்ன சன்மானம்?

இதோ என் காரில் இருக்கிறாளே, அவளோடு இரண்டு மணி நேரம் குடும்பம் நடத்துகிறாயா? அவளை விடுதிக்குத்தான் அழைத்துச் செல்கிறேன். நீ சம்மதித்தால் ஏற்பாடு செய்கிறேன்.

பூபதி கும்மெனப் பறந்து திடுமென்று வீழ்ந்தான். 120 வெள்ளிக்குள் தன்னை முடக்கிக்கொண்டு மொத்தச் சம்பளத்தையும் ஊருக்கு அனுப்பி ஒன்றரை லட்சம் கடனை ஒரே ஆண்டில் அடைத்தவன் பூபதி. திருமணமாகி நான்கு ஆண்டுகள். மனைவியோடு இருந்தது ஒரே ஆண்டு. சாலி ஒரே மகள். மூன்றாண்டுகள் தாம்பத்தியமற்ற சிங்கை வாழ்க்கை. உணவில் உல்லாசம் அவன் கனவிலும் இல்லை. தானே சமைக்காவிட்டால் சாப்பிட மாட்டான். பல இரவுகள் தாம்பத்ய தாகத்தில் எரிந்து சாம்பலாகி பின் உயிர்த்திருக்கிறான். இன்றுவரை மங்கையை நாடியதில்லை. மதுவைத் தொட்டதில்லை. அவனிடம் வீசப்படவேண்டிய ஆலோசனையா இது?

வீசினான் ஆன்ட்ரூ.

உயிரை ஒன்று கூட்டி நுனி நாக்கில் தேக்கி இரண்டு மூன்று எழுத்துக்கள் அங்கே உடனே உதிர்த்தாக வேண்டும். உதிர்ந்தது.

‘சரி.’

உதிர்ந்தே விட்டது. தொலைபேசியை எடுத்தான் ஆன்ட்ரூ. சில எண்களைப் பிதுக்கினான். பேசினான்.

அறை எண் 43ஐ தயார் செய்து வை. பார்ட்டி வருகிறது. இரண்டு மணி நேரம் இருப்பார்கள். எல்லாம் என் கணக்கு.

ஹீரோ ஹோண்டா ஓரம் கட்டப்பட்டது. ஹீரோ பூபதி வண்டியில் ஏறினான். அடுத்த சில நிமிடங்கள்தான். பூபதி அறை எண் 43ல். அவள் சிராய்ப்புகளை நீவினாள். சிரசை நீவினாள். பின் உயிரை நீவினாள். முடிந்துபோனது அந்த முகமறியாப் பெண்ணோடு அனுபவம்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு. பூபதி லேசாக இருமினான். இருமல் வலுத்தது. சில நாட்களில் இருமலோடு கொஞ்சம் ரத்தம். உடம்பின் எடையில் ஐந்து கிலோ உருகி ஓடிவிட்டது. உணவு வெறுத்தது. அலுவலகம் அவனை மருத்துவச் சோதனைக்கு அனுப்பியது. மாதிரி ரத்தம் எடுக்கப்பட்டது. நேற்றுதான் அதன் முடிவு வந்தது.

HIV +

எய்ட்ஸ் இருப்பதாக முடிவு. கணக்கை முடித்து ஊருக்கு அனுப்ப ஏற்பாடுகள் தீவிரம். இதற்கிடையில்தான் தற்கொலை முயற்சி. அரங்கேற்றத்திற்கு தயாராகிறான் பூபதி. தன் கடிதத்தின் கடைசி வரிகளை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்துக் கொண்டான்

என் ஒரு வேளைச் சாப்பாடு 30 காசுதான். ஓராண்டில் நான் அனுப்பிய பணம் என் சம்பளத்தில் உள்ள யாராவது அனுப்பமுடியுமா என்பதை விசாரித்துப் புரிந்து கொள். என் உடலை வாங்கிக் கொண்டு என் தம்பி ஊர் வருவான். நான் ஆன்ட்ரூவிடம் நட்ட ஈடு கேட்டிருக்கிறேன். அவன் எனக்கு வீசிய தூண்டிலுக்கு ஏகப்பட்ட ஆதாரங்கள். ஒரு கணிசமான தொகை நிச்சயம் கிடைக்கும். அதுதான் என் உயிரின் விலை.

சாலியை சாதனை வீராங்கனையாக்கு. என் தம்பியை மறுமணம் செய்து கொள். அவனிடம் பேசிவிட்டேன். நீ மறுத்தால் அது எனக்கு இன்னொரு மரண தண்டனை. இதோ நான் சாக இன்னும் 30 நிமிடங்கள் பாக்கி. அலமேலு …சாலி என்று அலறிக் கொண்டுதான் குதிக்கப் போகிறேன். உன் செவியில் அவைகள் எதிரொலிக்கலாம் அதே கணம்.

இப்படிக்கு
உன் கணவன் என்ற தகுதியை இழந்த பூபதி

திட்டமிட்டபடி எல்லாம் முடிந்தது. பூபதியின் உடலுக்கு ஏகப்பட்ட மரியாதை. ஊருக்கு அனுப்ப எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கிறது.

– கட்டை விரல் ஆகட்டும் கல்வி, முதற் பதிப்பு: 2012, தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *